பிஞ்சுகளின் நெஞ்சில் மரியாதையைப் புகட்ட...
“தொப்பியைக் கழற்றி கையில் வைப்பவன் உலகெங்கும் வரவேற்பைப் பெறுவான்” என்கிறது ஒரு ஜெர்மன் பழமொழி. யார் வீட்டிற்குள்ளாவது போகும்போது அல்லது ‘ஹலோ’ சொல்லும்போது தலையிலிருந்து தொப்பியை எடுத்து விடுவது அநேக கலாச்சாரங்களில் மரியாதைக்கு அடையாளம்; அப்படிச் செய்பவர் பிறருடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதிக்கிறார். பண்புடன் நடந்துகொள்பவரிடம் மக்களும் பண்புடன் நடந்துகொள்வார்கள், அவரைப் பற்றி உயர்வாகவும் பேசுவார்கள் என்பதே இந்தப் பழமொழி புகட்டும் பாடம்.
பிள்ளைகள் பண்புடன் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது! ஹோண்டுராஸ் நாட்டில், பல்வேறு வயதினருடன் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிற வட்டாரக் கண்காணி ஒருவர் கூறுகிறார்: “நான் சொல்கிற வார்த்தைகளைவிட என் கூடவரும் பிள்ளைகள் மரியாதையோடு... பண்போடு... நடந்துகொள்கிற விதம்தான் வீட்டுக்காரரை எளிதில் கவருகிறது.”
மரியாதை என்பது மருந்துக்குக்கூட இல்லாத இந்தக் காலத்தில் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. அதைவிட முக்கியமாக ‘கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தகுதியானவர்களாய் நடந்துகொள்ள’ வேண்டும் என்று பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது. (பிலி. 1:27; 2 தீ. 3:1-5) எனவே, மற்றவர்களுக்கு மரியாதை காட்ட நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது இன்றியமையாதது. ஆனால், வெறுமனே செயலில் மட்டுமல்ல உள்ளத்திலிருந்து மரியாதை காட்ட இளம் உள்ளங்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்?a
நடத்தையே சிறந்த ஆசான்
பெற்றோர்களின் நடத்தையே பிள்ளைகளின் மனதில் அச்சாய் பதியும். ஆகவே, பண்பாக நடந்துகொள்வதற்குப் பிள்ளைகளைப் பழக்குவிக்க, நீங்கள் முதலில் பண்புடன் நடந்துகொள்ளுங்கள். (உபா. 6:6, 7) பணிவுடன் நடந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் பிஞ்சுகளுக்குப் பக்குவமாய் எடுத்துச் சொல்லுங்கள்; ஆனால், அது மட்டுமே போதாது. அறிவுரைகளை அடிக்கடி அள்ளித் தெளிப்பதோடு உங்கள் முன்மாதிரியே முக்கியம்.
பிரேமாவின்b உதாரணத்தைக் கவனியுங்கள்; அவள் ஒற்றைப் பெற்றோரால் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டாள். எல்லாருக்கும் மரியாதை காட்டுவது அவளின் இயல்பாகவே ஆகிவிட்டது. எப்படி? “என் அம்மா மரியாதைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். ‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ என்கிற மாதிரி எங்களுக்கும் அந்தக் குணம் தொற்றிக்கொண்டது” என்கிறாள் பிரேமா. வால்டர் என்ற கிறிஸ்தவர் சத்தியத்தில் இல்லாத தன் மனைவியை மதிக்கப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். “என் மனைவியை மரியாதை குறைவாக ஒருநாளும் பேசினதில்லை. என் முன்மாதிரியைப் பார்த்து பிள்ளைகளும் அம்மாவுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பித்தார்கள்” என்று அவர் சொல்கிறார். வால்டர் எப்போதும் பைபிளிலிருந்து நிறைய விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார்; யெகோவாவின் உதவிக்காக ஜெபமும் செய்தார். அவருடைய ஒரு மகன் இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார், இன்னொரு மகன் பயனியராக இருக்கிறார். இந்த இரண்டு மகன்களும் அப்பா அம்மாமீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.
