‘வாழ்வில் வெற்றி காண’ வழி
“வெற்றி.” இந்த வார்த்தை யாரைத்தான் வசீகரிப்பதில்லை? சிலர் பதவிக்குமேல் பதவி பெற்று, பணத்தையும் பேரையும் புகழையும் சம்பாதித்து, வெற்றி ஏணியின் உச்சிக்கே சென்றிருக்கிறார்கள். மற்றவர்கள் வெற்றிக் கனியைப் பறிக்க ஆசைக்கனவு கண்டிருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசை கைகூடாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.
வெற்றி என்பது உங்கள் வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. அதோடு, உங்கள் நேரத்தையும் சக்தியையும் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும், எந்தளவு முன்வந்து முயற்சி எடுக்கிறீர்கள் என்பதையும் சார்ந்திருக்கிறது.
ஊழியத்தில் முழுமையாகப் பங்குகொள்வது பரம திருப்தி தருவதை அநேக கிறிஸ்தவர்கள் அனுபவத்தில் ருசித்திருக்கிறார்கள். முழுநேர ஊழியத்தையே லட்சிய வேலையாகச் செய்வது, வாழ்வில் வெற்றி பெற சிறியோர் பெரியோர் என அனைவருக்குமே உதவியிருக்கிறது. என்றாலும், சிலருக்கு ஊழியம் செய்வது சலிப்புத் தட்டுவதுபோல் தோன்றலாம்; இவர்கள், மற்ற லட்சியங்களை அடைவதற்கு முதலிடம் கொடுத்து, ஊழியத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிடலாம். எதனால்? உண்மையிலேயே முக்கியமானதை நீங்கள் அசட்டை செய்யாதிருக்க என்ன செய்யலாம்? நீங்கள் எப்படி ‘வாழ்வில் வெற்றி காணலாம்’?—யோசு. 1:8, NW.
கூடுதல் பயிற்சிகளும் விருப்பவேலைகளும்
கிறிஸ்தவப் பிள்ளைகள் கடவுளுடைய சேவையையும் மற்ற காரியங்களையும் அதனதன் இடத்தில் வைக்க வேண்டும். இவ்விதத்தில் சமநிலை காட்டுகிறவர்கள் நம் பாராட்டுக்குப் பாத்திரமானவர்கள்; இவர்கள் வாழ்வில் வெற்றி காண்பது நிச்சயம்.
என்றாலும், சில கிறிஸ்தவப் பிள்ளைகள் கூடுதல் பயிற்சிகளிலும் விருப்பவேலைகளிலும் மூழ்கிவிடுகிறார்கள். அவை கெட்ட காரியங்களெனச் சொல்ல முடியாதுதான். இருந்தாலும், கிறிஸ்தவப் பிள்ளைகள் தங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அவற்றிற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது? அவற்றை யாரோடு சேர்ந்து செய்கிறேன்? அவர்கள் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்டுகிறார்கள்? அவற்றில் தொடர்ந்து ஈடுபட்டால் எது என் வாழ்வின் லட்சியமாக ஆகும்?’ ஒருவர் இப்படிப்பட்ட காரியங்களில் மூழ்கிவிட்டால் கடவுளுடன் உள்ள பந்தத்தைக் கட்டிக்காக்க நேரமோ சக்தியோ கிடைக்காமல் போய்விடும் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஆகவே, முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டியதன் அவசியம் புரிகிறது, அல்லவா?—எபே. 5:15-17.
விக்டர் என்பவரின் உதாரணத்தைக் கவனியுங்கள்.a “12 வயதில் நான் கைப்பந்தாட்ட அணியில் சேர்ந்தேன். அதன்பின் எத்தனையோ பரிசுகளை வென்றேன். விளையாட்டு நட்சத்திரமாக மின்னும் வாய்ப்பைப் பெற்றேன்” என்று அவர் சொல்கிறார். என்றாலும், விளையாட்டு விளையாட்டு என்றிருந்ததால் ஆன்மீக ரீதியில் தான் பலவீனமடைந்து வந்ததைக் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்தார். ஒருமுறை பைபிளை வாசித்துக் கொண்டிருந்தபோதே அவர் தூங்கிவிட்டார். அதுமட்டுமல்லாமல், வெளி ஊழியத்திற்குப் போகிற ஆசை அவருக்கு இல்லாமல்போனது. “விளையாடி விளையாடி வியர்த்துக் களைத்துப் போனேன்; சீக்கிரத்திலேயே ஆன்மீகக் காரியங்களில் ஆர்வத்தை இழந்துவிட்டேன். நான் கடவுளை முழுமூச்சோடு சேவிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்கிறார்.
