உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
    • அதிகாரம் 11

      உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்

      1. குடும்பங்களில் பிளவுகளை உண்டாக்கக்கூடிய சில காரியங்கள் யாவை?

      அன்பு, புரிந்துகொள்ளுதல், சமாதானம் ஆகியவை இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள். உங்கள் குடும்பம் அப்படிப்பட்ட ஒரு குடும்பமாயிருக்குமென்று நம்புகிறோம். எண்ணற்ற குடும்பங்கள் அந்த விவரிப்புக்கு பொருத்தமாய் இருக்க தவறுவதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக பிளவுற்றிருப்பதும் வருந்தத்தக்கதாய் இருக்கிறது. குடும்பங்களை எது பிளவுறச்செய்கிறது? இந்த அதிகாரத்தில் நாம் மூன்று விஷயங்களைக் கலந்தாலோசிப்போம். சில குடும்பங்களில் எல்லா அங்கத்தினர்களும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருப்பதில்லை. வேறுசில குடும்பங்களில், பிள்ளைகள் அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளாக இல்லாமலிருக்கலாம். இன்னும் மற்ற குடும்பங்களில் பிழைப்புக்காக போராடிக்கொண்டிருப்பது அல்லது கூடுதலான பொருளுடைமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை குடும்ப அங்கத்தினர்கள் பிரிந்து இருக்கும்படி கட்டாயப்படுத்துவதாய் தோன்றுகிறது. இருப்பினும், ஒரு குடும்பத்தைப் பிரிக்கும் சூழ்நிலைகள் மற்ற குடும்பத்தை ஒருவேளை பாதிக்காமல் இருக்கலாம். எது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?

      2. குடும்ப வாழ்க்கையைப் பற்றிய வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்வதற்கு சிலர் எங்கே நாடுகின்றனர், ஆனால் அப்படிப்பட்ட வழிநடத்துதலுக்கு எது மிகச் சிறந்த ஆதாரமாய் இருக்கிறது?

      2 நோக்குநிலை ஒரு காரணக்கூறு ஆகும். அடுத்த நபரின் நோக்குநிலையை நீங்கள் உண்மைமனதோடு புரிந்துகொள்ள முயற்சிசெய்தால், ஒரு ஐக்கியப்பட்ட குடும்பத்தை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதை நீங்கள் கண்டுணர்வதற்கான சாத்தியம் அதிகம் இருக்கும். இரண்டாவது காரணக்கூறு, நீங்கள் நாடும் அறிவுரையின் ஆதாரம். பெரும்பாலான மக்கள் உடன்வேலையாட்கள், அயலவர், செய்தித்தாள் எழுத்தாளர்கள், அல்லது மற்ற மனித வழிகாட்டிகள் ஆகியோரின் புத்திமதியைப் பின்பற்றுகின்றனர். ஆனால் சிலர் தங்கள் நிலைமையைக் குறித்து கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதைக் கண்டுபிடித்து, பின்னர் தாங்கள் கற்றுக்கொண்டவற்றை பொருத்தினர். இதைச் செய்வது சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு எவ்வாறு ஒரு குடும்பத்துக்கு உதவும்?—2 தீமோத்தேயு 3:16, 17.

      உங்கள் கணவர் வேறு மதத்தைச் சேர்ந்தவராயிருந்தால்

      பக்கம் 130-ன் படம்

      அடுத்த நபருடைய நோக்குநிலையை புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்

      3. (அ) வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்வதைப் பற்றி பைபிள் என்ன புத்திமதியை அளிக்கிறது? (ஆ) வாழ்க்கைத்துணைவரில் ஒருவர் விசுவாசியாயிருந்து மற்றவர் இல்லையென்றால், அப்போது பொருந்தக்கூடிய சில அடிப்படையான நியமங்கள் யாவை?

      3 வித்தியாசமான மதநம்பிக்கையுள்ள ஒருவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும்படி பைபிள் கண்டிப்பாய் நமக்கு புத்திமதி அளிக்கிறது. (உபாகமம் 7:3, 4; 1 கொரிந்தியர் 7:39) ஒருவேளை உங்கள் திருமணத்திற்குப் பிறகு நீங்கள் பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் உங்கள் கணவரோ கற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அப்போது என்ன செய்வது? திருமண உறுதிமொழிகள் இன்னும் செல்லுபடியாகின்றன. (1 கொரிந்தியர் 7:10) திருமண பிணைப்பின் நிரந்தரத்தன்மையை பைபிள் அழுத்தியுரைப்பதால், திருமணமான நபர்கள் தங்கள் பிரச்சினைகளை விட்டு ஓடிவிடாமல் அவற்றைத் தீர்த்துக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர். (எபேசியர் 5:28-31; தீத்து 2:4, 5) பைபிளின் மதத்தை நடைமுறையில் கடைப்பிடிப்பதை உங்கள் கணவன் கடுமையாய் எதிர்த்தால் என்ன செய்வது? நீங்கள் சபைக்கூட்டங்களுக்கு செல்வதைத் தடைசெய்ய அவர் முயற்சிசெய்யலாம், அல்லது தன் மனைவி வீட்டுக்கு வீடு சென்று, மதத்தைப் பற்றி பேசுவதை விரும்பவில்லை என்று சொல்லலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

      4. கணவன் தன் விசுவாசத்தை பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் மனைவி எந்த விதத்தில் ஒற்றுணர்வை காண்பிக்கலாம்?

      4 ‘என் கணவன் ஏன் அவ்வாறு உணருகிறார்?’ என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 16:20, 23) நீங்கள் செய்துகொண்டிருப்பதை அவர் உண்மையிலேயே புரிந்துகொள்ளவில்லையென்றால், அவர் உங்களைக் குறித்து கவலைப்படலாம். அல்லது உங்கள் உறவினருக்கு முக்கியமாய் இருக்கும் சில பழக்கவழக்கங்களில் நீங்கள் இனிமேலும் கலந்துகொள்ளாததால் அவர்களிடமிருந்து அவர் தொல்லை அனுபவித்துக்கொண்டு இருக்கலாம். “வீட்டில் நான் தனியாக கைவிடப்பட்டவனைப் போல் உணர்ந்தேன்,” என்று ஒரு கணவன் சொன்னார். இந்தக் கணவன் மதத்தின் காரணமாக தன் மனைவியை இழந்துவிடுவதைப் போல் உணர்ந்தார். இருப்பினும், அவர் தனிமையாய் இருந்ததை ஒப்புக்கொள்வதற்கு பெருமை அவரை தடுத்தது. கடந்த காலத்தைக் காட்டிலும் இப்போது உங்கள் கணவனை குறைவாக நேசிக்கிறீர்கள் என்பதை யெகோவாவின் பேரில் உங்களுக்கிருக்கும் அன்பு அர்த்தப்படுத்தாது என்பதை மறுபடியும் உறுதிசெய்வது உங்கள் கணவனுக்கு தேவைப்படலாம். அவரோடு நேரத்தை செலவிட நிச்சயமாயிருங்கள்.

      5. வேறு மதத்தில் இருக்கும் கணவனையுடைய மனைவி என்ன சமநிலையை காத்துக்கொள்ள வேண்டும்?

      5 இருப்பினும், அந்த நிலையை ஞானமாக சமாளிக்கப் போகிறீர்களென்றால், அதைக்காட்டிலும் அதிமுக்கியமான ஒன்றை சிந்தித்துப்பார்க்க வேண்டும். கடவுளுடைய வார்த்தை மனைவிகளை இவ்வாறு ஊக்குவிக்கிறது: “மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.” (கொலோசெயர் 3:18) இவ்வாறு, அது தன்னிச்சையாக செயல்படும் ஆவிக்கு எதிராக எச்சரிக்கிறது. கூடுதலாக, “கர்த்தருக்கேற்கும்படி” என்று சொல்வதன் மூலம், ஒருவர் தன் கணவனுக்கு கீழ்ப்பட்டிருப்பது என்பது, ஆண்டவருக்கு கீழ்ப்படிவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.

      6. ஒரு கிறிஸ்தவ மனைவி என்ன நியமங்களை மனதில் வைக்க வேண்டும்?

      6 ஒரு கிறிஸ்தவருக்கு, சபைக்கூட்டங்களுக்கு ஆஜராவதும் பைபிளை அடிப்படையாகக்கொண்ட விசுவாசத்தைக் குறித்து மற்றவர்களுக்கு சாட்சிகொடுப்பதும் மெய் வணக்கத்தின் முக்கியமான, புறக்கணிக்க முடியாத அம்சங்களாய் இருக்கின்றன. (ரோமர் 10:9, 10, 14; எபிரெயர் 10:24, 25) அப்படியென்றால், ஒரு மானிடன் கடவுளின் திட்டவட்டமான கட்டளை ஒன்றுக்கு இணங்கிப்போக வேண்டாம் என்று உங்களுக்கு நேரடியாக கட்டளையிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர் அறிவித்தனர்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (அப்போஸ்தலர் 5:29) அவர்களுடைய முன்மாதிரி வாழ்க்கையில் ஏற்படும் அநேக சூழ்நிலைகளுக்கு பொருத்தமாயிருக்கும் முன்னோடியை வைக்கிறது. யெகோவாவுக்கு மட்டுமே உரிய பக்தியைக் கொடுப்பதற்கு அவர் பேரிலுள்ள அன்பு உங்களை உந்துவிக்குமா? அதே சமயத்தில், உங்கள் கணவர் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் இதைச் செய்வதற்கு அவர் பேரிலுள்ள அன்பும் மரியாதையும் உங்களை தூண்டுவிக்குமா?—மத்தேயு 4:10; 1 யோவான் 5:3.

      7. ஒரு கிறிஸ்தவ மனைவி என்ன தீர்மானத்தை உடையவளாய் இருக்க வேண்டும்?

      7 இது எப்போதும் நிகழக்கூடியதல்ல என்று இயேசு குறிப்பிட்டார். மெய் வணக்கத்திற்கு எதிராக இருக்கும் எதிர்ப்பின் காரணமாக, சில குடும்பங்களில் உள்ள விசுவாசத்திலிருக்கும் அங்கத்தினர்கள், தங்களுக்கும் மீதமுள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கும் நடுவிலே ஒரு பட்டயம் வந்து உறவைத் துண்டித்துப்போட்டதாக உணருவார்கள். (மத்தேயு 10:34-36) ஜப்பானில் வசிக்கும் ஒரு பெண் இதை அனுபவித்தாள். அவளுடைய கணவன் அவளை 11 வருடங்களாக எதிர்த்தார். அவர் அவளை கடுமையாகவும் மிக மோசமாகவும் நடத்தினார்; அடிக்கடி அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளி பூட்டி வைத்தார். ஆனால் அவளோ விடாமுயற்சியுடன் இருந்தாள். கிறிஸ்தவ சபையில் இருந்த நண்பர்கள் அவளுக்கு உதவிசெய்தனர். அவள் இடைவிடாமல் ஜெபித்து 1 பேதுரு 2:20-லிருந்து மிகுதியான உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டாள். தான் உறுதியாக நிலைத்திருந்தால், ஒருநாள் தன் கணவனும் யெகோவாவை சேவிப்பதில் தன்னோடு சேர்ந்துகொள்வார் என்று இந்தக் கிறிஸ்தவ பெண் உறுதியாய் நம்பினாள். அவரும் சேர்ந்துகொண்டார்.

      8, 9. ஒரு மனைவி தன் கணவனுக்கு முன்பு தேவையற்ற இடையூறுகளை வைக்காமல் தவிர்ப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும்?

      8 உங்கள் துணைவரின் மனப்பான்மையை நல்லமுறையில் பாதிப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய நடைமுறையான காரியங்கள் அதிகம் உண்டு. உதாரணமாக, உங்கள் கணவன் உங்கள் மதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், மற்ற விஷயங்களில் அவர் குறைகூறுவதற்கு போதிய காரணங்களைக் கொடுக்காதீர்கள். வீட்டை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் தனிப்பட்ட தோற்றத்தின் பேரில் அக்கறை காண்பியுங்கள். அன்பு, பாராட்டுதல் ஆகியவற்றைத் தெரிவிக்கும் சொற்களை தாராளமாய் உபயோகியுங்கள். குறைகூறுவதற்குப் பதிலாக ஆதரவாயிருங்கள். தலைமைவகிப்புக்காக நீங்கள் அவரையே நோக்கியிருக்கிறீர்கள் என்பதை காண்பியுங்கள். உங்களுக்கு எதிராக தவறிழைக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் பதிலுக்குப்பதில் செய்யாதீர்கள். (1 பேதுரு 2:21, 23) மானிட அபூரணங்களை சகித்துக்கொள்ளுங்கள், சச்சரவுகள் ஏற்பட்டால் மனத்தாழ்மையோடு மன்னிப்புக் கேட்பதில் முந்திக்கொள்ளுங்கள்.—எபேசியர் 4:26.

      9 நீங்கள் கூட்டங்களுக்கு செல்வதன் காரணத்தால் அவருடைய சாப்பாடு தாமதமாகும்படி அனுமதிக்காதீர்கள். உங்கள் கணவன் வீட்டில் இல்லாத சமயங்களில் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்ளவும்கூட நீங்கள் விரும்பலாம். கணவன் விரும்பாத சமயங்களில் கிறிஸ்தவ மனைவி தன் கணவனுக்கு பிரசங்கித்துக்கொண்டிருப்பதைத் தவிர்ப்பது ஞானமானது. மாறாக, அவள் அப்போஸ்தலனாகிய பேதுருவின் புத்திமதியைப் பின்பற்றுகிறாள்: “அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 3:1, 2) கடவுளுடைய ஆவியின் கனிகளை அதிக முழுமையாக வெளிப்படுத்திக் காண்பிக்க கிறிஸ்தவ மனைவிகள் உழைக்கின்றனர்.—கலாத்தியர் 5:22, 23.

      மனைவி வேறுமதத்தைச் சேர்ந்தவளாய் இருந்தால்

      10. மனைவி வேறு மதத்தைச் சேர்ந்தவளாயிருந்தால் விசுவாசத்தில் இருக்கும் கணவன் அவளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

      10 கணவன் விசுவாசத்தில் இருந்து, மனைவி விசுவாசத்தில் இல்லையென்றால் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு பைபிள் வழிநடத்துதலைக் கொடுக்கிறது. அது சொல்கிறது: “சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 7:12) அது கணவன்மாருக்கும் அறிவுரை கூறுகிறது: “உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்.”—கொலோசெயர் 3:19.

      11. மனைவி வேறு மதத்தைச் சேர்ந்தவளாய் இருந்தால், ஒரு கணவன் எவ்வாறு பகுத்துணர்வைக் காண்பித்து தன் மனைவிமீது சாதுரியமாக தலைமை வகிப்பை பிரயோகிக்கலாம்?

      11 வேறு மதத்தைச் சேர்ந்த மனைவியையுடைய கணவராக நீங்கள் இருந்தால் உங்கள் மனைவிக்கு மரியாதையும் அவளுடைய உணர்வுகளின் பேரில் கரிசனையும் காண்பிப்பதற்கு விசேஷமாக கவனமாயிருங்கள். அவள் வயதுவந்த பெண்ணாக இருப்பதால், தன் மதசம்பந்தமான நம்பிக்கைகளை நடைமுறையில் கடைப்பிடிப்பதற்கு ஓரளவு சுயாதீனத்தைப் பெற, அவள் தகுதியுள்ளவளாய் இருக்கிறாள். நீங்கள் அவற்றை ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும்கூட அவள் அதற்குத் தகுதியுள்ளவளாய் இருக்கிறாள். உங்கள் விசுவாசத்தைக் குறித்து அவளிடம் முதல் முறையாக நீங்கள் பேசும்போது, புதிதான ஒன்றை நீங்கள் இப்போது நம்புவதன் காரணமாக, அவள் நீண்டகாலமாய் வைத்திருந்த நம்பிக்கைகளை விட்டுவிடும்படி எதிர்பார்க்காதீர்கள். அவளும் அவளுடைய குடும்பமும் நீண்டகாலமாய் மனதில் வைத்துப் போற்றி வந்த பழக்கங்கள் பொய்யானவை என்று திடீரென்று சொல்லிவிடுவதற்குப் பதிலாக, வேதாகமத்திலிருந்து பொறுமையோடு அவளுடன் காரணம் காண்பித்து பேசுவதற்கு முயற்சிசெய்யுங்கள். சபை நடவடிக்கைகளுக்கு நீங்கள் அதிகப்படியான நேரத்தை செலவழித்தீர்களென்றால், அவள் அசட்டை செய்யப்பட்டதாக ஒருவேளை உணரலாம். நீங்கள் யெகோவாவை சேவிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை அவள் ஒருவேளை எதிர்க்கலாம், இருப்பினும் அடிப்படை காரணம் வெறுமனே: “எனக்கு உங்கள் நேரம் அதிகம் தேவை!” என்பதாக இருக்கலாம். பொறுமையோடு இருங்கள். காலப்போக்கில், உங்கள் அன்பான கரிசனையின் காரணமாக, அவள் மெய் வணக்கத்தைத் தழுவிக்கொள்ள உதவப்படலாம்.—கொலோசெயர் 3:12-14; 1 பேதுரு 3:8, 9.

      பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்

      12. கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் தங்கள் பிள்ளைகளை பயிற்றுவிப்பதில் வேதாகம நியமங்களை எவ்வாறு பொருத்த வேண்டும்?

      12 வணக்கத்தில் ஐக்கியப்பட்டில்லாத குடும்பத்தில் பிள்ளைகளுக்கு மதசம்பந்தமான போதனை அளிப்பது சில சமயங்களில் ஒரு பிரச்சினையாக ஆகிவிடுகிறது. வேதாகம நியமங்கள் எவ்வாறு பொருத்தப்பட வேண்டும்? பிள்ளைகளுக்கு போதனை அளிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பை பைபிள் தகப்பனுக்கு அளிக்கிறது, ஆனால் தாய்க்கும்கூட முக்கியமான பங்கு இருக்கிறது. (நீதிமொழிகள் 1:8; ஒப்பிடுக: ஆதியாகமம் 18:19; உபாகமம் 11:19, 20.) தகப்பன் கிறிஸ்துவின் தலைமை வகிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, அவர் இன்னும் குடும்பத் தலைவராக இருக்கிறார்.

      13, 14. தன் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கிறிஸ்தவக்கூட்டங்களுக்கு செல்வதையோ அல்லது அவர்களோடு படிப்பதையோ கணவன் தடைசெய்தால், அவள் என்ன செய்யலாம்?

      13 மதசம்பந்தமான விஷயங்களை தாய் பிள்ளைகளுக்கு போதிப்பதைக் குறித்து சில அவிசுவாசியான தகப்பன்மார் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர். உங்கள் பிள்ளைகளை சபைக்கூட்டங்களுக்கு அழைத்துச்செல்ல உங்கள் கணவன் அனுமதி தர மறுத்தால் அல்லது வீட்டில் பிள்ளைகளோடு பைபிள் படிப்பதையும்கூட தடைசெய்தால் அப்போது என்ன செய்வது? இப்போது நீங்கள் அநேக கடமைப்பொறுப்புகளை—யெகோவா தேவனிடமாகவும், உங்கள் தலைவராகிய கணவனிடமாகவும், நீங்கள் பெரிதும் நேசிக்கும் பிள்ளைகளிடமாகவும் உங்களுக்கு இருக்கும் கடமைப்பொறுப்புகளை—சமநிலைப்படுத்த வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். இவையனைத்தையும் ஒன்றோடொன்று முரண்படாதபடி எவ்வாறு நீங்கள் செய்துமுடிக்கலாம்?

      14 இவ்விஷயத்தைக் குறித்து நீங்கள் நிச்சயமாகவே ஜெபம் செய்வீர்கள். (பிலிப்பியர் 4:6, 7; 1 யோவான் 5:14) ஆனால் இறுதியில் என்ன போக்கை பின்பற்ற வேண்டும் என்பதைக் குறித்து நீங்கள்தானே தீர்மானிக்க வேண்டும். நீங்கள் சாதுரியத்தோடு செயல்பட ஆரம்பித்து, கணவனுடைய தலைமை வகிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்பதை அவருக்கு தெளிவாக்கினால், அவருடைய எதிர்ப்பு இறுதியில் குறைந்துவிடலாம். உங்கள் கணவன் பிள்ளைகளைக் கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வதை அல்லது அவர்களோடு முறைப்படியாக பைபிள் படிப்பு நடத்துவதைத் தடைசெய்தாலும்கூட, நீங்கள் தொடர்ந்து அவர்களுக்கு கற்பிக்கலாம். தினந்தோறும் பிள்ளைகளோடு பேசுவதன் மூலமும் உங்களுடைய நல்ல முன்மாதிரியின் மூலமும் யெகோவாவின் பேரில் ஓரளவு அன்பையும், அவருடைய வார்த்தையின் பேரில் விசுவாசத்தையும், அவர்களுடைய தகப்பன் உட்பட பெற்றோர் மீது மரியாதையையும், மற்ற நபர்கள் மீது அன்பான அக்கறையையும், கடமையுணர்ச்சியோடு செய்யப்படும் வேலைகளின்பேரில் உயர்வான மதிப்பையும் உங்கள் பிள்ளைகளில் படிப்படியாக வளர்க்க முயற்சிசெய்யுங்கள். காலப்போக்கில், தகப்பன் நல்ல விளைவுகளைக் கவனித்து உங்கள் முயற்சிகளின் மதிப்பைப் போற்றலாம்.—நீதிமொழிகள் 23:24.

      15. பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதில் விசுவாசத்தில் இருக்கும் தகப்பனின் பொறுப்பு என்ன?

