1 பிரச்சினைகளைத் தவிர்க்க உதவி
பைபிளில் இருக்கிற ஆலோசனைகள் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், “அவை கற்றுக்கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும் . . . பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன” என்றும் அது சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:16) இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மிக மோசமான பிரச்சினைகளைத் தவிர்க்க பைபிள் எப்படி உதவுகிறது என்று இப்போது கவனிக்கலாம்.
அளவுக்கு அதிகமாகக் குடிப்பது
போன கட்டுரையில் குறிப்பிடப்பட்ட டெல்ஃபின், தன் கவலைகள் தன்னை அளவுக்கு அதிகமாகக் குடிக்க தூண்டியதாக நினைத்தார். அளவாகக் குடிப்பதை பைபிள் கண்டனம் செய்வதில்லை. ஆனால், “அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடு . . . சேர்ந்துகொள்ளாதே” என்று அது சொல்கிறது. (நீதிமொழிகள் 23:20) ஏனென்றால், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் நிறைய உடல்நல பிரச்சினைகள் வருகின்றன. குடும்ப உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகின்றன. அதோடு, ஒவ்வொரு வருஷமும் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோகிறார்கள். பைபிளில் இருக்கிற ஆலோசனைகளைப் பின்பற்றினால் இப்படிப்பட்ட பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க முடியும்.
டெல்ஃபினும் அதைத்தான் செய்தார். அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “குடிக்குறதுனால என்னோட பிரச்சினைகள் சரியாகலனு நான் புரிஞ்சுக்கிட்டேன். பிலிப்பியர் 4:6, 7-ல இருக்குற ஆலோசனைய என் வாழ்க்கையில கடைப்பிடிச்சேன். ‘நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலம் கடவுளிடம் சொல்லுங்கள்’னு இது சொல்லுது. ஒவ்வொரு ராத்திரியும், என் யோசனைகள் அலைமோதும்போதும், என் கவலைகள் என்னை வாட்டிவதைக்கும்போதும் நான் ஜெபம் செஞ்சேன். கோபம், வருத்தம், ஏமாற்றம்னு என்னோட எல்லா உணர்ச்சிகளையும் யெகோவாகிட்ட கொட்டுனேன். நல்ல விஷயங்கள பத்தியே யோசிக்குறதுக்கு வழி காட்டுங்களேனு கெஞ்சுனேன். காலையில எழுந்திருக்கும்போது, அப்படிப்பட்ட எதிர்மறையான உணர்ச்சிகள் எனக்குள்ள வராம பார்த்துக்கிட்டேன். இப்படி செஞ்சுது, என்கிட்ட இல்லாத விஷயங்கள பத்தி யோசிக்குறதுக்கு பதிலா, என்கிட்ட இருக்குற விஷயங்கள பத்தி யோசிக்க உதவி செஞ்சுது. அதுக்கு அப்புறம், நான் குடிக்கவே இல்ல. ஏன்னா, எனக்கு கிடைச்ச சமாதானம் ரொம்ப பெருசா இருந்தது, அதை இழக்க நான் விரும்பல.”
ஒழுக்கக்கேடு
சில பிரச்சினைகள் அதிக வேதனையையும் துக்கத்தையும் தருகின்றன. ஆனால், அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பைபிள் உதவி செய்கிறது. எப்படி? அது போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிற விஷயங்களைச் சரிசெய்வதன் மூலம் ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்க பைபிள் உதவுகிறது. உதாரணத்துக்கு, கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாமல் ஒருவரிடம் நெருங்கிப் பழகுவது, ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவற்றைச் சரிசெய்வதன் மூலம் ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்க பைபிள் உதவுகிறது. ‘‘நான் நிறைய பொண்ணுங்ககிட்ட நெருங்கி பழகுனேன்” என்று சொல்கிறான் சாமுவேல் என்ற இளைஞன். “சில சமயங்கள்ல, ஒரு பொண்ணுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், ஆனா, எனக்கு அவள பிடிக்காது. இருந்தாலும், அவகிட்ட சும்மா நெருங்கி பழகலாமேனு நினைப்பேன்” என்று அவன் சொன்னான். ஆனால், சாமுவேல் இப்படித் தேவையில்லாமல் பெண்களிடம் நெருங்கிப் பழகுவதாக அவனைப் பற்றி மற்றவர்கள் பேச ஆரம்பித்தார்கள். சில சமயங்களில் அவன் அப்படிச் செய்யவில்லை என்றாலும், அவனைப் பற்றி தவறாகப் பேசினார்கள். அதனால், வேண்டுமென்றே பெண்களிடம் நெருங்கிப் பழக வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். ஆனால், இதை நினைத்து அவன் கவலைப்பட்டான். “இப்படி செய்றது சரியில்ல; அது, சுயநல ஆசைகளதான் எனக்குள்ள வளர்த்தது” என்று சாமுவேல் சொல்கிறான்.
