வாழ்க்கை சரிதை
“விலை உயர்ந்த ஒரு முத்தை” கண்டுபிடித்தோம்
வின்ஸ்டன் பேய்னும் பேமிலா (பேம்) பேய்னும் ஆஸ்திரேலிசியா கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷமான வாழ்க்கையில் நிறைய சவால்கள் இருந்தன. வெவ்வேறு விதமான கலாச்சாரத்துக்குத் தகுந்தபடி அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. கருச்சிதைவால் ஏற்பட்ட வேதனையையும் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், யெகோவாமீதும் அவருடைய மக்கள்மீதும் இருந்த அன்பை அவர்கள் விட்டுவிடவே இல்லை. ஊழியத்திலும் அவர்கள் சந்தோஷத்தை இழக்கவில்லை. இந்தப் பேட்டியில், அவர்களுடைய அனுபவங்களைக் கேட்கலாம்.
சகோதரர் வின்ஸ்டன், கடவுளை நீங்கள் எப்படித் தேடினீர்கள் என்று சொல்ல முடியுமா?
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், ஓர் ஒதுக்குப்புறமான பண்ணை வீட்டில் நான் வளர்ந்தேன். என்னுடைய குடும்பம், மதப்பற்று இல்லாத ஒரு குடும்பம். நாங்கள் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் வாழ்ந்ததால், என்னுடைய குடும்பத்தில் இருந்தவர்களைத் தவிர, மற்றவர்களோடு எனக்கு அவ்வளவாகத் தொடர்பு இருக்கவில்லை. 12 வயதில், நான் கடவுளைத் தேட ஆரம்பித்தேன். கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரியப்படுத்தும்படி கடவுளிடம் ஜெபம் செய்தேன். பிறகு, பண்ணை வீட்டிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கிற அடிலெய்டுக்குப் போனேன். அங்கே எனக்கு ஒரு வேலை கிடைத்தது. விடுமுறைக்காக சிட்னிக்குப் போயிருந்தபோது, பேமைச் சந்தித்தேன். அப்போது, எனக்கு 21 வயது. பிரிட்டிஷ்-இஸ்ரேல் மதத் தொகுதியைப் பற்றி அவள் சொன்னாள். காணாமல்போன இஸ்ரவேல் கோத்திரங்களின் வம்சத்தில் வந்தவர்கள்தான் பிரிட்டிஷ் மக்கள் என்பதாக அந்தத் தொகுதி உரிமைபாராட்டியது. கி.மு. எட்டாம் நூற்றாண்டில் சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட வட ராஜ்யத்தின் பத்து கோத்திரங்கள்தான் காணாமல்போன அந்தக் கோத்திரங்கள் என்று அந்தத் தொகுதி உரிமைபாராட்டியது. அடிலெய்டில் என்னோடு வேலை செய்துகொண்டிருந்த ஒருவர், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தார். நான் அடிலெய்டுக்குத் திரும்பிவந்ததும், பிரிட்டிஷ்-இஸ்ரேல் மதத் தொகுதியைப் பற்றி அவரிடம் பேசினேன். அவரிடம் பேசிய சில மணிநேரங்களுக்குள்ளாகவே, முக்கியமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றிப் பேசிய சில மணிநேரங்களுக்குள்ளாகவே, சின்ன வயதில் நான் செய்த ஜெபத்துக்குப் பதில் கிடைக்க ஆரம்பித்ததைப் புரிந்துகொண்டேன். என்னுடைய படைப்பாளர் மற்றும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை நான் கற்றுக்கொண்டிருந்தேன்! “விலை உயர்ந்த ஒரு முத்தை” கண்டுபிடித்தேன்!—மத். 13:45, 46.