      15 நீங்கள் விசுவாசத்தில் இருக்கும் கணவனாயிருந்து, உங்கள் மனைவி விசுவாசத்தில் இல்லையென்றால், அப்போது உங்கள் பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” வளர்க்க வேண்டிய பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். (எபேசியர் 6:4, NW) அவ்வாறு செய்கையில், உங்கள் மனைவியோடு கொண்டுள்ள தொடர்புகளில் நீங்கள் தயவாகவும், அன்பாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும்.

      உங்கள் மதம் உங்கள் பெற்றோரின் மதமாக இல்லாவிடில்

      16, 17. தங்கள் பெற்றோரின் மதமல்லாத வேறு மதத்தை பிள்ளைகள் தழுவிக்கொண்டால் என்ன பைபிள் நியமங்களை பிள்ளைகள் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

      16 தங்கள் பெற்றோர் வைத்திருக்கும் மத நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசமான மத நம்பிக்கைகளை சிறு பிள்ளைகள்கூட தழுவிக்கொள்வது இப்போது வழக்கத்துக்கு மாறானதாய் இல்லை. நீங்கள் அவ்வாறு செய்திருக்கிறீர்களா? அப்படியென்றால் பைபிள் உங்களுக்கு புத்திமதி அளிக்கிறது.

      17 கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். . . . உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” (எபேசியர் 6:1, 3) அது பெற்றோரிடமாக ஆரோக்கியமான மரியாதை காண்பிப்பதை உட்படுத்துகிறது. பெற்றோருக்கு கீழ்ப்படிவது முக்கியமானதாய் இருந்தபோதிலும், மெய்க் கடவுளுக்கு மரியாதை செலுத்தாமல் அது செய்யப்படக்கூடாது. ஒரு பிள்ளை தீர்மானங்கள் எடுக்க ஆரம்பிப்பதற்கு போதிய வயது அடைந்தவுடன், அவன் தன் செயல்களுக்கான அதிகரித்த பொறுப்பை ஏற்பவனாய் இருக்கிறான். இது உலகப்பிரகாரமான சட்டம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமல்லாமல் விசேஷமாக தெய்வீக சட்டத்தைக் குறித்த விஷயத்திலும் உண்மையாயிருக்கிறது. “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்,” என்று பைபிள் குறிப்பிடுகிறது.—ரோமர் 14:12.

      18, 19. பிள்ளைகள் பெற்றோரின் மதத்திலிருந்து வித்தியாசமான மதத்தைத் தழுவிக்கொண்டிருந்தால், தங்கள் விசுவாசத்தை பெற்றோர் சிறந்தமுறையில் புரிந்துகொள்வதற்கு எவ்வாறு உதவிசெய்யலாம்?

      18 உங்கள் நம்பிக்கைகள் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்விக்கும்படி செய்ததென்றால், உங்கள் பெற்றோரின் நோக்குநிலையைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். பைபிள் போதனைகளைக் கற்றுக்கொண்டு அதைப் பொருத்துவதன் காரணமாக நீங்கள் அதிக மரியாதையுள்ளவர்களாகவும், அதிக கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும், பெற்றோர் உங்களிடம் கேட்பவற்றை ஊக்கத்தோடு செய்பவர்களாகவும் இருந்தால் அவர்கள் உங்கள்மேல் பிரியப்படுவார்கள். என்றபோதிலும், அவர்கள் தனிப்பட்டவிதமாய் போற்றும் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் தள்ளிவிடும்படி உங்கள் புதிய விசுவாசம் செய்ததென்றால், பெற்றோர் உங்களுக்கு அளிக்க விரும்பும் பரம்பரையாக வந்த காரியங்களை நீங்கள் வெறுக்கிறீர்கள் என்று அவர்கள் உணரலாம். நீங்கள் செய்துகொண்டிருக்கும் காரியம் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இல்லையென்றால் அல்லது நீங்கள் பொருள்சம்பந்தமாக செழித்தோங்குவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய நாட்டங்களை உங்கள் கவனத்திலிருந்து அது வேறு வழியில் திருப்புவதாய் பெற்றோர் உணர்ந்தால், அவர்கள் உங்கள் நலனைக் குறித்தும்கூட பயப்படலாம். பெருமையும்கூட ஒரு தடையாக இருக்கலாம். உண்மையில், நீங்கள் செய்வது சரி என்றும் அவர்கள் செய்வது தவறு என்றும் நீங்கள் சொல்வதாக அவர்கள் உணரலாம்.

      19 ஆகையால், விரைவில், மூப்பர்களில் சிலரை அல்லது உள்ளூர் சபையிலிருந்து சில முதிர்ச்சிவாய்ந்த சாட்சிகளை உங்கள் பெற்றோர் சந்திக்கும்படி ஏற்பாடுசெய்ய முயற்சி செய்யுங்கள். ராஜ்ய மன்றத்துக்குச் சென்று அங்கு கலந்தாலோசிக்கப்படும் காரியங்களை அவர்களே கேட்கும்படியும், யெகோவாவின் சாட்சிகள் என்ன வகையான ஜனங்கள் என்பதை நேரடியாக காணும்படியும் உங்கள் பெற்றோரை உற்சாகப்படுத்துங்கள். காலப்போக்கில் உங்கள் பெற்றோரின் மனநிலை சரியாகலாம். பெற்றோர் பிடிவாதமாக மறுத்து எதிர்ப்புத் தெரிவித்து, பைபிள் பிரசுரங்களை அழித்துப்போட்டு, பிள்ளைகள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வதை தடைசெய்தாலும்கூட, வேறு இடங்களில் சென்று வாசிப்பதற்கும், உடன் கிறிஸ்தவர்களோடு பேசுவதற்கும், சாட்சி கொடுப்பதற்கும், சந்தர்ப்பவசமாக மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் பொதுவாக வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் யெகோவாவிடம்கூட ஜெபிக்கலாம். சில இளைஞர்கள் அதிகத்தைச் செய்வதற்குமுன் குடும்பமாக வாழும் வீட்டை விட்டு வெளியே சென்று வாழ்வதற்கு போதிய வயது வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் வீட்டில் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், “உங்கள் தகப்பனையும் தாயையும் கனம்பண்ண” மறவாதிருங்கள். வீட்டில் சமாதானம் நிலவ உங்கள் பங்கைச் செய்யுங்கள். (ரோமர் 12:17, 18) எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளோடு சமாதானத்தைத் தொடர்ந்து நாடுங்கள்.

      மாற்றான் தாய்-தகப்பனாய் இருப்பதன் சவால்

      20. தங்கள் தகப்பனோ அல்லது தாயோ மாற்றான் தகப்பனாக அல்லது மாற்றான் தாயாக இருந்தால் பிள்ளைகள் என்ன உணர்ச்சிகளைப் பெற்றிருக்கலாம்?

      20 அநேக வீடுகளில் மிகப் பெரிய சவாலளிக்கும் சூழ்நிலை மதசம்பந்தமான ஒன்றல்ல, ஆனால் உறவுமுறை சார்ந்த பிரச்சினைகள் ஆகும். இன்றைய குடும்பங்களில் அநேகம் பெற்றோர் ஒருவரின் அல்லது இருவரின் முந்தைய திருமணங்களிலிருந்து பிறந்த பிள்ளைகளை உள்ளடக்குகின்றன. அப்படிப்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் பொறாமையையும் கோபத்தையும் அனுபவிக்கலாம் அல்லது ஒருவேளை பற்றுறுதிகளில் முரண்பாட்டை அனுபவிக்கலாம். அதன் விளைவாக, மாற்றான் தாய்-தகப்பன் ஒரு நல்ல தகப்பனாக அல்லது தாயாக இருப்பதற்கு எடுக்கும் உண்மையான முயற்சிகளை அவர்கள் தடைசெய்யலாம். மாற்றான் குடும்பம் வெற்றிபெறுவதற்கு எது உதவக்கூடும்?

      பக்கம் 138-ன் படம்

      இயற்கையான பெற்றோராயிருந்தாலும் மாற்றான் பெற்றோராயிருந்தாலும், வழிநடத்துதலுக்காக பைபிள் பேரில் சார்ந்திருங்கள்

      21. விசேஷமான சூழ்நிலைகள் அவர்களுக்கு இருந்தபோதிலும், மாற்றான் தாய்-தகப்பன் பைபிளில் காணப்படும் நியமங்களை ஏன் உதவிக்காக நாட வேண்டும்?

      21 விசேஷமான சூழ்நிலைகள் இருந்தாலும்கூட, மற்ற குடும்பங்களில் வெற்றியைக் கொண்டுவரும் பைபிள் நியமங்கள் இங்கேயும்கூட பொருந்தும். அந்தப் பைபிள் நியமங்களைப் புறக்கணிப்பது ஒரு பிரச்சினையைத் தற்காலிகமாக தீர்த்து வைப்பதாக தோன்றலாம், ஆனால் பின்னர் மனவேதனைக்கு வழிநடத்தும் சாத்தியம் இருக்கிறது. (சங்கீதம் 127:1, 2; நீதிமொழிகள் 29:15) ஞானத்தையும் பகுத்துணர்வையும் வளர்த்துக்கொள்ளுங்கள்—நீண்ட நாளைய பலன்களை மனதில் வைத்து தெய்வீக நியமங்களைப் பொருத்துவதற்கு ஞானமும், குடும்ப அங்கத்தினர்கள் ஏன் சிலவற்றை சொல்கின்றனர் மற்றும் செய்கின்றனர் என்பதை கண்டுணர்வதற்கு பகுத்துணர்வும், ஒற்றுணர்வு காண்பிப்பதற்கான தேவையும் உள்ளது.—நீதிமொழிகள் 16:21; 24:3, NW; 1 பேதுரு 3:8.

      22. மாற்றான் தாய்-தகப்பனை ஏற்றுக்கொள்வதை பிள்ளைகள் ஏன் கடினமாய் காண்பர்?

      22 நீங்கள் ஒரு மாற்றான் தாய் அல்லது மாற்றான் தகப்பனாக இருந்தால், நீங்கள் ஒருவேளை குடும்பத்தின் நண்பராக பிள்ளைகளால் வரவேற்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களுடைய மாற்றான் தாயாக அல்லது மாற்றான் தகப்பனாக ஆனபோது, அவர்களுடைய மனநிலை ஒருவேளை மாறியிருக்கக்கூடும். அவர்களோடு வாழ்ந்துகொண்டிராத பெற்றெடுத்த பெற்றோரை நினைத்து, பிள்ளைகள் பற்றுறுதி மனப்போராட்டத்தால் போராடிக்கொண்டிருக்கலாம், இல்லாத பெற்றோரின்மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள விரும்புவதாக ஒருவேளை உணர்ந்து அவ்வாறு செய்யலாம். சில சமயங்களில் நீங்கள் அவர்களுடைய தந்தை அல்ல அல்லது அவர்களுடைய தாய் அல்ல என்பதை உணர்ச்சியற்றவிதத்தில் உங்களுக்கு நினைப்பூட்டலாம். அப்படிப்பட்ட கூற்றுகள் புண்படுத்துகின்றன. இருப்பினும், ‘உங்கள் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதீர்கள்.’ (பிரசங்கி 7:9) பிள்ளைகளின் உணர்ச்சிகளைக் கையாளுவதற்கு பகுத்துணர்வும் ஒற்றுணர்வும் தேவைப்படுகின்றன.

      23. மாற்றான் பிள்ளைகளையுடைய குடும்பத்தில் சிட்சை எவ்வாறு அளிக்கப்படலாம்?

      23 ஒருவர் சிட்சை அளிக்கையில் அப்படிப்பட்ட பண்புகள் மிகவும் முக்கியமானவை. முரண்பாடில்லாத நிலையான சிட்சை இன்றியமையாதது. (நீதிமொழிகள் 6:20; 13:1) எல்லா பிள்ளைகளும் ஒரே இயல்புடையவர்களாய் இல்லாமல் இருப்பதன் காரணமாக, சிட்சை பிள்ளைக்கு பிள்ளை வித்தியாசப்படலாம். பெற்றோராய் இருப்பதன் இந்த அம்சத்தை ஆரம்பத்திலாவது பெற்றெடுத்த பெற்றோர் கையாளுவது நல்லது என்று சில மாற்றான் தாய்-தகப்பன்மார் காண்கின்றனர். பெற்றோர் இருவரும் சிட்சை கொடுப்பதை ஏற்றுக்கொண்டு அதை உறுதியாய்க் கடைப்பிடிப்பது அவசியம். மாற்றான் பிள்ளையைவிட பெற்றெடுத்த பிள்ளைக்கு பட்சபாதம் காண்பிக்கக்கூடாது (நீதிமொழிகள் 24:23) கீழ்ப்படிதல் முக்கியம், ஆனால் அபூரணங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும். அளவுக்குமீறி பிரதிபலிக்காதீர்கள். அன்போடு சிட்சியுங்கள்.—கொலோசெயர் 3:21.

      24. மாற்றான் குடும்பத்தில் எதிர்பாலாரைச் சேர்ந்த அங்கத்தினர்களுக்கிடையே ஒழுக்க பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எது உதவக்கூடும்?

      24 குடும்ப கலந்துரையாடல்கள் தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்கு அதிகத்தைச் செய்யக்கூடும். வாழ்க்கையில் அதிமுக்கியமாய் இருக்கும் காரியங்களின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு அவை குடும்பத்துக்கு உதவக்கூடும். (ஒப்பிடுக: பிலிப்பியர் 1:9-11, NW.) குடும்ப இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களித்து உதவலாம் என்பதை காணவும் அவை உதவக்கூடும். கூடுதலாக, ஒளிவுமறைவற்ற குடும்ப கலந்தாலோசிப்புகள் ஒழுக்கப் பிரச்சினைகளைத் தவிர்க்கக்கூடும். பெண்கள், தங்கள் மாற்றான் தகப்பன் மற்றும் மாற்றான் சகோதரர்கள் இருக்கையில் எவ்வாறு உடுத்தி மதிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் மாற்றான் தாயிடமும் மாற்றான் சகோதரிகளிடமும் தகுதியான முறையில் நடந்துகொள்வதைப் பற்றி பையன்களுக்கு புத்திமதி தேவை.—1 தெசலோனிக்கேயர் 4:3-8.

      25. மாற்றான் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு என்ன பண்புகள் உதவக்கூடும்?

      25 மாற்றான் தாயாக அல்லது மாற்றான் தகப்பனாக இருப்பதால் ஏற்படும் விசேஷ சவாலை எதிர்ப்படுகையில் பொறுமையாயிருங்கள். புதிய உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு காலம் எடுக்கிறது. இயல்பான பாசப்பிணைப்புகள் இல்லாத பிள்ளைகளின் அன்பையும் மரியாதையையும் சம்பாதித்துக்கொள்வது கடினமாய் இருக்கலாம். ஆனால் அது சாத்தியம். ஞானமும் பகுத்துணர்வுமுள்ள இதயமும் அதோடுகூட யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற பலமான ஆசையுமே மாற்றான் குடும்பத்தில் சமாதானம் நிலவுவதற்கான திறவுகோல் ஆகும். (நீதிமொழிகள் 16:20) அப்படிப்பட்ட பண்புகள் நீங்கள் மற்ற சூழ்நிலைகளையும்கூட சமாளித்துக்கொள்வதற்கு உங்களுக்கு உதவக்கூடும்.

      பொருளாதார நாட்டங்கள் உங்கள் குடும்பத்தைப் பிளவுபடுத்துகின்றனவா?

      26. பொருளாதார உடைமைகள் சம்பந்தமான பிரச்சினைகளும் மனநிலைகளும் குடும்பத்தை என்ன வழிகளில் பிரிக்கலாம்?

      26 பொருளாதார உடைமைகளைக் குறித்த பிரச்சினைகளும் மனநிலைகளும் குடும்பங்களை அநேக வழிகளில் பிரிக்கக்கூடும். விசனகரமாக, சில குடும்பங்கள் பணத்தின் காரணமாக மற்றும் செல்வந்தர்களாக ஆக வேண்டும்—அல்லது கொஞ்சமாவது பணக்காரர்களாக ஆக வேண்டும்—என்ற விருப்பத்தின் காரணமாக பிளவுபட்டுவிடுகின்றன. இரண்டு துணைவர்களும் உலகப்பிரகாரமான வேலை செய்து “என் பணம், உன் பணம்” என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டால் பிரிவினைகள் உண்டாகலாம். தர்க்கங்களைத் தவிர்த்தாலும்கூட, இரண்டு துணைவர்களும் வேலை செய்தால், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து செலவழிப்பதற்கு குறைவான நேரத்தையுடைய அட்டவணையையே கொண்டிருப்பர். இவ்வுலகில் வளர்ந்து வரும் போக்கு என்னவென்றால், தகப்பன்மார் தங்கள் குடும்பங்களை விட்டு தூரமாக விலகி, நீண்ட காலம்—மாதங்கள் அல்லது வருடங்கள்கூட—வாழ்கின்றனர்; அவர்கள் வீட்டிலிருந்து சம்பாதிப்பதைக் காட்டிலும் கூடுதலான பணத்தை சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இது மிகவும் மோசமான பிரச்சினைகளுக்கு வழிநடத்தக்கூடும்.

      27. பண அழுத்தங்களின் கீழிருக்கும் குடும்பத்துக்கு உதவியளிக்கக்கூடிய சில நியமங்கள் யாவை?

      27 இந்தச் சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு எந்தச் சட்டமும் விதிக்கப்பட முடியாது, ஏனென்றால் வெவ்வேறு குடும்பங்கள் வெவ்வேறு அழுத்தங்களையும் தேவைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கின்றன. இருப்பினும், பைபிள் அளிக்கும் புத்திமதி உதவக்கூடும். உதாரணமாக, ‘ஒன்றாகக்கூடி கலந்து பேசுவதன்’ மூலம் சில சமயங்களில் தேவையற்ற போராட்டத்தைத் தவிர்த்திடலாம் என்று நீதிமொழிகள் 13:10 (NW) குறிப்பிடுகிறது. இது வெறுமனே ஒருவரின் சொந்த எண்ணங்களைக் குறிப்பிடுவதை மட்டும் உட்படுத்தாமல், அடுத்தவர் ஒரு விஷயத்தைக் குறித்து எவ்வாறு உணருகிறார் என்பதைக் கண்டுபிடித்து புத்திமதியை நாடுவதாகும். கூடுதலாக, நடைமுறையான வரவுசெலவு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்வது குடும்ப முயற்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கு உதவக்கூடும். சில சமயங்களில் விசேஷமாக பிள்ளைகள் அல்லது ஆதரவை எதிர்பார்த்து வாழ்பவர்கள் இருக்கையில் இரண்டு துணைவர்களும் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்ய வேண்டிய தேவை ஒருவேளை தற்காலிகமாக ஏற்படலாம். இந்நிலை ஏற்படுமானால், கணவன் தன் மனைவிக்காக இன்னும் நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பதை அவர் அவளுக்கு உறுதிப்படுத்தலாம். அவள் பொதுவாக தனியே செய்யும் வேலைகள் சிலவற்றை அன்போடு கணவனும் பிள்ளைகளும் சேர்ந்து செய்து உதவலாம்.—பிலிப்பியர் 2:1-4.

      28. ஐக்கியத்தை அடைய உழைப்பதற்கு என்ன நினைப்பூட்டுதல்களை கடைப்பிடிப்பது ஒரு குடும்பத்துக்கு உதவும்?

      28 எனினும், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் பணம் அவசியமாயிருந்தாலும்கூட அது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறதில்லை. அது நிச்சயமாகவே உயிரை அளிப்பதில்லை என்பதை மனதில் வையுங்கள். (பிரசங்கி 7:12) உண்மையில், அளவுக்குமீறி பொருளாதார உடைமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆவிக்குரிய மற்றும் ஒழுக்கப்பிரகாரமான அழிவை உண்டாக்கக்கூடும். (1 தீமோத்தேயு 6:9-12) வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளின் பேரில் அவருடைய ஆசீர்வாதம் இருக்கும் என்ற உறுதியோடு கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது எவ்வளவு மேலானதாய் இருக்கிறது! (மத்தேயு 6:25-33; எபிரெயர் 13:5) ஆவிக்குரிய அக்கறைகளை முதலாவது வைப்பதன் மூலமும் முதலாவது கடவுளோடு சமாதானத்தை நாடுவதன் மூலமும், சில சூழ்நிலைகளின் காரணமாக உங்கள் குடும்பம் ஒருவேளை பிளவுபட்டிருந்தாலும், அதிமுக்கியமான வழிகளில் மெய்யாகவே ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு குடும்பமாக ஆவதை நீங்கள் காணலாம்.

      வீட்டில் சமாதானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கு குடும்ப அங்கத்தினர்களுக்கு . . . கீழ்க்காணும் பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவக்கூடும்?

      கிறிஸ்தவர்கள் பகுத்துணர்வை வளர்த்துக்கொள்கின்றனர்.—நீதிமொழிகள் 16:21; 24:3, NW.

      ஒரு தம்பதி ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் மட்டுமே அன்பும் மரியாதையும் காண்பிக்க வேண்டும் என்பதாக இல்லை.—எபேசியர் 5:23, 25.

      ஒரு கிறிஸ்தவர் வேண்டுமென்றே கடவுளுடைய சட்டத்தை ஒருபோதும் மீறமாட்டார்.—அப்போஸ்தலர் 5:29.

      கிறிஸ்தவர்கள் சமாதானம் பண்ணுகிறவர்கள்.—ரோமர் 12:18.

      மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதீர்கள்.—பிரசங்கி 7:9.