உயர் கல்வி
ஒரு கிறிஸ்தவருக்குத் தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக பைபிள் சொல்கிறது; அப்படியென்றால், குடும்பத்திற்குத் தேவையான பணத்தையும் பொருளையும் அவர் அளிக்க வேண்டும். (1 தீ. 5:8) அதற்கு, கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறத்தான் வேண்டுமா?
உயர் கல்வியைத் தேர்ந்தெடுப்பது யெகோவாவுடன் உள்ள பந்தத்தை எப்படிப் பாதிக்குமெனச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இது சம்பந்தமாக பைபிளிலுள்ள ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம்.
எரேமியா தீர்க்கதரிசியின் செயலராகப் பணியாற்றியவர்தான் பாருக். ஒரு சமயத்தில், அவர் யெகோவாவின் சேவையில் கிடைத்த பாக்கியங்களை எண்ணிச் சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு சீரும் சிறப்பும் அடைய ஆசைப்பட்டார். யெகோவா இதைக் கவனித்து, “நீர் உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே” என்று எரேமியா மூலம் எச்சரித்தார்.—எரே. 45:5.
பாருக் என்ன “பெரிய காரியங்களை” தேடினார்? அன்றைய யூத சமுதாயத்தில் பெரிய பெயரெடுக்க அவர் ஆசைப்பட்டிருக்கலாம். அல்லது, செல்வச் செழிப்புடன் வாழ விரும்பியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, மிக முக்கியமான ஆன்மீகக் காரியங்களை அவர் அசட்டை செய்ய ஆரம்பித்திருந்தார். (பிலி. 1:10) என்றாலும், எரேமியா மூலம் யெகோவா கொடுத்த எச்சரிப்புக்கு பாருக் செவிசாய்த்தார்; அதனால் உயிர் தப்பினார்.—எரே. 43:5.
இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? பாருக் அறிவுரை பெற்றதுதானே, அவர் பக்கம் ஏதோ தவறு இருந்ததைக் காட்டியது. அவர் தனக்கெனப் பெரிய காரியங்களைத் தேடிக் கொண்டிருந்தார். உங்களால் மேல் படிப்பு படிக்காமலேயே சொந்தக் காலில் நிற்க முடியுமா? அப்படியென்றால், ஏதோ சொந்த லட்சியத்திற்காக அல்லது பெற்றோரையோ உறவினர்களையோ சந்தோஷப்படுத்துவதற்காக உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் வீணாக்கி மேல் படிப்பு படிக்கத்தான் வேண்டுமா?
கம்ப்யூட்டர் புரோகிராமராக வேலை செய்யும் கீகாஷ் என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருடன் வேலை பார்த்தவர்களுடைய பேச்சை நம்பி, கூடுதலான விசேஷப் பயிற்சிக்காக ஒரு வகுப்பில் சேர்ந்தார். அதன்பின் ஆன்மீகக் காரியங்களுக்கு நேரமே இல்லாமல் போனது. “நான் சதா டென்ஷனில் இருந்தேன்; ஆன்மீக லட்சியங்களை அடைய முடியாததால் என் மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது” என்று அவர் சொல்கிறார்.
வேலையே கதி என்றிருப்பது
உண்மைக் கிறிஸ்தவர்கள் கடினமாக உழைக்க வேண்டுமென பைபிள் ஊக்குவிக்கிறது; பொறுப்புள்ள முதலாளிகளாகவும் தொழிலாளிகளாகவும் இருக்க வேண்டுமென்றும் அது சொல்கிறது. “நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே முழுமூச்சோடு செய்யுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கொலோ. 3:22, 23) ஆகவே, கடின உழைப்பு பாராட்டத்தக்கதுதான் என்றாலும், கடவுளுடனான பந்தமே அதைவிட முக்கியமானது. (பிர. 12:13) ஒரு கிறிஸ்தவர் வேலையே கதி என்றிருந்தால் ஆன்மீகக் காரியங்களை அவர் எளிதில் புறக்கணிக்க ஆரம்பித்துவிடலாம்.
