அர்த்தமுள்ள குடும்ப பைபிள் படிப்புகளை நடத்துதல்
1 பெற்றோர்கள் செய்யும் அதிமுக்கியமான வேலைகளில் ஒன்று தங்கள் பிள்ளைகளுக்கு சத்தியத்தைக் கற்பிப்பதாகும். இது யெகோவாவிடமிருந்து வந்த ஒரு கடமைப் பொறுப்பு. (உபா. 6:6, 7) தேவபக்தியற்ற ஓர் உலகில் நேர்மையாய் நடப்பதற்கு பிள்ளைகளுக்கு வழிநடத்துதலும் ஆலோசனையும் தேவைப்படுகிறது. யெகோவாவையும் சத்தியத்தையும் நேசிக்கவும், அதைப் பற்றியிருக்க தீர்மானமாயிருக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மார்ச் 1, 1989 (ஆங்கிலத்தில் ஆகஸ்ட் 1, 1988) காவற்கோபுரம் பக்கம் 11-ல் குறிப்பிட்டது: “உங்களுடைய மற்றெல்லா கடமைகளின் மத்தியிலும் அல்லது நீங்கள் எதிர்ப்படும் எல்லா துன்பங்கள் மத்தியிலும், பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கும் காரியத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒன்றாகச் செலவிடும் நேரம் உங்கள் பிள்ளைகளின் இருதயத்தைப் பாதுகாத்து, அவர்களை சரியான பாதையில் துவக்கி வைக்கும் ஆவிக்குரிய மதிப்புகளை அவர்களில் ஆழமாகப் பதிய வைக்கச்செய்ய அனுமதிக்கும்.”
2 கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதலைக் குடும்பங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்றால், குடும்ப படிப்பிற்காக நேரம் ஒழுங்காக ஒதுக்கி வைக்கவேண்டும். குடும்பத்தின் ஆவிக்குரிய தன்மையை கவனிப்பதற்கு குடும்பத் தலைவர்கள் முதலிடம் கொடுக்கத் தேவை இருக்கிறது. குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளுக்கு சரியான கவனிப்பு இப்பொழுது கொடுக்கப்படவில்லையென்றால், பெற்றோர்கள் எதிர்காலத்தில் வினைமையான பிரச்னைகளைக் கையாள வேண்டிய சாத்தியம் அதிகம் இருக்கிறது.
படிப்பதற்கு விஷயங்களும் முறைகளும்
3 எதைப் படிக்க வேண்டும்? குடும்பத்திற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிய குடும்பத் தலைவர் சிறந்த நிலையில் இருக்கிறார். நன்மை பயக்கக்கூடியவைகளைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விவரம் கேட்டு அவர்களுடைய ஆலோசனைகளையும் சிந்தித்துப் பார்க்கலாம். வளைந்து கொடுக்கும் தன்மை குடும்ப படிப்பை நடைமுறையானதாயும், கிளர்ச்சியூட்டுவதாயும் ஆக்கும். காவற்கோபுரம் வாராந்தர படிப்பை அநேக குடும்பங்கள் தயார் செய்ய தேர்ந்தெடுக்கின்றனர். என்றபோதிலும், சில சமயங்களில் பள்ளியில் இளைஞர்கள் எதிர்ப்படும் பிரச்னைகளின் பேரில் திட்டவட்டமான விஷயங்களை கலந்தாலோசிப்பது தேவையானதாயிருக்கும். எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள், பாடதிட்டம் சாராத நடவடிக்கைகள், விளையாட்டு, ஒழுக்கயீனமான மனசாய்வுகள் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பிரசுரிக்கப்பட்ட தகவல்களை கட்டியெழுப்பும், உற்சாகமூட்டும் விதத்தில் சிந்திக்கலாம். என்ன விஷயங்கள் குடும்பத்திற்கு தேவைப்படுகிறது என்பதையும், மேலும் எவ்வாறு அதைக்கொண்டு சிறந்த விதத்தில் அவர்களின் இருதயத்தை எட்டலாம் என்பதையும் குடும்பத் தலைவர் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்வது முக்கியமாயிருக்கிறது.—ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1971, பக்கங்கள் 105–6-ஐ பாருங்கள்.
