கேள்விப் பெட்டி
● வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்?
வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் சபையின் ஸ்தபிக்கப்பட்ட ஓர் ஏற்பாடாகும். அது ஒழுங்குள்ளதாக இருக்க வேண்டும், கனத்துடன் நடத்தப்பட வேண்டும். இதற்கு ஆஜராயிருப்பவர்கள் வேறு சபைக் கூட்டங்களுக்கு வருகையில் கொண்டிருக்கும் அதே மனநிலையும் நடத்தையும் உடையவர்களாய் இருக்க வேண்டும். மற்றவர்கள் தாமதமாக வருவார்கள் என்று அறிந்திருந்த போதிலும், கூட்டத்தை நேரத்துக்கு துவங்க வேண்டும். அன்றைய தினம் வெளி ஊழியத்தில் உபயோகிக்கக்கூடிய நடைமுறையான குறிப்புகளை எடுத்துரைக்க நடத்துபவர் ஆயத்தமாக வரவேண்டும். இந்தக் கூட்டங்களுக்காக நம் ராஜ்ய ஊழியம் பிரயோஜனமாக தகவல்களையும் ஆலோசனைகளையும் உடையதாய் இருக்கிறது.
ஒவ்வொரு கூட்டத்தின்போதும் தின வாக்கியத்தை சிந்திக்க அவசியமில்லை. அன்றைய தினவாக்கியம் வெளி ஊழியத்திற்கு உற்சாகம் அளிக்கும் ஒன்றாக இருக்குமானால், அதைச் சுருக்கமாக சிந்திக்கலாம். வெளி ஊழியத்தில் திட்டமிடப்படும் முழு நேரத்தையும் அதில் செலவிடத்தக்கதாக, இந்தக் கூட்டம் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும். 10-லிருந்து 15 நிமிடங்கள் வரை மட்டுமே இது நீடிக்க வேண்டும். சபைக் கூட்டத்திற்கு பின்பு இது நடத்தப்படுமானால் இதைவிட சுருக்கமாகவும் இருக்கலாம். பயனியர்களின் நேர அட்டவணை கருதப்பட வேண்டும், ஏனெனில் அதிக நேரம் நீடிக்கும், அல்லது தாமதமாகத் துவங்கப்படும் வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள், ஒரு நேர அட்டவணையை நெருக்கமாக பின்பற்றுபவர்களின் மீது கூடுதலான பாரத்தை வைப்பதாக இருக்கும்.
ஆஜராயிருக்கும் ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்ட பிராந்தியம் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சிலர் மறுசந்திப்பு அல்லது வேதப்படிப்பு ஊழியத்தில் ஈடுபட தங்களுடைய சொந்த ஏற்பாடுகளை உடையவர்களாய் இருக்கலாம், இவர்களுக்கு ஊழியம் செய்ய பிராந்திய நியமிப்பு அவசியமிராது.
வெளி ஊழிய பிராந்திய நியமிப்புகள் செய்யப்பட்டு, ஜெபத்துடன் கூட்டம் முடிக்கப்படும்வரை, ஆஜராயிருக்கும் யாவரும் கூர்ந்து கவனம் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும். தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்திருப்பவர்கள் இதை முன்கூட்டியே தெரிவிக்கலாம். கூட்டம் முடிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிகளுக்கு பிராந்திய நியமிப்புகள் செய்யப்பட வேண்டும். வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் அல்லது வேறு பொது இடங்களில் இதைச் செய்யக்கூடது. வெளி ஊழியத்திற்கான கூட்டம் ஜெபத்துடன் முடிக்கப்பட வேண்டும். இந்த ஆலோசனைகளுக்கு ஏற்ப நாம் யாவரும் நடப்போமாகில், அன்றைய தினத்தின் பிரசங்க வேலையின் மீது யெகோவாவின் கூடுதலான ஆசீர்வாதத்தை நாம் உறுதியுடன் எதிர்பார்க்கலாம்.