குடும்ப வழிபாட்டுக்கும் தனிப்பட்ட படிப்புக்கும் ஆலோசனைகள்
உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் 2009-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து சபைக் கூட்டங்களில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வாரத்தின் மத்தியில் நடந்த இரண்டு கூட்டங்களும் ஒரே கூட்டமாக நடத்தப்பட ஆரம்பித்தன; முன்பு சபை புத்தகப் படிப்பு நடத்தப்பட்ட மாலை நேரத்தைக் குடும்ப வழிபாட்டுக்கு அல்லது தனிப்பட்ட படிப்புக்கு உபயோகிக்கும்படி அனைவருக்கும் உற்சாகம் அளிக்கப்பட்டது. இந்தப் புதிய ஏற்பாட்டை நீங்கள் முழுமையாக உபயோகித்து வந்திருக்கிறீர்களா? அதிலிருந்து முழுமையாகப் பயனடைகிறீர்களா?
குடும்ப வழிபாட்டின்போது எந்தப் பிரசுரத்தைப் படிக்கலாம் என்று சிலர் யோசித்திருக்கிறார்கள். எல்லாக் குடும்பங்களுக்கும் ஒரே அட்டவணையைக் கொடுப்பது ஆளும் குழுவின் நோக்கமல்ல. சூழ்நிலைகள் மாறுபடும் என்பதால், இந்த மாலை வேலையை எப்படிச் சிறந்த விதத்தில் உபயோகிக்கலாம் என்பதை ஒவ்வொரு குடும்பத் தலைவரும் அல்லது ஒவ்வொரு தனி நபரும் தீர்மானிப்பதே பொருத்தமாக இருக்கும்.
குடும்ப வழிபாட்டின்போது சபைக் கூட்டங்களுக்காகச் சிலர் தயாரிக்கிறார்கள்; ஆனால், இன்னும் அதிகத்தையும் செய்யலாம். சிலர், பைபிள் விஷயங்களை வாசிப்பது, கலந்துபேசுவது, அல்லது சிறு பிள்ளைகள் பயனடைவதற்காக நாடகமாக நடிப்பது போன்றவற்றைச் செய்திருக்கிறார்கள். சபைக் கூட்டங்களில் நடப்பதுபோல கேள்வி பதில் முறையைப் பயன்படுத்துவது எப்போதுமே தேவை இல்லை, நல்லதும் இல்லை. உற்சாகமூட்டும் பேச்சுத்தொடர்புக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் சாவகாசமான, ரம்மியமான சூழல் கைகொடுக்கும். அப்படிப்பட்ட சூழலில் புதிது புதிதாக யோசிக்க முடியும்; அதனால் அந்த மாலை நேரங்கள் அனைவருக்குமே மறக்க முடியாத, மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பங்களாக இருக்கும்.
மூன்று பிள்ளைகளின் தகப்பன் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “நாங்கள் பொதுவாக பைபிள் வாசிப்பின் அடிப்படையிலேயே குடும்ப வழிபாட்டைச் செய்கிறோம். ஒவ்வொருவரும் முன்கூட்டியே அந்த அதிகாரங்களை வாசிப்போம், ஆராய்ச்சி செய்வதற்காக அதிலிருந்து சில விஷயங்களைப் பிள்ளைகள் தேர்ந்தெடுப்பார்கள், அதன்பின் தாங்கள் ஆராய்ச்சி செய்தவற்றைக் குடும்ப வழிபாட்டின்போது பகிர்ந்துகொள்வார்கள். மைக்கேல் [ஏழு வயது] ஏதாவது படத்தை வரைவான் அல்லது எதைப் பற்றியாவது நாலு வரி எழுதுவான். டேவிட் மற்றும் கேட்லின் [13 மற்றும் 15 வயது], பார்வையாளர் கண்ணோட்டத்திலிருந்து ஒரு பைபிள் சம்பவத்தைப் பற்றி எழுதுவார்கள். உதாரணமாக, பார்வோனுக்கு மது பரிமாறியவனும் ரொட்டி தயாரித்தவனும் கண்ட கனவுகளுக்கு யோசேப்பு அர்த்தம் கூறியதைப் பற்றிப் படித்தபோது, அந்தக் காட்சியைப் பார்த்த ஒரு கைதியின் கண்ணோட்டத்திலிருந்து ஒரு கட்டுரையை கேட்லின் எழுதினாள்.”—ஆதி., 40-ஆம் அதிகாரம்.
