“தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” —சங். 46:1.
1, 2. என்ன துன்ப துயரங்களை அநேகர் சந்தித்திருக்கிறார்கள், ஆனால் நாம் ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறோம்?
திரும்பிய பக்கமெல்லாம் இன்று துன்ப துயரங்களையே நாம் பார்க்கிறோம். பேரழிவுகளுக்கு மேல் பேரழிவுகள் பூமியைக் குறிவைத்துத் தாக்குகின்றன. பூகம்பம், சுனாமி, காட்டுத் தீ, வெள்ளப்பெருக்கு, சுழல் காற்று, கடும் புயல், சூறாவளி எனப் பேரழிவுகள் பன்முகம் காட்டுகின்றன. மனிதகுலத்தைச் சூறையாடி சின்னாபின்னமாக்குகின்றன. போதாக்குறைக்கு, குடும்பப் பிரச்சினைகளும் மற்ற பிரச்சினைகளும் கோரமுகம் காட்டி மனிதர்களைப் பயமுறுத்தி, துன்பக் கடலில் தள்ளுகின்றன. ‘எதிர்பாரா வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லோருக்கும் நேரிடுகின்றன’ என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை!—பிர. 9:11, NW.
2 வேதனைமிக்க இதுபோன்ற சூழ்நிலைகளைக் கடவுளுடைய ஊழியர்கள் இதுவரை நன்கு சமாளித்து வந்திருக்கிறார்கள். என்றாலும், இந்த உலகம் அதன் அழிவை நோக்கி விரையும் இச்சமயத்தில் எந்தக் கஷ்டநஷ்டத்தையும் சமாளிக்க வேண்டும் என நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். இதையெல்லாம் கண்டு துவண்டுவிடாதிருக்க நாம் என்ன செய்யலாம்? இதற்குத் தேவையான தைரியத்தை நாம் எப்படிப் பெறலாம்?
துயரங்களைத் தைரியமாய் சமாளித்தவர்கள்...
3.ரோமர் 15:4 காட்டுகிறபடி, வேதனையான சமயங்களில் நாம் எப்படி ஆறுதல் பெறலாம்?
3 மனிதகுலம் துன்ப துயரங்களைச் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. என்றாலும், எப்போதையும்விட இப்போதுதான் ஏராளமானோர் அதன் பிடியில் சிக்கித்தவிக்கிறார்கள். இதுபோன்ற சமயங்களில் தைரியமாய் இருந்த பூர்வகால ஊழியர்கள் சிலரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அதை இப்போது பார்ப்போம்.—ரோ. 15:4.
4. தாவீது என்னென்ன பிரச்சினைகளைச் சந்தித்தார், எது அவருக்கு உதவியது?
4 தாவீதின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அவர் எத்தனையோ பிரச்சினைகளைச் சந்தித்தார். ராஜாவின் கோபத்திற்கு ஆளானார், பகைவர்களின் படையெடுப்பை எதிர்ப்பட்டார், அவருடைய மனைவிகள் கடத்திச் செல்லப்பட்டபோது துடித்தார், உற்றாரும் சுற்றாரும் தந்திரமாய் ஏமாற்றியபோது நொறுங்கிப்போனார், சிலசமயம் மனச்சோர்வடைந்தார். (1 சா. 18:8, 9; 30:1-5; 2 சா. 17:1-3; 24:15, 17; சங். 38:4-8) தாவீதின் வாழ்க்கை வரலாற்றை பைபிளில் வாசிக்கும்போது அவர் எந்தளவுக்கு வேதனையில் தவித்திருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது. என்றாலும், கடவுள் மீதிருந்த விசுவாசத்தை அவர் இழந்துவிடவில்லை. ‘யெகோவா என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?’ என்று விசுவாசம் பொங்கச் சொன்னார்.—சங். 27:1;சங்கீதம் 27:5,10-ஐ வாசியுங்கள்.
5. கஷ்டங்களையெல்லாம் சகிக்க ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் எது உதவியது?
