மணமாகாதவர்களே—காலத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
“அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்.”—மத். 19:12.
1, 2. (அ) இயேசுவும் பவுலும் மற்றவர்களும் துணையில்லாமல் இருப்பதை எப்படிக் கருதினார்கள்? (ஆ) மணமாகாதிருப்பதை சிலர் ஒரு வரமாகக் கருதாததற்கு எது காரணமாக இருக்கலாம்?
திருமணம் என்பது மனிதகுலத்திற்குக் கடவுள் தந்திருக்கும் ஓர் அற்புத வரம். (நீதி. 19:14) என்றாலும், மணமாகாத அநேக கிறிஸ்தவர்களும்கூட வாழ்க்கையைத் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் அனுபவிக்கிறார்கள். மணமாகாத ஹரால்ட் என்ற 95 வயது சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்களோடு சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறேன், அவர்களை உபசரிக்கிறேன்; ஆனாலும், தனியாக இருக்கும்போது தனிமையில் இருப்பதாக உணருவதே இல்லை. என்னைப் பொறுத்தவரை மணமுடிக்காமல் இருப்பதும் ஒரு வரம்தான்.”
2 மணம் செய்வதைப் போலவே மணம் செய்யாதிருப்பதும் ஒரு வரம்தான் என இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலன் பவுலும் குறிப்பிட்டார்கள். (மத்தேயு 19:11, 12; 1 கொரிந்தியர் 7:7-ஐ வாசியுங்கள்.) என்றாலும், மணமாகாதிருக்கும் அனைவருமே விருப்பத்தோடுதான் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் பொருத்தமான துணை கிடைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து ஆனதால் அல்லது துணையை இழந்ததால் சிலர் எதிர்பாராத விதமாகத் தனிமைக்கு ஆளாகியிருக்கலாம். அப்படியென்றால், துணையின்றி தனிமையில் இருப்பதை ஒரு வரம் என்று எப்படிச் சொல்லலாம்? அத்தகைய கிறிஸ்தவர்கள் எப்படித் தங்கள் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்?
விசேஷ வரம்
3. மணமாகாத கிறிஸ்தவர்கள் என்ன நன்மைகளை அனுபவிக்கிறார்கள்?
3 மணமானவரைவிட மணமாகாதவருக்கு அதிக நேரம் கிடைக்கிறது, அதிக சுதந்திரமும் இருக்கிறது. (1 கொ. 7:32-35) ஊழியத்தில் அதிகமாக ஈடுபட... இதயக் கதவை அகலத் திறந்து மற்றவர்களிடம் அன்பு காட்ட... யெகோவாவிடம் அதிகமாக நெருங்கி வர... இது ஒரு நல்ல வாய்ப்பு. அதனால், அநேக கிறிஸ்தவர்கள் மணமாகாதிருப்பதால் வரும் நன்மைகளைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்; அதோடு, கொஞ்ச காலத்திற்காவது “அப்படி இருக்க” தீர்மானித்திருக்கிறார்கள். இன்னும் சிலர், ஆரம்பத்தில் மணம் செய்யத் தீர்மானித்திருக்கலாம்; ஆனால் சூழ்நிலை மாறியதால், நன்கு ஜெபம் செய்து அதைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறார்கள். யெகோவாவின் உதவியுடன் அந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு காலம் முழுக்க மணம் செய்துகொள்ளாமலே இருக்க முடியும் என்பதைப் புரிந்திருக்கிறார்கள்.—1 கொ. 7:37, 38.
4. மணமாகாத கிறிஸ்தவர்கள் தங்களைக் கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்கவர்களாக ஏன் உணரலாம்?
4 யெகோவாவும் அவருடைய அமைப்பும் ஒருவரை மதிப்பாகக் கருதுவதற்கு அவர் திருமணம் செய்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை மணமாகாத கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவர் மீதும் கடவுள் அன்பு காட்டுகிறார். (மத். 10:29-31) அந்த அன்பிலிருந்து எவரும் எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது. (ரோ. 8:38, 39) எனவே, நாம் மணமானவர்களாக இருந்தாலும் சரி மணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்கவர்களே.
