படிப்புக் கட்டுரை 25
வேதனையில் தவிக்கும்போது யெகோவாவை நம்பியிருங்கள்
“நான் ரொம்ப வேதனையில் இருக்கிறேன்.”—1 சா. 1:15.
பாட்டு 91 என் தகப்பன், என் தேவன், என் தோழன்!
இந்தக் கட்டுரையில்...a
1. இயேசு கொடுத்த எச்சரிப்புக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
‘வாழ்க்கைக் கவலைகளால் உங்கள் இதயம் பாரமடையாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.’ அதாவது, வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்ற கவலைகளால் அல்லது அன்றாடக் கவலைகளால் உங்கள் இதயம் பாரமடையாதபடி எச்சரிக்கையாக இருங்கள்! கடைசி நாட்களைப் பற்றிய தன்னுடைய தீர்க்கதரிசனத்தில் இயேசு சொன்ன வார்த்தைகள்தான் இவை! (லூக். 21:34) இந்த எச்சரிப்புக்கு நாம் கண்டிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் அனுபவிக்கிற வேதனைகளை இன்று நாமும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
2. நம்முடைய சகோதர சகோதரிகள் எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிக்கிறார்கள்?
2 சிலசமயங்களில், வேதனையைத் தருகிற ஏகப்பட்ட பிரச்சினைகள் ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கலாம். சிலருடைய உதாரணத்தைக் கவனியுங்கள். ஜான்b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற சகோதரர், மல்ட்டிப்பிள் ஸ்க்லரோஸிஸ் (multiple sclerosis) என்ற வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். அதோடு, 19 வருஷங்கள் அவரோடு குடும்பம் நடத்திய அவருடைய மனைவி அவரைவிட்டுப் போய்விட்டார். பிறகு, அவருடைய இரண்டு மகள்களும் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிட்டார்கள். அடுத்ததாக, எட்வின்-லிடியா தம்பதியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர்களுக்கு வேறுவிதமான கஷ்டங்கள் வந்தன. அவர்கள் இரண்டு பேருக்குமே வேலை பறிபோய்விட்டது. அவர்களுடைய வீட்டை விட்டுவிட்டு வேறொரு சின்ன வீட்டுக்குக் குடிமாறிப்போக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, உயிருக்கே உலைவைக்கிற ஒரு விதமான இதய நோய் லிடியாவுக்கு இருப்பது தெரியவந்தது. நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்குமளவுக்கு அவருக்கு இன்னொரு வியாதியும் வந்தது.
3. பிலிப்பியர் 4:6, 7-ன்படி, எதில் நாம் உறுதியாக இருக்கலாம்?
3 நம்மைப் படைத்தவரும் நம்முடைய அன்பு அப்பாவுமாகிய யெகோவா, வேதனைகள் எந்தளவுக்கு நம்மைப் பாதிக்கின்றன என்பதை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். நம்முடைய கஷ்டங்களைச் சமாளிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய அவர் ஆசைப்படுகிறார். (பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய ஊழியர்கள் பட்ட கஷ்டங்களை விளக்குகிற ஏராளமான பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. வேதனையான அந்தச் சூழ்நிலைகளைச் சமாளிக்க யெகோவா அவர்களுக்கு எப்படி உதவினார் என்றும் அந்தப் பதிவுகள் சொல்கின்றன. இப்போது, சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
“நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் [எலியாவுக்கும்] இருந்தன”
4. எப்படிப்பட்ட கஷ்டங்களை எலியா அனுபவித்தார், யெகோவாவைப் பற்றி அவர் எப்படி உணர்ந்தார்?