வேலையே கதி என்றிருப்பது, ஆன்மீக ரீதியில் சமநிலையோடு இருக்கவும் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும் முடியாத அளவுக்கு ஒருவரது சக்தியை உறிஞ்சிவிடலாம். “வெகு நேரம் உழைப்பது,” பெரும்பாலும் காற்றைப் பிடிக்க முயலுவதுபோல் “வீணானது” என சாலொமோன் ராஜா குறிப்பிட்டார். ஒரு கிறிஸ்தவர் வேலை வேலை என்றே இருந்தால் கடும் சோர்வினால் நீண்ட காலம் அவதிப்படுவார். அவர் வேலைக்கு அடிமையாகி, சோர்வின் எல்லைக்கே போய்விடலாம். அப்படிப்பட்டவர், ‘களிப்பாயிருந்து [அதாவது, மனமகிழ்ச்சியாயிருந்து] . . . தன் உழைப்பிலெல்லாம் இன்பத்தை அனுபவிக்க’ முடியுமா? (பிர. 3:12, 13, திருத்திய மொழிபெயர்ப்பு; 4:6, NW) அதைவிட முக்கியமாக, குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றவும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடவும் அவருக்கு உடலிலும் உள்ளத்திலும் தெம்பு மிஞ்சுமா?
கிழக்கு ஐரோப்பாவில் வசிக்கும் யானுஷ் தன்னுடைய தோட்டக் கலைத் தொழிலில் முழு வீச்சோடு இறங்கியிருந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “உலக ஜனங்கள் என்னைப் பார்த்து அசந்துபோனார்கள்; ஏனென்றால், நானே எல்லாவற்றையும் ஓடி ஓடி செய்தேன், அதுவும் ஒவ்வொரு வேலையையும் பக்காவாகச் செய்து முடித்தேன். ஆனால் என் ஆன்மீக ஆர்வம் தணிந்தது, ஊழியத்திற்குப் போவதை நிறுத்திவிட்டேன். கொஞ்ச நாளில் கூட்டங்களுக்குப் போவதைக்கூட விட்டுவிட்டேன். போதாததற்கு, கர்வம் என் தலைக்கேறியது; அதனால், மூப்பர்கள் கொடுத்த ஆலோசனையை உதறித்தள்ளிவிட்டு சபையிலிருந்து விலகினேன்.”
உங்கள் வாழ்வில் வெற்றி காண முடியும்
ஒரு கிறிஸ்தவரின் ஆன்மீகச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் மூன்று காரியங்களைப் பற்றிச் சிந்தித்தோம். அவற்றில் ஏதேனும் ஒன்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் வெற்றிப் பாதையில்தான் செல்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க பின்வரும் கேள்விகளும் வசனங்களும் குறிப்புகளும் உங்களுக்கு உதவும்.
கூடுதல் பயிற்சிகளும் விருப்பவேலைகளும்: இவற்றில் நீங்கள் எந்தளவுக்கு மூழ்கியிருக்கிறீர்கள்? ஆன்மீகக் காரியங்களுக்கு நீங்கள் செலவிட்டு வந்த நேரத்தை இப்போது இவை விழுங்கி வருகின்றனவா? இப்போதெல்லாம் சக கிறிஸ்தவர்களோடு பழகவே பிடிக்கவில்லையா? அப்படியென்றால், தாவீது ராஜாவை ஏன் பின்பற்றக்கூடாது? அவர் யெகோவாவிடம், “நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்” என்று மன்றாடினார்.—சங். 143:8.