சகோதரி பேம், நீங்களும் சின்ன வயதிலேயே விலை உயர்ந்த முத்தைத் தேட ஆரம்பித்தீர்கள், இல்லையா? அதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த கோஃப்ஸ் ஹார்பர் என்ற ஊரில், மதப்பற்றுள்ள ஒரு குடும்பத்தில் நான் வளர்ந்தேன். என்னுடைய அப்பா அம்மாவும், தாத்தா பாட்டியும் பிரிட்டிஷ்-இஸ்ரேல் மதத் தொகுதியின் போதனையை நம்பினார்கள். பிரிட்டிஷ் வம்சத்தில் வந்தவர்களுக்கு கடவுளுடைய தயவு இருக்கிறது என்ற போதனை, எனக்கும் என்னுடைய தம்பிக்கும் அக்காவுக்கும் என்னுடைய அம்மாவோடு பிறந்தவர்களுடைய பிள்ளைகளுக்கும் சின்ன வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் போதனையை என்னால் நம்ப முடியவில்லை; கடவுளோடு எனக்கு எந்தப் பந்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. எனக்கு 14 வயதானபோது, ஆங்கிலிக்கன், பாப்டிஸ்ட், செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட் என உள்ளூரில் இருந்த நிறைய சர்ச்சுகளுக்குப் போனேன். ஆனாலும், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்தச் சர்ச்சுகள் எனக்கு உதவவில்லை.
பிறகு, நாங்கள் குடும்பமாக சிட்னிக்குக் குடிமாறினோம். விடுமுறைக்காக வந்திருந்த வின்ஸ்டனை அங்கேதான் சந்தித்தேன். அவர் ஏற்கெனவே சொன்னதுபோல், மதத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டோம்; யெகோவாவின் சாட்சிகளோடு அவர் பைபிள் படிப்பதற்கு அது வழி செய்தது. அதற்குப் பிறகு அவர் எழுதிய கடிதங்களில் ஏராளமான பைபிள் வசனங்கள் இருந்தன. ஒரு விஷயத்தை நான் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அதாவது, அவர் அப்படி எழுதியது, முதலில் எனக்குக் கஷ்டமாக இருந்தது; சொல்லப்போனால், கோபம் கோபமாக வந்தது. ஆனால், அவர் எழுதியதெல்லாம் கடவுளைப் பற்றிய உண்மைகள்தான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டேன்.
வின்ஸ்டனுக்குப் பக்கத்திலேயே இருப்பதற்காக, 1962-ல், நான் அடிலெய்டுக்கு மாறிப்போனேன். யெகோவாவின் சாட்சிகளாக இருந்த தாமஸ் ஸ்லோமன்-ஜேனிஸ் ஸ்லோமன் தம்பதியின் வீட்டில் தங்குவதற்கு வின்ஸ்டன் ஏற்பாடு செய்தார். அவர்கள் பாப்புவா-நியூ கினியில் மிஷனரி சேவை செய்தவர்கள். அவர்கள் என்மீது அளவுகடந்த அன்பு காட்டினார்கள். அப்போது எனக்கு 18 வயதுதான்! யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள அவர்கள் உதவினார்கள். அதனால், சீக்கிரத்திலேயே நானும் பைபிள் படிக்க ஆரம்பித்தேன்; சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதை உறுதியாக நம்பினேன். எனக்கும் வின்ஸ்டனுக்கும் கல்யாணமான கையோடு, யெகோவாவுடைய சேவையில் ஆசீர்வாதங்களை அள்ளித்தருகிற ஒரு வாழ்க்கையை ஆரம்பித்தோம். அதில் எங்களுக்குச் சோதனைகள் வந்தபோதிலும், விலை உயர்ந்த முத்தின் அருமையை இன்னும் அதிகமாக உணர அந்தச் சேவை உதவியது.
சகோதரர் வின்ஸ்டன், யெகோவாவின் சேவையில் உங்களுடைய ஆரம்பக் கால அனுபவங்களைச் சொல்ல முடியுமா?
