உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமானவர்?
“தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்.”—சங். 83:17.
1, 2. நாம் மீட்பைப் பெற, யெகோவாவுடைய பெயரை அறிந்திருப்பது மட்டுமே ஏன் போதாது?
பைபிளில் சங்கீதம் 83:17-ஐத் திறந்து யெகோவா என்ற பெயரை உங்களுக்குக் காட்டியபோதுதான் நீங்கள் அதை முதன்முறையாகப் பார்த்திருக்கலாம். ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணருவார்களாக’ என்ற வார்த்தைகளை வாசித்தபோது நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அப்போதிலிருந்து, அன்புள்ள கடவுளான யெகோவாவின் பெயரை அதே வசனத்திலிருந்து எத்தனையோ முறை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டியிருப்பீர்கள்.—ரோ. 10:12, 13.
2 யெகோவாவுடைய பெயரை மக்கள் அறிந்திருப்பது முக்கியம் என்றாலும் அதைத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமே போதாது. “தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்” என்று சங்கீதக்காரன் சொன்னதையும் கவனியுங்கள்; இந்த உண்மையை அறிந்திருப்பதும் நம்முடைய மீட்புக்கு அவசியம். ஆம், யெகோவா இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக முக்கியமானவர். அவர் படைப்பாளராக இருப்பதால் எல்லாப் படைப்புகளும் தமக்கு முழுமையாய்க் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. (வெளி. 4:11) எனவே, ‘என் வாழ்க்கையில் யார் மிக முக்கியமானவர்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது. இந்தக் கேள்விக்கு நாம் எப்படிப் பதிலளிப்போம் என்பதைக் கவனமாய் ஆராய்ந்து பார்ப்பது மிக முக்கியம்.
ஏதேன் தோட்டத்தில் தலைதூக்கிய பிரச்சினை
3, 4. சாத்தான் ஏவாளை எப்படி ஏமாற்றினான், அதன் விளைவு என்ன?
3 இந்தக் கேள்வி எவ்வளவு முக்கியமானது என்பதை ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவத்திலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். பிசாசாகிய சாத்தான் என்று பின்னர் அறியப்பட்ட கலகக்காரத் தூதன் முதல் பெண்ணான ஏவாளை ஏமாற்றினான்; ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழத்தைச் சாப்பிட வேண்டாமென யெகோவா கொடுத்திருந்த கட்டளையைவிட சுய ஆசைகளை மேலாகக் கருத அவளைத் தூண்டினான். (ஆதி. 2:17; 2 கொ. 11:3) அவன் விரித்த வஞ்சக வலையில் அவள் விழுந்தாள்; அதன் மூலம் யெகோவாவின் பேரரசாட்சியை அவமதித்தாள். இவ்வாறு, தன்னுடைய வாழ்க்கையில் யெகோவாவே மிக முக்கியமானவர் எனக் காட்டத் தவறினாள். ஆனால் சாத்தான் எப்படி ஏவாளை ஏமாற்றினான்?
4 சாத்தான் நயவஞ்சகமாகப் பேசி ஏவாளை ஏமாற்றினான். (ஆதியாகமம் 3:1-5-ஐ வாசியுங்கள்.) முதலாவதாக, யெகோவா என்ற பெயரையே சாத்தான் பயன்படுத்தவில்லை. அவன் “தேவன்” என்று மட்டுமே குறிப்பிட்டான். ஆனால், ஆதியாகமப் புத்தகத்தின் எழுத்தாளர் அந்த அதிகாரத்தின் முதல் வசனத்திலேயே யெகோவா என்ற பெயரை எபிரெய மொழியில் பயன்படுத்தினார். இரண்டாவதாக, கடவுள் என்ன “கட்டளை” கொடுத்தார் என்று கேட்பதற்குப் பதிலாக, கடவுள் என்ன ‘சொன்னார்’ என்றே கேட்டான். (ஆதி. 2:17) இப்படித் தந்திரமாகப் பேசி கடவுளுடைய கட்டளையின் முக்கியத்துவத்தைக் குறைத்துப்போட அவன் முயன்றான். மூன்றாவதாக, ஏவாளிடம் மட்டுமே அவன் பேசினாலும், “நீங்கள்” என்று பன்மையில் பேசினான். இவ்வாறு, அவளுடைய பெருமையைத் தூண்டிவிட அவன் முயன்றிருக்கலாம்; அதாவது, தனக்காகவும் தன் கணவருக்காகவும் பேசத் தூண்டுவதன் மூலம் தான் பெரிய ஆள் என்ற எண்ணத்தை அவளுக்கு ஏற்படுத்த அவன் முயன்றிருக்கலாம். விளைவு? தனக்கு இப்படியொரு முக்கியத்துவம் கிடைத்ததால், ‘நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்’ என்று தன் சார்பாகவும் தன் கணவன் சார்பாகவும் துணிந்து பாம்பிடம் பதிலளித்தாள்.
