கடவுளுடைய அங்கீகாரமே முடிவில்லா வாழ்வைத் தரும்
‘யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, [அங்கீகாரம்] என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.’—சங். 5:12.
1, 2. சாறிபாத் ஊரைச் சேர்ந்த விதவையிடம் எலியா என்ன கேட்கிறார், அவர் என்ன உறுதியும் அளிக்கிறார்?
அந்த விதவையும் அவளுடைய மகனும் பசியில் வாடிக்கொண்டிருக்கிறார்கள், கடவுளுடைய தீர்க்கதரிசியும்தான். சாறிபாத் ஊரைச் சேர்ந்த அந்தப் பெண் சமைப்பதற்குத் தீ மூட்ட தயாராகிறாள்; அப்போது, எலியா தீர்க்கதரிசி தனக்குக் குடிக்கத் தண்ணீரும் சாப்பிட அப்பமும் வேண்டுமென அவளிடம் கேட்கிறார். அவளும் அவருக்குத் தண்ணீர் கொடுக்க முன்வருகிறாள், ஆனால் சாப்பிட அவளிடம் இருப்பதெல்லாம் “பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே.” அதனால், தீர்க்கதரிசிக்கு சாப்பிட கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் உணவு இல்லையே என்று யோசிக்கிறாள், இதை அவரிடம் சொல்கிறாள்.—1 இரா. 17:8-12.
2 ஆனாலும், ‘நீ போய் . . . முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா’ என்று எலியா கூறுகிறார். “பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். . . . பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்’ என்கிறார்.
3. நம் அனைவருக்கும் முன்னால் வைக்கப்பட்டுள்ள முக்கியமான கேள்வி என்ன?
3 கொஞ்சநஞ்சம் இருந்த அந்த உணவை அவருக்குக் கொடுப்பதா வேண்டாமா என்பதைவிட சிக்கலான ஒரு தீர்மானத்தை அவள் எடுக்க வேண்டியிருந்தது. இப்போது, தன்னையும் தன் மகனையும் கடவுள் காப்பாற்றுவார் என்பதில் நம்பிக்கை வைப்பாளா, அல்லது கடவுளுடைய அங்கீகாரத்தையும் நட்பையும்விட தன்னுடைய வயிற்றுப்பாட்டுக்கே முதலிடம் கொடுப்பாளா? இதுபோன்ற கேள்விதான் நம் எல்லாருக்கும் முன்னால் இருக்கிறது. கடவுளுடைய அங்கீகாரத்தைவிட அன்றாட தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்போமா? கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்கும் அவரைச் சேவிப்பதற்கும் நமக்கு நல்ல காரணம் இருக்கிறது. அவரைத் தேடுவதற்கும் அவரது அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நாம் எடுக்க வேண்டிய சில படிகள் இருக்கின்றன.
‘வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்’
4. யெகோவா நம் வணக்கத்தைப் பெற ஏன் தகுதியானவர்?
4 யெகோவாவுக்குப் பிரியமான முறையில் அவரை வணங்க வேண்டுமென மனிதரிடம் அவர் எதிர்பார்ப்பதற்கு உரிமை இருக்கிறது. “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்; ஏனென்றால், நீங்களே எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய சித்தத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று அவரது பரலோக ஊழியர்கள் ஒருமிக்கச் சொன்னார்கள். (வெளி. 4:11) யெகோவாவே நம் படைப்பாளர் என்பதால் அவரே நம் வணக்கத்திற்குத் தகுதியானவர்.
5. கடவுளுடைய அன்பு எப்படி அவரைச் சேவிக்க நம்மைத் தூண்டுகிறது?
