சமாதானத்தை நாடிச்செல்லுங்கள்
“சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை . . . நாடிச்செல்வோமாக.”—ரோ. 14:19.
1, 2. யெகோவாவின் சாட்சிகள் சமாதானத்தை அனுபவிப்பதற்கான காரணங்கள் என்ன?
இன்றைய உலகில் உண்மையான சமாதானத்தைக் காண்பது கடினம். ஒரே நாட்டினரும் ஒரே மொழியினரும்கூட மதம், அரசியல், சமூக அந்தஸ்து போன்ற அம்சங்களில் பிளவுபட்டிருக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் மக்கள் “எல்லாத் தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும்” சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.—வெளி. 7:9.
2 நம் மத்தியில் சமாதானம் நிலவுவதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. அதற்கான முக்கிய காரணம், நாம் ‘கடவுளோடு சமாதானத்தை அனுபவிப்பதாகும்.’ நமக்காகத் தமது உயிரைக் கொடுத்த கடவுளுடைய மகன்மீது விசுவாசம் வைப்பதால் நாம் இந்தச் சமாதானத்தை அனுபவிக்கிறோம். (ரோ. 5:1; எபே. 1:7) அதோடு, கடவுள் தமது உண்மை ஊழியர்களுக்குத் தமது சக்தியைத் தருகிறார்; அவரது சக்தி பிறப்பிக்கும் குணங்களில் ஒன்று சமாதானமாகும். (கலா. 5:22) நாம் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவிப்பதற்கான இன்னொரு காரணம், ‘உலகத்தின் பாகமாக இல்லாததாகும்.’ (யோவா. 15:19) நாம் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக நடுநிலை வகிக்கிறோம். அதோடு, ‘நம் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருப்பதால்’ எவ்விதப் போர்களிலும் ஈடுபடாதிருக்கிறோம்.—ஏசா. 2:4.
3. நாம் சமாதானத்தை அனுபவிப்பதால் என்ன செய்யத் தூண்டப்படுகிறோம், இப்போது எதைப் பற்றிச் சிந்திப்போம்?
3 நாம் சபையில் சமாதானத்தை அனுபவிப்பது, ஒருவருக்கொருவர் தீங்கு செய்யாமல் இருப்பதை மட்டுமே குறிப்பதில்லை. நம் ஒவ்வொருவரது ஊரும், கலாச்சாரமும், சிந்திக்கும் முறையும் வேறுபட்டால்கூட, ‘ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுகிறோம்.’ (யோவா. 15:17) நாம் சமாதானத்தை அனுபவிப்பதால், ‘எல்லாருக்கும் நன்மை செய்ய, முக்கியமாக நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு நன்மை செய்ய’ தூண்டப்படுகிறோம். (கலா. 6:10) யெகோவாவுடனும் நம் சகோதர சகோதரிகளுடனும் நாம் அனுபவிக்கிற இந்தச் சமாதானம் ஒரு பொக்கிஷமாகும். இதை நாம் பொத்திப் பாதுகாக்க வேண்டும். ஆகவே, சபையில் நாம் எவ்வாறு சமாதானத்தைக் கட்டிக்காக்கலாம் என்பதை இப்போது சிந்திக்கலாம்.
மனம் புண்படும்போது
4. ஒருவருடைய மனதை நாம் புண்படுத்திவிட்டதாக உணருகையில் எவ்வாறு சமாதானத்தை நாட வேண்டும்?
4 “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம். பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 3:2) ஆகவே, சக வணக்கத்தாரிடையே கருத்து வேறுபாடுகளும் மனஸ்தாபங்களும் ஏற்படுவது சகஜம்தான். (பிலி. 4:2, 3) என்றாலும், சபையின் சமாதானத்தைக் குலைக்காமலேயே அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவருடைய மனதை நாம் புண்படுத்திவிட்டதாக உணருகையில் பின்பற்ற வேண்டிய ஆலோசனையைக் கவனியுங்கள்.—மத்தேயு 5:23, 24-ஐ வாசியுங்கள்.
