உறுதியாய் நில்லுங்கள், சாத்தானின் கண்ணியில் சிக்காதீர்கள்!
‘பிசாசின் சூழ்ச்சிகளை . . . உறுதியோடு எதிர்த்து நில்லுங்கள்.’—எபே. 6:11.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் எப்படிப் பொருளாசை எனும் கண்ணியில் சிக்காதிருக்கலாம்?
மணத்துணைக்குத் துரோகம் செய்யும் கண்ணியில் ஒருவர் எப்படிச் சிக்காதிருக்கலாம்?
பொருளாசை, மணத்துணைக்குத் துரோகம் எனும் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது ஏன் நல்லது?
1, 2. (அ) பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்கள் மீதும் ‘வேறே ஆடுகள்’ மீதும் சாத்தானுக்கு ஏன் துளிகூட ஈவிரக்கம் இல்லை? (ஆ) இந்தக் கட்டுரையில் சாத்தான் பயன்படுத்தும் என்னென்ன கண்ணிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
பிசாசாகிய சாத்தானுக்கு மனிதர்கள்மீது ஈவிரக்கமே கிடையாது, முக்கியமாக யெகோவாவை வணங்குகிறவர்கள்மீது துளிகூட கிடையாது. சொல்லப்போனால், பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் இன்று பூமியில் மீந்திருப்பவர்களுடன் அவன் போர் செய்துகொண்டிருக்கிறான். (வெளி. 12:17) ஏனென்றால், தைரியமிக்க அந்தக் கிறிஸ்தவர்கள் இன்று பிரசங்க வேலையை முன்நின்று நடத்துகிறார்கள். அதோடு, சாத்தானே இந்த உலகத்தை ஆளுகிறான் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார்கள். பிசாசுக்கு ‘வேறே ஆடுகளிடமும்’ துளி அன்பில்லை. (யோவா. 10:16) ஏனென்றால், அவர்கள் பரலோக நம்பிக்கை உள்ள அந்தக் கிறிஸ்தவர்களை ஆதரிக்கிறார்கள். அதோடு, சாத்தான் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத முடிவில்லா வாழ்வைப் பெறப் போகிறார்கள். எனவே, அவன் வெறியோடு அலைவதில் ஆச்சரியமே இல்லை. நமக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, சாத்தானுக்கு நாம் அனைவருமே எதிரிகள்தான். நம்மை அவனுடைய கண்ணியில் சிக்க வைப்பதிலேயே அவன் குறியாக இருக்கிறான்.—1 பே. 5:8.
2 அதற்காக, அவன் பல விதமான கண்ணிகளைப் பயன்படுத்துகிறான். மக்களுடைய ‘மனக்கண்களை அவன் குருடாக்கியிருப்பதால்’ நற்செய்தியை அவர்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை, அவன் விரித்திருக்கிற வஞ்சக வலை அவர்கள் கண்களுக்குத் தெரிவதுமில்லை. அதுமட்டுமல்ல, நற்செய்திக்குச் செவிசாய்த்திருக்கும் சிலரைக்கூட பிசாசு தன் வலையில் சிக்க வைக்கிறான். (2 கொ. 4:3, 4) (1) கட்டுப்பாடில்லாத பேச்சு, (2) மனித பயமும் சகாக்களின் வற்புறுத்தலும், (3) மிதமிஞ்சிய குற்றவுணர்வு என சாத்தான் பயன்படுத்தும் மூன்று கண்ணிகளைப் பற்றியும் அவற்றில் நாம் எப்படிச் சிக்காமலிருக்கலாம் என்பதைப் பற்றியும் முந்தின கட்டுரையில் தெரிந்துகொண்டோம். சாத்தான் பயன்படுத்தும் இன்னும் இரண்டு கண்ணிகளைப் பற்றியும் அவற்றில் சிக்காமலிருப்பதற்கான வழிகளைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம். அவை: பொருளாசை, மணத்துணைக்குத் துரோகம் செய்வதற்கான தூண்டுதல்.
பொருளாசை எனும் கண்ணி நம்மை நெருக்கிப் போட்டுவிடும்
3, 4. இந்த உலகத்தின் கவலை எப்படி ஒருவரைப் பொருளாசை எனும் கண்ணியில் சிக்க வைக்கலாம்?
