சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை உயர்வாக மதியுங்கள்!
“யெகோவாவின் சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரமும் உண்டு.”—2 கொ. 3:17.
1, 2. (அ) சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்? (ஆ) அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்?
“என்னை யோசிக்க வைக்காத. நான் என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு. அதுதான் எனக்கு ரொம்ப ஈஸி.” தீர்மானம் எடுப்பது சம்பந்தமாக ஒரு பெண் தன் நண்பரிடம் இப்படித்தான் சொன்னார். படைப்பாளர் தனக்குக் கொடுத்திருக்கிற பரிசை, அதாவது சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை, பயன்படுத்துவதற்குப் பதிலாக, என்ன செய்ய வேண்டும் என்பதை வேறு யாராவது தனக்குச் சொல்ல வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி? நீங்களாகவே தீர்மானம் எடுக்கிறீர்களா அல்லது உங்களுக்காக மற்றவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
2 சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுள் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்றெல்லாம் எதுவும் கிடையாது என்று சிலர் சொல்கிறார்கள். முழு சுதந்திரம் இருந்தால்தான் சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்று வேறு சிலர் சொல்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? ஞானமான தீர்மானங்களை எடுக்கும் திறமையோடும் சுதந்திரத்தோடும் யெகோவா நம்மைப் படைத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. (யோசுவா 24:15-ஐ வாசியுங்கள்.) அதோடு, இந்தக் கேள்விகளுக்கும் பைபிள் பதில் சொல்கிறது: சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமைக்கு வரம்புகள் ஏதாவது இருக்கின்றனவா? தீர்மானங்கள் எடுக்கும்போது நம்முடைய சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? யெகோவாவை எந்தளவு நேசிக்கிறோம் என்பதை நாம் எடுக்கும் தீர்மானங்களின் மூலம் எப்படிக் காட்டலாம்? மற்றவர்கள் எடுக்கிற தீர்மானத்தை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்?
3. தன்னுடைய சுதந்திரத்தை யெகோவா எப்படிப் பயன்படுத்துகிறார்?
3 யெகோவாவுக்கு மட்டும்தான் முழு சுதந்திரம் இருக்கிறது; அந்தச் சுதந்திரத்தை அவர் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, இஸ்ரவேல் தேசத்தை, தன்னுடைய சொந்த ஜனமாக, தன்னுடைய “விசேஷ சொத்தாக” யெகோவா தேர்ந்தெடுத்தார். (உபா. 7:6-8) அவர் அப்படித் தீர்மானம் எடுத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. தன்னுடைய நண்பர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகத்தான் யெகோவா அந்தத் தீர்மானத்தை எடுத்தார். (ஆதி. 22:15-18) அதோடு, அன்பு மற்றும் நீதியின் அடிப்படையில்தான் அவர் எப்போதும் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறார். கீழ்ப்படியாத இஸ்ரவேலர்களை யெகோவா கண்டித்ததிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம். தாங்கள் செய்ததை நினைத்து அவர்கள் உண்மையிலேயே மனம் வருந்தியபோது, யெகோவா அவர்களிடம் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொண்டார். “அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான். அவனை மனப்பூர்வமாக நேசிப்பேன்” என்று சொன்னார். (ஓசி. 14:4) மற்றவர்களுடைய நன்மைக்காக யெகோவா தன்னுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறார். இந்த விஷயத்தில் யெகோவா நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்!
4, 5. (அ) சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை முதல் முதலில் பெற்றுக்கொண்டது யார், அவர் அதை எப்படிப் பயன்படுத்தினார்? (ஆ) என்ன கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்?
4 சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையோடுதான் தேவதூதர்களையும் மனிதர்களையும் படைக்க வேண்டும் என்று யெகோவா தீர்மானித்தார். சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை முதல் முதலில் பெற்றுக்கொண்டது இயேசுதான். யெகோவா இயேசுவைத்தான் முதல் முதலில் படைத்தார்; அதுவும் தன்னுடைய சாயலில் படைத்தார். (கொலோ. 1:15) தன்னுடைய சுதந்திரத்தை இயேசு எப்படிப் பயன்படுத்தினார்? பூமிக்கு வருவதற்கு முன்பே, கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்றும் சாத்தான் மற்றும் அவனுடைய கலகக்காரர்களோடு சேர்ந்துவிடக் கூடாதென்றும் இயேசு தீர்மானித்தார். பூமிக்கு வந்த பின்பும், சாத்தானின் சோதனைகளை எதிர்த்து நிற்க வேண்டுமென்று இயேசு தீர்மானித்தார். (மத். 4:10) தான் சாவதற்கு முந்தின நாள் ராத்திரிகூட, தன்னுடைய அப்பாவின் விருப்பத்தைச் செய்யவே ஆசைப்படுவதாக உறுதியளித்தார். “தகப்பனே, உங்களுக்கு விருப்பமானால் இந்தக் கிண்ணத்தை என்னிடமிருந்து எடுத்துவிடுங்கள். ஆனால் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று சொன்னார். (லூக். 22:42) நம்மாலும் இயேசுவைப் பின்பற்ற முடியுமா? யெகோவாவை மகிமைப்படுத்தவும் அவருடைய விருப்பத்தைச் செய்யவும் நமக்கு இருக்கிற உரிமையைப் பயன்படுத்த முடியுமா?
