தகுதிபெற மற்றவர்களைப் பயிற்றுவியுங்கள்
“முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட எவனும் தன் ஆசிரியரைப் போலவே இருப்பான்.”—லூக். 6:40.
1. இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது மிகச் சிறந்த ஒரு சபைக்கு எப்படி அஸ்திவாரத்தைப் போட்டார்?
அப்போஸ்தலன் யோவான் தான் எழுதிய சுவிசேஷத்தைப் பின்வரும் வார்த்தைகளோடு முடித்தார்: “இயேசு வேறுபல காரியங்களையும் செய்தார்; அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் சுருள்களை உலகமே கொள்ளாது என்று நினைக்கிறேன்.” (யோவா. 21:25) இயேசு சில வருடங்களே ஊழியத்தில் ஈடுபட்டிருந்தாலும் மிகக் கடினமாக உழைத்தார்; அப்போது, ஆண்களைக் கண்டுபிடித்து, பயிற்றுவித்து, ஒழுங்கமைத்தார்; இந்த ஆண்களே அவர் பூமியிலிருந்து சென்ற பிறகு அவரது வேலையை முன்நின்று நடத்தவிருந்தார்கள். அவர் கி.பி. 33-ல் பரலோகத்திற்குத் திரும்பியபோது, மிகச் சிறந்த ஒரு சபைக்கு அஸ்திவாரத்தைப் போட்டிருந்தார்; அதன் அங்கத்தினர்கள் மளமளவென அதிகரித்து எண்ணிக்கையில் ஆயிரங்களைத் தொடவிருந்தார்கள்.—அப். 2:41, 42; 4:4; 6:7.
2, 3. (அ) ஞானஸ்நானம் பெற்ற சகோதரர்கள் சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறுவது ஏன் அவசரத் தேவையாய் இருக்கிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
2 இன்று உலகெங்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சபைகள் இருக்கின்றன; இவற்றிலுள்ள 70 லட்சத்திற்கும் அதிகமானோர் நற்செய்தியை அறிவித்து வருகிறார்கள்; இவர்களை ஆன்மீக ரீதியில் வழிநடத்த சகோதரர்கள் தொடர்ந்து தேவைப்படுகிறார்கள். முக்கியமாக, மூப்பர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். இதற்குத் தகுதிபெற முயலுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள்; ஏனென்றால், அவர்கள் ‘சிறந்த வேலையை விரும்புகிறார்கள்.’—1 தீ. 3:1.
3 என்றாலும், சபையில் பொறுப்புகளை ஏற்க சகோதரர்கள் தானாகவே தகுதி பெற்றுவிடுவதில்லை. இப்படிப்பட்ட வேலைக்கு ஒருவருடைய படிப்பறிவோ வாழ்க்கை அனுபவமோ முக்கியமில்லை. இந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்வதற்கு அவர் ஆன்மீகத் தகுதிகளைப் பெற வேண்டும். அவருக்குத் திறமைகள் இருக்கலாம், பல காரியங்களைச் சாதித்திருக்கலாம், என்றாலும் கடவுள் எதிர்பார்க்கிற குணங்கள் முக்கியமாக அவரிடம் இருக்க வேண்டும். இப்படித் தகுதிபெற சபையிலுள்ள சகோதரர்களுக்கு எப்படி உதவலாம்? “முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட்ட எவனும் தன் ஆசிரியரைப் போலவே இருப்பான்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:40) இந்தக் கட்டுரையில், எஜமானரும் போதகருமான இயேசு, அதிக பொறுப்புகளை ஏற்க தம்முடைய சீடர்களுக்கு உதவிய சில வழிகளைப் பற்றிச் சிந்திப்போம்; அதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் சிந்திப்போம்.
“நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன்”
4. இயேசு எவ்வாறு தம் சீடர்களுக்கு உற்ற நண்பராய் இருந்தார்?
