நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்
“நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்!”—2 பே. 3:11.
1, 2. கடவுளுடைய ஆதரவைப் பெற நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?
பொதுவாக தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று மக்கள் யோசிப்பது சகஜம்தான். ஆனால், கிறிஸ்தவர்களான நமக்கு, யெகோவா நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று யோசிப்பதுதான் அதைவிட முக்கியம். ஏனென்றால், இப்பிரபஞ்சத்திலேயே அவர்தான் மிக உயர்ந்தவர், ‘ஜீவஊற்றும்’ அவரே.—சங். 36:9.
2 யெகோவாவுடைய ஆதரவு நமக்கு வேண்டுமென்றால், “பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறார். (2 பேதுரு 3:11-ஐ வாசியுங்கள்.) ஒழுக்க ரீதியில், மன ரீதியில், ஆன்மீக ரீதியில் சுத்தமான வாழ்க்கையை வாழும்போதுதான் நம் ‘நடத்தை பரிசுத்தமாக’ இருக்கிறது என்று சொல்ல முடியும். அதோடு கடவுள்மீதுள்ள ஆழ்ந்த அன்பாலும் மரியாதையாலும் தூண்டப்பட்டு “தேவபக்திக்குரிய செயல்களை” செய்ய வேண்டும். அப்படியானால் கடவுளுடைய ஆதரவைப் பெற நாம் நல்ல நடத்தையும் நல்ல மனப்பான்மையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். யெகோவா ‘இருதயத்தைச் சோதிக்கிறவர்’ என்பதால், நாம் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் அவரை மட்டுமே சேவிக்கிறவர்களாகவும் இருக்கிறோமா என்பதை அவரால் கண்டறிய முடியும்.—1 நா. 29:17.
3. கடவுளோடுள்ள நட்புறவு சம்பந்தமாக என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
3 நாம் கடவுளுடைய ஆதரவைப் பெறக் கூடாது என்றே பிசாசாகிய சாத்தான் நினைக்கிறான். யெகோவாவோடுள்ள நட்புறவை நாமாகவே துண்டித்துக்கொள்ள அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறான். யெகோவாவை வழிபடுவதிலிருந்து நம்மை விலக்க, சாத்தான் சதா பொய் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறான். (யோவா. 8:44; 2 கொ. 11:13-15) எனவே, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘சாத்தான் மக்களை எப்படி வஞ்சிக்கிறான்? யெகோவாவோடுள்ள நட்புறவைப் பாதுகாக்க நான் என்ன செய்ய வேண்டும்?’
சாத்தான் மக்களை எப்படி வஞ்சிக்கிறான்?
4. கடவுளோடுள்ள நம் பந்தத்தை முறித்துப்போட சாத்தான் எதைக் குறிவைக்கிறான், ஏன்?
4 “ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது; பாவம் கடைசியில் மரணத்தை விளைவிக்கிறது” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 1:14, 15) கடவுளோடுள்ள நம் பந்தத்தை முறித்துப்போட நம் ஆசைகளின் பிறப்பிடத்தை, அதாவது நம் இருதயத்தை சாத்தான் குறிவைக்கிறான்.
5, 6. (அ) எதைப் பயன்படுத்தி சாத்தான் நம்மைக் குறிவைக்கிறான்? (ஆ) நம் இருதயத்தில் கெட்ட ஆசைகளை விதைக்க சாத்தான் என்ன வழிகளைப் பயன்படுத்துகிறான், அவற்றைப் பயன்படுத்துவதில் அவனுக்கு எந்தளவு அனுபவம் இருக்கிறது?
5 எதைப் பயன்படுத்தி சாத்தான் நம் இருதயத்தைக் குறிவைக்கிறான்? “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 5:19) சாத்தான் பயன்படுத்துகிற ஆயுதங்களில் ‘இந்த உலகத்திலுள்ள காரியங்களும்’ அடங்கும். (1 யோவான் 2:15, 16-ஐ வாசியுங்கள்.) மக்களை ஏமாற்றுவதற்காக பல ஆயிர வருடங்களாகவே பிசாசு இந்த உலக சூழ்நிலையைப் படு தந்திரமாக வடிவமைத்திருக்கிறான். நாம் இந்த உலகத்தில் வாழ்வதால், அவனுடைய சூழ்ச்சிகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பது அவசியம்.—யோவா. 17:15.
