ஆதாம் ஏவாள் பாவம் செய்வார்கள் என்று கடவுளுக்கு முன்பே தெரியுமா?
இது அநேகர் மனதைக் குடையும் கேள்வி; பதில் அறியத் துடிக்கும் கேள்வி. கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதிக்கிறார் என்ற கேள்வி வரும்போதெல்லாம், உடனே ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்த முதல் மனித ஜோடி செய்த பாவத்தைப் பற்றியே பேச்சு அடிபடுகிறது. ‘கடவுளுக்கு எல்லாமே தெரியும்’ என்பதால், ஆதாம் ஏவாள் தமக்குக் கீழ்ப்படியாமல் போவார்கள் என்பதும்கூட அவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்குச் சிலர் வருகிறார்கள்.
ஒருவேளை இந்தப் பரிபூரண தம்பதி பாவம் செய்வார்கள் என்பது கடவுளுக்கு முன்பே தெரியும் என்றால், இது அவரை எப்படிப்பட்டவராகச் சித்தரிக்கும்? மோசமானவராகத்தானே சித்தரிக்கும். அதாவது, அவர் அன்பே இல்லாதவர், அநியாயமானவர், வெளிவேஷக்காரர் என்று தானே சித்தரிக்கும். அதோடு, இது கடவுளைக் கொடூரமானவராகச் சித்தரிக்கிறது என்றும்கூடச் சிலர் சொல்கிறார்கள்; ஏனென்றால், இந்த முதல் தம்பதி படுகுழியில் விழப்போகிறார்கள் என முன்பே தெரிந்திருந்தும் அவர்களை அந்தப் பாதையில் அவர் வழிநடத்தினார் என்கிறார்கள். எனவே, அன்றுமுதல் இன்றுவரை இருந்துவருகிற கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் கடவுளே முழு பொறுப்பாளியாக இருக்கிறார் அல்லது ஓரளவு பொறுப்பாளியாக இருக்கிறார் என்பதுபோல் தோன்றலாம். இன்னும் சிலர் படைப்பாளரை முட்டாள் என்றுகூட நினைக்கலாம்.
ஆனால், யெகோவா தேவனை இவ்வளவு மோசமானவராக பைபிள் சித்தரிக்கிறதா? பதிலைத் தெரிந்துகொள்ள கடவுளுடைய படைப்புகளைப் பற்றியும் அவருடைய குணங்களைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.
“அது மிகவும் நன்றாயிருந்தது”
முதல் மனித ஜோடி உட்பட கடவுளுடைய அனைத்து படைப்புகளைப் பற்றியும் ஆதியாகமப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31) ஆதாமும் ஏவாளும் பரிபூரணராகவும் பூமியில் வாழ்வதற்கு ஏற்ற விதத்திலும் படைக்கப்பட்டார்கள். அவர்களிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. கடவுள் அவர்களை ‘மிக நன்றாக’ படைத்ததால் அவர் எதிர்பார்த்தபடி அவர்களால் நல்ல விதத்தில் வாழ்ந்திருக்கவும் முடியும். அதோடு, அவர்கள் ‘தேவனுடைய சாயலில்’ படைக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:27) எனவே, ஞானம், பற்றுமாறா அன்பு, நீதி, நற்குணம் போன்ற தெய்வீக குணங்களை அவர்களால் ஓரளவுக்குக் காட்ட முடியும். இப்படிப்பட்ட குணங்களை அவர்கள் வெளிக்காட்டியிருந்தால், தங்களுக்கு நன்மை அளிக்கும் தீர்மானங்களை எடுக்கவும், தங்களுடைய பரலோக அப்பாவின் மனதைக் குளிர்விக்கவும் முடிந்திருக்கும்.
புத்திக்கூர்மையுள்ள இந்த மனிதர்களை யெகோவா ஒருவித ‘ரோபோட்டுகளை’ போல் படைக்கவில்லை; அதாவது, எப்போதும் அவருக்குப் பிரியமாக நடந்துகொள்ளும் விதத்தில் ‘புரோகிராம்’ செய்யவில்லை. ஆனால், சுயமாகத் தீர்மானம் எடுப்பதற்கான சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: எப்படிப்பட்ட ஒரு அன்பளிப்பை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வீர்கள், ஏதோ கடமைக்காகக் கொடுக்கப்படுவதையா, அல்லது அன்பு பொங்க கொடுக்கப்படுவதையா? பதில் உங்களுக்கே தெரியும். அதுபோலவே, ஆதாமும் ஏவாளும் மனதார கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் கடவுள் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டிருந்திருப்பார். அதுமட்டுமல்ல, தீர்மானம் எடுப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருந்ததால் அன்பினால் தூண்டப்பட்டு அவர்களால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருக்க முடியும்.—உபாகமம் 30:19, 20.