      சரியான திருமணங்கள் கண்ணியத்தையும் சமாதானத்தையும் கொண்டுவருகின்றன

      நம் நாளில் அநேக ஆண்களும் பெண்களும் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொறுப்பின்றி கணவனும் மனைவியுமாக ஒன்றுசேர்ந்து வாழ்கின்றனர். இது ஒருவேளை புதிய விசுவாசி சமாளிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையாக இருக்கலாம். சிலருடைய விஷயங்களில் அந்த இணைப்பு சமுதாயத்தால் அல்லது குலமரபு பழக்கவழக்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாய் இருக்கலாம், ஆனால் அது சட்டப்படி இல்லாமல் இருக்கிறது. இருப்பினும், திருமணத்தை சரியாக பதிவுசெய்ய வேண்டும் என்பது பைபிளின் தராதரம். (தீத்து 3:1; எபிரெயர் 13:4) கிறிஸ்தவ சபைக்குள் இருப்பவர்களுக்கு, ஒரு திருமண இணைப்பில் ஒரு கணவனும் ஒரு மனைவியும் மட்டுமே இருக்க வேண்டுமென்றும்கூட பைபிள் நிர்ணயிக்கிறது. (1 கொரிந்தியர் 7:2; 1 தீமோத்தேயு 3:2, 12) இந்தத் தராதரத்துக்கு இசைய வாழ்வது உங்கள் வீட்டில் சமாதானம் நிலவுவதற்கு முதல் படியாய் இருக்கிறது. (சங்கீதம் 119:165) யெகோவா கட்டளையிடும் காரியங்கள் இயற்கைக்கு மாறானவையோ அல்லது பாரமானவையோ அல்ல. அவர் நமக்கு போதிக்கும் காரியங்கள் நாம் பயனடைவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.—ஏசாயா 48:17, 18.

  • குடும்பத்தை சேதப்படுத்தும் பிரச்சினைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
    • அதிகாரம் 12

      குடும்பத்தை சேதப்படுத்தும் பிரச்சினைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்

      1. சில குடும்பங்களில் என்ன மறைவான பிரச்சினைகள் இருக்கின்றன?

      ப ழைய கார் இப்போதுதான் கழுவப்பட்டு மெழுகினால் மெருகிடப்பட்டிருக்கிறது. கடந்துசெல்வோருக்கு அது பளபளப்பாகவும் ஏறக்குறைய புத்தம்புதியதாகவும் தோற்றமளிக்கிறது. ஆனால் மேற்பரப்பின் அடிப்பகுதியில் இரும்புத்துரு வண்டியின் உடற்பகுதியை அரித்துத் தின்றுகொண்டேயிருக்கிறது. சில குடும்பங்களில் நிலைமை இதேபோல் உள்ளது. வெளித்தோற்றத்துக்கு எல்லாம் நேர்த்தியாய் தோன்றுகிறபோதிலும், புன்சிரிப்புள்ள முகங்கள் பயத்தையும் வேதனையையும் மறைக்கின்றன. மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் அரித்துத்தின்னும் அடிப்படை காரணக்கூறுகள் குடும்ப சமாதானத்தை அரித்துத் தின்றுகொண்டே இருக்கின்றன. குடிவெறி பழக்கமும் வன்முறையும் இந்தப் பாதிப்பை உண்டுபண்ணும் இரண்டு பிரச்சினைகளாக இருக்கக்கூடும்.

      குடிவெறி பழக்கத்தால் உண்டாகும் சேதங்கள்

      2. (அ) மதுபானங்கள் உபயோகிப்பதைக் குறித்து பைபிளின் கருத்து என்ன? (ஆ) குடிவெறி பழக்கம் என்றால் என்ன?

      2 மிதமாக மதுபானம் அருந்துவதை பைபிள் கண்டனம் செய்வதில்லை, ஆனால் அது குடிவெறியை நிச்சயமாகவே கண்டனம் செய்கிறது. (நீதிமொழிகள் 23:20, 21; 1 கொரிந்தியர் 6:9, 10; 1 தீமோத்தேயு 5:23; தீத்து 2:2, 3) ஆனால் குடிவெறி பழக்கம் என்பது குடிவெறியைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கிறது; அது மதுபானங்களை அருந்துவதில் நாட்பட ஆழமாக ஈடுபட்டிருப்பதையும், அதை அருந்துவதால் கட்டுப்பாட்டை இழந்துபோவதையும் குறிக்கிறது. குடிவெறியர் வயதுவந்தவர்களாக இருக்கலாம். விசனகரமாக, அவர்கள் இளைஞர்களாகவும்கூட இருக்கலாம்.

      3, 4. குடிவெறியனின் துணை மற்றும் பிள்ளைகள் மீது குடிவெறி பழக்கத்தின் பாதிப்புகளை விவரியுங்கள்.

      3 மதுபானங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் குடும்ப சமாதானத்தைத் தகர்த்துப்போடக்கூடும் என்று பைபிள் வெகு காலத்துக்கு முன்பே குறிப்பிட்டது. (உபாகமம் 21:18-21) குடிவெறி பழக்கத்தின் அரித்துத்தின்னும் பாதிப்புகள் முழு குடும்பத்தாலும் உணரப்படுகிறது. குடிவெறியனின் குடித்தலை நிறுத்துவதற்காக அல்லது முன்கூட்டியே சொல்லமுடியாத அவருடைய நடத்தையை சமாளிப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் துணை முழுவதுமாக ஆழ்ந்துவிடலாம்.a அவள் மதுபானத்தை மறைத்து வைக்க முயற்சி செய்கிறாள், அதை வீசி எறிகிறாள், அவருடைய பணத்தை ஒளித்து வைக்கிறாள், குடும்பத்தின் பேரில், வாழ்க்கையின் பேரில், கடவுள் பேரில் உள்ள அன்பின் அடிப்படையில் அவள் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள்—ஆனால் குடிவெறியனோ இன்னும் குடிக்கிறான். அவனுடைய குடித்தலைக் கட்டுப்படுத்துவதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள் பலமுறை தோல்வியுறுவதால் அவள் ஏமாற்றமடைந்தவளாகவும் தகுதியற்றவளாகவும் உணருகிறாள். அவள் பயம், கோபம், குற்ற உணர்வு, பதற்றம், கவலை, சுயமரியாதை குறைவுபடுதல் போன்றவற்றால் அவதியுற ஆரம்பிக்கலாம்.

      4 பெற்றோர் ஒருவரின் குடிவெறி பழக்கத்தின் பாதிப்புகளிலிருந்து பிள்ளைகள் தப்பித்துக்கொள்வதில்லை. சிலர் சரீரப்பிரகாரமாக தாக்கப்படுகின்றனர். மற்றவர்கள் பாலின சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்யப்படுகின்றனர். பெற்றோர் ஒருவரின் குடிவெறிப்பழக்கத்துக்கு அவர்கள் தங்களையும்கூட குறைகூறிக்கொள்ளலாம். அடிக்கடி மற்றவர்கள் பேரில் நம்பிக்கை வைப்பதில் அவர்கள் பெற்றிருக்கும் திறமை, குடிவெறியனின் மாறுபாடான நடத்தையின் காரணத்தால் நொறுக்கப்படுகிறது. வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்கள் அமைதியாக பேசமுடியாததன் காரணமாக, பிள்ளைகள் தங்கள் உணர்ச்சிகளை உள்ளே அடக்கிவைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளலாம், அது பெரும்பாலும் தீங்கிழைக்கும் உடல்சம்பந்தமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. (நீதிமொழிகள் 17:22) அப்படிப்பட்ட பிள்ளைகள் இந்தத் தன்னம்பிக்கையின்மையை அல்லது சுயமரியாதையின்மையை வயதுவந்த பருவத்திற்குள் கொண்டுசெல்லலாம்.

      குடும்பம் என்ன செய்யலாம்?

      5. குடிவெறி பழக்கத்தை எவ்வாறு சமாளிக்கலாம், இது ஏன் கடினமானது?

      5 குடிவெறி பழக்கத்தைக் குணப்படுத்த முடியாது என்று அநேக நிபுணர்கள் சொல்கிறபோதிலும், முழுவதுமாக தவிர்க்கும் திட்டம் ஒன்றைக்கொண்டு ஓரளவு முன்னிலையை அடைதல் சாத்தியம் என்பதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்கின்றனர். (ஒப்பிடுக: மத்தேயு 5:29.) என்றபோதிலும், குடிவெறியன் உதவியை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது, ஏனென்றால் அவன் பொதுவாக அந்தப் பிரச்சினை தனக்கு இருக்கிறது என்பதையே மறுத்துவிடுகிறான். இருப்பினும், குடிவெறி பழக்கம் தங்களைப் பாதித்திருக்கும் விதத்தைக் கையாளுவதற்கு குடும்ப அங்கத்தினர்கள் நடவடிக்கைகள் எடுக்கையில், குடிவெறியன் தான் பிரச்சினையைக் கொண்டிருப்பதாக உணர ஆரம்பிக்கலாம். குடிவெறியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் உதவி செய்வதில் அனுபவமுடைய ஒரு மருத்துவர் சொன்னார்: “குடும்பத்தார் அதிக பயனுள்ள விதத்தில் தங்களால் முடிந்தவரை அன்றாடக வாழ்க்கையை வெறுமனே தொடர்ந்து நடத்துவதுதானே அதிமுக்கியமான காரியம் என்று நான் நினைக்கிறேன். தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வளவு பெரியது என்பதை குடிவெறியன் படிப்படியாக அதிகமதிகமாக எதிர்ப்பட ஆரம்பிக்கிறான்.”

      6. குடிவெறியுள்ள அங்கத்தினர் ஒருவரையுடைய குடும்பங்களுக்கு சிறந்த புத்திமதி அளிக்கக்கூடிய ஆதாரம் எது?

      6 உங்கள் குடும்பத்தில் குடிவெறியுள்ள அங்கத்தினன் ஒருவன் இருந்தால், கூடுமானவரை பயனுள்ளவிதத்தில் வாழ்வதற்கு பைபிளின் ஏவப்பட்ட புத்திமதி உங்களுக்கு உதவக்கூடும். (ஏசாயா 48:17; 2 தீமோத்தேயு 3:16, 17) குடிவெறி பழக்கத்தை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு குடும்பங்களுக்கு உதவியிருக்கும் சில நியமங்களை சிந்தித்துப் பாருங்கள்.

      7. குடும்ப அங்கத்தினன் ஒருவன் குடிவெறியனாக இருந்தால், யார் அதற்குப் பொறுப்புள்ளவர்?

      7 எல்லா குற்றப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதை தவிருங்கள். பைபிள் சொல்கிறது: “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே,” “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.” (கலாத்தியர் 6:5; ரோமர் 14:12) தான் குடிப்பதற்கு குடும்ப அங்கத்தினர்கள் பொறுப்புள்ளவர்கள் என்று குடிவெறியன் காரணம் காண்பிக்க ஒருவேளை முயற்சிசெய்யலாம். உதாரணமாக, அவன் சொல்லலாம்: “நீங்கள் என்னை நல்ல விதத்தில் நடத்தினால், நான் குடிக்க மாட்டேன்.” மற்றவர்கள் அவரோடு சேர்ந்து அதை ஒத்துக்கொள்வதாக வெளிக்காட்டினால், தொடர்ந்து குடிப்பதற்கு அவரை அவர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். சூழ்நிலைகளால் அல்லது மற்றவர்களால் மோசமாக்கப்பட்டிருந்தாலும்கூட குடிவெறியர்கள் உட்பட நாம் அனைவரும் செய்யும் காரியங்களுக்கு நாமே பொறுப்புள்ளவர்களாய் இருக்கிறோம்.—ஒப்பிடுக: பிலிப்பியர் 2:12.

      8. குடிவெறியன் தன் பிரச்சினைகளின் விளைவுகளை எதிர்ப்பட உதவுவதற்கு சில வழிகள் யாவை?

      8 குடிப்பதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து நீங்கள் குடிவெறியனை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். கடுங்கோபத்தில் இருக்கும் ஒருவரைக் குறித்து பைபிள் நீதிமொழி என்ன சொல்கிறதோ அதே காரியம் குடிவெறியனுக்கும் சரியாகவே பொருந்தும்: “நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.” (நீதிமொழிகள் 19:19) குடிவெறியன் தன் குடிப்பழக்கத்தினால் விளையும் பாதிப்புகளை அனுபவிக்கட்டும். அவன் அசுத்தம் செய்திருப்பவற்றை அவனே சுத்தம் செய்யட்டும் அல்லது குடித்து வெறித்திருந்த சம்பவத்துக்குப் பிறகு அடுத்த நாள் காலை தன் எஜமானருக்கு அவனே விளக்கத்தைக் கொடுக்கட்டும்.

      பக்கம் 146-ன் படம்

      கிறிஸ்தவ மூப்பர்கள் குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதில் பெரும் உதவியாய் இருக்கலாம்

      9, 10. குடிவெறியனையுடைய குடும்பங்கள் ஏன் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும், குறிப்பாக யாருடைய உதவியை அவர்கள் நாட வேண்டும்?

      9 மற்றவர்களிடமிருந்து உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். நீதிமொழிகள் 17:17 சொல்கிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” உங்கள் குடும்பத்தில் குடிவெறியன் ஒருவன் இருந்தால் அங்கே கடுந்துன்பம் இருக்கும். உங்களுக்கு உதவி தேவை. ஆதரவுக்காக ‘மெய்யான நண்பர்கள்’ பேரில் சார்ந்திருக்க தயங்காதீர்கள். (நீதிமொழிகள் 18:24) அப்பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் மற்றவர்களோடு பேசுவது அல்லது அதுபோன்ற சூழ்நிலையை எதிர்ப்பட்டவர்களோடு பேசுவது போன்றவை எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதன் பேரில் நீங்கள் நடைமுறையான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சமநிலையோடு இருங்கள். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஆட்களிடம், உங்கள் ‘இரகசிய பேச்சை’ வெளிப்படுத்தாமல் இருக்கும் ஆட்களிடம் பேசுங்கள்.—நீதிமொழிகள் 11:13, NW.

      10 கிறிஸ்தவ மூப்பர்கள் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ சபையில் உள்ள மூப்பர்கள் பெருமளவில் உதவி செய்யலாம். இப்படிப்பட்ட முதிர்ச்சிவாய்ந்த ஆண்கள் கடவுளுடைய வார்த்தையில் போதிக்கப்பட்டிருக்கின்றனர், அதன் நியமங்களைப் பொருத்துவதில் அனுபவம் பெற்றிருக்கின்றனர். அவர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” நிரூபிக்கக்கூடும். (ஏசாயா 32:2) கிறிஸ்தவ மூப்பர்கள் தீங்கிழைக்கும் செல்வாக்குகளிலிருந்து சபையை பாதுகாப்பது மட்டுமல்லாமல், பிரச்சினைகள் உடைய நபர்களை ஆறுதல்படுத்தி, புத்துணர்ச்சியளித்து அவர்கள் பேரில் தனிப்பட்ட அக்கறையும்கூட காண்பிக்கின்றனர். அவர்களுடைய உதவியை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

      11, 12. குடிவெறியரின் குடும்பங்களுக்கு யார் மிகப் பெரிய உதவி அளிப்பது, அந்த ஆதரவு எவ்வாறு அளிக்கப்படுகிறது?

      11 எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். பைபிள் நமக்கு அன்பாக உறுதியளிக்கிறது: “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் [“யெகோவா,” NW] சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” (சங்கீதம் 34:18) குடிவெறியுள்ள குடும்ப அங்கத்தினரோடு வாழ்ந்துகொண்டிருப்பதால் ஏற்படும் அழுத்தங்களின் காரணமாக நீங்கள் இதயத்தில் நொறுங்குண்டவராகவோ அல்லது ஆவியில் நருங்குண்டவராகவோ உணர்ந்தால், ‘யெகோவா சமீபமாயிருக்கிறார்’ என்பதை அறிந்திருங்கள். உங்கள் குடும்ப சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.—1 பேதுரு 5:6, 7.

      12 யெகோவா தம்முடைய வார்த்தையில் என்ன சொல்கிறாரோ அதை நம்புவது கவலையை சமாளிப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடும். (சங்கீதம் 130:3, 4; மத்தேயு 6:25-34; 1 யோவான் 3:19, 20) கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதன் நியமங்களுக்கு ஏற்ப வாழ்வது, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு உதவுகிறது, அது ஒவ்வொரு நாளையும் சமாளித்துக்கொள்வதற்காக ‘இயல்பான அளவுக்கும் மேலான வல்லமையை’ அளித்து ஆயத்தப்படுத்தக்கூடும்.—2 கொரிந்தியர் 4:7, NW.b

      13. அநேக குடும்பங்களைச் சேதப்படுத்தும் இரண்டாவது பிரச்சினை என்ன?

      13 மதுபானத்தைத் துர்ப்பிரயோகம் செய்வது மற்றொரு பிரச்சினைக்கு வழிநடத்தக்கூடும்—குடும்ப வன்முறை—இது அநேக குடும்பங்களுக்கு சேதமுண்டாக்குகிறது.

      குடும்ப வன்முறையால் உண்டாகும் சேதம்

      14. குடும்ப வன்முறை எப்போது ஆரம்பமானது, இன்றைய நிலைமை என்ன?

      14 காயீன் மற்றும் ஆபேல் என்ற இரண்டு சகோதரர்களை உட்படுத்திய குடும்ப வன்முறை சம்பவமே மனித சரித்திரத்தில் ஏற்பட்ட முதல் வன்முறையான செயலாக இருந்தது. (ஆதியாகமம் 4:8) அந்தச் சமயம் முதற்கொண்டு, மனிதவர்க்கம் எல்லா வகையான குடும்ப வன்முறையாலும் பீடிக்கப்பட்டு வந்திருக்கிறது. மனைவிகளை கடுமையாக அடிக்கும் கணவர்கள், கணவர்களைத் தாக்கும் மனைவிகள், தங்கள் இளம் பிள்ளைகளைக் கொடூரமாய் அடிக்கும் பெற்றோர், தங்கள் வயதான பெற்றோரைத் துர்ப்பிரயோகம் செய்யும் பிள்ளைகள் ஆகியோர் இருக்கின்றனர்.

      15. குடும்ப வன்முறையின் காரணமாக குடும்ப அங்கத்தினர்கள் எவ்வாறு உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?

      15 குடும்ப வன்முறையால் ஏற்பட்ட சேதம் உடல்சம்பந்தமான தழும்புகளைக் காட்டிலும் அதிகத்தை உண்டாக்குகிறது. கடுமையாக அடிக்கப்பட்ட ஒரு மனைவி சொன்னாள்: “மிகுதியான குற்ற உணர்வையும் வெட்கத்தையும் நான் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான காலை வேளைகளில் அது வெறும் கொடுங்கனவு என்று நினைத்து நான் படுக்கையிலேயே இருக்க விரும்புகிறேன்.” குடும்ப வன்முறையைக் காணும் அல்லது அனுபவிக்கும் பிள்ளைகள், வளர்ந்து பெரியவர்களாகி தங்கள் சொந்த குடும்பங்களை கொண்டிருக்கும்போது அவர்களும் வன்முறையைக் கையாளலாம்.

      16, 17. உணர்ச்சிப்பூர்வமான துர்ப்பிரயோகம் என்றால் என்ன, அதன் காரணமாக குடும்ப அங்கத்தினர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?

      16 குடும்ப வன்முறை சரீர துர்ப்பிரயோகத்தை மட்டும் உட்படுத்துவதாய் இருப்பதில்லை. தாக்குதல் பெரும்பாலும் சொல் வடிவில் உள்ளது. நீதிமொழிகள் 12:18 சொல்கிறது: “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு.” குடும்ப வன்முறையை அடையாளப்படுத்திக் காண்பிக்கும் இப்படிப்பட்ட “குத்துகள்,” அவமதிப்பான பெயர்களைப் பயன்படுத்துதல், கூச்சல்போடுதல், அதோடுகூட எப்போதும் குறைகூறுதல், இழிவுபடுத்தும் பழித்துரைத்தல்கள், சரீரப்பிரகாரமாக வன்மையாய் தாக்குவதாக பயமுறுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கும். உணர்ச்சிப்பூர்வமான வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் காணமுடியாமலும் பெரும்பாலும் மற்றவர்களால் கவனிக்கப்படாமலும் போகின்றன.

      17 ஒரு பிள்ளையை உணர்ச்சிப்பூர்வமாக தாக்குவது—ஒரு பிள்ளையின் திறமைகள், அறிவுத்திறம், அல்லது ஒரு நபராக அதன் மதிப்பு ஆகியவற்றை எப்போதும் குறைகூறிக்கொண்டும் சிறுமைப்படுத்திக்கொண்டும் இருப்பது—விசேஷமாய் வருந்தத்தக்கதாயிருக்கிறது. அப்படிப்பட்ட சொல் வடிவிலுள்ள துர்ப்பிரயோகம் ஒரு பிள்ளையின் தன்னம்பிக்கையை அழித்துப்போடக்கூடும். எல்லா பிள்ளைகளுக்கும் சிட்சை தேவைப்படுவது உண்மைதான். ஆனால் பைபிள் தகப்பன்மாருக்கு அறிவுறுத்துகிறது: “உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.”—கொலோசெயர் 3:21.

      குடும்ப வன்முறையை எவ்வாறு தவிர்ப்பது

      பக்கம் 151-ன் படம்

      ஒருவரையொருவர் நேசித்து, மரியாதை காண்பிக்கும் கிறிஸ்தவ துணைவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உடனடியாக செயல்படுவர்

      18. குடும்ப வன்முறை எங்கே ஆரம்பமாகிறது, அதை நிறுத்துவதற்கான வழியை பைபிள் எவ்வாறு காண்பிக்கிறது?