4 இயேசு தம்முடைய சீடர்களை நண்பர்களாக நடத்தினார், தம்மைவிடத் தாழ்வானவர்களாக நடத்தவில்லை. அவர்களுடன் நேரம் செலவிட்டார், அவர்கள்மீது நம்பிக்கை வைத்தார், ‘தம்முடைய தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.’ (யோவான் 15:15-ஐ வாசியுங்கள்.) “உங்களுடைய பிரசன்னத்திற்கும் இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?” என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதிலளித்தபோது அவர்கள் எவ்வளவாய்ப் பூரித்துப் போயிருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். (மத். 24:3, 4) தாம் என்ன நினைக்கிறார், எப்படி உணருகிறார் என்பதைக்கூட அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். உதாரணத்திற்கு, இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவன்று, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கெத்செமனே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்; அங்கே ஊக்கமாய் ஜெபம் செய்தார். தாம் மனக்கலக்கத்தில் இருந்ததை அவர் அந்த மூவரிடமிருந்தும் மறைக்கவில்லை; அவர் மிகுந்த வேதனையில் இருந்ததை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். (மாற். 14:33-38) இதற்கு முன்பு இயேசு தோற்றம் மாறிய காட்சியைப் பார்த்தபோது அந்த மூவரும் எந்தளவுக்குப் பலப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்பதையும்கூட சிந்தித்துப் பாருங்கள். (மாற். 9:2-8; 2 பே. 1:16-18) தம்முடைய சீடர்களுடன் இயேசு வைத்திருந்த நெருங்கிய நட்பு, பின்னர் முக்கியமான பொறுப்புகளைக் கையாள அவர்களுக்குத் தேவையான பலத்தை அளித்தது.
5. கிறிஸ்தவ மூப்பர்கள் என்ன விதங்களில் மற்றவர்களுக்கு உதவ முன்வரலாம்?
5 இயேசுவைப் போல இன்று கிறிஸ்தவ மூப்பர்களும் மற்றவர்களை நண்பர்களாக நடத்தி, அவர்களுக்கு உதவுகிறார்கள். சக விசுவாசிகளிடம் தனிப்பட்ட அக்கறை காட்ட நேரத்தை ஒதுக்குவதன் மூலம் அவர்களுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். ரகசியமாக வைக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி மூப்பர்கள் பேசுவதில்லை என்றாலும் மற்ற விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசாதிருப்பதில்லை. அவர்கள் தங்களுடைய சகோதரர்களை நம்புகிறார்கள், தாங்கள் கற்றறிந்த பைபிள் சத்தியங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். தங்களைவிட வயதில் குறைந்த உதவி ஊழியர்களை எந்த விதத்திலும் தாழ்வானவர்களாக நடத்துவதில்லை. மாறாக, திறமைகளைப் பெற்றிருக்கிற ஆன்மீக நபர்களாக... சபையின் சார்பாக மதிப்புமிக்க சேவை செய்கிறவர்களாக... கருதுகிறார்கள்.
“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”
6, 7. இயேசு தம்முடைய சீடர்களுக்கு எத்தகைய முன்மாதிரி வைத்தார், அது சீடர்கள்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்குங்கள்.
6 இயேசுவின் சீடர்கள் ஆன்மீகக் காரியங்களுக்கு மதிப்புக் காட்டியபோதிலும் அவர்களுடைய பின்னணியும் கலாச்சாரமும் சில சமயங்களில் அவர்கள் சிந்தித்த விதத்தைப் பாதித்தன. (மத். 19:9, 10; லூக். 9:46-48; யோவா. 4:27) என்றாலும், இயேசு அதற்காக அவர்களைத் திட்டவில்லை அல்லது கோபித்துக்கொள்ளவில்லை. அவர்களால் செய்ய முடியாத எதையும் அவர் செய்யச் சொல்லவில்லை; அதோடு, தாம் செய்யாத எதையும் அவர்களை மட்டும் செய்யச் சொல்லவில்லை. மாறாக, இயேசு தம் முன்மாதிரியின் வாயிலாக அவர்களுக்குக் கற்பித்தார்.—யோவான் 13:15-ஐ வாசியுங்கள்.
