கூட்டங்கள் நமது பிள்ளைகளுக்குப் பயனளிக்கின்றன
1 இஸ்ரவேல் தேசத்தினருக்குப் பின்வரும் கட்டளை கொடுக்கப்பட்டது: “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் . . . கேட்டு கற்றுக்கொள்வதற்கு . . . ஜனத்தைக் கூட்டு.” (உபா. 31:12, 13) ஆம், பிள்ளைகள், சிறுபிள்ளைகளும்கூட வணக்கத்திற்கான இஸ்ரவேலரின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அதைப்போலவே இன்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கூட்டங்களில் பிள்ளைகளும் பயனடைகின்றனர்.—சங். 148:1, 12.
2 பிள்ளைகளின் கவனம் எளிதில் திசைதிரும்புகிறது என்பது மெய்யே. என்ன சொல்லப்படுகிறதோ அதற்கு கூர்ந்து கவனம் செலுத்தும்படி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம். பேசப்படும் தகவல்களில் சிலவற்றை புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு உதவி தேவை. கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்து நம் பிள்ளைகள் அதிகம் பெற்றுக்கொள்வதற்கு உதவிசெய்ய பின்வரும் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்.
கூட்டங்களுக்காக தயார் செய்யுங்கள்
3 வீட்டில் கொடுக்கப்படும் சரியான பயிற்சி யெகோவாவின் வணக்கத்தில் மற்றவர்களோடு கூடிவரவேண்டும் என்ற சிலாக்கியத்தைப் பிள்ளைகள் மதித்துணர்வதற்கு உதவக்கூடும். இது கடவுளுடைய சித்தம் என்பதையும் இவ்விஷயத்தில் கீழ்ப்படிவது நன்மைகளைக் கொண்டுவருகிறது என்பதையும் பிள்ளைகள் புரிந்துகொள்வதற்கு உதவி செய்யவேண்டும். கிறிஸ்தவ கூட்டங்கள் அவர்களுக்குங்கூட என்பதை மிகச்சிறிய வயதுள்ள பிள்ளைகளும் புரிந்துகொள்ள உதவப்படலாம்.—சங். 133:1; ஏசா. 48:17, மத். 19:14.
4 தனிப்பட்ட தயாரிப்பு, பிள்ளை கூட்டங்களை அனுபவித்து மகிழ்வதை அதிகரிக்கும். கூட்டங்களின்போது உபயோகிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் சொந்த பைபிளையும் பாட்டு புத்தகத்தையும் மற்ற படிப்பு பிரசுரங்களையும் வைத்திருக்கச் செய்வது உதவியாக இருக்கும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்த பட்சம் பாடத்தின் ஒரு பகுதியையாவது இளம் பிள்ளைகள் தயாரிப்பதற்குப் பெற்றோர் உதவ வேண்டும். (எபி. 10:23) பிள்ளையினுடைய புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் கூட்டங்களில் பங்குகொள்ளக்கூடிய திறமைக்கு ஏற்ப அது செய்யப்படலாம். தெளிவாகவே அனைவரும் பிள்ளைகள் உட்பட கூட்டங்களுக்காக தயார் செய்வதற்கு நேரத்தை ஒதுக்கி வைப்பது விரும்பத்தக்க ஒன்றாகும்.—எபி. 13:15.
5 சில பிள்ளைகள் கூட்டங்களில் விசேஷ பொறுப்புகளைக் கொண்டிருப்பதன் மூலம் நன்மையடைகிறார்கள். மிகச் சிறிய பிள்ளையும்கூட கடவுளுடைய பெயர், ராஜ்யம் அல்லது ஒரு குறிப்பிட்ட பைபிள் பொருள் எத்தனை முறை சொல்லப்பட்டது என்பதையும் மற்றும் அதைப்பற்றி சொல்லப்பட்ட சில காரியங்களையும் குறித்து வைப்பதில் மகிழ்ச்சியைக் காணலாம். வயதில் இவர்களைவிட சற்று பெரிய பிள்ளைகள் சொல்லப்படும் அல்லது வாசிக்கப்படும் வசனங்களை எழுதி வைக்கும்படியான பொறுப்பு கொடுக்கப்படலாம். பொறுப்பு எதுவாக இருப்பினும் அவர்களுடைய முயற்சிக்காக பிள்ளைகளை பாராட்டுவீர்களானால் அதனால் அவர்கள் நன்மையடைவார்கள். பின்னால் தாங்கள் கற்றுக்கொண்ட காரியங்களின் பேரில் அல்லது கூட்டங்களில் பேசப்பட்ட காரியங்களை அவர்கள் எப்படி அனுபவித்து மகிழ்ந்தார்கள் என்பதன் பேரில் குறிப்பு சொல்லும்படியான வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கலாம்.
