அளவற்ற கருணையால் நீங்கள் விடுதலையாக்கப்பட்டீர்கள்!
“பாவம் உங்கள் எஜமானாக இருக்க அனுமதிக்காதீர்கள்; ஏனென்றால், நீங்கள் . . . அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறீர்கள்.”—ரோ. 6:14.
1, 2. ரோமர் 5:12 நமக்கு எப்படி உதவுகிறது?
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த, நீங்கள் அடிக்கடி பயன்படுத்துகிற வசனங்களைப் பட்டியல் போடச் சொன்னால், எந்தெந்த வசனங்களைப் பட்டியல் போடுவீர்கள்? அந்தப் பட்டியலில் ரோமர் 5:12 முதலிடத்தில் இருக்குமா? இந்த வசனத்தை நீங்கள் எத்தனை தடவை பயன்படுத்தியிருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று அந்த வசனம் சொல்கிறது.
2 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் ரோமர் 5:12 நிறைய தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தில் இருக்கும் 3, 5 மற்றும் 6-வது அதிகாரங்களை நம்முடைய பிள்ளைகளோடும் மற்றவர்களோடும் படிக்கும்போது, நாம் ஒருவேளை இந்த வசனத்தை வாசிக்கலாம். பூமி ஏன் இப்போது ஒரு பூஞ்சோலையாக இல்லை, மீட்கும்பொருள் நமக்கு ஏன் தேவை, நாம் ஏன் சாகிறோம் ஆகிய விஷயங்களை விளக்குவதற்கு இந்த வசனத்தைப் பயன்படுத்துகிறோம். யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்காக ரொம்ப நன்றியோடு இருக்கவும் இந்த வசனம் நமக்கு உதவுகிறது. யெகோவாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கவும், அவர் வாக்குக் கொடுத்திருப்பவற்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவும் இந்த வசனம் உதவுகிறது.
3. நாம் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம்?
3 நாம் எல்லாருமே பாவிகளாக இருக்கிறோம்; ஒவ்வொரு நாளும் தவறுகள் செய்கிறோம். நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்கள் என்பது யெகோவாவுக்குத் தெரியும். நம்மீது இரக்கம் காட்ட அவர் தயாராக இருக்கிறார், நம் தவறுகளை மன்னிக்கிறார். (சங். 103:13, 14) நம்முடைய பாவங்களுக்காகக் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (லூக். 11:2-4) முன்பு நாம் செய்த பாவங்களை யெகோவா மன்னிக்கிறார்; அதனால், அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. யெகோவாவால் எப்படி நம்மை மன்னிக்க முடிகிறது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
அளவற்ற கருணையால் மன்னிக்கப்பட்டிருக்கிறோம்
4, 5. (அ) ரோமர் 5:12-ஐப் புரிந்துகொள்ள நமக்கு எது உதவுகிறது? (ஆ) “அளவற்ற கருணை” எதை அர்த்தப்படுத்துகிறது?
4 ரோமர் 5:12-ல் அப்போஸ்தலன் பவுல் என்ன சொல்லியிருக்கிறாரோ, அது சம்பந்தமான முக்கிய விஷயங்கள் ரோமர் புத்தகத்தின் மற்ற அதிகாரங்களில் இருக்கின்றன. குறிப்பாக, அந்தப் புத்தகத்தின் 6-ஆம் அதிகாரத்தில் இருக்கின்றன. யெகோவாவால் நம்முடைய பாவத்தை எப்படி மன்னிக்க முடிகிறது என்பதைப் புரிந்துகொள்ள அவை நமக்கு உதவுகின்றன. ‘எல்லாருமே பாவம் செய்திருக்கிறோம்’ என்று ரோமர் 3-ஆம் அதிகாரம் சொல்கிறது. அதோடு, “கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையினால் அவர்கள் விடுவிக்கப்பட்டு, நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்; இது கடவுளுடைய அளவற்ற கருணையினால் கிடைக்கும் ஓர் அன்பளிப்பாகும்” என்று பவுல் சொல்கிறார். (ரோ. 3:23, 24) “அளவற்ற கருணை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்பான விதத்தில் ஒருவருக்கு ஏதோ ஒன்றைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. அதைப் பெற்றுக்கொள்கிற ஒருவரால் அதைச் சம்பாதிக்கவும் முடியாது, அப்படிப் பெற்றுக்கொள்வதற்கான தகுதியும் அவருக்குக் கிடையாது.
