உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w19 ஜூன் பக். 20-25
  • வேதனையைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேதனையைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொறுமையாக இருங்கள்
  • கரிசனை காட்டுங்கள்
  • ஆறுதலாகப் பேசுங்கள்
  • கஷ்டங்களை சமாளிக்க விதவைகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • ‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ரூத்தும் நகோமியும்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • ஒருவருக்கொருவர் தொடர்ந்து மாறாத அன்பைக் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
w19 ஜூன் பக். 20-25

படிப்புக் கட்டுரை 26

வேதனையைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்

“நீங்கள் எல்லாரும் ஒரே சிந்தையோடு இருங்கள், அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் கரிசனையையும் மனத்தாழ்மையையும் காட்டுங்கள்.”—1 பே. 3:8.

பாட்டு 50 தேவன் தந்த ‘அன்பின் வரைபடம்’

இந்தக் கட்டுரையில்...a

1. நம்முடைய அன்புள்ள அப்பாவான யெகோவாவைப் போலவே நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

யெகோவா நம்மை நெஞ்சார நேசிக்கிறார்! (யோவா. 3:16) நம்முடைய அன்புள்ள அப்பாவான அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். அதனால், எல்லாரிடமும் “அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் கரிசனையையும்” காட்ட முயற்சி செய்கிறோம். குறிப்பாக, ‘நம்முடைய விசுவாசக் குடும்பத்தாரிடம்’ இந்தக் குணங்களைக் காட்ட முயற்சி செய்கிறோம். (1 பே. 3:8; கலா. 6:10) யெகோவாவை வணங்கும் நம் சகோதர சகோதரிகள் வேதனையை அனுபவிக்கும்போது, நாம் அவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறோம்.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராக ஆவதற்கு ஆசைப்படுகிற ஒவ்வொருவருக்கும் வேதனையான சூழ்நிலைகள் வரும். (மாற். 10:29, 30) இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க நமக்கு இன்னும் அதிகமான சோதனைகள் வரலாம். அப்படியென்றால், நாம் எப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்? இதைத் தெரிந்துகொள்ள லோத்து, யோபு மற்றும் நகோமி ஆகியவர்களைப் பற்றிய பதிவுகளை இப்போது பார்க்கலாம். நம் சகோதர சகோதரிகள் இன்று எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்றும், அவற்றைச் சமாளிக்க நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம் என்றும் பார்க்கலாம்.

பொறுமையாக இருங்கள்

3. இரண்டு பேதுரு 2:7, 8 சொல்கிறபடி, லோத்து எடுத்த மோசமான முடிவு என்ன, அது அவரை எதில் கொண்டுபோய்விட்டது?

3 லோத்துவைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒழுக்கக்கேட்டில் ரொம்பவே மூழ்கிக்கிடந்த சோதோம் மக்கள் மத்தியில் வாழ்வதென்று அவர் முடிவெடுத்தார். அது மோசமான முடிவாக இருந்தது! (2 பேதுரு 2:7, 8-ஐ வாசியுங்கள்.) சோதோம் செழிப்பான ஓர் ஊராக இருந்தபோதிலும், அங்கே குடிமாறிப் போனதால் லோத்து நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். (ஆதி. 13:8-13; 14:12) அந்த ஊரை அல்லது அந்த ஊரிலிருந்த சிலரை அவருடைய மனைவிக்கு ரொம்பப் பிடித்திருக்கலாம். அதனால், அவள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாள். அந்த ஊரை நெருப்பாலும் கந்தகத்தாலும் யெகோவா அழித்தபோது, அவளும் அழிந்துபோனாள். லோத்துவின் மகள்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்கள் யாருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தார்களோ, அவர்களும் அந்த ஊரிலேயே செத்துப்போனார்கள். தன்னுடைய வீட்டையும் சொத்துப்பத்துகளையும் லோத்து இழந்தார். எல்லாவற்றையும்விட வேதனையான விஷயம் என்னவென்றால், தன்னுடைய மனைவியையே அவர் இழந்தார்! (ஆதி. 19:12-14, 17, 26) இந்த வேதனையான காலகட்டத்தில், லோத்துவிடம் யெகோவா பொறுமை காட்டாமல் இருந்துவிட்டாரா? இல்லை!

