கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை மதிக்கிறீர்களா?
“யெகோவா உங்கள் இருவருக்கும் இனிய இல்லற வாழ்வை பரிசளிப்பாராக. உங்கள் கணவனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ அருள்புரிவாராக.” —ரூத் 1:9, NW.
பதில் தெரியுமா?
பண்டைய கால ஊழியர்கள் மணவாழ்வு எனும் பரிசை மதித்தார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
நாம் யாரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் யெகோவா அக்கறையாய் இருக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
மணவாழ்வு குறித்து பைபிள் தரும் என்ன ஆலோசனையைப் பின்பற்ற நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்கள்?
1. மனைவியைப் பார்த்த ஆதாம் என்ன செய்தான்?
“இதோ! இவள் என் எலும்பின் எலும்பு! என் சதையின் சதை! இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள், இதனால் மனுஷி என்று அழைக்கப்படுவாள்.” (ஆதி. 2:23, NW) தனக்கு மனைவி கிடைத்த சந்தோஷத்தில் ஆதாம் கவிஞனாகவே மாறிவிட்டான்! ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச் செய்து, அவனுடைய விலா எலும்பில் ஒன்றை எடுத்து யெகோவா ஓர் அழகிய பெண்ணைப் படைத்தார். அவளுக்கு ஏவாள் என்று ஆதாம் பெயர் வைத்தான். யெகோவா அவர்கள் இருவரையும் இனிய இல்லற வாழ்வில் இணைத்தார். ஆதாமின் விலா எலும்பை வைத்து ஏவாளை அவர் உருவாக்கியதால்... அவர்களுடைய பந்தம் ஒரு விசேஷ பந்தம், இன்றுள்ள எந்தத் தம்பதிகளுக்கும் கிடைக்காத ஓர் அபூர்வ பந்தம்.
2. ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரிடமொருவர் ஈர்க்கப்படுவதற்குக் காரணம் என்ன?
2 அளவில்லா ஞானமுடைய யெகோவா... மனிதர்களில் காதல் உணர்வை விதைத்தார். இந்த உணர்வுதான் ஓர் ஆணையும் பெண்ணையும் காந்தம்போல் கவர்ந்திழுக்கிறது. “ஓர் ஆணும் பெண்ணும் தாம்பத்திய உறவை அனுபவிக்கும் ஆசையோடும் காலமெல்லாம் கூடிவாழும் எதிர்பார்ப்போடும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்” என்கிறது த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா. யெகோவாவை வணங்குபவர்களைப் பொறுத்ததிலும் அதுவே உண்மை.
மணவாழ்வு எனும் பரிசை அவர்கள் மதித்தார்கள்
3. ஈசாக்குக்கு எப்படி ஒரு நல்ல மனைவி கிடைத்தாள்?
3 கடவுள்பக்திமிக்க ஆபிரகாம் மணவாழ்வை உயர்வாய் மதித்தார். அதனால், ஈசாக்குக்கு வரன் தேட தனது மூத்த ஊழியக்காரனை மெசொப்பொத்தாமியாவிற்கு அனுப்பினார். ஒரு நல்ல பெண்ணைக் கண்டுபிடிக்க தனக்கு உதவும்படி யெகோவாவிடம் அந்த ஊழியக்காரன் ஜெபம் செய்தார். யெகோவா அவருடைய ஜெபத்தைக் கேட்டார். அதன் பலனாக, ஈசாக்குக்குத் தேவபக்திமிக்க ரெபெக்காள் மனைவியாகக் கிடைத்தாள். ஆபிரகாமின் வம்சாவளியில் வாக்குப்பண்ணப்பட்ட சந்ததி வருவதற்கு அவளும் ஒரு பங்காற்றினாள். (ஆதி. 22:18; 24:12-14, 67) இன்றைய சமுதாயத்தில், அநேகர் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தாங்களாகவே தேடிக்கொள்கிறார்கள். சிலசமயங்களில், மற்றவர்களுக்காகச் சிலர் வரன் பார்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் உதவி கேட்டால் தவிர இந்த விஷயத்தில் யாரும் தலையிடக் கூடாது. மக்கள் சொல்வதுபோல் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. ஆனால், இந்த விஷயத்திலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி, கடவுளுடைய வழிநடத்தலுக்காக நாம் ஜெபம் செய்தால்... அவருடைய சக்தியின் வழிநடத்தலுக்கு இசைய நடந்தால்... அவர் நமக்கு நிச்சயம் உதவுவார்.—கலா. 5:18, 25.