5. (அ) எதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும்படி ஏவாளைச் சாத்தான் தூண்டினான்? (ஆ) தடைசெய்யப்பட்ட பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் ஏவாள் எதைக் காட்டிவிட்டாள்?
5 சாத்தான் உண்மைகளைத் திரித்தும் பேசினான். ஆதாம் ஏவாளிடம் ‘தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ’ என்று கேட்பதன் மூலம் தேவன் நியாயமற்றவர் என்பதையே அவன் மறைமுகமாகக் குறிப்பிட்டான். அடுத்ததாக, அவளைப் பற்றியும், ‘தேவனைப்போல்’ ஆவதன்மூலம் அவள் எப்படி இன்னும் பெரிய ஆளாகலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வைத்தான். கடைசியில், தனக்கு எல்லாவற்றையும் கொடுத்த கடவுளோடுள்ள பந்தத்தைப் பற்றிச் சிந்திக்காமல், அந்த மரத்தையும் அதன் பழத்தையும் பற்றியே சிந்திக்க அவளைத் தூண்டினான். (ஆதியாகமம் 3:6-ஐ வாசியுங்கள்.) ஏவாள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டதன் மூலம் யெகோவா தனக்கு அந்தளவு முக்கியமானவர் அல்ல என்பதைக் காட்டிவிட்டாள்.
யோபுவின் காலத்தில் தலைதூக்கிய பிரச்சினை
6. யோபுவின் உத்தமத்தன்மையைக் குறித்து சாத்தான் என்ன கேள்வி எழுப்பினான், யோபுவுக்கு என்ன வாய்ப்பு கொடுக்கப்பட்டது?
6 இது நடந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த உண்மையுள்ள நபரான யோபுவை எடுத்துக்கொள்வோம்; தன் வாழ்க்கையில் யார் மிக முக்கியமானவர் என்பதைக் காட்ட அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. யோபு உத்தமராய் வாழ்ந்ததைப் பற்றி யெகோவா சாத்தானிடம் குறிப்பிட்டபோது, “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என்று கேட்டான். (யோபு 1:7-10-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்கு யோபு கீழ்ப்படிந்திருந்ததைச் சாத்தான் மறுக்கவில்லை. மாறாக, அவருடைய உள்நோக்கங்களைக் குறித்தே சந்தேகம் எழுப்பினான். யெகோவா மீதுள்ள அன்பினால் அல்ல, ஆதாயத்திற்காகவே அவரை வணங்குவதாக யோபுமீது குற்றம் சாட்டினான். அந்தக் குற்றச்சாட்டிற்கு யோபுவினால் மட்டுமே பதிலளிக்க முடியும் என்பதால் அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
7, 8. என்ன கஷ்டங்களை யோபு சந்தித்தார், உண்மையோடு சகித்திருந்ததன் மூலம் அவர் எதைக் காட்டினார்?