5. மணமாகா வரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
5 என்றாலும், இசையிலோ விளையாட்டிலோ திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சி தேவைப்படுவது போல், மணமாகா வரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் முயற்சி தேவைப்படுகிறது. எனவே, மணமாகாதவர்கள்—அவர்கள் சகோதரர்களோ சகோதரிகளோ, இளைஞர்களோ வயதானவர்களோ, சுய விருப்பத்தின் காரணமாக மணம் செய்யாதவர்களோ சூழ்நிலை காரணமாக மணம் செய்யாதவர்களோ, யாராக இருந்தாலும் சரி—எப்படித் தங்கள் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்? இப்போது, ஆரம்ப கால கிறிஸ்தவ சபையிலிருந்த சிலருடைய உற்சாகமூட்டும் உதாரணங்களைக் கவனிக்கலாம்; அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் சிந்திக்கலாம்.
இளமையில்...
6, 7. (அ) பிலிப்புவின் மணமாகாத மகள்கள் என்ன வரத்தைப் பெற்றார்கள்? (ஆ) தீமோத்தேயு மணமாகாதிருந்த காலத்தை எப்படி நன்கு பயன்படுத்திக்கொண்டார், இளவயதிலேயே கடவுளுடைய சேவையை மனதார ஏற்றுக்கொண்டதால் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றார்?
6 நற்செய்தியாளரான பிலிப்புவுக்கு மணமாகாத நான்கு மகள்கள் இருந்தார்கள்; தங்கள் தகப்பனைப் போலவே இவர்களும் நற்செய்தியைப் பக்திவைராக்கியத்துடன் அறிவித்தார்கள். (அப். 21:8, 9) கடவுளுடைய சக்தி தரும் அற்புத வரங்களில் ஒன்று தீர்க்கதரிசனம் சொல்வதாகும்; யோவேல் 2:28, 29-ன் நிறைவேற்றமாக அந்த வரத்தை இந்தப் பெண்கள் பயன்படுத்தினார்கள்.
7 இளம் தீமோத்தேயு மணமாகாதிருந்த காலத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும் அவருக்குச் சிசுப் பருவத்திலிருந்தே “பரிசுத்த எழுத்துக்களை” கற்றுக்கொடுத்தார்கள். (2 தீ. 1:5; 3:14, 15) ஆனால், அவர்களுடைய சொந்த ஊரான லீஸ்திராவுக்கு முதன்முறையாக பவுல் வந்தபோது, அதாவது சுமார் கி.பி. 47-ல், அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகியிருக்கலாம். அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பவுல் இரண்டாவது முறை அங்கு வந்தபோது தீமோத்தேயு சுமார் 20 வயதுடையவராக இருந்திருக்கலாம். வயதில் இளைஞராகவும் சத்தியத்தில் புதியவராகவும் இருந்தபோதிலும் லீஸ்திரா, இக்கோனியா சபைகளின் மூப்பர்களால் “உயர்வாகப் பேசப்பட்டு வந்தார்.” (அப். 16:1, 2) அதனால், தன்னோடு சேர்ந்து பயண ஊழியம் செய்ய தீமோத்தேயுவை பவுல் அழைத்தார். (1 தீ. 1:18; 4:14) தீமோத்தேயு திருமணம் செய்துகொள்ளவே இல்லை என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அந்த இளவயதிலேயே அவர் பவுலின் அழைப்பை மனமார ஏற்றுக்கொண்டார் என்றும் அதற்குப் பின் கல்யாணம் செய்துகொள்ளாமலேயே பல வருடங்கள் மிஷனரியாகவும் கண்காணியாகவும் சேவை செய்தார் என்றும் நமக்குத் தெரியும்.—பிலி. 2:20-22.
8. ஆன்மீக இலக்குகளை அடைய மாற்குவுக்கு எது உதவியது, அதனால் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றார்?