5 நிச்சயம் முடியும்! ஏனென்றால், நாமும் கடவுளுடைய சாயலில்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதி. 1:26) ஆனால், யெகோவாவைப் போல நமக்கு முழு சுதந்திரம் இல்லை. நம்முடைய சுதந்திரத்துக்கு சில வரம்புகள் இருக்கின்றன என்றும், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் யெகோவா எதிர்பார்ப்பதாக பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, மனைவிகள் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். (எபே. 5:22; 6:1) இது போன்ற வரம்புகளுக்கு உட்பட்டு, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதில்தான் நம்முடைய எதிர்காலமே இருக்கிறது!
சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை எப்படிப் பயன்படுத்தலாம்?
6. நம்முடைய சுதந்திரத்துக்கு வரம்புகள் இருப்பது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம் சொல்லுங்கள்.
6 சுதந்திரத்துக்கு வரம்புகள் இருந்தால், அதை உண்மையான சுதந்திரம் என்று சொல்ல முடியுமா? நிச்சயம் சொல்ல முடியும்! ஏனென்றால், வரம்புகள் இருந்தால்தான் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். உதாரணத்துக்கு, தொலைதூரத்தில் இருக்கிற ஓர் இடத்துக்கு நீங்கள் காரை ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் போகிற நெடுஞ்சாலையில் எந்தப் போக்குவரத்துச் சட்டங்களும் இல்லை. அதோடு, எவ்வளவு வேகத்தில் போக வேண்டுமென்றும், சாலையின் எந்தப் பக்கத்தில் போக வேண்டுமென்றும் அவரவர்களாகவே முடிவு செய்துகொள்ளலாம். இப்போது சொல்லுங்கள், அந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்குமா? நிச்சயம் பாதுகாப்பாக இருக்காது! உண்மையான சுதந்திரத்தால் கிடைக்கிற நன்மைகளை அனுபவிக்க வேண்டுமென்றால், வரம்புகள் இருப்பது ரொம்ப முக்கியம். யெகோவா வைத்திருக்கிற வரம்புகள் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, இப்போது சில பைபிள் உதாரணங்களைப் பார்க்கலாம்.
7. (அ) ஆதாமுக்கும் மிருகங்களுக்கும் இருந்த ஒரு வித்தியாசம் என்ன? (ஆ) சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை ஆதாம் பயன்படுத்திய ஒரு வழி என்ன?
7 முதல் மனிதனான ஆதாமைப் படைத்தபோது, தேவதூதர்களுக்குக் கொடுத்தது போலவே, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை யெகோவா ஆதாமுக்கும் கொடுத்தார். ஆனால், மிருகங்களுக்கு அவர் அந்த உரிமையைக் கொடுக்கவில்லை. அந்த உரிமையை ஆதாம் எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தினான்? மிருகங்களுக்குப் பெயர் வைப்பதில் அவன் சந்தோஷப்பட்டான். அவற்றுக்கு ‘என்ன பெயர் வைப்பான் என்று பார்ப்பதற்காக, கடவுள் அவற்றை அவனிடம் கொண்டுவரத் தொடங்கினார்.’ ஒவ்வொரு மிருகத்தையும் நன்றாகப் பார்த்த பிறகு, ஆதாம் அவற்றுக்கு அர்த்தமுள்ள பெயரை வைத்தான். ஆதாம் வைத்த எந்தப் பெயரையும் யெகோவா மாற்றவில்லை. “ஒவ்வொரு உயிரினத்துக்கும் மனிதன் என்ன பெயர் வைத்தானோ அதுவே அதன் பெயராக ஆனது” என்று பைபிள் சொல்கிறது.—ஆதி. 2:19.
8. சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை ஆதாம் எப்படித் தவறாகப் பயன்படுத்தினான், அதனால் வந்த விளைவு என்ன?