6 சாத்தான் நம் இருதயத்தில் கெட்ட ஆசைகளை விதைக்க முயலுகிறான். இதற்காக, அவன் பயன்படுத்துகிற மூன்று வழிகளை அப்போஸ்தலன் யோவான் அடையாளம் காட்டுகிறார்: (1) “உடலின் இச்சை,” (2) “கண்களின் இச்சை,” (3) ‘பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகள்.’ வனாந்தரத்தில் இயேசுவின் மனதைக் கவர சாத்தான் இவற்றையே பயன்படுத்தினான். வருடக் கணக்காகவே சாத்தான் இந்தக் கண்ணிகளைப் பயன்படுத்தி வந்திருப்பதால் இவையெல்லாம் அவனுக்கு இப்போது கைவந்த கலையாகிவிட்டன; ஒவ்வொருவருக்கும் எதை பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறான். இவற்றிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஏவாளிடத்தில் அவனுடைய சூழ்ச்சி எப்படிப் பலித்தது என்பதையும் கடவுளுடைய மகனிடத்தில் எப்படிப் பலிக்காமல் போனது என்பதையும் இப்போது பார்க்கலாம்.
“உடலின் இச்சை”
‘உடலின் இச்சையே’ ஏவாளின் வீழ்ச்சிக்குக் காரணம் (பாரா 7)
7. ‘உடலின் இச்சையை’ பயன்படுத்தி ஏவாளைச் சாத்தான் எப்படி வசீகரித்தான்?
7 உயிர்வாழ மனிதர் எல்லோருக்குமே உணவு அத்தியாவசியம். ஏராளமாக உணவுப்பொருள்கள் விளையும் விதமாகவே பூமியைக் கடவுள் படைத்திருக்கிறார். சாப்பிடுவதற்கான இயல்பான ஆசையைப் பயன்படுத்தி கடவுளுக்குப் பிரியமில்லாத காரியத்தைச் செய்ய சாத்தான் நம்மைத் தூண்டலாம். ஏவாளிடம் இதை எப்படிப் பயன்படுத்தினான் என்பதைக் கவனியுங்கள். (ஆதியாகமம் 3:1-6-ஐ வாசியுங்கள்.) ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின்’ கனியைச் சாப்பிட்டால் சாகமாட்டாய், மாறாக, அதைச் சாப்பிடும் நாளிலே கடவுளைப் போல ஆகிவிடுவாய் என்று ஏவாளிடம் சாத்தான் சொன்னான். (ஆதி. 2:9) அதாவது, உயிர்வாழ கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஏவாளிடம் சொன்னான். அது சுத்தப் பொய்! இந்த எண்ணத்தை ஏவாளுடைய மனதில் விதைத்த பிறகு அவளுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன: சாத்தான் சொன்னதை அவள் பொய்யென ஒதுக்கித்தள்ளலாம், அல்லது அவன் சொன்னதையே திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்து அந்தக் கனியைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசையை மனதில் வளரவிடலாம். மற்ற மரங்களிலுள்ள கனிகளையெல்லாம் விட்டுவிட்டு, தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் கனியைப் பற்றி சாத்தான் சொன்னதையே ஏவாள் யோசித்துக்கொண்டிருந்தாள். பிறகு ‘அதன் கனியைப் பறித்து சாப்பிட்டாள்.’ இப்படியாக, படைப்பாளர் தடை செய்திருந்த ஒன்றின்மீது கெட்ட ஆசையைச் சாத்தான் தூண்டிவிட்டான்.
இயேசு தம் கவனத்தைச் சிதறடிக்க எதையுமே அனுமதிக்கவில்லை (பாரா 8)
8. ‘உடலின் இச்சையை’ பயன்படுத்தி சாத்தான் எப்படி இயேசுவைக் கவர்ந்திழுக்கப் பார்த்தான், அது ஏன் பலிக்கவில்லை?
8 வனாந்தரத்தில் இயேசுவின் மனதைக் கவர சாத்தான் இந்தச் சூழ்ச்சியையே பயன்படுத்தினான். இயேசு, 40 நாட்கள் இரவும் பகலும் விரதமிருந்த பிறகு, சாப்பிடுவதற்கான ஆசையைப் பயன்படுத்தி அவரைக் கவர்ந்திழுக்கப் பார்த்தான். “நீர் கடவுளுடைய மகன் என்றால், இந்தக் கல்லை ரொட்டியாகும்படி கட்டளையிடும்” என்று சொன்னான். (லூக். 4:1-3) இயேசுவுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன: சாப்பிட வேண்டுமென்ற இயல்பான ஆசையைத் திருப்திசெய்ய தம்மிடமிருந்த வல்லமையைப் பயன்படுத்தாதிருக்கலாம் அல்லது அதைப் பயன்படுத்தலாம். அந்த வல்லமையைச் சுயநல காரியங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதை இயேசு அறிந்திருந்தார். என்னதான் பசியாக இருந்தாலும், உணவைவிட கடவுளோடிருந்த நட்புறவே அவருக்கு முக்கியமாக இருந்தது. அதனால்தான், “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்” என்று இயேசு பதிலளித்தார்.—மத். 4:4.