8 மாற்கு என்று அழைக்கப்பட்ட இளம் யோவானும்கூட மணமாகாதிருந்த காலத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டார். இவரும், இவரது தாய் மரியாளும், ஒன்றுவிட்ட சகோதரன் பர்னபாவும் எருசலேம் சபையின் ஆரம்பகால அங்கத்தினர்களாய் இருந்தார்கள். மேலும், மாற்குவின் குடும்பத்தார் வசதியாக வாழ்ந்திருக்கலாம்; ஏனென்றால், அந்த ஊரில் அவர்களுக்குச் சொந்த வீடு இருந்தது, ஒரு வேலைக்காரப் பெண்ணும் இருந்தாள். (அப். 12:12, 13) இப்படி வசதியாக வாழ்ந்தபோதிலும் அந்த இளம் வயதில் மாற்கு தன் விருப்பப்படி வாழ்பவராகவோ சுயநலக்காரராகவோ இல்லை. கல்யாணம் செய்துகொண்டு பிள்ளை குட்டிகளோடு சொகுசாக வாழ நினைக்கவும் இல்லை. சிறுவயதிலிருந்தே அப்போஸ்தலர்களோடு கூட்டுறவு வைத்திருந்ததால், மிஷனரி ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆசை அவருக்குள் துளிர்த்திருக்கலாம். இதன் காரணமாக, பவுலும் பர்னபாவும் செய்த முதல் மிஷனரி பயணத்தின்போது சந்தோஷமாக அவர்களுடன் சேர்ந்துகொண்டு, அவர்களுக்கு உதவியாளராக இருந்தார். (அப். 13:5) பிற்பாடு, பர்னபாவுடன் பயண ஊழியத்தில் சேர்ந்துகொண்டார்; இன்னும் சில காலத்திற்குப் பிறகு பேதுருவுடன் பாபிலோனில் சேவை செய்ததாகவும் நாம் வாசிக்கிறோம். (அப். 15:39; 1 பே. 5:13) மாற்கு எவ்வளவு காலத்திற்கு மணம் செய்துகொள்ளாமல் இருந்தார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், மற்றவர்களுக்கு மனமுவந்து உதவி செய்பவர், கடவுளுக்கு அதிகமாகச் சேவை செய்பவர் என நற்பெயர் பெற்றிருந்தார்.
9, 10. மணமாகாத இளம் கிறிஸ்தவர்கள் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? உதாரணம் கொடுங்கள்.
9 இன்றும்கூட சபையிலுள்ள அநேக இளைஞர்கள் சுதந்திரப் பறவையாக இருக்கும் காலத்தை கடவுளுடைய சேவையில் தாராளமாய் ஈடுபடுவதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மாற்குவையும் தீமோத்தேயுவையும் போல “கவனச்சிதறல் இல்லாமல் நம் எஜமானருக்குத் தொடர்ந்து ஊழியம் செய்ய” அந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். (1 கொ. 7:35) இது உண்மையிலேயே மிகச் சிறந்த வாய்ப்பு. ஆம், பயனியர் செய்ய... தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்ய... புதிய மொழியைக் கற்றுக்கொள்ள... ராஜ்ய மன்ற அல்லது கிளை அலுவலகக் கட்டுமானப் பணிகளில் உதவ... ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொள்ள... பெத்தேலில் சேவை செய்ய... இவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் திருமணம் செய்துகொள்ளாத இளைஞரா? அப்படியென்றால், உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்டுத்திக்கொள்கிறீர்களா?
