சக கிறிஸ்தவர்களை விட்டு விலகிவிடாதீர்கள்
“பத்து வருடங்களாக நாங்கள் வியாபார உலகத்தின் கவர்ச்சியில் மதிமயங்கி கிடந்தோம்; அதனால், செல்வச் செழிப்போடு சொகுசாக வாழ்ந்தோம். நாங்கள் சத்தியத்தில்தான் வளர்க்கப்பட்டோம்; ஆனாலும், சத்தியத்தைவிட்டு தூரமாய் விலகிவிட்டோம். திரும்பவும் கடவுளிடம் நெருங்கி வரவே முடியாத நிலையில் இருந்ததாக உணர்ந்தோம்” என்று ஜானும் அவரது மனைவி டீனாவும் சொல்கிறார்கள்.a
மற்றொரு சகோதரர் மேரெக் இவ்வாறு சொல்கிறார்: “போலந்தில், சமுதாயத்திலும் அரசியலிலும் ஏற்பட்ட மாற்றங்களால் எந்த வேலையிலும் என்னால் நிலைத்திருக்க முடியவில்லை. அதனால், மனதுக்கு ஒரே வெறுப்பாக இருந்தது. சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்கும் பயமாக இருந்தது; ஏனென்றால், தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு இல்லை. ஆனாலும், ஒரு தொழிலில் இறங்க முடிவு செய்தேன்; அதில் கிடைக்கிற சம்பாத்தியத்தை வைத்து குடும்பத்தைக் கவனிக்க முடியும், அதே சமயம் ஆன்மீகக் காரியங்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். நான் எடுத்த முடிவு தவறு என்பது பிறகுதான் தெரிந்தது.”
இந்த உலகத்தில், ஒரு பக்கம் விலைவாசி ராக்கெட் வேகத்தில் எகிறிக்கொண்டே போகிறது, இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் கிடுகிடுவென அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிற சிலர் தவறான தீர்மானங்களை எடுத்துவிடுகிறார்கள். உலக நிலைமை இப்படியிருப்பதால், சகோதரர்கள் பலர் ஓவர்டைம் பார்க்க... இருக்கிற வேலையோடு இன்னொரு வேலையையும் சேர்த்து செய்ய... முன் அனுபவம் இல்லாவிட்டாலும் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க... தீர்மானிக்கிறார்கள். இதில் கிடைக்கிற கூடுதல் வருமானம் குடும்பத்துக்கு உதவும் என்றும் ஆன்மீக ரீதியில் தங்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நினைக்கிறார்கள். இருந்தாலும், எதிர்பாராத சூழ்நிலைகள், மாறிக்கொண்டே இருக்கிற பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக நல்ல எண்ணத்தோடு போடுகிற திட்டங்கள்கூட தோல்வியடைகின்றன. இதனால், சிலர் பேராசை எனும் கண்ணியில் சிக்கியிருக்கிறார்கள்; காசு, பணத்தை முன்வைத்து சபைக் கூட்டங்கள், வெளி ஊழியம் போன்றவற்றை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்கள்.—பிர. 9:11, 12.
சகோதர சகோதரிகள் சிலர் வேலை, பணம் என்று அவற்றிலேயே மூழ்கியிருப்பதால், தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள், ஊழியம் என எதற்குமே அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால், அவர்களுடைய ஆன்மீக நிலை ஆட்டம் காண்கிறது, யெகோவாவோடு உள்ள உறவில் விரிசல் ஏற்படுகிறது. மற்றொரு முக்கியமான உறவையும்கூட முறித்துக்கொள்ளும் நிலை அவர்களுக்கு ஏற்படலாம்; அதுதான், ‘விசுவாசக் குடும்பத்தாருடன்’ உள்ள பிணைப்பு. (கலா. 6:10) சிலர், கிறிஸ்தவக் கூட்டுறவிலிருந்தே படிப்படியாக விலகிவிடுகிறார்கள். இந்தக் கூட்டுறவு எவ்வளவு முக்கியம் என்பதைக் கவனியுங்கள்.