5. நம் மனதை ஒருவர் புண்படுத்திவிட்டால் எவ்வாறு சமாதானத்தை நாடலாம்?
5 ஒருவர் ஏதோவொரு சின்ன விஷயத்தில் நம் மனதைப் புண்படுத்திவிட்டதாக வைத்துக்கொள்ளலாம். அவர் நம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென எதிர்பார்ப்பது சரியா? அன்பு “தீங்கைக் கணக்கு வைக்காது” என்று 1 கொரிந்தியர் 13:5 சொல்கிறது. ஆகவே, நம் மனதை ஒருவர் புண்படுத்திவிட்டால், ‘தீங்கைக் கணக்கு வைக்காமல்’ இருப்பதன் மூலம், அதாவது மன்னித்து மறந்துவிடுவதன் மூலம், சமாதானத்தை நாட வேண்டும். (கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.) அனுதினமும் ஏற்படுகிற சின்னச் சின்ன பிரச்சினைகளை இவ்விதத்தில் தீர்ப்பதே நல்லது; அப்போதுதான், சகோதர சகோதரிகளுடன் சமாதானமாக இருக்க முடியும், நமக்கும் மன நிம்மதி கிடைக்கும். “குற்றத்தை மன்னிப்பது . . . மகிமை” எனப் பொன்னான ஒரு பழமொழி குறிப்பிடுகிறது.—நீதி. 19:11.
6. ஒருவர் நமக்கு எதிராகச் செய்த ஒரு காரியத்தை நம்மால் மன்னித்து மறக்கவே முடியாது எனத் தோன்றும்போது என்ன செய்ய வேண்டும்?
6 ஒருவர் நமக்கு எதிராகச் செய்த ஒரு காரியத்தை நம்மால் மன்னித்து மறக்கவே முடியாது எனத் தோன்றும்போது என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி எல்லாரிடமும் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அது சபையின் சமாதானத்தைக் குலைக்கத்தான் செய்யும். அப்படியென்றால், பிரச்சினையை எப்படிச் சமாதானமாகத் தீர்ப்பது? “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்தால், அவரிடம் தனியாகப் போய், அவருடைய தவறை எடுத்துச் சொல்லுங்கள்; அவர் உங்களுக்குச் செவிகொடுத்தால், உங்கள் சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்” என மத்தேயு 18:15 சொல்கிறது. மத்தேயு 18:15-17 ஒரு பெரிய பாவத்தைப் பற்றிப் பேசுகிறது என்றாலும், 15-ஆம் வசனத்தில் உள்ள நியமத்தை மற்ற சூழ்நிலைகளிலும் பின்பற்றலாம். ஆகவே, ஒருவருடன் நமக்குப் பிரச்சினை இருந்தால், அவரிடம் மட்டுமே அதைப் பற்றிப் பேச வேண்டும். அதுவும் அன்பாகப் பேசி, மீண்டும் அவரோடு சமாதானமாவதற்கு முயல வேண்டும்.a
7. பிரச்சினைகளை ஏன் சீக்கிரமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்?
7 “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்; பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபே. 4:26, 27) “உங்கள்மீது வழக்குத் தொடுக்கிறவனோடு நீங்கள் . . . சீக்கிரமாகச் சமரசம் செய்துகொள்ளுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:25) ஆகவே, சமாதானத்தை நாட வேண்டுமென்றால் பிரச்சினைகளைச் சீக்கிரமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால், சிகிச்சை அளிக்கப்படாத காயம் புரையோடிப்போவதைப் போல் தீர்க்கப்படாத பிரச்சினையும் மோசமாகத்தான் செய்யும். எனவே, சகோதரர்களுடன் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்ய பெருமையோ, பொறாமையோ, பொருளாசையோ ஒரு தடையாகிவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.—யாக். 4:1-6.
பலருக்கு இடையே பிரச்சினை எழும்போது
8, 9. (அ) முதல் நூற்றாண்டு ரோமச் சபையில் என்ன கருத்து வேறுபாடு நிலவியது? (ஆ) ரோமக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன அறிவுரை வழங்கினார்?