‘கடவுள் குழப்பத்தின் கடவுள் இல்லை’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 14:33) யெகோவா எல்லாவற்றையும் ஒழுங்குடன் செய்கிறார். இதைப் பின்பற்றி கிறிஸ்தவர்களும் தங்கள் வீடுகளை நேர்த்தியாக... ஒழுங்காக... வைத்துக்கொள்ள முயல்கிறார்கள். பள்ளிக்கூடம் போவதற்கு முன்பு படுக்கை விரிப்புகளை மடித்து வைக்க... துணிமணிகளை அந்தந்த இடத்தில் வைக்க... வீட்டில் சின்ன சின்ன வேலைகளைச் செய்ய... பெற்றோர் சிலர் பிள்ளைகளைப் பழக்குவிக்கிறார்கள். வீட்டின் மற்ற அறைகளெல்லாம் ஒழுங்காக, சுத்தமாக இருப்பதைப் பார்க்கும்போது பிள்ளைகள் தங்களுடைய அறையையும் பொருட்களையும் அதேபோல் வைத்துக்கொள்வார்கள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் விஷயங்களைப் பற்றி உங்கள் பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள்? பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு அவர்கள் நன்றியுடன் இருக்கிறார்களா? பெற்றோரே, நீங்கள் இவற்றிற்கு நன்றியுடன் இருக்கிறீர்களா? பள்ளியைப் பற்றி... ஆசிரியர்களைப் பற்றி... உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயம்தான் பிள்ளைகளுக்கும் இருக்கும். எனவே, ஆசிரியர்களுக்கு நன்றி சொல்வதைப் பழக்கமாக்கிக்கொள்ள அவர்களைப் பயிற்றுவிக்கலாம் அல்லவா? ஆசிரியரோ டாக்டரோ கடைக்காரரோ யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு மரியாதை காட்ட சிறந்த வழி நன்றி சொல்வதே. (லூக். 17:15, 16) பள்ளியில் பணிவுக்கும் நன்னடத்தைக்கும் பேர்போன இளம் கிறிஸ்தவர்களே உங்களுக்கு சபாஷ்!
நல்ல பழக்கங்களுக்கு சபையார் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும். “தயவுசெய்து,” “நன்றி” போன்ற கனிவான வார்த்தைகளைச் சபையில் உள்ள இளைஞர்கள் சொல்வதைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு பெருமிதம்! கூட்டங்களில் பெரியவர்கள் கவனித்துக் கேட்கும்போது பிள்ளைகளும் அப்படியே அவர்களை ‘காப்பி’ அடிப்பார்கள். மரியாதைக்கு மணிமகுடமாய்த் திகழ்பவர்களை ராஜ்ய மன்றத்தில் பிள்ளைகள் பார்க்கும்போது, அவர்களும் அக்கம்பக்கத்தாரிடம் அப்படியே நடந்துகொள்வார்கள். உதாரணமாக, பெரியவர்களைத் தாண்டிச் செல்லும்போது “எக்ஸ்க்யூஸ் மி” சொல்லக் கற்றுக்கொண்டான் நான்கு வயது ஆனந்த்.
நல்நடத்தையைப் பற்றி இன்னும் அதிகமாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம்? பைபிளில் உள்ள உதாரணங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க நேரம் ஒதுக்கலாம், ஆம், ஒதுக்கவும் வேண்டும்.—ரோ. 15:4.
பைபிள் உதாரணங்களிலிருந்து...
யாக்கோபு தன் குடும்பத்தாரைக் கூட்டிக்கொண்டு கானான் தேசத்திற்குத் திரும்பிச் செல்கையில் ஏசாவைச் சந்திக்க நேர்ந்தது; அப்போது அவருக்குத் தலைவணங்க தன் பிள்ளைகளுக்கு யாக்கோபு சொல்லிக் கொடுத்திருக்கலாம். (ஆதி. 33:3, 6, 7) மற்றவர்களுக்கு ‘வணக்கம்’ சொல்ல (‘குட் மார்னிங்,’ ‘குட் ஆஃப்டர்னூன்,’ ‘குட் ஈவ்னிங்’ சொல்ல) நீங்களும் உங்கள் பிள்ளைகளைப் பழக்குவிக்கிறீர்களா? அப்படிச் செய்தால், உங்கள் பிள்ளையும் இளம் சாமுவேலைப் போல “கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக” நடந்துகொள்ளும்.—1 சா. 2:26.