4, 5. சூலேமியப் பெண்ணும் அந்த மேய்ப்பனும் ஒருவரையொருவர் காதலித்தார்கள் என்று எப்படித் தெரியும்?
4 பூர்வ இஸ்ரவேல் தேசத்து சௌந்தரிய சூலேமியப் பெண்ணை சாலொமோன் ராஜாவின் மனைவியாகும்படி அவளுடைய தோழிகள் வற்புறுத்தினார்கள். அவளோ, “எருசலேம் மங்கையரே, ஆணையிடுகிறேன்! என் காதலைத் தட்டியெழுப்பாதீர்கள். அதை விழித்தெழ செய்யாதீர்கள், அதுவே எழும்பும்வரை” என்று கேட்டுக்கொண்டாள். (உன். 8:4, NW) இந்த சூலேமியப் பெண் ஒரு மேய்ப்பனைக் காதலித்தாள். “சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்” என்று அவள் தன்னைப் பற்றிச் சொல்ல... “முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்” என்று அந்த மேய்ப்பன் தன் காதலியைப் புகழ்ந்தான். (உன். 2:1, 2, பொது மொழிபெயர்ப்பு) சூலேமியப் பெண்ணும் அந்த மேய்ப்பனும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராய்க் காதலித்தார்கள்.
5 சூலேமியப் பெண்ணும் அந்த மேய்ப்பனும் கடவுளை அதிகமாக நேசித்ததால் அவர்களுடைய மணவாழ்வில் நிச்சயம் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கியிருக்கும். அந்தச் சூலேமியப் பெண் தன் காதலனிடம் இவ்வாறு சொன்னாள்: “நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது, [“யாவின் ஜூவாலையுமாயிருக்கிறது,” NW; ஏனென்றால் அது அவரிடமிருந்து பிறக்கிறது]. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.” (உன். 8:6, 7) அப்படியென்றால், மணவாழ்வில் இணையும் இருவருமே யெகோவாவை வணங்குபவர்களாக... திருமண உறுதிமொழியைக் காப்பாற்றுகிறவர்களாக... இருக்க வேண்டும்.
உங்கள் தெரிவு கடவுளைப் பிரியப்படுத்துமா புண்படுத்துமா?
6, 7. வாழ்க்கைத் துணையாக யாரை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் யெகோவா அக்கறையாய் இருக்கிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
6 நீங்கள் யாரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் யெகோவா அக்கறையாய் இருக்கிறார். கானான் தேசத்தில் குடியிருந்தவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி இஸ்ரவேலருக்கு யெகோவா கட்டளையிட்டார். ‘அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்’ என்று சொன்னார். (உபா. 7:3, 4) குருவாகச் சேவை செய்த எஸ்றா பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, “நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்” என்று சொன்னார். (எஸ்றா 10:10, பொ.மொ.) அப்போஸ்தலன் பவுலும் சக கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “கணவன் உயிரோடிருக்கும் காலமெல்லாம் மனைவி அவனோடு திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய கணவன் இறந்துவிட்டாலோ தனக்கு விருப்பமான ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள சுதந்திரமுள்ளவளாக இருக்கிறாள்; ஆனால், நம் எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.”—1 கொ. 7:39.