லோத்துவையும் அவருடைய குடும்பத்தாரையும் தேவதூதர்கள் சோதோமை விட்டு வெளியே கூட்டிக்கொண்டு வருகிறார்கள்

லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்ற, யெகோவா கரிசனையோடு தேவதூதர்களை அனுப்பினார் (பாரா 4)

4. லோத்துவிடம் யெகோவா எப்படிப் பொறுமையோடு நடந்துகொண்டார்? (அட்டைப் படம்)

4 சோதோமில் வாழ்வதென்று லோத்து முடிவெடுத்தபோதும், அவரிடம் யெகோவா கரிசனையோடு நடந்துகொண்டார். எப்படி? அவரையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகத் தேவதூதர்களை யெகோவா அனுப்பினார். சோதோமைவிட்டுப் போகும்படி தேவதூதர்கள் அவருக்கு அவசர கட்டளை கொடுத்தார்கள். ஆனால், லோத்து “தயங்கிக்கொண்டே இருந்தார்.” அதனால், அவரும் அவருடைய குடும்பத்தாரும் தப்பிப்பதற்காக, தேவதூதர்கள் அவருடைய கையையும் அவருடைய குடும்பத்தாருடைய கையையும் பிடித்து சோதோமுக்கு வெளியில் கொண்டுபோய் விட வேண்டியிருந்தது. (ஆதி. 19:15, 16) பிறகு, மலைப்பகுதிக்குத் தப்பித்து ஓடும்படி லோத்துவிடம் தேவதூதர்கள் சொன்னார்கள். யெகோவா சொன்னபடி கேட்பதற்குப் பதிலாக, பக்கத்திலிருக்கும் ஓர் ஊருக்குப் போவதாக அவர் சொன்னார். (ஆதி. 19:17-20) அவர் சொன்னதை எல்லாம் யெகோவா பொறுமையோடு கேட்டார், அங்கே போவதற்கு அவரை அனுமதித்தார். பிற்பாடு என்ன நடந்தது? அங்கே வாழ்வதற்கு அவர் பயந்ததால், முதலில் யெகோவா போகச் சொன்ன அந்த மலைப்பகுதிக்கே போனார். (ஆதி. 19:30) யெகோவா லோத்துவிடம் அளவுகடந்த பொறுமையைக் காட்டியிருக்கிறார், இல்லையா? அப்படியென்றால், நாம் எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம்?

5-6. கடவுளைப் போலவே நடந்துகொள்ளும் விஷயத்தில், 1 தெசலோனிக்கேயர் 5:14 சொல்கிறபடி எப்படிச் செய்யலாம்?

5 லோத்துவைப் போலவே, நம்முடைய சகோதர சகோதரிகளில் யாராவது தவறான முடிவு எடுக்கலாம். அந்த முடிவால் மோசமான பிரச்சினைகளை அனுபவிக்கலாம். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் செய்த செயலுக்கான பலனைத்தான் அவர் அனுபவிக்கிறார் என்று சொல்வதற்கு நம் மனம் துடிக்கலாம். விதைத்ததை அவர் அறுவடை செய்கிறார் என்பது உண்மைதான். (கலா. 6:7) ஆனால் அவரிடம் அப்படிச் சொல்வதற்குப் பதிலாக, லோத்துவுக்கு யெகோவா உதவியதைப் போல் நாம் அவருக்கு உதவலாம். எப்படி?