இளைஞர்களுக்காக jw.org என்ற வெப்சைட்டில் வெளிவந்த ஒரு கட்டுரையை சாமுவேல் படித்தான். பிறகு, நீதிமொழிகள் 20:11-ல் இருக்கிற விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். “சிறுபிள்ளையைக்கூட அவனுடைய செயலை வைத்தே எடைபோட முடியும். அவனுடைய நடத்தை சுத்தமாகவும் சரியாகவும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்று இது சொல்கிறது. தேவையில்லாமல் ஒரு பெண்ணிடம் நெருங்கிப் பழகுவது சரியாக இருக்காது என்பதை சாமுவேல் புரிந்துகொண்டான். “தேவயில்லாம ஒரு பொண்ணுகிட்ட நெருங்கி பழகுறது, எதிர்காலத்துல, ஒரு நல்ல கணவனா இருக்க உதவி செய்யாது. நான் வேறொரு பொண்ணோட இப்படி நடந்துக்குறத என் வருங்கால மனைவி பார்த்தா அவளுக்கு எப்படி இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அது தப்புனு புரிஞ்சுக்கிட்டேன். பொண்ணுங்ககிட்ட நெருங்கி பழகுறது ரொம்ப சுலபமா இருக்குங்குறதுனால, அது சரியான விஷயம்னு சொல்லிட முடியாது” என்று சாமுவேல் சொல்கிறான். அதன் பிறகு, அவன் அப்படிச் செய்யவே இல்லை; ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதிலிருந்து இது அவனைப் பாதுகாத்தது.
ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் ஆபத்து ஆன்டோனியோ என்பவருக்கு இருந்தது. அவர் ஆபாசத்துக்கு அடிமையாக இருந்தார். தன் மனைவியை அவர் அதிகமாக நேசித்தாலும், அவர் திரும்பத் திரும்ப ஆபாசத்தைப் பார்த்தார். பிறகு, 1 பேதுரு 5:8-ல் இருக்கிற விஷயம் அவருக்கு உதவி செய்ததாகச் சொல்கிறார். “தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்! உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்” என்று இந்த வசனம் சொல்கிறது. “இந்த உலகத்துல, திரும்புற பக்கமெல்லாம் ஆபாச படங்கள் இருக்குறதுனால, அது நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிடும். தவறான ஆசைகளுக்கு எது காரணமா இருக்குங்குறத யோசிச்சு பார்க்க இந்த வசனம் எனக்கு உதவி செஞ்சுது. ஆபாச படங்கள் சாத்தான்கிட்ட இருந்துதான் வருதுங்குறத உடனே ஞாபகத்துக்கு கொண்டுவரணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். என் மனசயும், இதயத்தயும், திருமண வாழ்க்கையயும் பாதிக்கிற இந்த கெட்ட பழக்கத்த எதிர்த்து போராடணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு, ‘தெளிந்த புத்தியோடு இருக்கவும், விழிப்போடு இருக்கவும்’ யெகோவாவாலதான் உதவி செய்ய முடியும்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன்” என்று ஆன்டோனியோ சொல்கிறார். அந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட அவருக்கு உதவி கிடைத்தது. கடைசியில், அந்தப் பழக்கத்தை அவர் விட்டொழித்தார். ஆபாசத்தைப் பார்ப்பதால் வரும் மற்ற மோசமான பிரச்சினைகளைத் தவிர்க்கவும் இது அவருக்கு உதவியது.
மோசமான பிரச்சினைகளைத் தவிர்க்க பைபிள் நடைமுறையான ஆலோசனைகளைத் தருகிறது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஏற்கெனவே வேர்விட்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி என்ன சொல்லலாம்? அவற்றைச் சரிசெய்ய பைபிள் எப்படி உதவுகிறது என்று இப்போது பார்க்கலாம்.
பைபிளில் இருக்கிற ஆலோசனைகள் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகின்றன