‘இதை ஏற்றுக்கொள்ளுங்கள்’
1 ஒருசமயம் திருமணத்தைப் பற்றி தம் சீஷர்களிடம் பேசுகையில், மணம் செய்துகொள்ளாதிருத்தலை ‘ஒரு வரம்’ என இயேசு குறிப்பிட்டார். அதற்குப் பின், “இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்” என்று அவர் சொன்னார். (மத். 19:10-12) சில வருடங்களுக்கு பிற்பாடு, மணம் செய்துகொள்ளாதிருப்பதால் விளையும் நன்மைகளைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்; தன்னைப் போலவே மணம் செய்துகொள்ளாமல் இருக்கும்படியும் மற்றவர்களை உற்சாகப்படுத்தினார். (1 கொ. 7:7, 38) இன்று அநேகர் மணம் செய்துகொள்ளாதிருப்பதை ‘ஏற்றுக்கொண்டு’ அதனால் வரும் நன்மைகளை அனுபவித்து மகிழ்கிறார்கள். அதனால் கிடைக்கும் சில நன்மைகள் யாவை?
2 ‘கவனம் சிதறாமல்’ சேவித்தல்: மணம் செய்துகொள்ளாதிருப்பது ‘கவனம் சிதறாமல்’ (NW) யெகோவாவை சேவிப்பதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதை பவுல் அறிந்திருந்தார். அவ்வாறே இன்றும், மணமாகாத ஒரு சகோதரர் ஊழியப் பயிற்சி பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம், பொதுவாக மணமாகாத ஒருவருக்கு அந்தளவுக்கு பொறுப்புகள் இல்லாததால் பயனியராக ஆகலாம், புதிய மொழியைக் கற்றுக்கொள்ளலாம், தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிச் செல்லலாம், பெத்தேலில் சேவை செய்யலாம் அல்லது வேறு விசேஷித்த ஊழிய சிலாக்கியங்களைப் பெறலாம். தனிப்பட்ட படிப்பில் அதிகமாக ஈடுபடுவதற்கும், தியானிப்பதற்கும், ஜெபத்தில் யெகோவாவிடம் மனம்திறந்து பேசுவதற்கும் அவருக்கு அதிக நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றன. மணம் செய்துகொள்ளாத ஒருவருக்கு, பொதுவாக பிறருக்கு உதவ அதிக நேரம் இருக்கிறது. இவையெல்லாமே ஒருவருடைய ‘சுய பிரயோஜனத்துக்கானவையே.’—1 கொ. 7:32-35; அப். 20:35.
3 இவ்வாறு கவனம் சிதறாமல் கடவுளுக்கு சேவை செய்வதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். மணம் செய்துகொள்ளாதிருக்க தீர்மானித்த கென்யாவைச் சேர்ந்த ஒரு சகோதரி 27 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறு எழுதினார்: “எனக்கு ஏகப்பட்ட ஃப்ரென்ட்ஸ், வேலையும் அதுபோல் தலைக்குமேல் இருந்தது! நாங்க எல்லாருமா சேர்ந்து வேலைகளை செய்தோம், ஒருத்தரை ஒருத்தர் போய் பார்ப்போம். . . . கல்யாணம் செய்துகொள்ளாதது கொஞ்சம் கூடவே சுதந்திரத்தை கொடுத்ததால் எங்கு வேணாலும் போய்வர முடிஞ்சது. அதனால் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டேன். அது எனக்கு அளவில்லா சந்தோஷத்தை தந்தது. கடந்த பல வருஷமா யெகோவாவுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவின் நெருக்கம் ரொம்பவே பலமாகியிருக்குது.”
4 ‘இதை ஏற்றுக்கொள்ளுங்கள்’: ‘பரலோக ராஜ்யத்தினிமித்தமே’ மணம் செய்துகொள்ளாதிருக்கும் வரத்தை நாட வேண்டுமென இயேசு சொன்னார். (மத். 19:12) மகிழ்ச்சியையும் நன்மைகளையும் பெறுவதற்கு, மற்ற வரங்களைப் போல மணம் செய்துகொள்ளாதிருத்தல் என்ற வரத்தையும் சரியாக பயன்படுத்த வேண்டும். மணம் செய்துகொள்ளாமல் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் ஞானத்திற்காகவும் பலத்திற்காகவும் யெகோவாவை சார்ந்திருப்பதன் மூலமும் இந்த வரத்தை ஏற்றுக்கொள்வதன் அருமையை மணம் செய்திராத அநேகர் அறிந்திருக்கிறார்கள்.