7 ஒன்றன் பின் ஒன்றாகப் பல துன்பதுயரங்களை யோபுவுக்குக் கொடுக்க யெகோவா சாத்தானை அனுமதித்தார். (யோபு 1:12-19) தன்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியபோது யோபு எப்படி நடந்துகொண்டார்? அவர் “பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக் குறைசொல்லவுமில்லை” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 1:22) ஆனால் சாத்தான் அதோடு யோபுவை விட்டுவிடவில்லை. “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்” என்றும் சொன்னான்.a (யோபு 2:4) யோபு உடல் உபாதையால் கஷ்டப்பட்டால் தனக்கு யெகோவா மிக முக்கியமானவர் அல்ல என்பதைக் காட்டிவிடுவான் என்று சாத்தான் சவால்விட்டான்.
8 அருவருக்கத்தக்க வியாதியால் யோபு உருக்குலைந்து போனார்; கடவுளைச் சபித்து உயிரை விடும்படி சொல்லி மனைவியும் அவருடைய வேதனையைக் கூட்டினாள். பின்னர் அவரைப் பார்க்க வந்த அவருடைய போலி நண்பர்கள் மூவர் அவருடைய நடத்தை சரியில்லையென குற்றஞ்சாட்டினார்கள். (யோபு 2:11-13; 8:2-6; 22:2, 3) இந்த எல்லாத் துன்பங்களின் மத்தியிலும் யோபு தன் உத்தமத்தைவிட்டு விலகவில்லை. (யோபு 2:9, 10-ஐ வாசியுங்கள்.) உண்மையோடு சகித்திருந்ததன் மூலம் தன் வாழ்க்கையில் யெகோவாவே மிக முக்கியமானவரென காட்டினார். அதோடு, பிசாசின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு அபூரண மனிதராலும் ஓரளவுக்குப் பதில் கொடுக்க முடியும் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டினார்.—நீதிமொழிகள் 27:11-ஐ ஒப்பிடுங்கள்.
இயேசு கொடுத்த சரியான பதிலடி
9. (அ) இயேசுவின் தேவையை அறிந்து சாத்தான் அவரை எப்படிச் சோதித்தான்? (ஆ) இந்தச் சோதனையை இயேசு எப்படிச் சமாளித்தார்?
9 இயேசு ஞானஸ்நானம் பெற்ற சிறிது காலத்திலேயே சாத்தான் அவரைச் சோதித்தான்; தம் வாழ்க்கையில் யெகோவாவை மிக முக்கியமானவராகக் கருதுவதை விட்டு, தன்னல ஆசைகளுக்கு அவரை அடிபணிய வைக்க முயன்றான். மூன்று விதங்களில் அவரைச் சோதித்தான். முதலாவதாக, அவருடைய பசியைப் போக்கக் கற்களை ரொட்டியாக்கிச் சாப்பிடும்படி தூண்டினான். (மத். 4:2, 3) அவர் அப்போதுதான் 40 நாள் விரதத்தை முடித்திருந்ததால் கடும் பசியில் இருந்தார். எனவே, பசியைப் போக்கிக்கொள்ள அவரிடமிருந்த அற்புத சக்தியைப் பயன்படுத்தும்படி அவரைத் தூண்டினான். ஆனால் இயேசு என்ன செய்தார்? ஏவாளைப் போல் அல்லாமல், அவர் யெகோவாவின் வார்த்தையைச் சிந்தித்துப் பார்த்து அவன் சொன்னதைச் செய்ய சட்டென்று மறுத்துவிட்டார்.—மத்தேயு 4:4-ஐ வாசியுங்கள்.
10. ஆலய மதிலின் மேல்மாடத்திலிருந்து கீழே குதிக்கும்படி இயேசுவிடம் சாத்தான் ஏன் சவால்விட்டான்?
