“புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்”
“பரிசேயர்களின் வெளிவேஷமாகிய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று சீடர்களிடம் இயேசு சொன்னார். (லூக். 12:1) இதே விஷயத்தை இன்னொரு இடத்தில் வாசிக்கும்போது... அவர் பரிசேயர்களின் “போதனையை” கண்டித்தே அவ்வாறு கூறினார் என்பது தெளிவாகிறது.—மத். 16:12.
பைபிள் சில சமயங்களில் தீய செல்வாக்கை ‘புளித்த மாவுக்கு,’ அதாவது ஈஸ்ட்டிற்கு, ஒப்பிடுகிறது. எனவே, பரிசேயர்களின் போதனைகளும் மனப்போக்கும் மற்றவர்கள்மீது தீய செல்வாக்கு செலுத்தியதில் ஆச்சரியமே இல்லை. பரிசேயர்களின் போதனைகள் ஏன் ஆபத்தானவையாய் இருந்தன?
1 பரிசேயர்கள் தாங்கள் நீதிமான்கள் என்று பெருமையடித்துக் கொண்டார்கள், பொது மக்களைக் கேவலமாகக் கருதினார்கள்.
இயேசு சொன்ன ஓர் உவமை... அவர்கள் எந்தளவு தங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொண்டார்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு, ‘கடவுளே, கொள்ளையடிப்பவர்களையும் அநீதிமான்களையும் மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் போலவோ, வரி வசூலிக்கிற இவனைப் போலவோ நான் இல்லாததற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். வாரத்தில் இரண்டு முறை விரதம் இருக்கிறேன், எனக்குக் கிடைக்கிற எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பாகத்தைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்’ என்று மனதிற்குள் ஜெபம் செய்தான். தூரத்தில் நின்றுகொண்டிருந்த வரி வசூலிப்பவனோ தன்னுடைய கண்களை வானத்திற்கு ஏறெடுக்கக்கூடத் துணியாமல், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியான எனக்குத் தயவு காட்டுங்கள்’ என்று ஜெபம் செய்தான்.”—லூக். 18:11-13.
வரி வசூலிப்பவனின் மனத்தாழ்மையைப் பாராட்டி இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவனைவிட [பரிசேயனைவிட] இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டிற்குப் போனான்; ஏனென்றால், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்.” (லூக். 18:14) வரி வசூலிப்பவர்கள் மோசடிக்காரர்கள் என்று பெயர் எடுத்திருந்தார்கள். ஆனால், அவர்களில் சிலர் இயேசுவுக்குச் செவிகொடுத்ததால், இயேசு அவர்களுக்கு உதவ விரும்பினார். நமக்குத் தெரிந்து... வரி வசூலிப்பவர்களில் குறைந்தது இரண்டு பேர்—மத்தேயுவும் சகேயுவும்—அவருடைய சீடர்களானார்கள்.
நமக்குக் கடவுள் கொடுத்திருக்கும் பொறுப்புகள், திறமைகள் காரணமாக அல்லது மற்றவர்களுடைய குறைபாடுகள், தோல்விகள் காரணமாக நம்மை உயர்ந்தவர்களாகக் கருதுகிறோமா? அப்படிப்பட்ட எண்ணம் இருந்தால் அதை உடனடியாக விட்டொழிக்கவேண்டும். ஏனென்றால், “அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சொந்த விருப்பங்களை நாடாது, எரிச்சல் அடையாது, தீங்கைக் கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்துச் சந்தோஷப்படாமல் சத்தியத்தைக் குறித்துச் சந்தோஷப்படும்” என்று பைபிள் சொல்கிறது.—1 கொ. 13:4-6.
அப்போஸ்தலன் பவுலுக்கு இருந்த அதே மனப்பான்மை நமக்கும் இருக்க வேண்டும். “பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார்” என்று அவர் சொன்னார். “அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்” என்றும் சொன்னார்.—1 தீ. 1:15.
சிந்திக்கச் சில கேள்விகள்:
நான் ஒரு பாவி என்பதையும் யெகோவாவின் அளவற்ற கருணை இல்லையென்றால் நான் மீட்புப் பெற முடியாது என்பதையும் உணர்ந்திருக்கிறேனா? அல்லது நீண்ட காலமாகக் கடவுளுக்குச் சேவை செய்து வருவதால் எனக்குக் கிடைத்துள்ள அனுபவம்... கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள்... எனக்குள் இருக்கும் திறமைகள்... காரணமாக மற்றவர்களைவிட உயர்ந்தவனாக என்னைக் கருதுகிறேனா?
2 பரிசேயர்கள் மற்றவர்களுக்கு முன்பாகத் தங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்தார்கள். முதன்மையான நிலையையும் பெரிய பட்டங்களையும் விரும்பினார்கள்.