சக கிறிஸ்தவர்களும் நம் கடமையும் ...
சகோதர சகோதரிகளாக இருக்கிற நமக்கு ஒருவருக்கொருவர் கனிவான பாசத்தைக் காட்ட நிறையச் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. (ரோ. 13:8) உங்களுடைய சபையில் ‘முறையிடுகிற ஏழைகளை’ நீங்கள் பார்த்திருக்கலாம். (யோபு 29:12) சிலர், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடலாம். இதைப் பார்க்கிற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அப்போஸ்தலன் யோவான் நினைப்பூட்டினார். அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வைத்திருக்கும் ஒருவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் இருப்பதைக் கண்ணாரக் கண்டும், அவன்மீது கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மீது அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்?”—1 யோ. 3:17.
இப்படி வறுமையில் வாடுகிறவர்களை நீங்கள் பார்த்து, அவர்களுக்குத் தாராளமாய் உதவியிருக்கலாம். என்றாலும், சகோதரர்களுக்குப் பொருளுதவி அளிப்பதோடு நாம் நிறுத்திக்கொள்ளக் கூடாது. சிலர், தனிமையிலோ மனச்சோர்விலோ வாடுவதால் உதவிக்காக முறையிடலாம். அவர்கள் யெகோவாவிடம் நெருங்குவதற்கே அருகதையற்றவர்கள் என நினைக்கலாம், கொடிய நோயினால் அவதிப்படலாம் அல்லது பிரியமான ஒருவரின் பேரிழப்பால் தவிக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு உதவ ஒரு வழி, அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பதும் அவர்களிடம் ஆறுதலாகப் பேசுவதுமே; இப்படிச் செய்யும்போது உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் அவர்களைப் பலப்படுத்த முடியும். (1 தெ. 5:14) இதனால், நம் சகோதரர்களுடன் உள்ள நம் பாசப் பிணைப்பு பலப்படும்.
முக்கியமாக, மற்றவர்கள் சொல்வதை அனுதாபத்துடன் காதுகொடுத்து கேட்க... அவர்களுடைய நிலைமையைப் புரிந்துகொள்ள... பைபிளிலிருந்து அன்போடு அறிவுரை கொடுக்க... மூப்பர்களுக்கு வாய்ப்பிருக்கலாம். (அப். 20:28) இப்படிச் செய்வதன் மூலம், ஆன்மீகச் சகோதர சகோதரிகளிடம் ‘கனிவான பாசத்தை’ காட்டிய அப்போஸ்தலன் பவுலை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.—1 தெ. 2:7, 8.
ஆனால், ஒரு கிறிஸ்தவர் மந்தையை விட்டு விலகிச் செல்லும்போது சகோதரர்களுக்கு அவர் செய்ய வேண்டிய கடமை என்ன ஆகிறது? சபையின் கண்காணிகளும்கூட பணத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு அவற்றின் பின்னால் போய்விட வாய்ப்பிருக்கிறது. ஒரு கிறிஸ்தவர் இப்படிப்பட்ட ஆசைக்கு அடிபணிந்தால் என்ன ஆகும்?
தவிக்க வைக்கும் கவலைகள்
குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்காக இராப்பகலாய் உழைப்பது வேறு பல கவலைகளைக் கூட்டுகிறது; இதனால், ஆன்மீக நெறிகளை நாம் அசட்டை செய்துவிடலாம். (மத். 13:22) முன்னர் குறிப்பிடப்பட்ட மேரெக் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய தொழில் நொடிந்தபோது, வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேடத் தீர்மானித்தேன். மூன்று மாதங்களுக்கு மட்டுமே வெளிநாட்டுக்குப் போய்வர நினைத்தேன். ஆனால் மூன்று மாதம், மூன்று மாதம் என அப்படியே வேலையில் தொடர்ந்தேன்; இடையிடையே, வீட்டில் சில நாட்களே தங்கியிருந்தேன். அதனால், சத்தியத்தில் இல்லாத என் மனைவி உணர்ச்சி ரீதியில் பாதிக்கப்பட்டாள்.”