5 ஆபிரகாமும் சாராளும் முன்பின் தெரியாத தேசங்களில் அந்நியர்களாகக் குடியிருந்தார்கள். தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கூடாரங்களிலேயே கழித்தார்கள். வாழ்க்கை அவர்களுக்கு ரோஜா படுக்கையாய் இருக்கவில்லை. உதாரணத்திற்கு, பஞ்ச காலத்தில் பாதிக்கப்பட்டார்கள், அக்கம்பக்க தேசங்களிடமிருந்து ஆபத்துகளை எதிர்ப்பட்டார்கள். (ஆதி. 12:10; 14:14-16) இதையெல்லாம் சமாளிக்க எது அவர்களுக்கு உதவியது? “கடவுளே கட்டியமைத்த உறுதியான அஸ்திவாரங்கள் உள்ள நகரத்திற்காக அவர் [ஆபிரகாம்] காத்திருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 11:8-10) ஆபிரகாமும் சாராளும் தங்களுடைய கஷ்டங்களையெல்லாம் நினைத்து நினைத்துக் கலங்காமல், எதிர்கால ஆசீர்வாதத்தின் மீது கண்களைப் பதியவைத்தார்கள்.
6. நாம் எப்படி யோபுவைப் பின்பற்றலாம்?
6 அடுத்து, யோபுவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். சொல்லமுடியாத துயரங்களை அவர் சந்தித்தார். சோதனைகளுக்கு மேல் சோதனைகளை எதிர்ப்பட்டார். அப்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். (யோபு 3:3, 11) இதெல்லாம் நேரிடுவதற்கான காரணத்தை அவர் முழுமையாய்ப் புரிந்திருக்கவில்லை. என்றாலும், அவர் இடிந்துபோய் உட்கார்ந்துவிடாமல் உத்தமத்திலும் விசுவாசத்திலும் உறுதியாய் நின்றார். (யோபு 27:5-ஐ வாசியுங்கள்.) எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!
7. கடவுளுடைய சேவையில் பவுல் என்னென்ன கஷ்டங்களை எதிர்ப்பட்டார், எத்தகைய மனநிலை அவருக்குத் தைரியத்தைத் தந்தது?
7 இப்போது, அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். கடவுளுடைய சேவையில் இவரும் பல கஷ்டங்களைச் சந்தித்தார். நகரத்திலும் வனாந்தரத்திலும் கடலிலும் உண்டான ஆபத்துகளை எதிர்ப்பட்டார். ‘பசியோடும் தாகத்தோடும் பட்டினியோடும்’ இருந்தார். சிலமுறை கப்பற்சேதத்தில் சிக்கினார். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ‘ஓர் இரவும் பகலும் நடுக்கடலில் தத்தளித்தார்.’ (2 கொ. 11:23-27) ஏன், மரணத்தின் விளிம்புவரைகூட சென்றார். ஆனாலும், நம்பிக்கையான மனநிலையோடு பின்வருமாறு சொன்னார்: “நாங்கள் எங்கள்மீது நம்பிக்கை வைக்காமல், இறந்தவர்களை உயிர்த்தெழுப்புகிற கடவுள்மீது நம்பிக்கை வைப்பதற்காகத்தான் அப்படிப்பட்ட சோதனையை எதிர்ப்பட்டோம் போலிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான அந்தச் சூழ்நிலையிலிருந்து அவர் எங்களைக் காப்பாற்றினார், வருங்காலத்திலும் காப்பாற்றுவார்.” (2 கொ. 1:8-10) பவுலைப் போல எல்லோருமே கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. என்றாலும், நம்மில் பலர் சில சமயங்களில் அவரைப் போலவே உணர்ந்திருக்கிறோம். எனவே, தைரியமாய் இருப்பதில் அவர் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் ஆறுதல் அடையலாம்.
துன்ப துயரங்களில் துவண்டுவிடாதீர்கள்
8. இன்றைய பிரச்சினைகள் நம்மை எப்படிப் பாதிக்கலாம்? உதாரணம் கொடுங்கள்.
8 இன்றைய உலகில் பேரழிவுகளும் பிரச்சினைகளும் அழுத்தங்களும் கணக்குவழக்கில்லாமல் வருவதால் அநேகர் துவண்டுவிடுகிறார்கள். சில கிறிஸ்தவர்களும்கூட அப்படித் துவண்டுபோயிருக்கிறார்கள். லினிa என்ற சகோதரி தன் கணவரோடு ஆஸ்திரேலியாவில் முழுநேர சேவை செய்துவந்தார். ‘எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தபோது அப்படியே நொறுங்கிப்போனேன், தலையில் இடிவிழுந்ததுபோல் இருந்தது’ என்று அவர் சொல்கிறார். “சிகிச்சை சமயத்தில் நான் ரொம்பவே பலவீனமாகிவிட்டேன். எதற்குமே லாயக்கில்லாதவள் போல் உணர்ந்தேன்” என்றும் சொல்கிறார். அந்தச் சமயத்தில் அவருடைய கணவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அவரையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம்?
