ஆன்மீக ரீதியில் முன்னேற ஆண்களுக்கு உதவுங்கள்
“இதுமுதல் நீ மனிதர்களை உயிருடன் பிடிப்பாய்.”—லூக். 5:10.
1, 2. (அ) இயேசுவின் போதனைக்கு ஆண்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி ஆராய்வோம்?
கலிலேயா எங்கும் பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது ஒருசமயம் இயேசுவும் அவரது சீடர்களும் படகில் ஏறி தனிமையான ஓரிடத்திற்குச் சென்றார்கள். ஆனால், அங்கேயும் திரளான மக்கள் கால்நடையாக வந்துவிட்டார்கள். அன்று “பெண்களும் சிறுபிள்ளைகளும் தவிர, சுமார் ஐயாயிரம் ஆண்கள்” வந்திருந்தார்கள். (மத். 14:21) மற்றொரு சந்தர்ப்பத்தில், குணமாவதற்காகவும் சொற்பொழிவைக் கேட்பதற்காகவும் மக்கள் இயேசுவிடம் திரண்டு வந்தார்கள். அவர்களில் “பெண்களும் சிறுபிள்ளைகளும் தவிர, நாலாயிரம் ஆண்கள்” இருந்தார்கள். (மத். 15:38) அப்படியென்றால், இயேசுவின் போதனையை ஆர்வத்துடன் கேட்க வந்திருந்தவர்களில் அநேக ஆண்களும் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால், இன்னும் அநேகர் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என அவர் எதிர்பார்த்தார்; ஏனென்றால், அற்புதமாக மீன்களைப் பிடிக்க உதவியபின், தமது சீடராகிய சீமோனிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “இதுமுதல் நீ மனிதர்களை உயிருடன் பிடிப்பாய்.” (லூக். 5:10) அவரது சீடர்கள் மனிதவர்க்கம் எனும் கடலில் வலைகளை வீசும்போது, ஆண்கள் உட்பட அநேகரை ‘பிடிப்பார்கள்’ என இயேசு அர்த்தப்படுத்தினார்.
2 அதேபோல் இன்றும் நாம் சொல்கிற பைபிள் செய்தியை ஆண்கள் ஆர்வமாய்க் கேட்டு ஏற்றுக்கொள்கிறார்கள். (மத். 5:3) இருந்தாலும், அவர்களில் பலர் பின்வாங்குகிறார்கள், ஆன்மீக ரீதியில் முன்னேறத் தவறுகிறார்கள். அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? ஆண்களைத் தேடிக் கண்டுபிடிக்க இயேசு எந்தவொரு விசேஷ ஊழியத்தையும் ஏற்பாடு செய்யாதபோதிலும் அன்றைய நாளில் வாழ்ந்த ஆண்களுடைய பிரச்சினைகளைப் பற்றி அவர் பேசினார். அவரது முன்மாதிரியைப் பின்பற்றி, இன்றைக்கு ஆண்களுக்குப் பொதுவாக உள்ள மூன்று பிரச்சினைகளைச் சமாளிக்க நாம் எப்படி உதவலாம் என்பதை ஆராயலாம்; அதாவது (1) பிழைப்புக்காகச் சம்பாதிப்பதை, (2) மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தை, (3) தகுதியில்லை என்ற எண்ணத்தைச் சமாளிக்க எப்படி உதவலாம் என்பதை நாம் ஆராயலாம்.
பிழைப்புக்காகச் சம்பாதிப்பது
3, 4. (அ) ஆண்கள் பெரும்பாலோர் எதை முக்கியமாகக் கருதுகிறார்கள்? (ஆ) ஏன் ஆண்களில் சிலர் ஆன்மீகக் காரியங்களைவிட பணம் சம்பாதிப்பதற்கே முதலிடம் தருகிறார்கள்?
3 “போதகரே, நீங்கள் எங்கே போனாலும் நான் உங்கள் பின்னால் வருவேன்” என வேத அறிஞன் ஒருவன் இயேசுவிடம் கூறினான். ஆனால் இயேசு அவனிடம், “மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்று சொன்னபோது அவரைப் பின்பற்றுவதா என யோசிக்க ஆரம்பித்தான். அவன் இயேசுவின் சீடரானான் என்பதாக பைபிள் குறிப்பிடுவதில்லை. ஆகவே, அடுத்த வேளை சாப்பாடு எப்படிக் கிடைக்கும்... எங்கே தங்குவது... என்பதைக் குறித்து எந்த நிச்சயமும் இல்லாததால் அவரைப் பின்பற்றுவதைக் கஷ்டமாகக் கண்டான் எனத் தெரிகிறது.—மத். 8:19, 20.
