ஆவிக்குரிய இலக்குகளை நோக்கி நீங்கள் ஒரு குடும்பாக உழைக்கிறீர்களா?
1 ஒப்புக்கொடுத்த ஜனங்களாக யெகோவாவை உண்மையோடு சேவிக்கும் இலக்கை நாம் கொண்டிருக்கிறோம். நித்திய ஜீவன் என்ற பரிசை பெற்றுக்கொள்வதற்காகவும் நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாகவே நாம் நம்முடைய சொந்த உண்மைத்தன்மையிலும், இரட்சிப்பிலும் மட்டுமே அக்கறையுள்ளவர்களாய் இல்லை. மற்றவர்கள் இப்படிப்பட்ட இலக்குகளை அடைய உதவி செய்ய விரும்புகிறோம், விசேஷமாக நாம் நம்முடைய சொந்த குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புவோம்.—யோவான் 1:40, 41; 1 தீமோ. 5:8.
2 படிப்படியாக ஒரு மலையின் மீது ஏறுவது போல, நாமும்கூட நம்முடைய கிறிஸ்தவ ஓட்டத்தில் படிப்படியாக முன்னேறலாம். இதற்காக நாம் ஆவிக்குரிய இலக்குகளை நமக்கு வைக்கிறோம். இது தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாய் இல்லை. கூட்டங்கள், வெளி ஊழியம், குடும்ப படிப்பு ஆகியவற்றின் சம்பந்தமாக குடும்பங்களும்கூட இலக்குகளைக் கொண்டிருக்கலாம். முன்னேற்றங்கள் செய்யவேண்டிய காரியங்கள் இருக்கின்றனவா? முழுநேர ஊழியம் என்ற இலக்கை எட்டுவதற்கு குடும்பத்தின் சில அங்கத்தினர்கள் உதவப்படலாமா? நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு ஒரு குடும்ப கலந்தாலோசிப்பு உதவி செய்யக்கூடும். இவைகளை அடைந்த பின்பு, மற்ற தேவராஜ்ய இலக்குகள் வைக்கப்படலாம். இவ்வாறு படிப்படியாக ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யப்படலாம்.
கூட்டங்கள்
3 கூட்டங்களுக்கு நேரத்துக்கு செல்வதை சில குடும்பங்கள் ஓர் இலக்காக வைக்கலாம். பெரிய குடும்பங்கள், கடினமான வேலை அட்டவணைகளையுடைவர்கள் அல்லது போக்குவரத்துப் பிரச்னை இருக்கும் இடங்களில் இருப்பவர்களுக்கு இது ஓர் உண்மையான சவாலாக இருக்கலாம். ஒத்துழைப்பும், நல்ல ஒழுங்கமைப்பும் அவசியமாயிருக்கிறது.
4 குடும்பம் சிந்திக்க வேண்டிய மற்றொரு நடைமுறையான இலக்கு கூட்டங்களில் குறிப்புகள் சொல்வதாகும். குடும்பத்தின் சில அங்கத்தினர்கள் ஒரு சிறிய குறிப்பை வாசிக்க விருப்பமாயிருக்கலாம். என்றபோதிலும் சுருக்கமான, திட்டவட்டமான குறிப்புகளை ஒருவர் தன் சொந்த வார்த்தைகளில் சொல்வது ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது, மேலும் அது பலனளிக்கக்கூடியதாயிருக்கிறது. குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் குறிப்புகளை தயாரிக்கையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம். தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் முன்னேற்றமடைவதற்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளலாம். இளைய குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் நியமிப்புகளை ஒத்திகை பார்க்கும் போது செவிகொடுத்துக் கேட்பது, ஒரு குறிப்புத் தாளை எவ்வாறு உபயோகிப்பது என்பதை அவர்களுக்கு காண்பிப்பது, அவர்களுடைய வார்த்தைகளின் உச்சரிப்பை திருத்துவது போன்ற காரியங்களை இது ஒருவேளை உட்படுத்தும். ஒரு நல்ல போதகராக அல்லது ஒரு மிகச் சிறந்த வாசிப்பாளராக ஆகவேண்டும் என்ற இலக்கு ஊக்கமான முயற்சிக்கு தகுதியாயிருக்கிறது.—1 தீமோ. 4:13.
வெளி ஊழியம்
5 சில குடும்பங்கள் வெளி ஊழியத்தில் ஒழுங்காக ஈடுபடும் நிலையை அடைய வேண்டும். உங்களுடைய முழு குடும்பமும் ஒவ்வொரு மாதமும் வெளி ஊழியத்தில் பங்கு கொள்கிறதா? தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் அல்லது ஒரு புதிய பத்திரிகை அளிப்பை குடும்ப அங்கத்தினர்கள் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்யும் இலக்கைப் பற்றி என்ன? ஒரு வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பிப்பது அல்லது ஏற்கெனவே ஸ்தபிக்கப்பட்ட ஒரு படிப்பை நடத்துவதில் அதிகமான ஒழுங்கு போன்ற இலக்குகளும் இருக்கின்றன.
குடும்ப படிப்பு
6 ஒரு குடும்ப படிப்புக்கான அட்டவணையை உண்மையாக கடைப்பிடிப்பது சில குடும்பங்களுக்கு உண்மையான சவாலாக இருக்கலாம். சில சமயங்களில் படிப்பை மாற்றியமைக்க வேண்டிய அவசியமிருக்கலாம். ஆனால் இது விதிவிலக்காக இருக்க வேண்டும். வாராந்தர பைபிள் நியமிப்பை ஒழுங்காக வாசிப்பது மற்றொரு மிகச் சிறந்த இலக்காகும், இதை நீங்கள் ஒருவேளை குடும்ப படிப்பிலும்கூட சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வாரத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பொருளை வாசிப்பதற்கு அநேகருக்கு 20 முதல் 25 நிமிடங்கள் மட்டும்தான் எடுக்கிறது. இது ஒருவரின் வேதாகம அறிவைக் கூட்டும். மேலும் அது ஒவ்வொரு வாரமும் பைபிளின் சிறப்பு அம்சங்களின் விமர்சனத்தை அதிக ஆர்வமூட்டுவதாக ஆக்கும்.
7 தனிப்பட்ட நபர்களும் குடும்பங்களும் தங்களுக்காக வைக்கக்கூடிய மற்ற அநேக இலக்குகள் இருக்கின்றன. உதாரணமாக, விரைவில் துணைப்பயனியர் சேவையைக் குறித்து ஒரு குடும்ப முயற்சியைப் பற்றி என்ன? கூடுதலாக, நல்ல அமைப்போடும், ஒத்துழைப்போடும் குடும்பம் தன்னுடைய அங்கத்தினர்களில் ஒருவரையாவது ஒழுங்கான பயனியராக ஆதரவளிக்க முன்வருமா? ஓர் உதவி ஊழியராகவோ அல்லது ஒரு மூப்பராகவோ ஆவதற்கான இலக்கும் இருக்கிறது. வாலிப சகோதரர்கள் பெத்தேல் சேவையை ஓர் இலக்காக கொண்டிருக்கலாம். இந்த இலக்குகள் எட்டக்கூடியவை, ஆனால் அவைகள் ஊக்கத்தையும் கடின உழைப்பையும் தேவைப்படுத்தும். நம்முடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப இலக்குகளை எட்ட நாம் முயற்சி செய்கையில், யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையின் தரம் உயரும், எல்லாம் அவருக்கு கனமும் மகிமையும் கொண்டுவரும்.—சங். 96:7, 8.