3 முட்செடிகள் உள்ள நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் பற்றி இயேசு ஓர் உவமையில் குறிப்பிட்டார். ஒருவர் நற்செய்தியைக் கேட்டாலும் “இவ்வுலகத்தின் கவலையும் செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அவர் பலன் கொடுக்காமல்போகிறார்” என்று அவர் சொன்னார். (மத். 13:22) ஆம், நமது எதிரி பயன்படுத்தும் கண்ணிகளில் ஒன்று பொருளாசை.
4 இரண்டு அம்சங்கள் ஒன்றுசேர்ந்து நற்செய்தியை நெருக்கி போடுகின்றன. ஓர் அம்சம்: “இவ்வுலகத்தின் கவலை.” இன்று நாம் ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்வதால் பல விஷயங்கள் உங்களுக்குக் கவலை தரலாம். (2 தீ. 3:1) ராக்கெட் வேகத்தில் எகிறும் விலைவாசி, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் குடும்பத்தைச் சமாளிக்க முடியாமல் நீங்கள் விழிபிதுங்கி நிற்கலாம். நாளைக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்றுகூட நீங்கள் கவலைப்படலாம், ‘வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு குடும்பம் நடத்த போதுமான வருமானம் இருக்குமா?’ என்றுகூட யோசிக்கலாம். இதுபோன்ற கவலைகளால், பணம் மட்டுமே பாதுகாப்பு தரும் என்று நினைத்துக்கொண்டு சிலர் பணத்தையும் பொருளையும் குவிப்பதில் இறங்கியிருக்கிறார்கள்.
5. ‘செல்வத்தின் சக்தி’ நம்மை எப்படி வஞ்சிக்கலாம்?
5 இயேசு இன்னொரு அம்சத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். அதுதான்: “செல்வத்தின் வஞ்சக சக்தி.” கவலையுடன் இதுவும் சேர்ந்துகொண்டு நற்செய்தியை நெருக்கிப் போடலாம். “பணம் பாதுகாப்பு தரும்” என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. (பிர. 7:12, NW ) ஆனால், பணம்தான் எல்லாம் என்று நினைத்து அதன் பின்னால் போவது முட்டாள்தனம். எந்தளவுக்கு ஓடி ஓடிப் பணத்தையும், பொருளையும் சம்பாதித்தார்களோ அந்தளவுக்குப் பொருளாசை எனும் கண்ணி தங்களை நெருக்கிப் போட்டிருப்பதைப் பலர் உணர்ந்திருக்கிறார்கள். சிலரோ பணத்திற்கு அடிமையாகவே ஆகியிருக்கிறார்கள்.—மத். 6:24.
6, 7. (அ) வேலை செய்யுமிடத்தில் பொருளாசை எப்படி ஆபத்தை ஏற்படுத்தலாம்? (ஆ) ஓவர் டைம் செய்ய வேண்டிய சூழலில் ஒரு கிறிஸ்தவர் எதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
6 பண ஆசை நமக்கே தெரியாமல் நமக்குள் துளிர்க்கலாம். உதாரணத்திற்கு, இந்தச் சூழ்நிலையைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். வேலை செய்யுமிடத்தில் முதலாளி உங்களிடம் வந்து இப்படிச் சொல்கிறார்: “ஒரு சந்தோஷமான செய்தியை உங்ககிட்ட சொல்லணும். நம்ம கம்பெனிக்கு ஒரு பெரிய கான்டிராக்ட் கிடைச்சிருக்கு. அதனால சில மாசங்களுக்கு நீங்க அடிக்கடி ஓவர் டைம் செய்ய வேண்டியிருக்கும். ஆனா, கவலைப்படாதீங்க, கைநிறைய சம்பளம் கிடைக்கும், அதுக்கு நான் கியாரண்டி.” இதுபோல உங்கள் முதலாளி உங்களிடம் சொன்னால் என்ன செய்வீர்கள்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது முக்கியமான கடமை என்பது உண்மைதான். ஆனால், அந்த ஒரு கடமை மட்டுமே உங்களுக்கு இல்லை. (1 தீ. 5:8) இன்னும் பல விஷயங்களுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஓவர் டைம் என்றால் எவ்வளவு நேரம் செய்ய வேண்டியிருக்கும்? அதனால், சபைக் கூட்டம், ஊழியம், குடும்ப வழிபாடு போன்றவை தடைபடுமா?