8 சில சமயங்களில், சபையில் உள்ள பலருக்கு இடையே பிரச்சினை எழலாம். ரோமச் சபையிலிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் அப்படிப்பட்ட பிரச்சினைதான் தலைதூக்கியது; கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அங்கிருந்தவர்களில் சிலர் யூதப் பின்னணியைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் புறதேசப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். சிலர், பலவீனமான மனசாட்சியும் குறுகிய மனப்பான்மையும் உடைய மற்றவர்களைத் தாழ்வாகப் பார்த்தார்கள். தனிப்பட்ட விஷயங்களின்பேரில் அவர்களைத் தவறாக நியாயந்தீர்த்தார்கள். அந்தச் சபையினருக்கு பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்?—ரோ. 14:1-6.
9 அந்த இரு சாராருக்குமே பவுல் அறிவுரை வழங்கினார். திருச்சட்டத்தைப் பின்பற்றுவதை நிறுத்தியிருந்தவர்களிடம், மற்ற சகோதர சகோதரிகளைத் தாழ்வாகக் கருதாதிருக்கும்படி சொன்னார். (ரோ. 14:2, 10) அப்படித் தாழ்வாகக் கருதினால், திருச்சட்டம் தடைசெய்த உணவுகளை அப்போதும் வெறுத்து ஒதுக்கிய சகோதர, சகோதரிகளுக்கு இடறலாக இருந்திருக்கும். ஆகவே, “கடவுள் உண்டாக்கியிருப்பதை உணவின் காரணமாகத் தகர்த்துப்போடாதிருங்கள்” என்றும், “அசைவ உணவு சாப்பிடுவதோ திராட்சமது குடிப்பதோ வேறெதாவது செய்வதோ உங்கள் சகோதரனுடைய விசுவாசத்திற்கு இடையூறாக இருந்தால், அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றும் பவுல் அறிவுரை கூறினார். (ரோ. 14:14, 15, 20, 21) மறுபட்சத்தில், குறுகிய மனப்பான்மையுடைய கிறிஸ்தவர்களிடம், பரந்த மனப்பான்மையுடைய கிறிஸ்தவர்களை நியாயந்தீர்க்கக் கூடாதெனச் சொன்னார். (ரோ. 14:13) ‘அவர்களில் எவரும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்’ இருக்க வேண்டும் என்றார். (ரோ. 12:3) இவ்வாறு இரு சாராருக்கும் புத்திமதி வழங்கிய பிறகு, “சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களையும் ஒருவரையொருவர் பலப்படுத்துகிற காரியங்களையும் நாடிச்செல்வோமாக” என்று குறிப்பிட்டார்.—ரோ. 14:19.
10. ரோமச் சபையினரைப் போலவே இன்றும் பிரச்சினைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்?
10 ரோமச் சபையினர் பவுலின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களைச் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இன்று சபையில் கருத்து வேறுபாடு எழும்போது, அவர்களைப்போல் நாமும் வேதப்பூர்வ அறிவுரையை மனத்தாழ்மையோடு ஏற்று நடக்க வேண்டும், அல்லவா? பிரச்சினையை அன்போடு தீர்த்துக்கொள்ள வேண்டும், அல்லவா? அன்று போலவே இன்றும், கருத்து வேறுபாடுள்ள இரு சாராரும் ‘ஒருவரோடொருவர் சமாதானமாக இருக்க’ தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும்.—மாற். 9:50.
ஒருவர் உதவி கேட்டு வரும்போது
11. சக கிறிஸ்தவருடன் உள்ள பிரச்சினையைப் பற்றி ஒருவர் பேச வரும்போது மூப்பர் எதைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்?