“கண்களின் இச்சை”
9. “கண்களின் இச்சை” என்பது என்ன, ஏவாளிடம் இந்த ஆசையைச் சாத்தான் எப்படித் தூண்டிவிட்டான்?
9 சாத்தானின் மற்றொரு சூழ்ச்சியைப் பற்றி யோவான் குறிப்பிட்டார்; அது “கண்களின் இச்சை.” ஒன்றை வெறுமனே பார்ப்பதன் மூலம் அதன்மீது ஒருவருக்கு ஆசை வளர ஆரம்பிக்கலாம். ஏவாளுடைய விஷயத்தில், “உங்கள் கண்கள் திறக்கப்படும்” என்று சொல்லி இந்த ஆசையை அவன் தூண்டிவிட்டான். தடை செய்யப்பட்ட அந்தக் கனியைப் பார்க்கப் பார்க்க அது அவளுக்கு ரொம்பவே கவர்ச்சியாகத் தெரிந்தது. அந்த மரம் அவளுடைய ‘பார்வைக்கு இன்பமாக இருந்தது.’
10. இயேசுவை வசீகரிக்க ‘கண்களின் இச்சையை’ சாத்தான் எப்படிப் பயன்படுத்தினான், அதற்கு இயேசு எப்படிப் பதிலடி கொடுத்தார்?
10 இயேசுவின் விஷயத்தில் என்ன நடந்தது? “ஒரு நொடிப்பொழுதில் இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவருக்குக் காண்பித்து, ‘இவை எல்லாவற்றின் மீதுள்ள அதிகாரத்தையும் இவற்றின் மகத்துவங்களையும் நான் உமக்குத் தருவேன்’” என்று சாத்தான் சொன்னான். (லூக். 4:5, 6) ஒரு நொடிப்பொழுதில் உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் இயேசு பார்த்திருக்க மாட்டார்; ஆனால், ஒரு தரிசனத்தில் அந்த ராஜ்யங்களின் மகத்துவங்களையே பார்த்திருப்பார். இது அவரைக் கவர்ந்திழுக்குமென சாத்தான் நினைத்திருக்கலாம். “ஒரேவொரு முறை நீர் என்னை வணங்கினால் இதெல்லாம் உம்முடையதாகும்” என்று துணிகரமாகச் சொன்னான். (லூக். 4:7) சாத்தானுடைய ஆசைக்கு இணங்கிவிடுவதைப் பற்றி இயேசு ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சற்றும் தாமதிக்காமல், “‘உன் கடவுளாகிய யெகோவாவை வணங்கி, அவர் ஒருவருக்கே பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று இயேசு பதிலளித்தார்.—லூக். 4:8.
‘பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகள்’
11. சாத்தானுடைய வசீகர வலையில் ஏவாள் எப்படிச் சிக்கினாள்?
11 கடைசியாக ‘பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகளை’ பற்றி யோவான் குறிப்பிடுகிறார். ஆதாமும் ஏவாளும் மட்டுமே பூமியில் வாழ்ந்தபோது தங்களிடம் இருந்தவற்றை யாரிடமும் ‘பகட்டாகக் காட்டியிருக்க’ மாட்டார்கள். ஆனாலும், பெருமை அவர்களுக்குள் எட்டிப்பார்த்தது. ஏவாளைத் தன் வசீகர வலையில் சிக்க வைக்க முயன்றபோது, கடவுள் அருமையான ஏதோவொன்றை அவளுக்குக் கொடுக்காதிருப்பதாகச் சாத்தான் மறைமுகமாகச் சொன்னான். “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்றும் ஏவாளிடம் சொன்னான். (ஆதி. 2:17; 3:5) யெகோவாவின் உதவியில்லாமல் சுதந்திரமாக வாழ முடியும் என்ற எண்ணத்தை ஏவாளுடைய மனதில் சாத்தான் விதைத்தான். அந்தப் பொய்யை மெய்யென அவள் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் பெருமையே. தான் சாவதில்லை என நினைத்துக்கொண்டு அந்தக் கனியை அவள் சாப்பிட்டாள். அது மகா தவறு!
12. இயேசுவின் மனதைக் கவர சாத்தான் பயன்படுத்திய மற்றொரு வழி என்ன, அதற்கு இயேசு எப்படிப் பதிலளித்தார்?