5 பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் கடவுளுடைய அல்லது கிறிஸ்துவுடைய அளவற்ற கருணை என்பது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளும் கிறிஸ்துவும் செய்ததையே பெரும்பாலும் குறிக்கிறது என்று ஓர் அறிஞர் சொன்னார். அப்படியென்றால், கடவுள் நமக்காக என்ன செய்திருக்கிறார்? அவருடைய அளவற்ற கருணையால் நாம் எப்படி இன்றும் எதிர்காலத்திலும் நன்மை அடையலாம்? இதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
6. கடவுளுடைய அளவற்ற கருணையால் எல்லாரும் எப்படி நன்மை அடைவார்கள்?
6 ‘ஒரே மனிதனான’ ஆதாம் செய்த பாவத்தினால் இந்த ‘உலகத்தில்’ பாவமும் மரணமும் வந்தது. அதனால்தான், “ஒருவனுடைய குற்றத்தினால் . . . மரணம் ராஜாவாக ஆட்சி செய்தது” என்று பைபிள் சொல்கிறது. ஆனால், யெகோவா நம்மீது அளவற்ற கருணை காட்டியிருக்கிறார். “இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மூலம்” எல்லா மனிதர்களையும் காப்பாற்ற அவர் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறார். (ரோ. 5:12, 15, 17) அவருடைய அளவற்ற கருணையால் எல்லா மனிதர்களும் நன்மை அடைவார்கள். “ஒரே மனிதனுடைய கீழ்ப்படிதலினால் பலர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” அதோடு, ‘இயேசு கிறிஸ்துவின் மூலம் முடிவில்லா வாழ்வையும்’ பெறுவார்கள்.—ரோ. 5:19, 21.
7. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மீட்கும்பொருளை ஓர் அன்பான ஏற்பாடு என்றும், அதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்றும் எப்படிச் சொல்லலாம்?
7 இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: யெகோவா தன்னுடைய மகனை மீட்கும்பொருளாகக் கொடுக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்ற ஓர் ஏற்பாட்டைச் செய்ததன் மூலம் யெகோவா நம்மீது அளவற்ற கருணை காட்டியிருக்கிறார். யெகோவாவும் இயேசுவும் செய்திருப்பதைப் பெற்றுக்கொள்வதற்கு யாருக்குமே தகுதி இல்லை. ஏனென்றால், நாம் எல்லாரும் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாகவும் பாவிகளாகவும் இருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், நாம் என்றென்றும் வாழ்வதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். இதற்காக நாம் ரொம்பவே நன்றியோடு இருக்கிறோம், இல்லையா? ஆனால், யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறோம் என்பதை நாம் வாழும் விதம் காட்ட வேண்டும்.
யெகோவா காட்டும் அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருங்கள்
8. நாம் என்ன நினைத்துவிடக் கூடாது?
8 நம்முடைய பாவங்களை மன்னிக்க, அதுவும், மோசமான பாவங்களைக்கூட மன்னிக்க யெகோவா தயாராக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். யெகோவா நம்மீது அளவற்ற கருணை காட்டுகிறார் என்பதற்காக, ‘நான் ஏதாவது தப்பு செஞ்சாலும், ஏன், பாவமே செஞ்சாலும் அதை பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்ல. நான் என்ன செஞ்சாலும் யெகோவா என்னை மன்னிச்சுடுவாரு’ என்றெல்லாம் நாம் நினைக்கக் கூடாது. முதல் நூற்றாண்டில், சில அப்போஸ்தலர்கள் உயிரோடு இருந்தபோதே, சில கிறிஸ்தவர்கள் இப்படித்தான் நினைத்தார்கள். (யூதா 4-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை, நாம் இப்படி நினைக்காமல் இருக்கலாம். ஆனால், நாம் கவனமாக இல்லையென்றால், இப்படிப்பட்ட தவறான எண்ணத்தை மற்றவர்கள் நம் மனதில் விதைத்துவிடுவார்கள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும் அவர்களைப் போலவே நினைக்க வைத்துவிடுவார்கள்.