      18 குடும்ப வன்முறை இதயத்திலும் மனதிலும் ஆரம்பமாகிறது; நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதிலிருந்து ஆரம்பமாகிறது. (யாக்கோபு 1:14, 15) அந்த வன்முறையை நிறுத்துவதற்கு, துர்ப்பிரயோகம் செய்பவர் தன் சிந்தனா முறையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். (ரோமர் 12:2) அது சாத்தியமா? ஆம், சாத்தியமே. ஆட்களை மாற்றுவதற்கான வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு உண்டு. அது ‘‘பலமாய் ஊன்றியிருக்கும்” அழிவுண்டாக்கும் எண்ணங்களையும்கூட வேரோடு பிடுங்கிப்போடக்கூடும். (2 கொரிந்தியர் 10:4, NW; எபிரெயர் 4:12) பைபிளின் திருத்தமான அறிவு ஆட்களில் அப்படிப்பட்ட முழுமையான மாற்றத்தைச் செய்வதற்கு உதவக்கூடியதால், அவர்கள் ஒரு புதிய ஆளுமையைத் தரித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றனர்.—எபேசியர் 4:22-24; கொலோசெயர் 3:8-10.

      19. ஒரு கிறிஸ்தவர் திருமண துணைவரை எவ்வாறு நோக்க வேண்டும், நடத்த வேண்டும்?

      19 திருமண துணைவரைப் பற்றிய நோக்குநிலை. கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.” (எபேசியர் 5:28) கணவன், மனைவியானவள் ‘பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால் அவளுக்கு கனத்தைச்’ செய்ய வேண்டும் என்றும்கூட பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:7) மனைவிகள் ‘தங்கள் புருஷரிடத்தில் அன்புள்ளவர்களாயிருக்கவும்’ அவர்கள் பேரில் ‘ஆழ்ந்த மரியாதை’ வைத்திருக்கவும் புத்திமதி அளிக்கப்பட்டிருக்கின்றனர். (தீத்து 2:4; எபேசியர் 5:33, NW) தன் மனைவியை உடல்சம்பந்தமாகவோ அல்லது சொல்வகையிலோ தாக்கினால், தான் தன் மனைவிக்கு கனம்செலுத்துவதாக எந்தக் கடவுள்-பயமுள்ள கணவனும் உண்மையில் சொல்லமுடியாது. மேலும் தன் கணவனை நோக்கி கூச்சல் போட்டு, கேலியாக பேசி அல்லது அவரை எப்போதும் திட்டிக்கொண்டேயிருக்கும் எந்த ஒரு மனைவியும் தன் கணவனை உண்மையில் நேசித்து மரியாதை செலுத்துவதாக சொல்லமுடியாது.

      20. யாருக்கு முன்பு பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் குறித்து பொறுப்புள்ளவர்களாய் இருக்கின்றனர், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் குறித்து ஏன் பொருத்தமான அளவுக்குமேல் அதிகத்தை எதிர்பார்க்கக்கூடாது?

      20 பிள்ளைகளைப் பற்றிய சரியான நோக்குநிலை. பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பும் கவனிப்பும் தேவை, ஆம், அவர்கள் அதைப் பெற தகுதியுள்ளவர்கள். “கர்த்தரால் வரும் சுதந்தரம்” என்றும் “அவரால் கிடைக்கும் பலன்” என்றும் கடவுளுடைய வார்த்தை பிள்ளைகளை அழைக்கிறது. (சங்கீதம் 127:4) அந்தச் சுதந்தரத்தைக் கவனித்துக்கொள்வதற்கு பெற்றோர் யெகோவாவுக்கு முன்பாக பொறுப்புள்ளவர்களாய் இருக்கின்றனர். “குழந்தைக்கேற்ற பண்புகளை” பற்றியும் பிள்ளைப்பருவத்தின் ‘மதியீனத்தைப்’ பற்றியும் பைபிள் பேசுகிறது. (1 கொரிந்தியர் 13:11, NW; நீதிமொழிகள் 22:15) பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் மதியீனத்தை எதிர்ப்படும்போது ஆச்சரியமடையக்கூடாது. இளைஞர் வயதுவந்தோர் அல்ல. ஒரு பிள்ளையின் வயது, குடும்ப பின்னணி, திறமை ஆகியவற்றுக்கு பொருத்தமான அளவுக்கு மேல் அதிகத்தை வற்புறுத்திக் கேட்கக்கூடாது.—ஆதியாகமம் 33:12-14-ஐக் காண்க.

      21. வயதான பெற்றோரை நோக்க வேண்டிய மற்றும் கையாள வேண்டிய தெய்வீக வழி என்ன?

      21 வயதான பெற்றோரைப் பற்றிய நோக்குநிலை. லேவியராகமம் 19:32 சொல்கிறது: ‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணு.’ இவ்வாறு கடவுளுடைய சட்டம் வயதானவர்களுக்கு மரியாதையையும் உயர்வான கவனிப்பையும் கொடுக்கும்படி உற்சாகப்படுத்தியது. வயதான பெற்றோர் ஒருவர் அளவுக்கு மீறி வற்புறுத்திக் கேட்கும்போதோ அல்லது நோயுற்று விரைவாக நடமாடமுடியாமலும் யோசிக்கமுடியாமலும் இருக்கும்போதோ இது ஒரு சவாலாக இருக்கக்கூடும். இருப்பினும், “பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்” என்று பிள்ளைகளுக்கு நினைப்பூட்டப்படுகிறது. (1 தீமோத்தேயு 5:4) இது அவர்களை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துவதை, ஒருவேளை பண ஆதரவு தருவதையும்கூட அர்த்தப்படுத்தக்கூடும். வயதான பெற்றோரை சரீரப்பிரகாரமாக அல்லது வேறுவிதமாக தவறாக நடத்துவது, பைபிள் நம்மை நடந்துகொள்ளும்படி சொல்வதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.

      22. குடும்ப வன்முறையை மேற்கொள்வதற்குத் தேவையான முக்கிய பண்பு என்ன, அதை எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?

      22 தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நீதிமொழிகள் 29:11 சொல்கிறது: “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.” நீங்கள் எவ்வாறு உங்கள் ஆவியை அடக்கலாம்? மனதுக்குள்ளே அதிருப்தியான நிலை வளர்ந்துகொண்டே செல்வதை அனுமதிப்பதற்குப் பதிலாக, எழும்பும் கஷ்டங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு உடனடியாக செயல்படுங்கள். (எபேசியர் 4:26, 27) நீங்கள் கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்று உணர்ந்தால், அந்த இடத்தை விட்டு உடனடியாக சென்றுவிடுங்கள். உங்களில் தன்னடக்கத்தை பிறப்பிப்பதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காக ஜெபியுங்கள். (கலாத்தியர் 5:22, 23) உலாவச் செல்லுதல் அல்லது ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபடுதல் போன்றவை உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு உதவலாம். (நீதிமொழிகள் 17:14, 27) ‘கோபப்படுவதில் தாமதமாய் இருக்க’ முயற்சிசெய்யுங்கள்.—நீதிமொழிகள் 14:29, NW.

      பிரிந்து செல்வதா அல்லது ஒன்றுசேர்ந்து இருப்பதா?

      23. கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர் ஒருவர் தன் குடும்பத்தாரை உடல்சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்வது உட்பட, திரும்பத்திரும்ப மனந்திரும்பாமல் கோபாவேசத்தோடு நடந்துகொண்டால் என்ன நேரிடலாம்?

      23 கடவுள் கண்டனம் செய்யும் கிரியைகளில் பைபிள் “விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள்” ஆகியவற்றை வைக்கிறது, ‘இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை’ என்று குறிப்பிடுகிறது. (கலாத்தியர் 5:19-21) ஆகையால், கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக்கொள்கிற எவரும் திரும்பத்திரும்பவும் மனந்திரும்பாமலும் கோபாவேசத்திற்கு இடங்கொடுத்தால், ஒருவேளை துணைவர் அல்லது பிள்ளைகளை சரீர துர்ப்பிரயோகம்கூட செய்தால் அவர்கள் கிறிஸ்தவ சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்படலாம். (ஒப்பிடுக: 2 யோவான் 9, 10.) இந்த விதத்தில் துர்ப்பிரயோகம் செய்யும் நபர்களை நீக்கி சபை சுத்தமாக வைக்கப்படுகிறது.—1 கொரிந்தியர் 5:6, 7; கலாத்தியர் 5:9.

      24. (அ) துர்ப்பிரயோகம் செய்யப்படும் துணைவர்கள் எவ்வாறு செயல்பட தெரிந்துகொள்ளலாம்? (ஆ) அக்கறையுள்ள நண்பர்களும் மூப்பர்களும் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட துணைவரை எவ்வாறு ஆதரிக்கலாம், ஆனால் அவர்கள் என்ன செய்யக்கூடாது?

      24 மாற்றம் செய்துகொள்வதற்கான எந்த அறிகுறியும் காண்பிக்காமல் துர்ப்பிரயோகம் செய்யும் வாழ்க்கைத் துணைவரால் தற்போது கடுமையாக அடிவாங்கிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றியென்ன? சிலர் ஏதாவது ஒரு காரணத்துக்காக துர்ப்பிரயோகம் செய்யும் துணைவரோடு சேர்ந்து வாழ்வதை தெரிவு செய்திருக்கின்றனர். இன்னும் சிலர், தங்கள் உடல்சம்பந்தமான, மனசம்பந்தமான, ஆவிக்குரிய சம்பந்தமான ஆரோக்கியத்திற்கும் ஒருவேளை தங்கள் உயிருக்கும்கூட ஆபத்து ஏற்படும் என்று எண்ணி பிரிந்துசெல்வதை தெரிவு செய்திருக்கின்றனர். இந்தச் சூழ்நிலைகளில் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒருவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யெகோவாவுக்கு முன்பாக உள்ள ஒரு தனிப்பட்ட தீர்மானமாகும். (1 கொரிந்தியர் 7:10, 11) நல்லெண்ணமுள்ள நண்பர்கள், உறவினர்கள் அல்லது கிறிஸ்தவ மூப்பர்கள் உதவியும் புத்திமதியும் அளிக்க விரும்பலாம், ஆனால் எந்தவொரு குறிப்பிட்ட நடத்தைப்போக்கையும் மேற்கொள்ளும்படி தாக்கப்பட்ட நபரை தொல்லைப்படுத்தக்கூடாது. அது அவளோ அல்லது அவனோ எடுக்கவேண்டிய சொந்த தீர்மானம்.—ரோமர் 14:4; கலாத்தியர் 6:5.

      சேதமுண்டாக்கும் பிரச்சினைகளுக்கு ஓர் முடிவு

      25. குடும்பத்தைக் குறித்து யெகோவாவின் நோக்கம் என்ன?

      25 யெகோவா ஆதாமையும் ஏவாளையும் திருமணத்தில் ஒன்றுசேர்த்தபோது, குடிவெறி பழக்கம் அல்லது வன்முறை போன்ற சேதமுண்டாக்கும் பிரச்சினைகளால் குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு அழிந்துபோக வேண்டுமென்று ஒருபோதும் நோக்கம் கொண்டில்லை. (எபேசியர் 3:14, 15) அன்பும் சமாதானமும் செழித்தோங்கும் ஒரு இடமாகவும், ஒவ்வொரு அங்கத்தினருடைய மனசம்பந்தமான, உணர்ச்சிசம்பந்தமான, மேலும் ஆவிக்குரியத் தேவைகள் கவனித்துக்கொள்ளப்படும் ஒரு இடமாகவும் குடும்பம் இருக்க வேண்டும். இருப்பினும், பாவம் புகுத்தப்பட்ட சமயத்திலிருந்து குடும்ப வாழ்க்கை விரைவில் படிப்படியாக படுமோசமாக ஆனது.—ஒப்பிடுக: பிரசங்கி 8:9.

      26. யெகோவாவின் தேவைகளுக்கு இசைய வாழ முயற்சிசெய்வோருக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?

      26 மகிழ்ச்சிகரமாக, யெகோவா குடும்பத்துக்கான தம் நோக்கத்தை விட்டுவிடவில்லை. அவர் சமாதானமுள்ள புதிய உலகை கொண்டுவரப்போவதாக வாக்களித்திருக்கிறார், அதில் ஜனங்கள் “தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.” (எசேக்கியல் 34:28) அந்தச் சமயத்தில் குடிவெறி பழக்கம், குடும்ப வன்முறை, மேலும் இன்று குடும்பங்களைச் சேதப்படுத்தும் மற்ற எல்லா பிரச்சினைகளும் கடந்தகால காரியங்களாக ஆகிவிட்டிருக்கும். பயத்தையும் வேதனையையும் மறைப்பதற்காக அல்ல, ஆனால் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்”பதன் காரணமாக ஜனங்கள் புன்முறுவல் புரிவார்கள்.—சங்கீதம் 37:11.

      a நாங்கள் குடிவெறியனை ஆணாக குறிப்பிட்டாலும் இதில் உள்ள நியமங்கள் குடிவெறி கொண்ட நபர் பெண்ணாக இருந்தாலும் சமமான அளவு பொருந்தும்.

      b சில தேசங்களில் குடிவெறியர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் விசேஷ கவனம்செலுத்தி உதவிசெய்வதற்கென்றே சிகிச்சை மையங்கள், மருத்துவமனைகள், முன்னிலை எய்தும் திட்டங்கள் ஆகியவை இருக்கின்றன. அப்படிப்பட்ட உதவியை நாடலாமா அல்லது வேண்டாமா என்பது தனிப்பட்டவருடைய தீர்மானம். உவாட்ச் டவர் சொஸைட்டி எந்தக் குறிப்பிட்ட சிகிச்சையையும் பரிந்துரை செய்வதில்லை. என்றபோதிலும், உதவியை நாடுகையில் வேதாகம நியமங்களை விட்டுக்கொடுத்துவிடும் நடவடிக்கைகளில் ஒருவர் உட்பட்டுவிடாமலிருக்க கவனமாயிருக்க வேண்டும்.

      மோசமான சேதத்தை உண்டாக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு . . . கீழ்க்காணும் பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவக்கூடும்?

      மதுபானத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை யெகோவா கண்டனம் செய்கிறார்.—நீதிமொழிகள் 23:20, 21.

      ஒவ்வொரு நபரும் தான் செய்யும் செயல்களுக்கு பொறுப்புள்ளவராய் இருக்கிறார்.—ரோமர் 14:12.

      தன்னடக்கமின்றி நாம் கடவுளை ஏற்கத்தகுந்த விதத்தில் சேவிக்க முடியாது.—நீதிமொழிகள் 29:11.

      மெய்க் கிறிஸ்தவர்கள் தங்கள் வயதான பெற்றோரைக் கனம்பண்ணுகின்றனர்.—லேவியராகமம் 19:32.

  • திருமணம் முறிவுறும் நிலையில் இருக்கிறதென்றால்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
    • அதிகாரம் 13

      திருமணம் முறிவுறும் நிலையில் இருக்கிறதென்றால்

      1, 2. திருமணம் மன அழுத்தத்தின்கீழ் இருந்தால், என்ன கேள்வி கேட்கப்பட வேண்டும்?

      லூசியா என்ற பெயருடைய இத்தாலிய பெண் 1988-ல் மிகவும் மனச்சோர்வுற்றிருந்தாள்.a பத்து வருடங்களுக்குப் பிறகு அவளுடைய திருமணம் முடிவடைந்துகொண்டிருந்தது. அவள் தன் கணவனோடு கொண்டிருந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சமாதானமாவதற்கு பல தடவை முயற்சி செய்திருந்தாள், ஆனால் அது நடைபெறவில்லை. ஆகையால் அவள் அவரோடு ஒத்து வாழ முடியாததன் காரணத்தால் பிரிந்து வாழ ஆரம்பித்தாள், இப்போது தன் சொந்த முயற்சியில் இரண்டு மகள்களையும் வளர்த்து பெரியவர்களாக்கும் பொறுப்பை எதிர்ப்பட்டாள். அந்தச் சமயத்தை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவந்து லூசியா சொல்கிறாள்: “எங்கள் திருமணத்தை எதுவும் மீட்கவே முடியாது என்று நான் நிச்சயமாயிருந்தேன்.”

      2 நீங்கள் திருமண பிரச்சினைகளை உடையவர்களாய் இருந்தால், லூசியா எவ்வாறு உணருகிறாள் என்பதை உங்களால் புரிந்துகொள்ளமுடியும். உங்கள் திருமணம் இக்கட்டான நிலையில் இருக்கலாம், அதை இனியும் அந்நிலையிலிருந்து விடுவிக்கமுடியுமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். நிலைமை அப்படி இருக்கிறதென்றால், இந்தக் கேள்வியை சிந்தித்துப்பார்ப்பதை நீங்கள் பயனுள்ளதாக காண்பீர்கள்: திருமணம் வெற்றிபெற உதவுவதற்கென்று பைபிளில் கடவுள் அளித்திருக்கும் எல்லா நல்ல புத்திமதியையும் நான் பின்பற்றி நடந்திருக்கிறேனா?—சங்கீதம் 119:105.

      3. மணவிலக்கு பிரபலமானதாக ஆகியிருந்தாலும், மணவிலக்கு செய்துகொண்டவர்கள் மத்தியிலும் அவர்களுடைய குடும்பங்கள் மத்தியிலும் என்ன பிரதிபலிப்பு அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது?

      3 கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மனத்தாங்கல்கள் கடுமையாயிருந்தால், திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே அதிக சுலபமான நடவடிக்கையாக இருப்பதாக தோன்றலாம். ஆனால் முறிவுற்ற குடும்பங்களின் எண்ணிக்கையில் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பு அநேக தேசங்களில் இருந்தபோதிலும், மணவிலக்கு செய்துகொண்ட பெரும் சதவீதமான ஆண்களும் பெண்களும் முறிவுற்றதைக் குறித்து வருந்துகின்றனர் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் திருமணமான நிலையில் இருப்பவர்களைக் காட்டிலும் அதிகப்படியான உடல்நல மற்றும் மனநல பிரச்சினைகளால் கஷ்டப்படுகின்றனர். மணவிலக்கு செய்துகொண்டதால் பிள்ளைகளுக்கு ஏற்படும் குழப்பமும் மகிழ்ச்சியற்ற நிலையும் பெரும்பாலும் பல வருடங்களாக நீடித்திருக்கின்றன. முறிவுற்ற குடும்பத்தின் பெற்றோரும் நண்பர்களும்கூட கஷ்டப்படுகின்றனர். திருமணத்தை ஆரம்பித்து வைத்தவராகிய கடவுள் எவ்வாறு அந்த நிலையை நோக்குகிறார்?

      4. திருமணத்தில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும்?

      4 முந்தின அதிகாரங்களில் கவனித்தபடி, திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க வேண்டிய பிணைப்பாக இருக்க வேண்டும் என்று கடவுள் நோக்கம்கொண்டிருந்தார். (ஆதியாகமம் 2:24) அப்படியென்றால் அநேக திருமணங்கள் ஏன் முறிவுறுகின்றன? அது திடீரென்று நடந்துவிடாமல் இருக்கலாம். எச்சரிப்பு தரும் அடையாளங்கள் பொதுவாக இருக்கின்றன. திருமணத்தில் உள்ள சிறு பிரச்சினைகள் சிறிது சிறிதாக வளர்ந்து வளர்ந்து இறுதியில் சமாளிக்கமுடியாததாய் தோன்றலாம். ஆனால் பைபிளின் உதவியைக்கொண்டு இப்படிப்பட்ட பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைத்தால், அநேக திருமண முறிவுகள் தவிர்க்கப்படக்கூடும்.

      உண்மைகளை எதிர்ப்பட்டு நம்பிக்கையோடு இருங்கள்

      5. எந்த ஒரு திருமணத்திலும் என்ன மெய்யான நிலையை எதிர்ப்பட வேண்டும்?

      5 சில சமயங்களில் பிரச்சினைகளுக்கு வழிநடத்தக்கூடிய ஒரு அடிப்படைக் காரணம், திருமணமான துணைவர்களில் ஒருவர் அல்லது இருவருமே மெய்வாழ்க்கையில் நிகழாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதாகும். காதல் காவியங்கள், பிரபலமான பத்திரிகைகள், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவை மெய்வாழ்க்கையிலிருந்து மிகவும் வித்தியாசமாயிருக்கும் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தோற்றுவிக்கலாம். இந்தக் கனவுகள் நனவாகவில்லையென்றால், ஒரு நபர் ஏமாற்றப்பட்டவராகவும், அதிருப்தியடைந்தவராகவும், கசப்படைந்தவராகவும்கூட உணரலாம். ஆனாலும் இரண்டு அபூரணமான நபர்கள் எவ்வாறு திருமணத்தில் மகிழ்ச்சியைக் கண்டடையலாம்? ஒரு வெற்றிகரமான உறவைப் பெறுவதற்கு முயற்சி தேவைப்படுகிறது.

      6. (அ) திருமணத்தைக் குறித்து என்ன சமநிலையான எண்ணத்தை பைபிள் அளிக்கிறது? (ஆ) திருமணத்தில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளுக்கான சில காரணங்கள் யாவை?