12 ஏவாளுக்கு நேர்மாறாக இயேசு மனத்தாழ்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். மற்றொரு வழியில் இயேசுவைச் சிக்க வைக்க சாத்தான் முயன்றான். மற்றவர்களின் கவனத்தைச் சுண்டியிழுக்கும் ஒரு காரியத்தைச் செய்யவும் அதன்மூலம் கடவுளைச் சோதித்துப் பார்க்கவும் சாத்தான் அவரைத் தூண்டினான். இயேசு அப்படிச் செய்திருந்தால் அது தற்பெருமைக்குரிய செயலாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக, அவர் தெள்ளத்தெளிவாகவும் நேரடியாகவும் இப்படிச் சொன்னார்: “‘உன் கடவுளாகிய யெகோவாவைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனச் சொல்லப்பட்டிருக்கிறதே.”—லூக்கா 4:9-12-ஐ வாசியுங்கள்.
யெகோவாவோடுள்ள நட்புறவை எப்படிப் பாதுகாக்கலாம்?
13, 14. இன்று சாத்தான் எப்படியெல்லாம் வசீகர வலைகளை விரிக்கிறான் என விளக்குங்கள்.
13 ஏவாளிடமும் இயேசுவிடமும் பயன்படுத்தியதைப் போன்ற சூழ்ச்சிகளையே சாத்தான் இன்றும் பயன்படுத்துகிறான். ‘உடலின் இச்சையை’ பயன்படுத்தி, ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபட பிசாசு நம்மைத் தூண்டுகிறான்; அளவுக்கதிகமாக சாப்பிடவும் வெறிக்க வெறிக்க குடிக்கவும் தூண்டுகிறான். ‘கண்களின் இச்சையை’ பயன்படுத்தி இன்டர்நெட்டில் ஆபாசத்தைப் பார்க்க அப்பாவி மக்களைச் சாத்தான் சுண்டி இழுக்கிறான். ‘பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகளை’ பயன்படுத்தி மக்களைப் பெருமை பிடித்தவர்களாக... அதிகாரத்தையும் புகழையும் பொருள்களையும் பெறத் துடிக்கிறவர்களாக... ஆக்குகிறான்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எந்த பைபிள் நியமங்கள் உங்கள் நினைவுக்கு வர வேண்டும்? (பாராக்கள் 13, 14)
14 மீன் பிடிப்பவன் பயன்படுத்தும் இரையைப் போல ‘உலகத்திலுள்ள காரியங்களை’ சாத்தான் பயன்படுத்துகிறான். அந்த இரை கண்ணுக்குக் கவர்ச்சியாக இருந்தாலும் அதற்குள் ஒரு கொக்கி இருக்கிறது. அதேபோல் அன்றாடத் தேவைகள் என மக்கள் நினைக்கும் காரியங்களைப் பயன்படுத்தியே அவர்களைக் கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட வைக்கிறான். இப்படி மறைமுகமாக, நம்முடைய இயல்பான ஆசைகளைத் தூண்டி இருதயத்தைக் கெடுக்கிறான். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைவிட நம்முடைய தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்வதும் வசதியாக வாழ்வதுமே முக்கியம் என்று சாத்தான் நம்மை நம்ப வைக்கிறான். இப்படிப்பட்ட வசீகர வலைகளுக்குள் நாம் வீழ்ந்துவிடுவோமா?
15. இயேசுவைப் போல நாம் எப்படி சாத்தானின் வஞ்சக வலையில் விழாமல் இருக்கலாம்?
15 சாத்தானின் வஞ்சக வலையில் ஏவாள் விழுந்துவிட்டாள். இயேசுவோ அதில் விழவில்லை. அவரை ஏமாற்ற அவன் முயன்றபோதெல்லாம் வேதவசனங்களைப் பயன்படுத்தி ‘இப்படி எழுதப்பட்டிருக்கிறதே’ அல்லது ‘இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே’ என்று பதிலளித்தார். பைபிளை ஊக்கமாகப் படித்தால் வேதவசனங்கள் நம் மனதில் நன்கு பதிந்துவிடும். தவறான ஆசைகள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அந்த வசனங்களை நினைவுக்குக் கொண்டு வர முடியும். (சங். 1:1, 2) கடவுளுக்கு உண்மையாய் இருந்தவர்களின் பைபிள் உதாரணங்களை ஞாபகப்படுத்திப் பார்ப்பது அவர்களைப் பின்பற்ற நமக்கு உதவும். (ரோ. 15:4) யெகோவாமீது ஆழ்ந்த மரியாதை காட்டுவது, அதாவது அவர் விரும்புவதை விரும்புவது, அவர் வெறுப்பதை வெறுப்பது நம்மை அரண்போல் பாதுகாக்கும்.—சங். 97:10.
