ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்
“அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக.” —எபி. 10:24.
1, 2. மரண அணிவகுப்பிலிருந்து உயிர்தப்ப 230 யெகோவாவின் சாட்சிகளுக்கு எது உதவியது?
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததோடு நாசி ஆட்சி கவிழ்ந்தது. அப்போது சித்திரவதை முகாம்களில் மீதியிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சமாதிகட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமிலிருந்த எல்லாக் கைதிகளையும் துறைமுகங்களுக்கு நடத்திச் சென்று, கப்பல்களில் ஏற்றி, நடுக்கடலில் மூழ்கடிக்க வேண்டும் என்பது அவர்கள் தீட்டிய சதித்திட்டங்களில் ஒன்று. இது பின்னர் மரண அணிவகுப்பு என்று அழைக்கப்பட்டது.
2 சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமிலிருந்த 33,000 கைதிகள், ஜெர்மனியிலுள்ள துறைமுக நகரமான லூக்பெக்கிற்கு 250 கி.மீ. தூரம் வலுக்கட்டாயமாக நடத்திச் செல்லப்பட்டார்கள். அவர்களில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 230 யெகோவாவின் சாட்சிகளும் இருந்தார்கள். இந்த யெகோவாவின் சாட்சிகளை ஒன்றுசேர்ந்து நடக்கும்படி படைவீரர்கள் உத்தரவிட்டார்கள். ஏற்கெனவே எல்லோரும் பட்டினியாலும் நோயாலும் பலவீனமாக இருந்தார்கள். இப்படியிருக்க நம் சகோதரர்களால் எப்படி அந்தத் துறைமுகத்திற்கு உயிரோடு போய்ச் சேர முடிந்தது? அவர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்: “நாங்கள் தொடர்ந்து நடக்க, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தோம்.” கடவுள் கொடுத்த ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியும்’ ஒருவர்மேல் ஒருவர் காட்டிய அன்பும்தான் அந்தப் பயங்கரமான சோதனையைச் சகிக்க அவர்களுக்கு உதவியது.—2 கொ. 4:7.
3. நாம் ஏன் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்?
3 இன்று நமக்கு அப்படிப்பட்ட மரண அணிவகுப்பு இல்லையென்றாலும் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. கடவுளுடைய அரசாங்கம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, சாத்தான் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். “தனக்குக் கொஞ்சக் காலமே இருக்கிறதென்று அறிந்து மிகுந்த கோபத்தோடு” இருக்கிறான். (வெளி. 12:7-9, 12) அர்மகெதோன் நெருங்கி வரும் இந்தக் காலக்கட்டத்தில், யெகோவாவோடுள்ள நம் பந்தத்தைக் குலைக்க சாத்தான் சோதனைகளையும் கஷ்டங்களையும் கொடுக்கிறான். அதோடு அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளும்கூட. (யோபு 14:1; பிர. 2:23) சில சமயங்களில் ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பலமாக இருப்பதற்கு என்னதான் முயற்சி செய்தாலும் கஷ்டங்களுக்குமேல் கஷ்டங்கள் நம்மை அழுத்தும்போது நாம் சோர்ந்துவிடுகிறோம். உதாரணமாக, ஒரு சகோதரர் பல வருடங்களாக எத்தனையோ பேருக்கு ஆன்மீக ரீதியில் உதவியிருக்கிறார். ஆனால், வயதான காலத்தில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் நோய் வந்தபோது மனந்தளர்ந்து போனார். அந்தச் சகோதரரைப் போலவே, நம் எல்லோருக்கும் யெகோவாவிடமிருந்து ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியும்’ மற்றவர்களிடமிருந்து ஊக்கமும் தேவை.
4. மற்றவர்களை ஊக்கப்படுத்த, அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுரையைக் கொடுத்தார்?
4 மற்றவர்களுக்கு நாம் உற்சாகத்தின் ஊற்றாகத் திகழ வேண்டுமென்றால், எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையை மனதில் வைப்பது அவசியம். “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக; நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக” என்று அவர் சொன்னார். (எபி. 10:24, 25) இந்த முக்கியமான அறிவுரையை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
“ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை” காட்டுங்கள்
5. “ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை” காட்டுங்கள் என்பதன் அர்த்தம் என்ன, அதற்காக என்ன செய்ய வேண்டும்?