7 இயேசு தம் சீடர்களுக்கு எப்படிப்பட்ட முன்மாதிரியை வைத்துவிட்டுப் போனார்? (1 பே. 2:21) தம்முடைய ஊழியத்திற்கு இடையூறு வராதிருக்க அவர் தம் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டார். (லூக். 9:58) அவர் அடக்கமானவராக இருந்தார்; எப்போதும் வேதவசனங்களின் அடிப்படையிலேயே கற்பித்தார். (யோவா. 5:19; 17:14, 17) அணுகத்தக்கவராகவும் கனிவானவராகவும் இருந்தார். எல்லாவற்றையும் அன்பினால் தூண்டப்பட்டே செய்தார். (மத். 19:13-15; யோவா. 15:12) இயேசுவின் முன்மாதிரி அவருடைய அப்போஸ்தலர்கள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு, யாக்கோபு மரணத்தைக் கண்டு பயப்படவில்லை; மாறாக, கொலை செய்யப்படும்வரை கடவுளுக்கு உண்மையாய்ச் சேவை செய்தார். (அப். 12:1, 2) யோவான் 60 வருடங்களுக்கும் மேலாக இயேசுவின் அடிச்சுவடுகளை உண்மையாய்ப் பின்பற்றினார்.—வெளி. 1:1, 2, 9.
8. வயதில் இளைய சகோதரர்களுக்கும் மற்றவர்களுக்கும் மூப்பர்கள் என்ன முன்மாதிரி வைக்கிறார்கள்?
8 சுயதியாகமும் மனத்தாழ்மையும் அன்பும் உள்ள மூப்பர்கள் வயதில் இளைய சகோதரர்களுக்குச் சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்கள். (1 பே. 5:2, 3) மேலும், விசுவாசம், கற்பிக்கும் விதம், கிறிஸ்தவ வாழ்க்கை முறை, ஊழியம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் மூப்பர்கள், தங்களுடைய முன்மாதிரியை மற்றவர்கள் பின்பற்ற முடியும் என்பதை அறிந்து சந்தோஷப்படுகிறார்கள்.—எபி. 13:7.
‘இயேசு கட்டளைகளைக் கொடுத்து அனுப்பினார்’
9. பிரசங்க வேலையைச் செய்வதற்கு இயேசு தம் சீடர்களைப் பயிற்றுவித்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
9 இயேசு சுமார் இரண்டு வருடங்கள் பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்த பிறகு, தம்முடைய 12 அப்போஸ்தலர்களையும் ஊழியம் செய்ய அனுப்பினார். முதலாவது, அவர்களுக்கு அறிவுரைகளைக் கொடுத்தார். (மத். 10:5-14) ஆயிரக்கணக்கானோருக்கு அற்புதமாய் உணவளிக்கவிருந்த சமயத்தில், அவர்களை எப்படி உட்கார வைத்து உணவைப் பரிமாற வேண்டுமெனச் சீடர்களிடம் சொன்னார். (லூக். 9:12-17) ஆகவே, தெளிவான, குறிப்பான அறிவுரையைக் கொடுப்பதன் மூலம் அவர் தம் சீடர்களைப் பயிற்றுவித்தார் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட பயிற்றுவிப்பும் கடவுளுடைய சக்தியின் வலிமைமிக்க வழிநடத்துதலும், கி.பி. 33-லும் அதன் பிறகும் பெருமளவு நடைபெற்ற பிரசங்க ஊழியத்தை ஒழுங்கமைக்க அப்போஸ்தலர்களுக்கு உதவின.