9, 10. பவுலும் மற்ற கிறிஸ்தவர்களும் எப்படிப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட்டவர்களாக இருந்தார்கள்?
9 ‘நான் ஏதாவது பாவம் செஞ்சா கடவுள் என்னை கண்டிப்பா மன்னிப்பாரு, ஏன்னா, நான் ஏன் அப்படி செஞ்சேன்னு அவருக்கு தெரியும்’ என்றெல்லாம் கிறிஸ்தவர்கள் நினைக்கக் கூடாது என்று பவுல் வலியுறுத்தினார். ஏனென்றால், ‘பாவத்தைப் பொறுத்தவரை அவர்கள் இறந்துவிட்டார்கள்’ என்று அவர் சொன்னார். (ரோமர் 6:1, 2-ஐ வாசியுங்கள்.) பவுல் அப்படிச் சொன்னபோது, அந்தக் கிறிஸ்தவர்கள் பூமியில் உயிரோடுதான் இருந்தார்கள். அப்படியென்றால், பவுல் எதை அர்த்தப்படுத்தினார்?
10 மீட்கும்பொருளைக் கொடுத்ததன் மூலம் பவுல் மற்றும் முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களுடைய பாவத்தை யெகோவா மன்னித்தார். தன்னுடைய மகன்களாக இருப்பதற்காக அவர்கள்மீது தன்னுடைய சக்தியைப் பொழிந்து அவர்களை அபிஷேகம் செய்தார். அவர்கள் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தால் பரலோகத்தில் வாழ்வார்கள்; அதுமட்டுமல்ல, இயேசுவோடு சேர்ந்து ஆட்சியும் செய்வார்கள். அவர்கள் பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தபோதே, ‘பாவத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களாக’ இருந்தார்கள் என்று பவுல் சொன்னார். அவர்களுடைய வாழ்க்கை முறை முழுவதுமாக மாறியிருந்ததைக் காட்டுவதற்காக இயேசுவின் உதாரணத்தைப் பவுல் பயன்படுத்தினார். இயேசு இறந்த பிறகு, சாவாமையுள்ள ஆவி உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டார். அதனால்தான், ‘மரணம் இனி அவருடைய எஜமானாக இருக்கவில்லை.’ பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருந்தது. அவர்களுடைய முழு வாழ்க்கை முறையும் மாறியிருந்தது. பாவ ஆசைகள் தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. அப்போதிருந்து, கடவுளைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழ்வதற்கு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள். ‘பாவத்தைப் பொறுத்தவரை அவர்கள் இறந்தவர்களாக இருந்தாலும், கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுளுக்காக உயிர்வாழ்கிறவர்களாக’ இருந்தார்கள்.—ரோ. 6:9, 11.
11. நாம் எந்த விதத்தில் ‘பாவத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களாக’ இருக்கிறோம்?
11 நாமும் ‘பாவத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களாக’ இருக்கிறோம் என்று எப்படிச் சொல்லலாம்? நம்முடைய செயல்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை உணராமலேயே நாம் இதற்கு முன்பு நிறைய தவறுகள் செய்திருக்கலாம். அந்தச் சமயத்தில், நாம் “அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும்” அடிமைகளைப் போல இருந்தோம்; அதாவது, ‘பாவத்திற்கு அடிமைகளாக’ இருந்தோம். (ரோ. 6:19, 20) ஆனால், நாம் எப்படி வாழ வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதைப் பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட பிறகு, வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்தோம். யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தோம், ஞானஸ்நானமும் எடுத்தோம். யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் அவரைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழ வேண்டுமென்றும் நாம் ரொம்பவே ஆசைப்பட்டோம். நாம் ‘பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு நீதிக்கு அடிமைகளாக ஆனோம்.’—ரோ. 6:17, 18.