5 “ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை” காட்டுங்கள் என்பது, “மற்றவர்களின் தேவையை கருத்தில்கொள்வதை, அவர்களைப் பற்றி நினைத்துப்பார்ப்பதை” அர்த்தப்படுத்துகிறது. ராஜ்ய மன்றத்தில் சகோதர சகோதரிகளிடம் வெறுமனே ‘வணக்கம்’ சொல்வதோடு, அல்லது பொதுவான விஷயங்களைப் பேசுவதோடு நிறுத்திக்கொண்டால், அவர்கள்மேல் ஆழ்ந்த அக்கறை காட்டுவதாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது. அதே சமயம் ‘மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட’ நாம் விரும்புவதில்லை. (1 தெ. 4:11; 1 தீ. 5:13) ஆனால், நம் சகோதரர்களை ஊக்கப்படுத்துவதற்கு, அவர்களுடைய சூழ்நிலையை, குணங்களை, ஆன்மீக நிலையை, குறைநிறைகளை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். நாம் அவர்களுடைய நண்பர்கள் என்றும் அவர்களை உண்மையிலேயே நேசிக்கிறோம் என்றும் அவர்கள் உணர வேண்டும். அதற்காக, அவர்களோடு நேரம் செலவிடுவது அவசியம்; பிரச்சினைகளால் சோர்ந்துபோயிருக்கும் சமயங்களில் மட்டுமல்ல, மற்ற சமயங்களிலும் நேரம் செலவிடுவது அவசியம்.—ரோ. 12:13.
6. தங்கள் பொறுப்பிலுள்ள சகோதர சகோதரிகள்மீது “ஆழ்ந்த அக்கறை” காட்ட மூப்பர்களுக்கு எது உதவும்?
6 தங்கள் “பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை” மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் மேய்த்துவரும்படி சபை மூப்பர்களுக்கு பைபிள் அறிவுரை கூறுகிறது. (1 பே. 5:1-3) தங்கள் பொறுப்பிலுள்ள மந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றால் மேய்ப்பு வேலையை அவர்களால் எப்படிச் சிறப்பாகச் செய்ய முடியும்? (நீதிமொழிகள் 27:23-ஐ வாசியுங்கள்.) சகோதர சகோதரிகளுக்கு உதவவும் அவர்களோடு நேரம் செலவிடவும் மூப்பர்கள் தயாராய் இருக்கும்போது அவர்களிடம் உதவி கேட்க சபையார் தயங்க மாட்டார்கள். தங்களுடைய உணர்ச்சிகளையும் கவலைகளையும்கூட மூப்பர்களிடம் தாராளமாகச் சொல்வார்கள். இது, தங்கள் பொறுப்பிலுள்ள சகோதர சகோதரிகள்மீது “ஆழ்ந்த அக்கறை” காட்டவும் தேவையான உதவி அளிக்கவும் மூப்பர்களுக்கு உதவும்.
7. மனச்சோர்வில் வாடுகிறவர்கள் ‘மூடத்தனமாக’ பேசும்போது நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
7 தெசலோனிக்கேய சபையாருக்கு எழுதுகையில், “பலவீனமானவர்களுக்கு ஆதரவாக இருங்கள்” என்று பவுல் குறிப்பிட்டார். (1 தெசலோனிக்கேயர் 5:14-ஐ வாசியுங்கள்.) மனச்சோர்வாலும் மன உளைச்சலாலும் வாடுபவர்களே ‘பலவீனமானவர்கள்.’ “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்று நீதிமொழிகள் 24:10 சொல்கிறது. மிகுந்த மனச்சோர்வால் வாடும் ஒருவர் பேசும் வார்த்தைகள் “மூடத்தனமானவையாக” இருக்கலாம். (யோபு 6:2, 3) அவர்கள் வேண்டுமென்றே அப்படிப் பேசுவதில்லை. ரஷல் என்ற பெண் இதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்; அவருடைய அம்மா கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். “நிறைய சமயங்கள்ல என்னை கோபப்படுத்துற மாதிரி அம்மா பேசுவாங்க. அப்போதெல்லாம் உண்மையிலேயே அம்மா எப்படிப்பட்டவங்கனு யோசிச்சு பார்ப்பேன்; அவங்களோட அன்பை, பாசத்தை, தாராள குணத்தை யோசிச்சு பார்ப்பேன். மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவங்க எதையும் வேணும்னு சொல்றதில்லனு புரிஞ்சுக்கிட்டேன். கோபத்துல பதிலுக்கு பதில் பேசுறதும் செய்றதும்தான் பெரிய தப்பு” என்று ரஷல் சொல்கிறார். “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்று நீதிமொழிகள் 19:11 சொல்கிறது.