5 நாம் யெகோவாவைச் சேவிப்பதற்கு மற்றொரு காரணம் அவர் நம்மீது வைத்திருக்கும் ஈடற்ற அன்பு. “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 1:27) சுயமாய் சிந்தித்துத் தீர்மானம் எடுக்கிற உரிமையையும் திறமையையும் மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். யெகோவா நமக்கு உயிர் கொடுத்ததால் மனிதகுலத்தின் தகப்பன் ஆனார். (லூக். 3:38) ஒரு நல்ல தகப்பன் தனது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பது போல, வாழ்க்கையை அனுபவித்து மகிழ தேவையான எல்லாவற்றையும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் “சூரியனை உதிக்கப்பண்ணி,” “மழையைப் பெய்யப்பண்ணுகிறார்”; அதனால் இந்தப் பூமி அமோக விளைச்சல் தருகிறது, அழகாகவும் காட்சி அளிக்கிறது.—மத் 5:45.
6, 7. (அ) ஆதாம் தன் சந்ததியாருக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தினான்? (ஆ) கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிறவர்களுக்கு கிறிஸ்துவின் பலி என்ன செய்யும்?
6 பாவத்தின் படுமோசமான பாதிப்புகளிலிருந்தும் யெகோவா நம்மை காப்பாற்றியிருக்கிறார். ஆதாம் பாவம் செய்து ஒரு சூதாட்டக்காரனாக மாறினான், சூதாடுவதற்காகத் தன் வீட்டிலிருந்து திருடி குடும்பத்தைத் தவிக்க விடும் ஒருவனைப் போல் மாறினான். யெகோவாவுக்கு விரோதமாய் கலகம் செய்து தன்னுடைய பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை, அதாவது நித்திய சந்தோஷத்தை, பறித்துவிட்டான். அவனுடைய சுயநலத்தினால் அபூரணம் எனும் கொடிய எஜமானுக்கு மனிதகுலம் அடிமையானது. இதனால், மனிதர் எல்லாரும் வியாதியில் கஷ்டப்படுகிறார்கள், வேதனையில் வாடுகிறார்கள், கடைசியில் செத்துப்போகிறார்கள். ஓர் அடிமையை விடுதலை செய்ய அவனுக்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். அதுபோல், பாவத்தின் பயங்கரமான விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற யெகோவா அதற்குரிய விலையைக் கொடுத்தார். (ரோமர் 5:21-ஐ வாசியுங்கள்.) தம் தகப்பனுடைய சித்தத்திற்கு இசைவாக, இயேசு கிறிஸ்துவும் ‘அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுத்தார்.’ (மத். 20:28) அந்த மீட்புவிலையினால் வரும் எல்லா நன்மைகளும் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுகிறவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் கிடைக்கும்.
7 மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையை... நோக்கமுள்ள வாழ்க்கையை... நமக்குத் தருவதற்காக வேறு எவரையும்விட நிறைய செய்திருப்பவர் நமது படைப்பாளர் யெகோவா மட்டுமே. அவருடைய அங்கீகாரம் நமக்கு இருப்பதால், மனிதகுலத்திற்கு இழைக்கப்பட்டுள்ள நாசகரமான எல்லா விளைவுகளையும் அடியோடு மாற்றிப்போட அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ‘தம்மை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ என்பதை நாம் தனிப்பட்ட விதத்தில் ருசித்துப் பார்க்க யெகோவா நமக்குத் தொடர்ந்து உதவி செய்வார்.—எபி. 11:6.
‘உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை அளிப்பார்கள்’
8. கடவுளைச் சேவிப்பதைக் குறித்து ஏசாயாவின் உதாரணம் நமக்கு என்ன கற்பிக்கிறது?
8 கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவது சுயமாய்த் தீர்மானம் எடுக்கும் உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. ஏனென்றால், தம்மை வணங்கச் சொல்லி யெகோவா யாரையும் வற்புறுத்துவதில்லை. ஏசாயாவின் காலத்தில் கடவுள் இப்படிக் கேட்டார்: “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்.” சுயமாய் தீர்மானிக்கும் உரிமை ஏசாயாவுக்கு இருந்ததை யெகோவா மதித்தார். “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று பதிலளித்தபோது ஏசாயா அடைந்த திருப்தியைக் கற்பனை செய்துபாருங்கள்.—ஏசா. 6:8.