மரியாதைக்கும் அவமரியாதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பிள்ளைகளுக்கு விளக்கிக் காட்ட பைபிள் சம்பவங்களைப் பயன்படுத்தலாமே. உதாரணமாக, இஸ்ரவேலின் கெட்ட அரசன் அகசியா, எலியாவைச் சந்திக்க நினைத்தார். அவரை அழைத்துவரச் சொல்லி “ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும்” அனுப்பினார். தன்னுடன் வரும்படி தீர்க்கதரிசியிடம் அந்தத் தலைவன் அதிகாரத்துடன் சொன்னான். கடவுளின் பிரதிநிதியிடம் அப்படிப் பேசியது கொஞ்சம்கூட முறையே அல்ல. அப்போது எலியா என்ன சொன்னார்? “நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது” என்றார். “உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.”—2 இரா. 1:9, 10.
இரண்டாவது முறையும் 50 பேருடன் ஒரு தலைவனை அரசன் அனுப்பினார். அவனும் எலியாவை அதிகாரத்துடன் அழைத்தான். மறுபடியும், வானத்திலிருந்து அக்கினி வந்து அவர்களை அழித்தது. மூன்றாவது முறையும் 50 பேருடன் ஒரு தலைவன் வந்தான். ஆனால், இந்தத் தலைவன் மரியாதையுடன் நடந்துகொண்டான். இவன் எலியாவுக்கு கட்டளை போடாமல், அவர் முன் முழங்காற்படியிட்டு ‘தேவனுடைய மனுஷனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாய் இருப்பதாக. இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாய் இருப்பதாக’ என்று வேண்டிக்கொண்டான். இப்படி மரியாதையுடனும் பயபக்தியுடனும் பேசின ஒருவன்மீது அக்கினி இறங்கும்படி கடவுளுடைய தீர்க்கதரிசி சொல்வாரா? நினைத்துக்கூட பார்க்க முடியாது! அந்தத் தலைவனுடன் போகும்படி யெகோவாவின் தூதர் எலியாவிடம் சொன்னார். (2 இரா. 1:11-15) மரியாதை காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது, அல்லவா?
ரோம படைவீரர்கள் அப்போஸ்தலன் பவுலை ஆலயத்தில் கைது செய்து அழைத்துச் சென்ற சமயத்தில், தனக்குப் பேச உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு அவராகவே பேச ஆரம்பித்துவிடவில்லை. “நான் உங்களிடம் ஒன்று சொல்லலாமா?” என்று படைத் தளபதியிடம் மரியாதையாகக் கேட்டார். இதன் விளைவு? தான் நிரபராதி என்பதை நிரூபிக்க பவுலுக்கு வாய்ப்பு கிடைத்தது.—அப். 21:37-40.
இயேசு விசாரணை செய்யப்பட்டபோது, அவரை ஒருவன் கன்னத்தில் அறைந்தான். இருந்தாலும் அவனுக்கு எப்படிச் சரியான விதத்தில் பதிலளிக்க வேண்டும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது; அதனால்தான், “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல்; சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று அவர் கேட்டார். யாராலும் இயேசு பேசிய விதத்தில் தப்பு கண்டுபிடிக்க முடியவில்லை.—யோவா. 18:22, 23.
யாராவது கடுமையாகக் கண்டிக்கும்போது நாம் எப்படிப் பேச வேண்டும்... முன்பு செய்த தவறை யாராவது சுட்டிக்காட்டும்போது அதை எப்படி மரியாதையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்... என்பதற்கு பைபிளில் நிறைய உதாரணங்கள் உள்ளன. (ஆதி. 41:9-13; அப். 8:20-24) உதாரணமாக, தாவீதை நாபால் கேவலமாகப் பேசியதற்காக அவனுடைய மனைவி அபிகாயில் மன்னிப்பு கேட்டாள். அதுமட்டுமல்ல, உணவுப் பொருட்களையும் தாவீதுக்கு தாராளமாய்க் கொடுத்தாள். அபிகாயிலின் நடத்தை தாவீதின் மனதைக் கவர்ந்தது, அதனால் நாபால் இறந்தபிறகு அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.—1 சா. 25:23-41.
மரியாதையோடு நடந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்—கஷ்டமான சூழ்நிலைகளில் மரியாதை காட்டுவதாக இருந்தாலும் சரி பொதுவாக நற்பண்புகளைக் காட்டுவதாக இருந்தாலும் சரி. இப்படி “உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்,” அதன் மூலம் “பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்துங்கள்.”—மத். 5:16.
[அடிக்குறிப்புகள்]
a பெரியவர்களுக்கு மரியாதை காட்ட கற்றுக்கொடுக்கும் அதேசமயத்தில் மோசமான பேர்வழிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். விழித்தெழு! அக்டோபர் 2007, பக்கங்கள் 3-11-ஐக் காண்க.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.