6 வாசிக்கத் தெரிந்த எல்லாப் பிள்ளைகளும் தனிமையில் சங்கத்தின் பிரசுரங்களை வாசிப்பதற்காக தனிப்பட்ட திட்டத்தைக் கொண்டிருப்பதற்கு உற்சாகமும் உதவியும் கொடுக்கப்படலாம். பிள்ளையின் திறமைக்கு ஏற்ப பைபிள் கதை புத்தகம், பெரிய போதகர் மற்றும் உன் இளமை ஆகிய புத்தகங்களையும் அத்துடன் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளையும் வாசிக்கும் திட்டத்தை இது உட்படுத்தலாம். இப்படிப்பட்ட ஒரு திட்டம் சமீப கால தேவராஜ்ய பிரசுரங்கள் எல்லாவற்றையும் வாசித்தறியும் நிலையில் ஓர் இளைஞனை வைக்க வேண்டும்.
உடையும் சீரொழுங்கும்
7 கிறிஸ்தவ கூட்டங்களில் நமது இளைஞர் மரியாதைக்குரிய முறையில் உடுத்தியிருப்பதைக் கண்டு கூட்டங்களுக்கு வருகை தரும் ஆட்கள் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கிறார்கள். கூட்டங்களுக்கு வருகையில் ஒரு பிள்ளை உடுத்தியிருக்கும் அந்த முறைதானே, பொதுவாக கூட்டங்களின் பேரில் அதனுடைய மனநிலையையும் நடத்தையையும் பாதிக்கிறதென கவனிக்கப்பட்டிருக்கிறது. புரூக்லினிலுள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தையோ அல்லது எந்த ஒரு கிளை அலுவலகத்தையோ விஜயம் செய்கையிலும் சிறியோரும் பெரியோரும் கூட்டத்திற்குச் செல்லுகையில் உடுத்துவதுபோலவே உடுத்தியிருப்பது பொருத்தமாக இருக்கும்.—நம் ஊழியம் புத்தகம் பக்.131.
8 கூட்டங்களில் நம்முடைய பிள்ளைகளின் சிறந்த நடத்தையும்கூட யெகோவாவின் பெயருக்கு துதியையும் கனத்தையும் கொண்டுவருகிறது. ஆகையால், கூட்டங்களில் பிள்ளைகளை கவனமாய் மேற்பார்வை செய்ய வேண்டிய அவசியத்தைப் பெற்றோர் கண்டுணர வேண்டும். அக்கறையுள்ள பெற்றோர் கூட்டங்களின்போது குடும்பமாக உட்காருவதற்கு ஏற்பாடு செய்வார்கள். மேலும் தங்களுடைய பிள்ளைகள் எல்லாச் சமயங்களிலும் சீரொழுங்கை காத்துக்கொள்ளும்படியும் கவனித்துக்கொள்வார்கள். கூடுதலான உதவிபெறும் ஆலோசனைகளுக்காக, தங்கள் பிள்ளைகள் சம்பந்தமாக நல்ல வெற்றி கண்டிருக்கும் மற்றவர்களிடம் பெற்றோர் பேசலாம்.
9 பிள்ளைகள் நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களில் நடைபெறும் வணக்கத்தில் முழுமையாக பங்குகொள்ள வேண்டும் என்பதும் ‘மற்றவர்களை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவ’ வேண்டும் என்பதும் நம்முடைய ஆசையாக இருக்கிறது. (எபி. 10:24) யெகோவா தேவனுடைய ஏற்பாட்டில் கூட்டங்கள் பிள்ளைகளுக்கும்கூட.