      6 பைபிள் நடைமுறையானது. அது திருமணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சிகளை அங்கீகரிக்கிறது, ஆனால் திருமணம் செய்துகொள்வோர் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்றும்கூட அது எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 7:28) ஏற்கெனவே கவனித்தபடி, துணைவர்கள் இருவரும் அபூரணர்கள், பாவம் செய்யும் இயல்புள்ளவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு துணைவரின் மன சம்பந்தமான அமைப்பும், உணர்ச்சி சம்பந்தமான அமைப்பும், வளர்ப்பு முறையும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன. பணம், பிள்ளைகள், துணைவரின் உடன்பிறந்தார் போன்ற விஷயங்களில் தம்பதிகள் சில சமயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். ஒன்றுசேர்ந்து காரியங்களைச் செய்வதற்கு போதிய நேரம் இல்லாமல் இருப்பது, பாலின பிரச்சினைகள் ஆகியவையும்கூட சச்சரவுகளுக்கு காரணங்களாய் இருக்கலாம்.b அப்படிப்பட்ட விஷயங்களைக் கையாளுவதற்கு நேரம் எடுக்கிறது, ஆனால் தைரியம்கொண்டு உற்சாகமாயிருங்கள்! பெரும்பாலான திருமணமான தம்பதிகள் அப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்பட்டு, ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வுகளைக் கண்டிருக்கின்றனர்.

      வேறுபாடுகளைக் கலந்து பேசுங்கள்

      பக்கம் 154-ன் படம்

      பிரச்சினைகளை உடனடியாக கையாளுங்கள். சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது

      7, 8. திருமணமான துணைவர்களுக்கிடையே புண்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அல்லது தவறான புரிந்துகொள்ளுதல்கள் இருந்தால், அவற்றை கையாளுவதற்கு வேதப்பூர்வமான வழி என்ன?

      7 புண்பட்ட உணர்ச்சிகள், தவறான புரிந்துகொள்ளுதல்கள், அல்லது தனிப்பட்ட குறைபாடுகள் போன்றவற்றை அமைதியாய் கலந்து பேசுவதை அநேகர் கடினமாய்க் காண்கின்றனர். “நான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக உணருகிறேன்” என்று ஒளிவுமறைவின்றி சொல்வதற்குப் பதிலாக, துணைவர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையைப் பெரிதாக்கலாம். “நீங்கள் உங்களைப் பற்றி மட்டும்தான் அக்கறையாயிருப்பீர்கள்,” அல்லது “நீங்கள் என்னை நேசிப்பதில்லை” என்று அநேகர் சொல்வர். தர்க்கத்தில் உட்பட்டுவிடாமலிருக்க விரும்புவதால் மற்ற துணைவர் உள்ளுணர்ச்சியை வெளிக்காட்டாமலிருக்க விரும்பலாம்.

      8 பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவதே மேலான போக்கு: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” (எபேசியர் 4:26) சந்தோஷமாய் மனநிறைவோடு திருமணமாகியிருந்த ஒரு தம்பதியினர் தங்கள் 60-வது திருமண ஆண்டு நிறைவுநாளை எட்டினர். அப்போது அவர்களுடைய திருமணம் வெற்றிகரமாய் இருப்பதற்கான இரகசியம் என்ன என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. கணவன் சொன்னார்: “வேறுபாடுகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவற்றைத் தீர்த்துக்கொள்ளாமல் படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம்.”

      9. (அ) வேதாகமத்தில் எது கருத்து பரிமாற்றத்தின் ஒரு முக்கியமான பகுதியாக அடையாளம் காண்பிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) மனத்தாழ்மையும் தைரியமும் தேவைப்பட்டாலும்கூட திருமணமான தம்பதிகள் பெரும்பாலும் என்ன செய்ய வேண்டிய தேவை இருக்கிறது?

      9 ஒரு கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தால், இருவரில் ஒவ்வொருவரும் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருக்க வேண்டும். (யாக்கோபு 1:19) கவனமாக செவிகொடுத்துக் கேட்டபிறகு, துணைவர் இருவருமே மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையை உணரலாம். (யாக்கோபு 5:16) “உங்களைப் புண்படுத்தியதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று கபடமில்லாமல் மனமார சொல்வதற்கு மனத்தாழ்மையும் தைரியமும் தேவைப்படுகிறது. திருமணமான தம்பதியினர் இந்த விதத்தில் கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு மட்டுமல்லாமல் இருவரும் ஒன்றாக கூடிவாழ்வதில் பெரும் இன்பம் காண்பதற்கு உதவக்கூடிய மனமார்ந்த அன்பையும் நெருக்கத்தையும் வளர்த்துக்கொள்வதற்கும்கூட உதவும்.

      திருமண கடமையை செலுத்துதல்

      10. கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சிபாரிசு செய்த என்ன பாதுகாப்பு ஒரு கிறிஸ்தவருக்கு இன்று பொருந்தக்கூடும்?

      10 ‘வேசித்தனம் பரவலாக இருந்தபடியால்’ அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதியபோது திருமணத்தை சிபாரிசு செய்தார். (1 கொரிந்தியர் 7:2) இன்று உலகம் பண்டைய கொரிந்து பட்டணத்தைப் போல அல்லது அதற்கும் மேல் படுமோசமாக இருக்கிறது. உலகிலுள்ள ஜனங்கள் வெளிப்படையாக கலந்து பேசும் ஒழுக்கக்கேடான விஷயங்கள், அவர்கள் அடக்கமற்ற விதத்தில் உடுத்தும் விதம், பத்திரிகைகள், புத்தகங்கள், டிவி, திரைப்படங்கள் ஆகியவற்றில் புலன்களுக்கு இன்பம்தரும் விதத்தில் சிறப்பித்துக் காண்பிக்கப்படும் இழிவான கதைகள் ஆகிய இவையனைத்தும் சேர்ந்து கள்ளத்தனமான பாலின ஆசைகளைத் தூண்டுவிப்பதாய் இருக்கின்றன. அதேபோன்ற சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்.”—1 கொரிந்தியர் 7:9.

      11, 12. (அ) கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எதைச் செலுத்த கடமைப்பட்டிருக்கின்றனர், அதை எந்த மனநிலையோடு செலுத்த வேண்டும்? (ஆ) திருமண கடமை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட வேண்டியிருந்தால், அந்த நிலைமை எவ்வாறு கையாளப்பட வேண்டும்?

      11 ஆகையால், திருமணமான கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.” (1 கொரிந்தியர் 7:3) வற்புறுத்திக் கேட்பதன் பேரில் அல்ல, ஆனால் கொடுப்பதன் பேரில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். துணைவர் இருவரும் ஒருவர் நலனின் பேரில் ஒருவர் அக்கறை காண்பித்தால் மட்டுமே திருமணத்தில் நிலவும் உடல்சம்பந்தமான நெருக்கம் மெய்யாகவே திருப்தியளிக்கக்கூடியதாய் இருக்கும். உதாரணமாக, தங்கள் மனைவிகளிடம் “விவேகத்தோடு” நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் கணவர்களுக்கு கட்டளையிடுகிறது. (1 பேதுரு 3:7) இது குறிப்பாக திருமண கடமையை செலுத்துவதிலும் பெற்றுக்கொள்வதிலும் உண்மையாய் இருக்கிறது. மனைவி மென்மையாக நடத்தப்படவில்லையென்றால், திருமணத்திலுள்ள இந்த அம்சத்தை அனுபவித்து மகிழ்வதை அவள் கடினமாகக் காணலாம்.

      12 திருமணமான துணைவர்கள் தங்கள் திருமண கடமைகளை ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டிய சமயங்கள் இருக்கின்றன. மனைவி மாதத்தின் குறிப்பிட்ட சில சமயங்களிலோ அல்லது அதிக களைப்பாக உணரும்போதோ இது அவ்வாறு இருக்கலாம். (லேவியராகமம் 18:19-ஐ ஒப்பிடுக.) கணவன் வேலை செய்யுமிடத்தில் கடினமான பிரச்சினையை சமாளித்துக்கொண்டிருக்கையிலும் உணர்ச்சிப்பூர்வமான ஆற்றலை இழந்து விட்டதாக உணரும்போதும் அவ்வாறே இருக்கலாம். அப்படி திருமண கடமையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் சமயங்களைக் குறித்து துணைவர்கள் இருவருமே ஒளிவுமறைவின்றி கலந்து பேசி ‘பரஸ்பர சம்மதத்தின்’ மூலம் ஒத்துக்கொண்டால் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் சிறந்த விதத்தில் கையாளப்படுகின்றன. (1 கொரிந்தியர் 7:5) இது துணைவர்கள் இருவரும் தவறான முடிவுகளுக்கு வருவதைத் தவிர்க்கும். ஆனால், மனைவி வேண்டுமென்றே தன் கணவனுக்கு செலுத்த வேண்டிய திருமணக் கடமையை செலுத்தாமலிருந்தாலோ அல்லது கணவன் வேண்டுமென்றே திருமணக் கடமையை அன்பான விதத்தில் செலுத்தத் தவறினாலோ, துணைவர் சோதனைக்கு ஆளாகிவிடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமணத்தில் பிரச்சினைகள் எழும்பலாம்.

      13. கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்கள் சிந்தனையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு உழைக்கலாம்?

      13 எல்லா கிறிஸ்தவர்களைப் போலவும், கடவுளுடைய திருமணமான ஊழியர்கள், அசுத்தமான விருப்பங்களையும், இயற்கைக்கு மாறான விருப்பங்களை தூண்டும் ஆபாசங்களையும் தவிர்க்க வேண்டும். (கொலோசெயர் 3:5) எதிர்பாலாரைச் சேர்ந்த எல்லா அங்கத்தினர்களிடமும் தொடர்புகொள்கையில் அவர்கள் தங்கள் எண்ணங்களையும் செயல்களையும்கூட காத்துக்கொள்ள வேண்டும். இயேசு எச்சரித்தார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28) பாலினத்தைக் குறித்து பைபிள் அளிக்கும் புத்திமதியைப் பொருத்துவதன்மூலம் தம்பதிகள் சோதனையில் விழுந்து, விபசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியான நெருக்கத்தைத் திருமணத்தில் தொடர்ந்து அனுபவிக்கலாம், அதில் பாலினம், திருமணத்தை ஆரம்பித்து வைத்தவராகிய யெகோவாவிடமிருந்து வரும் பூரணமான வெகுமதி என்று மிகவும் மதிப்புடையதாய் போற்றப்பட்டிருக்கிறது.—நீதிமொழிகள் 5:15-19.

      மணவிலக்குக்கான பைபிள் அடிப்படை

      14. என்ன விசனகரமான சூழ்நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது, ஏன்?

      14 மகிழ்ச்சிகரமாக, பெரும்பாலான கிறிஸ்தவ திருமணங்களில் எழும்பும் எந்தப் பிரச்சினையும் கையாளப்படலாம். ஆனால், சில சமயங்களில், விஷயங்கள் அவ்வாறு கையாளப்படமுடியாமல் இருக்கின்றன. மானிடர்கள் அபூரணராய் இருப்பதாலும் சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பாவமுள்ள உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதாலும், சில திருமணங்கள் முறிவுறும் நிலையை எட்டுகின்றன. (1 யோவான் 5:19) கிறிஸ்தவர்கள் எவ்வாறு அந்தத் தாங்கமுடியாத கடுஞ்சோதனையான நிலையைக் கையாள வேண்டும்?

      15. (அ) மறுபடியும் திருமணம் செய்துகொள்வதற்கான சாத்தியத்தையுடைய மணவிலக்குக்கு எது மட்டுமே வேதப்பூர்வமான அடிப்படையாய் இருக்கிறது? (ஆ) உண்மையாய் நடந்துகொள்ளாத திருமண துணைவரை மணவிலக்கு செய்ய வேண்டாம் என்று சிலர் ஏன் தீர்மானித்திருக்கின்றனர்?

      15 இந்தப் புத்தகத்தின் 2-ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டபடி, மணவிலக்கு செய்துவிட்டு திரும்பவும் திருமணம் செய்துகொள்வதற்கான ஒரே வேதப்பூர்வமான அடிப்படை வேசித்தனம் மட்டுமே.c (மத்தேயு 19:9) உங்கள் திருமண துணைவர் உண்மையற்றவராய் இருந்திருக்கிறார் என்று உங்களுக்கு நிச்சயமான அத்தாட்சி இருந்தால், நீங்கள் ஒரு கடினமான தீர்மானத்தை எதிர்ப்படுகிறீர்கள். நீங்கள் அந்தத் திருமணத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பீர்களா அல்லது மணவிலக்கு செய்துகொள்வீர்களா? சட்டங்கள் எதுவுமில்லை. உண்மையாய் மனந்திரும்பியிருக்கும் துணைவரை சில கிறிஸ்தவர்கள் முழுவதுமாக மன்னித்துவிட்டிருக்கின்றனர், அவ்வாறு பாதுகாக்கப்பட்ட திருமணம் திரும்பவும் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது. இன்னும் சிலர் பிள்ளைகள் இருப்பதன் காரணத்தால் மணவிலக்கு செய்துகொள்ளாமல் இருக்க தீர்மானித்திருக்கின்றனர்.

      16. (அ) தவறுசெய்யும் தங்கள் திருமண துணைவரை மணவிலக்கு செய்துவிடும்படி சிலரை உந்துவித்திருக்கும் சில காரணக்கூறுகள் யாவை? (ஆ) குற்றமற்ற துணைவர் மணவிலக்கு செய்துகொள்ள அல்லது செய்துகொள்ளாமலிருக்க தீர்மானம் எடுக்கையில், அந்த நபரின் தீர்மானத்தை ஏன் எவரும் குறைகூறக்கூடாது?

      16 மறுபட்சத்தில், அந்தப் பாவச்செயல் கருத்தரித்தல் அல்லது பாலின உறவால் கடத்தப்படும் நோய்கள் ஆகியவற்றில் விளைவடைந்திருக்கக்கூடும். அல்லது பிள்ளைகளை பாலின துர்ப்பிரயோகம் செய்யும் ஒரு பெற்றோரிடமிருந்து ஒருவேளை பாதுகாக்க வேண்டியிருக்கும். தெளிவாகவே, தீர்மானத்தை எடுக்கும் முன் சிந்தித்துப் பார்ப்பதற்கு அதிகம் உள்ளது. இருப்பினும், உங்கள் திருமண துணைவர் உண்மையாக நடந்துகொள்ளாததைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட பின்னர் பாலின உறவுகளை மீண்டும் தொடர்ந்தால், நீங்கள் அவரை மன்னித்துவிட்டீர்கள் என்பதையும் அந்தத் திருமணத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்கள் என்பதையும் காண்பிக்கிறீர்கள். மறுபடியும் திருமணம் செய்துகொள்வதற்கான வேதப்பூர்வமான சாத்தியத்தோடுகூட மணவிலக்கு செய்வதற்கான அடிப்படைக் காரணங்கள் இனிமேலும் இருப்பதில்லை. நீங்கள் எடுக்கும் தீர்மானத்தில் மற்றவர்கள் தலையிட்டு அதை மாற்றுவதற்கு முயற்சிசெய்யக்கூடாது, நீங்கள் அந்தத் தீர்மானத்தை எடுக்கையில் எவரும் அதைக் குறைகூறக்கூடாது. தீர்மானத்தின் விளைவுகளை நீங்களே அனுபவிக்க வேண்டும். “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.”—கலாத்தியர் 6:5.

      பிரிந்துசெல்வதற்கான அடிப்படைக் காரணங்கள்

      17. வேசித்தனம் இல்லையென்றால், பிரிந்து செல்லுதல் அல்லது மணவிலக்கு செய்தல் ஆகியவற்றின் பேரில் வேதாகமம் என்ன வரம்புகளை வைக்கிறது?

      17 திருமணமான துணைவர் வேசித்தனம் செய்யாவிட்டாலும்கூட பிரிந்துசெல்வதை அல்லது ஒருவேளை அவரை மணவிலக்கு செய்வதை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றனவா? ஆம், ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு கிறிஸ்தவர் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு மூன்றாவது ஆள் ஒருவரோடு தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது. (மத்தேயு 5:32) அப்படி பிரிந்து செல்வதற்கு பைபிள் இணக்கம் தெரிவித்தபோதிலும், பிரிந்துசெல்பவர் ‘விவாகம் செய்துகொள்ளாமலிருக்க வேண்டும் அல்லது மறுபடியும் ஒப்புரவாக வேண்டும்’ என்று அது வரையறுக்கிறது. (1 கொரிந்தியர் 7:11) பிரிந்துசெல்வது நல்லதென்பதாகத் தோன்றும் அளவுக்கு கடுமையானதாக்கும் சில சூழ்நிலைகள் யாவை?

      18, 19. மறுபடியும் திருமணம் செய்துகொள்வது சாத்தியமில்லையென்றாலும், சட்டப்பூர்வமான பிரிவு அல்லது மணவிலக்கு செய்துகொள்வதற்கான ஆலோசனையை சீர்தூக்கிப்பார்க்கும்படி ஒரு துணைவரை வழிநடத்தக்கூடிய கடுமையான சூழ்நிலைகள் சில யாவை?

      18 கணவனின் படுமோசமான சோம்பேறித்தனத்தினாலும் கெட்ட பழக்கங்களினாலும் குடும்பம் ஆதரவற்ற ஏழ்மையான நிலைக்கு வரலாம்.d அவர் குடும்பத்தின் வருவாயை சூதாடி முற்றிலும் இழந்துவிடலாம் அல்லது போதைப்பொருள் அல்லது மதுபானம் போன்றவற்றுக்கு அடிமையாகிவிட்டதால் அவற்றை ஆதரிப்பதற்கு அதைப் பயன்படுத்தலாம். பைபிள் குறிப்பிடுகிறது: “ஒருவன் . . . விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) அப்படிப்பட்ட மனிதன் தன் வழிகளை மாற்றிக்கொள்ள மறுத்து, தீய பழக்கங்களுக்கு செலவழிப்பதற்காக தன் மனைவி சம்பாதிக்கும் பணத்தையும்கூட ஒருவேளை எடுத்துக்கொண்டால், மனைவி தன் நலனையும் தன் பிள்ளைகளின் நலனையும் பாதுகாப்பதற்கென்று சட்டப்பூர்வமான பிரிவைப் பெற்றுக்கொள்ள தெரிந்துகொள்ளலாம்.

      19 தன் துணையை மிகவும் வன்மையாய் நடத்தி, ஒருவேளை அவருடைய [அவளுடைய] ஆரோக்கியமும் உயிரும்கூட ஆபத்துக்குள்ளாகும் அளவுக்கு அடிக்கடி அடித்தால் அப்படிப்பட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கை சிந்திக்கப்படலாம். கூடுதலாக, தன் திருமண துணைவர் கடவுளுடைய சட்டங்களை ஏதாவது ஒருவிதத்தில் மீறுவதற்கு எப்போதும் முயற்சிசெய்தால், விசேஷமாக ஆவிக்குரிய வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் நிலைவரை விஷயங்கள் சென்றால், பயமுறுத்தப்படும் துணைவர் பிரிந்து செல்வதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கலாம். சட்டப்படியான பிரிவை பெற்றுக்கொள்வதே ‘மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படியும்’ ஒரே வழி என்று கஷ்டத்துக்கு ஆளாகும் துணைவர் முடிவுக்கு வரலாம்.—அப்போஸ்தலர் 5:29.

      20. (அ) குடும்ப முறிவு ஏற்படுகையில், முதிர்ச்சிவாய்ந்த நண்பர்களும் மூப்பர்களும் எதை அளிக்கலாம், எதை அளிக்கக்கூடாது? (ஆ) திருமணமான நபர்கள் பைபிளில் பிரிவின் பேரிலும், மணவிலக்கின் பேரிலும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புரைகளை எதைச் செய்வதற்கு சாக்குப்போக்காக பயன்படுத்தக்கூடாது?

      20 துணைவர் படுமோசமாக நடப்பதால் பாதிக்கப்பட்டிருப்போர் அனைவரின் விஷயங்களிலும், குற்றமற்ற துணைவர் பிரிந்துசெல்ல வேண்டும் என்றோ அல்லது சேர்ந்து வாழவேண்டும் என்றோ எவருமே வற்புறுத்தக்கூடாது. முதிர்ச்சிவாய்ந்த நண்பர்களும் மூப்பர்களும் ஆதரவையும் பைபிளை-அடிப்படையாகக்கொண்ட புத்திமதியையும் அளித்தாலும், ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் எல்லா விவரங்களையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. யெகோவா மட்டுமே அதைக் காணமுடியும். நிச்சயமாகவே ஒரு கிறிஸ்தவ மனைவி திருமணமான நிலையிலிருந்து வெளியேறுவதற்காக அற்பமான சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தினால் அவள் கடவுளின் திருமண ஏற்பாட்டை கனம்பண்ணுகிறவளாய் இருக்கமாட்டாள். ஆனால் கடும் ஆபத்தான சூழ்நிலை தொடர்ந்து இருந்தால் அவள் பிரிந்துசெல்ல தெரிந்துகொள்கையில் ஒருவரும் அவளை குறைகூறக்கூடாது. பிரிந்துசெல்ல விரும்பும் கணவனுடைய விஷயத்திலும் அதையே சொல்லலாம். “நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.”—ரோமர் 14:10.

      முறிவுற்ற திருமணம் ஒன்று எவ்வாறு பாதுகாக்கப்பட்டது

      21. திருமணத்தின் பேரில் பைபிள் அளிக்கும் புத்திமதி நடைமுறையானது என்பதை எந்த அனுபவம் காண்பிக்கிறது?