9, 10. (அ) என்ன மனநிலையோடு நாம் கடவுளைச் சேவிக்க வேண்டும்? (ஆ) யெகோவாவை முழு மூச்சுடன் சேவிப்பது நம்முடைய நன்மைக்கே என்று ஏன் சொல்லலாம்?
9 கடவுளை வழிபடவோ வழிபடாதிருக்கவோ மனிதருக்கு உரிமை இருக்கிறது. நாம் யெகோவாவை மனதார வழிபட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (யோசுவா 24:15-ஐ வாசியுங்கள்.) அரைமனதோடு கடவுளை வழிபடுகிறவர்கள் அவரைப் பிரியப்படுத்த முடியாது. மனிதரைப் பிரியப்படுத்துவதற்காகவே அவரை வழிபடுவோருடைய பக்தியையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். (கொலோ. 3:22) நாம் முழு இருதயத்தோடு பரிசுத்த சேவை செய்யாமல் உலக ஆசைகளுக்கு இடமளித்தால், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது. (சங். 119:2) யெகோவாவை முழுமூச்சுடன் சேவிப்பது நம்முடைய நன்மைக்கே என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதனால்தான், ஜீவனைத் தேர்ந்தெடுப்பதற்கு ‘யெகோவாவில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்’ என்று இஸ்ரவேலருக்கு மோசே அறிவுறுத்தினார்.—உபா. 30:19, 20.
10 பண்டைய இஸ்ரவேலின் ராஜா தாவீது இவ்வாறு பாடினார்: ‘உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமாய்த் தங்களை அளிப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.’ (சங். 110:3) இன்று அநேகர் பணத்துக்கும் பொழுதுபோக்குக்கும் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால், யெகோவாவை நேசிக்கிறவர்கள் எல்லாவற்றையும்விட பரிசுத்த சேவைக்கே முதலிடம் தருகிறார்கள். அவர்கள் பக்திவைராக்கியத்தோடு நற்செய்தியை அறிவிப்பதிலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். தங்களுடைய அன்றாட தேவைகளை யெகோவா பூர்த்தி செய்வார் என்பதில் அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.—மத். 6:33, 34.
கடவுள் அங்கீகரிக்கும் பலிகள்
11. இஸ்ரவேலர் எதற்காக யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்?
11 இஸ்ரவேலர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து வந்த காலத்தில், கடவுளுடைய தயவைச் சம்பாதிக்க அவர் அங்கீகரிக்கும் பலிகளைச் செலுத்தி வந்தார்கள். லேவியராகமம் 22:29-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “கர்த்தருக்கு ஸ்தோத்திர பலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் [அதாவது அவருடைய அங்கீகாரத்தைப் பெற] அதைச் செலுத்துவீர்களாக.” இஸ்ரவேலர் பலிபீடத்தில் தகுந்த மிருக பலிகளைச் செலுத்தியபோது மேலெழுந்த புகை உண்மைக் கடவுளான யெகோவாவுக்குச் ‘சுகந்த வாசனையைப்’ போல் இருந்தது. (லேவி. 1:9, 13) தமது மக்கள் காட்டிய அத்தகைய அன்பினால் அவர் புத்துணர்ச்சி அடைந்தார். (ஆதி. 8:21, NW அடிக்குறிப்பு.) பலி செலுத்தும் விஷயத்தில் திருச்சட்டத்திலிருந்து இன்றைக்கு நமக்கும் பொருந்துகிற ஒரு நியமத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். யெகோவாவுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துகிறவர்கள் அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவார்கள். எப்படிப்பட்ட பலிகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்? வாழ்க்கையின் இரண்டு அம்சங்களை, அதாவது நம்முடைய நடத்தையையும் பேச்சையும், பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்.