10, 11. மூப்பர்களும் மற்றவர்களும் சபையில் சேவை செய்ய ஆண்களை எப்படிப் பயிற்றுவிக்கலாம்?
10 இன்று, ஓர் ஆணுக்கு நாம் பைபிள் படிப்பை ஆரம்பிக்கும்போதே அவரைப் பயிற்றுவிக்கத் துவங்குகிறோம். நன்கு வாசிக்க அவருக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். அவருக்கு பைபிள் படிப்பு நடத்தும் காலம் முழுவதும் மற்ற உதவிகளையும் அளிக்கிறோம். அவர் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பங்குகொள்ளவும் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாக ஆகவும் என்ன செய்ய வேண்டுமென்பதைக் கற்றுக்கொள்வார். ஞானஸ்நானம் பெற்ற பிறகு, மற்ற பயிற்சிகளைச் சகோதரர்கள் கொடுப்பார்கள். உதாரணத்திற்கு, ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்கக் கற்றுக்கொடுப்பார்கள். அதோடு, உதவி ஊழியராக ஆவதற்குத் தகுதிபெற என்ன செய்ய வேண்டுமென்பதைப் புரிந்துகொள்ள உதவுவார்கள்.
11 ஞானஸ்நானம் பெற்ற சகோதரருக்கு மூப்பர்கள் ஒரு பொறுப்பு கொடுக்கும்போது, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அவருக்கு விளக்கிவிட்டு, தேவையான அறிவுரைகளைத் தெளிவாகக் கொடுக்கிறார்கள். இப்படிப் பயிற்றுவிக்கப்படுகிற சகோதரர், தன்னிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அந்தப் பொறுப்பைக் கையாளத் திண்டாடினால், ‘இவருக்குத் தகுதியே இல்லை’ என்ற முடிவுக்கு அவர்கள் உடனடியாக வந்துவிடுவதில்லை. மாறாக, அவர் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மீண்டும் அன்பாக அவருக்கு விளக்குகிறார்கள். இப்படி ஒரு சகோதரருக்கு உதவுவதில் மூப்பர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்; ஏனென்றால், சபையிலுள்ள மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது சந்தோஷம் கிடைக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—அப். 20:35.
‘ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவன் ஞானமுள்ளவன்’
12. இயேசு கொடுத்த அறிவுரைகள் ஏன் பயனுள்ளதாய் இருந்தன?
12 இயேசு தம்முடைய சீடர்களுக்குத் தேவைப்பட்ட அறிவுரைகளைச் சரியான நேரத்தில் தருவதன் மூலம் அவர்களைப் பயிற்றுவித்தார். உதாரணத்திற்கு, சமாரியர்கள் சிலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதபோது வானத்திலிருந்து நெருப்பு வந்து அவர்களை அழித்துப்போட வேண்டுமென யாக்கோபும் யோவானும் நினைத்தார்கள்; ஆனால், இயேசு அவர்களை அதட்டினார். (லூக். 9:52-55) யாக்கோபு, யோவான் இருவரின் சார்பாகவும் அவர்களுடைய அம்மா இயேசுவிடம் வந்து கடவுளுடைய அரசாங்கத்தில் அவரது பக்கத்தில் இருவருக்கும் இடம் தரும்படி கேட்டார்; அப்போது இயேசு நேரடியாக அந்த இருவரிடமும், “என்னுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை. என் தகப்பன் யாருக்காக அவ்விடங்களைத் தயாராக்கியிருக்கிறாரோ அவர்களுக்கே அவை கிடைக்கும்” என்றார். (மத். 20:20-23) எல்லாச் சமயத்திலும் அவர் தெளிவான, நடைமுறையான, கடவுளுடைய நியமங்களில் வேரூன்றிய அறிவுரைகளைக் கொடுத்தார். அப்படிப்பட்ட நியமங்களின் அடிப்படையில் சிந்திக்கும்படி தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத். 17:24-27) அவர்களுடைய வரம்புகளையும் இயேசு அறிந்திருந்தார், அவர்களிடம் அவர் பரிபூரணத்தை எதிர்பார்க்கவில்லை. உள்ளப்பூர்வமான அன்பினால் தூண்டப்பட்டே அறிவுரைகளைக் கொடுத்தார்.—யோவா. 13:1.
