நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியத்தில்
1 அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியத்தில் பிரசங்கிப்பது விசேஷமான சவால்களை ஏற்படுத்துகிறது. செய்தியை நீங்கள் எவ்வாறு புதுமையாகவும் கவர்ச்சியூட்டுவதாயும் வைக்கிறீர்கள்? உறுதியாக தாங்கள் அக்கறையுள்ளவர்களாயில்லை என்று தீர்மானமாயிருக்கும் சிலரிடமாக என்ன அணுகுமுறை செய்யப்பட வேண்டும்? நாம் அடிக்கடி சந்திக்கிறோம் என்று சொல்பவர்களிடம் என்ன சொல்லப்படலாம்? அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியங்களில் சுருக்கமாக்கப்பட்ட பிரசுர விநியோகிப்பு ஏற்பாடு எவ்வாறு கையாளப்படலாம்?
உடன்பாடான மனநிலையை கொண்டிருங்கள்
2 சிலர் நினைப்பதற்கு மாறாக, முழுமையாகவும் அடிக்கடியும் செய்து முடிக்கப்படும் பிராந்தியம் பொதுவாக அடிக்கடி செய்து முடிக்கப்படாத பிராந்தியத்தைவிட மேலான விளைவுகளை கொடுக்கிறது. ஒழுங்காக அதே வீடுகளில் சந்திப்பதைப் பற்றிய எதிர்மறையான சிந்தனையை மேற்கொள்வது தாண்டவேண்டிய முதலாவது தடையாகும். ராஜ்ய செய்தியை கேட்பதற்கு ஜனங்களுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பமும் கொடுக்கப்பட வேண்டும். அநேக தடவைகள் அவர்களை சந்தித்தும் சாதகமாக பிரதிபலிக்காதவர்களை யெகோவா தகுதியற்றவர்களாக நியாயந்தீர்த்திருக்கிறார் என்ற முடிவுக்கு வருவது நம் பங்கில் தவறானதாயிருக்கும்.
3 பிறர் நிலையில் நம்மை வைத்துப் பார்க்கும் தன்மையை காண்பிப்பது விசேஷமாக அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியங்களில் முக்கியமானதாயிருக்கிறது. தங்கள் உள்ளூர் சுற்றுவட்டாரத்தில் எது ஜனங்களை பாதிக்கிறது என்பதற்கு ஏற்றாற் போல் ஒரு திட்டவட்டமான செய்தியைக் கொண்டிருப்பது மற்றப்படி கேட்காத சிலரில் ஓர் உடன்பாடான பிரதிபலிப்பை உண்டாக்கும். நம் நாளைய சம்பவங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? அவ்வாறு ஜனங்கள் எதிர்ப்படும் பிரச்னைகளை கையாளுவதற்கு பைபிளின் செய்தி அவர்களுக்கு உதவி செய்யும் என்பதைக் காண்பிப்பதற்கு நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?
அணுகுமுறையை மாற்றியமையுங்கள்
4 அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியங்களில் உங்கள் அணுகுமுறையை மாற்றியமையுங்கள். உங்களுடைய முன்னுரையின் பாகமாக ஒரு முறை நீங்கள் ஒரு துண்டுப்பிரதியை உபயோகிக்கலாம். உள்ளூர் அக்கறைகளுக்கு ஏற்றவாறு நியாயங்கள் புத்தகம் பக்கங்கள் 9–15 வரை உள்ள 40-க்கும் மேலான முன்னுரைகளில் ஒன்றை மற்றொரு சமயம் உபயோகிக்கலாம். அந்தச் சுற்றுவட்டாரத்தில் நீங்கள் கடைசியாக செய்த சந்திப்பையும்கூட நீங்கள் குறிப்பிட விரும்பலாம், மறுப்பு சொல்வதற்கு இதை ஓர் அடிப்படையாக சொல்வதை குறைப்பதற்கு இது உதவும். உங்களுடைய கடைசி சந்திப்பின் போது வீட்டுக்காரர் சொன்ன அர்த்தமுள்ள குறிப்பை நீங்கள் கவனித்திருந்தால், இன்னுமதிகமான அக்கறை எழுப்பக்கூடிய சம்பாஷணைக்கு அதை ஒரு வழியாக உபயோகிக்கலாம்.
5 யெகோவா நோக்குகிறது போல் ஜனங்களை நோக்குங்கள், அவர்கள் அக்கறையுள்ளவர்களாயில்லை என்று உறுதியாக நம்மிடம் சொல்லியிருந்தாலும் தொடர்ந்து அவர்களிடம் அக்கறை காண்பியுங்கள். யெகோவா தம்முடைய பண்டைய கால ஜனங்களிடம் திரும்பத் திரும்ப வேண்டுகோள்கள் விடுத்தார். அவருடைய செய்தியாளர்களிடமாக அவர்கள் அக்கறையற்று இருந்தபோதிலும், அப்படிச் செய்தார். (2 நாளா. 36:15; எரே. 7:13) ஒரு சமயம் அக்கறையில்லாதவர்களாயிருந்த அநேகர் இன்று நம்முடைய சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் இருக்கின்றனர். கடுமையாக எதிர்த்தவர்களும்கூட சத்தியத்துக்கு வந்திருக்கின்றனர். நற்செய்தியோடு தொடர்ந்து அவர்களை யாரோ ஒருவர் சந்தித்ததற்காக அவர்கள் இப்போது நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர்.
நல்ல பதிவுகளை வைத்திருங்கள்
6 ஒரு நல்ல வீட்டுக்கு-வீடு பதிவுச்சீட்டை வைத்திருப்பது அதிக முக்கியமானதாயிருக்கிறது. வீட்டில் இல்லாதவர்களை மறுபடியும் சென்று சந்திப்பது பிராந்தியத்தை முழுவதுமாக செய்து முடிப்பதை உறுதிப்படுத்தும், வீட்டில் இருப்பவர்களை அடிக்கடி சந்திப்பதை தாமதப்படுத்தும். மத்திப வார ஊழியத்தின் போது வீட்டில்-இல்லாதவர்கள் பற்றிய பதிவுச்சீட்டுகளை, வார இறுதி நாட்களில் செய்பவர்களோடு மாற்றிக் கொள்வதையும் சிலர் நல்லதாக கண்டிருக்கின்றனர். ஒரு வாரத்தில் குறிப்பிட்ட நாட்களிலும், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களிலும் தொடர்ந்து வீட்டில் இல்லாத ஜனங்களை காண்பதற்கான சாத்தியத்தை இது அதிகரிக்கிறது. ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 15, 1988 பக்கங்கள் 15–20-ல் கூடுதலான ஆலோசனைகள் காணப்படுகிறது.
7 செவிகொடுத்துக் கேட்கும் எல்லாரையும் எட்டுவதற்கு போதுமான முயற்சி எப்போது எடுக்கப்படுகிறது என்பதை யெகோவா அறிவார். கிறிஸ்துவின் தலைமைத்துவத்தின் கீழ் வேலையானது கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்யப்படும் என்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து அவருக்கு கீழ்ப்படிவோம்.—எசே. 9:11.