9, 10. (அ) எதைச் செய்ய நாம் சாத்தானுக்கு இடங்கொடுக்கக் கூடாது? (ஆ) உபத்திரவங்கள் வருமென அப்போஸ்தலர் 14:22 சொல்வதால் நாம் எப்படி அவற்றைக் கருத வேண்டும்?
9 நாம் துன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில், சாத்தான் நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்த முயலுகிறான் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். என்றாலும், நம்முடைய சந்தோஷத்தை அவன் பறித்துவிட நாம் இடங்கொடுக்கக் கூடாது. “ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்று நீதிமொழிகள் 24:10 சொல்கிறது. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டதைப் போன்ற பைபிள் உதாரணங்களை ஆழ்ந்து சிந்திப்பது, துன்ப காலத்தில் தைரியமாய் இருக்க நமக்கு உதவும்.
10 எல்லாப் பிரச்சினைகளையும் நம்மால் சரிசெய்ய முடியாது என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். சொல்லப்போனால், அவற்றை நாம் எதிர்பார்க்க வேண்டும். (2 தீ. 3:12) “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்” என்று அப்போஸ்தலர் 14:22 சொல்கிறது. எனவே, பிரச்சினைகள் உங்கள் உற்சாகத்தை உறிஞ்சிவிட அனுமதிப்பதற்குப் பதிலாக, உங்கள் தைரியத்தையும் கடவுள் மீதுள்ள விசுவாசத்தையும் வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளாக அவற்றைக் கருதலாம், அல்லவா?.
11. துன்ப துயரங்களில் நாம் எப்படித் துவண்டுவிடாதிருக்கலாம்?
11 வாழ்க்கையில் ரசித்து ருசித்த தருணங்களை நாம் எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டும். “அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத்துயரால் உள்ளம் உடையும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 15:13, பொது மொழிபெயர்ப்பு) “சீக்கிரத்தில் சரியாகிவிடுவேன்” என்ற மனநிலையோடு இருக்கும் நோயாளிகள் குணமாகிவிடுவார்கள் என்பது மருத்துவ உலகம் அறிந்த உண்மை. நிஜ மாத்திரைக்குப் பதிலாக, சாதாரண இனிப்பு மாத்திரை கொடுக்கப்பட்ட நோயாளிகளில் பலர், “இது நல்ல மாத்திரை, சாப்பிட்டால் குணமாகிவிடுவேன்” என்ற மனநிலையோடு சாப்பிட்டதால் குணமடைந்தார்கள். அதேசமயத்தில், “இந்த மாத்திரையைச் சாப்பிட்டால், என் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்” என்ற மனநிலையோடு சாப்பிட்டவர்கள் குணமடையவில்லை. “இந்த மருந்தைச் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வரும்” என்று சொல்லி கொடுக்கப்பட்ட மருந்தைச் சாப்பிட்ட நோயாளிகளின் உடல்நிலை படுமோசமானது. நம்மால் சரிசெய்ய முடியாத பிரச்சினைகளைக் குறித்து சதா சிந்தித்துக்கொண்டிருப்பது நம்மைச் சோர்வு எனும் புதைமணலில் புதைத்துவிடும். யெகோவாவைப் பொறுத்தவரை, அவர் நமக்குச் சாதாரண “இனிப்பு மாத்திரைகளை” அல்ல, நிஜமான “மாத்திரைகளை” கொடுக்கிறார்; அதாவது, பேரழிவு சமயங்களில் மட்டுமல்ல எல்லாச் சமயங்களிலும் நிஜமான உதவிகளை அளிக்கிறார். ஆம், அவருடைய வார்த்தையின் மூலம் உற்சாகப்படுத்துகிறார், சர்வதேச சகோதரத்துவத்தின் மூலம் ஆதரவுக்கரம் நீட்டுகிறார், தம்முடைய சக்தியின் மூலம் பலப்படுத்துகிறார். இந்த விஷயங்களுக்குக் கவனம் செலுத்தினால் மனம் லேசாகும். உங்களுடைய துயரங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவை ஒவ்வொன்றையும் சமாளிக்க என்ன செய்யலாம் என நடைமுறையாக யோசித்துப் பாருங்கள். முக்கியமாக, வாழ்க்கையில் அனுபவித்து வருகிற சந்தோஷங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.—நீதி. 17:22.