      21 ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் லூசியா தன் கணவனிடமிருந்து பிரிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்து அவர்களோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். “பைபிள் என் பிரச்சினைக்கு நடைமுறையான தீர்வுகளை அளித்தது எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. வெறும் ஒரு வார படிப்பு முடிந்தவுடனேயே நான் என் கணவனோடு கொண்டிருந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டு சமாதானமாக விரும்பினேன். இக்கட்டான நிலையிலுள்ள திருமணங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை யெகோவா அறிந்திருக்கிறார் என்று இன்று என்னால் சொல்லமுடியும். ஏனென்றால் துணைவர்கள் எவ்வாறு ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்பதை அவருடைய போதனைகள் கற்றுக்கொள்ள உதவுகின்றன. யெகோவாவின் சாட்சிகள் குடும்பங்களைப் பிரிப்பவர்கள் என்று சிலர் உறுதியாக சொல்வது உண்மையல்ல. என்னுடைய விஷயத்தில் அதற்கு நேர் எதிர்மாறான காரியம் உண்மையாய் இருந்தது.” லூசியா தன் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்த கற்றுக்கொண்டாள்.

      22. எல்லா திருமணமான தம்பதிகளும் எதில் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும்?

      22 லூசியா இதற்கு விதிவிலக்கல்ல. திருமணம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும், ஒரு பாரமாக அல்ல. அவ்வாறு இருப்பதற்காக எழுதப்பட்டிருப்பவற்றிலேயே மிகச் சிறந்த புத்திமதியை யெகோவா அவருடைய பெருமதிப்புவாய்ந்த வார்த்தையில் தந்துள்ளார். பைபிள் “பேதையை ஞானியாக்கவும்” முடியும். (சங்கீதம் 19:7-11) முறிவுறும் நிலையில் இருந்த அநேக திருமணங்களை அது பாதுகாத்திருக்கிறது, மேலும் மிகவும் ஆபத்தான பிரச்சினைகளோடிருந்த மற்ற அநேக திருமணங்களை அது மேம்பட்டவையாய் ஆக்கியிருக்கிறது. யெகோவா தேவன் அளிக்கும் திருமண புத்திமதியின் பேரில் எல்லா திருமணமான தம்பதியினரும் முழு நம்பிக்கை வைப்பீர்களாக. அது உண்மையிலேயே நடைமுறையானது!

      a பெயர் மாற்றப்பட்டுள்ளது.

      b இந்த விஷயங்களில் சில, முந்தின அதிகாரங்களில் கலந்தாலோசிக்கப்பட்டன.

      c “வேசித்தனம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பைபிள் பதம், விபசாரம், ஒத்த பாலினம், மிருகப்புணர்ச்சி, வேண்டுமென்றே பாலின உறுப்புகளைப் பயன்படுத்துவதை உட்படுத்தியிருக்கும் மற்ற கள்ளச்செயல்கள் ஆகியவற்றை உட்படுத்தும்.

      d நல்ல உள்நோக்கமுள்ள கணவன் நோய் அல்லது வேலை வாய்ப்பின்மை போன்ற தன் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால், தன் குடும்பத்துக்கு தேவையானவற்றை அளிக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலைகளை இது உட்படுத்துவதில்லை.

      ஒரு திருமணம் முறிவுறுவதைத் தவிர்ப்பதற்கு . . . கீழ்க்காணும் பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவக்கூடும்?

      திருமணம் மகிழ்ச்சிக்கும் உபத்திரவத்துக்கும் ஊற்றுமூலமாய் இருக்கிறது.—நீதிமொழிகள் 5:18, 19; 1 கொரிந்தியர் 7:28.

      கருத்து வேறுபாடுகளை உடனடியாக கையாள வேண்டும்.—எபேசியர் 4:26.

      கலந்தாலோசிப்பில், பேசுவதைப் போன்றே செவிகொடுத்துக் கேட்பதும் முக்கியம்.—யாக்கோபு 1:19.

      திருமணக்கடமை சுயநலமற்ற விதத்திலும் மென்மையாகவும் செலுத்தப்பட வேண்டும்.—1 கொரிந்தியர் 7:3-5.

  • ஒன்றுசேர்ந்து முதியோராதல்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
    • அதிகாரம் 14

      ஒன்றுசேர்ந்து முதியோராதல்

      1, 2. (அ) முதிர்வயது நெருங்கிவருகையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? (ஆ) பைபிள் காலங்களில் வாழ்ந்துவந்த தேவபக்தியுள்ள மனிதர்கள் வயதான காலத்தில் எவ்வாறு திருப்தியடைந்தனர்?

      நாம் முதியோராகிக்கொண்டிருக்கையில் அநேக மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல்சார்ந்த பலவீனம் நம் சக்தியை உறிஞ்சிவிடுகிறது. கண்ணாடியில் உற்றுப்பார்ப்பது, புதிய சுருக்கங்கள் ஏற்பட்டிருப்பதையும், முடியின் நிறம் படிப்படியாக மாறியிருப்பதையும், முடி உதிர்வதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. நாம் கொஞ்சம் ஞாபக சக்தியை இழந்துகொண்டிருப்பதால் கஷ்டப்படலாம். பிள்ளைகள் திருமணம் செய்துகொள்கையில் புதிய உறவுகள் வளர்கின்றன, பேரப்பிள்ளைகள் வரும்போது மறுபடியும் உறவுகள் ஏற்படுகின்றன. உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, சிலருக்கு வழக்கமாக செய்யும் வேலைகளில் மாற்றம் ஏற்படுகிறது.

      2 உண்மையில், வயதாகிக்கொண்டே செல்லும் வருடங்கள் சோதனைக் காலமாக இருக்கலாம். (பிரசங்கி 12:1-8) அவ்வாறு இருந்தாலும், பைபிள் காலங்களில் வாழ்ந்துவந்த கடவுளுடைய ஊழியர்களை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறுதியில் இறந்துபோனாலும், ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் சம்பாதித்துக்கொண்டனர், அவை அவர்களுக்கு வயதான காலத்தில் பெரும் திருப்தியைக் கொண்டுவந்தன. (ஆதியாகமம் 25:8; 35:29; யோபு 12:12, NW; 42:17) அவர்கள் எவ்வாறு சந்தோஷத்தோடு முதியோராவதில் வெற்றியடைந்தனர்? இன்று நாம் காண்கிறபடி, பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நியமங்களுக்கு இசைவாக வாழ்வதன் மூலமே என்று உறுதியாய் சொல்லலாம்.—சங்கீதம் 119:105; 2 தீமோத்தேயு 3:16, 17.

      3. வயதான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பவுல் என்ன புத்திமதியை அளித்தார்?

      3 தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் முதியோராகிக் கொண்டிருப்போருக்கு நல்ல அறிவுரை கொடுத்தார். அவர் எழுதினார்: “முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், . . . நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் புத்திசொல்லு.” (தீத்து 2:2, 3, 5) இந்த வார்த்தைகளைக் கவனத்தில்கொண்டு நடப்பது முதியோராகையில் எதிர்ப்படும் சவால்களை மேற்கொள்வதற்கு உங்களுக்கு உதவக்கூடும்.

      பிள்ளைகள் வீட்டை விட்டுச் செல்கையில் மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்

      4, 5. பிள்ளைகள் தங்கள் வீட்டை விட்டுச்செல்கையில் பெரும்பாலான பெற்றோர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர், சிலர் எவ்வாறு புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்கின்றனர்?

      4 வாழ்க்கைப் பாங்கில் மாற்றங்கள் ஏற்படுகையில், அதற்கேற்றவாறு அமைத்துக்கொள்வதை அவை தேவைப்படுத்துகின்றன. வயதுவந்த பிள்ளைகள் திருமணம் செய்துகொள்வதற்கென்று வீட்டை விட்டுச் செல்கையில் இது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது! அநேக பெற்றோருக்கு இது, தாங்கள் வயதாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிக்கும் முதலாவது நினைப்பூட்டுதலாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் வயதுவந்தோராய் ஆனதைக் குறித்து மகிழ்ச்சியடைந்தாலும், பிள்ளைகளைத் தனித்து வாழ தயார்படுத்துவதற்கு தங்களாலான எல்லாவற்றையும் செய்தார்களா என்பதைக் குறித்து பெற்றோர் பெரும்பாலும் வருத்தப்படுகின்றனர். பிள்ளைகள் தங்களோடு வீட்டில் இல்லாததைக் குறித்து அவர்கள் வருந்தலாம்.

      5 புரிந்துகொள்ளத்தக்க விதத்தில், பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்றபின்பும்கூட பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய நலனின் பேரில் தொடர்ந்து அக்கறையுள்ளவர்களாய் இருக்கின்றனர். “நான் அடிக்கடி அவர்களிடமிருந்து தகவலைப் பெற்றுக்கொண்டால்—அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலைப் பெற்றுக்கொண்டால்—அது என்னை சந்தோஷப்படுத்தும்,” என்று ஒரு தாய் சொன்னார். ஒரு தகப்பன் சொல்கிறார்: “எங்கள் மகள் வீட்டை விட்டுச்சென்ற பின்பு, அது மிகவும் வருத்தமிக்க சமயமாய் இருந்தது. அது எங்கள் குடும்பத்தில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது, ஏனென்றால் நாங்கள் எப்போதும் எல்லாவற்றையும் ஒன்றுசேர்ந்து செய்திருக்கிறோம்.” இப்படிப்பட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தங்களோடு இல்லாததை எவ்வாறு சமாளித்திருக்கின்றனர்? அநேகருடைய விஷயங்களில், மற்றவர்கள் பேரில் அக்கறை காண்பித்து அவர்களுக்கு உதவுவதன் மூலமே.

      6. குடும்ப உறவுகளை சரியான நோக்குநிலையில் வைப்பதற்கு எது உதவிசெய்கிறது?

      6 பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ளும்போது பெற்றோரின் பங்கு மாறிவிடுகிறது. ஆதியாகமம் 2:24 குறிப்பிடுகிறது: ‘இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.’ தலைமை வகிப்பு, நல்ல ஒழுங்கு ஆகிய தெய்வீக நியமங்களைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வது, காரியங்களை அதன் சரியான நோக்குநிலையில் வைப்பதற்கு அவர்களுக்கு உதவும்.—1 கொரிந்தியர் 11:3; 14:33, 40.

      7. தன் மகள்கள் திருமணம் செய்துகொள்வதற்கென்று வீட்டை விட்டு சென்றபோது ஒரு தகப்பன் என்ன சிறந்த மனநிலையை வளர்த்துக்கொண்டார்?

      7 ஒரு தம்பதியினரின் இரண்டு மகள்களும் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டுச்சென்றவுடன், அத்தம்பதிகள் தங்கள் வாழ்க்கை வெறுமையாக்கப்பட்டதாக உணர்ந்தனர். முதலில் கணவன் தன் மருமகன்கள் மீது கோபங்கொண்டிருந்தார். ஆனால் தலைமை வகிப்பு நியமத்தை அவர் சிந்தித்துப் பார்த்தபோது, தன் மகள்களின் கணவன்மார் இப்போது தங்கள் தங்கள் குடும்பத்துக்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொண்டார். ஆகையால், அவருடைய மகள்கள் ஆலோசனை கேட்டபோது, அவர்களுடைய கணவன்மாரின் கருத்தை முதலில் அவர் கேட்டறிந்து, பின்னர் கூடுமானவரை அதற்கு ஆதரவுதர உறுதிசெய்துகொண்டார். அவருடைய மருமகன்கள் இப்போது அவரை நண்பராக கருதி அவருடைய புத்திமதியை வரவேற்கின்றனர்.

      8, 9. தங்கள் வளர்ந்த பிள்ளைகளின் சுதந்திரத்துக்கு ஏற்றவாறு சில பெற்றோர் எவ்வாறு தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றனர்?

      8 புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள் வேதப்பூர்வமற்ற காரியங்கள் எதையும் செய்யாதபோதும், பெற்றோர் சிறந்தது என்று நினைக்கும் காரியத்தைச் செய்யத் தவறினால் அப்போது என்ன செய்வது? “அவர்கள் யெகோவாவின் நோக்குநிலையைக் காண நாங்கள் எப்போதும் உதவிசெய்கிறோம், ஆனால் அவர்களுடைய தீர்மானத்தை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும், அதை ஏற்றுக்கொண்டு எங்கள் ஆதரவையும் உற்சாகத்தையும் அவர்களுக்கு கொடுக்கிறோம்,” என்று திருமணமான பிள்ளைகளையுடைய ஒரு தம்பதியினர் விளக்குகின்றனர்.

      9 குறிப்பிட்ட சில ஆசிய தேசங்களில் உள்ள தாய்மார் சிலர் தங்கள் மகன்கள் தனித்து வாழ விரும்புவதற்கு சம்மதிப்பதைக் குறிப்பாக கடினமாய்க் காண்கின்றனர். என்றபோதிலும், அவர்கள் கிறிஸ்தவ ஒழுங்குக்கும் தலைமை வகிப்புக்கும் மரியாதை காண்பித்தால், தங்கள் மருமகள்களோடு கொண்டுள்ள பிணக்கங்களைக் கூடுமானவரை குறைவாக்கலாம். தன் மகன்கள் குடும்பமாக வாழ்ந்த வீட்டை விட்டு வெளியே சென்றது “எப்போதும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் நன்றியுணர்ச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறது,” என்று ஒரு கிறிஸ்தவ பெண் சொல்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் புதிய குடும்பங்களை நிர்வகிப்பதற்கான திறமை பெற்றிருப்பதைக் காணும்போது அவர்கள் மிகவும் கிளர்ச்சியடைகிறார்கள். இது அந்தக் கிறிஸ்தவ பெண்ணும் அவர்களுடைய கணவரும் வயதாகிக்கொண்டே செல்கையில் அவர்களுடைய உடல், மனம் ஆகியவை சம்பந்தப்பட்ட பாரத்தைக் குறைப்பதாய் இருந்தது.

      உங்கள் திருமண பிணைப்புக்கு புத்துணர்ச்சியூட்டுதல்

      பக்கம் 166-ன் படங்கள்

      வயதாகிக்கொண்டே செல்கையில் ஒருவர் பேரில் ஒருவர் வைத்திருக்கும் அன்பை மறுபடியும் உறுதிசெய்துகொள்ளுங்கள்

      10, 11. நடுத்தரவயதின் சில கண்ணிகளைத் தவிர்ப்பதற்கு என்ன வேதப்பூர்வமான புத்திமதி ஆட்களுக்கு உதவும்?

      10 ஆட்கள் நடுத்தர வயதை அடைகையில் பல்வேறு விதங்களில் பிரதிபலிக்கின்றனர். சில ஆண்கள் இளவயதினராய் காட்சியளிப்பதற்கு முயற்சிசெய்து வித்தியாசமாய் உடுத்துகின்றனர். மாதவிடாய் முடிவுறும் பருவம் கொண்டுவரும் மாற்றங்களைக் குறித்து பெரும்பாலான பெண்கள் கவலைப்படுகின்றனர். விசனகரமாக, சில நடுத்தர வயதுள்ள நபர்கள், எதிர்பாலாரைச் சேர்ந்த இளம் அங்கத்தினர்களோடு பசப்புக்காதல் புரிவதன்மூலம் தங்கள் துணை கோபப்படுவதற்கும் பொறாமைப்படுவதற்கும் தூண்டுகின்றனர். ஆனால் தேவபக்தியுள்ள ஆண்களோ “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து” தவறான விருப்பங்களைத் தவிர்க்கின்றனர். (1 பேதுரு 4:7) அதேபோல் முதிர்ச்சிவாய்ந்த பெண்களும் தங்கள் கணவர்களை நேசிப்பதாலும் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புவதாலும் தங்கள் திருமணங்களில் நிலையானத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கு உழைக்கின்றனர்.

      11 “திறமைசாலியான மனைவி,” “உயிரோடிருக்கிற நாளெல்லாம் தீமையையல்ல, நன்மையையே” தன் கணவனுக்கு செய்வதாக அவளைப் புகழ்ந்து பேசுவதை லேமுவேல் ராஜா பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பதிவுசெய்து வைத்தார். தன் மனைவி நடுத்தர வயதின்போது, எப்படிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான அமைதியைக் கெடுக்கும் காரியங்களை அனுபவித்தாலும், அதை எவ்வாறு முயன்று சமாளிக்கிறாள் என்பதை ஒரு கிறிஸ்தவ கணவன் போற்றுவதற்கு தவறமாட்டார். அவருடைய அன்பு ‘அவளைப் புகழுவதற்கு’ அவரைத் தூண்டுவிக்கும்.—நீதிமொழிகள் 31:10, 12, 29; NW.

      12. வருடங்கள் கடந்து செல்லச்செல்ல தம்பதியினர் எவ்வாறு நெருங்கி வரலாம்?

      12 அதிக வேலைகள் நிறைந்த பிள்ளை-வளர்ப்பு காலப்பகுதியின்போது, நீங்கள் இருவரும் உங்கள் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை சந்தோஷத்தோடு ஒருபுறம் ஒதுக்கிவைத்திருப்பீர்கள். அவர்கள் வீட்டை விட்டுச்சென்ற பின்பு உங்கள் திருமண வாழ்க்கையை மறுபடியும் ஒருமுகப்படுத்துவதற்கான சமயமாய் இது இருக்கிறது. “என் மகள்கள் வீட்டை விட்டுச்சென்ற பின்பு, திருமணத்திற்கு முன் பழகியதைப் போல் நான் என் மனைவியோடு மறுபடியும் பழக ஆரம்பித்தேன்,” என்று ஒரு கணவர் சொல்கிறார். மற்றொரு கணவர் சொல்கிறார்: “நாங்கள் எங்கள் ஆரோக்கியத்தைக் குறித்து அக்கறையுடையவர்களாய் இருக்கிறோம், உடற்பயிற்சி செய்வதற்கான அவசியத்தைக் குறித்தும் ஒருவருக்கொருவர் நினைப்பூட்டிக் கொள்கிறோம்.” தனிமையை உணராமல் இருப்பதற்காக அவரும் அவருடைய மனைவியும் சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களை உபசரிக்கின்றனர். ஆம், மற்றவர்கள் பேரில் காண்பிக்கும் அக்கறை ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. அதற்கும் மேலாக அது யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது.—பிலிப்பியர் 2:4; எபிரெயர் 13:2, 16.

      13. தம்பதியினர் ஒன்றுசேர்ந்து முதியோராகையில் ஒளிவுமறைவின்றி இருப்பதும் நேர்மையாய் இருப்பதும் என்ன பங்கை வகிக்கிறது?

      13 உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையேயுள்ள கருத்து பரிமாற்றத்தில் முறிவு ஏற்படும்படி அனுமதிக்காதீர்கள். ஒன்றுசேர்ந்து ஒளிவுமறைவின்றி தாராளமாகப் பேசுங்கள். (நீதிமொழிகள் 17:27) “ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதன் மூலமும் கரிசனையுள்ளவர்களாய் இருப்பதன் மூலமும் நாங்கள் ஒருவர் பேரில் ஒருவர் கொண்டிருக்கும் எங்கள் புரிந்துகொள்ளுதலை அதிகரித்துக்கொள்கிறோம்,” என்று ஒரு கணவன் குறிப்பிடுகிறார். அதை அவருடைய மனைவியும் ஒப்புக்கொண்டு சொல்கிறார்: “நாங்கள் முதிர்வயதை அடைந்துவிட்ட நிலையில், ஒன்றுசேர்ந்து டீ குடிப்பதிலும், பேசுவதிலும், ஒருவருக்கொருவர் வேலையில் உதவிசெய்துகொள்வதிலும் அதிக மகிழ்ச்சியடைகிறோம்.” நீங்கள் உங்கள் திருமண பிணைப்பை உறுதியாய் நிலைத்திருக்கச் செய்வதற்கு கபடமற்றவர்களாயும் ஒளிவுமறைவற்றவர்களாயும் இருப்பது உதவக்கூடும், அது திருமணத்தை அழித்துப்போடுபவனாகிய சாத்தானின் தாக்குதல்களைக் குலைத்துப் போடுவதற்கு மனதுக்கு விரிதிறத்தை அளிக்கிறது.

      உங்கள் பேரப்பிள்ளைகளை அனுபவித்து மகிழுங்கள்

      14. தீமோத்தேயு ஒரு கிறிஸ்தவராக வளருவதற்கு அவருடைய பாட்டி என்ன பங்கை வகித்தார்?

      14 முதியோருக்கு பேரப்பிள்ளைகள் ‘கிரீடமாய்’ இருக்கின்றனர். (நீதிமொழிகள் 17:6) பேரப்பிள்ளைகளோடு கூடிவாழ்ந்து அவர்களுடைய நட்பை அனுபவிப்பது உண்மையில் பெருமகிழ்ச்சி தருவதாயும் கிளர்ச்சியூட்டுவதாயும் புத்துணர்ச்சியளிப்பதாயும் இருக்கக்கூடும். லோவிசாள் என்ற பாட்டியம்மாவைப் பற்றி பைபிள் நல்ல விதத்தில் பேசுகிறது. அவர் தன் மகள் ஐனிக்கேயாளோடு சேர்ந்து சிசுப்பருவத்திலிருந்த தன் பேரன் தீமோத்தேயுவோடுகூட தன் நம்பிக்கைகளை பகிர்ந்துகொண்டார். தன் தாயும் தன் பாட்டியம்மாவும் பைபிள் சத்தியத்தை உயர்வாய் மதித்துப் போற்றியதை அறிந்தவனாய் இந்த இளைஞன் வளர்ந்தான்.—2 தீமோத்தேயு 1:5; 3:14, 15.

      15. பேரப்பிள்ளைகளைக் குறித்த விஷயத்தில், தாத்தாபாட்டிமார் என்ன மதிப்புவாய்ந்த உதவியை அளிக்கலாம், ஆனால் அவர்கள் எதைத் தவிர்க்க வேண்டும்?