12. நம் ஒவ்வொருவருக்கும் என்ன செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது?
12 நாம் என்ன செய்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. “பாவம் உங்கள் உடலின் ஆசைகளுக்கு உங்களை அடிமைப்படுத்தி, சாவுக்குரிய உங்கள் உடலில் தொடர்ந்து ராஜாவாக ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்” என்று பவுல் சொன்னார். (ரோ. 6:12) ஒருவேளை, பாவமுள்ள எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் நாம் இணங்கிவிடலாம்; அல்லது அவற்றை நாம் கட்டுப்படுத்தலாம். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கெட்டதை செய்யுமளவுக்கு தவறான ஆசைகளை வளர விடுகிறேனா? அல்லது, உடனடியாக அவற்றை ஒதுக்கித்தள்ளுகிறேனா?’ கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நாம் மிகவும் நன்றியோடு இருந்தால் அவரைப் பிரியப்படுத்துவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.
பாவத்தை எதிர்த்து உங்களால் போராட முடியும்
13. சரியானதைச் செய்ய முடியும் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?
13 முதல் நூற்றாண்டில், கொரிந்துவில் இருந்த சிலர் திருடர்களாகவும், ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்களாகவும், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களாகவும், உருவ வழிபாடு செய்கிறவர்களாகவும், குடிகாரர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அவர்கள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டு, அவரை நேசிக்க ஆரம்பித்தபோது தங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்தார்கள். அதோடு, முன்பு செய்துகொண்டிருந்ததை நினைத்து அவர்கள் வெட்கப்பட்டார்கள். (ரோ. 6:21; 1 கொ. 6:9-11) ரோமில் இருந்த கிறிஸ்தவர்களும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பவுல் அவர்களிடம் இப்படிச் சொன்னார்: “உங்கள் உடலுறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு அர்ப்பணிக்காமல், நீதியின் ஆயுதங்களாகக் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்; செத்த நிலையிலிருந்து உயிரடைந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து உங்களையே அவருக்கு அர்ப்பணியுங்கள்.” (ரோ. 6:13) அந்தக் கிறிஸ்தவர்களால் சரியானதைச் செய்ய முடியும் என்பதிலும், யெகோவாவின் அளவற்ற கருணையால் அவர்கள் தொடர்ந்து நன்மையடைய முடியும் என்பதிலும் பவுல் உறுதியாக இருந்தார்.
14, 15. என்னென்ன கேள்விகளை நாம் கேட்டுகொள்ள வேண்டும்?
14 இன்றும் இதுதான் உண்மை! கொரிந்துவில் இருந்தவர்களைப் போலவே, நம்முடைய சகோதர சகோதரிகள் சிலரும் வாழ்ந்திருக்கலாம். ஆனால், யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு, அவர்கள் முன்பு செய்துவந்த பாவத்தை விட்டுவிட்டார்கள்; அதோடு, அவர்கள் சுத்தமாக ‘கழுவப்பட்டார்கள்.’ யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக நாம் எல்லாருமே நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்திருக்கிறோம். கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருப்பதைக் காட்ட இப்போதும் நாம் ஆசைப்படுகிறோம். அதனால், தவறான ஆசைகளை எதிர்த்துப் போராடவும், யெகோவாவுக்குச் சேவை செய்ய நம்முடைய வாழ்க்கையைப் பயன்படுத்தவும் நாம் தீர்மானமாக இருக்கிறோம்.
15 கொரிந்துவில் இருந்த சிலர் மோசமான பாவங்களைச் செய்தார்கள்; ஆனால், நாம் அவர்களைப் போல் இருக்கக் கூடாது. நாம் தொடர்ந்து பாவங்கள் செய்துகொண்டிருந்தால், கடவுளுடைய அளவற்ற கருணையையும் அவருடைய மன்னிப்பையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், ‘இது ஒன்றும் அவ்வளவு மோசமான பாவமில்லை’ என்று மற்றவர்கள் நினைக்கிற பாவங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? எல்லா விஷயத்திலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நாம் தீர்மானமாக இருக்கிறோமா?—ரோ. 6:14, 17.