4 கஷ்டமான ஒரு காலகட்டத்தில் எலியா யெகோவாவுக்குச் சேவை செய்தார். பெரிய பெரிய பிரச்சினைகளையும் அவர் அனுபவித்தார். இஸ்ரவேலை ஆட்சி செய்த உண்மையில்லாத ராஜாக்களில் ஒருவரான ஆகாபும், பாகாலைக் கும்பிட்ட பொல்லாத ராணியான அவருடைய மனைவி யேசபேலும், தேசம் முழுவதும் பாகால் வணக்கத்தைப் பரப்பினார்கள். யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் நிறைய பேரை கொலை செய்தார்கள். ஆனால், எலியா எப்படியோ உயிர் தப்பினார்! யெகோவாவின் மேல் நம்பிக்கை வைத்ததன் மூலம் கடுமையான பஞ்சத்தையும் அவர் சமாளித்தார். (1 ரா. 17:2-4, 14-16) அதோடு, பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கும் பாகாலின் பக்தர்களுக்கும் எதிராகச் சவால்விட்டபோது, அவர் யெகோவாவை நம்பியிருந்தார். யெகோவாவை வணங்கும்படி இஸ்ரவேலர்களை ஊக்கப்படுத்தினார். (1 ரா. 18:21-24, 36-38) கஷ்டமான காலகட்டத்தில் யெகோவா எப்படியெல்லாம் தனக்கு ஆதரவாக இருந்தார் என்பதை எலியா நிறைய சமயங்களில் உணர்ந்திருக்கிறார்.
மறுபடியும் பலம் பெற எலியாவுக்கு உதவுவதற்காக, யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பினார் (பாராக்கள் 5-6)c
5-6. ஒன்று ராஜாக்கள் 19:1-4-ன்படி, எலியா எப்படி உணர்ந்தார், எலியாமீது தனக்கு இருந்த அன்பை யெகோவா எப்படிக் காட்டினார்?
5 ஒன்று ராஜாக்கள் 19:1-4-ஐ வாசியுங்கள். யேசபேல் ராணி தனக்குக் கொலை மிரட்டல் விட்டபோது எலியா பயந்துவிட்டார். அதனால், பெயெர்-செபாவுக்கு ஓடிப்போனார். “தான் சாக வேண்டுமென்று” வேண்டிக்கொள்ளும் அளவுக்கு அவர் நொந்துபோயிருந்தார். அவர் ஏன் அப்படி உணர்ந்தார்? அவரும் “நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன.” (யாக். 5:17) அவருக்கு இருந்த வேதனையாலும் உடல் களைப்பாலும் அவர் அப்படித் துவண்டுபோயிருக்கலாம். மக்கள் யெகோவாவை வணங்க வேண்டும் என்பதற்காக தான் எடுத்த முயற்சியெல்லாம் வீணாகிவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம். இஸ்ரவேல் தேசத்தின் நிலைமை முன்னேறவே இல்லை என்பதாகவும், தான் மட்டும்தான் யெகோவாவை இன்னும் வணங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் நினைத்திருக்கலாம். (1 ரா. 18:3, 4, 13; 19:10, 14) யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த இந்தத் தீர்க்கதரிசி இப்படியெல்லாம் நினைத்தது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அவருடைய உணர்ச்சிகளை யெகோவா புரிந்துகொண்டார்.
6 தன்னுடைய உணர்ச்சிகளை எலியா கொட்டியபோது, யெகோவா அவரைத் திட்டவில்லை. அதற்குப் பதிலாக, மறுபடியும் பலம்பெற அவருக்கு உதவினார். (1 ரா. 19:5-7) பிறகு, எலியாவின் யோசிக்கும் விதத்தைச் சரி செய்ய, தன்னிடம் இருக்கிற பிரமிக்க வைக்கும் வல்லமையைக் காட்டினார். அதோடு, பாகாலைக் கும்பிடாத 7,000 பேர் இன்னும் இஸ்ரவேலில் இருப்பதாகச் சொன்னார். (1 ரா. 19:11-18) இப்படி, எலியாமீது தனக்கு இருந்த அன்பை யெகோவா காட்டினார்.