4 ஒரு படிப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? ஓர் ஓய்வான அதே சமயத்தில் மரியாதைக்குரிய சூழ்நிலையை உருவாக்குங்கள். ஓர் இயந்திரத்தைப் போன்று அல்லது அளவுக்கு மீறி கண்டிப்புடன் நடத்தும் முறையை தவிருங்கள். கூடுதலான கேள்விகளைக் கேளுங்கள், சிந்தனையைத் தூண்ட உதாரணங்களை உபயோகியுங்கள். மேலும் எல்லாரும் ஈடுபடும்படிச் செய்யுங்கள். விஷயங்களை மதிப்பேற்றுவதற்கு வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற காட்சி விளக்க முறைகளை உபயோகிக்கலாம். பிள்ளைகளின் வயது மற்றும் திறமைகளுக்கு ஏற்றவாறு, அகர வரிசை அட்டவணை அல்லது உட்பார்வை ஏடுகளில் உள்ள விஷயங்களைக் கண்டுபிடிக்க நியமிப்புகள் கொடுக்கப்படலாம். பதில் சொல்லக்கூடிய வயது ஆனவுடனேயே இளம் பிள்ளைகளை கலந்தாலோசிப்பிற்குள் கொண்டு வாருங்கள். வெகு சில வார்த்தைகளாலான பதில்களை வரவழைக்கும் எளிதான கேள்விகளை அவர்களிடம் கேட்கலாம். படிப்பு நேரப் பகுதிகளை பிள்ளைகளைத் திட்டுவதற்கென உபயோகப்படுத்தாதீர்கள். மாறாக, பாராட்டு தெரிவியுங்கள், அவர்களுடைய முயற்சிகளுக்காக போற்றுதல் காண்பியுங்கள், ஆவிக்குரிய நோக்குநிலைகளை அவர்களோடு பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாயிருங்கள்.
5 நீங்கள் இருதயத்தை எட்டுகிறீர்கள் என்பதில் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்? பதில்களைத் தங்கள் சொந்த வார்த்தைகளில் சொல்வதற்கு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். இருதய மனப்பான்மைகளை நிர்ணயிக்க சாதுரியமாக நோக்குநிலைக் கேள்விகளை உபயோகியுங்கள். நீங்கள் கேட்கலாம்: “பள்ளியில் உள்ள பிள்ளைகள் இந்த விஷயத்தைக் குறித்து எவ்வாறு உணருகின்றனர்? இந்தக் குறிப்பின் பேரில் ஏதாவது சந்தேகங்கள் உங்களுக்கு எப்போதாவது இருந்திருக்கிறதா?” நோக்குநிலை கேள்விகளுக்கு உங்கள் பிள்ளைகள் கொடுக்கும் பதில்களுக்கு அளவுக்கு மேல் உணர்ச்சிவசப்பட்டு பிரதிபலிக்காதபடி கவனமாயிருங்கள். இல்லையென்றால் உங்கள் பிள்ளைகள் தங்களைப் பற்றி நேர்மையாக, வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். அவர்கள் பேசுவதற்கு நேரம் கொடுங்கள். நீங்கள் அவர்கள் மீதும் அவர்கள் பிரச்னைகள் மீதும் அக்கறையுள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பது உங்கள் கற்பிக்கும் முயற்சிகளை அதிக சுலபமாக்கும்.—ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 1, 1986 பக்கங்கள் 23–5 பாருங்கள்.
6 உங்கள் குடும்பப் படிப்பின் முக்கிய குறிக்கோள் யெகோவாவின் சிந்தனைகளை ஆழப் பதிய வைப்பது என்பதை மனதில் வையுங்கள், ஒரு சபைக் கூட்டத்தில் வெறுமென மனப்பாடமாய் ஒப்பிக்க ஒரு பதிலை கண்டுபிடிப்பதல்ல. (எபே. 3:17–19) இருதயத்திற்குள் தகவல்களை புகுத்த உழைப்பது என்று இது அர்த்தப்படுத்தும். கடவுளுடைய சித்தத்தை அவர்கள் ஏன் செய்ய விரும்ப வேண்டும், அது ஏன் வாழ்வதற்கு மிகச்சிறந்த முறையாயிருக்கிறது என்பதற்கான காரணங்களைக் குடும்பத்திற்குக் கொடுங்கள்.
7 குடும்பத்தின் ஆவிக்குரியத் தன்மையை கட்டியமைப்பதற்கு ஒழங்கான குடும்ப பைபிள் படிப்பு இன்றியமையாதது. வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமாளிக்க இது பிள்ளைகளைப் பயிற்றுவித்து தகுதியுள்ளவர்களாக்குகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்ய பெற்றோராகிய நீங்கள் சிறந்த ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். கடவுள் கொடுத்த இந்த உத்தரவாதத்தை மேற்கொள்ளுங்கள். ஓர் அர்த்தமுள்ள குடும்ப பைபிள் படிப்பை நிலையாய் நடத்த நீங்கள் எல்லா முயற்சியும் எடுத்தால் யெகோவா நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்.