10 இருபது வயதிற்கு முன் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்த மாற்கு என்ற சகோதரர் ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டார்; அதன் பிறகு உலகின் பல பகுதிகளில் முழுநேர சேவையில் ஈடுபட்டார். முழுநேர சேவையில் செலவிட்ட 25 வருடங்களை எண்ணிப்பார்த்து அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் சபையில் உள்ள ஒவ்வொருவரையும் பல வழிகளில் உற்சாகப்படுத்தியிருக்கிறேன்; அவர்களுடன் ஊழியம் செய்திருக்கிறேன், அவர்களுக்கு மேய்ப்பு சந்திப்பு செய்திருக்கிறேன், அவர்களை என் வீட்டிற்கு அழைத்து உபசரித்திருக்கிறேன், ஆன்மீக ரீதியில் உற்சாகப்படுத்த பார்ட்டிகளுக்கும்கூட ஏற்பாடு செய்திருக்கிறேன். இவையெல்லாம் எனக்கு அளவிலா ஆனந்தத்தை அளித்திருக்கிறது.” கொடுப்பதில்தான் மிகுந்த சந்தோஷம் கிடைக்கும் என்பதை மாற்குவின் உதாரணம் காட்டுகிறது; அதோடு, காலமெல்லாம் கடவுளுக்குச் சேவை செய்யும்போது மற்றவர்களுக்குக் கொடுக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. (அப். 20:35) இளைஞர்களே, உங்களுடைய விருப்பம், திறமை அல்லது அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, எஜமானருடைய வேலையில் இப்போது அதிகமதிகமாய் ஈடுபட வாய்ப்பு எனும் கதவு திறந்திருக்கிறது.—1 கொ. 15:58.
11. அவசரப்பட்டு கல்யாணம் செய்யாமல் இருப்பதில் என்ன சில நன்மைகள் இருக்கின்றன?
11 இளைஞர்கள் பலர் பிற்பாடு கல்யாணம் செய்துகொள்ள விரும்பலாம்; இருந்தாலும், அவசரப்பட்டு கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதில் நன்மை இருக்கிறது. அதனால்தான், ‘இளமை மலரும் பருவத்தைக் கடக்கும்வரையாவது,’ அதாவது பாலியல் ஆசைகள் உச்சத்தில் இருக்கும் பருவம் கடக்கும்வரையாவது, காத்திருக்கும்படி இளைஞர்களை பவுல் உற்சாகப்படுத்தினார். (1 கொ. 7:36) உங்களையே புரிந்துகொள்வதற்கும் ஏற்ற துணையைத் தேர்ந்தெடுக்க நல்ல பக்குவம் அடைவதற்கும் காலம் தேவைப்படுகிறது. ஆயிரங்காலத்துப் பயிரான திருமணத்தில் இணைவதைக் குறித்துத் தீர யோசித்தே முடிவெடுக்க வேண்டும்.—பிர. 5:2-5.
இளமை கடந்தபின்...
12. (அ) அன்னாள் தன் கணவனை இழந்தபின் என்ன செய்தார்? (ஆ) அவர் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றார்?
12 லூக்கா சுவிசேஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள அன்னாள் திருமணமாகி ஏழே ஆண்டுகளில் திடீரென தன் கணவரைப் பறிகொடுத்தபோது துக்கத்தில் துவண்டுபோயிருப்பார். அவருக்கு குழந்தைகள் இருந்தனவா, மறுமணம் செய்துகொள்வதைப் பற்றி அவர் என்றாவது யோசித்தாரா, என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், 84 வயதிலும் அவர் விதவையாகவே இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. கடவுளிடம் இன்னும் நெருங்கிச் செல்வதற்காகத் தன் தனிமையை அன்னாள் பயன்படுத்திக்கொண்டார் என்பது பைபிள் பதிவிலிருந்து தெரிகிறது. அவர் “ஆலயத்திற்கு வரத் தவறியதே இல்லை; விரதமிருந்து, மன்றாடி, இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்து வந்தார்” என்று அது தெரிவிக்கிறது. (லூக். 2:36, 37) ஆக, ஆன்மீகக் காரியங்களுக்கே அவர் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தார். அது ஒன்றும் சுலபமல்ல; அதற்கு மனவுறுதியும் முயற்சியும் தேவைப்பட்டது. அப்படிச் செய்ததால் பெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றார். ஆம், குழந்தை இயேசுவைப் பார்க்கும் பாக்கியமும், இந்த மேசியா மூலம் கிடைக்கப்போகும் விடுதலையைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கும் பாக்கியமும் அவருக்குக் கிடைத்தது.—லூக். 2:38.