4 ஆண்கள் பெரும்பாலோர் ஆன்மீகக் காரியங்களைவிட பொருளாதார காரியங்களையே முக்கியமாகக் கருதுகிறார்கள். அவர்களில் பலர் உயர் கல்விக்கும் கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலைக்குமே முதலிடம் தருகிறார்கள். பைபிளைப் படித்து கடவுளுடன் நெருங்கிய பந்தத்தை வளர்ப்பதைவிட பணம் சம்பாதிப்பதையே அவர்கள் அவசரத் தேவையாக, நடைமுறையானதாக நினைக்கிறார்கள். பைபிள் சொல்வது அவர்களுடைய மனதைக் கவரலாம், ஆனால் “இவ்வுலகத்தின் கவலைகளும், செல்வத்தின் வஞ்சக சக்தியும்” அவர்களுடைய ஆர்வத்தை நெருக்கிப் போடுகின்றன. (மாற். 4:18, 19) முக்கியமானவற்றிற்கு முதலிடம் கொடுக்க சீடர்களுக்கு இயேசு எப்படி உதவினார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
5, 6. பிழைப்புக்காகச் சம்பாதிப்பதைவிட பிரசங்க வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு எது உதவியது?
5 அந்திரேயாவும் அவரது சகோதரன் சீமோன் பேதுருவும் மீன்பிடி தொழிலைக் கூட்டாகச் செய்துவந்தார்கள். அது போலத்தான் யோவானும் அவரது சகோதரன் யாக்கோபும் அவர்களுடைய தகப்பன் செபெதேயுவும் செய்துவந்தார்கள். வேலைக்கு ஆட்களை அமர்த்தும் அளவுக்கு அவர்களுடைய தொழில் ஓகோவென ஓடிக்கொண்டிருந்தது. (மாற். 1:16-20) அந்திரேயாவும் யோவானும் இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகரிடமிருந்து முதலில் தெரிந்துகொண்டவுடன், மேசியாவைக் கண்டுகொண்டதாக உறுதியாய் நம்பினார்கள். அந்திரேயா இந்தச் செய்தியைத் தன் சகோதரன் சீமோன் பேதுருவுக்குத் தெரிவித்தார், அதுபோல் யோவானும் தன் சகோதரன் யாக்கோபுக்கு இதைத் தெரிவித்திருக்கலாம். (யோவா. 1:29, 35-41) அடுத்துவந்த மாதங்களில், இயேசு கலிலேயாவிலும் யூதேயாவிலும் சமாரியாவிலும் பிரசங்கித்தபோது அந்த நான்கு பேரும் அவருடன் நேரம் செலவழித்தார்கள். அதன்பின் அவர்கள் எல்லாரும் மீண்டும் மீன்பிடி தொழிலுக்கே திரும்பிவிட்டார்கள். ஆன்மீகக் காரியங்கள்மீது அவர்களுக்கு ஆர்வம் இருந்தது, ஆனால் அவர்கள் ஊழியத்திற்கு முதலிடம் கொடுக்கவில்லை.
6 சில காலத்திற்குப்பின், தம்மைப் பின்பற்றி ‘மனிதர்களைப் பிடிக்க’ பேதுருவையும் அந்திரேயாவையும் இயேசு அழைத்தார். அந்த இரண்டு பேரும் என்ன செய்தார்கள்? “அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு, அவருக்குப் பின்னால் போனார்கள்.” யாக்கோபும் யோவானும்கூட இப்படித்தான் செய்தார்கள். “உடனடியாகப் படகையும் தங்களுடைய தகப்பனையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.” (மத். 4:18-22) முழுநேர ஊழியத்தில் ஈடுபட இவர்கள் எல்லாருக்கும் எது உதவியது? இது ஏதோ உணர்ச்சிவயப்பட்டு கணநேரத்தில் எடுத்த முடிவா? இருக்கவே முடியாது! கடந்த மாதங்களில், இவர்கள் இயேசு சொன்னதைச் செவிகொடுத்துக் கேட்டிருந்தார்கள், அற்புதங்கள் செய்ததைப் பார்த்திருந்தார்கள், நீதிக்காகப் பக்திவைராக்கியம் காட்டியதைக் கவனித்திருந்தார்கள், அவரது பிரசங்கத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்ததைக் கண்ணாரக் கண்டிருந்தார்கள். அதனால், யெகோவாமீது அவர்களுக்கு இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் உறுதியாயின!