1. வட்டாரச் சேவையில் நாங்கள் செய்த பயணத்தைக் காட்டும் வரைபடம்
2. சில தீவுகளின் அஞ்சல் தலைகள். கிரிபடி மற்றும் துவாலூ தீவுகள், கில்பர்ட் மற்றும் எலிஸ் தீவுகள் என்று முன்பு அழைக்கப்பட்டன
3. துவாலூவைச் சேர்ந்த புனாஃபுடி என்ற அழகான பவளத் தீவு. நாங்கள் சந்தித்த நிறைய தீவுகளில் இதுவும் ஒன்று; மிஷனரிகள் நியமிக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் அங்கே போயிருந்தோம்
பேமுக்கும் எனக்கும் கல்யாணமான கொஞ்சக் காலத்திலேயே, ஊழியத்தை அதிகமாகச் செய்வதற்கான ‘பெரிய கதவுகளில்’ முதல் கதவை யெகோவா திறந்தார். (1 கொ. 16:9) எங்களுடைய சின்ன சபைக்கு வட்டாரச் சந்திப்புக்காக வந்திருந்த சகோதரர் ஜேக் போர்ட்டர், அந்த முதல் கதவைப் பற்றிச் சொன்னார். (இப்போது, என்னோடு சேர்ந்து ஆஸ்திரேலிசியா கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறார்.) ஒழுங்கான பயனியர் சேவை செய்யும்படி ஜேக்கும் அவருடைய மனைவி ரோஸ்லினும் எங்களை உற்சாகப்படுத்தினார்கள். நாங்கள் 5 வருஷங்கள் அந்தச் சேவையைச் செய்தோம். என்னுடைய 29 வது வயதில், என்னையும் பேமையும், தெற்கு பசிபிக் தீவுகளில் வட்டாரச் சேவை செய்யும்படி சொன்னார்கள். அப்போது, பிஜி கிளை அலுவலகத்தின் கீழ் அந்தத் தீவுகள் இருந்தன. அமெரிக்கன் சமோவா, சமோவா, கிரிபடி, நௌரு, நியூ தீவு, டோகிலுவா, டோங்கா, துவாலூ, வனுவாட்டு ஆகியவைதான் அந்தத் தீவுகள்.
அந்த நாட்களில், ரொம்பவே ஒதுக்குப்புறமான சில தீவுகளிலிருந்த மக்கள் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தேகக்கண்ணோடு பார்த்தார்கள். அதனால், நாங்கள் ஜாக்கிரதையாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. (மத். 10:16) அங்கிருந்த சபைகள் சின்ன சபைகளாக இருந்தன; அவற்றில் சில சபைகளால், நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. அதனால், கிராமத்திலிருந்த உள்ளூர் மக்களோடு தங்க முடியுமா என்று அந்த உள்ளூர் மக்களிடமே கேட்டோம். அவர்கள் எங்களை எப்போதுமே ரொம்ப அன்பாக நடத்தினார்கள்.
சகோதரர் வின்ஸ்டன், உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேலை என்றால் ரொம்ப இஷ்டம் இல்லையா, அந்த ஆசை எப்படி வந்தது?
சமோவாவில், மூப்பர்களுக்கான பள்ளியை நடத்துகிறார்
அந்தச் சமயத்தில், டோங்கா என்ற தீவு மாநிலத்திலிருந்த சகோதரர்களிடம் பாலினேசிய மொழிகளில் ஒன்றான டோங்கா மொழியில், துண்டுப்பிரதிகளும் சிறு புத்தகங்களும் கொஞ்சம் மட்டுமே இருந்தன. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைத்தான் அவர்கள் ஊழியத்தில் பயன்படுத்தினார்கள். அதனால், நான்கு வாரங்களுக்கு நடந்த மூப்பர்களுக்கான பள்ளியில் கலந்துகொண்ட மூன்று உள்ளூர் மூப்பர்கள், இந்தப் புத்தகத்தை டோங்கா மொழியில் மொழிபெயர்க்க ஒத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருந்தது. அவர்கள் மொழிபெயர்த்ததை பேம் டைப் செய்தாள். அதை அச்சிடுவதற்காக, அமெரிக்க கிளை அலுவலகத்துக்கு நாங்கள் அனுப்பினோம். இந்த வேலையைச் செய்து முடிக்க கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் ஆனது. அதை ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. இருந்தாலும், டோங்கா மொழி பேசிய நிறைய மக்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அந்தப் புத்தகம் ரொம்ப உதவியாக இருந்தது. பேமும் நானும் மொழிபெயர்ப்பாளர்கள் கிடையாது. இருந்தாலும், இந்த அனுபவம் மொழிபெயர்ப்பு வேலையின்மீது ஆர்வத்தைத் துண்டியது.