10 தன்னலமாக நடந்துகொள்ளும்படியும் இயேசுவைச் சாத்தான் தூண்டினான். ஆலய மதிலின் மேல்மாடத்திலிருந்து கீழே குதிக்கும்படி இயேசுவிடம் சவால்விட்டான். (மத். 4:5, 6) எதை மனதில் வைத்து அப்படிச் செய்யச் சொன்னான்? அவர் கீழே குதித்தும் அவருக்கு ஒன்றும் ஆகாவிட்டால் அவர் “கடவுளுடைய மகன்” என்பது எல்லாருக்கும் தெரியவரும் என்று அடித்துச் சொன்னான். சொல்லப்போனால், இயேசு தம்முடைய பேருக்கும் புகழுக்கும் மட்டுக்குமீறிய முக்கியத்துவம் கொடுத்து, தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டுமென அவன் எதிர்பார்த்தான். பெருமையாலும் மற்றவர்கள் தன்னைக் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது என்ற ஆசையாலும் ஒருவர் ஆபத்தான காரியத்தைச் செய்யத் துளியும் தயங்கமாட்டார் என்பதைச் சாத்தான் அறிந்திருந்தான். சாத்தான் ஒரு வேதவசனத்தைத் தவறாகப் பயன்படுத்தினான்; இயேசுவோ வேதவசனங்களை நன்கு அறிந்திருந்தால் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினார். (மத்தேயு 4:7-ஐ வாசியுங்கள்.) சாத்தானுடைய அந்தச் சோதனைக்கு இணங்கிவிடாதிருந்ததன் மூலம் யெகோவாவே தமக்கு மிக முக்கியமானவர் என்பதை இயேசு மீண்டும் நிரூபித்துக் காட்டினார்.
11. இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அளிக்க பிசாசு முன்வந்தபோது அதை ஏற்க இயேசு ஏன் மறுத்தார்?
11 எப்படியாவது இயேசுவை அடிபணிய வைக்க விரும்பிய சாத்தான் கடைசி முறையாக அவரைச் சோதித்தான்; அப்போது, இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவருக்கு அளிக்க முன்வந்தான். (மத். 4:8, 9) உடனடியாக அவர் அதை ஏற்க மறுத்தார். அதை ஏற்றுக்கொள்வது, யெகோவாவின் பேரரசாட்சியை, அதாவது அவரே உன்னதப் பேரரசராக இருப்பதற்கு உரிமையுள்ளவர் என்பதை, நிராகரிப்பதற்குச் சமம் என்பதை இயேசு அறிந்திருந்தார். (மத்தேயு 4:10-ஐ வாசியுங்கள்.) ஒவ்வொரு சோதனையின்போதும், யெகோவா என்ற பெயர் இடம்பெற்றுள்ள வேதவசனங்களைப் பயன்படுத்தி சாத்தானுக்கு இயேசு பதிலடி கொடுத்தார்.
12. இயேசு பூமியில் வாழ்ந்த காலம் முடிவடையவிருந்த சமயத்தில் என்ன கஷ்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது, அவர் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 இயேசு பூமியில் வாழ்ந்த காலம் முடிவடையவிருந்த சமயத்தில், ஒரு கஷ்டமான தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. தம்மையே பலியாகக் கொடுக்கத் தயாராய் இருந்ததைப் பற்றித் தம்முடைய ஊழிய காலத்தின்போது பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருந்தார். (மத். 20:17-19, 28; லூக். 12:50; யோவா. 16:28) என்றாலும், தெய்வநிந்தனை செய்ததாகப் பொய்க் குற்றஞ்சாட்டப்படுவார் என்றும், யூத நீதிமன்றத்தால் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்படுவார் என்றும் அவர் அறிந்திருந்தார். இப்படிப்பட்ட சாவு தமக்கு நேரிடவிருந்ததை நினைத்து அவர் உள்ளூரக் கலங்கினார். “என் தகப்பனே, இந்தக் கிண்ணம் என்னிடமிருந்து நீங்க முடியுமானால் நீங்கும்படி செய்யுங்கள்” என்று ஜெபம் செய்தார். “ஆனாலும், என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உங்களுடைய சித்தத்தின்படியே நடக்கட்டும்” என்று சொன்னார். (மத். 26:39) ஆம், மரணம்வரை உண்மையாய் நிலைத்திருந்ததன் மூலம், தாம் யாரை மிக முக்கியமானவராகக் கருதினார் என்பதை இயேசு தெள்ளத் தெளிவாகக் காட்டினார்.