7. யெகோவா தமது மக்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார் என்பதில் நம்பிக்கை வைக்க நம் பைபிள் மாணாக்கர்களுக்கு எப்படி உதவலாம்?
7 நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றி யெகோவாமீது நம்பிக்கை வைக்க பைபிள் மாணாக்கர்களுக்கு உதவலாம்? (நீதி. 3:5, 6) நாம் கற்பிக்கும் விதம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். கற்பிக்கும்போது, ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்போரைக் கடவுள் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்பதைச் சிறப்பித்துக் காட்டலாம். (மல்கியா 3:10-ஐயும் மத்தேயு 6:33-ஐயும் வாசியுங்கள்.) யெகோவா தமது மக்களுக்குத் தேவையானவற்றைத் தருகிறார் என்பதைக் காட்டுவதற்கு நாம் பல்வேறு வசனங்களைப் பயன்படுத்தலாம், என்றாலும் நம்முடைய சிறந்த முன்மாதிரிகூட அவர்களைக் கவரும் என்பதை மறந்துவிடக்கூடாது. நம்முடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது யெகோவாமீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவும். நம் பிரசுரங்களில் உள்ள ஊக்கமூட்டும் அனுபவங்களையும்கூட அவர்களுக்கு நாம் சொல்லலாம்.a
8. (அ) ‘கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பார்ப்பது’ பைபிள் மாணாக்கருக்கு ஏன் முக்கியம்? (ஆ) யெகோவாவின் நற்குணத்தைத் தனிப்பட்ட விதமாக அனுபவிக்க மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம்?
8 பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு, மற்றவர்கள் எப்படி யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி வாசிப்பதோ கேட்பதோ மட்டும் போதாது. யெகோவாவின் நற்குணத்தை பைபிள் மாணாக்கர் தனிப்பட்ட விதமாக அனுபவித்துப் பார்க்கவும் வேண்டும். சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங். 34:8) யெகோவா நல்லவர் என்பதை மாணாக்கர் தெரிந்துகொள்ள நாம் எப்படி உதவலாம்? பணக் கஷ்டங்களை எதிர்ப்படுகிற மாணாக்கர் ஒருவர் புகைபிடிப்பது, சூதாடுவது, குடிப்பது போன்ற ஏதோவொரு கெட்ட பழக்கத்தை விட்டொழிக்கப் போராடிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். (நீதி. 23:20, 21; 2 கொ. 7:1; 1 தீ. 6:10) அதைக் குறித்து ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பது யெகோவாவின் நற்குணத்தை அனுபவத்தில் காண அவருக்கு உதவி செய்யும், அல்லவா? ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க மாணாக்கரை உந்துவிக்கும்போது, அதாவது வாராந்தர பைபிள் படிப்புக்கும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்காகத் தயாரித்து ஆஜராவதற்கும் நேரம் ஒதுக்கத் தூண்டும்போது, கிடைக்கும் பலனைச் சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதை அவர் சொந்த அனுபவத்தில் காணும்போது அவரது விசுவாசம் உறுதியாகும்!
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம்
9, 10. (அ) நிக்கொதேமுவும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பும் ஏன் மற்றவர்களுக்குத் தெரியாமல் இயேசுமீது விசுவாசம் வைத்துவந்தார்கள்? (ஆ) கிறிஸ்துவைப் பின்பற்ற இன்றைக்கு ஆண்கள் சிலர் ஏன் தயங்குகிறார்கள்?
9 நண்பர்களுடைய தொல்லையின் காரணமாகச் சில ஆண்கள் கிறிஸ்துவை முழுமையாகப் பின்பற்றத் தயங்கலாம். நிக்கொதேமுவும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பும் மற்ற யூதர்களுக்குத் தெரியாமல் இயேசுமீது விசுவாசம் வைத்துவந்தார்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ ஏது செய்வார்களோ எனப் பயந்தார்கள். (யோவா. 3:1, 2; 19:38) அவ்விருவரும் பயப்பட்டதற்குக் காரணம் இருந்தது. இயேசுவை மதத் தலைவர்கள் மிகவும் பகைத்ததால் அவர்மீது விசுவாசம் வைத்திருப்பதாகச் சொன்ன எவரையும் ஜெபக்கூடத்தைவிட்டு விலக்கினார்கள்.—யோவா. 9:22.