இதனால் பாதிக்கப்பட்டது குடும்பம் மட்டுமே அல்ல. “கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்காக வேலை பார்த்ததோடு, மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் மோசமான ஆட்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் ரௌடிகள் போல நடந்துகொண்டார்கள். நான் துவண்டு போய்விட்டேன், அடிமை போல உணர்ந்தேன். என்னைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாமல் இருக்கிறபோது, மற்றவர்களுக்கு எங்கே என்னால் உதவ முடியும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்” என்று மேரெக் சொல்கிறார்.
மேரெக் எடுத்தத் தீர்மானத்தின் விபரீத விளைவுகள் நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். வெளிநாட்டுக்குப் போவதால் ஒருவேளை பணப் பிரச்சினை தீர்ந்தாலும் வேறு பிரச்சினைகள் தலைதூக்கும், அல்லவா? உதாரணத்திற்கு, உங்களுடைய குடும்பத்தார் ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பாதிக்கப்படுவார்கள், அல்லவா? சபையாருடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும், அல்லவா? சக கிறிஸ்தவர்களுக்கு உதவும் பாக்கியம் பறிபோய்விடும், அல்லவா?—1 தீ. 3:2-5.
என்றாலும், ஒருவர் வெளிநாட்டில் மட்டுமல்ல தன்னுடைய சொந்த ஊரில்கூட வேலையே கதியென கிடக்கலாம். ஜான்-டீனா தம்பதியர் சொல்வதைக் கவனியுங்கள்: “கல்யாணமான புதிதில், நாங்கள் ஒரு நல்ல இடம் பார்த்து அங்கே சின்னதாக ஒரு ‘ஹாட்-டாக்’ கடை ஆரம்பித்தோம். எக்கச்சக்க லாபம் கிடைத்ததால் அதிக நேரம் வியாபாரத்தில் செலவிட்டோம். அதனால், கூட்டங்களுக்குப் போக நேரமே கிடைக்கவில்லை. சீக்கிரத்தில், பயனியர் செய்வதை நிறுத்திவிட்டேன், உதவி ஊழியராகச் சேவை செய்யவும் முடியாமல் போய்விட்டது. லாபத்திற்கு மேல் லாபம் வந்து குவிந்ததைப் பார்த்துப் பரவசமடைந்த நாங்கள் கடையைப் பெரிதாக்கினோம்; சத்தியத்தில் இல்லாத ஒருவருடன் ‘பார்ட்னர்ஷிப்பில்’ இணைந்தோம். சீக்கிரத்தில், லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ‘கான்ட்ராக்டுகளில்’ கையெழுத்திட வெளிநாடுகளுக்குப் பறந்தேன். நான் வீட்டில் இருப்பதே அபூர்வம்தான். அதனால், மனைவியோடும் மகளோடும் உட்கார்ந்து பேசக்கூட நேரமில்லாமல் போய்விட்டது. வெற்றிப்படியின் உச்சத்திற்குப் போய்க்கொண்டிருந்த வியாபாரம், கடைசியில் எங்களை ஆன்மீக ரீதியில் சறுக்கி விழ வைத்துவிட்டது. சபையாருடன் தொடர்பே இல்லாமல் போனதால், அவர்களைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. வியாபாரத்தை ஆரம்பித்த சமயத்தில் இப்படியெல்லாம் நடக்குமென கனவிலும் நினைக்கவில்லை.”
இதிலிருந்து நமக்கென்ன பாடம்? வசதி வாய்ப்புகளோடு சொகுசாக வாழ வேண்டுமென்ற ஆசை நம்மைக் கண்ணியில் சிக்க வைக்கலாம்; அதனால், கிறிஸ்தவ அடையாளமான “அங்கிகளை” இழப்பதைப் பற்றிக்கூட நாம் கவலைப்படாமல் மெத்தனமாக இருந்துவிடலாம். (வெளி. 16:15) இந்த அடையாளத்தை இழக்கும்போது, ஒரு சமயம் நாம் உதவிசெய்து வந்த சகோதரர்களுடன் வைத்திருந்த பந்தம் அறுந்துவிடலாம்.
