உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 10/1 பக். 26-28
  • ஆவியுலகத்தொடர்பு தவறா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆவியுலகத்தொடர்பு தவறா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் சொல்வது என்ன?
  • ஆவிகளோடு தொடர்பு
  • பேய்களின் நோக்கம்
  • பேய்த் தொல்லை​—⁠விடுபடுவது எப்படி?
  • பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்துநில்லுங்கள்
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராடுங்கள், யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • ஆவி சிருஷ்டிகள்—நம்மீது அவற்றின் செல்வாக்கு
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • பொல்லாத ஆவிகள் வல்லமையுள்ள ஆட்கள்
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 10/1 பக். 26-28

ஆவியுலகத்தொடர்பு தவறா?

இளம் வயதிலிருந்தே பார்பராa நிறைய மாயக்காட்சிகளைப் பார்த்திருக்கிறாள், சில குரல்களையும் கேட்டிருக்கிறாள். அதனால், இறந்துபோன தன்னுடைய உறவினர்களோடு தனக்குத் தொடர்பு இருப்பதாக நினைத்தாள். அவளும் அவளுடைய கணவர் யோயாக்கிமும் மாயமந்திர புத்தகங்களைப் படித்தார்கள்; அதனால் ஜோசியம் சம்பந்தப்பட்ட டாரட் கார்டுகளை வாசித்து அர்த்தம் சொல்வதில் வல்லவர்களானார்கள். அவர்கள் கைநிறைய சம்பாதிக்கப் போவதாக அந்த கார்டுகள் தெரிவித்தன; அவை சொன்னபடியே தொழிலில் எக்கச்சக்கமாய் சம்பாதித்தார்கள். ஒரு நாள், அந்தக் கார்டுகள் அவர்களுக்கு ஓர் எச்சரிப்பு கொடுத்தன. ஆபத்தான ஆட்கள் வீட்டிற்கு வரப்போவதாகவும் அவர்களை எப்படித் தவிர்ப்பது எனவும் தெரிவித்தன.

இந்தக் காலத்தில் மாயமந்திரத்தை மக்கள் நம்புவதில்லை என்பது உண்மைதான். ஆனால், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்று ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால்தான் நிறையப் பேர் தாயத்துகளை அணிந்துகொள்கிறார்கள், வீஜா பலகைகளைப் பயன்படுத்துகிறார்கள், எதிர்காலத்தை அறிய அல்லது ஆபத்தைத் தடுக்க குறி சொல்வோரிடத்திற்குப் போகிறார்கள். ஃபோக்கஸ் என்ற ஜெர்மன் பத்திரிகையில் “லாப்டாப்பும் லூசிஃபரும்” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை இப்படிக் குறிப்பிட்டது: “பில்லிசூனியத்தின் மேல் மக்களின் ஆர்வத் தீயை இன்டர்நெட் மூட்டிவிடுகிறது.”

ஒரு விஷயம் தெரியுமா? ஆவியுலகத்தொடர்பைப் பற்றி பைபிள்கூட சொல்கிறது. அதைப் பற்றி இதில் வாசித்துப் பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

பைபிள் சொல்வது என்ன?

பூர்வ இஸ்ரவேலில் இருந்த தம் மக்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டம் இவ்வாறு குறிப்பிட்டது: “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (உபாகமம் 18:​10-12) இந்தப் பழக்கங்களைக் கடவுள் ஏன் இந்தளவுக்குக் கடுமையாக எதிர்க்கிறார்?

ஏனென்றால், நாம் ஆரம்பத்தில் பார்த்த அனுபவத்தின்படி, இறந்தோருடன் பேச முடியும் என அநேகர் நினைக்கிறார்கள். அதோடு, மாயமந்திர பழக்கங்கள் மூலமாகப் பெறும் தகவலை இறந்தோரிடமிருந்து வந்த தகவலாக நம்புகிறார்கள். மனிதர்கள் இறந்த பிறகு ஆவியுலகத்திற்குச் செல்வதாக பல மதங்கள் கற்றுக்கொடுப்பதால்தான் அவர்கள் இப்படி நம்புகிறார்கள். ஆனால், “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்று பைபிள் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. (பிரசங்கி 9:⁠5) சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல அவர்கள் இருப்பதாக அது விவரிக்கிறது.b (மத்தேயு 9:​18, 24; யோவான் 11:​11-14) ஆனால், இறந்தவர்களோடு பேசியதாகச் சிலர் சொல்கிறார்களே, அது எப்படி? உண்மையில் இதற்குப் பின்னால் இருப்பது யார்?