16. ஒன்று கொரிந்தியர் 6:9-11-ல் சொல்லப்பட்டிருக்கிற பாவங்களைத் தவிர மற்ற பாவங்களையும் தவிர்க்க வேண்டும் என்று நமக்கு எப்படித் தெரியும்?
16 அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “நானோ பாவ இயல்புள்ளவன், பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டிருப்பவன். நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன் என்று எனக்கே புரிவதில்லை. எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்து வருகிறேன்” என்று அவர் சொன்னார். (ரோ. 7:14, 15) ஒன்று கொரிந்தியர் 6:9-11-ல் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை அவர் செய்யவில்லை என்றாலும், தான் இன்னும் பாவம் செய்துகொண்டிருப்பதாக அவர் சொன்னார். யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பியதால், தவறான விஷயங்களைச் செய்யாமல் இருக்க அவர் போராடினார். (ரோமர் 7:21-23-ஐ வாசியுங்கள்.) நாமும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்; யெகோவாவுக்குக் கீழ்ப்படிய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம்.
17. நீங்கள் ஏன் நேர்மையாக இருக்க விரும்புகிறீர்கள்?
17 உதாரணத்துக்கு, நேர்மையாக இருக்கும் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான விஷயம், நேர்மை! (நீதிமொழிகள் 14:5-ஐயும் எபேசியர் 4:25-ஐயும் வாசியுங்கள்.) சாத்தான் ‘பொய்க்குத் தகப்பனாக’ இருக்கிறான். பொய் சொன்னதால்தான் அனனியாவும் அவனுடைய மனைவியும் செத்துப்போனார்கள். இந்தக் கெட்ட முன்மாதிரிகளைப் போல இருக்க நாம் விரும்பாததால், நாம் பொய் சொல்வதில்லை. (யோவா. 8:44; அப். 5:1-11) ஆனால், பொய் சொல்லாமல் இருந்தால் மட்டும் நேர்மையாக இருக்கிறோம் என்று சொல்லிவிட முடியாது. கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நாம் உண்மையிலேயே நன்றியோடு இருந்தால், மற்ற விஷயங்களிலும் நேர்மையாக இருப்போம்.
18, 19. நேர்மையாக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
18 ஒருவர் பொய் சொல்லவில்லை என்பதற்காக அவர் நேர்மையாக இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்களிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: “நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.” அவர்கள் ஏன் அப்படி இருக்க வேண்டியிருந்தது? ஏனென்றால், “உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தார். (லேவி. 19:2, 11) ஒருவேளை, நாம் பொய் சொல்லாமல் இருக்கலாம்; ஆனால், உண்மை இல்லாத ஒரு விஷயத்தை உண்மை என்று மற்றவர்களை நம்ப வைத்தால், நாம் நேர்மையாக இல்லை என்றுதான் அர்த்தம்.
பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் தவிர்க்க நாம் தீர்மானமாக இருக்கிறோமா?(பாரா 19)
19 உதாரணத்துக்கு, ஒருவர் தன் முதலாளியிடமோ தன்னோடு வேலை செய்கிறவர்களிடமோ போய், டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றும் அதற்காக வேலையில் இருந்து சீக்கிரமாகப் போக வேண்டும் என்றும் சொல்கிறார். அவர் அப்படிச் சொன்னதற்கு உண்மையான காரணம் அது கிடையாது. அவர் வெறுமென மருந்து வாங்கவோ அல்லது டாக்டரைப் பார்த்து பணம் கொடுக்கவோ போக வேண்டும், அவ்வளவுதான்! குடும்பத்தோடு சுற்றுலா போவதற்குத் தயாராவதற்காகவோ அல்லது குடும்பத்தைக் கடற்கரைக்குக் கூட்டிக்கொண்டு போவதற்காகவோதான் அப்படிச் சொல்கிறார். அவர் சொன்னதில் துளி அளவு உண்மை இருந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் அவர் நேர்மையாக இருந்தாரா அல்லது மற்றவர்களை ஏமாற்றினாரா? உண்மை இல்லாத ஒரு விஷயத்தை உண்மை என்று அவர் மற்றவர்களை நம்ப வைத்தார். சிலசமயம், தங்களுக்கு வேண்டியது கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லது தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை மக்கள் ஏமாற்றுகிறார்கள். ஆனால், ‘வஞ்சனைபண்ணாமல் இருங்கள்,’ அதாவது, ஏமாற்றாமல் இருங்கள் என்ற யெகோவாவின் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோம். அவர் சரியென்று சொல்வதையும் பரிசுத்தமென்று சொல்வதையும் செய்யத்தான் நாம் ஆசைப்படுகிறோம்.—ரோ. 6:19.