13. (அ) சபையில் இருந்தவர்களுக்கு தொற்காள் உதவினாள் என்பதை எது காட்டுகிறது? (ஆ) அவள் செய்த நற்செயல்களுக்கும் தானதர்மங்களுக்கும் கிடைத்த பலன் என்ன?
13 எருசலேமின் வடமேற்கே யோப்பா என்ற துறைமுகப் பட்டணத்தில் தொற்காள் அல்லது தபீத்தாள் என்ற பெயர் கொண்ட ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய கணவரைப் பற்றிய எந்தப் பதிவும் பைபிளில் இல்லாததால், அவள் மணமாகாதவளாக இருந்திருக்க வேண்டும். தொற்காள் “நற்செயல்களையும் தானதர்மங்களையும் நிறையச் செய்து வந்தாள்.” ஏழ்மையிலிருந்த விதவைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஆடைகளைத் தைத்துக் கொடுத்தாள்; அவர்கள் எல்லாருக்கும் அவளை ரொம்பப் பிடித்திருந்தது. அதனால்தான், அந்த அன்பு சகோதரி திடீரென்று வியாதிப்பட்டு இறந்தபோது அவளை உயிர்த்தெழுப்ப வரும்படி சபையார் எல்லாரும் பேதுருவுக்குச் சொல்லியனுப்பினார்கள். அவள் உயிர்த்தெழுந்த செய்தி யோப்பா முழுவதும் பரவியபோது அநேகர் விசுவாசிகளானார்கள். (அப். 9:36-42) அவர்களில் சிலருக்கும் தொற்காள் தன்னுடைய நற்செயல்களால் உதவியிருக்கலாம்.
14. யெகோவாவிடம் இன்னும் நெருங்கிச் செல்ல மணமாகாத கிறிஸ்தவர்களை எது தூண்டுகிறது?
14 அன்னாளையும் தொற்காளையும் போல இன்று சபைகளில் அநேகர் இளமை கடந்த பிறகும் திருமணம் அல்லது மறுமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். சிலருக்குப் பொருத்தமான துணை கிடைக்காமல் இருந்திருக்கலாம். இன்னும் சிலர் விவாகரத்து ஆனவர்களாக அல்லது துணையை இழந்தவர்களாக இருக்கலாம். மனம்விட்டுப் பேச துணை இல்லாததால் யெகோவாவை அதிகமாகச் சார்ந்திருக்க இவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (நீதி. 16:3) பெத்தேலில் 38 வருடங்களுக்கும் மேலாகச் சேவை செய்கிற சில்வியா என்ற மணமாகாத சகோதரி தன் தனிமையை ஆசீர்வாதமாக நினைக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய நானே சில சமயங்களில் சோர்ந்துவிடுகிறேன். அப்போது ‘என்னை யார் உற்சாகப்படுத்துவார்?’ என்று யோசிப்பேன். ஆனால், எனக்கு எது தேவை என்று என்னைவிட யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுதான் அவரிடம் இன்னும் நெருங்கிச் செல்ல எனக்கு உதவுகிறது. எப்போதுமே எனக்கு உற்சாகம் கிடைக்கிறது; சில நேரங்களில் துளியும் எதிர்பாராத விதத்தில் கிடைக்கிறது.” நாம் யெகோவாவிடம் நெருங்கிச் செல்லும்போதெல்லாம் அவர் அன்பாகவும் நம்பிக்கையளிக்கும் விதத்திலும் பதிலளிக்கிறார்.
15. மணமாகாத கிறிஸ்தவர்கள் எப்படித் தங்கள் ‘இதயக் கதவை அகலத் திறந்து’ அன்பு காட்டலாம்?