ஆவிகளோடு தொடர்பு

இயேசு பூமியில் இருந்தபோது ஆவிகளோடு, அதாவது பேய்களோடு, பேசியதாக பைபிளிலுள்ள சுவிசேஷ புத்தகங்கள் காட்டுகின்றன. இயேசுவிடம் ஒரு “பேய் . . . நீர் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொன்னதாக மாற்கு 1:​23, 24 குறிப்பிடுகிறது. பேய்களுக்கு உங்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால், இந்தப் பேய்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

கடவுள் மனிதரைப் படைப்பதற்கு முன் கண்ணால் பார்க்க முடியாத கோடிக்கணக்கான தேவபுத்திரர்களை, அதாவது தேவதூதர்களை, படைத்தார். (யோபு 38:​4-7) இவர்கள் மனிதரைவிட உயர்ந்தவர்கள். (எபிரெயர் 2:​6, 7) பலசாலிகள், அதிபுத்திசாலிகள், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள். சங்கீதக்காரன் அவர்களைப் பற்றி இப்படிப் பாடினார்: “அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.”​—⁠சங்கீதம் [திருப்பாடல்கள்] 103:​20, பொது மொழிபெயர்ப்பு.

காலப்போக்கில், அந்தத் தேவதூதர்களில் சிலர் கடவுளுடைய அனுமதியில்லாமல் மனிதர்களோடு தொடர்புகொள்ள ஆரம்பித்தார்கள். எதற்காக? மனிதர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வேண்டும் என்பதற்காக, தேவதூதர்களில் ஒருவன் முதல் மனித ஜோடியான ஆதாம்-ஏவாளை ஏமாற்றினான். அதனால், அவன் பிசாசாகிய சாத்தானாக மாறினான்; ஆம், கடவுளைப் பழித்துப் பேசுபவனாக, எதிர்ப்பவனாக மாறினான்.​—⁠ஆதியாகமம் 3:​1-6.

பிறகு, சில தேவதூதர்கள் பரலோகத்தில் இருந்த ‘தங்களுக்கு ஏற்ற குடியிருப்பை விட்டுவிட்டு’ மனித உருவில் பூமிக்கு வந்து அழகிய பெண்களுடன் வாழ்ந்தார்கள். (யூதா 6; ஆதியாகமம் 6:​1, 2) அந்தக் கலகக்கார தூதர்களும் அவர்களுடைய கலப்பின பிள்ளைகளும் மனிதரைப் பயங்கரமாகக் கொடுமைப்படுத்தினார்கள்; அதனால்தான் “பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது” என பைபிள் சொல்கிறது. அந்தப் பொல்லாத மக்களை அழிக்கத்தான் நோவாவின் காலத்தில் பெருவெள்ளத்தைக் கடவுள் கொண்டுவந்தார். இதைப் பற்றி ஒருவேளை பைபிளில் நீங்கள் வாசித்திருக்கலாம்.​—⁠ஆதியாகமம் 6:​3, 4, 11-13.

பெருவெள்ளம் வந்தபோது, அந்தத் தூதர்கள் தங்களுடைய மனித உடலைக் களைந்து பரலோகத்திற்குச் சென்றார்கள். ஆனால், ஆரம்பத்தில் அவர்கள் இருந்த ‘குடியிருப்புக்கு’ திரும்பி வர கடவுள் அவர்களை அனுமதிக்கவில்லை. மாறாக, ‘காரிருள் நிறைந்த படுகுழியில்’ தள்ளப்படுவதைப் போன்ற தாழ்வான நிலைக்கு அவர்களைத் தள்ளினார். (2 பேதுரு 2:​4, 5) கலகம் செய்த இந்தத் தூதர்களை ‘பேய்கள்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (யாக்கோபு 2:19) ஆக, ஆவியுலகத்தொடர்புக்குப் பின்னால் இருந்து செயல்படுவது இந்தப் பேய்கள்தான்.