யெகோவா நமக்கு எப்படி உதவுவார்?
7. எலியாவுக்கு யெகோவா உதவியதைப் பார்க்கும்போது நமக்கு என்ன நம்பிக்கை பிறக்கிறது?
7 வேதனையான ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், எலியாவின் உணர்ச்சிகளை யெகோவா புரிந்துகொண்டார் என்பதைத் தெரிந்துகொள்வது உங்களுக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கும். உணர்ச்சி ரீதியில் நாம் அனுபவிக்கும் வேதனைகளையும் யெகோவா நிச்சயம் புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையை இது தருகிறது. நம்மால் எது முடியும், எது முடியாது என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதோடு, நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி உணருகிறோம் என்பதுகூட அவருக்குத் தெரியும். (சங். 103:14; 139:3, 4) எலியாவைப் போல் நாமும் யெகோவாவையே நம்பியிருந்தால், வேதனையை உண்டாக்குகிற பிரச்சினைகளைச் சமாளிக்க அவர் நிச்சயம் உதவுவார்.—சங். 55:22.
8. வேதனையைச் சமாளிக்க யெகோவா எப்படி உங்களுக்கு உதவுவார்?
8 வேதனையில் இருக்கும்போது, ‘என்னோட சூழ்நிலை மாறவே மாறாது, இப்படியேதான் இருக்கும்’ என்று நினைத்து நீங்கள் சோர்ந்துவிடலாம். அப்படிப்பட்ட சமயங்களில், யெகோவா உங்களுக்கு உதவுவார் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய பிரச்சினைகள் என்ன... நீங்கள் எப்படி உணருகிறீர்கள்... என்பதைத் தன்னிடம் சொல்லும்படி அவர் கேட்கிறார். ‘யெகோவாவே, தயவு செஞ்சு எனக்கு உதவி செய்யுங்க’ என்று நீங்கள் கெஞ்சிக் கேட்கும்போது, அவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார். (சங். 5:3; 1 பே. 5:7) அதனால், உங்கள் பிரச்சினைகளைப் பற்றி அவரிடம் அடிக்கடி சொல்லுங்கள். எலியாவிடம் நேரடியாகப் பேசியதைப் போல அவர் உங்களிடம் பேசமாட்டார் என்பது உண்மைதான். ஆனால், தன்னுடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமும் தன்னுடைய அமைப்பின் மூலமும் அவர் உங்களிடம் பேசுவார். பைபிளில் இருக்கும் பதிவுகளை வாசிக்கும்போது, உங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கிடைக்கும். அதுமட்டுமல்ல, சகோதர சகோதரிகளாலும் உங்களை உற்சாகப்படுத்த முடியும்.—ரோ. 15:4; எபி. 10:24, 25.
9. நம்பிக்கைக்குரிய ஒரு நண்பர் உங்களுக்கு எப்படி உதவியாக இருப்பார்?
9 எலியா செய்துகொண்டிருந்த வேலையை எலிசாவுக்குப் பகிர்ந்துகொடுக்கும்படி யெகோவா சொன்னார். இதன் மூலம், எலியாவுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். எலியா சோர்வாக இருந்தபோதெல்லாம் எலிசா அவருக்கு நிச்சயம் பக்கபலமாக இருந்திருப்பார்! அதேபோல், நாம் எப்படி உணருகிறோம் என்பதை நம்பிக்கைக்குரிய ஒரு நண்பரிடம் சொல்லும்போது, நம்முடைய மனவேதனையைச் சமாளிக்க அந்த நண்பர் நமக்கு உதவுவார். (2 ரா. 2:2; நீதி. 17:17) உங்கள் பிரச்சினைகளையும் உணர்ச்சிகளையும் மனம்திறந்து சொல்வதற்கு நம்பிக்கைக்குரிய ஒரு நண்பர் உங்களுக்கு இல்லை என்றால் என்ன செய்வது? உங்களுக்குப் பக்கபலமாக இருப்பதற்கு, முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவரைக் கண்டுபிடிக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள்.
10. எலியாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் நமக்கு எப்படி நம்பிக்கையைத் தருகின்றன, ஏசாயா 40:28, 29-ல் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதி நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?
10 வேதனையைச் சமாளிக்கவும், பல வருஷங்கள் தனக்கு உண்மையாகச் சேவை செய்யவும் எலியாவுக்கு யெகோவா உதவினார். எலியாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன. சிலசமயங்களில், நம் உடல்பலத்தையும் மனபலத்தையும் உறிஞ்சிவிடுமளவுக்கு நமக்கு அடுத்தடுத்து வேதனைகள் வரலாம். இருந்தாலும், நாம் யெகோவாவை நம்பியிருந்தால், அவருக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கான பலத்தை அவர் தருவார்.—ஏசாயா 40:28, 29-ஐ வாசியுங்கள்.
அன்னாளும் தாவீதும் மற்றொரு சங்கீதக்காரரும் யெகோவாவை நம்பியிருந்தார்கள்
11-13. தாங்கள் அனுபவித்த வேதனைகளால் கடவுளுடைய உண்மை ஊழியர்கள் மூன்று பேர் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்?
11 பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற இன்னும் நிறைய பேர், தாங்க முடியாத வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, அன்னாளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அதனால், அவளுடைய கணவரின் இன்னொரு மனைவி, ஈவிரக்கமில்லாமல் தொடர்ந்து அவளைக் குத்திக்காட்டிக்கொண்டே இருந்தாள். இந்த வேதனைகளையெல்லாம் அவள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. (1 சா. 1:2, 6) அன்னாள் ரொம்பவே வேதனையில் மூழ்கியிருந்ததால், அவள் அழுதுகொண்டே இருந்தாள்; சாப்பிடவே இல்லை.—1 சா. 1:7, 10.
12 சிலசமயங்களில், தாவீது ராஜாவும் வேதனையில் மூழ்கியிருந்தார். அவர் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவர் நிறைய தவறுகளைச் செய்திருந்ததால், குற்ற உணர்வு அவரை வாட்டியெடுத்தது. (சங். 40:12) அவருடைய அன்பு மகன் அப்சலோம், அவருக்கு எதிராகக் கலகம் செய்தான். கடைசியில் அவன் கொல்லப்பட்டான். (2 சா. 15:13, 14; 18:33) அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவருக்குத் துரோகம் செய்தார். (2 சா. 16:23–17:2; சங். 55:12-14) தாவீது ரொம்பவே நொந்துபோயிருந்தார் என்பதை அவர் எழுதிய நிறைய சங்கீதங்கள் காட்டுகின்றன. அதேசமயத்தில், யெகோவாமேல் அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் அவை காட்டுகின்றன.—சங். 38:5-10; 94:17-19.
யெகோவாவுக்கு மறுபடியும் சந்தோஷமாகச் சேவை செய்ய சங்கீதக்காரருக்கு எது உதவியது? (பாராக்கள் 13-15)d
13 பொல்லாத மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்து மற்றொரு சங்கீதக்காரர் பொறாமைப்பட ஆரம்பித்தார். அவர் ஒருவேளை ஆசாப் என்ற லேவியரின் வம்சத்தில் வந்திருக்கலாம். அந்தச் சங்கீதக்காரர், ‘கடவுளுடைய பரிசுத்த ஆலயத்தில்’ சேவை செய்தார். தன்னுடைய சந்தோஷம் பறிபோகுமளவுக்கு அவர் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தார்; அவருக்குத் திருப்தியும் கிடைக்கவில்லை. கடவுளுடைய சேவையில் தனக்கு அவ்வளவாக ஆசீர்வாதங்கள் கிடைப்பதில்லை என்றுகூட அவர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.—சங். 73:2-5, 7, 12-14, 16, 17, 21.
