பிள்ளைகள் கூட்டங்களிலிருந்து மேலும் அதிகநன்மையடைய உதவுங்கள்
1 உங்கள் பிள்ளைகள் கூட்டங்களில் ஆஜராகும்போது அவர்கள் உண்மையில் கவனிக்கிறார்களா? ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் கற்றுக்கொண்டதை பிற்பாடு உங்களுக்கு எடுத்துச் சொல்கிறார்களா? கவனம் செலுத்தவும், கூர்ந்து கவனிப்பதால் பெறக்கூடிய அறிவைப் பயன்படுத்தவும் அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறீர்களா? கூட்டங்களில் நீங்கள் உணர்வோடு பேசுகையில் அவர்கள் பார்த்து, கேட்டு, மேலும் பின்பற்றும் அளவிலே அவர்களுக்கு ஒரு சுறுசுறுப்பான மாதிரியை நீங்கள் வைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் உங்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுகிறார்களா? யெகோவாவின் பக்தியுள்ள ஊழியக்காரர்களாக பிள்ளைகள் வளரவேண்டுமானால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உடன்பாடான பதில்கள் இன்றியமையாதது.
கூட்டங்களில் ஆஜராவதன் முக்கியத்துவத்தை மனதில் பதிய வையுங்கள்
2 நித்திய ஜீவனைப் பெறவேண்டுமென்றால் ஒரு பிள்ளைக்கு பைபிள் போதனை தேவை. (யோவான் 17:3) ஒரு பிள்ளை ஆவிக்குரிய காரியங்களைப் போற்ற கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கூட்டங்களில் ஆஜராயிருப்பது அவசியம். சில சமயங்களில் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைக் கூட்டங்களுக்கு அழைத்து வருவதற்குத் தயங்குகிறார்கள். ஏனென்றால் பிள்ளைகள் மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பார்கள் என்று பயப்படுகிறார்கள். சிலர் தங்கள் பிள்ளைகள், பள்ளி வீட்டு பாடங்களைச் செய்யும்படி அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வருகிறார்கள். ஆனால் ஞானமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கூட்டங்களுக்கு அழைத்து வருகிறார்கள்.—உபாகமம் 31:12.
3 ஒரு பிள்ளையானது அதன் சிறு பிராயத்திலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டிய முதல் காரியம், தான் ராஜ்ய மன்றத்திற்குச் செல்வது கவனித்துக் கேட்பதற்காக என்பது. ஆனால் அவனுக்கு பொம்மைகள் அல்லது தின்பண்டம் போன்ற பொருட்களைக் கொடுத்து அவனை அதில் ஈடுபடுத்தி வைத்தால் அல்லது அவன் தன் இருக்கையில் விளையாடிக்கொண்டிருக்க அனுமதித்தால், அவன் கவனித்துக் கேட்கவும் நாம் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜராயிருப்பதன் காரணத்தைப் போற்றவும் செய்வானா? சில பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக கவனித்துக் கேட்பவர்களாயிருக்கிறார்கள் என்பது ஒத்துக்கொள்ள வேண்டியதே. இருப்பினும், ஒரு பிள்ளை தவறாக நடக்கும்போது, ஞானமுள்ள பெற்றோர் அவனைத் திருத்துவார் மற்றும் கவனித்துக் கேட்க அன்போடு அவனுக்குப் பயிற்சியளிப்பார், மிட்டாய் அல்லது பொம்மைகளை இலஞ்சமாகக் கொடுப்பதன் மூலமாக அல்ல, மாறாக, கடவுளுடைய வார்த்தையின் சிட்சையை பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம்.—நீதி. 13:24; எபே. 6:4.
பெற்றோராக உங்கள் முன்மாதிரி
4 ஜனவரி 15, 1982, பக்கம் 17-ல் ஆங்கில காவற்கோபுரம் கீழே உள்ள கேள்விகளைக் கேட்டது: “நீங்கள் பைபிள் பாடக்கூட்டங்களை மிக முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகள் அறிந்திருக்கிறார்களா? வெறுமென ஆஜராவதைக் காட்டிலும் பங்குகொள்வதன் மூலம் மற்றும் குறிப்புகள் கேட்கப்படும்போது அவற்றை அளிப்பதன் மூலம் நீங்கள் இந்தக் கூட்டங்களை போதிய முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்பதை அவர்கள் பார்க்கிறார்களா?” உங்கள் பிள்ளைகள் கூட்டங்களின்போது தேவையில்லாமல் நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை அல்லது நீங்களோ மற்றவர்களோ அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது அது அவர்களுடைய எண்ணங்களில் என்ன பாதிப்பை உண்டுபண்ணும்? கூட்ட நேரங்களை எவ்வாறு கருதுவார்கள்? பிள்ளைகள் மற்றவர்களைப் பார்த்து அதைப் பின்பற்றுவதில் திறம்பட்டவர்களாயிருப்பதால், உங்கள் முன்மாதிரி அவர்கள் மீது ஆழ்ந்த பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்.
5 கூட்டங்களில் உபயோகப்படுத்தப்படும் பிரசுரங்களின் சொந்த பிரதிகளைச் சிறு பிள்ளைகளும் கொண்டிருக்கச் செய்வது உதவியளிப்பதாக சில பெற்றோர் கண்டிருக்கின்றனர். ஒருவேளை, குடும்பப் படிப்பின்போது பொருத்தமான குறிப்புகளைத் தயாரிப்பதில் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் உதவி செய்கின்றனர். மேலும், கூட்டத்தின்போது கலந்தாலோசிக்கப்பட்ட குறிப்புகளை விமர்சித்த பிறகு அவர்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அவைகளுக்கு பதிலளிக்க நேரத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தலாம். பிள்ளைகள் கூட்டங்களில் பங்குகொண்டதற்காக அவர்களைப் போற்றுவதற்குப் பெற்றோர் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
6 இந்தப் பயிற்சி பெற்றோருக்குக் கடின உழைப்பை உட்படுத்துகிறது என்பது உண்மைதான். இருப்பினும், காரியங்களைக் கடவுளுடைய வழியில் செய்யும்போது நல்ல விளைவுகள் உண்டாகின்றன. வேதவாக்கியம் சொல்வதாவது: “நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.”—நீதி. 20:7.