12, 13. (அ) பேரழிவுகளைச் சமாளிக்க கடவுளுடைய ஊழியர்களுக்கு எது உதவியிருக்கிறது? உதாரணம் கொடுங்கள். (ஆ) எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதைப் பேரழிவு நமக்கு எப்படி உணர்த்துகிறது?
12 சமீப காலங்களில், பயங்கரமான பேரழிவுகள் சில நாடுகளைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த நாடுகளிலுள்ள ஏராளமான சகோதரர்கள் மெச்சத்தக்க விதத்தில் அவற்றைச் சமாளித்திருக்கிறார்கள்—கஷ்டமாக இருந்தபோதிலும்! உதாரணத்திற்கு, 2010-ன் ஆரம்பத்தில் சிலி நாட்டை பூகம்பம் உலுக்கியது, சுனாமி சுருட்டிச் சென்றது. இந்தப் பேரழிவுகள், நம்முடைய சகோதரர்கள் பலருடைய வீடுவாசல்களையும் சொத்துசுகங்களையும் நாசமாக்கின. சிலருடைய வயிற்றுப் பிழைப்புக்கே உலை வைத்தன. ஆனால், இந்த இயற்கைச் சீற்றம் சகோதரர்களின் ஆன்மீக ஆர்வத்தைத் துளிகூடத் தணிக்கவில்லை. சாம்வெல் என்ற சகோதரருடைய வீடு தரைமட்டமானது. “இவ்வளவு மோசமான நிலைமையில்கூட, நானும் என் மனைவியும் கூட்டங்களுக்கோ ஊழியத்திற்கோ போவதை நிறுத்தவே இல்லை. நாங்கள் விரக்தியில் விழாதிருக்க அவை எங்களுக்குக் கைகொடுத்தன” என்று அவர் சொன்னார். இந்தத் தம்பதியரும் இன்னும் அநேகரும் பேரழிவையே நினைத்து நினைத்து நொந்துபோகாமல் யெகோவாவுடைய சேவையில் ஊக்கமாய் ஈடுபட்டார்கள்.
13 செப்டம்பர் 2009-ல், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலா நகரம் அடைமழையால் 80 சதவீதம் வெள்ளக் காடாய் காட்சியளித்தது. அப்போது, பெருமளவு சொத்துபத்துகளை இழந்துநின்ற ஒரு பணக்காரர், “இந்த வெள்ளம் பணக்காரர் ஏழை என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. அவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கஷ்டத்தையும் துன்பத்தையும்தான் கொடுத்திருக்கிறது” என்றார். இயேசு கொடுத்த பின்வரும் ஞானமான அறிவுரையை இது நமக்கு நினைப்பூட்டுகிறது: “பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அரிக்காது, திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள்.” (மத். 6:20) பணம், பொருள் என்று அதன்பின்னால் நாம் ஓடிக்கொண்டிருந்தால் திடீரென ஒருநாள் அவையெல்லாம் பறிபோகும், ஏமாற்றமே மிஞ்சும். அதனால், நம் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதுதான் மிகவும் ஞானமானது. அப்போதுதான், நமக்கு என்ன ஏற்பட்டாலும் தொடர்ந்து யெகோவாவின் நண்பர்களாய் இருப்போம்.—எபிரெயர் 13:5, 6-ஐ வாசியுங்கள்.
தைரியத்தை வெளிக்காட்டுவதற்கான காரணங்கள்
14. தைரியத்தை வெளிக்காட்ட நமக்கு என்ன காரணங்கள் உள்ளன?
14 தம்முடைய பிரசன்னத்தின்போது பூமியில் பிரச்சினைகள் வரும் என்று இயேசு தம் சீடர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால், “திகிலடையாதீர்கள்” என்றும் சொல்லியிருந்தார். (லூக். 21:9) ராஜாவான அவரும் சர்வலோகப் படைப்பாளரான யெகோவாவும் நமக்குப் பக்கபலமாய் இருப்பதால் தைரியத்தை வெளிக்காட்ட நமக்கு நல்ல காரணங்கள் உள்ளன. “கடவுள் அருளும் சக்தி நமக்குக் கோழைத்தனத்தை அல்ல, வல்லமையையும் அன்பையும் தெளிந்த புத்தியையுமே கொடுக்கிறது” என்று தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தினார்.—2 தீ. 1:7.
