காவற்கோபுரத்தின் எளிமையான ஆங்கிலப் பதிப்பு ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
பல பத்தாண்டுகளாக காவற்கோபுர பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு வருகிற பைபிள் விஷயங்களிலிருந்து உலகம் முழுவதிலுமுள்ள ஆண்களும் பெண்களும் நன்மை அடைந்திருக்கிறார்கள். அவற்றுக்காகத் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்கள். ஜூலை 2011-ல் காவற்கோபுரத்தின் எளிமையான ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டது. அந்த இதழ் இவ்வாறு விளக்கியது: “இந்தப் புதிய பதிப்பு ஒரு வருடத்திற்குப் பிரசுரிக்கப்படும். பிரயோஜனமாக இருந்தால் தொடர்ந்து பிரசுரிக்கப்படும்.”
இதைத் தொடர்ந்து பிரசுரிக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதை இப்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல, காவற்கோபுரத்தின் எளிமையான பதிப்பு பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், ஸ்பெயின் மொழிகளிலும் நாளடைவில் வெளியிடப்படும்.
பாராட்டு ஏன்?
எளிமையான இந்தப் பதிப்பைப் பெற்றவுடன் தென் பசிபிக்கிலுள்ள அநேகர், “இப்போதுதான் சகோதர சகோதரிகளால் காவற்கோபுரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று எழுதி அனுப்பினார்கள். “வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் புரிந்துகொள்வதற்காகச் செலவிட்ட நேரத்தை இப்போது, வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துப் பார்த்துப் புரிந்துகொள்வதற்கும், கட்டுரையோடு ஒத்துப்பார்ப்பதற்கும் செலவிட முடிகிறது” என்று வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒரு சகோதரி கடிதம் எழுதினார்.
“வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் புரிந்துகொள்வதற்காகச் செலவிட்ட நேரத்தை இப்போது, வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துப் பார்த்துப் புரிந்துகொள்வதற்கும், கட்டுரையோடு ஒத்துப்பார்ப்பதற்கும் செலவிட முடிகிறது”
அமெரிக்காவில் உள்ள ஒரு பட்டதாரி சொல்கிறார்: “18 வருடங்களாகவே என்னுடைய பேச்சிலும் எழுத்திலும் உயர்கல்வியின் தாக்கம் இருந்தது. மெத்தப்படித்த மேதாவிகளைப் போலத்தான் பேசினேன், சிந்தித்தேன். என் பேச்சிலும் சிந்தனையிலும் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்.” இப்போது திறம்பட ஊழியம் செய்கிற அவர் இவ்வாறு எழுதுகிறார்: “காவற்கோபுரத்தின் எளிமையான பதிப்பு எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது. எளிய வார்த்தைகளில் எப்படிப் பேசலாம் என்பதை இதன் மொழிநடை எனக்குக் கற்றுக்கொடுக்கிறது.”
1972-ஆம் வருடம் ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரி (இங்கிலாந்தைச் சேர்ந்தவர்) காவற்கோபுரத்தின் எளிமையான பதிப்பைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “முதல் இதழை நான் படித்தபோது, யெகோவா என்னருகில் அமர்ந்து என்னை அரவணைப்பதுபோல் இருந்தது. ஒரு குழந்தை தூங்கப்போவதற்குமுன் அதன் அப்பா ஒரு புத்தகத்திலிருந்து கதை வாசித்துக் காட்டுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.”
சுமார் 40 வருடங்களுக்குமுன் ஞானஸ்நானம் எடுத்த பெத்தேல் சகோதரி ஒருவர், “எளிமையான ஆங்கிலப் பதிப்பிலிருந்து விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்” என்று சொல்கிறார். உதாரணத்திற்கு, செப்டம்பர் 15, 2011 இதழில், “சில சொற்றொடர்களின் விளக்கம்” என்ற பெட்டியிலுள்ள தகவல் எனக்கு உதவியது; எபிரெயர் 12:1-ல் உள்ள ‘திரண்டிருக்கும் மேகம் போன்ற சாட்சிகள்’ என்ற சொற்றொடருக்கு “கணக்கிட முடியாதளவு சாட்சிகளின் எண்ணிக்கை” என்ற விளக்கம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. “அந்த வசனத்தை நன்கு புரிந்துகொள்ள இந்த விளக்கம் எனக்கு உதவியது” என்று அவர் சொல்கிறார். அதோடு, “சபையில் அநேகர் வைத்திருக்கும் காவற்கோபுரத்தின் பதிப்பில் உள்ளவற்றைப் போல் அதன் எளிமையான பதிப்பில் இல்லை. எனவே, அதிலிருந்து ஒரு பிள்ளை நேரடியாகப் பதில்களை வாசித்தாலும், அது சொந்த வார்த்தைகளில் பதில் சொல்வதுபோல் சபையாருக்குத் தொனிக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.