சகோதரி பேம், ஆஸ்திரேலியாவில் இருந்த வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அந்தத் தீவுகளில் இருந்த வாழ்க்கை எப்படி இருந்தது?
வட்டாரச் சேவை செய்தபோது, இந்த வண்டியும் எங்கள் வீடாக இருந்தது
ரொம்பவே வித்தியாசமாக இருந்தது! சில இடங்களில், கொசுக்களின் பட்டாளத்தையும் சுட்டெரிக்கும் வெயிலையும் புழுக்கத்தையும் எலிகளின் தொல்லையையும் வியாதிகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. சிலசமயங்களில், சாப்பிடுவதற்கு கொஞ்சம் சாப்பாடு மட்டுமே கிடைத்தது. இருந்தாலும், ஒவ்வொரு நாள் முடிவிலும் நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் ஃபாலேயில் இருந்துகொண்டே கடலைப் பார்த்து ரசித்த அனுபவமே தனிதான்! சுவர்களே இல்லாத, பாலினேசிய தீவுகளிலிருக்கும் கூரை வீட்டைத்தான் சமோவன் மொழியில் ஃபாலே என்று சொல்வார்கள். அப்படி ஃபாலேயிலிருந்து பார்த்து ரசித்தது எங்கள் மனதுக்கு இதமாக இருந்தது. நிலவொளி பிரகாசமாக இருக்கும் இரவுகளில், தென்னை மரங்களின் நிழல் தெளிவாகத் தெரியும்; கடலின்மேல் நிலா அசைந்தாடுவது போல் இருக்கும். அவை அருமையான தருணங்கள்! தியானிக்கவும், ஜெபம் செய்யவும் அவை எங்களுக்கு உதவின. எங்களுடைய கஷ்டங்களையே நினைத்துக்கொண்டிருக்காமல், நாங்கள் அனுபவித்துக்கொண்டிருந்த ஆசீர்வாதங்களை நினைத்துப்பார்ப்பதற்கு அவை உதவியாக இருந்தன.
அங்கிருந்த பிள்ளைகள் எப்போதும் ஆடிப்பாடி சந்தோஷமாக இருந்தார்கள். அவர்களை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். வெளிநாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரர்களான எங்களைப் பார்ப்பதில் அவர்களுக்குப் பயங்கர ஆர்வம்! நியூ தீவுக்கு நாங்கள் போயிருந்தபோது, வின்ஸ்டனுக்கு கையெல்லாம் முடியாக இருந்ததைப் பார்த்த ஒரு சின்னப் பையன், அவருடைய கையைத் தடவிப்பார்த்துவிட்டு, “உங்களோட இறகுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொன்னான். கைகளில் அவ்வளவு முடியோடு அதுவரை அவன் யாரையும் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். அதனால், அதைப் பற்றி என்ன சொல்வதென்றுகூட அவனுக்குத் தெரியவில்லை.
மக்களுடைய ஏழ்மை நிலையையும் அவர்களுடைய கஷ்டமான வாழ்க்கையையும் பார்த்து நாங்கள் ரொம்ப வேதனைப்பட்டோம். அவர்களுடைய தீவுகள் அழகாக இருந்தன. ஆனால், போதுமான சுகாதார வசதியோ குடிநீரோ அவர்களுக்கு இருக்கவில்லை. இருந்தாலும், நம்முடைய சகோதரர்கள் அதைப் பற்றி ரொம்பக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, அதெல்லாம் சகஜம்தான்! தங்களுடைய குடும்பம்... யெகோவாவை வணங்குவதற்கென்று ஓர் இடம்... அவரை வணங்குகிற பாக்கியம்... இதையெல்லாம் நினைத்து அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்துவதற்கும், வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வதற்கும் அவர்களுடைய முன்மாதிரி எங்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தது.