7 எது மிக முக்கியமென யோசியுங்கள்: ஓவர் டைம் செய்தால் கிடைக்கும் கூடுதல் சம்பளமா? அல்லது யெகோவாவுடன் உள்ள உங்கள் பந்தமா? நிறைய நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கடவுளுடைய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கவிடாமல் செய்துவிடுமா? கடவுளிடம் உங்களுக்கு இருக்கும் பந்தத்தையும் உங்கள் குடும்பத்தாருக்கு இருக்கும் பந்தத்தையும் பலப்படுத்த நீங்கள் தவறினால் பொருளாசை உங்களை எந்தளவு பாதிக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா? இதுதான் இப்போது உங்கள் நிலைமை என்றால் உறுதியாய் நின்று, பொருளாசை எனும் கண்ணி உங்களை நெருக்கிப் போடாதபடி எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?—1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.
8. யாருடைய உதாரணங்கள் நாம் வாழும் விதத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க உதவும்?
8 பொருளாசை நம்மை நெருக்கிப் போடாதிருக்க, நாம் வாழும் விதத்தைக் குறித்து அவ்வப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டும். பரிசுத்த காரியங்களை மதிக்காமல்போன ஏசாவைப் போல் இருக்க ஒருபோதும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். (ஆதி. 25:34; எபி. 12:16) இயேசுவின் அழைப்பை ஏற்க மறுத்த பணக்கார இளைஞனைப் போல் இருக்கவும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அவனிடமிருந்த சொத்துப்பத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, தம்மைப் பின்பற்றி வரும்படி இயேசு அழைத்தபோது அவன் “துக்கத்தோடு திரும்பிப் போனான்; ஏனென்றால், அவனிடம் நிறையச் சொத்துக்கள் இருந்தன.” (மத். 19:21, 22) பொருளாசை எனும் கண்ணியில் அந்த இளைஞன் சிக்கியதால் ஓர் அரும்பெரும் வாய்ப்பை இழந்தான். ஆம், இதுவரை இந்த மண்ணில் வாழ்ந்தவர்களிலேயே மிகப் பெரிய மனிதரைப் பின்பற்றும் பாக்கியத்தை இழந்தான்! எனவே, இயேசு கிறிஸ்துவின் சீடராய் இருக்கும் பாக்கியத்தை இழந்துவிடாதபடி நீங்கள் ஜாக்கிரதையாய் இருங்கள்.
9, 10. பொருளாசையைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?
9 பணத்துக்காகவும் பொருளுக்காகவும் வீணாய்க் கவலைப்படாதிருக்க இயேசுவின் பின்வரும் அறிவுரைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்: “ ‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாமல் இருங்கள். இவற்றையெல்லாம் பெறுவதற்கு இந்த உலகத்தார்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார்.”—மத். 6:31, 32; லூக். 21:34, 35.
10 செல்வத்தின் வஞ்சக சக்திக்கு அடிமையாகாதிருக்க பைபிள் எழுத்தாளரான ஆகூரின் கண்ணோட்டத்தை நாமும் வளர்த்துக்கொள்ள கடினமாய் முயற்சி செய்ய வேண்டும். “மிக ஏழையாகவோ அல்லது மிகச் செல்வந்தனாகவோ என்னை ஆக்கவேண்டாம். அன்றாடம் எது தேவையோ அதை மட்டும் எனக்குத் தாரும்” என்று கடவுளிடம் அவர் வேண்டினார். (நீதி. 30:8, ஈஸி டு ரீட் வர்ஷன்) பணம் தரும் பாதுகாப்பைப் பற்றி மட்டுமல்ல, அதன் வஞ்சக சக்தியையும் ஆகூர் அறிந்திருந்தார். இவ்வுலகத்தின் கவலையும் செல்வத்தின் வஞ்சக சக்தியும் சேர்ந்து யெகோவாவுடன் நமக்குள்ள பந்தத்தை முறித்துப் போடலாம் என்பதை நினைவில் வையுங்கள். பணத்துக்காகவும் பொருளுக்காகவும் தேவையில்லாமல் கவலைப்படுவதால் நம்முடைய நேரமும் வீணாகும், சக்தியும் குறைந்துபோகும். பிறகு, கடவுளுடைய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்ற ஆசையும் அடியோடு வற்றிவிடும். எனவே, சாத்தான் விரிக்கும் பொருளாசை எனும் வலையில் சிக்காதிருக்கத் தீர்மானமாய் இருங்கள்.—எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.
