நல்ல பெற்றோர்கள் நல்ல மேய்ப்பர்கள்
“உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.”—நீதி. 27:23.
1, 2. (அ) மேய்ப்பர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது? (ஆ) பெற்றோர்கள் எப்படி மேய்ப்பர்களைப் போல் இருக்கிறார்கள்?
பைபிள் காலங்களில் மேய்ப்பர்கள் பல சவால்களைச் சந்தித்தார்கள். மழை, வெயில் என்று பார்க்காமல் வயல்களில் தங்கி ஆடுகளை மேய்த்தார்கள். எதிரிகளிடமிருந்தும் கொடிய மிருகங்களிடமிருந்தும் ஆடுகளைப் பாதுகாத்தார்கள். காயப்பட்ட ஆடுகளுக்கும் வியாதிப்பட்ட ஆடுகளுக்கும் தேவையானதைச் செய்தார்கள். ஆட்டுக்குட்டிகளை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.—ஏசா. 40:11.
2 பெற்றோர்களும் ஒருவிதத்தில் மேய்ப்பர்களைப் போல்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளை “யெகோவாவுக்கு ஏற்ற முறையில்” வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. (எபே. 6:4) ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால், பிள்ளைகளுக்கு சாத்தான் நிறைய சோதனைகளைக் கொடுக்கிறான்; இளமைப் பருவத்தில் வரும் ஆசைகளோடும் பிள்ளைகள் போராட வேண்டியிருக்கிறது. (2 தீ. 2:22; 1 யோ. 2:16) பெற்றோர்களே, நீங்கள் எப்படி நல்ல மேய்ப்பர்களைப் போல் இருக்கலாம்? (1) பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள், (2) அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள், (3) அவர்களை வழிநடத்துங்கள்.
பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள்
3. பிள்ளைகளின் ‘நிலைமையை நன்றாய் அறிந்துகொள்வது’ எப்படி?
3 ஆடுகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கிறது என்று ஒரு நல்ல மேய்ப்பர் அடிக்கடி கவனிப்பார். பெற்றோரும் அதைத்தான் செய்ய வேண்டும். “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 27:23) உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் கவனிக்க வேண்டும்; என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? அடிக்கடி உங்கள் பிள்ளைகளிடம் மனந்திறந்து பேசுங்கள்.
4, 5. (அ) பிள்ளைகள் மனந்திறந்து பேசவில்லை என்றால் என்ன செய்யலாம்? (ஆரம்பப் படம்.) (ஆ) நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?
4 பிள்ளைகள் இளமை பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது அவர்களிடம் பேசுவதே பெரிய சவாலாக இருக்கிறதென சில பெற்றோர்கள் சொல்கிறார்கள்; ஏனென்றால், இளமை பருவத்தில் பிள்ளைகள் மனந்திறந்து பேசத் தயங்குவார்கள். உங்கள் பிள்ளைகளிடமும் இந்தப் பிரச்சினை இருக்கிறதா? அப்படியென்றால் என்ன செய்வது? அவர்களை ரொம்ப நேரம் உட்கார வைத்து பேச வேண்டிய அவசியமில்லை. பிள்ளைகளோடு சேர்ந்து ஏதாவது செய்யும்போதே அவர்களிடம் பேச முயற்சி செய்யுங்கள். (உபா. 6:6, 7) உதாரணத்திற்கு, பிள்ளைகளோடு சேர்ந்து வீட்டிலேயே சின்ன சின்ன வேலைகள் செய்யலாம், சேர்ந்து சாப்பிடலாம், அவர்களோடு விளையாடலாம். இப்படி அவர்களோடு நேரம் செலவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேச நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
5 இதெல்லாம் செய்தும் உங்கள் பிள்ளைகள் மனதில் இருப்பதைச் சொல்லவில்லை என்றால் என்ன செய்வது? இப்படிச் செய்து பாருங்கள்: காலையிலிருந்து அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று சொல்லுங்கள். அப்போது, அவர்களும் மனம் திறந்து பேச வாய்ப்பிருக்கிறது. அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினால்... ‘நீ என்ன நினைக்கிற?’ என்று கேட்காமல், ‘இதை பத்தி உன் ஃப்ரெண்ட்ஸ் என்ன நினைக்கிறாங்க?’ என்று கேளுங்கள். அப்போது நண்பர்களின் கருத்தைச் சொல்வார்கள். ஒருவேளை நண்பர்களின் கருத்து கடவுளுக்குப் பிடிக்காததாக இருந்தால் அது தவறு என்பதை எப்படிப் பிள்ளைகளே அவர்களுக்குப் புரிய வைப்பார்கள் என்று கேளுங்கள்.
6. பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
6 நீங்கள் பொறுமையாகக் கேட்டால்தான் பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேசுவார்கள். நீங்கள் எப்போதும் வேலையாக இருந்தால் உங்களிடம் பேசத் தயங்குவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் வெளிப்படையாகப் பேசுவார்கள். “என்னை உன் ஃப்ரெண்டு மாறி நினைச்சுக்கோ, எதுவா இருந்தாலும் சொல்லு” என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்கள் ஒரு பிரச்சினையைப் பற்றிச் சொல்லும்போது அதை அசட்டை செய்யாமல், அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல், பிள்ளைகள் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் உணர்ச்சிவசப்படாதீர்கள். நிறைய பெற்றோர் பிள்ளைகளிடம் பேசும் விஷயத்தில் நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். கெய்லா என்ற 19 வயது பெண் சொல்கிறார்: “என் அப்பாகிட்ட எதை பத்தி வேணும்னாலும் தயங்காம பேசலாம். நான் பேசும்போது அவர் குறுக்க குறுக்க பேச மாட்டார். என்னை பத்தி தப்புக்கணக்கு போட மாட்டார். நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா கேட்பார். அதுக்கப்புறம் எனக்கு தேவையான, நல்ல ஆலோசனைகளை கொடுப்பார்.”
7. சில விஷயங்களைப் பற்றி பிள்ளைகளிடம் பேசும்போது பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
7 சில விஷயங்களைப் பற்றி பிள்ளைகளிடம் பேசும்போது, உதாரணமாக, காதலிப்பதைப் பற்றிப் பேசும்போது அதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவர்கள் சரியான தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். நீங்கள் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். “மெனு கார்டில்,” எந்த உணவைச் சாப்பிட்டால் என்ன வியாதி வரும் என்ற எச்சரிப்புகள் மட்டுமே போட்டிருந்தால் நீங்கள் அங்கு சாப்பிடுவீர்களா? அதேபோல், பிள்ளைகள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வரும்போது, ஒரு விஷயத்திலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி மட்டும் சொன்னால், அவர்களுடைய பிரச்சினைகளை உங்களிடம் சொல்ல மாட்டார்கள். (கொலோசெயர் 3:21-ஐ வாசியுங்கள்.) எம்லீ என்ற இளம் சகோதரி சொல்கிறார்: “காதலிக்கிறது தப்புன்ற மாதிரி அப்பா-அம்மா என்கிட்ட சொன்னதில்லை. ஒருத்தர பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு என்ன செய்யணும், சரியான நபரை எப்படித் தேர்ந்தெடுக்கணும்னு சொல்லிக்குடுத்திருக்காங்க. அதனால், இத பத்தி அவங்ககிட்ட பேச நான் தயங்கவே மாட்டேன். எனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா அப்பா-அம்மாகிட்ட அதை மறைக்காம சொல்லிடணும்னு நினைக்கிறேன்.”
8, 9. (அ) பொறுமையாகக் கேட்பது ஏன் முக்கியம்? (ஆ) உங்கள் பிள்ளைகள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டதால் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள்?
8 பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டால் பிள்ளைகள் மனந்திறந்து பேசுவார்கள் என்று கெய்லாவுடைய அனுபவம் காட்டுகிறது. (யாக்கோபு 1:19-ஐ வாசியுங்கள்.) கணவன் இல்லாமல் தன் மகளைத் தனியாக வளர்த்த காட்யா என்ற பெண் சொல்கிறார்: “முன்னாடியெல்லாம், என் பொண்ணு பேசுறத நான் பொறுமையாவே கேட்க மாட்டேன், குறுக்க குறுக்க பேசுவேன். சில நேரம் ரொம்ப களைப்பா இருக்கும், சில நேரம் எனக்கு கேட்கணும்னே தோனாது. இப்போ, நான் என்னை மாத்திக்கிட்டேன். அதனால அவள் மனந்திறந்து பேசுறாள்.”
பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுங்கள் (பாராக்கள் 3-9)
9 ரானல்ட் என்ற ஒரு அப்பா இதேபோல்தான் சொல்கிறார்: “ஸ்கூல்ல ஒரு பையனை காதலிக்கிறதா என் பொண்ணு சொன்னப்போ நான் ரொம்ப கோவப்பட்டேன். ஆனா, யெகோவா நம்ம எல்லார்கிட்டயும் எவ்ளோ பொறுமையா இருக்கிறார்னு யோசிச்சு பாத்தேன். அதனால, அவளுக்கு ஆலோசனை கொடுக்கிறதுக்கு முன்னாடி, அவள் சொல்ல வந்தத பொறுமையா கேட்கணும்னு நினைச்சேன். பொறுமையா கேட்டப்போ, முதல் தடவயா அவள் மனசுல என்ன இருக்குனு புரிஞ்சிக்க முடிஞ்சுது. அதனால, அவகிட்ட அன்பா பேச முடிஞ்சுது. நான் சொன்னதையெல்லாம் அவள் உடனே ஏத்துக்கிட்டா. அவள மாத்திக்கிறதாவும் சொன்னாள்.” பிள்ளைகளோடு அடிக்கடி பேசும்போது அவர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முடியும். அப்படிப் புரிந்துகொண்டால்தான் சரியான தீர்மானம் எடுக்க அவர்களுக்கு உதவ முடியும்.a
பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்
10, 11. யெகோவாவைவிட்டு விலகிப்போகாமல் இருக்க உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவலாம்?
10 மந்தையிலுள்ள ஆடு தொலைந்துபோக வாய்ப்பிருக்கிறது என்று ஒரு மேய்ப்பனுக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆடு, சற்று தூரத்தில் இருக்கும் பசுமையான இடத்தைப் பார்த்து, அங்கிருக்கும் புல்லை மேய்வதற்கு சென்றுவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வழிமாறிப் போய்விடலாம். அதேபோல், பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவைவிட்டு விலகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது. கெட்ட சகவாசமோ, மோசமான பொழுதுபோக்கோ அவர்களைத் தவறாக வழிநடத்திவிடும். (நீதி. 13:20) அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
11 அவர்கள் தவறான வழியில் போவது தெரிந்தால் உடனடியாக உதவுங்கள். எந்த விஷயத்தில் உங்கள் பிள்ளைகள் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்று யோசித்து அவர்களுக்கு உதவுங்கள். (2 பே. 1:5-8) இதற்கு குடும்ப வழிபாடு உதவும். ‘பயன்தரும் விதத்தில் குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்துவது முக்கியம். இந்தப் பொறுப்பை யெகோவா குடும்பத் தலைவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’ என்று அக்டோபர் 2008 நம் ராஜ்ய ஊழியம் சொல்கிறது. உங்கள் குடும்பத்தில் குடும்ப வழிபாடு தவறாமல் நடக்கிறதா? பிள்ளைகளுக்கு உதவுவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அவர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.—மத். 5:3; பிலி. 1:10.
கற்றுக்கொடுங்கள் (பாராக்கள் 10-12)
12. (அ) குடும்ப வழிபாட்டிலிருந்து நிறைய இளைஞர்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள்? (“குடும்ப வழிபாட்டிலிருந்து பயனடைந்தவர்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) (ஆ) குடும்ப வழிபாட்டிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள்?