8. நமக்கு “ஆழ்ந்த அக்கறை” இருப்பதை முக்கியமாக யாரிடம் காட்ட வேண்டும், ஏன்?
8 முன்பு செய்த தவறிலிருந்து மனந்திரும்பி தன்னைத் திருத்திக்கொண்ட பிறகும் அதை நினைத்து நினைத்து வெதும்புகிறவர்களிடம் நாம் எப்படி “ஆழ்ந்த அக்கறை” காட்டலாம்? கொரிந்துவிலிருந்த மனம்மாறிய ஒருவரைப் பற்றி பவுல் இப்படி எழுதினார்: “அவன் ஒரேயடியாக வருத்தத்தில் ஆழ்ந்துவிடாதபடி இப்போது நீங்கள் அவனை மனதார மன்னித்து ஆறுதல்படுத்த வேண்டும். ஆகையால், உங்கள் அன்பை அவனுக்கு உறுதிப்படுத்தும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” (2 கொ. 2:7, 8) “உறுதிப்படுத்து” என்ற வார்த்தையின் அர்த்தம் “மெய்ப்பித்துக் காட்டு, நிரூபி, சட்டப்படியாக்கு” என ஓர் அகராதி குறிப்பிடுகிறது. ஒருவர்மீது நமக்கு அன்பும் அக்கறையும் இருப்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதைச் சொல்லிலும் செயலிலும் காட்ட வேண்டும்.
‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் தூண்டியெழுப்புங்கள்’
9. ‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்புங்கள்’ என்பதன் அர்த்தம் என்ன?
9 ‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவோமாக’ என்று பவுல் எழுதினார். இதைச் செய்யும்படி சக கிறிஸ்தவர்களை நாம் தூண்ட வேண்டும். உதாரணத்திற்கு, அணையப் போகும் தீயை மீண்டும் மூட்டுவதற்கு கனலைக் கிளறிவிட்டு ஊதாங்குழலால் ஊத வேண்டும். (2 தீ. 1:6) அதேபோல், கடவுளிடமும் மற்றவர்களிடமும் அன்புகாட்ட நம் சகோதரர்களைத் தூண்ட வேண்டும். அவர்கள் நற்செயல்கள் செய்யும்போது பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
மற்றவர்களோடு ஊழியம் செய்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்
10, 11. (அ) யாருக்கெல்லாம் பாராட்டு தேவை? (ஆ) பாராட்டுவது, சரியானதைச் செய்ய ஒருவருக்கு எப்படி உதவும் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
10 நாம் சோர்வாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நம் எல்லோருக்குமே பாராட்டு தேவை. “நான் நன்றாகச் செய்திருக்கிறேன் என்று ஒரு விஷயத்திற்குக்கூட என் அப்பா பாராட்டியதே கிடையாது. அதனால் சிறுவயதிலிருந்தே என்மேல் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. . . . இப்போது எனக்கு 50 வயதாகிவிட்டது. ஆனாலும், ஒரு மூப்பராக என்னுடைய பொறுப்புகளை நல்ல விதத்தில் செய்து வருகிறேன் என்று என் நண்பர்கள் சொல்ல வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன். . . . மற்றவர்களை ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டேன். அதனால் வலியப் போய் மற்றவர்களை உற்சாகப்படுத்துவேன்.” பாராட்டிப் பேசினால், பயனியர்கள், வயதானவர்கள், சோர்வாக இருப்பவர்கள் என எல்லோருமே ஊக்கம் பெறுவார்கள்.—ரோ. 12:10.