பேய்களின் நோக்கம்

முதலாவதாக, உண்மைக் கடவுளான யெகோவாவை வழிபட விடாமல் மனிதரைத் தடுப்பதுதான் இந்தப் பேய்களின் நோக்கம். மந்திரவாதிகள் பலரும் தங்களுக்கு விசேஷத் திறமை அல்லது சக்தி இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்; ஆனால், அது உண்மையில் பேய்களின் சக்திதான். அதைப் பயன்படுத்தி கடவுளைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள விடாமல், அவரோடு நெருங்கிய பந்தம் வைத்துகொள்ள விடாமல் மக்களின் மனதைத் திசைத்திருப்புகிறார்கள்.

இயேசுவைச் சாத்தான் சோதித்த விஷயத்திலிருந்து பேய்களின் இரண்டாவது நோக்கத்தைத் தெரிந்துகொள்ளலாம். பேய்களின் தலைவனான சாத்தான், “உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகத்துவங்களையும்” இயேசுவுக்குத் தருவதாகச் சொன்னான். அதற்குப் பதிலாக இயேசுவிடமிருந்து அவன் என்ன கேட்டான்? ‘ஒரேவொரு முறை என்முன் விழுந்து என்னை வணங்கு’ என்று கேட்டான். ஆம், மக்கள் தங்களை வழிபட வேண்டுமென சாத்தானும் பேய்களும் ஆசைப்படுகின்றன. ஆனால், இயேசுவோ சாத்தானின் நோக்கத்தை அறிந்து அதை நிராகரித்தார்.​—⁠மத்தேயு 4:​8-10.

இயேசுவிடம் சாத்தான் கேட்டதுபோல் இன்று பேய்கள் மனிதரிடம் நேரடியாகக் கேட்பதில்லை. ஆனால், அப்பாவிகளைச் சிக்க வைப்பதற்காக பளிங்குக் கோளங்கள், கிளி ஜோசியம், ஊசல் குண்டுகள், ஜாதகப் புத்தகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன. அவற்றால் எந்த ஆபத்தும் இல்லையென மக்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவற்றை நம்பி மோசம்போகாதீர்கள்! இறந்தவர்களோடு பேசுவதற்கு அவை எந்த விதத்திலும் உதவாது. யெகோவாவை வழிபடுவதிலிருந்து மக்களின் மனதை மாற்றுவதற்கு, இந்தப் பேய்கள் மாயமந்திரத்தின்மேல் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அப்படியும் காரியம் பலிக்கவில்லை என்றால், அவற்றின் வலையில் மாட்டிக்கொண்டவர்களுக்கு பல தொல்லைகளைக் கொடுத்து அலைக்கழிக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், அவற்றின் தொல்லையிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

பேய்த் தொல்லை​—⁠விடுபடுவது எப்படி?

பேய்கள், கடவுளின் எதிரிகள் என்பதையும் அவற்றின் முடிவு நெருங்கிவிட்டது என்பதையும் நினைவில் வையுங்கள். (யூதா 6) அவை, இறந்தவர்களைப் போல பாசாங்கு செய்து மக்களை வஞ்சிக்கின்றன, பொய் பேசுகின்றன. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் நண்பராக நினைத்த ஒருவர் வஞ்சகராக இருந்தால், உங்களுக்கே குழி பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இன்டர்நெட்டில் நீங்கள் தொடர்புகொண்ட ஒருவர் காம பித்துபிடித்தவன் என்று தெரியவந்தால் என்ன செய்வீர்கள்? பேய்களின் வலையில் சிக்கிக்கொள்வது இதையெல்லாம்விட ரொம்பவே ஆபத்தானது. ஆகவே, நீங்கள் எப்பாடுபட்டாவது அவற்றின் பிடியிலிருந்து வெளிவர முயல வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?