20, 21. கடவுளுடைய அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருந்தால், நாம் வேறு எதையும் செய்ய மாட்டோம்?
20 மணத்துணைக்குத் துரோகம், குடிவெறி போன்ற மோசமான பாவங்களை நாம் செய்வதில்லை என்பது உண்மைதான்! ஆனால், இவற்றைச் செய்யாமல் இருப்பதோடு மட்டும் நாம் நிறுத்திக்கொள்வதில்லை; யெகோவாவுக்குப் பிடிக்காத எதையுமே நாம் செய்வதில்லை. உதாரணத்துக்கு, பாலியல் ஒழுக்கக்கேட்டை மட்டுமல்ல, ஒழுக்கக்கேடான பொழுதுபோக்கையும் நாம் தவிர்க்கிறோம். குடித்து வெறிப்பதை மட்டுமல்ல, அப்படிக் குடித்து வெறிக்கும் அளவுக்குப் போவதையும் நாம் தவிர்க்கிறோம். இதுபோன்ற விஷயங்களை எதிர்த்துப் போராட நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும்; அப்படி முயற்சி செய்யும்போது, நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
21 படுமோசமான பாவங்களையும் அந்தளவு மோசமாக இல்லாத பாவங்களையும் செய்யக் கூடாது என்பது நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், அவற்றை முழுவதுமாகத் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், அவற்றைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும், பவுலும் அதைத்தான் செய்தார். “பாவம் உங்கள் உடலின் ஆசைகளுக்கு உங்களை அடிமைப்படுத்தி, சாவுக்குரிய உங்கள் உடலில் தொடர்ந்து ராஜாவாக ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்” என்று அவர் சொன்னார். (ரோ. 6:12; 7:18-20) எல்லா வகையான பாவங்களையும் எதிர்த்துப் போராடும்போது, கடவுள் மற்றும் கிறிஸ்துவுடைய அளவற்ற கருணைக்கு நாம் உண்மையிலேயே நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுவோம்.
22. யெகோவாவின் அளவற்ற கருணைக்கு நன்றியோடு இருந்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?
22 யெகோவா தன்னுடைய அளவற்ற கருணையின் மூலம் நம் பாவங்களை மன்னித்திருக்கிறார்; இனிமேலும் அவரால் நம் பாவங்களை மன்னிக்க முடியும். யெகோவாவின் அளவற்ற கருணைக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! யெகோவா எதையெல்லாம் தவறு என்று சொல்கிறாரோ, அதையெல்லாம் செய்யாமல் இருக்க நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒருவேளை, மற்றவர்கள் அதைப் பாவம் இல்லையென்று சொன்னாலும் அதை நாம் செய்யக் கூடாது. அப்படிச் செய்யாமல் இருக்கும்போது, நமக்கு என்ன பலன் கிடைக்கும்? அதைப் பற்றி பவுல் இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் இப்போது பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு கடவுளுக்கு அடிமைகளாகி இருப்பதால், பரிசுத்த வாழ்வைப் பலனாகப் பெற்றிருக்கிறீர்கள்; அது முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிறது.”—ரோ. 6:22.