11 ஒருவர் தன் உறவினருடனோ சக கிறிஸ்தவருடனோ ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றி ஒரு மூப்பரிடம் பேச விரும்பலாம். அப்போது மூப்பர் என்ன செய்ய வேண்டும்? “ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்” என்று நீதிமொழிகள் 21:13 சொல்கிறது. ஆகவே, மூப்பர் நிச்சயம் ‘தன் செவியை அடைத்துக்கொள்ள’ மாட்டார். என்றாலும், “வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்” என மற்றொரு நீதிமொழி எச்சரிக்கிறது. (நீதி. 18:17, பொது மொழிபெயர்ப்பு) எனவே, ஒருவர் குறைகூறும்போது மூப்பர் கரிசனையோடு கேட்க வேண்டும்; அதேசமயம், அவர் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது. விஷயத்தைக் கேட்டுவிட்டு, அவரது மனதைப் புண்படுத்தியவரிடம் பேசிவிட்டாரா எனக் கேட்கலாம். அதோடு, சமாதானத்தை நாட பைபிள்படி அவர் என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைப்பூட்டலாம்.
12. ஒருவர் சொல்வதை மட்டும் கேட்டுவிட்டு அவசர முடிவுக்கு வருவதன் ஆபத்தைக் காட்டும் உதாரணங்களைக் குறிப்பிடுங்கள்.
12 ஏதேனும் பிரச்சினையைப் பற்றி ஒருவர் சொல்வதை மட்டும் கேட்டுவிட்டு அவசர முடிவுக்கு வருவதன் ஆபத்தை மூன்று பைபிள் உதாரணங்கள் வலியுறுத்திக் காட்டுகின்றன. போத்திபார் தன் மனைவி சொன்ன கதையை நம்பி, யோசேப்பு அவளைக் கற்பழிக்கப் பார்த்ததாக நினைத்துவிட்டார்; அதனால், ஆவேசப்பட்டு யோசேப்பைச் சிறையில் தள்ளினார். (ஆதி. 39:19, 20) தன் எஜமான் மேவிபோசேத் எதிரிகளோடு சேர்ந்துவிட்டதாக சீபா சொன்னதை தாவீது ராஜா நம்பிவிட்டார். உடனடியாக சீபாவிடம், “மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று” எனச் சொல்லிவிட்டார். (2 சா. 16:4; 19:25-27) பெர்சிய சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கலகம் செய்வதற்காக யூதர்கள் எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டிவந்ததாய் அர்தசஷ்டா ராஜாவிடம் சொல்லப்பட்டபோது அவர் அந்தப் பொய்யை நம்பிவிட்டார்; உடனே, எருசலேமில் கட்டுமான வேலையை நிறுத்தும்படி ஆணையிட்டார். அதன் காரணமாக, கடவுளுடைய ஆலயத்தைக் கட்டும் பணியை யூதர்கள் நிறுத்த வேண்டியதாயிற்று. (எஸ்றா 4:11-13, 23, 24) ஆகவே, தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்கும்படி தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த அறிவுரையைக் கிறிஸ்தவ மூப்பர்கள் பின்பற்றுவது ஞானமானதாகும்.—1 தீமோத்தேயு 5:21-ஐ வாசியுங்கள்.
13, 14. (அ) மற்றவர்களுடைய பிரச்சினையைக் குறித்ததில் நாம் எந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும்? (ஆ) சக வணக்கத்தாரைச் சரியாக நியாயந்தீர்க்க மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
13 இரு சாரார் சொல்வதையும் கேட்டிருந்தால்கூட பின்வரும் உண்மையை நாம் உணர்ந்திருக்க வேண்டும்: ‘ஒருவன் ஏதோவொன்றைத் தான் அறிந்திருப்பதாக நினைத்தால், அறிந்துகொள்ள வேண்டிய அளவுக்கு அதை அவன் அறியாதிருக்கிறான்.’ (1 கொ. 8:2) ஒரு பிரச்சினை எதனால் தலைதூக்கியது என்ற முழு விவரமும் நமக்குத் தெரியுமா? அதில் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா? நியாயந்தீர்க்க நியமிக்கப்படும் மூப்பர்கள், பொய்யையோ சதித்திட்டத்தையோ வதந்தியையோ நம்பிவிடாதிருப்பது எவ்வளவு முக்கியம்! கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கிற நீதிபதியாகிய இயேசு கிறிஸ்து நியாயமாகத் தீர்ப்பளிக்கிறார். “அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்” இருக்கிறார். (ஏசா. 11:3, 4) மாறாக, கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிறார். அதேபோல் கிறிஸ்தவ மூப்பர்களும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலைப் பெறலாம்.