11 ‘ஆன்மீகத் தகுதிகளையுடையவர்கள் தவறு செய்த ஒருவரைச் சரிப்படுத்த முயலும்போது’ அவருக்கு அன்பாக ஆலோசனை கொடுத்து, முன்பு செய்த நல்ல காரியங்களுக்காகப் பாராட்டினால், அவர் மீண்டும் சரியானதைச் செய்ய ஊக்கம் பெறுவார். (கலா. 6:1) மிரியம் என்ற சகோதரிக்கு இதுதான் உதவியது. “என்னுடைய நெருங்கிய நண்பர்களில் சிலர் சத்தியத்தை விட்டு விலகிப்போன அதே சமயத்தில் என் அப்பாவுக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது; அதிர்ச்சியால் உறைந்து என் மனம் புண்ணாகிப்போன சமயம் அது. என் மன உளைச்சலை மேற்கொள்வதற்காக சத்தியத்தில் இல்லாத ஒருவனோடு சுற்ற ஆரம்பித்தேன்” என்று அவர் எழுதுகிறார். இனி யெகோவா தன்னை நேசிக்க மாட்டார் என நினைத்து சத்தியத்தைவிட்டு விலக முடிவு செய்தார். முன்பு யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்ததைப் பற்றி ஒரு மூப்பர் அவரிடம் எடுத்துச்சொன்னார்; யெகோவா அவரை இன்னும் நேசிப்பதாகவும் சொன்னார். அப்போது யெகோவாமீதுள்ள அன்பு மீண்டும் அவர் மனதில் துளிர்த்தது. சத்தியத்தில் இல்லாதவனோடு வைத்திருந்த சகவாசத்தை முறித்துக்கொண்டு, யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்தார்.
அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் தூண்டியெழுப்புங்கள்
12. ஒருவரை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசினால், குற்றப்படுத்தினால், கூனிக்குறுக வைத்தால் என்ன ஆகும்?
12 பக்திவைராக்கியத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்ய ஒருவரைத் ‘தூண்டும்போது’ கவனமாக இருக்க வேண்டும். அவரை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை... நாம் போட்ட சட்டங்களைப் பின்பற்றாததற்காக குற்றப்படுத்துவதை... கடவுளுடைய சேவையில் அதிகம் செய்யாததை நினைத்து கூனிக்குறுக வைப்பதை... தவிர்க்க வேண்டும். இப்படியெல்லாம் செய்வது அவரைச் சில காலத்திற்கு உற்சாகமாகச் சேவை செய்யத் தூண்டினாலும் அது ரொம்பக் காலம் நீடிக்காது. அதற்குப் பதிலாக, பாராட்டிப் பேசும்போது... கடவுளுக்குச் சேவை செய்வதற்கான காரணம் அவர்மீதுள்ள அன்பே என்பதை உணர வைக்கும்போது... தொடர்ந்து சிறப்பாக சேவை செய்ய அவர் தூண்டப்படுவார்.—பிலிப்பியர் 2:1-4-ஐ வாசியுங்கள்.
‘ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்’
13. ஊக்கப்படுத்துவது எதை அர்த்தப்படுத்துகிறது? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.)
13 ‘நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவது’ முக்கியம். ஊக்கப்படுத்துவது என்பது, யெகோவாவின் சேவையில் தொடர்ந்து முன்னேறத் தூண்டுவதை அர்த்தப்படுத்துகிறது. அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் தூண்டுவது அணையப் போகும் தீயை மூட்டிவிடுவதைப் போலிருக்கிறது; அதேபோல் மற்றவர்களை ஊக்கப்படுத்துவது நெருப்பில் எண்ணெயை ஊற்றி தொடர்ந்து எரிய வைப்பதை அல்லது அதிகமாக எரிய வைப்பதைப் போலிருக்கிறது. அப்படியானால், ஊக்கப்படுத்துவது என்பது மனச்சோர்வில் வாடும் ஒருவரைப் பலப்படுத்துவதை... தேற்றுவதை... அர்த்தப்படுத்துகிறது. அப்படிச் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அன்பாக, கனிவாக பேச வேண்டும். (நீதி. 12:18) அதோடு, “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும்” இருக்க வேண்டும். (யாக். 1:19) ஒரு சகோதரரோ சகோதரியோ சொல்வதை அனுதாபத்தோடு கேட்கும்போது அவருடைய மனச்சோர்வுக்கான காரணத்தைக் கண்டறிய முடியும்; அதைச் சமாளிக்க உதவும் சில விஷயங்களைச் சொல்லவும் முடியும்.
இனிய தோழமையை அனுபவியுங்கள்
14. சோர்ந்துபோன ஒரு சகோதரருக்கு ஒரு மூப்பர் எப்படி உதவினார்?