எதார்த்தமாகச் சீர்தூக்கிப் பாருங்கள்
‘எனக்கு இப்படியெல்லாம் நடக்காது’ என ஒருவேளை நாம் நினைக்கலாம். ஆனாலும், வாழ்க்கைக்கு உண்மையிலேயே என்னென்ன தேவை என்பதைப் பற்றி நாம் எல்லாருமே கவனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “நாம் இந்த உலகத்தில் எதையுமே கொண்டு வரவில்லை; நாம் இங்கிருந்து எதையுமே கொண்டு போகவும் முடியாது. அதனால், நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்” என்று பவுல் எழுதினார். (1 தீ. 6:7, 8) வாழ்க்கைத் தரம் நாட்டுக்கு நாடு வேறுபடுவது உண்மைதான். வளர்ச்சியடைந்த நாடுகளில் அத்தியாவசியப் பொருள்களாகக் கருதப்படுபவை பிற நாடுகளில் ஆடம்பரப் பொருள்களாகக் கருதப்படலாம்.
நாம் வசிக்கிற நாட்டில் வாழ்க்கைத் தரம் எப்படியிருந்தாலும் சரி, பவுல் அடுத்ததாகச் சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள்: “பணக்காரராவதில் குறியாக இருக்கிறவர்கள், சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீங்கிழைக்கும் முட்டாள்தனமான பலவித ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களைக் கேட்டிலும் அழிவிலுமே அமிழ்த்துகின்றன.” (1 தீ. 6:9) ஒரு கண்ணி, பிராணிகளின் கண்களுக்குத் தெரியாமல் மறைவாக இருக்கும். அவை அறியாமலே போய் அதில் சிக்கிக்கொள்ளும். ‘தீங்கிழைக்கும் ஆசைகளில்’ சிக்கிவிடாதிருக்க நாம் என்ன செய்யலாம்?
எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தால், தனிப்பட்ட படிப்பு போன்ற ஆன்மீகக் காரியங்களுக்கு அதிக நேரத்தைக் கண்டுபிடிக்கத் தூண்டப்படுவோம். ஒரு கிறிஸ்தவர், ஜெபம் செய்து தனிப்பட்ட விதமாகப் படிக்கும்போது, மற்றவர்களுக்கு உதவ ‘முழுமையான திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற’ முடியும்.—2 தீ. 2:15; 3:17.
ஜானை ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதற்காகவும் உற்சாகப்படுத்துவதற்காகவும் அன்பான மூப்பர்கள் சில வருடங்களாகப் பிரயாசப்பட்டார்கள். அதனால் அவர் பெரும் மாற்றங்களைச் செய்தார். “ஒரு சமயம் முக்கியமான விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கையில், பணக்கார இளைஞனைப் பற்றிய பைபிள் உதாரணத்தை மூப்பர்கள் சொன்னார்கள். அவன் முடிவில்லா வாழ்வைப் பெற ஆசைப்பட்டான், அதே சமயத்தில் தன்னுடைய சொத்துபத்துகளை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் விரும்பவில்லை. அந்த உதாரணம் எனக்குப் பொருந்துமா என்று அவர்கள் பக்குவமாகக் கேட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டேன்!” என்று அவர் சொல்கிறார்.—நீதி. 11:28; மாற். 10:17-22.
ஜான் தன்னுடைய சூழ்நிலையை எதார்த்தமாகச் சீர்தூக்கிப் பார்த்தார்; பெரியளவில் வியாபாரம் செய்யாதிருக்கத் தீர்மானித்தார். இரண்டு வருடங்களுக்குள் அவரும் அவருடைய வீட்டாரும் ஆன்மீக ரீதியில் மீண்டும் பலப்பட்டார்கள். இப்போது அவர் ஒரு மூப்பராக தன்னுடைய சகோதரர்களுக்கு உதவுகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “சகோதரர்கள் ஆன்மீகக் காரியங்களை அலட்சியம் செய்யுமளவுக்கு தொழிலில் மூழ்கிவிடும்போது, சத்தியத்தில் இல்லாதவர்களுடன் பிணைக்கப்படுவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை என்னுடைய உதாரணத்தை வைத்தே விளக்குகிறேன். வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது அவற்றை உதறித் தள்ளுவதும் வியாபாரத்தில் தில்லுமுல்லு செய்யாமல் இருப்பதும் ரொம்பவே கஷ்டம்.”—2 கொ. 6:14.
