ரூபியா (1) என்ற சகோதரிக்கு இப்போது 30 வயது. சில வருடங்களுக்கு முன்பு பிரேசிலின் தென்பகுதியிலுள்ள ஒரு சிறிய சபையில் பயனியராகச் சேவை செய்துவந்த சான்ட்ராவை (2) பார்க்கப் போயிருந்தார். அந்தச் சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் அவருடைய கண்களைத் திறந்தது. அது என்ன சம்பவம்? வாருங்கள், ரூபியாவிடமே கேட்போம்...
“என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை”
“சான்ட்ரா தன்னுடன் பைபிள் படித்துக்கொண்டிருந்த பெண்ணின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். படிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் அந்தப் பெண், ‘என்னுடன் வேலை செய்கிற மூன்று பெண்களுக்கு பைபிள் படிக்க ரொம்பவே ஆசை. ஏற்கெனவே உங்களுக்கு நிறைய பைபிள் படிப்புகள் இருப்பதால் இந்த வருஷம் உங்களால் நடத்த முடியாது என்று எனக்குத் தெரியும். அதனால், கொஞ்சநாள் காத்திருக்கும்படி சொல்லியிருக்கிறேன்’ என்று அவர் சர்வ சாதாரணமாகச் சொல்ல... என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய ஊரில், ஒரு பைபிள் படிப்பு கிடைப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்க, பைபிள் படிப்புக்கு இங்கு ஜனங்கள் ‘வெய்ட்டிங் லிஸ்ட்டில்’ இருக்கிறார்கள்! எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சான்ட்ரா இருக்கும் ஊருக்கே வந்து ஜனங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்த நொடியே மனதுக்குள் தீர்மானித்தேன். உடனடியாக, சான்ட்ரா இருக்கும் ஊருக்குக் குடிமாறி வந்தேன்.”
ரூபியாவுக்கு ஏதாவது பலன் கிடைத்ததா? அவரே சொல்கிறார்: “இந்த ஊருக்கு வந்த இரண்டு மாதங்களுக்குள் எனக்கு 15 பைபிள் படிப்புகள் கிடைத்தன. சொன்னால் நம்ப மாட்டீர்கள்... பைபிள் படிக்க ஆசைப்பட்டவர்களை நானும் ‘வெய்ட்டிங் லிஸ்ட்டில்’ வைக்க வேண்டியிருந்தது—சான்ட்ராவைப் போல!”
பேருக்காக ஊழியம் செய்தவர் பயனியரானார்
டியேகோ (3) என்ற சகோதரர் 25 வயதுக்குட்பட்டவர். பிரேசிலின் தென்பகுதியிலுள்ள ப்ரூடென்டாபூலிஸ் என்ற ஒரு சிறிய நகரத்தில் இருந்த சில பயனியர்களைப் பார்க்க ஒருமுறை அவர் போயிருந்தார். அந்தச் சந்திப்பு அவரை ரொம்பவே யோசிக்க வைத்தது. பேருக்காக அவர் ஊழியம் செய்துவந்ததை உணர்த்தியது. “நான் அதுவரை ஏனோதானோவென ஊழியத்திற்குப் போய்க்கொண்டிருந்தேன். கடனே என்று மாசத்திற்கு சில மணிநேரங்களை அறிக்கை செய்துகொண்டிருந்தேன். ஆனால், எப்போது அந்தப் பயனியர்களைச் சந்தித்தேனோ, எப்போது அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டேனோ அப்போதே என் மனம் மாற ஆரம்பித்தது. அவர்கள் இவ்வளவு சந்தோஷமாக, சுறுசுறுப்பாக ஊழியம் செய்கையில் நான் மட்டும் அசட்டையாக இருந்தது என்னை உறுத்தியது. அவர்கள் ஆனந்தமாகவும் ஆர்வமாகவும் இருந்ததைப் பார்த்தபோது அவர்களைப் போலவே இருக்க என் மனம் ஏங்கியது.” அந்தச் சந்திப்புக்குப் பின்பு டியேகோ பயனியர் ஊழியம் செய்யத் தொடங்கினார்.