12. எப்படிப்பட்ட பழக்கங்களோடு ‘நம்முடைய உடலைப் பலியாக அர்ப்பணிப்பது’ யெகோவாவுக்கு அருவருப்பானதாய் இருக்கும்?
12 ரோமருக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள்; சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்.” (ரோ. 12:1) கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற ஒருவர் தன் உடலை அவருக்குப் பிரியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். புகையிலை, பாக்கு, போதைப்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அல்லது மதுபான துஷ்பிரயோகம் செய்து தன்னைக் கறைபடுத்திக் கொண்டால் அந்தப் பலி பரிசுத்தமானதாக இருக்காது. (2 கொ. 7:1) அதோடு, ‘பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்’; ஆகவே, எந்தவொரு ஒழுக்கங்கெட்ட நடத்தையிலும் ஈடுபடுகிறவனுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பாய் இருக்கும். (1 கொ. 6:18) கடவுளைப் பிரியப்படுத்த ஒருவர் தன்னுடைய ‘நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க’ வேண்டும்.—1 பே. 1:14-16.
13. நாம் யெகோவாவைத் துதிப்பது ஏன் தகுந்தது?
13 யெகோவாவுக்குப் பிரியமுள்ள மற்றொரு பலி நம்முடைய பேச்சு. யெகோவாவை நேசிப்பவர்கள் எப்போதும் அவரைப் பற்றி வீட்டிலும் வெளியிலும் புகழ்ந்து பேசுகிறார்கள். (சங்கீதம் 34:1-3-ஐ வாசியுங்கள்.) சங்கீதம் 148-150-ஐ வாசித்து, யெகோவாவைத் துதிக்க அவை திரும்பத் திரும்ப நம்மை உற்சாகப்படுத்துவதைக் கவனியுங்கள். ஆம், “துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.” (சங். 33:1) நமக்கு முன்னுதாரணமாக விளங்கும் இயேசு கிறிஸ்துவும் நற்செய்தியை அறிவித்து கடவுளைத் துதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டினார்.—லூக். 4:18, 43, 44.
14, 15. எப்படிப்பட்ட பலிகளைச் செலுத்தும்படி இஸ்ரவேலருக்கு ஓசியா அறிவுறுத்தினார், அவர்களுக்கு யெகோவா எப்படிப் பலனளித்தார்?
14 பக்திவைராக்கியத்தோடு பிரசங்கிக்கும்போது யெகோவாமீது அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறோம், அவருடைய அங்கீகாரத்தைப் பெற ஆசைப்படுவதையும் காட்டுகிறோம். உதாரணமாக, பொய் வணக்கத்தில் ஈடுபட்டு கடவுளுடைய தயவை இழந்த இஸ்ரவேலருக்கு ஓசியா தீர்க்கதரிசி புத்திமதி கொடுத்த விதத்தைச் சிந்தித்துப் பாருங்கள். (ஓசி. 13:1-3) “[யெகோவாவே,] எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்” என்று மன்றாடும்படி ஓசியா அவர்களுக்குச் சொன்னார்.—ஓசி. 14:1, 2.
15 ஓர் இஸ்ரவேலன் யெகோவாவுக்குச் செலுத்திய பலிகளிலேயே விலை உயர்ந்தது காளைதான். ஆகவே, “உதடுகளின் காளை” என்பது உண்மைக் கடவுளுக்குப் புகழ்ச்சியாகச் சொல்லப்படும் உள்ளப்பூர்வமான வார்த்தைகளை... நன்கு சிந்தித்துச் சொல்லப்படும் வார்த்தைகளை... அர்த்தப்படுத்தியது. இத்தகைய பலிகளைச் செலுத்தியவர்களுக்கு யெகோவா எப்படிப் பலனளித்தார்? “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்று சொன்னார். (ஓசி. 14:4) இப்படிப்பட்ட துதியின் பலிகளைச் செலுத்தியவர்களுக்கு யெகோவா மன்னிப்பு வழங்கினார், அங்கீகாரம் அளித்தார், அவர்களுடன் நட்பு வைத்தார்.
