பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
பொய் பேசிய பேதுருவும் அனனியாவும் நமக்கு என்ன பாடம்?
பொய் என்றால் என்ன? ஒரு விஷயம் உண்மையில்லை என்று நன்றாகத் தெரிந்தும் அதை உண்மை என்று சொன்னால் அதுதான் பொய். நீ எப்போதாவது பொய் சொல்லியிருக்கிறாயா?—a கடவுளைச் சேவித்த சிலர்கூட பொய் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பொய் சொன்ன ஒருவரைப் பற்றி பைபிளில் பார்க்கலாம். அவர் யாரென ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்கும். அவருடைய பெயர் பேதுரு. இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர். அவர் ஏன் பொய் சொன்னார்? அவருடைய கதையைப் படித்துத் தெரிந்துகொள்வோமா?
இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டுபோகிறார்கள். அப்போது நடுராத்திரி தாண்டியிருந்தது. யாருக்கும் சந்தேகம் வராதபடி பேதுரு தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றத்துக்குள் நுழைகிறார். அவரை வீட்டுக்குள்ளே விட்ட வேலைக்காரப் பெண் வெளிச்சத்தில் அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். ‘நீயும் இயேசுவோடுகூட இருந்தாய்’ என்று சொல்கிறாள். பேதுருவோ பயத்தில், இல்லை என்று மறுக்கிறார்.
பின்பு, மற்றொரு பெண் அவரை அடையாளம் கண்டுகொள்கிறாள். ‘இந்த ஆள் இயேசுவோடு இருந்தான்’ என்று சொல்கிறாள். மறுபடியும் பேதுரு அதை மறுக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து, இன்னும் சிலர் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீயும் அவர்களில் ஒருவன்தான்” என்று சொல்கிறார்கள்.
பேதுரு பயத்தில் வெலவெலத்துப்போகிறார். அதனால், மூன்றாவது தடவை, “அந்த மனுஷனை எனக்குத் தெரியவே தெரியாது!” என்று பொய் சொல்கிறார். அப்போது ஒரு சேவல் கூவுகிறது. பேதுருவை இயேசு பார்க்கிறார். சில மணிநேரத்துக்கு முன்புதான் தன்னிடம் இயேசு, “சேவல் கூவுவதற்குமுன், என்னைத் தெரியாதென மூன்று முறை நீ சொல்லிவிடுவாய்” என்று சொன்னது பேதுருவுடைய நினைவுக்கு வருகிறது. மனமுடைந்துபோய் கதறி அழுகிறார். பொய் சொன்னதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார்.
உனக்கும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைமை வருமென நினைக்கிறாயா?— நீ ஸ்கூலில் இருக்கும்போது, மற்ற பிள்ளைகள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிப் பேசுவது உன் காதில் விழலாம். ஒருவன், ‘அவங்க கொடி வணக்கம் செய்ய மாட்டாங்க’ என்கிறான். இன்னொருவன், ‘நாட்டுக்காக அவங்க போர் செய்ய மாட்டாங்க’ என்கிறான். மற்றொருவன், ‘அவங்க கிறிஸ்தவங்களே கிடையாது, ஏன்னா அவங்க கிறிஸ்மஸ் கொண்டாட மாட்டாங்க’ என்கிறான். அந்தச் சமயத்தில், ஒருவன் உன்னைப் பார்த்து, ‘நீயும் ஒரு யெகோவாவின் சாட்சி தானே?’ என்று கேட்கிறான். அப்போது நீ என்ன சொல்வாய்? —
இதுபோன்ற சூழ்நிலை வருவதற்கு முன்னரே அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுக்க நீ தயாராய் இருக்க வேண்டும். பேதுரு அப்படித் தயாராய் இருக்கவில்லை. அதனால்தான், நெருக்கடியான சூழ்நிலையில் பொய் சொன்னார். இருந்தாலும், தான் செய்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார்; கடவுள் அவரை மன்னித்தார்.
பேதுரு காலத்தில் வாழ்ந்த இன்னொரு சீடன்தான் அனனியா; அவரும் பொய் சொன்னார், அவருடைய மனைவி சப்பீராளும் அவருக்கு உடந்தையாக இருந்தாள். அவர்கள் இரண்டு பேரையும் கடவுள் மன்னிக்கவில்லை. ஏன் என்று பார்ப்போமா?
இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்குப் போய் பத்து நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அப்போது, எருசலேமில் சுமார் 3,000 பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். அவர்களில் அநேகர் பெந்தெகொஸ்தே பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தூர தேசங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். இயேசுவின் சீடர்களான பிறகு, கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அதிகமாகக் கற்றுக்கொள்ள இன்னும் கொஞ்ச நாள் எருசலேமில் தங்க விரும்புகிறார்கள். அதனால், இயேசுவின் சீடர்கள் சிலர் பணம் கொடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்கள்.
அவர்களுக்கு உதவ அனனியாவும் சப்பீராளும் தங்களிடமிருந்த ஒரு நிலத்தை விற்கிறார்கள். பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொண்டுவந்து கொடுத்த அனனியா, ‘இதுதான் மொத்த தொகை’ என்று சொல்கிறார். ஆனால், அது சுத்தப் பொய்! ஏனென்றால், அதிலிருந்து கொஞ்சப் பணத்தை அவர் தனக்கென்று எடுத்து வைத்திருந்தார். இந்த விஷயத்தை பேதுருவுக்குக் கடவுள் தெரியப்படுத்துகிறார். அதனால், பேதுரு அனனியாவைப் பார்த்து, “மனிதரிடம் அல்ல, கடவுளிடமே நீ பொய் சொல்லியிருக்கிறாய்” என்கிறார். அந்த நிமிடமே அனனியா கீழே விழுந்து செத்துப்போகிறார்! கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் கழித்து, அவருடைய மனைவி வருகிறாள். தன் கணவனுக்கு நடந்த எதுவும் அவளுக்குத் தெரியாது; தன் கணவனைப் போலவே அவளும் பொய் சொல்கிறாள், பின்பு கீழே விழுந்து செத்துப்போகிறாள்!
இதில் ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது: நாம் எல்லோரும் உண்மையைச் சொல்வது மிகமிக முக்கியம். என்றாலும், நாம் எல்லோரும் தவறுகள் செய்கிறோம், சிறுவயதில் நிறையவே செய்கிறோம். யெகோவா உன்னை நேசிக்கிறார், பேதுருவை மன்னித்ததுபோல உன்னையும் மன்னிப்பார் என்பதை நினைத்து நீ சந்தோஷப்படுகிறாய் தானே? — ஆனால், நாம் எப்போதும் உண்மை பேச வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஒருவேளை பொய் பேசிவிட்டால், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு கெஞ்ச வேண்டும். அதைத்தான் பேதுரு செய்திருப்பார், அதனால் கடவுள் அவரை மன்னித்தார். பொய் பேசாமலிருக்க நாம் கடினமாய் முயற்சி செய்தால் நம்மையும் அவர் மன்னிப்பார். ▪ (w13-E 03/01)
உன் பைபிளில் வாசித்துப்பார்
a ஒரு பிள்ளையுடன் சேர்ந்து படித்தால், கோடிட்ட இடத்தில் சற்று நிறுத்தி அந்தக் கேள்விக்குப் பிள்ளையைப் பதில் சொல்லச் சொல்லுங்கள்.