14 சக வணக்கத்தாரை நியாயந்தீர்ப்பதற்கு முன்பு, மூப்பர்கள் யெகோவாவின் சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும்; பைபிளையும் அடிமை வகுப்பார் வெளியிடுகிற பிரசுரங்களையும் எடுத்துப் பார்ப்பதன் மூலம் அந்தச் சக்தியின் வழிநடத்துதலைச் சார்ந்திருக்க வேண்டும்.—மத். 24:45.
சமாதானம், கடவுளுடைய நீதி —எது முக்கியம்?
15. சக கிறிஸ்தவர் ஒருவர் பெரிய பாவம் செய்துவிட்டதை நாம் அறியவந்தால் எப்போது மூப்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்?
15 சமாதானத்தை நாடிச்செல்ல வேண்டுமென கிறிஸ்தவர்களாகிய நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. என்றாலும், ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் முதலாவது சுத்தமானதாகவும், பின்பு சமாதானம் பண்ணுவதாகவும் இருக்கிறது’ எனவும் பைபிள் சொல்கிறது. (யாக். 3:17) அப்படியென்றால், சமாதானம் பண்ணுவதற்கு முன்பாக சுத்தமாய் இருப்பது அவசியம்; அதாவது, கடவுளுடைய சுத்தமான ஒழுக்க நெறிகளையும் அவரது நீதியுள்ள கட்டளைகளையும் கடைப்பிடிப்பது அவசியம். சக கிறிஸ்தவர் ஒருவர் பெரிய பாவம் செய்துவிட்டதை நாம் அறியவந்தால், அதைப் பற்றி மூப்பர்களிடம் தெரிவிக்கும்படி அவரிடம் சொல்ல வேண்டும். (1 கொ. 6:9, 10; யாக். 5:14-16) அவர் மூப்பர்களிடம் தெரிவிக்காவிட்டால், நாம் தெரிவிக்க வேண்டும். பாவம் செய்தவரோடு சமாதானமாக இருக்க வேண்டுமெனத் தவறாக நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டோம் என்றால், நாம் அந்தப் பாவத்திற்கு உடந்தையாகிவிடுவோம்.—லேவி. 5:1; நீதிமொழிகள் 29:24-ஐ வாசியுங்கள்.
16. யோராம் ராஜாவை யெகூ நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
16 பாவம் செய்கிறவரோடு சமாதானம் பண்ணுவதைவிட கடவுளுடைய நீதியைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்பதை யெகூ செய்த ஒரு காரியம் காட்டுகிறது. ஆகாப் ராஜாவின் வீட்டாரைத் தண்டிக்கும்படி கடவுள் யெகூவை அனுப்பினார். ஆகாபுக்கும் யேசபேலுக்கும் பிறந்த மகனாகிய யோராம் ராஜா ரதத்தில் போய் யெகூவைச் சந்தித்து, “யெகூவே, சமாதானமா” என்றார். அதற்கு யெகூ என்ன சொன்னார்? “உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது” என்றார். (2 இரா. 9:22) உடனே யெகூ தன் வில்லை எடுத்து, யோராமுடைய நெஞ்சில் அம்பை எய்தார். யெகூவைப் போலவே மூப்பர்களும், மனந்திரும்பாத பாவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களோடு சமாதானம் பண்ண வேண்டுமெனத் தவறாக நினைக்கக் கூடாது. மனந்திரும்பாத பாவிகளை அவர்கள் சபைநீக்கம் செய்ய வேண்டும்; அப்போதுதான், சபையிலுள்ள அனைவரும் கடவுளுடன் தொடர்ந்து சமாதானத்தை அனுபவிக்க முடியும்.—1 கொ. 5:1, 2, 11-13.
17. சமாதானத்தை நாட எல்லாக் கிறிஸ்தவர்களும் என்ன செய்ய வேண்டும்?