15. கடவுள்மீது அவருடைய ஊழியர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததற்கு உதாரணங்களைக் கொடுங்கள், அவர்களைப் போலவே நாம் எப்படித் தைரியத்தை வெளிக்காட்டலாம்?
15 கடவுள்மீது அவருடைய ஊழியர்கள் எந்தளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். ‘யெகோவா என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது’ என்று தாவீது சொன்னார். (சங். 28:7) “நம்மீது அன்பு காட்டியவரின் உதவியுடன் இவை எல்லாவற்றிலும் நாம் முழு வெற்றி பெற்று வருகிறோம்” என்று பவுல் சொன்னார். (ரோ. 8:37) அதேபோல் இயேசுவும் ஆபத்து நெருங்கும் வேளையில், “நான் தனியாக இல்லை, என் தகப்பன் என்னோடு இருக்கிறார்” என்று சொன்னார்; இவ்வாறு, கடவுளிடம் தமக்கிருந்த நெருங்கிய பந்தத்தைச் சுட்டிக்காட்டினார். (யோவா. 16:32) இவர்கள் ஒவ்வொருவருடைய வார்த்தைகளும் எதை வெளிப்படுத்துகின்றன? யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததை வெளிப்படுத்துகின்றன. நாமும் இப்படிப்பட்ட நம்பிக்கையை யெகோவாமீது வைத்தால் எத்தகைய சூழ்நிலையிலும் நம்மால் தைரியத்தை வெளிக்காட்ட முடியும்.—சங்கீதம் 46:1-3-ஐ வாசியுங்கள்.
தைரியத்தைப் பெற கடவுள் செய்திருக்கும் ஏற்பாடுகளிலிருந்து பயனடையுங்கள்
16. நாம் பைபிளைப் படிப்பது ஏன் அவசியம்?
16 சொந்த சக்தியால் நாம் தைரியத்தைப் பெற முடியாது. மாறாக, கடவுளை அறிந்துகொள்வதாலும் அவர்மீது திடநம்பிக்கை வைப்பதாலுமே தைரியத்தைப் பெற முடியும். அதற்கு, நாம் பைபிளைப் படிப்பது அவசியம். மனச்சோர்வில் வாடுகிற ஒரு சகோதரி, “ஆறுதலான பைபிள் வசனங்களை எடுத்து திரும்பத் திரும்பப் படிப்பது என் மனதிற்கு இதமளிக்கிறது” என்று சொல்கிறார். தவறாமல் குடும்ப வழிபாட்டில் ஈடுபடும்படியான அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிகிறோமா? இதையெல்லாம் செய்தால், “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” என்று சொன்ன சங்கீதக்காரனின் மனநிலை நமக்கும் இருக்கும்.—சங். 119:97.
17. (அ) தைரியமாய் இருக்க எந்த ஏற்பாடு நமக்கு உதவுகிறது? (ஆ) நம் பிரசுரங்களில் வெளிவந்த ஒரு வாழ்க்கை சரிதை உங்களுக்கு எப்படி உதவியது என்று சொல்லுங்கள்.
17 யெகோவா செய்திருக்கும் மற்றொரு ஏற்பாடு பைபிள் பிரசுரங்கள்; அவை யெகோவாமீது நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகின்றன. முக்கியமாக, நமது பிரசுரங்களில் வருகிற வாழ்க்கை சரிதைகள் அநேகருக்கு உதவியிருக்கின்றன. முன்பு மிஷனரியாக இருந்த ஒரு சகோதரர் ஒருவித மனநோயால் (பைபோலார் டிஸார்டரால்) எப்படிக் கஷ்டப்பட்டார், எப்படி அதைச் சமாளித்து யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்தார் என்ற அனுபவத்தை ஆசியாவில் வசிக்கும் ஒரு சகோதரி படித்தார். அதே நோயால் அவர் அவதிப்படுவதால் அந்த அனுபவம் அவருக்கு உற்சாகத்தை அளித்தது. “என்னுடைய பிரச்சினையைப் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது, நம்பிக்கையையும் அளித்தது” என்கிறார் அவர்.
18. ஜெபம் என்ற ஏற்பாட்டை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?