சகோதரி பேம், சிலசமயங்களில், உங்களுக்குப் பழக்கமே இல்லாத ஒரு புதிய சூழலில், தண்ணீர் எடுக்கவும் சமையல் செய்யவும் வேண்டியிருந்தது, இல்லையா? அப்போதெல்லாம் என்ன செய்தீர்கள்?
டோங்காவில், பேம் துணிகளைத் துவைத்துக்கொண்டிருக்கிறார்
என்னுடைய அப்பாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிரயோஜனமான நிறைய விஷயங்களை அவர் சொல்லிக்கொடுத்திருந்தார். திறந்தவெளியில் நெருப்பு மூட்டி எப்படிச் சமைப்பது என்றும், கொஞ்சம் பொருள்களை வைத்தே எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்றும் சொல்லிக்கொடுத்திருந்தார். நாங்கள் ஒரு தடவை கிரிபடிக்கு போயிருந்தபோது, ஒரு சின்ன கூரைவீட்டில் தங்கினோம். அந்த வீட்டில், பவளப் பாறைகளிலிருந்து எடுக்கப்பட்ட கப்பிகளை வைத்து தளம் போட்டிருந்தார்கள். மூங்கில் சுவர்கள்தான் அந்த வீட்டில் இருந்தன. எளிய உணவைத் தயாரிப்பதற்காக, தளத்தில் ஒரு குழியைத் தோண்டி, அதற்குள் தென்னை மட்டைகளை வைத்து நெருப்பு மூட்டுவேன். தண்ணீர் எடுப்பதற்காக, உள்ளூர் பெண்களோடு சேர்ந்து கிணற்றுக்குப் பக்கத்தில் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். ஆறு அடி நீளத்தில் இருந்த ஒரு கம்பைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து அவர்கள் தண்ணீர் எடுப்பார்கள். அந்தக் கம்பின் கடைசியில் மெல்லிய ஒரு கயிற்றைக் கட்டியிருப்பார்கள். அந்தக் கம்பு, பார்ப்பதற்கு மீன் பிடிக்கும் தூண்டிலைப் போல் இருக்கும். ஆனால், கயிற்றின் நுனியில் கொக்கிக்குப் பதிலாக ஒரு டப்பாவைக் கட்டியிருப்பார்கள். ஒவ்வொருவரும் வரிசையாக வந்து கிணற்றுக்குள் டப்பாவை விடுவார்கள்; சரியான சமயம் பார்த்து சுண்டியிழுப்பார்கள். அந்த டப்பா ஒரு பக்கமாக சாய்ந்தவுடன், அதற்குள் தண்ணீர் நிரம்பிவிடும். இப்படி தண்ணீர் எடுப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டம் இல்லை என்று நான் நினைத்தேன். ஆனால், அது ரொம்பவே கஷ்டம் என்று பிறகுதான் புரிந்தது. நான் நிறைய தடவை டப்பாவைத் தண்ணீருக்குள் விடுவேன். அந்த டப்பா தண்ணீர்மேல் பட்டு வெறுமனே மிதந்துகொண்டுதான் இருக்கும்! இதைப் பார்த்து எல்லாரும் சிரிப்பார்கள். சிரிப்பு சத்தம் அடங்கியவுடன், யாராவது ஒரு பெண் எனக்கு உதவி செய்வாள். அங்கிருந்த மக்கள் ரொம்ப உதவியாக இருந்தார்கள்; அன்பாக நடந்துகொண்டார்கள்.
தீவுகளில் உங்களுக்குக் கிடைத்த நியமிப்பை நீங்கள் இரண்டு பேரும் சந்தோஷமாகச் செய்தீர்கள், இல்லையா? உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத சில அனுபவங்களைச் சொல்ல முடியுமா?