10 இன்று சில இடங்களில், கடவுள் மீதோ பைபிள் மீதோ மதத்தின் மீதோ ஓர் ஆண் அதிக ஆர்வம் காட்டினால் அவரைச் சக வேலையாட்கள், நண்பர்கள், அல்லது உறவினர்கள் தொல்லை செய்யலாம். வேறு சில இடங்களில், ஒருவர் மதம் மாறுவதைப் பற்றிப் பேசுவதே ஆபத்தாக இருக்கலாம். முக்கியமாக, ராணுவத்திலோ அரசியலிலோ சமூக சேவையிலோ தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்குச் சகாக்களிடமிருந்து தொல்லைகள் மிக அதிகமாய் வரலாம். உதாரணமாக, ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “சாட்சிகளாகிய நீங்கள் பைபிளிலிருந்து சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால், இன்றைக்கு நானும் ஒரு சாட்சியாக மாறினால், நாளைக்கு அது எல்லாருக்கும் தெரியவரும். என்னோடு வேலை செய்கிறவர்களும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும், குடும்ப நண்பர்களும் என்ன நினைப்பார்கள்? என்னால் அதையெல்லாம் சமாளிக்க முடியாது.”
11. மனித பயத்தை விட்டுவிட இயேசு எப்படித் தமது சீடர்களுக்கு உதவினார்?
11 இயேசுவின் அப்போஸ்தலர்களில் யாருமே கோழைகளாக இல்லாவிட்டாலும் மனித பயத்தை விட்டுவிட போராடிக்கொண்டுதான் இருந்தார்கள். (மாற். 14:50, 66-72) மற்றவர்களிடமிருந்து அவர்களுக்குப் பயங்கர அழுத்தங்கள் வந்தபோதிலும் தொடர்ந்து முன்னேறுவதற்கு இயேசு எப்படி உதவினார்? பிற்காலத்தில் அவர்களுக்கு வரவிருந்த எதிர்ப்பைச் சமாளிக்க இயேசு அவர்களைத் தயார்படுத்தினார். “மனிதகுமாரனின் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, உங்களை விலக்கி வைத்து, அவதூறாகப் பேசி, பொல்லாதவர்கள் என்று சொல்லி உங்கள் பெயரைக் கெடுக்கும்போது சந்தோஷப்படுங்கள்” என்று சொன்னார். (லூக். 6:22) தம்மைப் பின்பற்றுகிறவர்கள் அவதூறைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்தார். என்றாலும், அந்த அவதூறை “மனிதகுமாரனின் பொருட்டு” அவர்கள் சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். உதவிக்காகவும் பலத்திற்காகவும் அவர்கள் கடவுளைச் சார்ந்திருக்கும்வரை கடவுள் அவர்களை ஆதரிப்பார் என உறுதியும் அளித்தார். (லூக். 12:4-12) அதோடு, தமது சீடர்களுடன் தயங்காமல் பழகும்படியும் அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும்படியும் புதியவர்களுக்கு இயேசு அழைப்பு விடுத்தார்.—மாற். 10:29, 30.
12. மனித பயத்தைப் போக்கிக்கொள்ள புதியவர்களுக்கு என்னென்ன விதங்களில் உதவலாம்?
12 மனித பயத்தைப் போக்கிக்கொள்ள பைபிள் மாணாக்கர்களுக்கு நாமும் உதவி செய்ய வேண்டும். ஒரு சவாலை எதிர்பார்த்திருக்கும்போது அதைச் சமாளிப்பது பெரும்பாலும் எளிதாக இருக்கும். (யோவா. 15:19) உதாரணமாக, சக பணியாளர்களோ மற்றவர்களோ ஒருவேளை கேட்கக்கூடிய கேள்விகளுக்கும் தெரிவிக்கக்கூடிய ஆட்சேபணைகளுக்கும் எளிய முறையில்... நியாயமான விதத்தில்... பைபிள் அடிப்படையில்... எப்படிப் பதிலளிக்கலாம் என்பதை மாணாக்கருக்குச் சொல்லிக்கொடுக்கலாம், அல்லவா? நாம்தாமே அவருக்கு ஒரு நண்பராக இருப்பதோடு, அவரைச் சபையிலுள்ள மற்றவர்களிடம், முக்கியமாக அவருடைய பின்னணியைச் சேர்ந்தவர்களிடம், அறிமுகப்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, தவறாமலும் இதயத்திலிருந்தும் ஜெபிக்க நாம் அவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இது, யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு... அவரை அடைக்கலமாகவும் கன்மலையாகவும் ஆக்கிக்கொள்வதற்கு... அவருக்கு உதவும்.—சங்கீதம் 94:21-23-ஐயும் யாக்கோபு 4:8-ஐயும் வாசியுங்கள்.