6 லோத்துவை எச்சரிப்பதற்காக மட்டுமல்ல, சோதோமுக்கு வரப்போகிற அழிவிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காகவும் தேவதூதர்களை யெகோவா அனுப்பினார். அதேபோல், நம்முடைய சகோதரரோ சகோதரியோ தவறான பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது தெரியும்போது, நாம் அவரை எச்சரிக்க வேண்டும். அதேசமயத்தில், அவருக்கு உதவவும் வேண்டும். ஒருவேளை, தனக்குக் கிடைக்கிற பைபிள் அறிவுரைக்குக் கீழ்ப்படிய அவர் தாமதிக்கலாம். ஆனாலும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அந்த இரண்டு தேவதூதர்களைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். அந்தச் சகோதரரையோ சகோதரியையோ ஒதுக்கிவிடக் கூடாது. தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்; சொல்லிலும் செயலிலும் அதைச் செய்ய வேண்டும். (1 யோ. 3:18) ஒரு விதத்தில், அவருடைய கையைப் பிடித்து நாம் அவருக்கு உதவ வேண்டும். அதாவது, தனக்குக் கிடைத்த பைபிள் அறிவுரைகளின்படி அவர் செய்வதற்கு நாம் உதவ வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:14-ஐ வாசியுங்கள்.

7. லோத்துவை யெகோவா நடத்தியதைப் போல நாம் எப்படி மற்றவர்களை நடத்தலாம்?

7 யெகோவா நினைத்திருந்தால், லோத்துவின் குறைகள்மீதே கண்ணாயிருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி இருக்கவில்லை. லோத்துவை நீதிமான் என்று சொல்லும்படி அப்போஸ்தலன் பேதுருவை அவர் பிற்பாடு தூண்டினார். நம்முடைய தவறுகளை மட்டுமே பார்ப்பதற்குப் பதிலாக, அவற்றை அவர் மன்னிக்கிறார். இதை நினைக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! (சங். 130:3) லோத்துவை யெகோவா எப்படி நடத்தினாரோ, அதேபோல் நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? நம் சகோதர சகோதரிகளிடம் இருக்கும் நல்ல குணங்களை மட்டுமே பார்ப்பதன் மூலம் நாம் அப்படிச் செய்யலாம். அப்போது, அவர்களிடம் நாம் இன்னும் பொறுமையைக் காட்டுவோம். அப்படி நடந்துகொள்ளும்போது, நம்முடைய உதவியை ஏற்றுக்கொள்வது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும்.

கரிசனை காட்டுங்கள்

8. கரிசனை இருந்தால் நாம் என்ன செய்வோம்?

8 இப்போது, யோபுவைப் பற்றிப் பார்க்கலாம். லோத்துவைப் போல சில தவறான தீர்மானங்கள் எடுத்ததால் அவர் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளவில்லை. இருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் இடிபோல் தாக்கின. சொத்துப்பத்துகள், அந்தஸ்து, ஆரோக்கியம் ஆகியவற்றை அவர் இழந்தார். அதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், அவரும் அவருடைய மனைவியும் தங்களுடைய பிள்ளைகள் எல்லாரையும் பறிகொடுத்தார்கள். யோபுவின் போலி நண்பர்கள் மூன்று பேர், அவரைக் குற்றம்சாட்டினார்கள். யோபுவிடம் அவர்கள் கரிசனை இல்லாமல் நடந்துகொண்டதற்கு ஒரு காரணம் என்ன? அவருடைய சூழ்நிலையை அவர்கள் மேலோட்டமாகத்தான் பார்த்தார்கள்! அப்படிப் பார்த்ததால், தவறான முடிவுக்கு வந்தார்கள்; யோபுவை அநியாயமாக நியாயந்தீர்த்தார்கள். அவர்கள் செய்த தவறை நாம் எப்படிச் செய்யாமல் இருக்கலாம்? ஒரு நபரைப் பற்றிய முழு விவரமும் யெகோவாவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேதனையில் தவிக்கும் ஒருவர் சொல்கிற எல்லா விஷயங்களையும் நன்றாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். வெறுமனே கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள்; அவர்களுடைய வலியை உணர முயற்சி செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் நம்முடைய சகோதரரிடமோ சகோதரியிடமோ நம்மால் உண்மையிலேயே அனுதாபத்தோடு நடந்துகொள்ள முடியும்.

9. கரிசனை இருந்தால் நாம் என்ன செய்ய மாட்டோம், ஏன்?

