இலட்சியத்தோடு செயல்படுகிறீர்களா?
1 யெகோவா இலட்சியத்தோடு செயல்படுகிற கடவுள். (ஏசா. 55:10, 11) நாமும் அவரைப்போல் இலட்சியத்தோடு செயல்பட அறிவுரை தரப்படுகிறது. (எபே. 5:1) நாம் இலட்சியத்தோடு செயல்படுகிறோம் என்பதை நம் ஊழியத்தில் கண்டிப்பாக காட்டவேண்டும். ஆகவே, ஊழியத்தில் “இலட்சியத்தோடு செயல்படுகிறீர்களா?” என்று கேட்பது பொருத்தமே.
2 இலட்சியத்தோடு செய்யும் ஊழியத்தில், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தல், சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல், பிரசுரங்களை வினியோகித்தல் ஆகிய அனைத்தும் அடங்கும். அதோடு நம் கடமை முடிவதில்லை. ஆனால் சீஷர்களையும் உருவாக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். (மத். 28:19, 20) சத்திய விதையை விதைத்தப்பின், அதற்கு தண்ணீர் ஊற்றவும், பராமரிக்கவும் மறுபடியும் செல்ல வேண்டும். ஆனாலும் விளையச்செய்வது யெகோவா என்பதை மனதில் கொண்டு, அவரையே நோக்கியிருப்போமாக! (1 கொ. 3:6) மக்களை மறுபடியும் போய் சந்திக்க வேண்டும், அவர்களிடத்தில் வேதப்படிப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற துடிப்போடு இருக்கவேண்டும்.
3 ஊழியத்தை விரிவாக்குங்கள்: ஊழியத்தை முடித்தப் பிறகும், “அப்பாடா, ஊழியத்தில் என்னென்ன செய்ய நினைச்சேனோ, எல்லாத்தையும் முடிச்சுட்டேன்” என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளும்போது அலாதியான திருப்தி எப்போதும் இருக்கும். முழுமையாய் “உன் ஊழியத்தை நிறைவேற்று” என்று பவுல் ஊக்கம் தந்தார். இதை 2 தீமோத்தேயு 4:5-ல் காணலாம். அப்படியென்றால், யாரெல்லாம் சத்தியத்தில் ஆர்வம் காட்டினார்களோ, அவர்கள் எல்லாரையும் மறுபடியும் போய் சந்திக்க நீங்கள் நிறைய முயற்சியெடுக்க வேண்டும். வாரந்தோறும் ஊழியத்திற்காக நீங்கள் போட்டுவைத்திருக்கும் அட்டவணையில், மறுசந்திப்புக்காக திட்டவட்டமாக நேரத்தை ஒதுக்குங்கள். அந்நேரப்படி செல்லுங்கள். நீதியின்பால் ஈர்க்கப்படும் மக்களிடத்தில் வேதப்படிப்பு ஆரம்பிக்க வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்து, அதை அடைய அயராமல் உழைத்திடுங்கள். ஊழியம் செய்யும்போது இதுவே உங்கள் இலட்சியமாக இருக்க வேண்டும்.
4 மாநாட்டில் பைபிள் மாணாக்கர்கள் முழுக்காட்டுதல் எடுத்தபோது பைபிள் படிப்பு நடத்திய பிரஸ்தாபிகளுக்கு எப்படி இருந்தது என்பதை அவர்களிடமே கேட்டு பாருங்கள். முழுக்காட்டுதல் எடுத்தவர்களைப் போலவே இவர்களும் பேரானந்தம் அடைந்திருப்பார்கள். சும்மாவா! எவ்வளவு பெரிய இலட்சியத்தை அடைந்துவிட்டார்கள்! சீஷர் ஆக்குவதில் வெற்றிகண்ட ஒருவர் உள்ளம் திறந்து கூறியது: “சீஷர்கள் ஆக்கினால் யெகோவாவுக்கு துதி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்வோருக்கு ஜீவன் கிடைக்கும். மற்றவர்களுக்கு சத்தியத்தை சொல்லித் தருவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். இதுபோல் வேறு எந்த வேலை இருக்க முடியும்! . . . யெகோவாவை நேசிக்க கற்றுக்கொண்ட பலர் இன்று என் உயிர்த் தோழர்கள்.”
5 ஒருவர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியராக ஆக உதவும் பாக்கியத்தை எண்ணிப்பாருங்கள்! இதைவிட வேறு மகிழ்ச்சி இருக்குமா? இது இலட்சியத்தோடு செய்வதால் கிடைக்கும் பலன்!—கொலோ. 4:17.