பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
உன் பிரெண்ட்ஸ் உன்னை சேர்த்துக்கொள்ளவில்லையா?
சில பிள்ளைகளிடம் அவர்களுடைய பிரெண்ட்ஸ், ‘உன்னை எங்களோட சேர்த்துக்க மாட்டோம்’ என்று சொல்லலாம். ஏன்? ஒருவேளை அந்தப் பிள்ளைகளுடைய நிறம் வித்தியாசமாக இருக்கலாம்; அவர்கள் பேசும் விதமோ நடந்துகொள்கிற விதமோ வித்தியாசமாக இருக்கலாம். அல்லது வேறு ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அதனால் பிள்ளைகள் அவர்களை ஒதுக்கித் தள்ளலாம். உன்னை யாராவது ஒதுக்கித் தள்ளுவதுபோல் நினைத்திருக்கிறாயா?—a
அதே மாதிரி நினைத்த ஒரு நபரைப் பற்றி நாம் பார்க்கலாம். அவருடைய பெயர் மேவிபோசேத். அவர் யார், அவர் ஏன் அப்படி நினைத்தார் என்று பார்ப்போம். உன் பிரெண்ட்ஸ் உன்னை ஒதுக்கித் தள்ளுகிறார்கள் என்று நீ நினைத்தால் உடனே மேவிபோசேத்தை யோசித்துப் பார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நீ கற்றுக்கொள்ளலாம்.
மேவிபோசேத்தின் அப்பா பெயர் யோனத்தான். இவர் தாவீதின் ‘பெஸ்ட் பிரெண்ட்.’ ஒருசமயம், யோனத்தான் ஒரு போரில் இறந்துவிடுகிறார். ஆனால், அவர் சாவதற்குமுன் தாவீதிடம், ‘என் பிள்ளைகளை நீ பார்த்துக்கொள்’ என்று சொல்கிறார். பின்பு தாவீது, ராஜாவாகிறார். சில வருடம் கழித்து யோனத்தான் சொன்னது தாவீதின் ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது யோனத்தானின் மகன் மேவிபோசேத் உயிரோடு இருக்கிறார் என்று தாவீதுக்குத் தெரியவருகிறது. ஆனால், மேவிபோசேத் சிறு பிள்ளையாக இருந்தபோது அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதனால் அவர் வாழ்நாள் முழுக்க நொண்டி நொண்டியே நடக்க வேண்டியிருந்தது. அவரை மற்றவர்கள் சேர்த்துக்கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் இப்போது உனக்குப் புரிகிறதா?—
மேவிபோசேத்தை நல்லபடியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தாவீது ராஜா நினைக்கிறார். அதனால், எருசலேமில் தன்னுடைய வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டில் அவரைத் தங்க வைக்கிறார். அதோடு, தன்னுடைய சாப்பாட்டு மேஜையில் தன்னுடன் உட்கார்ந்து சாப்பிடவும் அனுமதி கொடுக்கிறார். சீபா என்பவரை மேவிபோசேத்துக்கு வேலைக்காரராக வைக்கிறார். அதோடு, மேவிபோசேத்துக்கு ஒத்தாசையாக இருக்கும்படி சீபாவின் பிள்ளைகளிடமும் வேலைக்காரர்களிடமும் சொல்கிறார். யோனத்தானின் மகனை தாவீது ராஜா மதிப்பு மரியாதையோடு நடத்துகிறார். அதன்பின் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?—
தாவீதின் குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் வந்தன. தாவீதுக்கு அப்சலோம் என்று ஒரு மகன் இருந்தான்; அவன் ரொம்ப கெட்டவனாக மாறிவிடுகிறான். அவனுடைய அப்பாவுக்குப் பதிலாக அவன் ராஜாவாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதனால் அவரைக் கொலை செய்ய பார்க்கிறான். எனவே, தாவீது அவனிடமிருந்து தப்பியோடுகிறார். தாவீதுதான் ராஜாவாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவருடைய நண்பர்கள் அவரோடுகூட ஓடிப்போகிறார்கள். மேவிபோசேத்துக்கும் அவரோடு போகவேண்டும் என்று ஆசைதான். ஆனால், அவரால் நடக்க முடியாததால் தாவீது ராஜாவோடு போக முடியவில்லை.
ஆனால் தாவீதிடம் மேவிபோசேத்தைப் பற்றி சீபா இல்லாததும் பொல்லாததும் சொல்கிறான். ‘மேவிபோசேத்துக்கு ராஜாவாக வேண்டும் என்ற ஆசை, அதனால்தான் உங்களோடு அவன் வரவில்லை’ என்று சொல்கிறான். அந்தப் பொய்யை தாவீது நம்பிவிடுகிறார். அதனால் மேவிபோசேத்தின் சொத்துக்கள் எல்லாவற்றையும் சீபாவுக்குக் கொடுத்துவிடுகிறார். அதன்பிறகு தாவீதுக்கும், அப்சலோமுக்கு நடந்த போரில் தாவீது ஜெயித்து திரும்பவும் எருசலேமுக்கு வருகிறார். மேவிபோசேத்தின் மேல் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிந்துகொள்கிறார். பின்பு, சொத்தை மேவிபோசேத்தும் சீபாவும் சரிபாதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என தாவீது சொல்கிறார். அப்போது மேவிபோசேத் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறாய்?—
தாவீது செய்தது அநியாயம் என்று மேவிபோசேத் குறை சொல்லவில்லை. ராஜா நிம்மதியாக இருந்தால்தான் அவரால் நன்றாக ஆட்சி செய்ய முடியும் என்று மேவிபோசேத் நினைக்கிறார். எனவே, எல்லா சொத்தையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறார். ஆக, மேவிபோசேத்துக்கு சொத்து ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை, ஆனால் யெகோவாவுடைய ஊழியரான தாவீது ராஜா பத்திரமாக திரும்பி வந்ததே போதுமானதாக இருந்தது.
மேவிபோசேத் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல! நிறைய சமயங்களில் தன்னை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளியதாக அவர் நினைத்தார். ஆனால், யெகோவா அவரை உயிராக நேசித்தார்; அவரை நன்கு கவனித்துக்கொண்டார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?— நாம் சரியானதைச் செய்தாலும் சிலசமயம் மற்றவர்கள் நம்மைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லலாம். ஒருமுறை இயேசு இப்படிச் சொன்னார்: “உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்னரே என்னை வெறுத்ததென்று தெரிந்துகொள்ளுங்கள்.” இயேசுவை மக்கள் கொலையே செய்தார்கள்! அதனால் நம்மையும் அவர்கள் வெறுப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நாம் சரியானதைச் செய்தால் உண்மைக் கடவுளான யெகோவாவுக்கும் அவருடைய மகன் இயேசுவுக்கும் நம்மை ரொம்ப ரொம்ப பிடிக்கும். (w11-E 06/01)
உன்னுடைய பைபிளில் இந்த வசனங்களை வாசித்துப்பார்
a ஒரு பிள்ளையுடன் சேர்ந்து படிக்கிறீர்கள் என்றால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அங்கு கேட்கப்பட்ட கேள்விக்குப் பிள்ளையையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.