சூழ்நிலைகள் நிச்சயம் வேறுபடும். ஆகவே, ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்குப் பயனளிக்கிற ஒன்று மற்றவர்களுக்குப் பயனளிக்காமல் போகலாம். உங்கள் குடும்ப வழிபாட்டின்போது அல்லது தனிப்பட்ட படிப்பின்போது நீங்கள் உபயோகிப்பதற்கான அநேக ஆலோசனைகள் இங்குள்ள பெட்டியில் உள்ளன. இவை தவிர இன்னும் பல யோசனைகள் உங்கள் மனதிலும் தோன்றலாம்.
[பக்கம் 6, 7-ன் பெட்டி/படம்]
பருவவயது பிள்ளைகளுள்ள குடும்பங்களுக்கு:
• இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை வாசித்துக் கலந்தாலோசியுங்கள்.
• பைபிள் காலங்களில் வாழ்வதாகக் கற்பனை செய்துகொண்டு பதிவுகளை வாசித்துப் பாருங்கள் அல்லது நடித்துப் பாருங்கள். (காவற்கோபுரம், மே 15, 1996, பக்கம் 14, பாராக்கள் 17-18.)
• குறுகியகால, நீண்டகால இலக்குகளைப் பற்றிப் பேசுங்கள்.
• அவ்வப்போது பைபிள்சார்ந்த வீடியோக்களைப் பார்த்துக் கலந்துபேசுங்கள்.
• காவற்கோபுரத்தில் வரும் “இளம் வாசகருக்கு” பகுதியைச் சிந்தியுங்கள்.
குழந்தையில்லாத தம்பதியருக்கு:
• குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தில் அதிகாரங்கள் 1, 3, 11-16 ஆகியவற்றைச் சிந்தியுங்கள்.
• தனிப்பட்ட பைபிள் வாசிப்பின்போது ஆராய்ச்சி செய்தவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
• சபை பைபிள் படிப்பு அல்லது காவற்கோபுர படிப்பிற்காகத் தயாரியுங்கள்.
• இருவரும் ஊழியத்தில் எவ்வாறு இன்னுமதிக நேரம் ஈடுபடலாம் என்பதைப் பற்றிப் பேசுங்கள்.
மணமாகாதவர்களுக்கு அல்லது சத்தியத்தில் தனியாக இருப்பவர்களுக்கு:
• மாவட்ட மாநாடுகளில் வெளியிடப்பட்ட புதிய பிரசுரங்களைப் படியுங்கள்.
• புதிய, பழைய இயர்புக்குகளை படியுங்கள்.
• உங்கள் பகுதியில் மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள்.
• வெளி ஊழியத்திற்கான முன்னுரைகளைத் தயாரியுங்கள்.
சிறு பிள்ளைகளுள்ள குடும்பங்களுக்கு:
• பைபிள் காட்சிகளை நடித்துப் பாருங்கள்.
• ஆங்கில விழித்தெழு!-வில் பக்கங்கள் 30, 31-ல் உள்ளதைப் போன்ற புதிர்களை விளையாடுங்கள்.
• எப்போதாவது, புதுமையான ஒன்றைச் செய்யுங்கள். (மார்ச் 8, 1996 தேதியிட்ட விழித்தெழு!-வில், பக்கங்கள் 16-19-ல் உள்ள, “பைபிளைப் படித்தல்—மிருகக் காட்சி சாலையில்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.)
• காவற்கோபுரத்தில் வரும் “பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்” பகுதியைச் சிந்தியுங்கள்.