9 நமக்குக் கரிசனை இருந்தால், மற்றவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல மாட்டோம். அப்படிச் சொல்கிற ஒருவர், சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில்லை. அதற்குப் பதிலாக, அதன் ஒற்றுமையைக் கெடுத்துவிடுகிறார். (நீதி. 20:19; ரோ. 14:19) அப்படிப்பட்டவர் அன்பாகப் பேசுவதில்லை; யோசிக்காமல் ஏதேதோ பேசிவிடுகிறார். அதனால், வேதனையில் இருப்பவரை அவருடைய வார்த்தைகள் இன்னும் காயப்படுத்திவிடுகின்றன. (நீதி. 12:18; எபே. 4:31, 32) ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பார்ப்பதும், அவர் படும் கஷ்டத்தைச் சமாளிக்க அவருக்கு எப்படி உதவலாம் என்று யோசிப்பதும் எவ்வளவு நல்லது!

ஒரு சகோதரர், வேதனையில் “ஏதேதோ” பேசுவதை ஒரு மூப்பர் பொறுமையாகக் கேட்கிறார். பிறகு, இரண்டு பேரும் சேர்ந்து நடந்துபோகிறார்கள்

ஒரு சகோதரரோ சகோதரியோ யோசிக்காமல் “ஏதேதோ” பேசும்போது, அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள். சரியான சமயம் பார்த்து அவர்களை ஆறுதல்படுத்துங்கள் (பாராக்கள் 10-11)c

10. யோபு 6:2, 3-ல் இருக்கிற வார்த்தைகள் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுக்கின்றன?

10 யோபு 6:2, 3-ஐ வாசியுங்கள். யோபுவும் சிலசமயங்களில் யோசிக்காமல் “ஏதேதோ” பேசினார். இருந்தாலும், தான் சொன்னது தவறு என்று பிற்பாடு ஒத்துக்கொண்டார். (யோபு 42:6) வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒருவர், யோபுவைப் போலவே ஏதேதோ பேசிவிடலாம். பிற்பாடு, அதை நினைத்து அவர் வருத்தப்படலாம். அப்படி ஒருவர் நம்மிடம் பேசினால் நாம் என்ன செய்ய வேண்டும்? அவர் மோசமானவர் என்று முத்திரை குத்துவதற்குப் பதிலாக, அவரைக் கரிசனையோடு நடத்த வேண்டும். வேதனைகளையும் கஷ்டங்களையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக யெகோவா நம்மைப் படைக்கவில்லை. அதனால், யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்யும் ஒருவர், பயங்கரமான வேதனையில் யோசிக்காமல் பேசிவிடலாம். அப்படிப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது! யெகோவாவைப் பற்றியோ நம்மைப் பற்றியோ அவர் தவறாகப் பேசினால்கூட, நாம் சட்டென்று கோபப்படவோ அவரை நியாயந்தீர்க்கவோ கூடாது.—நீதி. 19:11.

11. ஆலோசனை கொடுக்கும்போது மூப்பர்கள் எப்படி எலிகூவைப் போல் நடந்துகொள்ள வேண்டும்?

11 வேதனையைச் சமாளித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு சிலசமயங்களில் ஆலோசனை தேவைப்படலாம். (கலா. 6:1) இப்போது, எலிகூவைப் போல் மூப்பர்கள் நடந்துகொள்ள வேண்டும். யோபு சொன்னதையெல்லாம் எலிகூ ரொம்பவே அனுதாபத்தோடு கேட்டார். (யோபு 33:6, 7) யோபுவின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட பிறகுதான் அவர் ஆலோசனை கொடுத்தார். எலிகூவைப் போல் நடந்துகொள்ளும் மூப்பர்கள், வேதனையில் தவிப்பவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பார்கள்; அவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். இப்படி, அவர்களைப் புரிந்துகொண்ட பிறகு அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, அவர்களின் இதயத்தை மூப்பர்களால் தொட முடியும்.

ஆறுதலாகப் பேசுங்கள்

12. தன்னுடைய கணவரையும் இரண்டு மகன்களையும் இழந்தது நகோமியை எப்படிப் பாதித்தது?