13, 14. (அ) யாருக்கு அறிவுரை தேவை? (ஆ) ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்யாதிருக்கிற சிலருக்கு மூப்பர்கள் எப்படி அறிவுரை கொடுக்கலாம் என்பதற்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
13 கிறிஸ்தவச் சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெற விரும்புகிற எல்லாருக்குமே எப்போதாவது பைபிளிலிருந்து அறிவுரையோ புத்திமதியோ தேவைப்படுகிறது. ‘ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவன் ஞானமுள்ளவன்’ என்று நீதிமொழிகள் 12:15 சொல்கிறது. ஓர் இளம் சகோதரர் இவ்வாறு சொன்னார்: ‘தாழ்வு மனப்பான்மைதான் எனக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது; சபையில் பொறுப்புகளை ஏற்பதற்கு ஒருவர் பரிபூரணமாக இருக்க வேண்டியதில்லை என்பதை ஒரு மூப்பர் எனக்குப் புரியவைத்தார்.’
14 ஒரு சகோதரர் முன்னேற்றம் செய்யாதிருப்பதற்கு அவருடைய நடத்தை காரணமாக இருந்தால், சாந்தமாக அப்படிப்பட்டவரைச் சரிப்படுத்த மூப்பர்கள் முயலுகிறார்கள். (கலா. 6:1) சில சமயங்களில், ஒருவருடைய சுபாவத்தின் காரணமாக அவருக்கு அறிவுரை தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் ஊழியத்தில் அதிகளவு ஈடுபட முடிந்தும் ஈடுபடாமல் இருப்பதை மூப்பர்கள் கவனிக்கலாம். அப்போது, இயேசு எந்தளவுக்குப் பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்தார் என்பதையும், தம்மைப் போலவே ஊழியம் செய்யும்படி தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார் என்பதையும் அவருக்கு எடுத்துச் சொல்லலாம். (மத். 28:19, 20; லூக். 8:1) ஒரு சகோதரர் தனக்கு அதிக மதிப்பைத் தேடிக்கொள்ள முயலுவதை மூப்பர்கள் கவனிக்கலாம். அப்போது, மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்க ஆசைப்படக்கூடாதென இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கற்பித்ததை அவர்கள் விளக்கலாம். (லூக். 22:24-27) ஒரு சகோதரர் மன்னிக்க மனதில்லாதவராக இருந்தால்? மன்னிக்க மனமில்லாதிருந்த அடிமையைப் பற்றிய உவமையைச் சொல்வது அவர் மனதைத் தொடலாம்; அந்த அடிமையுடைய பெருமளவு கடன் ரத்துசெய்யப்பட்ட போதிலும் தன்னிடம் கொஞ்சக் கடன்பட்ட சக அடிமையை மன்னிக்க மனமில்லாதிருந்தான். (மத். 18:21-35) சகோதரர்களுக்கு அறிவுரை தேவைப்படும்போது, மூப்பர்கள் முடிந்தவரை சீக்கிரத்திலேயே அதைக் கொடுப்பது நல்லது.—நீதிமொழிகள் 27:9-ஐ வாசியுங்கள்.a
“உனக்கு நீயே பயிற்சி அளித்துக்கொள்”
15. ஒரு சகோதரர் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு அவருடைய குடும்பத்தார் எப்படி உதவலாம்?