மணத்துணைக்குத் துரோகம் செய்வது—மறைந்திருக்கும் கண்ணி
11, 12. வேலை செய்யுமிடத்தில் ஒரு கிறிஸ்தவர் எப்படி மணத்துணைக்குத் துரோகம் செய்யும் கண்ணியில் சிக்கிவிடலாம்?
11 பெரிய பெரிய விலங்குகளைப் பிடிப்பதற்கு அவை அடிக்கடி செல்லும் பாதையில் வேடர்கள் ஒரு குழியை வெட்டுவார்கள். அந்தக் குழி வெளியே தெரியாதபடி அதன்மேல் இலைதழைகளைப் பரப்பிவைப்பார்கள். சாத்தான் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு கண்ணியைப் பயன்படுத்தித்தான் நிறையப் பேரைத் தன் வலையில் சிக்க வைத்திருக்கிறான். அந்தக் கண்ணிதான் ஒழுக்கக்கேடு. (நீதி. 22:14; 23:27) நிறையக் கிறிஸ்தவர்கள் தெரிந்தே இந்தப் படுகுழியில் விழுந்திருக்கிறார்கள். மணமான கிறிஸ்தவர்களில் சிலர் கள்ளக் காதலால் ஒழுக்கக்கேட்டில் விழுந்திருக்கிறார்கள்.
12 இத்தகைய கள்ளக் காதல் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஆரம்பமாகலாம். சொல்லப்போனால், 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களும் கிட்டத்தட்ட 75 சதவீதமான ஆண்களும் சக பணியாளர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாலாருடன் வேலை செய்ய வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் அவர்களிடம் எப்படிப் பழகுகிறீர்கள்? அவர்களுடன் உள்ள தொடர்பை வேலையுடன் மட்டும் நிறுத்திக்கொள்கிறீர்களா? ஓர் உதாரணத்தைக் கவனிப்போம்: ஒரு சகோதரி தான் வேலை செய்யும் இடத்திலுள்ள ஓர் ஆணுடன் அடிக்கடி பேசிப் பேசி அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது. கடைசியில், தன் சொந்தக் கதை சோகக் கதை என எல்லாவற்றையும் அவரிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறார். இன்னொரு உதாரணத்தைக் கவனிப்போம்: தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகும் ஒரு சகோதரர் இப்படி யோசிக்கிறார்... “இவள் என் கருத்துக்கு மதிப்புக்கொடுக்கிறாள். நான் பேசுகிறதைக் காதுகொடுத்துக் கேட்கிறாள். என்மீது மதிப்புமரியாதை வைத்திருக்கிறாள். என் மனைவி மட்டும் இப்படியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” இதுபோன்ற சூழலில் உள்ள கிறிஸ்தவர்கள் மணத்துணைக்குத் துரோகம் செய்ய வாய்ப்பிருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா?
13. கள்ளத்தொடர்பு எப்படிச் சபைக்குள்ளும் தலைதூக்கலாம்?
13 இப்படிப்பட்ட கள்ளத்தொடர்பு சபைக்குள்ளும் தலைதூக்கலாம். இந்த நிஜ அனுபவத்தைக் கவனியுங்கள். டானியேலும் அவரது மனைவி சாராவும்a ஒழுங்கான பயனியர்களாக இருந்தார்கள். டானியேல் எந்த வேலை கொடுத்தாலும் தட்டிக்கழிக்க மாட்டார். சபையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுச் செய்தார். அவர் ஐந்து பேருக்கு பைபிள் படிப்பு நடத்தி வந்தார். அவர்களில் மூவர் ஞானஸ்நானம் பெற்றார்கள். புதிதாக ஞானஸ்நானம் எடுத்த இந்தச் சகோதரர்களுக்குச் சில விஷயங்களில் உதவி தேவைப்பட்டது. டானியேல் சபை காரியங்களில் மூழ்கிப்போயிருந்ததால் பெரும்பாலும் சாரா அந்தச் சகோதரர்களுக்கு உதவினாள். இதுவே வாடிக்கையாகிவிட்டது. அந்தப் புதிய சகோதரர்களுக்குத் தேவைப்பட்ட ஆறுதலையும் ஆதரவையும் சாரா கொடுத்தாள். அவளுக்குத் தேவைப்பட்ட பாசத்தையும் பரிவையும் அவர்கள் காட்டினார்கள். சாத்தான் தங்களுக்கு வலை விரிப்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள். டானியேல் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்களுக்கு உதவி செய்து செய்தே என் மனைவி ஓய்ந்து போனாள். அவளுக்குத் தேவையான பாசமும் பரிவும் கிடைக்கவில்லை. கடவுளிடமிருந்துகூட மெல்ல மெல்ல விலகிப்போக ஆரம்பித்திருந்தாள். இப்படியிருக்க, நானும் அவளைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் பெரிய இடி விழுந்தது. நான் பைபிள் படிப்பு நடத்திய மாணாக்கர் ஒருவனுடன் சேர்ந்துகொண்டு எனக்குத் துரோகம் செய்துவிட்டாள். சபை காரியங்களிலேயே மூழ்கிப்போயிருந்ததால் கடவுளிடமிருந்து அவள் மெல்ல மெல்ல விலகிச் சென்றதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.” இதுபோன்ற பேரிடி உங்களைத் தாக்காதிருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
14, 15. எதை மனதில் வைப்பது மணத்துணைக்குத் துரோகம் செய்யாதிருக்க கிறிஸ்தவர்களுக்கு உதவும்?