முன்பு குறிப்பிடப்பட்ட விக்டருக்கு ஒரு பயணக் கண்காணி உதவினார். அவர் விக்டரிடம், “கைப்பந்தாட்டம் கைப்பந்தாட்டம் என்று பித்துப்பிடித்த மாதிரி பேசுகிறாயே” என்றார். “அதைக் கேட்டு அப்படியே ஆடிப்போய்விட்டேன். நான் அளவுக்குமீறி சென்றிருந்ததை உணர்ந்தேன். ஆகவே, சீக்கிரத்திலேயே என் அணியிலிருந்த நண்பர்களின் சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு சபையில் நண்பர்களைத் தேடிக்கொள்ள முயன்றேன்” என விக்டர் சொல்கிறார். இன்று அவர் யெகோவாவைப் பக்திவைராக்கியத்துடன் சேவித்து வருகிறார். அவருடைய சிபாரிசைக் கவனியுங்கள்: “உங்களுடைய பள்ளிப் படிப்பும் பயிற்சிகளும் உங்களை யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்கின்றனவா அல்லது அவரிடமிருந்து விலகிப்போகச் செய்கின்றனவா என நண்பர்களிடம், பெற்றோரிடம், அல்லது மூப்பர்களிடம் கேளுங்கள்.”
கடவுளுடைய சேவையில் இன்னுமதிக பொறுப்புகளுக்குத் தகுதி பெற நீங்கள் விரும்புவதைப் பற்றி ஏன் உங்கள் சபையிலுள்ள மூப்பர்களிடம் தெரிவிக்கக் கூடாது? வயதான சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா? ஒருவேளை, அவர்களுக்காகக் கடைக்குப் போய் வரவோ வீட்டு வேலைகளைச் செய்யவோ முடியுமா? உங்கள் வயது எதுவாக இருந்தாலும், உங்களால் முழுநேர ஊழியத்தைச் செய்ய முடியும்; ஆம், உங்கள் சந்தோஷத்திற்குக் காரணமான சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியும்.
உயர் கல்வி: ‘சுய மகிமையை நாடுவதை’ குறித்து இயேசு எச்சரித்தார். (யோவா. 7:18) நீங்கள் எந்தளவு படிக்கத் தீர்மானித்திருந்தாலும், ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நிச்சயப்படுத்தி’ விட்டீர்களா?—பிலி. 1:9, 10.
முன்பு குறிப்பிடப்பட்ட கீகாஷ் தன் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்தார். “மூப்பர்களுடைய ஆலோசனையைக் குறித்து சீரியஸாக யோசித்தேன், பின்பு என் வாழ்க்கையை எளிமையாக்கினேன். கூடுதலாகப் படிக்கத் தேவையில்லையென முடிவு செய்தேன். அதனால் என் நேரமும் சக்தியும்தான் வீணாகும் எனப் புரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்கிறார். கீகாஷ் சபை வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினார். காலப்போக்கில், ஊழியப் பயிற்சிப் பள்ளியில் (மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளி என இப்போது அழைக்கப்படுகிற பள்ளியில்) படித்துப் பட்டம் பெற்றார். ஆம், கூடுதலான தெய்வீகக் கல்வியைப் பெற அவர் ‘நேரத்தை விலைக்கு வாங்கினார்.’—எபே. 5:16, அடிக்குறிப்பு.
வேலை: நீங்கள் வேலையே வாழ்க்கை என்றிருந்து ஆன்மீகக் காரியங்களை அசட்டை செய்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிட்டுச் சாவகாசமாகப் பேசுகிறீர்களா? சபையில் நீங்கள் கொடுக்கும் பேச்சுகளின் தரம் உயர்ந்துகொண்டே வருகிறதா? மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசுகிறீர்களா? ‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்’; அப்போது, யெகோவாவின் அளவில்லா ஆசீர்வாதத்தைப் பெற்று, ‘உங்கள் உழைப்பிலெல்லாம் இன்பத்தை அனுபவிப்பீர்கள்.’—பிர. 2:24; 12:13, தி.மொ.
முன்பு குறிப்பிட்ட யானுஷ் தன்னுடைய தோட்டக் கலைத் தொழிலில் வெற்றி அடையவில்லை; அவரது தொழில் நஷ்டமானது. வருமானம் இல்லாமல், கடனுக்கு மேல் கடன் வாங்கி, வறுமையில் வாடியபோது அவர் யெகோவாவிடம் திரும்பினார். அதன்பின் அவர் தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சீர்படுத்தினார்; இப்போது ஒழுங்கான பயனியராகவும் மூப்பராகவும் சேவை செய்து வருகிறார். “நான் உள்ளதை வைத்துத் திருப்தியாக இருக்கும்போதும் ஆன்மீகக் காரியங்களில் மும்முரமாக ஈடுபடும்போதும் சாந்தியும் சமாதானமும் பெறுகிறேன்” என அவர் சொல்கிறார்.—பிலி. 4:6, 7.