12 இப்போது நகோமியைப் பற்றிப் பார்க்கலாம். அவள் யெகோவாவை மிகவும் நேசித்தாள். அவருக்கு உண்மையாக இருந்தாள். ஆனால், அவளுடைய கணவரும் இரண்டு மகன்களும் இறந்த பிறகு, அவள் தன் பெயரை “மாராள்” என்று மாற்றிக்கொள்ள விரும்பினாள். “கசப்பு” என்பதுதான் அதன் அர்த்தம்! (ரூத் 1:3, 5, 20, அடிக்குறிப்பு, 21) நகோமி வேதனையை அனுபவித்த சமயங்களில், அவளுடைய மருமகளான ரூத் அவள்கூடவே இருந்தாள். அவளுக்குத் தேவையான உதவியைச் செய்ததோடு அவளிடம் ஆறுதலாகவும் பேசினாள். தன்னுடைய அன்பையும் ஆதரவையும் எளிமையான, உண்மையான வார்த்தைகளின் மூலம் தெரியப்படுத்தினாள்.—ரூத் 1:16, 17.

13. துணையைப் பறிகொடுத்தவர்களுக்கு நம்முடைய ஆதரவு ஏன் தேவை?

13 துணையை இழந்து தவிக்கிற நம் சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய ஆதரவு தேவைப்படுகிறது. அருகருகே வளர்ந்திருக்கும் இரண்டு மரங்களைப் போன்றவர்கள்தான் தம்பதிகள்! வருஷங்கள் போகப் போக, இரண்டு மரங்களின் வேர்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துவிடுகின்றன. அதனால், ஒரு மரம் வேரோடு சாயும்போது இன்னொரு மரம் ரொம்பவே பாதிக்கப்படுகிறது. அதேபோல், மரணம் என்ற எதிரி ஒருவருடைய துணையின் உயிரைப் பறிக்கும்போது, அவர் ரொம்பக் காலத்துக்குத் துவண்டுபோகலாம். ஜான்சிb (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற சகோதரியின் விஷயத்தில் அதுதான் நடந்தது. அவருடைய கணவர் திடீரென்று இறந்துவிட்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “என்னோட வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு. என்னோட சக்தியெல்லாம் என்னைவிட்டு போயிட்ட மாதிரி இருந்துச்சு. என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட நான் இழந்துட்டேன். அவர்கிட்ட நான் எல்லாத்தையுமே சொல்வேன். என் சந்தோஷத்துலயும் துக்கத்துலயும் அவர் என்கூடவே இருந்தாரு. தோள் சாய ஒரு நல்ல தோழனா இருந்தாரு. ஆனா அவர் இறந்தப்போ, என்னோட பாதி உயிரே போன மாதிரி இருந்துச்சு.”

மனைவியை இழந்த ஒரு சகோதரர், தன்னுடைய மற்றும் தன்னுடைய மனைவியின் ஃபோட்டோக்களை ஒரு தம்பதி காட்டும்போது ஆறுதல் அடைகிறார்

துணையை இழந்தவர்களுக்கு நாம் எப்படி ஆதரவாக இருக்கலாம்? (பாராக்கள் 14-15)d

14-15. துணையை இழந்து தவிக்கும் ஒருவரை நாம் எப்படி ஆறுதல்படுத்தலாம்?

14 துணையைப் பறிகொடுத்த ஒருவரை நாம் ஆறுதல்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? முக்கியமான முதல் படி, அவரிடம் பேசுவது! அப்படிப் பேசுவது உங்களுக்குத் தர்மசங்கடமாக இருக்கலாம் அல்லது என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், பேசாமல் இருந்துவிடாதீர்கள்! ஜான்சி இப்படிச் சொல்கிறார்: “ஒருத்தர் இறந்துட்டா அது எல்லாருக்கும் கஷ்டமாதான் இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. தப்பா ஏதாவது சொல்லிடுவோமோனு நினைச்சு மத்தவங்க கவலைப்படலாம். ஆனா, எதுவுமே பேசாம இருக்கிறதவிட அது எவ்வளவோ பரவாயில்ல.” மனதை ரொம்பவே ஆழமாகத் தொடுகிற விதத்தில் நாம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் நினைக்க மாட்டார். “‘உங்க கணவர் இறந்ததை நினைக்குறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு’னு என்னோட நண்பர்கள் சொன்னாங்க. அதுவே எனக்கு போதுமானதா இருந்துச்சு. அதுக்கு நான் ரொம்ப நன்றியோட இருந்தேன்” என்று அவர் சொல்கிறார்.