நீதியானவர், நியாயமானவர், நல்லவர்
யெகோவாவின் குணங்களைப் பற்றி பைபிள் நமக்குத் தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட நல்ல குணங்கள் அவருக்கு இருப்பதால் அவரிடம் பாவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. “அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்” என்று சங்கீதம் 33:5 சொல்கிறது. “தீய காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையுமே சோதிப்பது கிடையாது” என்று யாக்கோபு 1:13 சொல்கிறது. எனவே, கடவுள் நீதியானவராக இருந்ததாலும், ஆதாம்மீது அவருக்கு அக்கறை இருந்ததாலும், அவனை இப்படி எச்சரித்தார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதியாகமம் 2:16, 17) ஆகவே, முடிவில்லா வாழ்வு அல்லது சாவு என இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஒருவேளை, அவர்கள் மரணத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்பதைக் கடவுள் முன்னமே அறிந்திருந்தால் அவர்களை இப்படி எச்சரிப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இப்படிச் செய்தால் கடவுள் அவர்களை ஏமாற்றுவது போல் இருக்காதா? ‘நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிற’ யெகோவா தேவன் உண்மையில் அவர்களுக்குத் தெரிவே இல்லாதபோது, தெரிவு இருப்பதைப்போல் சொல்லியிருக்க மாட்டார், அல்லவா?
யெகோவாவின் நல்மனம் நிகரற்றது. (சங்கீதம் 31:19) கடவுளுடைய நல்மனதைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்களில் எந்த மனிதனாவது, தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்!” (மத்தேயு 7:9-11) கடவுள் தம் படைப்புகளுக்கு ‘நன்மையானவற்றையே’ கொடுக்கிறார். மனிதர்களை கடவுள் படைத்த விதமும் அவர்களுக்காகப் பூமியை ஓர் அழகிய பூஞ்சோலையாகத் தயாரித்த விதமும் அவருடைய நல்மனதை படம்பிடித்துக்காட்டுகிறது. இவ்வளவு நல்ல பேரரசர், அவர்களுக்கு ஆசை காட்டி மோசம் பண்ணுவாரா? அதாவது, இந்த அழகிய வீட்டை ஒருநாள் அவர்களிடமிருந்து பறிக்கப்போகிறார் என்பதை முன்பே அறிந்திருந்தும் அதை அவர்களுக்குக் கொடுப்பாரா? நிச்சயமாகக் கொடுக்க மாட்டார்! மனிதன் செய்த கலகத்திற்கு நம்முடைய நீதியான, நல்ல படைப்பாளர்மீது ஒருநாளும் பழிபோடக்கூடாது.
“ஒருவரே ஞானமுள்ளவர்”
யெகோவா “ஒருவரே ஞானமுள்ளவர்” என்றும் பைபிள் சொல்கிறது. (ரோமர் 16:27) படைப்புகளில் மிளிர்ந்த அவருடைய அளவற்ற ஞானத்தைத் தேவதூதர்கள் நேரில் கண்டார்கள். யெகோவா பூமியையும் அதிலுள்ளவற்றையும் படைத்தபோது அவர்கள் ‘கெம்பீரித்தார்கள்.’ (யோபு 38:4-7) எனவே, ஏதேன் தோட்டத்தில் நடந்த எல்லாவற்றையும் இந்தப் புத்திக்கூர்மையுள்ள தேவதூதர்கள் ஆர்வமாகக் கவனித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படியென்றால், மலைக்கவைக்கும் இந்தப் பிரபஞ்சத்தையும் எண்ணிலடங்கா பூமிக்குரிய படைப்புகளையும் உண்டாக்கிய ஞானமுள்ள கடவுள், இந்தத் தனித்துவம் வாய்ந்த மனிதர்கள் பாவம் செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்தே அவர்களை உண்டாக்கியிருப்பாரா? அதுவும் இதையெல்லாம் தேவதூதர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இப்படிச் செய்திருப்பாரா? இது மூழ்கப்போகிற கப்பலுக்கு முலாம் பூசுவதுபோல் இருக்கும், அல்லவா?