ஆனால், இயேசு அவர்களைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறார்கள்; தாங்கள் அணியும் வேதாகமத் தாயத்துகளை அகலமாக்குகிறார்கள்; தங்கள் அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபக்கூடங்களில் முன்பக்க இருக்கைகளையுமே விரும்புகிறார்கள்; அதோடு, சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும், தங்களை ரபீ என்று அழைக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்.” (மத். 23:5-7) இவர்களுக்கும் இயேசுவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! கடவுளுடைய மகனாக... பரிபூரணராக... இருந்தபோதிலும் அவர் மனத்தாழ்மையாய் நடந்துகொண்டார். ஒருசமயம் அவரை “நல்ல போதகரே” என்று ஒருவன் அழைத்தபோது, “என்னை ஏன் நல்லவன் என்று அழைக்கிறாய்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் ஒருவரும் இல்லை” என்று சொன்னார். (மாற். 10:18) இன்னொரு சமயம், தம் சீடர்களின் கால்களைக் கழுவி மனத்தாழ்மையாய் இருக்கக் கற்பித்தார். ஆம், மனத்தாழ்மையாய் இருக்கும்படி வாயால் மட்டும் சொல்லாமல் வாழ்ந்தும் காட்டினார்.—யோவா. 13:1-15.
ஓர் உண்மையான கிறிஸ்தவர் சக கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். (கலா. 5:13) முக்கியமாக, சபையில் கண்காணிகளாகச் சேவை செய்ய விரும்புகிறவர்கள் அவ்வாறு உதவ வேண்டும். ‘கண்காணியாவதற்குத் தகுதிபெற முயலுவது’ நல்ல விஷயம்தான். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசைதான் அதற்கு அடிப்படைக் காரணமாய் இருக்க வேண்டும். கண்காணி என்ற பொறுப்பு முதன்மையான நிலையையோ அதிகாரத்தையோ குறிப்பதில்லை. கண்காணிகளாகச் சேவை செய்பவர்கள் இயேசுவைப் போல ‘மனத்தாழ்மையாக’ இருக்க வேண்டும்.—1 தீ. 3:1, 6; மத். 11:29.
சிந்திக்கச் சில கேள்விகள்:
பிரபலமாய்த் திகழ்வதற்காகவோ கூடுதல் பொறுப்புகளைப் பெறுவதற்காகவோ மூப்பர்களின் தயவைச் சம்பாதிக்க முயற்சி செய்கிறேனா? கடவுளுடைய சேவையில் பேரும் புகழும் தேடித் தருவதாகத் தோன்றும் பொறுப்புகளைப் பெறுவதிலேயே குறியாய் இருக்கிறேனா? சொல்லப்போனால், மற்றவர்கள் முன்பு நட்சத்திரமாய் ஜொலிக்க விரும்புகிறேனா?
3 சாதாரண மக்கள் திருச்சட்டத்தைப் பின்பற்றுவதைப் பரிசேயர்களின் சட்டங்களும் பாரம்பரியங்களும் பாரமாக்கின.
இஸ்ரவேலர் யெகோவாவை வழிபடுவதற்கான அடிப்படை விதிமுறைகள் திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்தன தவிர நுணுக்கமான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு, ஓய்வுநாளில் வேலை செய்வதைத் திருச்சட்டம் தடை செய்தது. ஆனால் எவையெல்லாம் வேலை, எவையெல்லாம் வேலை இல்லை என்று அது திட்டவட்டமாகச் சொல்லவில்லை. (யாத். 20:10) அதனால், பரிசேயர்கள் தங்களுடைய சொந்த சட்டங்களையும் விளக்கங்களையும் பாரம்பரியங்களையும் அதில் புகுத்தினார்கள். அவர்கள் உருவாக்கிய சட்டங்களை இயேசு நிராகரித்தார், ஆனால் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தார். (மத். 5:17, 18; 23:23) திருச்சட்டம் கொடுக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் அறிந்திருந்தார். இரக்கத்தையும் தயவையும் காட்டும்படி கடவுள் எதிர்பார்த்ததைப் புரிந்துகொண்டார். இயேசு எப்போதும் நியாயமாகவே நடந்துகொண்டார். சீடர்கள் தவறு செய்தபோதிலும் பொறுத்துக்கொண்டார். உதாரணத்திற்கு, அவர் கைதுசெய்யப்படவிருந்த இரவன்று, தம்மோடு இருந்த மூன்று சீடர்களிடம் விழித்திருக்கும்படி கூறினார். அவர்களோ மீண்டும் மீண்டும் தூங்கி விழுந்தார்கள். இயேசு அவர்கள்மீது கோபப்படவில்லை. “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று கனிவாகச் சொன்னார்.—மாற். 14:34-42.
சிந்திக்கச் சில கேள்விகள்:
கெடுபிடியான சட்டங்களை வகுத்து மற்றவர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென வற்புறுத்துகிறேனா? எனக்குச் சரி என்று படுவதையே மற்றவர்களும் செய்ய வேண்டுமென நினைக்கிறேனா? மற்றவர்களிடம் மட்டுக்குமீறி எதிர்பார்க்கிறேனா?
பரிசேயர்களின் போதனைக்கும் இயேசுவின் போதனைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது இருக்கிறதா? இருந்தால், ஏன் உடனடியாக மாற்றிக்கொள்ளக்கூடாது?
[பக்கம் 28-ன் படம்]
பரிசேயர்கள் வேதாகமத் தாயத்துகளை அணிந்திருந்தார்கள்.—மத். 23:2, 5.
[பக்கம் 29-ன் படங்கள்]
கர்வம்பிடித்த பரிசேயர்களைப் போல் இல்லாமல் மனத்தாழ்மையுள்ள மூப்பர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்கிறார்கள்
[பக்கம் 30-ன் படம்]
மற்றவர்களிடம் மட்டுக்குமீறி எதிர்பார்க்காமல் இயேசுவைப் போல் நியாயமாய் நடந்துகொள்கிறேனா?