15 வில்லியம் என்ற சகோதரரைப் பற்றி இப்போது பார்க்கலாம். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்துவிட்டார். “என் மனைவிய பத்தி மத்தவங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி பேசுறப்ப, அவ மேல மத்தவங்க அன்பும் மரியாதையும் வெச்சிருந்தாங்கனு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது. இப்படி மத்தவங்க கொடுத்த ஆதரவு எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. எனக்கு ரொம்ப ஆறுதலாவும் இருந்துச்சு. என்னோட மனைவி எனக்கு ஒரு பொக்கிஷம் மாதிரி! என் வாழ்க்கையில அவ ரொம்ப உறுதுணையா இருந்தா” என்று அவர் சொல்கிறார். கணவரைப் பறிகொடுத்த லில்லி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என்கூட சேர்ந்து மத்தவங்க ஜெபம் பண்றப்பவும், ஒண்ணு ரெண்டு வசனங்கள வாசிக்கிறப்பவும் எனக்கு ஆறுதலா இருக்கும். மத்தவங்க என் கணவர பத்தி பேசுறதும், என் கணவர பத்தி நான் பேசுறப்போ மத்தவங்க காது கொடுத்து கேட்குறதும் எனக்கு உதவியா இருக்கு.”

16. (அ) அன்பானவர்களை இழந்து தவிப்பவருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) யாக்கோபு 1:27 சொல்கிறபடி, நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?

16 கணவரை இழந்து தவித்த நகோமிக்கு ரூத் தொடர்ந்து ஆதரவாக இருந்தாள். அதேபோல், துணையை இழந்தவர்களுக்கு நாமும் தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும். மேலே சொல்லப்பட்ட ஜான்சி இப்படிச் சொல்கிறார்: “என்னோட கணவர் இறந்ததுக்கு அப்புறம் எனக்கு நிறைய உதவி கிடைச்சுது. ஆனா நாட்கள் போக போக எல்லாரும் அவங்கவங்க வேலையில மூழ்கிட்டாங்க. ஆனா, என்னோட வாழ்க்கை தலைகீழா மாறியிருந்துச்சு. துக்கத்துல இருக்குறவங்களுக்கு ரொம்ப மாசத்துக்கு, ஏன் ரொம்ப வருஷத்துக்குகூட ஆதரவு தேவைப்படும். இத மத்தவங்க புரிஞ்சிக்கிட்டாங்கனா, ரொம்ப உதவியா இருக்கும்.” எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பது உண்மைதான்! சிலரால் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கையை சீக்கிரத்தில் மாற்றிக்கொள்ள முடிகிறது. வேறு சிலரால் அப்படி முடிவதில்லை. அன்பானவரோடு சேர்ந்து முன்பு செய்த அதே விஷயத்தைச் செய்யும் ஒவ்வொரு தடவையும் அவருடைய இழப்பு அவர்களுக்கு ஞாபகத்துக்கு வரலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக துக்கத்தை வெளிப்படுத்தலாம். துணையை இழந்து தவிப்பவர்களைக் கவனித்துக்கொள்ளும் பாக்கியத்தையும் பொறுப்பையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.—யாக்கோபு 1:27-ஐ வாசியுங்கள்.

17. துணையால் கைவிடப்பட்டவர்களுக்கு நம்முடைய ஆதரவு ஏன் தேவை?

17 தங்களுடைய மணத்துணையால் சிலர் கைவிடப்பட்டிருக்கலாம். அது அவர்களுக்குத் தாங்க முடியாத வலியையும் வேதனையையும் ஏற்படுத்தலாம். ஜாய்ஸ் என்ற சகோதரியின் கணவர், வேறொரு பெண்ணோடு குடும்பம் நடத்துவதற்காக அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார். ஜாய்ஸ் இப்படிச் சொல்கிறார்: “ஒருவேளை என் கணவர் இறந்துபோயிருந்தா எனக்கு எவ்வளவு வேதனையா இருந்திருக்குமோ, அதவிட அவர் என்னை விவாகரத்து செஞ்சப்போ ரொம்ப வேதனையா இருந்துச்சு. அத என்னால தாங்கிக்கவே முடியல. ஏதாவது விபத்துலயோ வியாதியிலயோ அவர் இறந்துபோயிருந்தா, அதுக்கு அவர் காரணமா இருந்திருக்க மாட்டாரு. ஆனா என்னோட விஷயத்துல, என்னை அம்போனு விட்டுட்டு போகணும்னு அவர்தான் முடிவெடுத்தாரு. அவர் இப்படி செஞ்சது என்னை கூனிக்குறுக வெச்சிடுச்சு.”

