பெற்றோரே பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி
1 ‘நீதிமானுடைய தகப்பனும் [தாயும்] களிகூருவார்கள்’ என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதி. 23:24, 25) பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கும் பெற்றோர்கள் அடையும் ஆசீர்வாதமே ஆசீர்வாதம்! கிளை அலுவலக குழுவின் அங்கத்தினர் ஒருவர் தன் பெற்றோர்களைப் பற்றி இவ்வாறு கூறினார்: “சத்தியமே அவர்களது வாழ்க்கை. அதனால் நானும் சத்தியத்தை என் வாழ்க்கையாக ஆக்க விரும்பினேன்.” பிள்ளைகளுக்கு எந்தெந்த விஷயங்களில் பெற்றோர் முன்மாதிரியாய் திகழ வேண்டும்?
2 நல்ல பண்புகளும் ஆழமான மரியாதையும்: பிள்ளைகளின் மனங்களில் நல்ல குணங்களை வளர்ப்பது பெற்றோரின் கடமை. நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், வெறுமனே இதை செய், அதை செய்யாதே என்று கட்டளை போட்டால் மட்டும் போதாது. முதலாவது நல்ல பண்புகளை அவர்கள் கண்களால் காண வேண்டும், பிறகு பின்பற்ற வேண்டும். அப்படியென்றால் எப்படிப்பட்ட நல்ல பண்புகள் உங்களிடம் உள்ளன? “எக்ஸ்கியூஸ்மி” “ப்ளீஸ்” “தேங்ஸ்” போன்ற வார்த்தைகளை முதலாவது நீங்கள் சொல்கிறீர்களா? அவற்றை பிள்ளைகள் கேட்கிறார்களா? உங்கள் குடும்பத்தில் ஒருவரையொருவர் நல்ல மரியாதையோடு நடத்துகிறீர்களா? மற்றவர்கள் பேசும்போது, கவனமாக கேட்கிறீர்களா? பிள்ளைகள் உங்களிடம் பேசும்போது காதுகொடுத்து கேட்கிறீர்களா? இந்த நல்ல பண்புகளை ராஜ்ய மன்றத்தில் மாத்திரம் அல்ல, வீட்டிலும் காட்டுகிறீர்களா?
3 அசைக்க முடியாத ஆவிக்குரிய பலமும் அயராத சேவையும்: ஐம்பது வருடங்களுக்கு மேல் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்ட சகோதரர் நினைவுகூருகிறார்: “கூட்டங்களை மதிப்பதிலும், அயராது ஊழியம் செய்வதிலும் என் அப்பா, அம்மா அருமையான முன்மாதிரிகளாய் இருந்தனர்.” குடும்ப அங்கத்தினர்களின் ஆவிக்குரிய ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொள்வதில் உங்களுக்கு அக்கறையிருப்பதை எப்படி பிள்ளைகளுக்கு காட்டுவீர்கள்? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து தினவசனத்தை கலந்தாலோசிக்கிறீர்களா? குடும்ப படிப்பு தவறாமல் நடைபெறுகிறதா? பைபிளையும் சங்கத்தின் பிரசுரங்களையும் நீங்கள் வாசிப்பதை பிள்ளைகள் பார்க்கிறார்களா? குடும்ப ஜெபத்தில் நீங்கள் என்னவெல்லாம் சொல்வதை அவர்கள் கேட்கிறார்கள்? ஆவிக்குரிய விஷயங்களை ஊக்கம் தரும் விதத்தில் அவர்களோடு பேசுகிறீர்களா? சத்தியத்தைப் பற்றி, சபையைப் பற்றி நல்ல விஷயங்களை கலந்தாலோசிக்கிறீர்களா? குடும்பமாக எல்லா கூட்டங்களுக்கும், வெளி ஊழியத்திற்கும் செல்ல நீங்கள் ஆர்வம் காட்டுகிறீர்களா?
4 பெற்றோர்களே! பிள்ளைகளுக்கு நீங்கள் வைக்கிற முன்மாதிரியைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள். சிறந்த முன்மாதிரியை வையுங்கள். அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் மதித்து போற்றுவார்கள். பயணக் கண்காணி ஒருவரின் மனைவிக்கு இப்போது 70 வயதுக்கு மேல் இருக்கும். இந்த வயதிலும் தன் பெற்றோர் வைத்த முன்மாதிரியைப் பற்றி இவ்வாறு கூறினார்: “அன்பான என் கிறிஸ்தவ பெற்றோர்கள் வைத்த நல்ல முன்மாதிரியிலிருந்து இன்னமும் நான் பலனடைகிறேன். அவர்களது இந்த ஆஸ்தியை [முன்மாதிரியை] இனி வரும் காலங்களிலும் நல்லவிதமாக பயன்படுத்தி [பின்பற்றி] அதை நான் முழுமையாக மதிப்பதை நிரூபிக்க விரும்புகிறேன். அதற்காக உருக்கமாக ஜெபிக்கிறேன்.”