14 மணத்துணைக்குத் துரோகம் செய்வதைத் தவிர்ப்பதற்கு, தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள். “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்று இயேசு சொன்னார். (மத். 19:6) உங்கள் மனைவியைவிட சபைப் பொறுப்புகள்தான் முக்கியம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அதோடு, தேவையில்லாமல் அடிக்கடி மனைவியை விட்டுவிட்டு எங்கேயாவது போனால் உங்களுக்கு இடையே நெருக்கம் குறைந்துவிடும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அப்படிச் செய்தால், தப்புத்தண்டா நடக்க வாய்ப்பிருக்கிறது.
15 நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், சபையைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. “உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையைக் கட்டாயத்தினால் இல்லாமல் மனப்பூர்வமாகவும், கேவலமான ஆதாயத்திற்காக இல்லாமல் ஆர்வமாகவும் மேய்த்துவாருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 5:2) உங்கள் பராமரிப்பிலுள்ள சபையாரை நீங்கள் நிச்சயம் அசட்டை செய்ய முடியாது. ஆனால், கணவனாக உங்களுக்குள்ள பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு சபையில் நல்ல மூப்பராக இருந்தால் அதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. சபையாருக்கு ஆன்மீக உணவை அள்ளி அள்ளிக் கொடுத்துவிட்டு, மனைவியை “பட்டினி” போடுவது எந்த விதத்தில் நியாயம்? இப்படிச் செய்வது ஆபத்தில்தான் போய் முடியும். ‘உங்கள் குடும்பத்தைக் கவனிக்கக்கூட நேரமில்லாதளவுக்குச் சபைக் காரியங்களில் நீங்கள் மூழ்கிவிடக் கூடாது’ என்கிறார் வாழ்க்கையில் அடிபட்ட டானியேல்.
16, 17. (அ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்பதைக் காட்ட வேலை செய்யுமிடத்தில் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மணத்துணைக்குத் துரோகம் செய்யாதிருக்க உதவும் என்ன கட்டுரைகள் நம் பிரசுரங்களில் வெளிவந்திருக்கின்றன?
16 மணத்துணைக்குத் துரோகம் செய்யாதிருக்க, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் மணியான பல ஆலோசனைகள் வெளிவந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, செப்டம்பர் 15, 2006 தேதியிட்ட காவற்கோபுரம் இந்த அறிவுரையைக் கொடுத்தது: “வேலை பார்க்குமிடங்களிலும் சரி மற்ற இடங்களிலும் சரி, எதிர்பாலாரோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள். உதாரணமாக, அலுவலகத்தில் வேலை நேரத்திற்குப் பிறகும் எதிர்பாலார் ஒருவரோடு சேர்ந்து வேலைபார்ப்பது சபலத்துக்கு வழிவகுக்கலாம். நீங்கள் மணமானவராக இருந்தால், இப்படிப்பட்ட தவறான உறவுகளுக்கு நீங்கள் இடமளிக்க மாட்டீர்கள் என்பதை பேச்சிலும் நடத்தையிலும் காட்டுங்கள். நீங்கள் தேவபக்தியுள்ள நபராக இருப்பதால், சரசமாடியோ அடக்கமற்ற விதத்தில் ஆடை அலங்காரம் செய்தோ மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க மாட்டீர்கள். . . . உங்களுடைய மணத்துணை மற்றும் பிள்ளைகளின் ஃபோட்டோக்களை அலுவலகத்தில் வைத்திருப்பது, உங்களுடைய குடும்பம் உங்களுக்கு முக்கியம் என்பதை உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நினைவுபடுத்தும். மற்றவர்கள் வீசும் காதல் வலையில் விழுந்து விடாதீர்கள், அப்படிப்பட்ட செயல்களை பொறுத்துக் கொள்ளாதீர்கள்.”