அந்தச் சவாலுக்கு நம் பதிலடி
13. ஏவாள், யோபு, இயேசு கிறிஸ்து ஆகியோரின் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
13 இதுவரை நாம் என்ன கற்றுக்கொண்டோம்? தன்னல ஆசைக்கோ பெருமைக்கோ இடங்கொடுக்கிறவர்கள் யெகோவாவை மிக முக்கியமானவராகக் கருத மாட்டார்கள் என்பதை ஏவாளுடைய விஷயத்திலிருந்து கற்றுக்கொண்டோம். அதற்கு மாறாக, அபூரண மனிதரால் பல கஷ்டங்களின் மத்தியிலும் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க முடியும் என்பதை யோபுவின் விஷயத்திலிருந்து கற்றுக்கொண்டோம்; ஆம், தாங்கள் படுகிற கஷ்டங்களுக்கான காரணத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் அவர்களால் யெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க முடியும். (யாக். 5:11) கடைசியாக, அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் நம்முடைய பெயருக்கும் புகழுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பதை இயேசுவின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொண்டோம். (எபி. 12:2) கற்றுக்கொண்ட இந்த விஷயங்களையெல்லாம் நாம் எப்படிப் பின்பற்றலாம்?
14, 15. சோதனையைச் சந்தித்தபோது ஏவாளைப் போலில்லாமல் இயேசு எப்படி நடந்துகொண்டார், நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்? (பக்கம் 18-லுள்ள படத்திலிருந்தும் குறிப்பு சொல்லுங்கள்.)
14 சோதனைகள் அல்லது சபலங்கள் வரும்போது யெகோவாவை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். ஏவாள் சபலத்தைச் சந்தித்தபோது தன் முழு கவனத்தையும் அதன் மீதே ஒருமுகப்படுத்தினாள். அதனால், ‘அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருப்பதை’ கண்டாள். (ஆதி. 3:6) ஆனால், இயேசு தாம் எதிர்ப்பட்ட மூன்று சோதனைகளையும் எவ்வளவு அழகாய் சமாளித்தார்! ஒவ்வொரு சோதனைக்கும் இடம்கொடுப்பதால் வரும் திருப்தி, சந்தோஷத்தைவிட அதனால் வரும் பின்விளைவுகளைப் பற்றியே யோசித்தார். அவர் கடவுளுடைய வார்த்தையையும் யெகோவா என்ற பெயரையும் பயன்படுத்தினார்.
15 யெகோவாவுக்குப் பிரியமில்லாத காரியங்களைச் செய்யும்படியான சோதனைகளையோ சபலங்களையோ சந்திக்கும்போது, எதனிடம் நாம் கவனம் செலுத்துகிறோம்? நாம் சந்திக்கிற சோதனையைப் பற்றி எந்தளவுக்கு யோசிக்கிறோமா அந்தளவுக்குத் தவறான ஆசையும் அதிகரிக்கும். (யாக். 1:14, 15) அந்த ஆசையை அடியோடு அகற்ற நாம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; சொல்லப்போனால், நம்முடைய உடலுறுப்பு ஒன்றைத் துண்டித்து எறிவதைப் போன்ற அதிரடி நடவடிக்கை தேவைப்பட்டாலும் அதை எடுக்க வேண்டும். (மத். 5:29, 30) இயேசுவைப் போல், சோதனையின் விளைவுகளிடம் நம்முடைய கவனத்தைச் செலுத்த வேண்டும்; ஆம், அவை யெகோவாவுடன் உள்ள பந்தத்திற்கு எப்படிப் பங்கம் விளைவிக்கும் என்பதிடம் கவனம் செலுத்த வேண்டும். அதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே, யெகோவா நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானவர் என்பதைக் காட்ட முடியும்.
16-18. (அ) எது நம்மை மனமுடைந்து போகச் செய்யலாம்? (ஆ) கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க எது நமக்கு உதவும்?