வின்ஸ்டன்: சில பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ள, கொஞ்சக் காலம் எடுத்தது. உதாரணத்துக்கு, சகோதர சகோதரிகள் எங்களுக்கு உணவு கொடுக்கும்போது, அவர்களிடம் இருக்கிற எல்லாவற்றையும் கொடுத்துவிடுவார்கள். நாங்கள் சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கும் கொஞ்சம் வைக்க வேண்டும் என்பது முதலில் எங்களுக்குத் தெரியவில்லை. அதனால், எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடுவோம். ஆனால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டபோது, அவர்களுக்கும் உணவை மீதி வைத்தோம். நாங்கள் தெரியாமல் சில தவறுகளைச் செய்தபோதிலும், சகோதரர்கள் எங்களைப் புரிந்து நடந்துகொண்டார்கள். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வட்டாரச் சந்திப்பில் எங்களைப் பார்த்தது, அவர்களுக்கு ரொம்பச் சந்தோஷத்தைத் தந்தது. தங்கள் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளைத் தவிர அவர்கள் வேறு சகோதர சகோதரிகளைப் பார்க்கிறார்கள் என்றால், அது எங்களைத்தான்!
புது தீவில், ஓர் ஊழியத் தொகுதியை வெளி ஊழியத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்
எங்களுடைய சந்திப்புகள் அங்கே இருந்த மக்களுக்கு அருமையான சாட்சியாக அமைந்தது. நம்முடைய சகோதரர்கள், தாங்களாகவே ஒரு புதிய மதத்தை ஆரம்பித்திருப்பதாக கிராமத்தில் இருந்த நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால், வெளிநாட்டைச் சேர்ந்த ஓர் ஊழியரும், அவருடைய மனைவியும் உள்ளூர் சகோதர சகோதரிகளைச் சந்திப்பதற்காக வந்ததை அவர்கள் பார்த்தபோது, தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். அது அவர்களை ரொம்பவே கவர்ந்தது!
பேம்: கிரிபடியில் நடந்த ஓர் அருமையான அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தத் தீவைச் சேர்ந்த ஒரு சபையில், சகோதர சகோதரிகள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். ஸ்னிக்கி மட்டிரா என்ற ஒரே ஒரு மூப்பர்தான் இருந்தார். எங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக, அவரால் முடிந்ததையெல்லாம் செய்தார். ஒருநாள், ஒரே ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்த கூடையைக் காட்டி, “இது உங்களுக்குத்தான்” என்று சொன்னார். அப்போதெல்லாம் கோழி முட்டை கிடைப்பது பெரிய விஷயமாக இருந்தது! தாராள குணத்தோடு அவர் செய்த அந்தச் சின்ன காரியம் எங்கள் மனதைத் தொட்டது.
சகோதரி பேம், சில வருஷங்களுக்குப் பிறகு உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது, இல்லையா? அந்த வேதனையிலிருந்து எப்படி மீண்டுவந்தீர்கள்?
வின்ஸ்டனும் நானும் தென் பசிபிக்கில் இருந்தபோது, 1973-ல் நான் கர்ப்பமானேன். அதனால், ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிப் போக முடிவெடுத்தோம். அங்கே போய் நான்கு மாதங்களுக்குப் பிறகு, எங்கள் குழந்தையைக் கருவிலேயே பறிகொடுத்தோம். நான் ரொம்பவே மனமுடைந்து போனேன்; வின்ஸ்டனும் ரொம்பவே வேதனைப்பட்டார். காலப்போக்கில் என்னுடைய வேதனை ஓரளவு குறைந்தது. ஆனால், ஏப்ரல் 15, 2009 காவற்கோபுரம் வரும்வரைக்கும் அந்த வலி முழுமையாகப் போகவில்லை. அந்தக் காவற்கோபுரத்தில் வந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியில், “தாயின் வயிற்றிலுள்ள ஒரு குழந்தை செத்துவிட்டால் அதற்கு உயிர்த்தெழுதல் உண்டா?” என்ற கேள்வி இருந்தது. இந்த விஷயம் யெகோவாவின் கையில் இருக்கிறது என்றும், அவர் எப்போதுமே சரியானதைத்தான் செய்வார் என்றும் அந்தக் கட்டுரை எங்களுக்கு உறுதியளித்தது. “பிசாசின் செயல்களை ஒழிப்பதற்காக” தன்னுடைய மகனை வழிநடத்துவதன் மூலம், இந்தப் பொல்லாத உலகத்தில் நாங்கள் அனுபவித்த வேதனைகளுக்கு அவர் முடிவு கட்டுவார். (1 யோ. 3:8) யெகோவாவின் மக்களாக, எங்களிடம் இருக்கும் ‘முத்து’ எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை இன்னும் அதிகமாக உணரவும் அந்தக் கட்டுரை உதவியது. எதிர்கால நம்பிக்கை மட்டும் இல்லை என்றால், நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?