15 சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறும்படி சகோதரர்களுக்கு மூப்பர்களே பயிற்சி அளிக்கிறார்கள் என்றாலும் மற்றவர்களும் உதவலாம். உதாரணத்திற்கு, ஒரு சகோதரர் தகுதிபெற அவருடைய குடும்பத்தார் உதவலாம், அப்படி உதவவும் வேண்டும். அவர் ஏற்கெனவே மூப்பராக இருக்கிறார் என்றால், அன்பான மனைவியும் தன்னலம் கருதாத பிள்ளைகளும் அவருக்கு ஆதரவாக இருக்கலாம். சபைக்காக அவர் தம்முடைய நேரத்தையும் சக்தியையும் ஓரளவு ஒதுக்க வேண்டியிருப்பதை அவர்கள் புரிந்து நடந்துகொள்வது, அவர் தன்னுடைய பொறுப்பை நல்ல விதமாகச் செய்வதற்கு அதிக உதவியாய் இருக்கிறது. அவர்களுடைய சுயதியாக மனப்பான்மையைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைகிறார்; மற்றவர்களும் அதை மனமாரப் பாராட்டுகிறார்கள்.—நீதி. 15:20; 31:10, 23.
16. (அ) சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறுவது முக்கியமாக யாருடைய கையில் இருக்கிறது? (ஆ) சபையில் பொறுப்புகளை ஏற்க ஒரு சகோதரர் எப்படித் தகுதிபெறலாம்?
16 ஒரு சகோதரருக்கு மற்றவர்கள் உதவியையும் ஆதரவையும் அளிக்க முடிந்தாலும், சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறுவது முக்கியமாக அவருடைய கையில்தான் இருக்கிறது. (கலாத்தியர் 6:5-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கோ ஊழியத்தில் முழுமையாய் ஈடுபடுவதற்கோ ஒரு சகோதரர் உதவி ஊழியராக அல்லது மூப்பராக இருக்க வேண்டியதில்லை என்பது உண்மைதான். என்றாலும், சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறுவதற்கு அவர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பெறக் கடினமாய் உழைக்க வேண்டும். (1 தீ. 3:1-13; தீத். 1:5-9; 1 பே. 5:1-3) ஆகவே, ஒரு சகோதரர் உதவி ஊழியராக அல்லது மூப்பராகச் சேவை செய்ய விரும்பியும் இதுவரை நியமிக்கப்படாதிருந்தால், தான் முன்னேற்றம் செய்ய வேண்டிய அம்சங்களுக்கு அவர் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அவர் தவறாமல் பைபிள் வாசிக்கவும், ஊக்கமாய்த் தனிப்பட்ட படிப்பில் ஈடுபடவும், ஆழ்ந்து தியானிக்கவும், இருதயப்பூர்வமாய் ஜெபம் செய்யவும், பக்திவைராக்கியத்துடன் ஊழியத்தில் கலந்துகொள்ளவும் வேண்டும். இவ்விதங்களில் அவர் தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த பின்வரும் அறிவுரையைப் பின்பற்றலாம்: “தேவபக்தியைக் குறிக்கோளாய் வைத்து உனக்கு நீயே பயிற்சி அளித்துக்கொள்.”—1 தீ. 4:7.
17, 18. ஞானஸ்நானம் எடுத்த சகோதரர் கவலை, தாழ்வு மனப்பான்மை, ஆர்வக்குறைவு காரணமாகத் தகுதிபெறாதிருந்தால் என்ன செய்யலாம்?