15 மணமாகாதிருப்பது ‘இதயக் கதவை அகலத் திறந்து’ அன்பு காட்ட சிறந்த வாய்ப்பளிக்கிறது. (2 கொரிந்தியர் 6:11-13-ஐ வாசியுங்கள்.) 34 வருடங்களாக முழுநேர ஊழியம் செய்திருக்கும் ஜோலின் என்ற மணமாகாத சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “என் வயதில் உள்ளவர்களிடம் மட்டுமல்ல, எல்லா வயதினரிடமும் நெருங்கிப் பழக கடும் முயற்சி எடுத்தேன். உங்கள் நேரத்தை யெகோவாவுக்கு, குடும்பத்தாருக்கு, சகோதர சகோதரிகளுக்கு, மற்றவர்களுக்குச் செலவிட கல்யாணம் செய்துகொள்ளாதிருப்பது ஒரு சிறந்த வாய்ப்பு. வயதாக ஆக என் தனிமையை நினைத்து நான் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்.” மணமாகாத கிறிஸ்தவர்கள் செய்கிற தன்னலமற்ற உதவிக்கு, சபையிலுள்ள வயதானவர்களும் வியாதிப்பட்டவர்களும் ஒற்றைப் பெற்றோரும் இளைஞர்களும் மற்றவர்களும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆம், நாம் மற்றவர்களிடம் அன்பு காட்டும்போதெல்லாம் நம்மைப் பற்றியே பெருமையாக நினைப்போம். நீங்களும் ‘இதயக் கதவை அகலத் திறந்து’ மற்றவர்களுக்கு அன்பு காட்ட முடியுமா?
என்றும் மணமாகாமல்...
16. (அ) இயேசு ஏன் வாழ்நாள் முழுவதும் மணம் செய்துகொள்ளவில்லை? (ஆ) பவுல் மறுமணமாகாமல் இருந்த காலத்தை எப்படி ஞானமாகப் பயன்படுத்திக்கொண்டார்?
16 இயேசு மணம் செய்துகொள்ளவில்லை; அவர் தமக்கு நியமிக்கப்பட்ட வேலைக்குத் தயாராக வேண்டியிருந்தது, அதைச் செய்து முடிக்கவும் வேண்டியிருந்தது. அவர் வெகு தூரம் பயணம் செய்தார், அதிகாலைமுதல் இரவு வெகு நேரம்வரை வேலை செய்தார், கடைசியில் அவருடைய உயிரையே தியாகம் செய்தார். அவர் மணமுடிக்காதிருந்ததே அவருடைய வேலையை செய்து முடிக்க பெரிதும் கைகொடுத்தது. அப்போஸ்தலன் பவுல் ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்தார், அவருடைய ஊழியத்தில் பலவிதமான கஷ்டங்களைச் சந்தித்தார். (2 கொ. 11:23-27) அவர் ஆரம்பத்தில் திருமணமானவராக இருந்திருக்கலாம், ஆனால் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்ட பிற்பாடு மறுமணம் செய்துகொள்ளவில்லை. (1 கொ. 7:7, 8; 9:5) ஊழியத்திற்காக முடிந்தவரை தங்களைப் போலவே இருக்கும்படி இயேசுவும் பவுலும் மற்றவர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், கடவுளுடைய ஊழியர்கள் விவாகம் செய்துகொள்ளக்கூடாது என்று இருவருமே சொல்லவில்லை.—1 தீ. 4:1-3.
17. இன்று சிலர் எப்படி இயேசுவையும் பவுலையும் பின்பற்றியிருக்கிறார்கள், அப்படிப்பட்ட தியாகங்களைச் செய்வோரை யெகோவா உயர்வாகக் கருதுகிறார் என்று எப்படிச் சொல்லலாம்?