17 ஜூலை-செப்டம்பர் 2009 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் “துணைக்குத் துரோகம் செய்வது என்றால் என்ன?” என்ற கட்டுரை வெளிவந்தது. மணமான ஒருவர் வேறொருவருடன் உல்லாசமாய் இருப்பதுபோல் கனவு காண்பது எவ்வளவு தவறு என்று அது எச்சரித்தது. இப்படிக் கனவு கண்டுகொண்டே இருந்தால் ஒருநாள் அவர் மணத்துணைக்குத் துரோகம் செய்துவிடுவார் என்றும் கூறியது. (யாக். 1:14, 15) நீங்கள் மணமானவராக இருந்தால், உங்கள் துணையுடன் சேர்ந்து இந்தத் தகவல்களை அவ்வப்போது சிந்தியுங்கள். யெகோவாதான் திருமண பந்தத்தை ஏற்படுத்தி வைத்தார். அதனால், அந்தப் பந்தம் புனிதமானது. உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றித் துணையுடன் மனம்விட்டுப் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். இப்படிச் செய்தால், பரிசுத்த காரியங்களை நீங்கள் மதிப்பதைக் காட்டுவீர்கள்.—ஆதி. 2:21-24.
18, 19. (அ) மணத்துணைக்குத் துரோகம் செய்வதால் வரும் வேதனைகள் யாவை? (ஆ) மணத்துணைக்கு உண்மையாய் இருப்பதால் வரும் நன்மைகள் யாவை?
18 கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வதற்கான ஆசை உங்கள் மனதில் தலைதூக்கினால்... பாலியல் முறைகேட்டினாலும் மணத்துணைக்குத் துரோகம் செய்வதாலும் வரும் விளைவுகளைக் குறித்து ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். (நீதி. 7:22, 23; கலா. 6:7) மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள் யெகோவாவின் மனதைப் புண்படுத்துகிறார்கள். அதோடு, தங்களுக்கும் தங்கள் துணைக்கும் வேதனையைத் தேடிக்கொள்கிறார்கள். (மல்கியா 2:13, 14-ஐ வாசியுங்கள்.) மறுபட்சத்தில், மணத்துணைக்குக் கடைசிவரை உண்மையாய் இருப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அப்படிப்பட்டவர்கள் எதிர்காலத்தில் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள். அதோடு, இப்போதே சுத்தமான மனசாட்சியோடு சந்தோஷமாக வாழ்வார்கள்.—நீதிமொழிகள் 3:1, 2-ஐ வாசியுங்கள்.
19 “உம்முடைய [கடவுளுடைய] வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 119:165) எனவே, சத்தியத்தை நேசியுங்கள். இந்தப் பொல்லாத உலகத்தில், “ஞானமற்றவர்களாக நடக்காமல், ஞானமுள்ளவர்களாக நடப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்துங்கள்.” (எபே. 5:15, 16) உண்மை வணக்கத்தாராகிய நமக்கு சாத்தான் வழியெல்லாம் பல கண்ணிகளை வைத்திருக்கிறான். ஆனால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள யெகோவா உதவுகிறார். சாத்தானை எதிர்த்து ‘உறுதியோடு நிற்கவும்,’ அந்தப் ‘பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைத்துவிடவும்’ அவர் நமக்கு உதவுகிறார்!—எபே. 6:11, 16.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 26-ன் படம்]
பொருளாசை ஒருவரை ஆன்மீக ரீதியில் நெருக்கிப் போடும் என்பதால் உஷாராய் இருங்கள்
[பக்கம் 29-ன் படம்]
சரசமாடினாலோ அதற்கு இடம்கொடுத்தாலோ அது மணத்துணைக்குத் துரோகம் செய்வதாகும்