“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
அன்றும் இன்றும்—தன்னை மாற்றிக் கொள்வதற்கு பலத்தை பெற்றாள்
சான்ட்ரா என்ற பெண் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவள்; தன் குடும்பத்திலே தான் ஒரு வேண்டாத நபர் போல இருந்ததாக உணர்ந்தாள். குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டதாலும் அன்பில்லாததாலும் அவளுடைய டீனேஜ் பருவமே பாழாய்ப் போனது. அவள் இவ்வாறு கூறுகிறாள்: “பருவகாலம் பூராவும் சதா வெறுமையுணர்வால் வாடினேன்; நான் ஏன் உயிரோடு இருக்கிறேன், வாழ்க்கைக்கு என்ன அர்த்தம், இது போன்ற பல சந்தேகங்கள் அலை அலையாய் என் மனதில் எழுந்தன.”
சான்ட்ரா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்திலிருந்தே, வீட்டில் அவள் அப்பா வாங்கி வைத்திருந்த ஒயினை குடிக்கத் தொடங்கினாள். காலப்போக்கில், இவளே சொந்தமாக மதுபானங்களை வாங்க ஆரம்பித்தாள், கடைசியில் குடிகாரி ஆகிவிட்டாள். “எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது” என அவள் மனம்விட்டு சொல்கிறாள். விரக்தியடைந்த நிலையில் சான்ட்ரா போதைப் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தாள். “பிரச்சினைகளை மறக்க உதவியதெல்லாம் என் ஹேன்ட் பேக்கில் எடுத்துச் சென்ற ஒரு பாட்டில், சில போதை மாத்திரைகள் அல்லது கொஞ்சம் மரிஜுவானா” என அவள் கூறுகிறாள்.
மருத்துவ படிப்பை முடித்த பிறகு, அவள் குடியெனும் கடலில் மேலும் மேலும் மூழ்கிப் போனாள். தற்கொலை செய்ய முயன்றாள்; ஆனால் எப்படியோ பிழைத்துக்கொண்டாள்.
ஆன்மீக உதவிக்காகவும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவுக்காகவும் அவள் பல்வேறு மதங்களை நாடிப்போனாள்; ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. விரக்தியடைந்தவளாக, “கடவுளே, நீங்க எங்கதான் இருக்கீங்க? தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்களேன்” என திரும்பத் திரும்ப கடவுளிடம் கதறி மன்றாடினாள். தன் மதிப்பு மரியாதை எல்லாவற்றையும் இழந்திருந்த சமயத்தில், ஒரு யெகோவாவின் சாட்சி அவளிடம் பேசினார். இது தனிப்பட்ட பைபிள் படிப்புக்கு வழிநடத்தியது. ‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபமாயிருக்கிறார்’ என்பதை அறிந்து சான்ட்ரா நெகிழ்ந்து போனாள்.—சங்கீதம் 34:18.
ஆதாமிடமிருந்து நாம் பெற்றிருக்கும் பாவமும் அபூரணமுமே நம் பலவீனங்களுக்கு காரணம் என்பதை யெகோவா தேவன் அறிவார் என்ற விஷயத்தை சான்ட்ரா புரிந்து கொள்வதற்கு அவளுடைய பைபிள் டீச்சர் உதவினார். நீதியுள்ள தராதரங்களை நாம் அச்சுப்பிசகாமல் அப்படியே கடைப்பிடிக்க முடியாதென்று கடவுளுக்குத் தெரியும் என்பதையும் சான்ட்ரா உணர்ந்தாள். (சங்கீதம் 51:5; ரோமர் 3:23; 5:12, 18) நம் பலவீனங்களையே எப்போதும் யெகோவா பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்பதையும், நம்மால் முடியாத ஒரு காரியத்தை அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதையும் அவள் கற்றபோது சந்தோஷமடைந்தாள். சங்கீதக்காரனும் இதை உணர்ந்தவராகத்தான், “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” என்று கேட்டார்.—சங்கீதம் 130:3.
இயேசு கிறிஸ்துவின் கிரய பலியைப் பற்றிய முக்கிய பைபிள் சத்தியத்தை சான்ட்ரா தெரிந்து கொண்டபோது அவள் மனம் நன்றியுணர்வால் நிரம்பியது. அபூரணராக இருந்தும் கீழ்ப்படிதலை காண்பிக்கும் மனிதர்களுக்கு ஒரு நல்ல நிலைநிற்கையை இந்தக் கிரய பலியின் மூலம் யெகோவா இரக்கத்துடன் அருளியிருக்கிறார். (1 யோவான் 2:2; 4:9, 10) ஆம், இதன் மூலம் ‘பாவங்களுக்கான மன்னிப்பை’ நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்; அதோடு, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற எண்ணத்தை உதறித் தள்ளுவதற்கு உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும்.—எபேசியர் 1:7.
அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்திலிருந்து அருமையான பாடங்களை சான்ட்ரா கற்றுக்கொண்டாள். பவுலின் கடந்த கால தவறுகளை கடவுள் இரக்கத்துடன் மன்னித்து, திரும்பத் திரும்ப தலைதூக்கின பலவீனங்களுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு ஆதரவளித்தார்; இவ்வாறு கடவுள் தயவு காட்டியதற்காக பவுல் பெரிதும் நன்றியுள்ளவராக இருந்தார். (ரோமர் 7:15-25; 1 கொரிந்தியர் 15:9, 10) தன் வாழ்க்கை முறையை பவுல் சரி செய்தார்; கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட வழியில் நிலைத்து நிற்பதற்காக தன் ‘சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினார்.’ (1 கொரிந்தியர் 9:27) தன் பாவமுள்ள மனச்சாய்வு தன்னையே அடிமைப்படுத்திவிட அவர் அனுமதிக்கவில்லை.
சான்ட்ராவின் பலவீனங்கள் அவளை வாட்டி வதைத்தன; ஆனாலும் அவற்றையெல்லாம் எதிர்த்து விடாமுயற்சியுடன் போராடினாள். அவற்றை விட்டொழிக்க யெகோவாவின் உதவிக்காக ஊக்கமாய் ஜெபித்தாள்; அவருடைய தயவிற்காக கெஞ்சினாள். (சங்கீதம் 55:22; யாக்கோபு 4:8) கடவுள் தன்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை உணர்ந்த பின்பு தன் வாழ்க்கையை அவளால் மாற்றிக்கொள்ள முடிந்தது. “நான் முழுநேர சேவையில் ஈடுபட்டு, பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு மகிழ்ச்சியோடு கற்றுத் தருகிறேன்” என அவள் கூறுகிறாள். யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள தன் அக்காவுக்கும் தங்கைக்கும் உதவிய பெரும் பாக்கியம் சான்ட்ராவுக்கு கிடைத்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளில் அவள் மனமுவந்து மருத்துவ உதவியும் அளிக்கிறாள்; இவ்வாறு தொடர்ந்து ‘நன்மையான வேலை செய்து’ வருகிறாள்.—கலாத்தியர் 6:10.
சான்ட்ராவின் போதைப் பழக்கத்திற்கு என்ன ஆனது? அவள் உறுதியோடு சொல்கிறாள்: “என்னுடைய மனசு தெளிவாக இருக்கிறது. இப்போது நான் குடிப்பதில்லை, புகைபிடிப்பதில்லை, போதைப் பொருட்களை உபயோகிப்பதும் இல்லை. அவை எனக்கு தேவையே இல்லை. நான் தேடிக் கொண்டிருந்தது எனக்கு கிடைத்துவிட்டது.”
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“நான் தேடிக் கொண்டிருந்தது எனக்கு கிடைத்துவிட்டது”
[பக்கம் 9-ன் பெட்டி]
நடைமுறையான பைபிள் நியமங்கள் கறைப்படுத்தும் அடிமைத்தனங்களிலிருந்து விடுபட அநேகருக்கு உதவிய சில பைபிள் நியமங்கள் இதோ:
“மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) கெட்ட பழக்கவழக்கங்களை தவிர்த்து, எல்லா அசுத்தத்திலிருந்தும் தங்களை சுத்திகரிப்பவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார்.
“தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.” (நீதிமொழிகள் 8:13) கடவுள்மீது பயபக்தி இருந்தால், போதைப் பொருள் துஷ்பிரயோகம் உட்பட, எல்லா கெட்ட பழக்கங்களையும் நிறுத்திவிட ஒருவரால் முடியும். இப்படி தன்னை மாற்றிக்கொள்ளும் நபர் யெகோவாவை பிரியப்படுத்துகிறார், அதோடு பயங்கர நோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்.
‘அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருங்கள்.’ (தீத்து 3:1, NW) அநேக இடங்களில், குறிப்பிட்ட சில போதைப் பொருட்களை வைத்திருப்பதோ உபயோகிப்பதோ சட்ட விரோதமான செயல். உண்மை கிறிஸ்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான இத்தகைய போதைப் பொருட்களை வைத்துக் கொள்வதுமில்லை, உபயோகிப்பதுமில்லை.