17 ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடுவதற்காக இன்றும்கூட சிலர் மணமாகாமல் இருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். முன்பு சொல்லப்பட்ட ஹரால்ட் 56 வருடங்களுக்கும் மேலாக பெத்தேல் சேவையை ருசித்திருக்கிறார். அவர் இவ்வாறு சொன்னார்: “நான் பெத்தேலில் 10 வருடங்களை முடிப்பதற்குள், திருமணமான நிறையப் பேர் வியாதியின் காரணமாகவோ வயதான பெற்றோரைக் கவனிப்பதற்காகவோ பெத்தேலைவிட்டு போனதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள். ஆனால், நான் பெத்தேல் சேவையை அந்தளவு நேசித்ததால் திருமணம் செய்துகொண்டு இந்தப் பாக்கியத்தை இழந்துவிட விரும்பவில்லை.” அதைப்போல, வெகு காலமாக பயனியர் செய்த மார்கரெட் பல வருடங்களுக்கு முன் இவ்வாறு சொன்னார்: “திருமணம் செய்துகொள்ள எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், நான் மணம் செய்துகொள்ளவே இல்லை. அதனால், ஊழியத்தில் தாராளமாக ஈடுபட முடிந்தது. இது எனக்கு அதிக சந்தோஷத்தைத் தந்திருக்கிறது.” உண்மை வழிபாட்டிற்காக நாம் செய்யும் தன்னலமற்ற தியாகங்களை யெகோவா ஒருபோதும் மறக்கமாட்டார்.—ஏசாயா 56:4, 5-ஐ வாசியுங்கள்.
உங்கள் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
18. மணமாகாத கிறிஸ்தவர்களை மற்றவர்கள் எப்படி ஆதரித்து ஊக்குவிக்கலாம்?
18 யெகோவாவுக்கு அதிகமாய்ச் சேவை செய்கிற மணமாகாத கிறிஸ்தவர்கள் எல்லாரும் நம் மனமார்ந்த பாராட்டையும் ஊக்குவிப்பையும் பெற தகுதியுள்ளவர்கள். அவர்களுடைய தியாக மனப்பான்மைக்காகவும் சபைக்கு அவர்கள் உதவியாக இருப்பதற்காகவும் அவர்களை நாம் நேசிக்கிறோம். நாம் அவர்களுக்கு ஆன்மீக ‘சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் தாய்களாகவும் பிள்ளைகளாகவும்’ இருந்தோமென்றால் அவர்கள் ஒருபோதும் தனிமையில் வாடுவதாக உணர மாட்டார்கள்.—மாற்கு 10:28-30-ஐ வாசியுங்கள்.
19. மணமாகாமல் இருக்கும் காலத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம்?
19 நீங்கள் மணமாகாதிருக்க தீர்மானித்திருந்தாலும் சரி சூழ்நிலை காரணமாக அப்படி இருந்தாலும் சரி, சந்தோஷமாக வாழலாம், பயனுள்ள வாழ்க்கை வாழலாம் என்ற உறுதியைப் பூர்வகால மற்றும் நவீனகால உதாரணங்கள் தருகின்றன. சிலருக்கு இந்த வரம் அவர்கள் விருப்பப்படியே அமைகிறது, வேறு சிலருக்குச் சற்றும் எதிர்பாராமல் அமைகிறது. சிலர் அதன் அருமையை உடனே உணர்ந்துகொள்கிறார்கள், வேறு சிலர் கொஞ்ச காலத்திற்குப் பிறகே உணர்ந்துகொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நம் மனப்பான்மையே காரணம். மணமாகாமல் இருக்கும் காலத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவிடம் அதிகமாக நெருங்கி வாருங்கள், கடவுளுடைய சேவையில் அதிகமாக ஈடுபடுங்கள், அன்பெனும் இதயக் கதவை அகலத் திறந்திடுங்கள். திருமணத்தைப் போலவே திருமணமாகாதிருப்பதும் வரம்தான்; அதை யெகோவாவின் கண்ணோட்டத்தில் பாருங்கள், அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள், அப்போதுதான் அதிலிருந்து பயனடைய முடியும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• மணமாகாதிருப்பது எந்தெந்த விதங்களில் ஒரு வரம்?
• இளமையில் மணமாகாதிருப்பது ஒரு வரம் என்று எப்படிச் சொல்லலாம்?
• யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வருவதற்கும் அன்பெனும் இதயக் கதவை அகலத் திறப்பதற்கும் மணமாகாத கிறிஸ்தவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
[பக்கம் 18-ன் படங்கள்]
உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைக் கடவுளுடைய சேவையில் நன்கு பயன்படுத்திக்கொள்கிறீர்களா?