7 யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள், அவரை வணங்காத ஒருவரைத் திருமணம் செய்யும்போது அவருக்குக் கீழ்ப்படியாமல் போகிறார்கள். எஸ்றாவின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் ‘வேற்றினப் பெண்களை மணந்தபோது’ யெகோவாவின் மனதைப் புண்படுத்தினார்கள். ஒரு கிறிஸ்தவர் யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்பதில் பைபிள் தெளிவான அறிவுரை கொடுக்கிறது. அந்த அறிவுரையை மீறி நடந்துவிட்டு அதற்குச் சாக்குப்போக்கு சொல்வது கொஞ்சமும் சரியல்ல. (எஸ்றா 10:10; 2 கொ. 6:14, 15) யெகோவாவை வணங்காத ஒருவரை மணம் செய்யும் கிறிஸ்தவர் நல்ல முன்மாதிரி வைப்பதில்லை. கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை அவர் துளியும் மதிப்பதில்லை. ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் இப்படிச் செய்தால் சபையில் அவருக்குள்ள பொறுப்புகளை இழந்துவிடலாம். செய்வதையெல்லாம் செய்துவிட்டு, “யெகோவா தேவனே, நான் தெரிஞ்சே தப்பு செஞ்சிட்டேன். ஆனாலும் என்னை ஆசீர்வதிங்க” என்று ஜெபம் செய்வது நியாயமாய் இருக்காது.
நமக்கு எது நல்லதென்று நம் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்
8. மணவாழ்வைக் குறித்து கடவுள் கொடுத்திருக்கும் அறிவுரையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
8 ஓர் இயந்திரத்தை உருவாக்கியவருக்கு அதன் செயல்பாடுகள் அனைத்தும் அத்துப்படியாக இருக்கும். எனவே, அதன் பாகங்களை இணைப்பதற்குத் தேவையான விவரங்களை அவரால் சரியாகக் கொடுக்க முடியும். அவருடைய அறிவுரைகளை அசட்டை செய்துவிட்டு நம் இஷ்டத்திற்கு இணைத்தால் என்ன ஆகும்? அந்த இயந்திரம் வேலை செய்யாது. அப்படியே வேலை செய்தாலும் ரொம்ப நாள் ஓடாது, நாசமாகிவிடும். அதுபோலவே, நம் மணவாழ்விலும் சந்தோஷச் சாரல் வீச வேண்டுமென்றால் அந்தப் பந்தத்தை ஏற்படுத்திய யெகோவா தேவனின் அறிவுரையைப் பின்பற்றுவது அவசியம்.
9. தனிமை உணர்வையும் மணவாழ்வு தரும் மகிழ்ச்சியையும் பற்றி யெகோவா தெரிந்துவைத்திருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?
9 மனிதர்களையும் மணவாழ்வையும் பற்றி யெகோவா அத்துப்படி அறிந்துவைத்திருக்கிறார். மனிதர்கள் ‘பலுகிப் பெருக’ வேண்டும் என்பதற்காக அவர்களில் தாம்பத்தியத்திற்கான ஆசையை விதைத்திருக்கிறார். (ஆதி. 1:28) தனிமையில் இருப்பவர்களின் உணர்ச்சிகளையும் அவர் அறிந்திருக்கிறார். அதனால்தான், ஆதாம் தன்னந்தனியாய் இருந்ததைப் பார்த்து, “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்று சொல்லி ஏவாளைப் படைத்தார். (ஆதி. 2:18) மணவாழ்வு தரும் மகிழ்ச்சியைக் குறித்தும் யெகோவா முழுமையாகத் தெரிந்துவைத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 5:15-18-ஐ வாசியுங்கள்.a
10. தாம்பத்திய உறவிலும் தம்பதிகள் எவ்வாறு கடவுளுக்குப் பிரியமாய் நடந்துகொள்ளலாம்?