பூர்வ எபேசு நகரைச் சேர்ந்த சிலர் பேய்களைப் பற்றி வேதத்திலிருந்து தெரிந்துகொண்டபோது, தாங்கள் வைத்திருந்த மாயவித்தை சம்பந்தமான விலையுயர்ந்த புத்தகங்களையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதை உணர்ந்தார்கள். அவற்றை “அனைவர் முன்பாகவும் சுட்டெரித்தார்கள்.” (அப்போஸ்தலர் 19:​19, 20) இன்று புத்தகங்கள், தாயத்துகள், வீஜா பலகைகள் போன்றவற்றில் மட்டுமல்லாமல், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் ஆகியவற்றிலும் மாயமந்திரம் புகுந்து விளையாடுகிறது. எனவே, பேய்களோடு சம்பந்தப்பட்ட எதையும் அடியோடு விட்டுவிடுங்கள்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட தம்பதியரின் கதைக்கு வரலாம். ஆபத்தான ஆட்கள் வீட்டிற்கு வரப்போகிறார்கள் என்றும் அவர்கள் சொல்வதைக் கேட்கவோ அவர்கள் தருவதை வாங்கவோ கூடாது என்றும் அந்த டாரட் கார்டுகளிலிருந்து அந்தத் தம்பதியர் தெரிந்துகொண்டார்கள். ஆனால் கானி, குட்ரூன் என்ற இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வீட்டிற்குச் சென்று, ‘உங்களுக்கு கடவுள பற்றி ஒரு நல்ல செய்தி சொல்ல வந்திருக்கிறோம்’ என்று சொன்னதும் அதில் ஆர்வம் காட்டினார்கள். உரையாடலின்போது ஆவியுலகத்தொடர்பைப் பற்றி அவர்கள் கேட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளோ அதற்கான விளக்கத்தை பைபிளிலிருந்து தெள்ளத் தெளிவாக சொன்னார்கள். பிறகு, தவறாமல் பைபிளிலிருந்து கலந்துபேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

யோயாக்கிமும் பார்பராவும் பேய்களோடு வைத்திருந்த எல்லாத் தொடர்பையும் துண்டிக்கத் தீர்மானித்தார்கள். இப்படிச் செய்யும்போது பேய்கள் அவர்களைச் சும்மா விடாது என்பதையும் சாட்சிகள் விளக்கினார்கள். சொல்லப்போனால், கொஞ்சக் காலத்திற்கு பேய்கள் அவர்களைப் பாடாய்ப்படுத்தின, பயமுறுத்தின, தாக்கின. வேறொரு வீட்டிற்கு குடிமாறும்வரை ஒவ்வொரு நாள் ராத்திரியும் பயந்து பயந்து பொழுதைக் கழித்தார்கள். அந்தக் கஷ்ட காலத்தில், பிலிப்பியர் 4:​13-தான் அவர்களுடைய மனதைப் பலப்படுத்தியது: “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு.” அவர்களுடைய திடத்தீர்மானத்தை யெகோவா ஆசீர்வதித்தார்; போகப் போக பேய்த் தொல்லையும் ஒழிந்தது. இன்று யோயாக்கிமும் பார்பராவும் உண்மைக் கடவுளான யெகோவாவைச் சந்தோஷமாக வழிபட்டு வருகிறார்கள்.

யெகோவாவின் ஆசி பெற விரும்புகிற எல்லாரையும் பைபிள் இவ்வாறு உற்சாகப்படுத்துகிறது: “கடவுளுக்கு அடங்கி நடங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:​7, 8) பேய்த் தொல்லையிலிருந்து விடுபட நீங்கள் விரும்புகிறீர்களா? யெகோவா தேவனால் உங்களை விடுவிக்க முடியும், நிச்சயம் விடுவிப்பார். ஆவியுலகத்தொடர்பு பழக்கத்திலிருந்து விடுபட்டதை நினைத்துப் பார்த்து யோயாக்கிமும் பார்பராவும் இதயப்பூர்வமாகச் சொல்கிறார்கள்: “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்.”​—⁠சங்கீதம் 121:⁠2. (w12-E 03/01)

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b கூடுதலான விளக்கத்திற்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது) “இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்ற தலைப்பிலுள்ள 6-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.

[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]

மாயமந்திர பழக்கங்கள் கடவுளோடு நல்லுறவை வைத்துக்கொள்ள விடாமல் மக்களைத் தடுக்கின்றன

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”​—⁠யாக்கோபு 4:8

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்