14-15. உதவிக்காக யெகோவாவிடம் போவதைப் பற்றி இந்த மூன்று பைபிள் உதாரணங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
14 இந்த மூன்று பேருமே, உதவிக்காக யெகோவாவை நம்பியிருந்தார்கள். தங்கள் மனதிலிருந்த கவலைகளை எல்லாம் அவரிடம் கொட்டினார்கள். தங்களுடைய வேதனைக்கு என்ன காரணம் என்பதைப் பற்றி அவரிடம் மனம்திறந்து சொன்னார்கள். அதோடு, யெகோவாவை வழிபடும் இடத்துக்குத் தொடர்ந்து போனார்கள்.—1 சா. 1:9, 10; சங். 55:22; 73:17; 122:1.
15 அவர்கள் ஒவ்வொருவருக்கும் யெகோவா கரிசனையோடு பதிலளித்தார். அன்னாளுக்கு மனசமாதானம் கிடைத்தது. (1 சா. 1:18) தாவீது இப்படி எழுதினார்: “நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும். ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.” (சங். 34:19) மற்றொரு சங்கீதக்காரரோ, யெகோவா தன்னுடைய ‘வலது கையைப் பிடித்திருப்பதாகவும்’ தனக்கு அன்போடு ஆலோசனை கொடுப்பதாகவும் உணர்ந்தார். “கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது. உன்னதப் பேரரசரான யெகோவாவிடம் நான் அடைக்கலம் புகுந்துவிட்டேன்” என்று அவர் பாடினார். (சங். 73:23, 24, 28) இவர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? சிலசமயங்களில், வேதனையை உண்டாக்குகிற, தாங்க முடியாத பிரச்சினைகளை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், நம்மால் நிச்சயம் அதைச் சமாளிக்க முடியும்! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவா எப்படியெல்லாம் மற்றவர்களுக்கு உதவியிருக்கிறார் என்று யோசித்துப்பார்க்க வேண்டும், ஜெபம் செய்ய வேண்டும், அவர் சொல்கிற விஷயங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.—சங். 143:1, 4-8.
யெகோவாவை நம்புங்கள், வெற்றிபெறுங்கள்
ஒரு சகோதரி, தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று முதலில் நினைக்கிறார். ஆனால், மற்றவர்களுக்கு உதவ ஆரம்பித்த பிறகு அவருடைய நிலைமை மாறுகிறது (பாராக்கள் 16-17)
16-17. (அ) நம்மை நாமே ஏன் தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது? (ஆ) நாம் எப்படி மறுபடியும் பலம் பெறலாம்?
16 இந்த மூன்று பேரிடமிருந்து இன்னொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். யெகோவாவிடமிருந்தும் அவருடைய மக்களிடமிருந்தும் நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளக் கூடாது என்ற பாடம்தான் அது! (நீதி. 18:1) நான்ஸி என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். அவருடைய கணவர் அவரை விட்டுவிட்டுப் போய்விட்டதால், அவர் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தார். “நிறைய நாட்களா யாரையும் பார்க்கவும் பிடிக்கல, பேசவும் பிடிக்கல. ஆனா, நான் மத்தவங்களவிட்டு ஒதுங்க ஒதுங்க என்னோட சோகம்தான் அதிகமாச்சு” என்கிறார் நான்ஸி. ஆனால், கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தபோது, அவருடைய நிலைமை மாறியது. “மத்தவங்க படுற வேதனைகள பத்தி அவங்க என்கிட்ட சொன்னப்போ, நான் அத கவனமா கேட்டேன். அவங்களோட இடத்துல என்ன வெச்சு பார்த்ததுனால, என்னை பத்தியும் என்னோட பிரச்சினைகள பத்தியும் அளவுக்கு அதிகமா யோசிக்கறத விட்டுட்டேன்” என்று அவர் சொல்கிறார்.