10 ஆதாம் செய்த பாவத்தினால் நாம் அனைவருமே அபூரணர்களாய் இருக்கிறோம். அதனால், குறையே இல்லாத... தவறே செய்யாத... தம்பதிகள் என்று இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், யெகோவாவின் ஊழியர்கள் பைபிளிலுள்ள அறிவுரைகளைப் பின்பற்றினால் அவர்களுடைய மணவாழ்வில் மணம் வீசுவது நிச்சயம். உதாரணத்திற்கு, தாம்பத்திய உறவைக் குறித்து பவுல் கொடுத்த தெளிவான அறிவுரையைக் கவனியுங்கள். (1 கொரிந்தியர் 7:1-5-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கு மட்டுமே கணவன் மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்று பைபிள் சொல்வதில்லை. அது அவர்களது உடல் தேவைகளையும் உணர்ச்சி தேவைகளையும்கூட பூர்த்தி செய்கிறது. ஆனால், இயற்கைக்கு முரணான பழக்கங்களைக் கடவுள் அருவருக்கிறார். வாழ்க்கையின் இந்த முக்கிய அம்சத்தில் கிறிஸ்தவத் தம்பதிகள் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும், ஒருவரிடம் ஒருவர் உண்மையான அன்பைக் காட்ட வேண்டும். குறிப்பாக, யெகோவாவின் மனதைப் புண்படுத்தும் எந்தச் செயலிலும் அவர்கள் ஈடுபடக் கூடாது.
11. யெகோவாவுக்குப் பிரியமாய் நடந்துகொண்டதால் ரூத் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றாள்?
11 மணவாழ்வில் சந்தோஷ அலை அடிக்க வேண்டுமே தவிர சுனாமி அடிக்கக் கூடாது. குறிப்பாக, கிறிஸ்தவக் குடும்பங்களில் சாந்தமும் சாமாதானமும் குடிகொண்டிருக்க வேண்டும். சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு... தங்கள் கணவர்களை இழந்த வயதான நகோமியும் அவளுடைய மருமகள்களான ஓர்பாளும் ரூத்தும் மோவாப் தேசத்திலிருந்து யூதா தேசத்திற்குப் போகையில் என்ன நடந்ததென்று பார்ப்போம். பிறந்த வீட்டுக்கே திரும்பிப் போகும்படி நகோமி எவ்வளவு சொல்லியும் மோவாபிய பெண்ணான ரூத் மட்டும் போகவில்லை. காரணம், அவள் உண்மைக் கடவுளை வணங்கினாள். ‘தேவனாகிய யெகோவாவுடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்ததால் அவளுக்கு நிறைவான பலன் கிடைக்கும்’ என போவாஸ் அவளை வாழ்த்தினார். (ரூத் 1:9; 2:12) கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை அவள் பெரிதும் மதித்ததால் வயதில் முதிர்ந்த... கடவுளுடைய உண்மை ஊழியரான... போவாஸை மணந்துகொண்டாள். கடவுளுடைய புதிய உலகில் உயிர்பெற்று வரும்போது... அவள் இயேசு கிறிஸ்துவின் மூதாதையாக இருந்ததை அறிந்து சந்தோஷப்படுவாள். (மத். 1:1, 5, 6; லூக். 3:23, 32) யெகோவாவுக்குப் பிரியமாய் நடந்துகொண்டதால் அவள் எவ்வளவு பெரிய ஆசீர்வாதத்தைப் பெற்றாள்!
அழகான மணவாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்
12. அழகான மணவாழ்வுக்கான அருமையான ஆலோசனைகளை எங்கு காணலாம்?
12 மணவாழ்வு அழகாய் அமைவதற்கு நாம் என்னவெல்லாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பதைப் படைப்பாளர் நமக்குச் சொல்லித் தருகிறார். மணவாழ்வைப் பற்றி அவருக்குத் தெரிந்தளவுக்கு வேறெந்த மனிதனுக்கும் தெரியாது. மணவாழ்வில் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க பைபிள் மட்டுமே சிறந்த ஆலோசனை தருகிறது. அது எப்போதும் சரியாகவும் இருக்கிறது. எனவே, ஆலோசனை கொடுப்பவர் பைபிள் அடிப்படையில் ஆலோசனை கொடுப்பதே நல்லது. உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய வழிநடத்துதலால் இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒவ்வொருவனும் தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.” (எபே. 5:33) இந்தத் தெளிவான ஆலோசனையை முதிர்ச்சி வாய்ந்த எந்தக் கிறிஸ்தவரும் புரிந்துகொள்வார். ஆனால், யெகோவாவின் ஆலோசனையை அவர் பின்பற்றுவாரா என்பதுதான் கேள்வி. மணவாழ்வு எனும் பரிசை உண்மையிலேயே மதித்தால் அவர் நிச்சயம் பின்பற்றுவார்.b
13. ஒன்று பேதுரு 3:7-ல் உள்ள ஆலோசனையைப் பின்பற்றாமல் போனால் என்ன ஆகும்?