‘ஆனால், மகா ஞானமுள்ள கடவுளுக்கு இதெல்லாம் எப்படித் தெரியாமல் போயிருக்கும்?’ என்று சிலர் கேட்கலாம். உண்மைத்தான், யெகோவாவுக்கு நிகரற்ற ஞானம் இருப்பதால் ‘பின்னால் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே’ அறிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்கிறது. (ஏசாயா 46:9, 10, பொது மொழிபெயர்ப்பு) இருந்தாலும், அவர் அந்தத் திறனை எப்போதுமே பயன்படுத்திக் கொண்டிருப்பதில்லை; உதாரணத்திற்கு, அவருக்கு அபார சக்தி இருக்கிறது என்பதற்காக அதை அவர் எப்போதும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதில்லை; அதேபோல் இந்தத் திறனையும் அவர் எப்போதும் பயன்படுத்துவதில்லை. முன்கூட்டியே அறியும் இந்தத் திறனை யெகோவா ஞானமாகவும் தேவையான சமயத்திலும் பயன்படுத்துகிறார். ஏதாவது காரணம் இருந்தால் அல்லது ஏதாவது அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்.
இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு விளையாட்டுப் போட்டியைப் ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் போட்டியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவரால் இப்போட்டியின் கடைசி பாகத்தை எடுத்தவுடன் பார்த்துவிட முடியும். ஆனால், அவர் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று சட்டமில்லை. ஒருவேளை அவர் அந்த முழு போட்டியையும் ஆரம்பத்திலிருந்து பார்க்க விரும்பலாம்; அப்படி அவர் பார்த்தால் யாரும் அவரை குறை சொல்ல முடியாது, அல்லவா? அதுபோலவே நம்முடைய படைப்பாளரும் பின்னால் என்ன நடக்கும் என்பதை முன்பே தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, பூமியிலுள்ள தம் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவே விரும்பினார்.
நாம் முன்பு பார்த்தபடியே ஞானமுள்ள யெகோவா தேவன் முதல் மனிதர்களை ‘புரோகிராம்’ செய்யப்பட்ட ‘ரோபோட்டுகளை’ போல் படைக்கவில்லை. மாறாக, அவர்கள்மீது அவருக்கு அன்பு இருந்ததால் சுயமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை அளித்தார். சரியானதைச் செய்யத் தீர்மானிப்பதன் மூலம் யெகோவாமீது தங்களுக்கு இருக்கும் அன்பையும் நன்றியையும் கீழ்ப்படிதலையும் அவர்கள் காட்டியிருக்கலாம்; அப்படிக் காட்டியிருந்தால், அவர்களும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள், அவர்களுடைய பரலோக அப்பாவையும் மகிழ்வித்திருப்பார்கள்.—நீதிமொழிகள் 27:11; ஏசாயா 48:18.
முன்கூட்டியே அறியும் திறனை யெகோவா அநேக சந்தர்ப்பங்களில் பயன்படுத்தவில்லை என்பதை பைபிள் காட்டுகிறது. உதாரணத்திற்கு, உண்மையுள்ள ஆபிரகாம் தன் மகனையே பலியாகக் கொடுக்கவிருந்த சமயத்தில் யெகோவா இப்படிச் சொன்னார்: “நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்றார். (ஆதியாகமம் 22:12) அதுமட்டுமல்ல, சில சமயங்களில் சிலருடைய தவறான நடத்தையைப் பார்த்து கடவுள் ரொம்ப ‘விசனப்பட்டார்.’ அவர்கள் தவறு செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால் அவர் அந்தளவுக்கு விசனப்பட்டிருப்பாரா?—சங்கீதம் 78:40, 41; 1 இராஜாக்கள் 11:9, 10.
ஆகவே, ஞானம் பொதிந்த யெகோவா தேவன் முன்கூட்டியே அறியும் திறனை ஆதாம் ஏவாள் விஷயத்தில் பயன்படுத்தியிருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வருவது நியாயமாக இருக்கும், அல்லவா? எடுத்த காரியம் கண்டிப்பாகத் தோல்வியில்தான் முடியும் என்பது தெரிந்திருந்தும் அதில் இறங்குவதற்கு கடவுள் என்ன முட்டாளா? அதாவது, ஆதாம் ஏவாள் கண்டிப்பாக பாவம் செய்வார்கள், தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதைத் தெரிந்திருந்தும் அவர்களைப் படைக்கிற அளவுக்கு அவர் என்ன முட்டாளா?
