குடும்ப பைபிள் படிப்பு—கிறிஸ்தவர்களுக்கு முதன்மையான ஒன்று
1 விசுவாசத்திலிருக்கும் குடும்ப அங்கத்தினர் சம்பந்தமாக, முக்கியமாக பருவ (13-19) வயதுள்ள பிள்ளைகள் சம்பந்தமாக, எங்கே அடிக்கடி வினைமையான பிரச்னை இருக்கிறதோ அங்கே பெரும்பாலும் குடும்பப் படிப்பு தேவையான கவனம் பெறாமலிருந்திருக்கிறது. வருத்தமான காரியமென்னவெனில், அநேக குடும்பங்கள், சில மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் குடும்பங்கள் உட்பட, தங்களுடைய பள்ளி வயது பிள்ளைகள் உலகச் செல்வாக்குகளினால் மேற்கொள்ளப்படும் பிரச்னைகளை உடையவையாக இருக்கின்றன.
2 சமீபத்தில் ஒரு வட்டாரக் கண்காணி, தங்களுடைய பிள்ளைகள் சம்பந்தமாகப் பிரச்னைகளைக் கொண்டிருந்த ஒருசில சகோதரர்களைப் பற்றி எழுதினார். பெரும்பாலும் வீட்டில் பைபிள் போதனை கொடுக்கத் தவறுவதுதானே இந்தப் பிரச்னைகளுக்கு மூலக்காரணம் என்று குறிப்பிட்டார். ஒரு வட்டாரக் கண்காணியால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு ஒருசில சபைகளில் 50 சதவிகிதமான ஆட்கள் ஓர் ஒழுங்கான குடும்பப் படிப்பைக் கொண்டில்லை என்பதைக் காட்டுகிறது.
முதன்மையான இடம்
3 கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிக்காட்டிக் குறிப்புகளை, குடும்பங்கள் பின்பற்ற வேண்டுமானால் அவர்கள் ஒழுங்காக குடும்ப படிப்புக்காக நேரத்தைக் கட்டாயம் ஒதுக்கி வைக்கவேண்டும். ஒரு குடும்ப வேதப்படிப்பை ஒழுங்காக நடத்தி வருவதில் குடும்பத் தலைவர்கள் உறுதியாக நிலைத்திருப்பது அவசியம். முழுக் குடும்பத்தின் நன்மைக்காகவும் குடும்ப வணக்கத்தின் இந்த அம்சத்தை வெற்றிகரமான ஒன்றாக ஆக்குவதற்குக் குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். குடும்பத்தின் ஆவிக்குரியத் தேவைகளுக்கு இப்பொழுது சரியான கவனம் கொடுக்கப்படாவிட்டால் அவர்கள் மிக மோசமானப் பிரச்னைகளை, ஏன் அதைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ள பிரச்னைகளையும்கூட எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடக்கூடும் என்பதை எல்லாரும் மதித்துணரவேண்டும்.
படிப்பு திட்டத்தை தேவைக்கு ஏற்றார்போல் அமைத்துக்கொள்வது எப்படி?
4 படிப்பு எப்படி நடத்தப்பட வேண்டும்? எதைப் படிக்கலாம்? படிப்பை எப்பொழுது நடத்தலாம்? எவ்வளவு நேரம் நடத்தலாம்? அது பிள்ளையின் இருதயத்தைச் சென்றெட்டுகிறதா என்பதைக் குறித்து எப்படி நிச்சயமாயிருக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தயவுசெய்து ஆங்கில காவற்கோபுரம் நவம்பர் 1, 1986 பக்கம் 24-ஐ பார்க்கவும்.
5 பெற்றோரால் வெளிக்காட்டப்படும் மகிழ்ச்சியும் ஆர்வமும் ஒரு வெற்றிகரமானக் குடும்பப் படிப்பிற்கு அத்தியாவசியமான ஆக்கக் கூறுகளாக இருக்கின்றன. (சங்கீதம் 40:8-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.) அதோடு, தங்கள் பிள்ளைகளுடைய முயற்சியைப் பெற்றோர் பாராட்ட வேண்டும். மேலும் யெகோவாவின் நியமங்களைப் பொருத்துவதற்கு உற்சாகப்படுத்த வேண்டும்.
6 ஒரு சகோதரி சத்தியத்தைக் கற்றுக்கொண்ட சமயத்தில் அவளுடைய எட்டு பிள்ளைகள் அவளுடன் வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவளுக்கு அவிசுவாசியான மற்றும் ஒத்துழைப்பு தராத கணவன் இருந்தபோதிலும், அவள் தன்னுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளுக்குச் சரியான கவனம் கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொண்டாள். அவள் வெளி ஊழியத்திலும் கூட்டங்களில் பங்குகொள்வதிலும் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தாள். வெளி ஊழியத்திற்குப் பிற்பாடு, தன்னுடைய பிள்ளைகளின் முகம் சந்தோஷத்தைப் பிரதிபலிக்கிறதா என்பதைக் காண அவர்களுடைய முகத்தை அவள் பார்ப்பதுண்டு. அப்படி அது சந்தோஷத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றால் உடனே அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க பிரயாசப்பட்டாள். அவர்கள் தங்கள் அறையில் தங்களைத் தனியே ஒதுக்கி வைத்துக்கொள்கிறார்கள் என்று அறிந்தால், அவள் அவர்களுடன் அன்பாய் பேசி அவர்களை வெளியே அழைத்து கடவுளுடைய வார்த்தையிலிருந்து உற்சாகமூட்டுதலைக் கொடுப்பாள். இதன் விளைவாக, அவளுடைய எல்லாப் பிள்ளைகளும் சத்தியத்திலிருக்கிறார்கள். மூன்று பேர் ஒழுங்கான பயனியர்களாகவும், அவர்களில் இரண்டு பேர் பெத்தேலிலும்கூட சேவை செய்திருக்கிறார்கள். அவளுடைய முயற்சிகள் நிறைவாகப் பலனளிக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் அவர்களுடைய ஆவிக்குரிய தன்மைகளுக்கு அவள் எப்பொழுதுமே முதன்மையான இடத்தைக் கொடுத்திருக்கிறாள்.—3 யோவான் 4-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
7 தங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய தேவைகளுக்குத் தொடர்ச்சியான கவனத்தைப் பெற்றோர் கொடுப்பார்களேயானால் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் அநேக ஆசீர்வாதங்களை அனுபவித்துக் களிக்கலாம். கடவுளுடைய சட்டங்களின் மதிப்பைப் பிள்ளைகள் காண்பார்களானால் மற்றும் அது உண்மையிலேயே நன்மையானது, பயனுள்ளது என்று மனதார ஒப்புக்கொள்வார்களானால் தாங்கள் நம்புவதைச் சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுக்குக் காட்ட பின்வாங்க மாட்டார்கள். (சங். 119:165) ஆகையால், பெற்றோர்களே, உங்கள் குடும்ப படிப்பிற்கு அதற்குரிய முக்கியமான இடத்தை மகிழ்ச்சியோடுக் கொடுங்கள்.