8 இந்தப் பூமி முழுவதையும் பூஞ்சோலையாக மாற்றுகிற பொறுப்பை யெகோவா ஆதாமுக்குக் கொடுத்தார். “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள். கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று யெகோவா ஆதாமிடம் சொன்னார். (ஆதி. 1:28) ஆனால், ஆதாமோ தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட தீர்மானித்தான். அப்படிச் செய்ததன் மூலம் யெகோவா வைத்திருந்த வரம்புகளை அவன் மீறினான். சொந்தமாகத் தீர்மானிக்கும் உரிமையை அவன் தவறாகப் பயன்படுத்தியதால், மனிதர்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வேதனையில் தவிக்கிறார்கள். (ரோ. 5:12) ஆதாம் எடுத்த தீர்மானத்தால் வந்த விளைவுகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அப்போதுதான், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைச் சரியான விதத்தில் பயன்படுத்தவும், யெகோவா வைத்திருக்கிற வரம்புகளை ஏற்றுக்கொள்ளவும் நம்மால் முடியும்!
9. இஸ்ரவேல் தேசத்துக்கு யெகோவா என்ன உரிமையைக் கொடுத்தார், என்ன செய்வதாக அவர்கள் சத்தியம் செய்தார்கள்?
9 ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் அபூரணமும் மரணமும் அவர்களுடைய சந்ததிக்குக் கடத்தப்பட்டது. இருந்தாலும், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை நமக்கு இன்னும் இருக்கிறது. இஸ்ரவேல் தேசத்திடம் கடவுள் நடந்துகொண்ட விதத்திலிருந்து இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. யெகோவாவின் “விசேஷ சொத்தாக” இருப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமையை யெகோவா இஸ்ரவேல் தேசத்துக்குக் கொடுத்தார். (யாத். 19:3-6) அவருடைய மக்களாக இருக்கவும், அவர் வைத்திருந்த வரம்புகளை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தீர்மானித்தார்கள். “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்று சத்தியம் செய்தார்கள். (யாத். 19:8) ஆனால், பிறகு நடந்த வருத்தமான விஷயம் என்னவென்றால், கடவுளுக்குக் கொடுத்த சத்தியத்தை அவர்கள் காப்பாற்றாமல் போய்விட்டார்கள். இந்த உதாரணத்திலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்பது யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற அற்புதமான பரிசு! அதை எப்போதும் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும், தொடர்ந்து யெகோவாவோடு நெருங்கி இருக்க வேண்டும், அவருடைய எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும்.—1 கொ. 10:11.
10. ஆபூரண மனிதர்களால், கடவுளை மகிமைப்படுத்தும் விதத்தில் சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதற்கு எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் இருக்கிற உதாரணங்கள் எப்படி அத்தாட்சி அளிக்கின்றன? (ஆரம்பப் படம்)
10 யெகோவா வைத்த வரம்புகளின்படி நடக்க தீர்மானித்த உண்மையுள்ள கடவுளுடைய ஊழியர்கள் 16 பேருடைய உதாரணங்கள், எபிரெயர் புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தில் இருக்கின்றன. யெகோவாவுடைய வரம்புகளுக்கு உட்பட்டு நடந்ததால் அவர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைத்தன. அதோடு, அருமையான எதிர்கால நம்பிக்கையும் கிடைத்தது. உதாரணத்துக்கு, நோவாவுக்கு அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. நோவா தன்னுடைய குடும்பத்தையும் எதிர்கால சந்ததியையும் காப்பாற்றிக்கொள்வதற்காக, ஒரு பேழையைக் கட்ட வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்தார். அந்தக் கட்டளைக்கு நோவா கீழ்ப்படிந்தார். (எபி. 11:7) ஆபிரகாமும் சாராளும் முழு மனதோடு யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவர் தங்களுக்கு வாக்குக்கொடுத்திருந்த தேசத்துக்குப் போனார்கள். பிறகு, செல்வச் செழிப்பான ஊர் தேசத்துக்கே “திரும்பிப்போக” அவர்களுக்கு வாய்ப்பு இருந்தும், “உயர்ந்த இடத்தை” பெறுவதிலேயே தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள். (எபி. 11:8, 13, 15, 16) எகிப்தின் செல்வங்களை மோசே ஒதுக்கித்தள்ளினார். “பாவத்தால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுத்தப்படுவதையே அவர் தேர்ந்தெடுத்தார்.” (எபி. 11:24-26) நாமும் இந்த உண்மையுள்ள ஊழியர்களின் உதாரணங்களைப் பின்பற்ற வேண்டும். சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற அருமையான பரிசைப் பயன்படுத்தி, கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய வேண்டும்.