தகுதியில்லை என்ற எண்ணம்
13. தகுதியில்லை என்ற எண்ணம் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து சிலரை எப்படித் தடுக்கலாம்?
13 ஆண்கள் சிலர் தங்களுக்கு நன்றாக வாசிக்கவோ சரளமாகப் பேசவோ தெரியாது என நினைப்பதால், அல்லது வெட்கப்படுவதால், ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடத் தயங்குகிறார்கள். வேறு சில ஆண்கள், நாலு பேருக்கு நடுவில் தங்களுடைய கருத்துகளையோ உணர்ச்சிகளையோ வெளிப்படுத்த சங்கோஜப்படுகிறார்கள். படிப்பது... கூட்டங்களில் பதில் சொல்வது... தங்களுடைய நம்பிக்கையைப் பற்றிப் பிறரிடம் பேசுவது... என்றாலே மலையைக் கட்டி இழுப்பது போல் நினைத்துவிடுகிறார்கள். சகோதரர் ஒருவர் தான் ஊழியம் செய்யக் கஷ்டப்பட்டதைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “நான் சின்ன பையனாக இருந்த சமயத்தில், யாரும் கேட்கவோ பார்க்கவோ மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், வேகமாகக் கதவின் அருகே சென்று, காலிங் பெல்லை அடிப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு, சப்தமில்லாமல் திரும்பி வந்துவிடுவேன். . . . வீட்டுக்கு வீடு போய் பிரசங்கம் செய்வதை நினைத்தாலே எனக்குக் காய்ச்சல் வந்துவிடும்.”
14. பேய் பிடித்த சிறுவனை ஏன் இயேசுவின் சீடர்களால் குணப்படுத்த முடியவில்லை?
14 பேய் பிடித்த ஒரு சிறுவனைக் குணப்படுத்த முடியாமல் போனபோது இயேசுவின் சீடர்கள் எப்படித் தன்னம்பிக்கையை இழந்திருப்பார்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சிறுவனுடைய தகப்பன் இயேசுவிடம் வந்து இவ்வாறு சொன்னார்: ‘என் மகன் . . . காக்காய்வலிப்பினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறான்; அவனுடைய நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது; அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் விழுந்துவிடுகிறான்; நான் அவனை உங்கள் சீடர்களிடம் கொண்டுவந்தேன், அவனை அவர்களால் குணப்படுத்த முடியவில்லை.’ இயேசு அந்தப் பேயை விரட்டி அந்தச் சிறுவனைக் குணப்படுத்தினார். பிற்பாடு சீடர்கள் இயேசுவிடம் வந்து, “எங்களால் ஏன் அந்தப் பேயை விரட்ட முடியவில்லை?” என்று கேட்டார்கள். அப்போது அவர், “உங்களுக்கு விசுவாசம் இல்லாததுதான் அதற்குக் காரணம்; உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட, இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கே போ’ என்று சொன்னால், அது பெயர்ந்துபோகும்; உங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது” என்றார். (மத். 17:14-20) மலைபோன்ற தடங்கல்களைச் சமாளிக்க யெகோவாமீது விசுவாசம் தேவை. இதை மறந்துவிட்டுத் தன்னுடைய சொந்த திறமைகள் மீதே ஒருவர் மனதை ஒருமுகப்படுத்தினால் என்னவாகும்? தோல்வியைத் தழுவுவார், அதனால் தன்னம்பிக்கையை இழப்பார்.
15, 16. தகுதியில்லை என்ற எண்ணத்தைப் போக்கிக்கொள்ள பைபிள் மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம்?
15 தகுதியில்லை என்ற எண்ணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு உதவ சிறந்த வழி, தன்னைப் பற்றியே யோசிக்காமல் யெகோவாவைப் பற்றி யோசிக்க அவரை உற்சாகப்படுத்துவதாகும். பேதுரு இவ்வாறு எழுதினார்: “ஏற்ற வேளையில் கடவுள் உங்களை உயர்த்தும்படி, அவருடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். . . . உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பே. 5:6, 7) அப்படியென்றால், ஆன்மீக ரீதியில் வளர பைபிள் மாணாக்கருக்கு நாம் உதவி செய்ய வேண்டும். ஆன்மீக ஆர்வப்பசியுள்ள ஒருவர் ஆன்மீகக் காரியங்களை உயர்வாக மதிக்கிறார். கடவுளுடைய வார்த்தையை நேசிக்கிறார், ‘கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்களை’ வெளிக்காட்டுகிறார். (கலா. 5:22, 23) தவறாமல் ஜெபம் செய்கிற நபராக இருக்கிறார். (பிலி. 4:6, 7) அதோடு, எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க அல்லது எந்த நியமிப்பையும் செய்து முடிக்கத் தேவையான தைரியத்திற்காக... பலத்திற்காக... கடவுளையே சார்ந்திருக்கிறார்.—2 தீமோத்தேயு 1:7, 8-ஐ வாசியுங்கள்.