18. துணையில்லாமல் தனிமரமாய்த் தவிப்பவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

18 துணையில்லாமல் தனிமரமாய்த் தவிப்பவர்களுக்கு சின்னச் சின்ன உதவிகளைச் செய்யும்போது, நாம் அவர்களை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். தனிமை உணர்வு அவர்களை வாட்டி வதைக்கும் என்பதால், எப்போதையும்விட இப்போது அவர்களுக்கு தோள் கொடுக்கும் தோழர்கள் தேவை. (நீதி. 17:17) இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் எப்படி ஒரு நல்ல தோழராக இருக்கலாம்? ஓர் எளிய உணவைச் சாப்பிடுவதற்கு அவர்களைக் கூப்பிடலாம். அல்லது, பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கோ ஊழியம் செய்வதற்கோ அவர்களைக் கூப்பிடலாம். உங்கள் குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்வதற்கும் அவ்வப்போது அவர்களை அழைக்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, உங்களைப் பார்த்து யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுவார். ஏனென்றால், அவர் “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே” இருப்பவர்! அதோடு, ‘விதவைகளுக்குப் பாதுகாவலராக இருப்பவர்.’—சங். 34:18; 68:5.

19. ஒன்று பேதுரு 3:8 சொல்கிறபடி, என்ன செய்வதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்?

19 சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும். அப்போது, ‘இதுவரை பட்ட கஷ்டங்களையெல்லாம் [நாம்] மறந்துவிடுவோம்.’ ‘முன்பு பட்ட கஷ்டங்கள் யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.’ அப்படிப்பட்ட காலத்துக்காக நாம் ஆசை ஆசையாகக் காத்திருக்கிறோம். (ஏசா. 65:16, 17) அதுவரையில், நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கலாம். சகோதர சகோதரிகளை நாம் நேசிக்கிறோம் என்பதை நம்முடைய சொல்லாலும் செயலாலும் காட்டலாம்.—1 பேதுரு 3:8-ஐ வாசியுங்கள்.

உங்கள் பதில் என்ன?

  • லோத்துவுக்கும் யோபுவுக்கும் யெகோவா உதவிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • நகோமியின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • துணையில்லாமல் தவிப்பவர்களுக்கு நாம் எப்படி ஆதரவு கொடுக்கலாம்?

பாட்டு 75 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்

a லோத்துவும் யோபுவும் நகோமியும் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார்கள். ஆனால், அவர்களும் வேதனையான சூழ்நிலைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிற நம் சகோதர சகோதரிகளிடம் நாம் ஏன் பொறுமையையும் கரிசனையையும் காட்ட வேண்டும் என்றும், அவர்களிடம் ஏன் ஆறுதலாகப் பேச வேண்டும் என்றும் பார்ப்போம்.

b இந்தக் கட்டுரையில் இருக்கும் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

c படங்களின் விளக்கம்: ஒரு சகோதரர், வேதனையில் “ஏதேதோ” பேசுகிறார். அவர் பேசுவதை ஒரு மூப்பர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்தச் சகோதரரின் கோபம் தணிந்த பிறகு, அந்த மூப்பர் அவருக்கு அன்போடு ஆலோசனை தருகிறார்.

d படங்களின் விளக்கம்: மனைவியை இழந்த ஒரு சகோதரரோடு ஓர் இளம் தம்பதி நேரம் செலவிடுகிறார்கள். இறந்துபோன அவருடைய மனைவியைப் பற்றிய பசுமையான நினைவுகளை அவரிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்