16, 17. ஒருவர் கடவுள் மீதுள்ள விசுவாசத்தால் தூண்டப்பட்டு நற்செய்தியை அறிவிக்கும்போது, அவருடைய துதி யெகோவாவுக்கு எப்படிப்பட்டதாய் இருக்கும்?
16 யெகோவாவை வெளிப்படையாகத் துதிப்பது எப்போதும் உண்மை வழிபாட்டின் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. யெகோவாவைத் துதிப்பதை சங்கீதக்காரன் மிக முக்கியமாய்க் கருதினார்; அதனால்தான், “நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினார். (சங். 119:108, பொது மொழிபெயர்ப்பு) நம்முடைய நாளைப் பற்றியென்ன? நம்முடைய நாளில் கூடிவரும் திரளான மக்களைப் பற்றி ஏசாயா இவ்வாறு முன்னுரைத்தார்: ‘கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள். . . . [அவர்களுடைய காணிக்கைகள்] அங்கீகரிக்கப்பட்டதாய் [கர்த்தரின்] பலிபீடத்தின்மேல் ஏறும்.’ (ஏசா. 60:6, 7) இதன் நிறைவேற்றமாய், லட்சோபலட்சம் மக்கள் ‘கடவுளுக்கு எப்போதும் உதடுகளின் கனியைப் பலி செலுத்துகிறார்கள்; அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன் மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துகிறார்கள்.’—எபி. 13:15.
17 உங்களைப் பற்றியென்ன? நீங்கள் கடவுளுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துகிறீர்களா? இல்லையென்றால், தேவையான மாற்றங்கள் செய்து யெகோவாவை வெளிப்படையாகத் துதிக்க ஆரம்பிப்பீர்களா? நற்செய்தியை விசுவாசத்தோடு அறிவிக்கும்போது, உங்கள் பலி ‘காளையெருதைப் பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.’ (சங்கீதம் 69:30, 31-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய துதியின் பலியாகிய “சுகந்த வாசனை” யெகோவாவைச் சென்றெட்டும் என்றும் உங்களுக்கு தமது அங்கீகாரத்தை அவர் வழங்குவார் என்றும் உறுதியோடிருங்கள். (எசே. 20:41) அப்போது நீங்கள் அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
‘யெகோவா நீதிமானை ஆசீர்வதிப்பார்’
18, 19. (அ) கடவுளைச் சேவிப்பதைப் பற்றி இன்று பொதுவாக மக்களின் கருத்து என்ன? (ஆ) கடவுளுடைய தயவை இழந்தால் என்ன ஆகும்?
18 மல்கியாவின் காலத்தில் வாழ்ந்த சிலரைப் போல, ‘தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினால் . . . என்ன பிரயோஜனம்?’ என்று இன்றும் பலர் நினைக்கிறார்கள். (மல். 3:14) அவர்களுக்குப் பண ஆசை இருப்பதால், கடவுளுடைய நோக்கமெல்லாம் நிறைவேறாது, அவருடைய சட்டங்கள் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, நற்செய்தியைப் பிரசங்கிப்பதெல்லாம் ஒரு வீணான வேலை, தொல்லை பிடித்த வேலை.
19 இதுபோன்ற கருத்துகள் ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பித்துவிட்டன. யெகோவா கொடுத்த அற்புதமான வாழ்வை உதறித்தள்ள... அவருடைய அங்கீகாரத்தை நிராகரிக்க... ஏவாளைத் தூண்டியது சாத்தானே. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற எண்ணத்தைத்தான் இன்றும் மக்களுடைய மனதில் சாத்தான் விதைத்து வருகிறான். ஆனால், கடவுளுடைய தயவை இழப்பதால் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதை ஆதாமும் ஏவாளும் அனுபவத்தில் கண்டார்கள். அவர்களுடைய கெட்ட முன்மாதிரியைப் பின்பற்றும் அனைவரும் அதே கசப்பான உண்மையை விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.—ஆதி. 3:1-7, 17-19.