13 ஒரு கிறிஸ்தவ கணவர் தன் மனைவியிடம் பண்பாய், பாசமாய் நடந்துகொள்ள வேண்டும். அதைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கணவர்களே, நீங்களும் உங்கள் மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழுங்கள்; பெண்ணானவள் உங்களைவிடப் பலவீனமாக இருப்பதாலும், கடவுளுடைய அளவற்ற தயவினால் முடிவில்லா வாழ்வை உங்களோடுகூடப் பெறப்போவதாலும், அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்; இல்லாவிட்டால், உங்கள் ஜெபங்கள் கேட்கப்படாது.” (1 பே. 3:7) யெகோவா சொல்கிற ஆலோசனையைக் கணவன் கேட்காவிட்டால் யெகோவாவும் அவருடைய ஜெபங்களைக் கேட்க மாட்டார். கணவனும் மனைவியும் யெகோவாவிடம் தங்களுக்கு உள்ள நல்லுறவை இழந்துவிடலாம். அப்போது... மன உளைச்சலும் சண்டைகளும் கோபாவேசங்களும் அவர்கள் வீட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடலாம்.
14. ஒரு குடும்பத்தில் பாசமுள்ள மனைவியின் பங்கு என்ன?
14 பைபிளின் ஆலோசனைக்கும் கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கும் மனைவி அடிபணிந்தால் அவளுடைய வீட்டில் சமாதானம் தவழும், சந்தோஷம் தழைக்கும். இயல்பாகவே, ஒரு கிறிஸ்தவக் கணவர் தன் மனைவிமீது அன்பைப் பொழிவார், அவளை ஆன்மீக ரீதியில் வழிநடத்துவார், பாதுகாப்பார். அதேபோல் மனைவியும் தன் கணவனின் அன்புக்காக ஏங்குவாள். ஆனால், அந்த அன்பைப் பெற, கணவனுக்குப் பிடித்த மாதிரி அவள் நடந்துகொள்ள வேண்டும். “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்” என்று நீதிமொழிகள் 14:1 சொல்கிறது. பாசக்காரியாக... புத்திசாலியாக... இருக்கும் மனைவி தன் வீட்டைச் சந்தோஷ சாம்ராஜ்யமாக்குவாள். கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை அவள் உண்மையிலேயே மதிப்பதை வாழ்க்கையில் காட்டுவாள்.
15. எபேசியர் 5:22-25-ல் என்ன ஆலோசனை கொடுக்கப்படுகிறது?
15 சபையை இயேசு நடத்திய விதத்தைப் பின்பற்றி கணவனும் மனைவியும் நடந்துகொள்ளும்போது கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை அவர்கள் மதிக்கிறார்கள் என்று சொல்ல முடியும். (எபேசியர் 5:22-25-ஐ வாசியுங்கள்.) ‘நீயா நானா’ என்று போட்டி போடுவது... கோபித்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாகப் பேசாமல் இருப்பது... போன்று கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாத குணங்களை வேரோடு பிடுங்கியெறிந்துவிட்டு தம்பதிகள் ஒருவரையொருவர் உயிராய் நேசிக்கும்போது அவர்கள் வாழ்க்கை அடிக்கரும்பாய் இனிக்கும்!
யாரும் அவர்களைப் பிரிக்கக் கூடாது
16. சில கிறிஸ்தவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்வதில்லை?
