பிரகாசமான எதிர்காலம் உங்கள் கையில்!
உங்கள் வாழ்க்கை பிரகாசிக்க என்ன செய்யலாம்? உங்களிடம் ஒளிந்திருக்கும் அசாத்திய திறமையைப் பயன்படுத்தி, இன்றைய தீர்மானங்கள் நாளைய வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம்.
எதிர்கால நன்மைகளை மனதில் வைத்து தீர்மானங்களை எடுப்பது சுலபமல்ல. ஏன்? ஆசைகளை உடனுக்குடன் திருப்தி செய்துகொள்ளத் துடிக்கும் ஆட்கள்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். ஆனால், பைபிள் தரும் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது நிரந்தர நன்மைகள் தரும். உதாரணமாக, குடும்ப உறவுகள் பலப்படுவதற்கான ஆலோசனைகள் அதில் இருக்கின்றன. (எபேசியர் 5:22–6:4) அதைப் பின்பற்ற, உங்கள் குடும்பத்தினரோடு தவறாமல் நேரம் செலவிட வேண்டும். வேலை, பொழுதுபோக்கு போன்றவற்றிலேயே மூழ்கிக் கிடப்பதைத் தவிர்க்க வேண்டும். இதுபோல வாழ்க்கையில் மற்ற விஷயங்களிலும் தற்காலிக சந்தோஷமா, நிரந்தர சந்தோஷமா எது முக்கியம் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும். சரி, ஞானமான தீர்மானங்களைத் தைரியமாக எடுப்பது எப்படி? பின்வரும் நான்கு வழிகளைக் கவனியுங்கள்.
1 விளைவுகளை யோசித்துப் பாருங்கள்
ஒரு தீர்மானத்தை எடுக்கும் முன் அதன் விளைவுகளை எதார்த்தமாக யோசித்துப்பாருங்கள். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) நீங்கள் எடுக்கப்போகும் தீர்மானத்தால் தீங்கு விளையும் எனத் தெரிந்தால் அதை எடுக்க மாட்டீர்கள். நன்மை விளையும் எனத் தெரிந்தால் அதைத் தைரியமாக எடுப்பீர்கள்.
உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் எடுக்கும் தீர்மானத்தால் ஒரு வருடத்திற்குப் பின் அல்லது 10, 20 வருடங்களுக்குப் பின் என்ன விளைவுகள் ஏற்படும்? என் உடலும் உள்ளமும் பாதிக்கப்படுமா? என் குடும்பத்தாரையும், எனக்கு வேண்டியவர்களையும் அது எப்படி பாதிக்கும்?’ மிக முக்கியமாக, ‘நான் எடுக்கும் தீர்மானம் கடவுளுக்குப் பிடிக்குமா? அவரோடுள்ள என் நட்பை பாதிக்குமா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். பைபிள் கடவுளுடைய புத்தகம். அவருக்கு விருப்பமானது எது என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும். கண்ணுக்குத் தெரியாத படுகுழிகளைக் கண்டுபிடிக்க உதவும்.—நீதிமொழிகள் 14:12; 2 தீமோத்தேயு 3:16.
2 தீர்மானத்தை நீங்களே எடுங்கள்
நிறைய பேர், தாங்களாவே தீர்மானம் எடுக்காமல் மற்றவர்கள் செய்வதைப் பார்த்து ‘காப்பி’ அடிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை நிறைய பேர் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அது உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கிவிடாது. உங்கள் தீர்மானங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். நவ்யாa என்ற பெண் சொல்வதைக் கவனியுங்கள்: “எனக்கு நல்ல கணவர் அமையணும்னு ஆசப்பட்டேன். ஆனா எனக்குப் பொருத்தமானவர் கிடைக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சிது. என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே ரொம்ப அறிவாளிங்க. ஆனா வாழ்க்கையில் எப்பவுமே தப்பு தப்பா தீர்மானம் எடுத்தாங்க. கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் பாய் ஃப்ரெண்ட்ஸை எல்லாம் அடிக்கடி மாத்திக்கிட்டே இருப்பாங்க. அவங்கள மாதிரி எனக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. அவங்களால நான் பட்ட வேதனைக்கு அளவேயில்ல.”
நவ்யா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். “யெகோவாவின் சாட்சிகள்ல, இளைஞர்களும் சரி கல்யாணம் ஆனவங்களும் சரி சந்தோஷமா இருக்கிறதை பார்த்தேன். என் விருப்பங்களையும் வாழ்க்கை முறையையும் மாத்துறது கஷ்டமா இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிட்டேன்” என்கிறார் நவ்யா. அதன் பலன்? “மனசுக்கு ரொம்ப பிடிச்சவரைதான் கல்யாணம் பண்ணணும்னு நெனச்சேன். யெகோவாவின் சாட்சி ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்டேன். நான் ஆசைப்பட்டதவிட அருமையான அழகான குடும்ப வாழ்க்கைய கடவுள் எனக்கு கொடுத்திருக்காங்க.”