16, 17. நம்முடைய ‘சிந்திக்கும் திறன்’ நம்மீது எப்படிச் செல்வாக்கு செலுத்துகிறது?
16 உலகத்தாரைப் போல சிந்திக்காமல் யெகோவாவைப் போல சிந்திப்பதற்கு, நம் “சிந்திக்கும் திறனைப்” பயன்படுத்தும்படி அப்போஸ்தலன் பவுல் ஊக்குவிக்கிறார். (ரோ. 12:1, 2) நம்முடைய சிந்தையைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி பவுல் இவ்வாறு சொன்னார்: “தவறான யோசனைகளையும், கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற மேட்டிமையான எல்லாவற்றையும் நாங்கள் தகர்த்தெறிந்து வருகிறோம்; அதோடு, எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்தி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி செய்து வருகிறோம்.” (2 கொ. 10:5) நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பது நம்முடைய எண்ணங்களைப் பொறுத்தது; ஆகவே, நாம் நல்ல விஷயங்களையே ‘தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்க’ வேண்டும்.—பிலி. 4:8.
17 தவறான எண்ணங்களையும் ஆசைகளையும் மனதில் பேணி வளர்க்கும்போது நம்மால் பரிசுத்தமானவர்களாக இருக்க முடியாது. “சுத்தமான இருதயத்தோடு” யெகோவாவை நேசிக்க வேண்டும். (1 தீ. 1:5) ஆனால், நம் இருதயம் திருக்குள்ளது, “இந்த உலகத்திலுள்ள காரியங்கள்” நமக்குத் தெரியாமலேயே நம்மீது செல்வாக்கு செலுத்தலாம். (எரே. 17:9) ஆகவே, பவுலின் இந்த ஆலோசனை மிகவும் முக்கியம்: ‘நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்றும் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்றும் எப்போதும் ஆராய்ந்து பார்க்க’ வேண்டும். அதாவது, பைபிளைப் படிக்கும்போது, ‘என் சிந்தனைகளும் ஆசைகளும் கடவுளைப் பிரியப்படுத்துகிறதா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.—2 கொ. 13:5.
18, 19. நாம் ஏன் யெகோவா விரும்புகிற ஆட்களாக இருக்கத் திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும்?
18 ‘இந்த உலகத்திலுள்ள காரியங்களை’ எதிர்ப்பதற்கு உதவும் மற்றொரு வழி யோவானின் இந்த வார்த்தைகளை நினைவில் வைப்பது: “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.” (1 யோ. 2:17) சாத்தானுடைய உலகம் அழியவே அழியாது என தோன்றலாம். ஆனால், அது நிச்சயம் ஒரு நாள் அழியப்போகிறது. சாத்தானுடைய உலகம் தருகிற எதுவும் நிலையானது அல்ல. இதை நினைவில் வைத்தால் அவனுடைய வஞ்சக வலையில் விழ மாட்டோம்.
19 கடவுளுடைய ஆதரவைப் பெற்றவர்களாக இருப்பதற்கு அப்போஸ்தலன் பேதுரு இந்த அறிவுரையைக் கொடுக்கிறார்: ‘யெகோவாவின் நாளை நாம் எப்போதும் மனதில் வைத்து அதற்காக ஆவலோடு காத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த நாளில் வானம் எரிந்து அழிந்துபோகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும்.’ (2 பே. 3:12) அந்த நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது, அப்போது சாத்தானுடைய உலகத்தின் பாகமான அனைத்தையும் யெகோவா அழித்துவிடுவார். அதுவரை, ஏவாளிடமும் இயேசுவிடமும் சாத்தான் ஆசைகாட்டியதுபோல் இந்த ‘உலகத்திலுள்ள காரியங்களை’ பயன்படுத்தி நம்மிடமும் தொடர்ந்து ஆசைகாட்டுவான். ஏவாளைப்போல் நாம் நம்முடைய சொந்த ஆசைகளைத் திருப்தி செய்யக் கூடாது. அப்படிச் செய்வது சாத்தானை கடவுளாக ஏற்றுக்கொள்வதற்குச் சமமாய் இருக்கும். சாத்தானின் வஞ்சகங்கள் எந்தளவு கவர்ச்சியாக இருந்தாலும் இயேசுவைப்போல் நாம் அவற்றை அடியோடு எதிர்க்க வேண்டும். எனவே, நாம் ஒவ்வொருவரும் யெகோவா விரும்புகிற ஆட்களாக இருக்கத் திடத்தீர்மானமாய் இருப்போமாக.