“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
ஏதேன் தோட்டத்தில் கலகம் வெடிப்பதற்கு கடவுளுடைய எதிரியான சாத்தான் காரணமாக இருந்தான்; இதனால் பல அசம்பாவிதங்கள் ஏற்பட்டன; அதோடு, பாவமும் மரணமும் மனிதர்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தன. எனவே, சாத்தான் ஒரு ‘கொலைகாரனாக’ இருக்கிறான். அதோடு, அவன் “பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.” (யோவான் 8:44) கடவுளுக்குத் தவறான உள்நோக்கம் இருக்கிறது என அவர்மீது முத்திரை குத்த சாத்தான் முயற்சி செய்கிறான்; ஆனால், உண்மையில் அவன்தான் தவறான உள்நோக்கத்துடன் செயல்படுகிறான். மனிதர்கள் பாவத்தின் படுகுழியில் விழுவதற்கு யெகோவாதான் காரணம் என்று அவர்மீது பழிபோடுகிறான். ஒரு பொய்யனிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும்?
யெகோவா அன்பானவர்; அதனால்தான், ஆதாம் ஏவாள் பாவம் செய்வார்களா இல்லையா என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள அவர் விரும்பவில்லை. அன்புதான் கடவுளுடைய தலைசிறந்த குணம். “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று 1 யோவான் 4:8 சொல்கிறது. அன்பு எதையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்க்காது, நல்ல கண்ணோட்டத்தில்தான் பார்க்கும். ஆம், மற்றவர்களிடம் இருக்கும் நல்லதையே பார்க்கும். ஆக, யெகோவாவுக்கு அன்பு இருந்ததால்தான் முதல் மனித ஜோடி சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென விரும்பினார்.
நல்ல தீர்மானம் எடுப்பதும் கெட்ட தீர்மானம் எடுப்பதும் ஆதாம் ஏவாள் கையில்தான் இருந்தது. ஆனால், அவர்கள் கெட்ட தீர்மானம்தான் எடுப்பார்கள் எனக் கடவுள் அவர்கள்மீது கொஞ்சம்கூட சந்தேகப்பட்டிருக்க மாட்டார். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருந்தார், எல்லா உண்மைகளையும் சொல்லியிருந்தார். எனவே, அவர்கள் கலகம் செய்யாமல் தமக்குக் கீழ்ப்பட்டு நடப்பார்கள் என்று கடவுள் எதிர்பார்த்தது நியாயம்தானே. அதுமட்டுமல்ல, ஆதாம், ஏவாளால் தமக்கு உத்தமமாய் இருந்திருக்க முடியும் என்பதும் கடவுளுக்குத் தெரியும். சொல்லப்போனால், இவர்களுக்கு பின் வாழ்ந்த ஆபிரகாம், யோபு, தாவீது போன்றவர்கள்... அபூரண மனிதர்களாக இருந்தபோதிலும் கடவுளுக்கு உத்தமமாய் நடந்தார்கள்.
“கடவுளால் எல்லாமே முடியும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:26) இது மனதுக்குத் தெம்பளிக்கிறது, அல்லவா? அன்பு, நீதி, ஞானம், வல்லமை ஆகிய முக்கிய குணங்கள் யெகோவாவுக்கு இருப்பதால் தக்க சமயத்தில் அவர் பாவத்தையும் மரணத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சுவடுதெரியாமல் அகற்றப்போகிறார், அப்படி அகற்றவும் அவரால் முடியும்.—வெளிப்படுத்துதல் 21:3-5.
ஆகவே, அந்த முதல் மனித ஜோடி பாவம் செய்வார்கள் என்பது யெகோவாவுக்கு முன்பே தெரியாது என்று நாம் உறுதியாய் சொல்லலாம். அவர்களுடைய கீழ்ப்படியாமையும் அதனால் விளைந்த கஷ்டங்களையும் பார்த்து யெகோவா ரணவேதனைப்பட்டாலும் இது தற்காலிகமானது என்பதை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்கும் பூமிக்குமான அவருடைய நித்திய நோக்கம் நிறைவேற இது தடையாக இருக்காது என்பதையும் அறிந்திருக்கிறார். அந்த நோக்கத்தைப் பற்றியும் அதன் மகத்தான நிறைவேற்றத்திலிருந்து நீங்கள் எப்படி நன்மை அடையலாம் என்பதைப் பற்றியும் நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ளலாமே!a (w11-E 01/01)
[அடிக்குறிப்பு]
a பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 3-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 12-ன் சிறுகுறிப்பு]
யெகோவா தேவன் முதல் மனிதர்களை ‘புரோகிராம்’ செய்யப்பட்ட ‘ரோபோட்டுகளை’ போல் படைக்கவில்லை
[பக்கம் 13-ன் சிறுகுறிப்பு]
ஆதாம், ஏவாளால் தமக்கு உத்தமமாய் இருந்திருக்க முடியும் என்பது கடவுளுக்குத் தெரியும்