11. (அ) சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையால் கிடைக்கும் மிகச் சிறந்த ஆசீர்வாதம் என்ன? (ஆ) சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைச் சரியான விதத்தில் பயன்படுத்த உங்களை எது தூண்டுகிறது?
11 நமக்காக மற்றவர்களைத் தீர்மானம் எடுக்க வைப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யும்போது, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையால் கிடைக்கும் மிகச் சிறந்த ஆசீர்வாதத்தை நாம் இழந்துவிடலாம். அந்த ஆசீர்வாதத்தைப் பற்றி உபாகமம் 30:19, 20 சொல்கிறது. (வாசியுங்கள்.) யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த உரிமையைப் பற்றி 19-ஆம் வசனம் சொல்கிறது. தன்மீது எந்தளவு அன்பு இருக்கிறது என்பதைக் காட்ட யெகோவா அவர்களுக்குக் கொடுத்த வாய்ப்பைப் பற்றி 20-வது வசனம் சொல்கிறது. நாமும் யெகோவாவை வணங்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். யெகோவாவை மகிமைப்படுத்தும் விதத்திலும், அவர்மீது நமக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைக் காட்டும் விதத்திலும், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை நம்மாலும் பயன்படுத்த முடியும். இது நமக்குக் கிடைத்திருக்கிற மிகப் பெரிய பாக்கியம்!
சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது
12. சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை நாம் எப்படிப் பயன்படுத்தக் கூடாது?
12 விலை மதிப்புள்ள பரிசு ஒன்றை நீங்கள் உங்கள் நண்பருக்குக் கொடுத்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த அந்தப் பரிசை அவர் குப்பையில் போட்டுவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதற்கும் ஒரு படி மேலே போய், மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதற்கு அந்தப் பரிசைப் பயன்படுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் நிச்சயம் வேதனைப்படுவீர்கள், இல்லையா? சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். மனிதர்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தும்போதும், மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதற்காக இதைப் பயன்படுத்தும்போதும் யெகோவாவுக்கு எப்படி இருக்கும்? அவர் நிச்சயம் வேதனைப்படுவார், இல்லையா? “கடைசி நாட்களில்,” மனிதர்கள் “நன்றிகெட்டவர்களாக” இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:1, 2) ஆனால், கடவுள் கொடுத்திருக்கும் இந்த அருமையான பரிசுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
13. நம்முடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி விடாமல் இருப்பதற்கு ஒரு வழி என்ன?
13 நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும், உடை உடுத்தும் விஷயத்திலும், பொழுதுபோக்கில் ஈடுபடும் விஷயத்திலும் தீர்மானம் எடுக்க எல்லாருக்குமே சுதந்திரம் இருக்கிறது. ஆனால், யெகோவாவுக்குப் பிடிக்காத விதத்திலோ இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றும் விதத்திலோ நாம் தீர்மானம் எடுத்தால், நம்முடைய “சுதந்திரத்தை தீய செயல்களை மறைக்கும் போர்வையாக” பயன்படுத்திவிடுவோம். (1 பேதுரு 2:16-ஐ வாசியுங்கள்.) நம்முடைய சுதந்திரத்தை “பாவ ஆசைகளை நிறைவேற்றுவதற்குச் சாக்காக” பயன்படுத்தாமல், “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே” பயன்படுத்த வேண்டும்.—கலா. 5:13; 1 கொ. 10:31.
14. சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைப் பயன்படுத்தும்போது நாம் ஏன் யெகோவாவை நம்ப வேண்டும்?
14 “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்” என்று யெகோவா சொன்னார். (ஏசா. 48:17) நாம் யெகோவாமீது நம்பிக்கை வைக்க வேண்டும், அவர் வைத்திருக்கிற வரம்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம்மால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும். ‘மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை என்பதையும், தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்பதையும்’ நாம் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்ள வேண்டும். (எரே. 10:23) ஆதாமும் சரி, கலகக்காரர்களான இஸ்ரவேலர்களும் சரி, யெகோவா வைத்திருந்த வரம்புகளை மீறி நடந்தார்கள்; யெகோவாவை நம்புவதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த புத்தியை நம்பினார்கள். இவர்களுடைய கெட்ட உதாரணத்திலிருந்து நமக்கு என்ன பாடம்? நம்முடைய சொந்த புத்தியை நம்பாமல், ‘யெகோவாவையே முழு இதயத்தோடு நம்ப’ வேண்டும்.—நீதி. 3:5.