      15 இந்த விசேஷமான அம்சத்தில் தாத்தாபாட்டிமார் பெருமதிப்புவாய்ந்த உதவியை அளிக்கலாம். தாத்தாபாட்டிமாரே, ஏற்கெனவே யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி நீங்கள் பெற்றிருக்கும் அறிவை முதலில் உங்கள் பிள்ளைகளோடு பகிர்ந்துகொண்டீர்கள். இப்போது நீங்கள் அதேபோல் மற்றொரு சந்ததியோடு அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளலாம்! பைபிள் கதைகளை தங்கள் தாத்தாபாட்டிமார் விவரமாக எடுத்துரைப்பதைக் கேட்பதில் அநேக இளம்பிள்ளைகள் கிளர்ச்சியடைகின்றனர். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களை ஆழமாகப் பதியவைக்க வேண்டிய பொறுப்பை தாத்தாபாட்டிமாராகிய நீங்கள் எடுத்துக்கொள்வதில்லை. (உபாகமம் 6:7) மாறாக, நீங்கள் தகப்பனின் பொறுப்பை நிறைவுசெய்வதற்கு உதவிசெய்கிறீர்கள். உங்கள் ஜெபம் சங்கீதக்காரனின் ஜெபத்தைப் போன்று இருப்பதாக: “இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.”—சங்கீதம் 71:18; 78:5, 6.

      16. தாத்தாபாட்டிமார் தங்கள் குடும்பத்தில் மனத்தாங்கள் ஏற்படுவதற்கு காரணமாய் இருப்பதை எவ்வாறு தவிர்க்கலாம்?

      16 விசனகரமாக, தாத்தாபாட்டிமாரில் சிலர் பேரப்பிள்ளைகளுக்கு அளவுக்குமீறி செல்லம் கொடுத்து கெடுத்து விடுவதால், தாத்தாபாட்டிமாருக்கும் வயதுவந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இடையே மனத்தாங்கல்கள் வளர ஆரம்பிக்கின்றன. உங்கள் பேரப்பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் விஷயங்களை வெளிப்படுத்த மனவிருப்பமில்லாமல் இருந்தால், நீங்கள் காண்பிக்கும் உண்மையான தயவு விஷயங்களை உங்களிடம் ஒருவேளை சொல்வதை சுலபமாக்கலாம். செல்லம் கொடுக்கும் தாத்தாபாட்டிமார், பெற்றோருக்கு எதிராக இருந்து தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று சில சமயங்களில் இளைஞர்கள் நினைக்கின்றனர். அப்போது என்ன செய்வது? ஞானமாய் நடந்துகொண்டு, உங்கள் பேரப்பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசும்படி உற்சாகப்படுத்துங்கள். இது யெகோவாவுக்குப் பிரியமானது என்று விளக்குங்கள். (எபேசியர் 6:1-3) தேவைப்படுமானால், இளைஞர்கள் தங்கள் பெற்றோரை அணுகி பேசுவதற்கு நீங்கள் வழியைத் திறந்துவைக்க முன்வாருங்கள். நீங்கள் பல வருடங்களாக கற்றுக்கொண்டவற்றை உங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒளிவுமறைவின்றி கலந்து பேசுங்கள். உங்கள் நேர்மைத்தன்மையும் கபடமற்றத்தன்மையும் அவர்களுக்கு பயன் தருவதாய் இருக்கக்கூடும்.

      முதியோராகையில் அதற்கேற்றவாறு அமைத்துக்கொள்ளுங்கள்

      17. வயதாகிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் சங்கீதக்காரனின் என்ன தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும்?

      17 வருடங்கள் கடந்து செல்லச்செல்ல, முன்பு செய்ததைப் போன்று அல்லது விரும்பும் எல்லாவற்றையும் செய்யமுடியாமல் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஒருவர் எவ்வாறு முதியோராகும் நிலையை ஏற்றுக்கொண்டு சமாளிக்கிறார்? உங்கள் மனதில் நீங்கள் 30 வயதுள்ளவராய் இருப்பதைப் போன்று உணரலாம், ஆனால் கண்ணாடியில் ஒரு கண்ணோட்டமிடுவது, ஒரு வித்தியாசமான உண்மை நிலையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. உற்சாகம் இழந்துவிடாதீர்கள். சங்கீதக்காரன் யெகோவாவை கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்: “முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.” நான் சங்கீதக்காரனின் தீர்மானத்தைப் பின்பற்றுவேன் என்று உங்கள் உள்ளத்தில் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சொன்னார்: “நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.”—சங்கீதம் 71:9, 14.

      18. முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர் வேலையிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் காலத்தை எவ்வாறு பலன்தரும் விதத்தில் உபயோகிக்கலாம்?

      18 அநேகர் உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, யெகோவாவுக்குத் தங்கள் துதியை அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்காக முன்கூட்டியே தயாரித்திருக்கின்றனர். “எங்கள் மகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நான் என்ன செய்வேன் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தேன்,” என்று வேலையிலிருந்து இப்போது ஓய்வுபெற்றிருக்கும் ஒரு தந்தை விளக்குகிறார். “நான் முழு-நேர பிரசங்க ஊழியம் செய்ய ஆரம்பித்து விடுவேன் என்று உறுதியாய் இருந்தேன். யெகோவாவை முழுமையாக சேவிப்பதற்காக என் வியாபாரத்தை விற்றுவிட்டேன். யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபித்தேன்.” நீங்கள் வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை நெருங்கிக்கொண்டிருந்தால், நம் மகத்தான படைப்பாளரின் உறுதிமொழியிலிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்.”—ஏசாயா 46:4.

      19. வயதாகிக்கொண்டே செல்வோருக்கு என்ன புத்திமதி அளிக்கப்பட்டிருக்கிறது?

      19 உலகப்பிரகாரமான வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அதற்கேற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுதல் சுலபமானதாக இல்லாமல் இருக்கலாம். முதியோர் ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாய்’ இருக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் புத்திமதி கூறினார். சோம்பலுள்ள வாழ்க்கையை நாடும் மனநிலைக்கு இடங்கொடுத்துவிடாமல், கட்டுப்பாட்டோடு இருப்பதை இது பொதுவாக தேவைப்படுத்துகிறது. வேலையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் ஓய்வுபெற்ற பிறகு, வழக்கமாக செய்யும் வேலைகளில் ஒழுங்கும் சுய-சிட்சையும் மிகவும் அதிகமாக தேவைப்படலாம். ஆகையால், ‘கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, . . . கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாய்’ இருப்பதன்மூலம் சுறுசுறுப்பாயிருங்கள். (1 கொரிந்தியர் 15:58) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கென்று உங்கள் நடவடிக்கைகளை விரிவாக்குங்கள். (2 கொரிந்தியர் 6:13, NW) முதிர்வயதுக்கேற்ற அளவில் நற்செய்தியை வைராக்கியத்தோடு பிரசங்கிப்பதன்மூலம் அநேக கிறிஸ்தவர்கள் இதைச் செய்கின்றனர். முதியோராகிக்கொண்டே இருக்கையில், ‘விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களாய்’ இருங்கள்.—தீத்து 2:2.

      மரணத்தில் உங்கள் துணைவரை இழந்த நிலையை சமாளித்தல்

      20, 21. (அ) தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் திருமணமான தம்பதியை எது இறுதியில் பிரிக்க வேண்டும்? (ஆ) மரணத்தில் துணைவரை இழந்துவிட்டிருக்கும் ஒருவருக்கு என்ன பைபிள் போதனை ஆறுதலளிக்கிறது, இழப்புக்கு ஆளான துணைவர்களுக்கு அன்னாள் எவ்வாறு ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்?

      20 தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் திருமணமான தம்பதிகள் இறுதியில் மரணத்தால் பிரிக்கப்படுவது விசனகரமான உண்மை. ஆனால் உண்மையில் அது மெய்வாழ்வில் நடக்கிறது. தங்கள் அன்பானவர்கள் இப்போது உறங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் தாங்கள் அவர்களை மறுபடியும் காண்பர் என்பதையும் இழப்புக்கு ஆளான கிறிஸ்தவ துணைவர்கள் அறிந்திருக்கின்றனர். (யோவான் 11:11, 25) ஆனால் இழப்போ, இன்னும் தாங்கமுடியாததாய் இருக்கிறது. உயிரோடிருக்கும் துணைவர் எவ்வாறு அதை சமாளிக்கலாம்?a

      21 பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபர் என்ன செய்தார் என்பதை நினைவுபடுத்திப் பார்ப்பது உதவியாயிருக்கும். அன்னாளுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தபோதிலும் அவர்கள் கணவனை இழந்துவிட்டிருந்தார்கள், அவர்களைப் பற்றி நாம் வாசிக்கும்போது அவர்களுக்கு வயது 84. அவர்கள் தன் கணவனை இழந்தபோது வருத்தப்பட்டிருப்பார்கள் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர்கள் அதை எவ்வாறு சமாளித்தார்கள்? அவர்கள் யெகோவா தேவனுக்கு ஆலயத்தில் இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்தார்கள். (லூக்கா 2:36-38, NW) சந்தேகத்துக்கு இடமின்றி, ஜெபத்தோடுகூடிய சேவையால் நிறைந்திருந்த அன்னாளின் வாழ்க்கை, ஒரு விதவையாக இருந்த காரணத்தால் அனுபவித்த துக்கத்துக்கும் தனிமைக்கும் பெரும் மாற்றுமருந்தாக இருந்தது.

      22. சில விதவைகளும் மனைவிகளை இழந்தோரும் தனிமையை எவ்வாறு சமாளித்திருக்கின்றனர்?

      22 “பேசுவதற்கு துணைவர் இல்லாமல் இருப்பதுதான் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்திருக்கிறது” என்று பத்து வருடங்களுக்கு முன்பு விதவையான 72 வயது பெண் விளக்குகிறார். “என் கணவர் நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருந்தார். நாங்கள் சபையைப் பற்றியும் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதைப் பற்றியும் பேசுவோம்.” மற்றொரு விதவை சொல்கிறார்: “காலம் கடந்து செல்வது புண்ணை ஆற்றினாலும், ஒருவர் தனக்கிருக்கும் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார் என்பதுதான் குணப்படுவதற்கு உதவியாயிருக்கும் என்று சொல்வது இன்னும் திருத்தமாய் இருப்பதாக நான் காண்கிறேன். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு ஒரு சிறந்த நிலையில் இருக்கிறீர்கள்.” மனைவியை இழந்த 67 வயதான ஒருவர் சொல்கிறார்: “இழப்பை சமாளிப்பதற்கு மிகச் சிறந்த வழி, மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்கு உங்களையே அளிப்பதாகும்.”

      வயதான காலத்தில் கடவுளால் உயர்வாய் மதிக்கப்படுதல்

      23, 24. முதியோருக்கு, குறிப்பாக துணைவர்களை மரணத்தில் இழந்தோருக்கு, பைபிள் என்ன பெரும் ஆறுதலை அளிக்கிறது?

      23 பெரிதும் நேசித்த ஒரு துணைவரை மரணம் எடுத்துக்கொள்கிறபோதிலும், யெகோவா எப்போதும் உண்மையுள்ளவராகவும் எப்போதும் நம்பத்தக்கவராகவும் நிலைத்திருக்கிறார். “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்,” என்று பண்டையகால தாவீது ராஜா பாடினார், “நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.”—சங்கீதம் 27:4.

      24 “உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்குவிக்கிறார். (1 தீமோத்தேயு 5:3) நெருங்கிய உறவினர்களைக் கொண்டிராத தகுதிவாய்ந்த விதவைகளுக்கு சபையிலிருந்து பொருளாதார ஆதரவு தேவைப்பட்டிருக்கலாம் என்பதை இந்தக் கட்டளையைப் பின்தொடர்ந்து வரும் புத்திமதி குறிப்பிடுகிறது. எனினும், ‘கனம்பண்ணுங்கள்’ என்று அறிவுரை கொடுப்பதன் கருத்து, அவர்களுக்கு மதிப்புத்தர வேண்டும் என்ற கருத்தையும்கூட சேர்த்துக்கொள்கிறது. யெகோவா அவர்களை மதிக்கிறார், அவர்களை தாங்கி ஆதரிப்பார் என்பதை அறிந்துகொள்வதிலிருந்து தேவபக்தியுள்ள விதவைகளும் மனைவியை இழந்தவர்களும் என்னே ஆறுதலைப் பெற்றுக்கொள்ளலாம்!—யாக்கோபு 1:27.

      25. முதியோருக்கு என்ன இலக்கு இன்னும் இருக்கிறது?

      25 “முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை,” என்று கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை அறிவிக்கிறது. “நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.” (நீதிமொழிகள் 16:31; 20:29) திருமணமானவர்களாய் இருந்தாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாலும், மறுபடியும் யெகோவாவின் சேவையைத் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் முதலாவதாக வையுங்கள். இவ்வாறு நீங்கள் இப்போது கடவுளோடு ஒரு நல்ல பெயரையும், முதிர்வயதின் வேதனைகள் இல்லா ஓர் உலகில் நித்திய ஜீவன் என்ற எதிர்பார்ப்பையும் பெற்றிருப்பீர்கள் என்று உறுதியாயிருங்கள்.—சங்கீதம் 37:3-5; ஏசாயா 65:20.

      a இப்பொருளின் பேரில் கூடுதலான விவரமான கலந்தாலோசிப்புக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கும் நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.

      வயதாகிக்கொண்டே செல்லும் தம்பதிகளுக்கு . . . கீழ்க்காணும் பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவக்கூடும்?

      பேரப்பிள்ளைகள் முதியோருக்கு ‘கிரீடமாய்’ இருக்கின்றனர்.—நீதிமொழிகள் 17:6.

      யெகோவாவைச் சேவிப்பதற்கு முதிர் வயது கூடுதலான சந்தர்ப்பங்களைக் கொண்டுவரலாம்.—சங்கீதம் 71:9, 14.

      முதியோர் ‘தெளிந்த புத்தியுள்ளவர்களாய்’ இருக்கும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.—தீத்து 2:2.

      மரணத்தில் துணைவர்களை இழந்துவிட்டிருப்போர் மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாலும் பைபிளில் ஆறுதலைக் கண்டடையலாம்.—யோவான் 11:11, 25.

      உண்மைத்தன்மையுள்ள முதியோரை யெகோவா உயர்வாய் மதிக்கிறார்.—நீதிமொழிகள் 16:31.

  • உங்கள் குடும்பத்துக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
    • அதிகாரம் 16

      உங்கள் குடும்பத்துக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்

      1.குடும்ப ஏற்பாட்டின் பேரில் யெகோவாவின் நோக்கம் என்னவாக இருந்தது?

      யெகோவா ஆதாமையும் ஏவாளையும் திருமணத்தில் இணைத்தபோது, ஆரம்ப காலத்திலேயே பதிவுசெய்யப்பட்டிருந்த எபிரெய கவிதையை வெளிப்படக்கூறுவதன்மூலம் ஆதாம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். (ஆதியாகமம் 2:22, 23) என்றபோதிலும், படைப்பாளர் தன் மானிட பிள்ளைகளுக்கு வெறுமனே இன்பமளிப்பதைக் காட்டிலும் அதிகத்தை மனதில் கொண்டிருந்தார். திருமணமான தம்பதிகளும் குடும்பங்களும் அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். அவர் முதல் ஜோடியிடம் சொன்னார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) அது என்னே ஒரு மகத்தான, பலனளிக்கும் நியமிப்பாக இருந்தது! ஆதாமும் ஏவாளும் அவர்களுடைய எதிர்கால பிள்ளைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து யெகோவாவின் சித்தத்தை முழு கீழ்ப்படிதலோடு செய்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாய் இருந்திருப்பார்கள்!

      2, 3. இன்று குடும்பங்கள் எவ்வாறு மிகுதியான மகிழ்ச்சியைக் கண்டடையலாம்?

      2 இன்றும்கூட, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கென்று குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து உழைக்கையில் மகிழ்ச்சிமிக்க நிலையை அடைகின்றன. “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 4:8) தேவபக்தியோடு வாழ்ந்து, பைபிளில் அடங்கியிருக்கும் யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றும் குடும்பம் ‘இந்த ஜீவனில்’ மகிழ்ச்சி காணும். (சங்கீதம் 1:1-3; 119:105; 2 தீமோத்தேயு 3:16, 17) குடும்பத்தில் ஒரு அங்கத்தினராவது பைபிள் நியமங்களைப் பொருத்தினால், எவருமே பொருத்தாமல் இருப்பதைவிட நிலைமை மேம்பட்டதாய் இருக்கும்.

      3 குடும்ப மகிழ்ச்சிக்கு உதவியளிக்கும் அநேக பைபிள் நியமங்களை இப்புத்தகம் கலந்தாலோசித்திருக்கிறது. புத்தகம் முழுவதும் அவற்றில் சில திரும்பத் திரும்ப தோன்றுவதை நீங்கள் ஒருவேளை கவனித்திருப்பீர்கள். ஏன்? ஏனென்றால் அவை வல்லமைவாய்ந்த சத்தியங்களை எடுத்துரைக்கின்றன, குடும்ப வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் எல்லாருடைய நன்மைக்கென்றும் அவை செயல்படுகின்றன. இந்தப் பைபிள் நியமங்களைப் பொருத்த முயற்சிசெய்யும் குடும்பங்கள், தேவபக்தியானது உண்மையிலேயே ‘இந்த ஜீவனுக்கு வாக்குத்தத்தமுள்ளதாய்’ இருப்பதாக காண்கிறார்கள். அந்த முக்கியமான நியமங்களில் நான்கு நியமங்களை நாம் மறுபடியும் காண்போம்.

      தன்னடக்கத்தின் மதிப்பு

      4. திருமணத்தில் தன்னடக்கம் ஏன் இன்றியமையாதது?

      4 சாலொமோன் ராஜா சொன்னார்: “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.” (நீதிமொழிகள் 25:28; 29:11) மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை விரும்புவோருக்கு, ‘ஆவியை அடக்கிக்கொள்ளுதல்,’ தன்னடக்கத்தைப் பிரயோகித்தல் மிகவும் முக்கியமானது. கடுஞ்சினம், ஒழுக்கக்கேடான துர் ஆசை போன்ற அழிவுண்டாக்கும் உணர்ச்சிகளுக்கு பணிந்துவிடுவது கெடுதி விளைவிக்கும்—அப்படியே சரிசெய்ய முடிந்தாலும்—அதைச் சரிசெய்வதற்கு பல வருடங்கள் எடுக்கும்.

      5. ஒரு அபூரண மானிடன் தன்னடக்கத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம், என்ன நன்மைகளோடு?

      5 ஆதாமின் சந்ததியில் வந்த எவரும் தன் அபூரண மாம்சத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது. (ரோமர் 7:21, 22) அவ்வாறு இருப்பினும், தன்னடக்கம் ஆவியின் கனியாக இருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23, NW) எனவே, நாம் இந்தப் பண்புக்காக ஜெபித்தோமென்றால், வேதாகமத்தில் அதைப் பற்றி கொடுக்கப்படும் பொருத்தமான புத்திமதியை நாம் பிரயோகித்தோமென்றால், அதை வெளிப்படுத்திக் காண்பிப்பவர்களோடு கூட்டுறவுகொண்டு, அதைக் காண்பிக்காதவர்களின் கூட்டுறவைத் தவிர்த்தோமென்றால் கடவுளுடைய ஆவி நம்மில் தன்னடக்கத்தை பிறப்பிக்கும். (சங்கீதம் 119:100, 101, 130; நீதிமொழிகள் 13:20; 1 பேதுரு 4:7) நாம் சோதிக்கப்பட்டாலும்கூட, அப்படிப்பட்ட போக்கு ‘வேசித்தனத்திற்கு விலகியோட’ நமக்கு உதவிசெய்யும். (1 கொரிந்தியர் 6:18) நாம் வன்முறையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, குடிவெறி பழக்கத்தைத் தவிர்ப்போம் அல்லது அதை மேற்கொள்வோம். கடினமான சூழ்நிலைகளையும் கோபத்தைத் தூண்டும் சூழ்நிலைகளையும் நாம் அதிக சாந்தமாக கையாளுவோம். பிள்ளைகள் உட்பட எல்லாரும், இந்த முக்கியமான ஆவியின் கனியை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொள்வோமாக.—சங்கீதம் 119:1, 2.

      தலைமை வகிப்பைக் குறித்து சரியான நோக்குநிலை

      6. (அ) கடவுளால் ஏற்படுத்தப்பட்ட தலைமை வகிப்பு ஏற்பாடு என்ன? (ஆ) தன் தலைமை வகிப்பு குடும்பத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்றால், கணவர் எதை நினைவில் வைக்க வேண்டும்?

      6 தலைமை வகிப்பை அங்கீகரிப்பது இரண்டாவது முக்கியமான நியமம். பவுல் சரியான வரிசைக் கிரமத்தை விவரித்தார்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும் ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும் நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3) இதன் அர்த்தம் குடும்பத்தை கணவன் தலைமை தாங்கி நடத்துகிறார், அவருடைய மனைவி உண்மைத்தன்மையோடு ஆதரவு தருகிறாள், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பதே. (எபேசியர் 5:22-25, 27, 28-33; 6:1-4) ஆனால், தலைமை வகிப்பு சரியான விதத்தில் கையாளப்பட்டால் மட்டுமே அது மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் என்பதை கவனியுங்கள். தேவபக்தியோடு வாழும் கணவர்கள் தலைமை வகிப்பு சர்வாதிகாரம் அல்ல என்பதை அறிந்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் தலைவராகிய இயேசுவை பின்பற்றுகின்றனர். இயேசு “எல்லாவற்றிற்கும் மேலான தலையாக” இருக்கப்போவதால், அவர் ‘ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய’ வந்தார். (எபேசியர் 1:23; மத்தேயு 20:28) அதே விதத்தில், ஒரு கிறிஸ்தவ கணவர் தனக்கு மட்டும் நன்மையை வருவித்துக்கொள்ளாமல், தன் மனைவி மற்றும் பிள்ளைகளின் அக்கறைகளைக் கவனித்துக்கொள்வதற்காக தலைமை வகிப்பைப் பயன்படுத்துகிறார்.—1 கொரிந்தியர் 13:4, 5.