12 குடும்ப வழிபாடு தனக்கு எப்படி உதவியது என்று காரீசா என்ற 19 வயது பெண் சொல்கிறார்: “நாங்க எல்லாரும் ஒன்னா உக்காந்து பேசறதுக்கு குடும்ப வழிபாடு உதவுது. நாங்க ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கவும் உதவுது. ஒரு வாரம்கூட எங்க அப்பா குடும்ப வழிபாட்டை நடத்தாம விட்டதே இல்லை. அதனால, ஒரு அப்பாவா, ஒரு குடும்பத் தலைவரா அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். குடும்ப வழிபாடு எவ்ளோ முக்கியம்னு நானும் அதிலிருந்து புரிஞ்சிக்கிட்டேன்.” பிரிட்டனீ என்ற 23 வயது பெண் சொல்வதைக் கவனியுங்கள்: “என் அப்பா-அம்மாவோட ஃப்ரெண்டாகறதுக்கு குடும்ப வழிபாடு உதவுது. அதோட, என் பிரச்சினைகளைப் புரிஞ்சிக்கிட்டு, அதை சரிசெய்ய அவங்க விரும்புறாங்கன்னு அதிலிருந்து தெரிஞ்சிக்கிட்டேன். குடும்பமா நாங்க ஒற்றுமையா இருக்கிறதுக்கும் குடும்ப வழிபாடுதான் உதவுது.” குடும்ப வழிபாட்டின் மூலம் பிள்ளைகளுக்கு பைபிளைப் பற்றிக் கற்றுக்கொடுப்பது ரொம்ப முக்கியம். இப்படிச் செய்வதன் மூலம் பெற்றோர்கள் நல்ல மேய்ப்பர்களாக நிரூபிக்கிறார்கள்.b
பிள்ளைகளை வழிநடத்துங்கள்
13. பெற்றோர்கள் எப்படி நல்ல மேய்ப்பர்களாக இருக்கலாம்?
13 ஒரு நல்ல மேய்ப்பன் ஆடுகளைப் பாதுகாப்பார்; ‘நல்ல மேய்ச்சல்’ நிலத்திற்கு வழிநடத்துவார். (எசே. 34:13, 14) அதேபோல், பிள்ளைகளை யெகோவாவின் சேவையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று உங்கள் பிள்ளைகள் சொல்லும் அளவுக்கு அவர்களை வளர்க்க வேண்டும். (சங். 40:8) யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பும் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுப்பார்கள். அவர்களாகவே யோசித்து அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர்கள் மனதார ஆசைப்பட வேண்டும்.
14, 15. (அ) பிள்ளைகளுக்கு எதைப் புரிய வைக்க வேண்டும்? (ஆ) பைபிள் போதனைகளைப் பிள்ளைகள் சந்தேகப்படுவதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?
14 ஒருவேளை உங்கள் பிள்ளைகள் முன்னேற்றம் செய்யவில்லை என்றால் என்ன செய்வது? யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மை கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் நம்பவில்லை என்றால்? யெகோவா எவ்வளவு அன்பானவர், நமக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். (வெளி. 4:11) பிறகு, அவர்களாகவே யோசித்துத் தீர்மானம் எடுப்பார்கள்.
15 பைபிளில் இருக்கும் விஷயங்கள் உண்மைதானா என்று பிள்ளைகளுக்குச் சந்தேகம் இருந்தால் பொறுமையாக அவர்களுக்கு உதவுங்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தரும் என்று அவர்களுக்கு அன்பாகப் புரிய வையுங்கள். முதலில், அவர்கள் சந்தேகப்படுவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை பைபிள் போதனைகளைப் பற்றி நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நண்பர்கள் மத்தியில் உங்கள் பிள்ளைகள் மட்டும் வித்தியாசமாக இருப்பதைப் போல், ஒதுக்கப்பட்டதைப் போல் உணரலாம்.
சரியான வழியில் வழிநடத்துங்கள் (பாராக்கள் 13-18)
16, 17. பைபிளிலிருக்கும் விஷயங்கள் உண்மை என்பதை பிள்ளைகளுக்கு எப்படிப் புரிய வைப்பீர்கள்?