மேரெக்கும்கூட அடிபட்டுதான் பாடம் கற்றுக்கொண்டார். வெளிநாட்டில் கைநிறைய சம்பாதித்ததால் குடும்பத்தின் பொருளாதார தேவைகளைக் கவனிக்க முடிந்தது; ஆனால், கடவுளோடும் சகோதரர்களோடும் உள்ள பந்தத்தை அவர் இழந்தார். பிற்பாடு, எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தார். “முற்காலத்தில், ‘பெரிய காரியங்களைத் தேடிய’ பாரூக்கைப் போலவே நானும் இத்தனை வருடங்களாக இருந்தேன். கடைசியில், என்னுடைய உள்ளத்தில் இருந்த கவலைகளையெல்லாம் யெகோவாவிடம் கொட்டி ஜெபம் செய்தேன்; இப்போது, ஆன்மீக ரீதியில் மீண்டும் பலம் பெற்றதுபோல் உணருகிறேன்” என்று அவர் சொல்கிறார். (எரே. 45:1-5) மேரெக் இப்போது சபையில் ஒரு கண்காணியாக ‘சிறந்த வேலையை’ செய்வதற்குத் தகுதிபெற முயன்று கொண்டிருக்கிறார்.—1 தீ. 3:1.
நிறையச் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டுக்குச் செல்ல நினைப்பவர்களுக்கு மேரெக் இந்த எச்சரிப்பைக் கொடுக்கிறார்: “வெளிநாட்டுக்குப் போனால் இந்தப் பொல்லாத உலகத்தின் கண்ணிகளில் மிகச் சுலபமாகச் சிக்கிவிடுவீர்கள். அங்குள்ள பாஷை தெரியாததால் மற்றவர்களிடம் சரளமாகப் பேச முடியாது. நீங்கள் நிறையப் பணத்தோடு வீடு திரும்பலாம்; ஆனால், ஆன்மீகக் காரியங்களைப் பின்னுக்குத் தள்ளியதால் உள்ளமெல்லாம் ரணமாகியிருக்கும்; அது ஆற வெகு காலமெடுக்கலாம்.”
வேலையிலும் சரி சகோதரர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையிலும் சரி, சமநிலையோடு இருந்தால் யெகோவாவைப் பிரியப்படுத்த முடியும். அதோடு, நம்முடைய நல்ல முன்மாதிரி ஞானமாகத் தீர்மானம் எடுக்க மற்றவர்களுக்கு உதவும். கவலையில் தவிப்போருக்குச் சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் நல்ல முன்மாதிரியும் அவசியம். சக கிறிஸ்தவர்கள் சமநிலையுடன் செயல்பட... வாழ்க்கையின் கவலைகளில் மூழ்கிவிடாதிருக்க... சபை மூப்பர்களும் அனுபவமுள்ள மற்றவர்களும் உதவலாம்.—எபி. 13:7.
ஆம், வேலையிலேயே மூழ்கிப்போய் நம் சகோதர சகோதரிகளை விட்டு ஒருபோதும் விலகிவிடாதிருப்போமாக. (பிலி. 1:10) மாறாக, ஆன்மீகக் காரியங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து ‘கடவுளுடைய பார்வையில் செல்வந்தராக’ ஆவோமாக.—லூக். 12:21.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 21-ன் படங்கள்]
கூட்டங்களுக்குச் செல்ல முடியாதபடி உங்கள் வேலை இடைஞ்சலாய் இருக்கிறதா?
[பக்கம் 23-ன் படங்கள்]
உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவ கிடைக்கும் வாய்ப்புகளை மதிக்கிறீர்களா?