டியேகோவைப் போல நீங்களும் ஓர் இளைஞரா? கூட்டங்களுக்கும், ஊழியத்திற்கும் ஆர்வமே இல்லாமல் இயந்திரத்தனமாகப் போய்க்கொண்டிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். தேவை அதிகம் உள்ள இடங்களுக்குப் போய்ச் சேவை செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி. ஆனால், சௌகரியமான வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் செல்வது உங்களுக்குக் கஷ்டமாகத் தெரியலாம். இருந்தாலும், அநேக இளைஞர்கள் அப்படிச் சென்றிருக்கிறார்கள். யெகோவாவுக்கு இன்னும் அதிகமாய்ச் சேவை செய்ய தங்கள் சொந்த லட்சியங்களையும் ஆசைகளையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சரி, இப்போது ப்ரூனோ என்ற இன்னொரு சகோதரரின் உதாரணத்தைப் பார்ப்போம்.
இசைக் கலைஞரா? இறை ஊழியரா?
28 வயது ப்ரூனோ (4) என்ற சகோதரர் சில வருடங்களுக்கு முன்பு, பிரபல இசைப் பள்ளி ஒன்றில் பயிற்சி பெற்றார். இசைக் குழு ஒன்றை நடத்த வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியக் கனவு. அதற்கேற்ப, இசைக் கல்வியில் நல்ல முன்னேற்றம் செய்தார். இசைக் குழு இயக்குனராகும் வாய்ப்பு பலமுறை அவரைத் தேடி வந்தது. அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருந்தது. “என்றாலும், எனக்குள் ஏதோவொரு வெறுமை குடிகொண்டிருந்தது” என்கிறார் ப்ரூனோ. “யெகோவாவுக்காக என்னை அர்ப்பணித்திருந்தேனே தவிர, முழு மூச்சோடு அவருக்குச் சேவை செய்யவில்லை. அந்தக் குற்றவுணர்வு என்னைக் குத்திக்கொண்டே இருந்தது. ஒருநாள் என் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். சபையில் முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்களிடம் போய்ப் பேசிய பின்பு நன்றாக யோசித்துப் பார்த்தேன். இனிமேல் இசை இசையென்று அதன் பின்னால் போகாமல் ஊழியத்தில் முழுமூச்சோடு இறங்க தீர்மானித்தேன். இசைப் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தினேன். தேவை அதிகமுள்ள இடத்திற்குப் போய்ச் சேவை செய்ய முடிவுசெய்தேன்.” அவர் எடுத்த முடிவு சரியானதா?
சாவோ போலோ நகரத்திலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் (160 மைல்) தொலைவிலிருக்கும் குவாபியரா நகரத்துக்கு (அதன் ஜனத்தொகை சுமார் 7,000) ப்ரூனோ குடிமாறிச் சென்றார். அது அவர் செய்த அதிரடி மாற்றம். அவர் சொல்கிறார்: “நான் ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபோனேன். அந்த வீட்டில் ஃபிரிட்ஜ், டிவி, இன்டர்நெட் கனெக்ஷன் என எதுவுமே இல்லை. ஆனால், நான் குடியிருந்த எந்த வீட்டிலும் இல்லாத ஒன்று அங்கு இருந்தது—காய்கறி, பழத் தோட்டம்!” அந்த நகரத்திலிருந்த ஒரு சிறிய சபையோடு ப்ரூனோ கூட்டுறவுகொண்டார். வாரத்தில் ஒருநாள் கிராமங்களுக்குப் போய் ஊழியம் செய்வதற்காக உணவு, தண்ணீர், பிரசுரங்கள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மோட்டார் பைக்கில் கிளம்பிவிடுவார். அங்கிருந்த பலர் அதுவரை நற்செய்தியைக் கேட்டதே இல்லை. “சுமார் 18 பைபிள் படிப்புகள் நடத்தினேன்” என்கிறார் ப்ரூனோ. “நான் பைபிள் படிப்பு நடத்தியவர்கள் மாற்றங்களைச் செய்தபோது எனக்குச் சந்தோஷம் தாளவில்லை. அந்தச் சமயத்தில் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. ஆம், கடவுளுடைய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சந்தோஷமும் திருப்தியும் தேடிவரும். அப்படிக் கொடுக்காததால்தான் இத்தனை காலம் என் வாழ்க்கையில் ஒருவிதமான வெறுமை இருந்திருக்கிறது. என் இசைப் பயணத்தை மட்டுமே தொடர்ந்திருந்தால் இப்படிப்பட்ட சந்தோஷம் எனக்குக் கிடைத்திருக்காது.” ஆனால், வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்தார்? “கிட்டார் சொல்லிக் கொடுத்தேன்” என்று சொல்லும்போது ப்ரூனோவின் கண்கள் புன்னகை பூக்கின்றன. ஒருவிதத்தில், அவர் இன்னமும் ஓர் இசைக் கலைஞர்தான்!