16 துன்பதுயரங்கள் வரும்போது யெகோவாமீது ஒருபோதும் மனக்கசப்பு அடையாதீர்கள். (நீதி. 19:3) இந்தப் பொல்லாத உலகின் முடிவு நெருங்கி வரவர, யெகோவாவின் மக்களில் அதிகமதிகமானோர் பேரழிவுகளாலும் துன்பதுயரங்களாலும் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சமயத்தில் நாம் அற்புதமாய் பாதுகாக்கப்படுவோமென எதிர்பார்ப்பதில்லை. என்றாலும், அன்பானவர்களை மரணத்தில் இழக்கும்போது அல்லது கஷ்டங்களை அனுபவிக்கும்போது யோபுவைப் போல நாமும் மனமுடைந்துபோகலாம்.
17 தனக்குத் துன்பங்கள் நேரிட யெகோவா ஏன் அனுமதித்தார் என்பதை யோபு புரிந்துகொள்ளவில்லை; அதுபோல ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன என்பது சில சமயங்களில் நமக்குப் புரியாமல் போகலாம். ஹெய்டியில் நிகழ்ந்ததைப் போன்ற பூமியதிர்ச்சியிலோ வேறு இயற்கை பேரழிவுகளிலோ நம்முடைய அன்புச் சகோதரர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி நாம் கேள்விப்படலாம். அல்லது, வன்முறையிலோ பயங்கரமான விபத்திலோ சிக்கி பலியான ஓர் உத்தம சகோதரரைப் பற்றி நாம் கேள்விப்படலாம். அல்லது, கஷ்டமான சூழ்நிலைகளாலோ அநீதி இழைக்கப்பட்டதாக நினைப்பதாலோ நாமும்கூட அவதிப்படலாம். “யெகோவாவே, எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்? நான் என்ன தப்பு செய்தேன்?” என்று வேதனையில் நாம் கதறலாம். (ஆப. 1:2, 3) இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க எது நமக்கு உதவும்?
18 யெகோவா நம்மை வெறுப்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று நாம் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. இதை, தம்முடைய காலத்தில் நடந்த இரண்டு துயர சம்பவங்களைப் பற்றிச் சொன்னபோது இயேசு வலியுறுத்தினார். (லூக்கா 13:1-5-ஐ வாசியுங்கள்.) “எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள்” ஏற்படுவதே அநேக துயரங்களுக்குக் காரணம். (பிர. 9:11, NW) ஆனால், நம்முடைய துயரத்திற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், ‘ஆறுதலின் கடவுளிடம்’ நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்தினால் அதைச் சமாளிக்க முடியும். நாம் அவருக்கு எப்போதும் உண்மையோடிருக்க தேவையான பலத்தை அவர் நமக்குக் கொடுப்பார்.—2 கொ. 1:3-6.
19, 20. அவமானப்பட வைக்கும் சூழ்நிலைகளைச் சமாளிக்க இயேசுவுக்கு எது உதவியது, நமக்கு எது உதவும்?
19 பெருமைக்கோ அவமானப்பட நேரிடும் என்ற பயத்திற்கோ ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ‘தமக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல’ ஆவதற்கு இயேசுவின் மனத்தாழ்மையே அவருக்கு உதவியது. (பிலி. 2:5-8) அதோடு, யெகோவாமீது அவர் நம்பிக்கை வைத்ததால் அவமானப்பட வைக்கும் சூழ்நிலைகள் பலவற்றை அவரால் சமாளிக்க முடிந்தது. (1 பே. 2:23, 24) இவ்வாறு, யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு முதலிடம் கொடுத்ததால் அவர் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். (பிலி. 2:9) தம்மைப் போலவே வாழும்படி தம்முடைய சீடர்களையும் உற்சாகப்படுத்தினார்.—மத். 23:11, 12; லூக். 9:26.