குழந்தையின் இழப்புக்குப் பிறகு, மறுபடியும் முழுநேர சேவையை ஆரம்பித்தோம். ஆஸ்திரேலியா பெத்தேலில் சில மாதங்கள் சேவை செய்தோம். பிறகு, வட்டாரச் சேவையை மறுபடியும் ஆரம்பித்தோம். நான்கு வருஷங்கள் நியூ சௌத் வேல்ஸின் நாட்டுப்புறப் பகுதிகளிலும் சிட்னியிலும் சேவை செய்தோம். பிறகு, 1981-ல் ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்தில் சேவை செய்வதற்கான அழைப்பு வந்தது. அந்தச் சமயத்தில், இந்தக் கிளை அலுவலகம் அந்தப் பெயரில்தான் அழைக்கப்பட்டது. அன்றுமுதல் இங்கேதான் இருக்கிறோம்.
சகோதரர் வின்ஸ்டன், ஆஸ்திரேலிசியா கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக சேவை செய்வதற்கு, தென் பசிபிக் தீவுகளில் கிடைத்த அனுபவம் உதவியாக இருக்கிறதா?
கண்டிப்பாக! நிறைய விதங்களில் உதவுகிறது! முன்பு, அமெரிக்கன் சமோவா மற்றும் சமோவா தீவுகள், ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் இருந்தது. பிறகு, நியுசிலாந்து கிளை அலுவலகம், ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்தோடு சேர்க்கப்பட்டது. இப்போது, ஆஸ்திரேலிசியா கிளை அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் ஆஸ்திரேலியாவும், அமெரிக்கன் சமோவா மற்றும் சமோவா, குக் தீவுகள், நியுசிலாந்து, நியூ தீவு, தைமூர்-லெஷ்டே, டோகிலுவா, டோங்கா போன்ற தீவுகளும் இருக்கின்றன. கிளை அலுவலகப் பிரதிநிதியாக, இவற்றில் பல தீவுகளைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அன்று அந்தத் தீவுகளிலிருந்த உண்மையுள்ள சகோதர சகோதரிகளோடு சேர்ந்து சேவை செய்தது, இன்று கிளை அலுவலகத்திலிருந்து அவர்களுக்குச் சேவை செய்ய எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது.
வின்ஸ்டன் மற்றும் பேம், ஆஸ்திரேலிசியா கிளை அலுவலகத்தில்
எங்கள் அனுபவத்திலிருந்து நாங்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டோம். கடைசியாக, பேமும் நானும் அதைச் சொல்ல ஆசைப்படுகிறோம். பெரியவர்கள் மட்டும்தான் கடவுளைத் தேடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. இளைஞர்களும்கூட அந்த ‘விலை உயர்ந்த முத்தை’ தேடிக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆர்வம் இல்லை என்றால்கூட அவர்கள் அப்படித் தேட ஆசைப்படுகிறார்கள். (2 ரா. 5:2, 3; 2 நா. 34:1-3) இளைஞர்களும் சரி, பெரியவர்களும் சரி, எல்லாரும் வாழ்வு பெற வேண்டும் என்பதுதான் அன்புக் கடவுளான யெகோவாவின் ஆசை.
கிட்டத்தட்ட 50 வருஷங்களுக்கு முன்பு பேமும் நானும் கடவுளைத் தேட ஆரம்பித்தபோது, இப்படிப்பட்ட ஒரு முத்து எங்களுக்குக் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியம், உண்மையிலேயே விலை மதிக்க முடியாத ஒரு முத்து! அதைப் பத்திரமாக வைத்துக்கொள்வதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.