“அங்கேயே இருக்க முடிவுசெய்தேன்”
மரியனா (5) என்ற சகோதரியின் கதையும் கிட்டத்தட்ட ப்ரூனோவின் கதை மாதிரிதான். அவர் 25 வயதைத் தாண்டியவர். முன்பு ஒரு வக்கீலாக வேலை பார்த்தவர். ஆனாலும், வாழ்க்கையில் அவருக்குத் திருப்தி இருக்கவில்லை. “நான் என்னமோ ‘காற்றைப் பிடிக்க முயன்றுகொண்டிருந்ததாக’ எனக்குத் தோன்றியது” என்கிறார் அவர். (பிர. 1:17, பொது மொழிபெயர்ப்பு) அந்தச் சமயத்தில், பயனியர் ஊழியம் செய்யும்படி அநேக சகோதர சகோதரிகள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். மரியனாவும் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தார். பின்பு, தன் சிநேகிதிகளான பியன்கா (6), கரோலின் (7), ஜூலியானா (8) ஆகியோரைக் கூட்டிக்கொண்டு பொலிவியாவுக்கு அருகே உள்ள பரா டூ பூக்ரிஸ் என்ற தொலைதூர நகரத்திற்குச் செல்ல முடிவுசெய்தார். அங்குள்ள சபையுடன் சேர்ந்து ஊழியம் செய்ய அந்த நான்கு பேரும் தீர்மானித்தார்கள். அந்த நகரம் அவர்களுடைய வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அடுத்து என்ன நடந்தது?
மரியனா சொல்கிறார்: “மூன்று மாதம் ஊழியம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்றுதான் அங்கு சென்றேன். ஆனால், மூன்று மாதத்திற்குள்ளேயே 15 பேருக்கு பைபிள் படிப்புகள் நடத்த ஆரம்பித்துவிட்டேன்! அப்படியானால், அவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கு நிறைய உதவி செய்ய வேண்டுமே! அவர்களிடம் ‘போய் வருகிறேன்’ என்று சொல்ல எனக்கு வாயே வரவில்லை. அதனால், அங்கேயே இருக்க முடிவுசெய்தேன்.” அந்த நான்கு சகோதரிகளும் அதைத்தான் செய்தார்கள். மரியனா இந்த முடிவை எடுத்ததால் அவருடைய வாழ்க்கை அதிக அர்த்தமுள்ளதாக ஆனதா? அவரே சொல்கிறார்: “மக்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள யெகோவா என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நினைக்கும்போது எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. உண்மையிலேயே பிரயோஜனமான ஒரு வேலையைச் செய்ய என் நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்துவதால் மனம் நிறைந்திருக்கிறது.” இந்த நான்கு சகோதரிகளின் உணர்ச்சிகளையும் கரோலினின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன: “நாளெல்லாம் கடவுளுக்காகச் சேவை செய்துவிட்டு இரவு படுக்கும்போது உள்ளுக்குள் ஒரு திருப்தி கிடைக்கும். என்னுடைய பைபிள் மாணாக்கர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்ற எண்ணம்தான் சதா என் மனதில் வட்டமடித்துக்கொண்டிருக்கும். அவர்கள் முன்னேற்றம் செய்வதைப் பார்க்கும்போது மனம் சிறகடிக்கும். ‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்’ என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை இப்போதுதான் ருசிக்கிறேன்.”—சங். 34:8.
உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொலைதூர இடங்களுக்குச் சென்று ‘மனப்பூர்வமாய்’ ஊழியம் செய்வதைப் பார்த்து யெகோவா எவ்வளவாய் சந்தோஷப்படுகிறார்! (சங். 110:3; நீதி. 27:11) மனமுவந்து சேவை செய்யும் இந்த இளம் மொட்டுகளுக்கு யெகோவா அள்ளி அள்ளி ஆசீர்வாதம் வழங்குகிறார்.—நீதி. 10:22.