20 சில சமயங்களில், நமக்கு நேரிடுகிற விசுவாசப் பரிட்சைகளால் நாம் கூனிக்குறுகிப் போய்விடலாம். என்றாலும், அப்போஸ்தலன் பவுலுக்கு இருந்ததைப் போன்ற நம்பிக்கை நமக்குத் தேவை. “இதன் காரணமாகவே துன்பப்பட்டு வருகிறேன், ஆனாலும் வெட்கப்பட மாட்டேன். ஏனென்றால், நான் நம்புகிற கடவுளை நன்கு அறிந்திருக்கிறேன், நான் அவரிடம் ஒப்படைத்திருப்பதையெல்லாம் நியாயத்தீர்ப்பு நாள்வரை அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று அவர் சொன்னார்.—2 தீ. 1:12.
21. சுயநலம் பிடித்த மக்கள் மத்தியில் இருந்தாலும் என்ன செய்ய திடத்தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
21 நம்முடைய காலத்தில் மக்கள் “சுயநலக்காரர்களாக” இருப்பார்கள் என்று பைபிள் முன்னுரைத்தது. (2 தீ. 3:2) அதனால்தான் ‘நான்,’ ‘எனக்கு’ என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. சுயநலமிக்க இந்த மனப்பான்மை நம்மை ஒருபோதும் தொற்றிக்கொள்ளாதபடி கவனமாய் இருப்போமாக! மாறாக, யெகோவாவே நமக்கு மிக முக்கியமானவர் என்பதைக் காட்ட நாம் ஒவ்வொருவரும் திடத்தீர்மானமாய் இருப்போமாக; சோதனைகளைச் சந்தித்தாலும்சரி, துன்பதுயரங்களை அனுபவித்தாலும்சரி, அல்லது நம்மைக் கூனிக்குறுக வைக்கிற சூழ்நிலைகளை எதிர்ப்பட்டாலும்சரி, அவ்வாறே இருப்போமாக!
[அடிக்குறிப்பு]
a தன்னுடைய பிள்ளைகள் மற்றும் மிருகங்களின் ‘தோல்’ போனாலும், அதாவது உயிர் போனாலும், தன்னுடைய தோலை, அதாவது உயிரை, காப்பாற்றிக்கொள்ள யோபு விரும்பியதையே ‘தோலுக்குப் பதிலாகத் தோல்’ என்ற சொற்றொடர் குறிப்பதாக சில பைபிள் அறிஞர்கள் கருதுகிறார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொஞ்சம் தோலையும் இழக்க ஒருவர் தயாராய் இருப்பார் என்பதை அந்தச் சொற்றொடர் குறிப்பதாக இன்னும் சிலர் கருதுகிறார்கள். உதாரணத்திற்கு, தன் தலையில் அடி விழாதபடி ஒருவர் கையால் தடுக்கலாம்; இவ்வாறு, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் கொஞ்சம் தோலை இழக்கலாம். அந்தச் சொற்றொடர் எதை அர்த்தப்படுத்தினாலும் சரி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யோபு எதையும் இழக்கத் தயாராய் இருப்பார் என்பதையே அது குறித்திருக்க வேண்டும்.
பின்வருவனவற்றிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்:
• ஏவாளைச் சாத்தான் ஏமாற்றிய விதத்திலிருந்து
• துன்பதுயரங்களைச் சந்தித்தபோது யோபு நடந்துகொண்ட விதத்திலிருந்து
• இயேசு எதற்கு முக்கிய கவனம் செலுத்தினார் என்பதிலிருந்து
[பக்கம் 17-ன் படம்]
ஏவாள், யெகோவாவுடன் வைத்திருந்த பந்தத்திற்கு முதலிடம் கொடுக்கத் தவறினாள்
[பக்கம் 18-ன் படம்]
இயேசு, சாத்தானுடைய சோதனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்குக் கவனம் செலுத்தினார்
[பக்கம் 20-ன் படங்கள்]
ஹெய்டியில் பூமியதிர்ச்சிக்குப் பிறகு கூடாரம் கூடாரமாக ஊழியம் செய்தல்
துன்ப காலத்தில் ‘ஆறுதலின் கடவுளிடம்’ நாம் கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்