16 வாசிக்கும் திறமையையும் பேச்சுத் திறமையையும் வளர்த்துக்கொள்ள மாணாக்கர்கள் சிலருக்கு நடைமுறையான உதவி தேவைப்படலாம். மற்றவர்களோ யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னால் சில கெட்ட செயல்களைச் செய்திருக்கலாம்; அதனால், அவரைச் சேவிக்கத் தங்களுக்குத் தகுதியில்லை என நினைக்கலாம். எப்படி இருந்தாலும்சரி, நாம் அன்புடனும் பொறுமையுடனும் தரும் உதவியே அவர்களுக்குத் தேவை. “ஆரோக்கியமானவர்களுக்கு அல்ல, நோயாளிகளுக்கே மருத்துவர் தேவை” என்று இயேசு கூறினார்.—மத். 9:12.
இன்னும் அநேக ஆண்களைப் ‘பிடியுங்கள்’
17, 18. (அ) நாம் ஊழியத்தில் எப்படி இன்னும் அநேக ஆண்களைக் கண்டுபிடிக்கலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி ஆராய்வோம்?
17 பைபிளில் மட்டுமே காணப்படும் பூரண திருப்தியளிக்கும் செய்திக்கு இன்னும் அநேக ஆண்கள் செவிகொடுக்க வேண்டும் என்பதுதான் நம் ஆசை. (2 தீ. 3:16, 17) அப்படியென்றால், ஊழியத்தில் எப்படி இன்னும் அதிக ஆண்களைக் கண்டுபிடிக்கலாம்? அநேக ஆண்கள் வீட்டில் இருக்கும் மாலை வேளைகளில்... வாரயிறுதி நாட்களின் பிற்பகல் வேளைகளில்... விடுமுறை நாட்களில்... சாட்சி கொடுப்பதற்கு அதிக நேரத்தைச் செலவிடுவதன் மூலமே. முடிந்தால், குடும்பத் தலைவரிடம் பேசலாமா எனக் கேட்கலாம். பொருத்தமான சமயங்களில், உடன் வேலை செய்யும் ஆண்களிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம்; அதோடு, சத்தியத்தில் இல்லாத கணவர்களைச் சந்தித்துப் பேசலாம்.
18 நாம் சந்திக்கும் எல்லாரிடமும் சாட்சி கொடுக்கும்போது, நல்ல உள்ளம் படைத்தவர்கள் செவிகொடுத்துக் கேட்பார்கள் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கலாம். சத்தியத்தின் மீது உள்ளப்பூர்வமான ஆர்வம் காட்டுகிற அனைவருக்கும் பொறுமையுடன் உதவி செய்வோமாக. ஆனால், கடவுளுடைய அமைப்பில் பொறுப்புகளைக் கையாளுவதற்குத் தகுதிபெற, ஞானஸ்நானம் பெற்ற ஆண்களுக்கு எப்படி உதவலாம்? இந்தக் கேள்விக்கு அடுத்த கட்டுரை பதிலளிக்கும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் மற்றும் காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களில் வெளிவந்துள்ள வாழ்க்கை சரிதைகளைக் காண்க.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க ஆண்களுக்கு எப்படி உதவலாம்?
• சகாக்களின் தொல்லையைச் சமாளிக்கப் புதியவர்களுக்கு எப்படி உதவலாம்?
• தகுதியில்லை என்ற எண்ணத்தைப் போக்கிக்கொள்ள சிலருக்கு எது உதவும்?
[பக்கம் 25-ன் படம்]
ஆண்களுக்கு நற்செய்தியைச் சொல்ல வாய்ப்புகளைத் தேடுகிறீர்களா?
[பக்கம் 26-ன் படம்]
சோதனைகளைச் சந்திக்க பைபிள் மாணாக்கரை நீங்கள் எப்படித் தயார்படுத்தலாம்?