17 சகோதரர்களுக்கு இடையே எழும் பிரச்சினைகள் பொதுவாக நியாயவிசாரணை செய்யப்பட வேண்டிய அளவுக்குப் பெரிதாக இருப்பதில்லை. ஆகவே, மற்றவர்களுடைய குற்றங்குறைகளை அன்போடு மன்னிப்பது எவ்வளவு நல்லது! “குற்றத்தை மூடுவோன் சிநேகத்தை நாடுபவன், அதைத் திரும்பப் பேசுபவன் உயிர்த் தோழரைப் பிரிப்பான்” என பைபிள் சொல்கிறது. (நீதி. 17:9, திருத்திய மொழிபெயர்ப்பு) இந்த வார்த்தைகளுக்கு இசைவாக நடப்பது, சபையின் சமாதானத்தைக் கட்டிக்காக்கவும் யெகோவாவுடன் நல்ல உறவைக் காத்துக்கொள்ளவும் நம் அனைவருக்கும் உதவும்.—மத். 6:14, 15.
சமாதானத்தை நாடுவதால் வரும் ஆசீர்வாதங்கள்
18, 19. சமாதானத்தை நாடுவதால் வரும் ஆசீர்வாதங்கள் யாவை?
18 “சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை” நாம் நாடினால் அளவில்லா ஆசீர்வாதங்களைப் பெறுவோம். யெகோவாவின் வழியில் நடந்து அவருடன் நெருங்கிய பந்தத்தை அனுபவிப்போம்; அதோடு, நம் சபையின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்களிப்போம். சபையில் உள்ளவர்களோடு சமாதானத்தை நாடுவது, ‘சமாதானத்தின் நற்செய்தியை’ நாம் அறிவிக்கிறவர்களோடும் சமாதானத்தை நாட நமக்கு உதவும். (எபே. 6:15) இவ்வாறு, ‘எல்லாரிடமும் மென்மையாய் நடந்துகொள்ளவும் . . . தீங்கைப் பொறுத்துக்கொள்ளவும்’ தேவையான பக்குவத்தைப் பெற நமக்கு உதவும்.—2 தீ. 2:24.
19 “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்பதையும் நினைவில் வையுங்கள். (அப். 24:15) இந்த வாக்குறுதி நிஜமாகும்போது, பல்வேறு பின்னணிகளையும் சுபாவங்களையும் ஆளுமைகளையும் உடைய லட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுந்து வருவார்கள்; அதுவும், ‘உலகம் உண்டான’ காலத்திலிருந்து வாழ்ந்துவந்தவர்கள் வருவார்கள். (லூக். 11:50, 51) சமாதானம் பண்ணுவதற்கான வழிகளைப் பற்றி இவர்களுக்குக் கற்றுத்தருவது நமக்குக் கிடைக்கும் பெரிய பாக்கியமாக இருக்கும். சமாதானம் பண்ண இப்போது நாம் பெறுகிற பயிற்சி, அந்தச் சமயத்தில் எப்பேர்ப்பட்ட உதவியாக இருக்கும்!
[அடிக்குறிப்பு]
a பழிதூற்றுதல், மோசடி போன்ற பெரிய பாவங்களை எப்படிக் கையாளலாம் என்பதற்கான வேதப்பூர்வ அறிவுரைக்கு அக்டோபர் 15, 1999 காவற்கோபுரம், பக்கங்கள் 17-22-ஐக் காண்க.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• நாம் ஒருவரது மனதைப் புண்படுத்திவிட்டால் எவ்வாறு சமாதானத்தை நாடலாம்?
• நம் மனதை ஒருவர் புண்படுத்திவிட்டால் நாம் எவ்வாறு சமாதானத்தை நாடலாம்?
• மற்றவர்களுடைய பிரச்சினையில் ஒரு பக்கமாக சாய்வது ஏன் புத்திசாலித்தனம் அல்ல?
• பாவம் செய்கிறவரோடு சமாதானம் பண்ணுவதைவிட கடவுளுடைய நீதியைக் கடைப்பிடிப்பது ஏன் முக்கியம் என விளக்குங்கள்.
[பக்கம் 29-ன் படங்கள்]
மற்றவர்களை மனதார மன்னிப்போரை யெகோவா நேசிக்கிறார்