மற்றவர்களுடைய உரிமையை மதிக்க வேண்டும்
15. கலாத்தியர் 6:5-ல் இருக்கிற நியமத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை நம் எல்லாருக்கும் இருப்பதால், எந்த இரண்டு கிறிஸ்தவர்களும் எப்போதும் ஒரே மாதிரியான தீர்மானங்கள் எடுக்க மாட்டார்கள். அதனால், மற்றவர்களுக்கு இருக்கும் அந்தச் சுதந்திரத்தை நாம் மதித்து நடக்க வேண்டும். நம்முடைய நடத்தை மற்றும் வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் இதுதான் உண்மை. கலாத்தியர் 6:5-ல் இருக்கிற நியமத்தை எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். (வாசியுங்கள்.) ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரவருடைய பாரத்தைச் சுமக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொண்டால்தான், மற்றவர்களுக்கு இருக்கிற சுதந்திரத்தை நம்மால் மதித்து நடக்க முடியும்.
நாம் எடுத்த தீர்மானத்தைத்தான் மற்றவர்களும் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது (பாரா 15)
16, 17. (அ) சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையால் கொரிந்து சபையில் என்ன பிரச்சினை வந்தது? (ஆ) அந்தக் கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எப்படி உதவி செய்தார், அதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
16 நம்முடைய சகோதரர்களுக்கு இருக்கிற உரிமையை நாம் ஏன் மதிக்க வேண்டும் என்பதற்கு இப்போது ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டு, பிறகு கடையில் விற்கப்பட்ட இறைச்சியைச் சாப்பிடுவது சம்பந்தமாக, கொரிந்து சபையில் இருந்த கிறிஸ்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலை என்பது ஒன்றும் இல்லை என்றும், அதனால் அந்த இறைச்சியைச் சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் சில கிறிஸ்தவர்களுடைய மனசாட்சி சொன்னது. அதனால், அதைச் சாப்பிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், முன்பு அப்படிப்பட்ட சிலைகளை வணங்கியவர்களுடைய மனசாட்சி என்ன சொன்னது? அதைச் சாப்பிடுவது சிலை வழிபாட்டுக்குச் சமமானது என்று சொன்னது. அதனால், அதைச் சாப்பிடக்கூடாது என்று இவர்கள் நினைத்தார்கள். (1 கொ. 8:4, 7) சபையில்பிரிவினையை ஏற்படுத்துகிற அளவுக்கு இந்த விஷயம் பெரிய பிரச்சினையாக ஆனது. இந்த முக்கியமான பிரச்சினையைச் சரிசெய்ய பவுல் என்ன செய்தார்?
17 முதலில், கடவுளோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்த உணவு எந்த விதத்திலும் உதவாது என்று அந்த இரண்டு பிரிவினரிடமும் சொன்னார். (1 கொ. 8:8) அடுத்து, அவர்களுக்கு “உரிமை” இருக்கிறது என்பதற்காக பலவீனமானவர்களுடைய மனசாட்சியைக் காயப்படுத்தக் கூடாது என்று சொன்னார். (1 கொ. 8:9) பிறகு, அந்த இறைச்சியைச் சாப்பிடலாமென்று தீர்மானித்தவர்களுடைய மனசாட்சியை நியாயந்தீர்க்கக் கூடாது என்று, அதைச் சாப்பிடுவது தவறென தீர்மானித்தவர்களிடம் சொன்னார். (1 கொ. 10:25, 29, 30) அதனால், வணக்கம் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங்களில், ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரவருடைய மனசாட்சியின்படி தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. அப்படியென்றால், சின்ன சின்ன விஷயங்களிலும் தீர்மானம் எடுக்கும் உரிமை நம்முடைய சகோதரர்களுக்கு இருக்கிறது என்பதை நாம் மதிக்க வேண்டும்.—1 கொ. 10:32, 33.
18. சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?
18 சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்; இது நமக்கு உண்மையான சுதந்திரத்தைத் தருகிறது. (2 கொ. 3:17) இந்தப் பரிசை நாம் உயர்வாக மதிக்கிறோம். ஏனென்றால், யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்க இந்தப் பரிசை நம்மால் பயன்படுத்த முடிகிறது. அதனால், யெகோவாவை மகிமைப்படுத்தும் விதத்தில் நாம் தீர்மானங்கள் எடுக்க வேண்டும். இந்த அருமையான பரிசை மற்றவர்கள் பயன்படுத்தும்போது நாம் அதை மதிக்க வேண்டும்!