14 பல வருடங்களாக செயலற்றவராய் இருந்த ஒரு சகோதரருக்கு அன்பான ஒரு மூப்பர் எப்படி உதவினார் என்று கவனியுங்கள். அவர் பேசுவதை அந்த மூப்பர் கவனித்துக் கேட்டபோது யெகோவாமீது அவருக்கு இன்னும் அலாதி அன்பு இருப்பது தெரியவந்தது. அவர் காவற்கோபுர பத்திரிகைகளை ஒன்றுவிடாமல் படித்து கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தார். ஆனால், சபையிலுள்ள சிலரின் நடவடிக்கைகள் அவருக்கு ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தன. அவர் சொன்னதையெல்லாம் அந்த மூப்பர் அன்போடு கேட்டார்; அவரைச் சட்டென நியாயந்தீர்க்காமல், அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நேசிப்பதாகச் சொன்னார். முன்பு நடந்த சில வேதனையான விஷயங்களை யோசித்து யோசித்து தான் நேசித்த கடவுளையே சேவிக்காமல் விட்டுவிட்டதை அந்தச் சகோதரர் காலப்போக்கில் உணர்ந்துகொண்டார். தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்யும்படி அந்த மூப்பர் அவரை அழைத்தார். அந்த மூப்பரின் உதவியோடு அவர் மீண்டும் ஊழியத்தில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டார், மூப்பராகச் சேவை செய்ய திரும்பவும் தகுதிபெற்றார்.
மனச்சோர்வில் வாடுபவர் சொல்வதைப் பொறுமையோடு கேளுங்கள் (பாராக்கள் 14, 15)
15. மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விஷயத்தில் யெகோவாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 சோர்ந்துபோன ஒருவருக்கு நாம் உதவும்போது அவர் உடனடியாகவே பழைய நிலைக்கு வராமலிருக்கலாம் அல்லது நம் உதவியைச் சட்டென ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அவருக்கு நாம் சில காலத்திற்கு ஆதரவு அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். “பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடமும் பொறுமையாய் இருங்கள்” என்று பவுல் சொன்னார். (1 தெ. 5:14, ஆன் அமெரிக்கன் ட்ரான்ஸ்லேஷன்) பலவீனரைச் சட்டென விட்டுவிடாமல் அவர்களை ‘தாங்கிப் பிடிக்க’ வேண்டும், அதாவது அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். முற்காலத்தில், அவ்வப்போது சோர்ந்துபோன தம் ஊழியர்களிடம் யெகோவா பொறுமையாக நடந்துகொண்டார். உதாரணத்திற்கு, எலியாவின் உணர்ச்சிகளுக்குக் கடவுள் மதிப்புக்கொடுத்து அவரிடம் மிகவும் பொறுமையாக நடந்துகொண்டார். அவர் தன்னுடைய சேவையைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவையான உதவி அளித்தார். (1 இரா. 19:1-18) தாவீது உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியபோது யெகோவா அவரை மன்னித்தார். (சங். 51:7, 17) 73-ஆம் சங்கீதத்தின் எழுத்தாளர் கடவுளுடைய சேவையை விட்டுவிடவிருந்தார்; அவருக்கும் கடவுள் உதவினார். (சங். 73:13, 16, 17) முக்கியமாக, நாம் மனமுடைந்து சோர்வில் வாடும்போது யெகோவா நம்மிடம் கனிவாக, தயவாக நடந்துகொள்கிறார். (யாத். 34:6) “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்.” (புல. 3:22, 23) அவரைப் போலவே நாமும் மனச்சோர்வில் வாடுவோரிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்.
வாழ்வுக்கான பாதையில் நிலைத்திருக்க ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்
16, 17. இந்த உலகின் முடிவு நெருங்க நெருங்க நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும், ஏன்?
16 சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமிலிருந்து வெளியேறிய 33,000 கைதிகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். ஆனால், 230 யெகோவாவின் சாட்சிகளும் அந்த படுபயங்கரமான சோதனையிலிருந்து உயிர்பிழைத்தார்கள். ஒருவருக்கொருவர் கொடுத்த ஊக்குவிப்பும் ஆதரவும்தான் அந்த மரண அணிவகுப்பிலிருந்து உயிர்பிழைக்க அவர்களுக்குப் பெரிதும் உதவியது.
17 இன்று நாம் ‘வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில்’ சென்றுகொண்டிருக்கிறோம். (மத். 7:14) சீக்கிரத்தில் யெகோவாவை வழிபடுபவர்கள் எல்லோருமே அணிவகுத்துச் சென்று நீதி குடிகொண்டுள்ள புதிய உலகில் கால்பதிப்பார்கள். (2 பே. 3:13) முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் செல்லும்போது ஒருவருக்கொருவர் உதவ தீர்மானமாய் இருப்போமாக.