பெத்தேலில் இருக்கும் மற்றொரு சகோதரி இவ்வாறு எழுதினார்: “சபையில் பிள்ளைகளுடைய பதில்களைக் கேட்க எனக்கு ஆசை ஆசையாக இருக்கும். அவர்கள் நம்பிக்கையுடன் பதில்களைச் சொல்வதற்கு காவற்கோபுரத்தின் எளிமையான பதிப்பு உதவுகிறது. அவர்களுடைய பதில்களைக் கேட்க எனக்கு உற்சாகமாக இருக்கிறது.”
1984-ல் ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரி இவ்வாறு பாராட்டி எழுதினார்: “இந்த எளிமையான பதிப்பு எனக்காகவே எழுதப்பட்டதுபோல் இருக்கிறது. படிப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவுகிறது. காவற்கோபுர படிப்பில் பதில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது வந்திருக்கிறது.”
பெற்றோர் போற்றும் பொக்கிஷம்
ஏழு வயது பையனின் தாய் இவ்வாறு எழுதினார்: “காவற்கோபுர படிப்பிற்காகத் தயாரிக்கும்போது, முன்பெல்லாம் நிறைய வாக்கியங்களை அவனுக்கு விளக்க வேண்டியிருக்கும்; அவற்றை விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.” எளிமையான பதிப்பு எப்படி உதவியது? “இப்போது அவனால் பாராக்களை வாசிக்கவும் முடிகிறது, புரிந்துகொள்ளவும் முடிகிறது; இதைப் பார்க்க பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கஷ்டமான வார்த்தைகளும் இல்லை, பெரிய பெரிய வாக்கியங்களும் இல்லை, அதனால் இப்போது அவன் பயமில்லாமல் பதில் சொல்கிறான். என்னுடைய உதவி இல்லாமலேயே தயாரிக்க ஆரம்பித்துவிட்டான். கூட்டம் நடக்கும்போது, அவனுடைய கவனம் முழுவதும் கையிலுள்ள பத்திரிகை மீதே இருக்கிறது” என்றும் அவர் எழுதினார்.
“இப்போது அவனால் பாராக்களை வாசிக்கவும் முடிகிறது, புரிந்துகொள்ளவும் முடிகிறது; இதைப் பார்க்க பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”
ஒன்பது வயது சிறுமியின் தாய் இவ்வாறு எழுதினார்: “பதில்களைத் தயாரிக்க அவளுக்கு நாங்கள் முன்பு உதவ வேண்டியிருந்தது. இப்போது அவளாகவே தயாரிக்கிறாள். விஷயங்களைப் படிப்படியாக விளக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. படிக்கிற விஷயங்கள் அவளுக்கே நன்கு புரிவதால், காவற்கோபுர படிப்பில் உற்சாகமாகக் கலந்துகொள்கிறாள்.”
பிள்ளைகள் எப்படி உணர்கிறார்கள்?
எளிமையான காவற்கோபுர பதிப்பு தங்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அநேகப் பிள்ளைகள் உணர்கிறார்கள். 12 வயது ரெபேக்கா, “தயவுசெய்து இந்தப் புதிய பதிப்பைத் தொடர்ந்து வெளியிடுங்களேன்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். “இதில் எனக்கு ரொம்பவும் பிடித்தது ‘சில சொற்றொடர்களின் விளக்கம்’ என்ற பெட்டிதான். எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு இது எவ்வளவு சிம்பிளாக இருக்கிறது!” என்று எழுதினாள் அவள்.
ஏழு வயது நிக்கலட் அதேபோல் உணர்கிறாள்: “முன்பெல்லாம் காவற்கோபுர கட்டுரைகளைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். இப்போதோ என்னால் நிறையப் பதில்களைச் சொல்ல முடிகிறது.” ஒன்பது வயது எம்மா இப்படி எழுதினாள்: “எனக்கும் ஆறு வயதான என் தம்பிக்கும் இது ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கிறது. இப்போது நிறைய விஷயங்கள் எங்களுக்குப் புரிகிறது. நன்றி!”
எளிய வாக்கியங்களும் எளிய வார்த்தைகளும் உள்ள ஆங்கில காவற்கோபுரத்தின் எளிமையான பதிப்பிலிருந்து அநேகர் பயனடைகிறார்கள் என்பது தெளிவு. அவர்களுடைய ஆன்மீகத் தேவையை இது பூர்த்தி செய்துவருகிறது. எனவே, 1879 முதல் வெளிவரும் காவற்கோபுரத்தின் சாதாரணப் பதிப்போடுகூட எளிமையான பதிப்பும் தொடர்ந்து வெளிவரும்.