உள்ளத்தில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதையும் வாழ்வில் எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள் என்பதையும் நேரமெடுத்து நேர்மையோடு எடைபோட்டுப் பாருங்கள். யெகோவாவின் சேவையே வாழ்நாளெல்லாம் வெற்றிக்கு வழிநடத்தும். அதையே உங்கள் உயிர்மூச்சாக்குங்கள்.
“நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை” உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம், தேவையில்லாத காரியங்களை விட்டுவிடவும் வேண்டியிருக்கலாம். (ரோ. 12:2) ஆனால், யெகோவாவை முழுமூச்சோடு சேவிப்பதன் மூலம் நீங்கள் ‘வாழ்வில் வெற்றி காண’ முடியும்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
வாழ்வில் வெற்றி காண...
உங்கள் நேரத்தை விழுங்க எத்தனையோ காரியங்கள் போட்டாபோட்டி போடுகையில், உண்மையிலேயே முக்கியமானதைப் புறக்கணிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? உள்ளத்தில் எதை விரும்புகிறீர்கள், வாழ்வில் எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள் என்பதை எடைபோட, கொஞ்சம் நேரமெடுத்து பின்வரும் கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்:
கூடுதல் பயிற்சிகளும் விருப்பவேலைகளும்
▪ இவற்றில் உங்களோடு சேர்ந்து ஈடுபடுகிறவர்கள் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்டுகிறார்கள்?
▪ இவற்றிற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது?
▪ இவையே உங்கள் வாழ்வின் லட்சியமாக ஆகிவிடுமா?
▪ ஆன்மீகக் காரியங்களுக்கு நீங்கள் செலவிட்டு வந்த நேரத்தை இப்போது இவை விழுங்கி வருகின்றனவா?
▪ எப்படிப்பட்டவர்கள் உங்களோடு சேர்ந்து இவற்றில் ஈடுபடுவார்கள்?
▪ சக விசுவாசிகளோடு இருப்பதைவிட இவர்களோடு இருக்கத்தான் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உயர் கல்வி
▪ உங்களால் சொந்தக் காலில் நிற்க முடியுமா? அப்படியென்றால், உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் வீணாக்கி மேல் படிப்பு படிக்கத்தான் வேண்டுமா?
▪ சொந்தக் காலில் நிற்க, கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறத்தான் வேண்டுமா?
▪ கூட்டங்களுக்கு உங்களால் தவறாமல் போக முடியுமா?
▪ ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நிச்சயப்படுத்தி’ விட்டீர்களா?
▪ உங்களுக்குத் தேவையானதை வழங்க யெகோவாவால் முடியும் என்பதில் நீங்கள் இன்னுமதிக நம்பிக்கையை வளர்க்க வேண்டியிருக்கிறதா?
வேலை
▪ நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வேலை, ‘மனமகிழ்ச்சியாயிருந்து . . . உங்கள் உழைப்பிலெல்லாம் இன்பத்தை அனுபவிக்க’ உதவுகிறதா?
▪ குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றவும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடவும் உங்களுக்கு உடலிலும் உள்ளத்திலும் தெம்பு மிஞ்சுகிறதா?
▪ உங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிட்டுச் சாவகாசமாகப் பேசுகிறீர்களா?
▪ நீங்கள் வேலையே வாழ்க்கை என்றிருந்து ஆன்மீகக் காரியங்களை அசட்டை செய்திருக்கிறீர்களா?
▪ சபையில் நீங்கள் கொடுக்கும் பேச்சுகளின் தரத்தை அது பாதித்திருக்கிறதா?
[பக்கம் 30-ன் படம்]
சீரும் சிறப்பும் அடைய விரும்பிய பாருக்கை யெகோவா எச்சரித்தார்