தலைசிறந்த தலைவரான கிறிஸ்துவைப் பின்பற்றுதல்
மனிதத் தலைவர்களைப் பின்பற்றுவோருக்குப் பெரும்பாலும் மிஞ்சுவது ஏமாற்றம்தான். ஆனால், தலைவரான கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கு? அவரே இவ்வாறு சொன்னார்: “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.” (மத். 11:28, 29) ஆம், இயேசுவின் தலைமையை ஏற்பது புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. அடக்கி ஒடுக்கப்படும் தாழ்மையுள்ள மக்கள்மீது அவர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்; அவர்களைத் தமது நுகத்தின்கீழ் வரும்படி அழைக்கிறார். ஆனால், அவரது தலைமையை ஏற்று நடப்பது எதையெல்லாம் உட்படுத்துகிறது?
“கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வரும்படி உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 2:21) இயேசுவின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றுவது எந்தளவு முக்கியம்? நீங்கள் சிலரோடு சேர்ந்து கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட ஒரு பகுதியைக் கடப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்; உங்களில் ஒருவருக்குத்தான் அதைப் பத்திரமாகக் கடக்கத் தெரியும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற மாட்டீர்களா? சொல்லப்போனால், அவற்றின்மீதே உங்கள் கால்களை வைத்துச் செல்ல மாட்டீர்களா? அதுபோலவே, இயேசுவின் வாழ்க்கையை அச்சுவார்த்தாற்போல் பின்பற்ற முயன்றால்தான் நம் உயிர் பாதுகாக்கப்படும். அதற்கு, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு நடப்பதும் அவரால் நியமிக்கப்பட்டவர்களோடு ஒத்துழைப்பதும் அவசியம்.
கேட்டு நடப்பது
இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தின் முடிவில் இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிற எவனும் கற்பாறைமீது தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான். கன மழை பெய்து, வெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின்மீது பலமாக மோதியபோதிலும், அது விழவில்லை; ஏனென்றால் அது கற்பாறைமீது அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது.”—மத். 7:24, 25.
இயேசு, தாம் சொன்ன விஷயங்களைக் கேட்டு நடக்கிறவனை ‘புத்தியுள்ள மனிதன்’ என்று குறிப்பிட்டார். நாம் அவருடைய சொல்லுக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிவதன் மூலம் அவரது முன்மாதிரியை மதித்து நடக்கிறோமா? அல்லது அவரது கட்டளைகளில் நமக்கு எது சௌகரியமானதோ சுலபமானதோ அதை மட்டுமே செய்ய நினைக்கிறோமா? ‘நான் எப்போதும் கடவுளுக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (யோவா. 8:29) அவருடைய நல்ல உதாரணத்தைப் பின்பற்ற முயலுவோமாக.
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் தலைமைக்குக் கீழ்ப்பட்டு நடப்பதில் சிறந்து விளங்கினார்கள். பேதுரு ஒருமுறை இயேசுவிடம், “இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே” என்றார். (மாற். 10:28) ஆம், இயேசுவின் தலைமையை அப்போஸ்தலர்கள் மிக உயர்வாய் மதித்ததால் அவரைப் பின்பற்றுவதற்காக மற்ற எல்லாவற்றையும் மனப்பூர்வமாக விட்டுவந்தார்கள்.—மத். 4:18-22.
கிறிஸ்துவின் பிரதிநிதிகளோடு ஒத்துழையுங்கள்
இயேசுவின் தலைமையை ஏற்று நடப்பதற்கான இன்னொரு வழியை அவரே தம் மரணத்திற்குச் சற்று முன்பு சொன்னார்; “நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்” என்றார். (யோவா. 13:20) சொல்லப்போனால், பரலோக நம்பிக்கையுள்ள தம் பிரதிநிதிகளைத் தம் ‘சகோதரர்கள்’ என அவர் அழைத்தார். (மத். 25:40) இயேசு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, ‘அவரது சார்பில் தூதுவர்களாய்’ இருக்க அவரது ‘சகோதரர்கள்’ நியமிக்கப்பட்டார்கள்; அதாவது, கடவுளோடு சமரசமாகும்படி மற்றவர்களை அழைக்க நியமிக்கப்பட்டார்கள். (2 கொ. 5:18-20) ஆகவே, கிறிஸ்துவின் தலைமைக்குக் கீழ்ப்படிவதென்பது அவரது ‘சகோதரர்களுக்கு’ கீழ்ப்படிவதையும் உட்படுத்துகிறது.