16 பெரும்பாலோர் திருமணம் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்குத் தங்கள் மனதிற்கும் யெகோவாவின் மனதிற்கும் பிடித்தமாதிரி மணத்துணை அமைவதில்லை. இன்னும் சிலருக்கோ, திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசையே இருப்பதில்லை. அதுவும் கடவுள் கொடுத்த வரமே என்று பைபிள் சொல்கிறது. மணவாழ்வுக்கே உரிய பொறுப்புகள் எதுவும் அவர்களுக்கு இல்லாததால் யெகோவாவின் சேவையில் நிறைய நேரம் செலவிட முடிகிறது. என்றாலும், மணம் செய்துகொள்ளாதவர்கள் மனம்போல் வாழ நினைக்காமல் யெகோவாவின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் அவர்களுக்கும் சந்தோஷம் சாத்தியமே.—மத். 19:10-12; 1 கொ. 7:1, 6, 7, 17.
17. (அ) மணவாழ்வைக் குறித்து இயேசு கொடுத்த என்ன ஆலோசனையை நாம் மனதில் வைக்க வேண்டும்? (ஆ) ஒரு கிறிஸ்தவரின் மனதில் அடுத்தவன் மனைவிக்கான ஆசை தலைதூக்கினால் அவர் என்ன செய்ய வேண்டும்?
17 நாம் மணமானவராக இருந்தாலும் சரி மணமாகாதவராக இருந்தாலும் சரி, நாம் அனைவருமே இயேசுவின் வார்த்தைகளை மனதில் வைக்க வேண்டும்: “கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்’ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? அதனால், அவர்கள் இருவராக அல்ல, ஒரே உடலாக இருப்பார்கள். எனவே, கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்.” (மத். 19:4-6) அடுத்தவன் மனைவிக்காக ஆசைப்படுவது அசிங்கம், பெரும் பாவம். (உபா. 5:21) ஒரு கிறிஸ்தவரின் மனதில் அப்படிப்பட்ட கேவலமான ஆசை தலைதூக்கினால், உடனடியாக அவர் அதை அகற்றிவிட வேண்டும். அவருக்குப் பயங்கரமான மன வேதனை உண்டானாலும்கூட அவர் அதைச் செய்துதான் ஆகவேண்டும். அந்தக் கீழ்த்தரமான ஆசையை அவர் முளையிலேயே கிள்ளியெறியாததால்தான் அது அவருடைய மனதிற்குள் வேர்விட்டு வளர்ந்திருக்கிறது. (மத். 5:27-30) எனவே, இப்படிப்பட்ட ஆசையை ஆரம்பத்திலேயே நசுக்கிப்போட வேண்டும். வஞ்சகமிக்க இதயத்தின் கெட்ட ஆசைகளுக்கு அணைபோட வேண்டும்.—எரே. 17:9.
18. மணவாழ்வு எனும் பரிசை நாம் எப்படிக் கருத வேண்டும்?
18 இன்று உலகில் எத்தனையோ பேருக்கு... யெகோவா தேவனையும் அவர் தந்த மணவாழ்வு என்ற அருமையான பரிசையும் பற்றி ஒன்றுமே தெரியாது. இருந்தாலும் மணவாழ்வை மதிக்கிறார்கள். அவர்களே அந்தளவு மதிக்கிறார்கள் என்றால்... ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவாவை வணங்கும் நாம் இன்னும் எந்தளவு மதிக்க வேண்டும்? ஆம், கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை உண்மையிலேயே மதிக்கிறோம் என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பளிச்சிட வேண்டும்.—1 தீ. 1:11.
[அடிக்குறிப்புகள்]
a நீதிமொழிகள் 5:15-18 (பொ.மொ.): “உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு. உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா? அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அந்நியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே. உன் நீரூற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.”
b மணவாழ்வு குறித்து மேலும் அறிய... ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகத்தில் அதிகாரங்கள் 10, 11-ஐப் பாருங்கள்.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
அழகான மணவாழ்வு யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது, குடும்பத்தார் அனைவருக்கும் அளவிலா ஆனந்தத்தை அள்ளித் தருகிறது
[பக்கம் 5-ன் படம்]
கடவுள் தந்த மணவாழ்வு எனும் பரிசை ரூத் மதித்தாள்
[பக்கம் 7-ன் படம்]
மணவாழ்வு எனும் பரிசை உண்மையிலேயே மதிக்கிறீர்கள் என்பதைச் செயலில் காட்டுகிறீர்களா?