17 ஒருவேளை, கவலை காரணமாக அல்லது தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒரு சகோதரர் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெற முயலாவிட்டால்? யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை அவர் எண்ணிப் பார்ப்பது நல்லது. ஆம், “நாளும் நம்மை அவர் [யெகோவா] தாங்கிக் கொள்கின்றார்.” (சங். 68:19, பொ.மொ.) எனவே, சபையில் பொறுப்புகளை ஏற்க ஒரு சகோதரருக்கு நம் பரலோகத் தகப்பன் உதவ முடியும். நீங்கள் உதவி ஊழியராக அல்லது மூப்பராகச் சேவை செய்யாத சகோதரரா? அப்படியென்றால், கடவுளுடைய அமைப்பில் ஊழியப் பொறுப்புகளைக் கையாள முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள் என்ற உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பதும்கூட உதவியாய் இருக்கும். இந்தக் குறிப்புகளை எல்லாம் யோசித்துப் பார்ப்பது, தன்னுடைய எதிர்மறையான எண்ணங்களை விட்டொழிக்க ஒரு சகோதரரைத் தூண்டலாம். அவர் கடவுளுடைய சக்திக்காக ஜெபிக்கலாம்; ஏனென்றால், அந்தச் சக்தியால் பிறப்பிக்கப்படுகிற சமாதானம், தன்னடக்கம் போன்ற குணங்கள் அவருடைய கவலையையும் தாழ்வு மனப்பான்மையையும் போக்கலாம். (லூக். 11:13; கலா. 5:22, 23) சரியான எண்ணத்துடன் தகுதிபெற முயற்சி செய்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிப்பாரென முழு நம்பிக்கையோடிருக்கலாம்.
18 ஞானஸ்நானம் பெற்ற ஒரு சகோதரருக்குப் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெற வேண்டுமென்ற ஆர்வமே இல்லாவிட்டால்? “உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காகக் கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலி. 2:13) சேவை செய்ய வேண்டுமென்ற விருப்பத்தையும் அதற்கான பலத்தையும் கடவுள்தான் தருகிறார். (பிலி. 4:13) ஆகவே, சரியானதைச் செய்ய உதவும்படி அவரிடம் அந்தக் கிறிஸ்தவர் ஜெபம் செய்யலாம்.—சங். 25:4, 5.
19. “ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும்” கடவுள் எழும்பப் பண்ணுவார் என்பது என்ன உறுதியளிக்கிறது?
19 மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்க மூப்பர்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார். அவர்களுடைய உதவியை ஏற்றுக்கொண்டு, சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெற முயலுகிறவர்களையும் அவர் ஆசீர்வதிக்கிறார். யெகோவா தம்முடைய அமைப்பில் உள்ளவர்களை வழிநடத்த அவர்கள் மத்தியிலிருந்து “ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும்” எழும்பப் பண்ணுவார், அதாவது தேவையானளவு திறமை பெற்ற நபர்களை எழும்பப் பண்ணுவார், என்று பைபிள் உறுதியளிக்கிறது. (மீ. 5:5) சகோதரர்களில் அநேகர் பயிற்றுவிக்கப்படுவதும், யெகோவாவுக்குத் துதியுண்டாகும் விதத்தில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெற மனத்தாழ்மையுடன் முயலுவதும் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாய் இருக்கிறது!
[அடிக்குறிப்பு]
a நீதிமொழிகள் 27:9, பொது மொழிபெயர்ப்பின்படி: “நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ்விக்கும்; கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.”
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• பெரும் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறுவதற்கு இயேசு எப்படித் தம்முடைய சீடர்களுக்கு உதவினார்?
• சபையில் பொறுப்புகளை ஏற்கச் சகோதரர்களுக்கு உதவும் விஷயத்தில் மூப்பர்கள் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?
• ஒரு சகோதரர் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறுவதற்கு அவருடைய குடும்பத்தார் எப்படி உதவலாம்?
• ஒரு சகோதரர் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெறுவதற்குத் தன் பங்கில் என்ன செய்யலாம்?
[பக்கம் 31-ன் படம்]
பைபிள் மாணாக்கர் முன்னேற்றம் செய்ய முயலும்போது நீங்கள் எப்படி அவரைப் பயிற்றுவிக்கலாம்?
[பக்கம் 32-ன் படம்]
சபையில் பொறுப்புகளை ஏற்கத் தகுதிபெற முயலுவதைச் சகோதரர்கள் எப்படிக் காட்டலாம்?