நம்முடைய பைபிள் பிரசுரங்களில் வெளிவரும் காலத்திற்கேற்ற அறிவுரைகளை நாம் ஏற்று நடக்கிறோமா எனச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பைபிள் படிப்பின்போதும் சபைக் கூட்டங்களின்போதும் கிறிஸ்துவின் கட்டளைகள் நமக்கு நினைப்பூட்டப்படுகின்றன. (2 பே. 3:1, 2) அப்படிப்பட்ட ஆன்மீக உணவைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம் அதற்கு நம்முடைய இதயப்பூர்வ நன்றியைக் காட்டுகிறோம். என்றாலும், ஒரு குறிப்பிட்ட அறிவுரை திரும்பத் திரும்பக் கொடுக்கப்படுகையில் நாம் என்ன செய்ய வேண்டும்? உதாரணத்திற்கு, ‘நம் எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என பைபிள் அறிவுறுத்துகிறது. (1 கொ. 7:39) இந்த விஷயத்தின்பேரில் கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக காவற்கோபுர பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றிலும் இன்னும் பல கட்டுரைகளிலும் கடவுளுடைய அறிவுரைகளை விளக்குவதன் மூலம் கிறிஸ்துவின் சகோதரர்கள் நம்முடைய ஆன்மீக நலனில் மிகுந்த அக்கறை காட்டிவருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் நினைப்பூட்டுதல்களுக்குச் செவிசாய்ப்பது, நம்முடைய தலைசிறந்த தலைவரான கிறிஸ்துவைப் பின்பற்றுகிறோம் என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழியாகும்.
“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” என்று நீதிமொழிகள் 4:18 சொல்கிறது. ஆம், இயேசு நம்மை நடத்திச் செல்வது முன்னேற்றப் பாதையில், முட்டுச் சந்தில் அல்ல. அவருடைய ‘சகோதரர்களுடன்’ ஒத்துழைப்பதற்கான இன்னொரு வழி: பைபிள் சத்தியங்களுக்கு “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் தரும் புதிய விளக்கங்களை உடனடியாக ஏற்றுக்கொள்வதாகும்.—மத். 24:45.
கிறிஸ்தவச் சபையில் நியமிக்கப்படும் கண்காணிகளோடு ஒத்துழைப்பதன் மூலமும் நாம் கிறிஸ்துவின் ‘சகோதரர்களுக்கு’ கீழ்ப்படிதலைக் காட்டுவோம். “உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள் உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்களைக் காத்து வருகிறார்கள்; ஆகவே, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 13:17) உதாரணத்திற்கு, ஒரு மூப்பர் நம்மிடம் குடும்ப வழிபாட்டில் தவறாமல் ஈடுபடுவதன் அவசியத்தைப் பற்றிச் சொல்லலாம் அல்லது ஊழியத்தின் ஏதோவொரு அம்சத்தின்பேரில் சில ஆலோசனைகள் வழங்கலாம். ஒரு பயணக் கண்காணி கிறிஸ்தவ வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் ஓர் அறிவுரையை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டலாம். அப்படிப்பட்ட அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் மனப்பூர்வமாகக் கீழ்ப்படியும்போது இயேசுவின் தலைமையை ஏற்று நடப்பதைக் காட்டுவோம்.
மக்களை நல்வழியில் கொண்டு செல்லும் தலைவர்கள் இந்த உலகத்தில் இல்லாதது கசப்பான உண்மை. ஆனால், அன்பைப் பொழியும் கிறிஸ்துவின் தலைமையை ஏற்று நடப்பது எப்பேர்ப்பட்ட புத்துணர்ச்சி தருகிறது! ஆகவே, நம் தலைவருக்குக் கட்டுப்பட்டு நடந்து அவரால் நியமிக்கப்படுகிறவர்களோடு ஒத்துழைப்போமாக.
[பக்கம் 27-ன் படங்கள்]
சத்தியத்தில் இல்லாதவரை மணம் செய்யக்கூடாதென்ற பைபிள் அறிவுரையின்படி நடக்கிறீர்களா?