16 காரணம் எதுவாக இருந்தாலும் சரி, உங்கள் பிள்ளைகள் மனதில், பைபிள் போதனைகள்மீது உறுதியான நம்பிக்கையை விதைக்க முடியும். எப்படி? ஒரு வழி, அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு, மனதிலிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். “யெகோவாவின் சாட்சியா இருக்கிறதை பத்தி நீ என்ன நினைக்கிற? இதனால் உனக்கு என்னென்ன நன்மைகள் கிடைச்சிருக்கு? யெகோவாவின் சாட்சியா இருக்கிறதுனால எதையெல்லாம் இழந்திருக்க? இப்போ உனக்குக் கிடைச்சிருக்கிற நன்மைகளைவிட, எதிர்காலத்துல கிடைக்கப்போற ஆசீர்வாதங்களைவிட, நீ நிறைய இழந்திருக்கனு நினைக்கிறியா?” இந்தக் கேள்விகளை உங்கள் சொந்த வார்த்தையில்... அன்பாக... நாசூக்காக... கேட்க வேண்டும். அவர்களைக் குற்றப்படுத்தும் விதத்திலோ குறைசொல்லும் விதத்திலோ கேட்கக்கூடாது. இந்த விஷயங்களைப் பேசும்போது, மாற்கு 10:29, 30-ஐ அவர்களோடு சேர்ந்து வாசியுங்கள். சில இளைஞர்கள், தாங்கள் அடைந்த நன்மைகளையும் இழந்த விஷயங்களையும் எழுதிப் பார்க்கிறார்கள். இப்படிச் செய்வது அவர்களாகவே யோசித்து ஒரு நல்ல முடிவெடுக்க உதவுகிறது; எந்த விஷயத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு உதவி தேவை என்று நீங்களும் தெரிந்துகொள்ள முடியும். மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த நாம் எவ்வளவு முயற்சி எடுக்கிறோம்! அப்படியென்றால், உங்கள் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு எடுப்பது எவ்வளவு முக்கியம்! நீங்கள் அதைச் செய்கிறீர்களா?
17 யெகோவாவுக்குச் சேவை செய்வதா வேண்டாமா என்று உங்கள் பிள்ளைகளே தீர்மானிக்க வேண்டும். நீங்கள் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் பிள்ளைகளும் தானாக யெகோவாவின் சாட்சி ஆகிவிட மாட்டார்கள். பைபிளிலிருக்கும் விஷயங்கள் உண்மை என்பதை அவர்கள் மனதார நம்ப வேண்டும். (நீதி. 3:1, 2) உங்கள் பிள்ளைகள் இதை மனதார நம்பவில்லை என்றால், பைபிளின் அடிப்படை விஷயங்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். உதாரணத்திற்கு, இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்: “கடவுள் இருக்கிறார்னு நான் ஏன் நம்புறேன்? யெகோவாவுக்கு என்மேல அக்கறை இருக்குனு நான் ஏன் நம்புறேன்? யெகோவா கொடுக்கிற ஆலோசனைகளெல்லாம் என்னோட நன்மைக்குதான்னு ஏன் நம்புறேன்?” யெகோவாவுக்குச் சேவை செய்வதே வாழ்க்கையில் நாம் எடுக்கும் சிறந்தத் தீர்மானம் என்று உங்கள் பிள்ளைகளுக்குப் புரிய வையுங்கள். இப்படி உங்கள் பிள்ளைகளை சரியான விதத்தில் வழிநடத்துவதன் மூலம் நல்ல மேய்ப்பர்களாக இருங்கள்.c—ரோ. 12:2.
18. பெரிய மேய்ப்பரான யெகோவாவை, பெற்றோர் எப்படிப் பின்பற்றலாம்?
18 நாம் எல்லோருமே பெரிய மேய்ப்பரான யெகோவாவைப் பின்பற்றவே விரும்புகிறோம். (எபே. 5:1; 1 பே. 2:25) பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை நன்கு புரிந்துகொள்ளுங்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதே சிறந்தது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். பைபிள் சொல்லும் வழியில் அவர்களை வழிநடத்துங்கள்.
a அக்டோபர் 1, 2008 காவற்கோபுரம் பக்கங்கள் 18-20-ஐ பாருங்கள்.
b அக்டோபர் 15, 2009 காவற்கோபுரம் பக்கங்கள் 29-31-ல், “குடும்ப வழிபாடு தப்பிப்பிழைக்க அத்தியாவசியம்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c ஜூலை 1, 2012 காவற்கோபுரம் பக்கங்கள் 22-25-ஐப் பாருங்கள்.