20, 21. (அ) சாறிபாத் விதவை என்ன செய்தாள், அதனால் என்ன பலன் பெற்றாள்? (ஆ) அந்த விதவையை நாம் எப்படிப் பின்பற்றலாம், ஏன்?
20 ஆதாம் ஏவாளுக்கு ஏற்பட்ட சோக முடிவையும், எலியாவுக்கும் சாறிபாத் விதவைக்கும் கிடைத்த நல்ல பலன்களையும் சிந்தித்துப் பாருங்கள். எலியா சொன்ன உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கேட்ட பின்பு, அந்த விதவை முதலில் தீர்க்கதரிசிக்கு அப்பம் சுட்டுப் பரிமாறினாள். பின்பு எலியா மூலம் சொன்ன வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார். ஆம், ‘அவளும், இவரும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். யெகோவா எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை’ என்று வாசிக்கிறோம்.—1 இரா. 17:15, 16.
21 இன்று கோடிக்கணக்கான மக்களில் வெகு சிலரே அந்த சாறிபாத் விதவையைப் போல செய்கிறார்கள். அவள் இரட்சிப்பின் தேவன்மீது முழு நம்பிக்கை வைத்தாள், அவரும் அவளைக் கைவிடவில்லை. பைபிளிலுள்ள இதுபோன்ற உதாரணங்கள் யெகோவா நம் நம்பிக்கைக்குத் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. (யோசுவா 21:43-45; 23:14-ஐ வாசியுங்கள்.) அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றவர்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை நவீனகால சாட்சிகளின் அனுபவங்களும் காட்டுகின்றன.—சங். 34:6, 7, 17-19.a
22. தாமதிக்காமல் கடவுளுடைய அங்கீகாரத்தைத் தேடுவது ஏன் முக்கியம்?
22 “பூமியெங்கும் குடியிருக்கிற அனைவர்மீதும்” கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது. (லூக். 21:34, 35) 21:34, 35) அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. கடவுளால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதி நமக்குக் கொடுக்கிற அழைப்பைக் கவனியுங்கள்: “என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.” இதற்கு முன்னால் பணமோ பொருளோ எதுவுமே ஈடாகாது. (மத். 25:34) ஆம், ‘யெகோவாவே, நீதிமானை ஆசீர்வதித்து, [அங்கீகாரம்] என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வார்.’ (சங். 5:12) ஆகவே, நாம் கடவுளுடைய அங்கீகாரத்தைத் தேட வேண்டாமா?
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம் மார்ச் 15, 2005, பக்கம் 13, பாரா 15 மற்றும் ஆகஸ்ட் 1, 1997, பக்கங்கள் 20-25-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நம் உள்ளப்பூர்வமான வணக்கத்தைப் பெற யெகோவா ஏன் தகுதியானவர்?
• இன்று என்ன பலிகளை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்?
• ‘உதடுகளின் காளைகள்’ என்பது எதைக் குறிக்கிறது, நாம் ஏன் அவற்றை யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும்?
• நாம் ஏன் கடவுளுடைய அங்கீகாரத்தை நாட வேண்டும்?
[பக்கம் 13-ன் படம்]
ஓர் ஏழை விதவையிடம் கடவுளின் தீர்க்கதரிசி என்ன முக்கிய விஷயத்தை முன்வைத்தார்?
[பக்கம் 15-ன் படம்]
யெகோவாவுக்குப் புகழ்ச்சி பலிகளைச் செலுத்தும்போது என்ன நன்மைகளைப் பெறுகிறோம்?
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாமீது முழு நம்பிக்கை வைக்கும்போது அவர் உங்களை கைவிடவே மாட்டார்