3 தொலைநோக்குடன் தீர்மானியுங்கள்
நீங்கள் பெற விரும்பும் எதிர்காலத்தை மனக்கண்ணில் பாருங்கள், அதற்காக என்னென்ன செய்யலாமென யோசியுங்கள். அப்படி செய்தால், குறுகிய கால கண்ணோட்டத்தைத் தவிர்க்கலாம். (நீதிமொழிகள் 21:5) வெறுமனே 70 அல்லது 80 வருடங்களுக்குள் முடிந்துபோகும் மனித வாழ்வை அல்ல, பைபிள் வாக்கு கொடுத்திருக்கும் முடிவில்லாத வாழ்வை கற்பனை செய்து பாருங்கள்.
இயேசு கிறிஸ்துவின் மீட்பு பலி மூலமாக முடிவில்லா வாழ்வைப் பெறும் வாய்ப்பை மனிதர்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 20:28; ரோமர் 6:23) மனிதரையும் பூமியையும் தாம் படைத்ததன் நோக்கத்தை சீக்கிரத்தில் நிறைவேற்றப் போவதாகக் கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார். கடவுளை நேசிப்பவர்கள் அழகிய புத்தம்புது பூமியில் என்றென்றுமாக வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். (சங்கீதம் 37:11; வெளிப்படுத்துதல் 21:3-5) தொலைநோக்குடன் செயல்பட்டால் அந்த எதிர்காலம் உங்களுக்குச் சொந்தமாகும்.
4 இலக்கை எட்ட முயலுங்கள்
அந்த எதிர்காலத்தை அடைய என்ன செய்யலாம்? முதலாவது, கடவுளைப் பற்றி பைபிளிலிருந்து தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். (யோவான் 17:3) அப்போது, எதிர்காலத்தைப் பற்றி கடவுள் கொடுத்த வாக்கு நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கைப் பிறக்கும். அந்த நம்பிக்கை கடவுளுக்குப் பிரியமான விதத்தில் உங்களை மாற்றிக்கொள்ள கைகொடுக்கும்.
மைக்கேலின் அனுபவத்தைக் கவனியுங்கள். “12 வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சேன். போதைப் பொருட்களையும் பயன்படுத்தினேன். ஒரு ரவுடி கும்பல்ல சேர்ந்தேன். 30 வயசுக்குள்ள செத்துபோயிடுவேன்னு நினைச்சேன். கோபமும் விரக்தியும் பல தடவ என்னை தற்கொலை வரைக்கும் கொண்டு போயிடுச்சி. வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கும்னு தெரிஞ்சிது. ஆனா அத எப்படி கண்டுபிடிக்கிறதுனு தெரியல” என்கிறார் மைக்கேல். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவரோடு ரவுடி கும்பலில் இருந்த ஒருவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். மைக்கேலும் பைபிள் படிப்பிற்கு ஒத்துக்கொண்டார்.
பைபிளில் இருந்து மைக்கேல் கற்றுக்கொண்ட விஷயங்கள் அவருடைய எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியது. “சீக்கிரத்தில் இந்த பூமி அழகான பூஞ்சோலையாக மாறும், மக்கள் எந்த கவலையும் இல்லாம சமாதானமா வாழுவாங்கனு கற்றுக்கிட்டேன். அதுல நான் வாழ்ற மாதிரி மனக்கண்ணுல பார்த்தேன். யெகோவாவுடைய ஃப்ரெண்டா ஆகுறதுக்கு இலக்கு வச்சேன். ஆனால், அவருக்கு பிடிச்சமாதிரி நடக்குறது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்திச்சி. பைபிளைப் படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் சில நேரம் குடிச்சிருக்கேன். ஒரு பொண்ணோட தப்பாவும் நடந்திருக்கேன்.”
தடைகளைத் தாண்டி எப்படி மைக்கேலால் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடிந்தது? அவர் சொல்கிறார்: “எனக்கு பைபிள் படிப்பு நடத்தினவங்க தினமும் பைபிள் படிக்க சொன்னாங்க. கடவுளை பிரியப்படுத்த விரும்புறவங்ககூட பழக சொன்னாங்க. என்னோட கும்பல்ல இருந்தவங்க அவ்வளவு சீக்கிரத்தில என்னை விட மாட்டங்கணு தோணிச்சு. அவங்க என் குடும்பம் மாதிரி இருந்தாலும் அந்த ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் விட்டுட்டு வந்துட்டேன்.”
மைக்கேல் சின்ன சின்ன இலக்குகளை வைத்தார். அது கடவுளுக்குப் பிரியமாக வாழவேண்டும் என்ற பெரிய இலக்கை அடைய அவருக்கு உதவியது. நீங்களும் அப்படிச் செய்யலாம். உங்களுடைய நீண்ட கால இலக்குகளையும் அதை எட்ட உதவும் படிகளையும் எழுதுங்கள். உங்களுக்கு ஆதரவாக இருப்போரிடம் அதைச் சொல்லுங்கள். எந்தளவு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதைக் கவனித்து சொல்லும்படி கேளுங்கள்.
கடவுளைப் பற்றி கற்றுக்கொண்டு அவர் கொடுக்கிற ஆலோசனைபடி வாழ காலம் கடத்தாதீர்கள். கடவுள்மீதும் அவருடைய வார்த்தையாகிய பைபிள்மீதும் இப்போதே அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். பைபிள் நியமங்களின்படி வாழ்பவரைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” ஆம், அவரது எதிர்காலம் பிரகாசமாயிருக்கும்.—சங்கீதம் 1:1-3. (w12-E 05/01)
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.