18 யெகோவா செய்திருக்கும் ஏற்பாடான ஜெபம், எல்லாச் சூழ்நிலையிலும் நமக்கு உதவும். இது எந்தளவு முக்கியம் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது, எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம் உங்கள் இருதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகக் காத்துக்கொள்ளும்.” (பிலி. 4:6, 7) துன்ப துயரங்களைச் சமாளிப்பதற்காக நாம் அடிக்கடி ஜெபம் செய்கிறோமா? பிரிட்டனில் வசிக்கும் அலெக்ஸ் என்ற சகோதரர் நீண்ட காலமாய் மனச்சோர்வில் சிக்கித் தவிக்கிறார். “ஜெபத்தில் யெகோவாவிடம் பேசுவதும், அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் அவர் சொல்வதைக் கேட்பதும் துவண்டிருந்த என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது” என்று சொல்கிறார்.
19. கூட்டங்களுக்குப் போவது பற்றி நாம் எப்படி உணர வேண்டும்?
19 யெகோவா செய்திருக்கும் மற்றொரு முக்கியமான ஏற்பாடு சபைக் கூட்டங்கள். ‘என் ஆத்துமா யெகோவாவுடைய ஆலயப் பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது’ என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங். 84:2) நாமும் அப்படித்தான் உணருகிறோமா? முன்பு குறிப்பிடப்பட்ட லினி கூட்டங்களில் கலந்துகொள்வது பற்றி இவ்வாறு சொல்கிறார்: “கூட்டங்களுக்குப் போகலாமா வேண்டாமா என்ற யோசனையே எனக்குக் கிடையாது. யெகோவாவின் உதவி தேவையென்றால் கண்டிப்பாகப் போக வேண்டுமென்று எனக்குத் தெரியும்.”
20. ஊழியத்தில் கலந்துகொள்வது நமக்கு எப்படி உதவுகிறது?
20 யெகோவா செய்திருக்கும் மற்றொரு ஏற்பாடு ஊழியம். இதில் மும்முரமாய் ஈடுபடுவது தைரியமாய் இருக்க நமக்கு உதவும். (1 தீ. 4:16) ஆஸ்திரேலியாவில், ஏராளமான பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிற ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “ஊழியத்திற்குப் போவதென்றாலே எனக்குத் துளிகூடப் பிடிக்காது. ஆனால், தன்னுடன் ஊழியம் செய்யும்படி ஒரு மூப்பர் என்னை அழைத்தபோது நான் போனேன். அதன்பின், ஊழியத்திற்குப் போனபோதெல்லாம் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்; யெகோவாதான் எனக்கு உதவியிருக்க வேண்டும்.” (நீதி. 16:20) யெகோவாமீது விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவியபோது தங்களுடைய விசுவாசம் பலப்பட்டதை அநேகர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். அப்படி மற்றவர்களுக்கு உதவும்போது, தங்களுடைய பிரச்சினைகளை மறக்க முடிகிறது. மிக முக்கியமான காரியங்களுக்குக் கவனம் செலுத்த முடிகிறது.—பிலி. 1:10, 11.
21. பிரச்சினைகளை எதிர்ப்படும்போது நாம் எதைக் குறித்து உறுதியாய் இருக்கலாம்?
21 இன்றுள்ள பிரச்சினைகளைத் தைரியமாய் எதிர்ப்பட யெகோவா ஏராளமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். இந்த ஏற்பாடுகளையெல்லாம் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; தைரியத்திற்கு முன்மாதிரிகளாய்த் திகழ்ந்தவர்களின் உதாரணங்களைத் தியானித்துப் பின்பற்றவும் வேண்டும். அப்போதுதான், எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியும் என்ற உறுதியைப் பெறுவோம். இந்த உலகம் அதன் முடிவை நோக்கி விரைகையில், இன்னும் அநேக துன்ப துயரங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். என்றாலும், பவுலைப் போலவே நாமும் உணரலாம்; அவர் இவ்வாறு சொன்னார்: “தள்ளப்படுகிறோம், ஆனால் அழிந்துபோவதில்லை. . . . சோர்ந்துபோவதில்லை.” (2 கொ. 4:9, 16) ஆம், யெகோவாவின் உதவியோடு இன்றைய துன்ப துயரங்களை நம்மால் தைரியமாய்த் துரத்தியடிக்க முடியும்.—2 கொரிந்தியர் 4:17, 18-ஐ வாசியுங்கள்.