      7 . குடும்பத்தில் மனைவிக்கென்று கடவுள் நியமித்திருக்கும் பங்கை நிறைவேற்றுவதற்கு என்ன வேதப்பூர்வமான நியமங்கள் அவளுக்கு உதவும்?

      7 ஆனால் தேவபக்தியோடு வாழும் மனைவியோ தன் கணவனோடு போட்டி போடுவதில்லை அல்லது அவர்மீது ஆதிக்கம் செலுத்த நாடுவதில்லை. அவள் அவருக்கு ஆதரவாயிருந்து அவரோடு சேர்ந்து வேலைசெய்ய சந்தோஷப்படுகிறாள். பைபிள் சில சமயங்களில் மனைவியை கணவனுக்குச் ‘சொந்தமானவளாக’ இருப்பதாகச் சொல்கிறது, அவர் அவளுக்குத் தலைவன் என்பதைக் குறித்து எந்தவித சந்தேகத்தையும் விட்டுவைப்பதில்லை. (ஆதியாகமம் 20:3, NW) அவள் திருமணத்தின்மூலம் ‘புருஷனைப் பற்றிய பிரமாணத்தின்’ கீழ் வருகிறாள். (ரோமர் 7:2) அதே சமயத்தில் பைபிள் அவளை ‘உதவியாள்’ மற்றும் ‘நிறைவுசெய்பவள்’ என்று அழைக்கிறது. (ஆதியாகமம் 2:20, NW) அவள் தன் கணவனிடம் குறைவுபடும் பண்புகளையும் திறமைகளையும் நிறைவுசெய்து அவருக்குத் தேவையான ஆதரவைத் தருகிறாள். (நீதிமொழிகள் 31:10-31) தன் துணைவரோடு சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு நெருக்கமாக ஒத்துழைக்கும் மனைவியை ஒரு ‘தோழி’ என்றும்கூட பைபிள் சொல்கிறது. (மல்கியா 2:14) கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் ஸ்தானத்தைப் புரிந்துகொள்ளவும் ஒருவரையொருவர் தகுந்த மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தவும் இப்படிப்பட்ட வேதாகம நியமங்கள் உதவுகின்றன.

      ‘கேட்கிறதற்குத் தீவிரமாயிருங்கள்’

      8, 9. குடும்பத்திலுள்ள அனைவரும் தங்கள் கருத்து பரிமாற்ற திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் சில நியமங்களை விளக்குங்கள்.

      8 இப்புத்தகத்தில் கருத்து பரிமாற்றம் செய்வதற்கான தேவை அடிக்கடி சிறப்பித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஏன்? ஏனென்றால், ஒருவரோடொருவர் பேசி ஒருவர் சொல்வதை மற்றவர் உண்மையிலேயே செவிகொடுத்துக் கேட்கும்போது, பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது சுலபம். கருத்து பரிமாற்றம் என்பது இரு-வழி பாதை என்று திரும்பத்திரும்ப அழுத்தியுரைக்கப்பட்டது. அதை சீஷனாகிய யாக்கோபு இந்த விதத்தில் தெரிவித்தார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருக்கக்கடவர்கள்.—யாக்கோபு 1:19.

      9 நாம் எவ்வாறு பேச வேண்டும் என்பதைக் குறித்தும் கவனமுள்ளவர்களாய் இருப்பது முக்கியம். துணிச்சலாக, சண்டையிடுகிற விதத்தில் அல்லது கடுமையாக குறைகூறும் வார்த்தைகளைச் சொல்வது போன்றவை வெற்றிகரமான கருத்து பரிமாற்றமாக இருக்காது. (நீதிமொழிகள் 15:1; 21:9; 29;11, 20) நாம் சொல்வது சரியாக இருந்தாலும்கூட, அது கொடூரமாக, பெருமையாக அல்லது உணர்ச்சியற்ற விதத்தில் சொல்லப்பட்டால், அது நன்மை செய்வதைக் காட்டிலும் அதிக தீமை செய்வதாக இருக்கும். நம் பேச்சு ருசியாக ‘உப்பால் சாரமேறினதாக’ இருக்க வேண்டும். (கொலோசெயர் 4:6) நம் வார்த்தைகள் ‘வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானமாய்’ இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 25:11) நன்றாக கருத்து பரிமாற்றம் செய்வதற்குக் கற்றுக்கொள்ளும் குடும்பங்கள் மகிழ்ச்சி பெறுவதற்கு பெரும் படியை எடுத்திருக்கின்றன.

      அன்பின் இன்றியமையா பங்கு

      10. திருமணத்தில் என்ன வகையான அன்பு இன்றியமையாதது?

      10 “அன்பு” என்ற சொல் இந்தப் புத்தகம் முழுவதும் திரும்பத்திரும்ப தோன்றுகிறது. முக்கியமாய் குறிப்பிட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கும் ஒருவகையான அன்பு உங்களுக்கு நினைவிருக்கிறதா? காதல் உணர்ச்சிமிக்க அன்பு (கிரேக்க மொழியில், ஈராஸ் [eʹros]) திருமணத்தில் முக்கியமான பாகத்தை வகிக்கிறது என்பது உண்மைதான், மேலும் வெற்றிகரமான திருமணங்களில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மிகுதியான பாசமும் நட்பும் (கிரேக்க மொழியில், ஃபீலியா [phi·liʹa]) வளருகிறது. ஆனால் அதைக்காட்டிலும் அகாப்பே (a·gaʹpe) என்ற கிரேக்க வார்த்தை அர்த்தப்படுத்தும் அன்பே அதிமுக்கியமான அன்பு. இந்த அன்பைதான் நாம் யெகோவா, இயேசு, நம் அயலார் ஆகியோரிடமாக வளர்த்துக்கொள்கிறோம். (மத்தேயு 22:37-39) மனிதவர்க்கத்தினிடமாக யெகோவா வெளிப்படுத்திக் காண்பிக்கும் அன்பு இதுதான். (யோவான் 3:16) யெகோவா காண்பிக்கும் அதேவகையான அன்பை நாம் நம் திருமணமான துணைவரிடமும் பிள்ளைகளிடமும் காண்பிக்கலாம் என்பது எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது!—1 யோவான் 4:19.

      11. அன்பு எவ்வாறு திருமணத்தின் நன்மைக்கென்று செயல்படுகிறது?

      11 திருமணத்தில் இந்த உயர்வகையான அன்பு உண்மையில் ‘பூரண சற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது. (கொலோசெயர் 3:14) இது தம்பதியினரை ஒன்றுசேர்த்து இணைக்கிறது, தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் சிறந்ததைச் செய்வதற்கு விரும்பும்படி அவர்களை செய்விக்கிறது. குடும்பங்கள் கடினமான சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில், ஒற்றுமையாய்க் காரியங்களைக் கையாளுவதற்கு அன்பு அவர்களுக்கு உதவுகிறது. தம்பதியினர் முதியோராகையில், ஒருவரையொருவர் ஆதரித்து ஒருவரையொருவர் தொடர்ந்து உயர்வாய் போற்றும்படி அன்பு அவர்களுக்கு உதவிசெய்கிறது. “அன்பு தற்பொழிவை நாடாது . . . சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:4-8.

      12. திருமணமான தம்பதி கடவுள் பேரில் வைத்திருக்கும் அன்பு ஏன் திருமணத்தைப் பலப்படுத்துகிறது?

      12 திருமணமான துணைவர்களுக்கிடையே நிலவும் அன்பின் காரணமாக மட்டுமல்லாமல், முக்கியமாக யெகோவாவின் பேரிலுள்ள அன்பினால் திருமண பிணைப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தால் அது விசேஷமாய் பலமுள்ளதாக இருக்கிறது. (பிரசங்கி 4:9-12) ஏன்? அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.” (1 யோவான் 5:3) ஆகையால், தம்பதிகள் தங்கள் பிள்ளைகளை தேவபக்தியில் பயிற்றுவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை வெகுவாய் நேசிப்பதன் காரணமாக மட்டுமேயல்லாமல் இது யெகோவாவின் கட்டளையாய் இருப்பதால் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும். (உபாகமம் 6:6, 7) அவர்கள் ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்க வேண்டும், ஒருவரையொருவர் நேசிப்பதன் காரணமாக மட்டுமே அவ்வாறு செய்யாமல், முக்கியமாக அவர்கள் யெகோவாவை நேசிப்பதன் காரணத்தால் அவ்வாறு செய்ய வேண்டும், ஏனென்றால் யெகோவா ‘வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் நியாயந்தீர்ப்பார்.’ (எபிரெயர் 13:4) திருமணத்தில் ஒரு துணைவர் மட்டுமே கடுமையான பிரச்சினைகளை உண்டாக்கினாலும், மற்றொரு துணைவர் பைபிள் நியமங்களைத் தொடர்ந்து பின்பற்றும்படி யெகோவாவின் பேரிலுள்ள அன்பு அவரைத் தூண்டுவிக்கும். ஒருவர் பேரில் ஒருவர் வைத்திருக்கும் அன்பு, யெகோவாவின் பேரிலுள்ள அன்போடு உறுதிசெய்யப்பட்டிருக்கையில் அக்குடும்பங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியானவையாக இருக்கும்!

      கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் குடும்பம்

      13. தனிப்பட்ட நபர்கள் மெய்யாகவே முக்கியமாய் இருக்கும் காரியங்களின் பேரில் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு, கடவுளுடைய சித்தத்தைச் செய்ய தீர்மானமாயிருப்பது எவ்வாறு உதவும்?

      13 ஒரு கிறிஸ்தவனின் முழு வாழ்க்கையும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையே மையமாகக் கொண்டு சுழலுகிறது. (சங்கீதம் 143:10) தேவபக்தி என்பது உண்மையில் இதைத் தான் அர்த்தப்படுத்துகிறது. மெய்யாகவே முக்கியமாயிருக்கும் காரியங்களின் பேரில் தங்கள் கவனத்தை வைப்பதற்கு கடவுளுடைய சித்தத்தைச் செய்வது குடும்பங்களுக்கு உதவிசெய்கிறது. (பிலிப்பியர் 1:9, 10) உதாரணமாக, இயேசு எச்சரித்தார்: “எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.” (மத்தேயு 10:35, 36) இயேசுவின் எச்சரிப்பு உண்மையாய் நிரூபித்திருக்கிறது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் அநேகர் குடும்ப அங்கத்தினர்களால் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். என்னே ஒரு வருத்தமான, வேதனை தரும் நிலை! அப்படியிருந்தாலும், யெகோவா தேவன் பேரிலும் இயேசு கிறிஸ்துவின் பேரிலும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட குடும்ப பிணைப்புகள்மீது வைத்திருக்கும் அன்பு அதிகமாய் இருக்கக்கூடாது. (மத்தேயு 10:37-39) குடும்ப எதிர்ப்பின் மத்தியிலும் ஒருவர் சகித்திருந்தால், எதிர்ப்பவர்கள் தேவபக்தியின் நல்ல விளைவுகளைக் கண்டு மாற்றமடையலாம். (1 கொரிந்தியர் 7:12-16; 1 பேதுரு 3:1, 2) அது நடைபெறவில்லையென்றாலும்கூட, எதிர்ப்பின் காரணமாக கடவுளைச் சேவிப்பதை நிறுத்திவிடுவதன்மூலம் நிலையான நன்மை எதுவும் நாம் அடைந்துவிடப் போவதில்லை.

      14. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கான விருப்பம், தங்கள் பிள்ளைகளின் நன்மைக்கென்று செயல்படுவதற்கு பெற்றோருக்கு எவ்வாறு உதவும்?

      14 பெற்றோர் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு கடவுளுடைய சித்தத்தைச் செய்வது உதவிசெய்கிறது. உதாரணமாக, சில சமுதாயங்களில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முதலீடாக கருதும் இயல்புள்ளவர்களாய் இருக்கின்றனர், ஆகவே முதிர்வயதில் தங்கள் பிள்ளைகள் தங்களைக் கவனித்துக்கொள்வார்கள் என்று அவர்கள்மீது சார்ந்திருக்கின்றனர். வயதாகிக்கொண்டே செல்லும் தங்கள் பெற்றோரை வளர்ந்த பிள்ளைகள் கவனித்துக்கொள்வது சரியான காரியமாய் இருந்தாலும், அப்படி சிந்திப்பது, பிள்ளைகள் பொருளாசைகொண்ட வாழ்க்கைமுறையைப் பின்தொடரும்படி பெற்றோர் உற்சாகப்படுத்துவதாய் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய காரியங்களைக் காட்டிலும் பொருளாதார உடைமைகளை அதிகமாக மதிக்கும்படி பிள்ளைகளைப் பெற்றோர் வளர்த்து வந்தால் அது பிள்ளைகளுக்கு பிரயோஜனமாய் இருக்காது.—1 தீமோத்தேயு 6:9.

      15. கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் பெற்றோருக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக தீமோத்தேயுவின் தாயாகிய ஐனிக்கேயாள் எவ்வாறு இருந்தார்?

      15 பவுலின் இளம் நண்பனாயிருந்த தீமோத்தேயுவின் தாய் ஐனிக்கேயாள் இந்த விஷயத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். (2 தீமோத்தேயு 1:5) ஐனிக்கேயாள் அவிசுவாசியைத் திருமணம் செய்துகொண்டிருந்தாலும், தீமோத்தேயுவின் பாட்டியம்மாவாகிய லோவிசாளோடுகூட சேர்ந்து தேவபக்தியை நோக்கமாகக்கொண்ட வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்றவாறு தீமோத்தேயுவை வெற்றிகரமாக வளர்த்து வந்தார். (2 தீமோத்தேயு 3:14, 15) தீமோத்தேயு வயதுவந்தவரான போது, வீட்டை விட்டுச்சென்று பவுலின் மிஷனரி தோழனாக ராஜ்ய-பிரசங்கிப்பு வேலையை எடுத்துக்கொள்ளும்படி ஐனிக்கேயாள் அவரை அனுமதித்தார். (அப்போஸ்தலர் 16:1-5) தன் மகன் சிறப்புவாய்ந்த மிஷனரியாக ஆனபோது அவர் எவ்வளவு கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும்! வயதுவந்தவராக அவரிடமிருந்த தேவபக்தி ஆரம்பத்தில் அவர் பெற்றுக்கொண்ட பயிற்றுவிப்பை நன்றாய் பிரதிபலித்தது. நிச்சயமாகவே, தீமோத்தேயு தன்னுடன் வீட்டில் இல்லாததைக் குறித்து அவருடைய தாய் ஒருவேளை வருத்தப்பட்டாலும், அவருடைய உண்மையுள்ள ஊழியத்தைப் பற்றிய அறிக்கைகளை ஐனிக்கேயாள் கேட்டபோது திருப்தியும் சந்தோஷமும் அடைந்தார்கள்.—பிலிப்பியர் 2:19, 20.

      குடும்பமும் உங்கள் எதிர்காலமும்

      16. ஒரு மகனாக, இயேசு என்ன தகுதியான அக்கறையைக் காண்பித்தார், ஆனால் அவருடைய முக்கிய குறிக்கோள் என்னவாக இருந்தது?

      16 இயேசு தேவபக்தியுள்ள குடும்பத்தில் வளர்ந்து வந்தார், வயதுவந்த மகனாக, தன் தாய்மீது அக்கறை காண்பித்தார். (லூக்கா 2:51, 52; யோவான் 19:26) என்றபோதிலும், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதே இயேசுவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது, மானிடர்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கான வழியைத் திறந்துவைப்பதை இது உட்படுத்தியது. பாவமுள்ள மனிதவர்க்கத்துக்காக தம் பரிபூரண மானிட உயிரை மீட்கும்பொருளாக அளித்தபோது இதை அவர் செய்தார்.—மாற்கு 10:45; யோவான் 5:28, 29.

      17. இயேசுவின் உண்மைத்தன்மையுள்ள வாழ்க்கைப்போக்கு, கடவுளுடைய சித்தத்தைச் செய்வோருக்கு என்ன மகத்தான எதிர்பார்ப்புகளைத் திறந்து வைத்தது?

      17 இயேசு மரித்தப் பின்பு, யெகோவா அவரை பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பி பெரும் அதிகாரத்தை அவருக்கு அளித்தார், இறுதியில் அவரை பரலோக ராஜ்யத்தில் ராஜாவாக அமர்த்தினார். (மத்தேயு 28:18; ரோமர் 14:9; வெளிப்படுத்துதல் 11:15) அந்த ராஜ்யத்தில் அவரோடு சேர்ந்து ஆட்சிசெய்வதற்கென்று சில மானிடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியத்தை இயேசுவின் பலி ஏற்படுத்தியது. பரதீஸிய நிலைமைகள் திரும்பவும் நிலைநாட்டப்பட்ட பூமியின்மீது பரிபூரண வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அது மீதமாயிருந்த நேர்மை இதயமுள்ள மனிதவர்க்கத்துக்கு வழியையும்கூட திறந்து வைத்தது. (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 4; 21:3-5; 22:1-4) இந்த மகத்தான நற்செய்தியை நம் அயலாரிடம் சொல்வதே இன்று நாம் பெற்றிருக்கும் மிகப் பெரிய சிலாக்கியங்களில் ஒன்று.—மத்தேயு 24:14.

      18. குடும்பங்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் என்ன நினைப்பூட்டுதலும் என்ன உற்சாகமும் அளிக்கப்பட்டிருக்கின்றன?

      18 அப்போஸ்தலனாகிய பவுல் காண்பித்தபடி, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது, “பின்வரும்” ஜீவனில் ஜனங்கள் அந்த ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ளலாம் என்ற வாக்கை அவர்களுக்கு அளிக்கிறது. நிச்சயமாகவே, மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கு இதுதானே மிகச் சிறந்த வழியாய் இருக்கிறது! “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்பதை நினைவில் வையுங்கள். (1 யோவான் 2:17) எனவே, நீங்கள் ஒரு பிள்ளையாகவோ அல்லது பெற்றோராகவோ, ஒரு கணவனாகவோ அல்லது மனைவியாகவோ, அல்லது பிள்ளைகளையுடைய தனி நபராகவோ அல்லது பிள்ளைகளில்லாத தனி நபராகவோ இருந்தாலும்சரி, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு முயற்சிசெய்யுங்கள். நீங்கள் அழுத்தத்தின்கீழ் இருந்தாலும்கூட அல்லது மிகவும் கடுமையான கஷ்டங்களை எதிர்ப்பட்டாலும்கூட, நீங்கள் ஜீவனுள்ள கடவுளுடைய ஊழியர் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இப்படியாக, உங்கள் செயல்கள் யெகோவாவுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக. (நீதிமொழிகள் 27:11) உங்கள் நடத்தை இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியையும் வரப்போகும் புதிய உலகில் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வதில் விளைவடைவதாக!

      உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு . . . கீழ்க்காணும் பைபிள் நியமங்கள் எவ்வாறு உதவக்கூடும்?

      தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம்.—கலாத்தியர் 5:22, 23.

      தலைமை வகிப்பின் பேரில் சரியான நோக்குநிலையை வைத்திருப்பதன்மூலம், கணவனும் மனைவியும் குடும்பத்தின் நன்மைக்காக உழைக்க விரும்புகின்றனர்.—எபேசியர் 5:22-25, 27, 28-33; 6:4.

      கருத்து பரிமாற்றம் செய்வது செவிகொடுத்துக் கேட்பதையும் உட்படுத்துகிறது.—யாக்கோபு 1:19.

      யெகோவாவின் பேரிலுள்ள அன்பு திருமணத்தை உறுதிப்படுத்தும்.—1 யோவான் 5:3.

      கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே ஒரு குடும்பத்தின் அதிமுக்கியமான இலக்கு.—சங்கீதம் 143:10; 1 தீமோத்தேயு 4:8.

      திருமணமின்றி இருக்கும் வரம்

      எல்லாருமே திருமணம் செய்துகொள்வதில்லை. திருமணமான தம்பதிகள் அனைவருமே பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இயேசு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார், “பரலோக ராஜ்யத்தினிமித்தமாக” திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால், அந்நிலையை அவர் வரம் என்று அழைத்தார். (மத்தேயு 19:11, 12) அப்போஸ்தலனாகிய பவுலும்கூட திருமணம் செய்துகொள்ளாமலிருக்க விரும்பினார். திருமணமின்றி இருக்கும் நிலையையும் திருமணம் செய்துகொண்ட நிலையையும் அவர் ‘வரங்கள்’ என்று குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 7:7, 8, 25-28) எனவே, இப்புத்தகம் பெரும்பாலும் திருமணத்தைக் குறித்தும் பிள்ளை-வளர்ப்பைப் பற்றிய விஷயங்களைக் குறித்தும் கலந்தாலோசித்திருந்தாலும், திருமணமின்றி இருக்கும் நிலை அல்லது திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் நிலை கொண்டு வரும் ஆசீர்வாதங்களையும் பலன்களையும் நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்