17 இழந்துபோன பலத்தை, சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம். கூட்டங்களுக்குப் போகும்போது, நமக்கு ‘உதவி செய்யவும் ஆறுதல் தரவும்’ யெகோவாவுக்கு வாய்ப்பளிக்கிறோம். (சங். 86:17) சபைக் கூட்டங்களில், தன்னுடைய சக்தியையும் தன்னுடைய வார்த்தையையும் தன்னுடைய மக்களையும் பயன்படுத்தி யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். “ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற” கூட்டங்கள் உதவுகின்றன. (ரோ. 1:11, 12) சோஃபியா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் தொடர்ந்து சகிச்சிருக்கிறதுக்கு யெகோவாவும் நம்ம சகோதர சகோதரிகளும் உதவி செஞ்சாங்க. சபைக் கூட்டங்கள நான் ரொம்ப முக்கியமானதா நினைச்சேன். ஊழியத்துலயும் சபை காரியங்கள்லயும் நான் எந்தளவு அதிகமா ஈடுபடுறேனோ, அந்தளவு என்னோட வேதனைகளையும் கவலைகளையும் சமாளிக்க முடியுது.”
18. நாம் சோர்ந்துபோகும் சமயங்களில் யெகோவாவால் நமக்கு எதைக் கொடுக்க முடியும்?
18 சோர்ந்துபோயிருக்கும் சமயங்களில் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. அதாவது, எதிர்காலத்தில் நம்முடைய எல்லா வேதனைகளையும் நிரந்தரமாகத் தீர்க்கப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுக்கிறார். அதுமட்டுல்ல, இன்று நாம் படுகிற வேதனைகளைச் சமாளிக்க உதவுவதாகவும் அவர் சொல்கிறார். சோர்ந்துபோகிற சமயங்களும் நம்பிக்கையில்லாமல் தவிக்கிற சமயங்களும் நம் வாழ்க்கையில் வரும்போது, அவற்றைச் சமாளிப்பதற்குத் தேவையான “ஆர்வத்தையும் வல்லமையையும்” அவர் கொடுக்கிறார்.—பிலி. 2:13.
19. ரோமர் 8:37-39-ல் என்ன வாக்குறுதி இருக்கிறது?
19 ரோமர் 8:37-39-ஐ வாசியுங்கள். கடவுளுடைய அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்ற உறுதியை அப்போஸ்தலன் பவுல் தருகிறார். வேதனையைச் சமாளிப்பதற்குப் போராடிக்கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நாம் எப்படி உதவலாம்? யெகோவாவைப் போலவே அவர்களுக்குக் கரிசனை காட்டுவதன் மூலமும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் உதவலாம். இதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
பாட்டு 68 வேதனையில் தவிக்கிறவரின் ஜெபம்
a அளவுக்கு அதிகமான வேதனையை அல்லது நீண்ட நாட்கள் நீடிக்கிற வேதனையை அனுபவித்தால், அது நம் உடலையும் உணர்ச்சிகளையும் பாதிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலைகளில், யெகோவா நமக்கு எப்படி உதவுவார்? வேதனையைச் சமாளிக்க எலியாவுக்கு யெகோவா எப்படி உதவினார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். யெகோவா தரும் உதவியைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி மற்ற பைபிள் உதாரணங்கள் என்ன காட்டுகின்றன என்றும் பார்ப்போம்.
b இந்தக் கட்டுரையில் இருக்கும் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
c படங்களின் விளக்கம்: தூங்கிக்கொண்டிருக்கிற எலியாவை யெகோவாவின் தூதர் மெதுவாகத் தட்டியெழுப்பி, ரொட்டியையும் தண்ணீரையும் தருகிறார்.
d படங்களின் விளக்கம்: ஆசாப்பின் வம்சத்தில் வந்த சங்கீதக்காரர் ஒருவர், சங்கீதங்களை எழுதுகிறார்; மற்ற லேவியர்களோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாடுகிறார்.