தனிப்பட்ட பிராந்தியம் நீங்கள் நன்மை அடைவீர்களா?
1. தனிப்பட்ட பிராந்தியம் என்றால் என்ன?
1 தனிப்பட்ட பிராந்தியம் என்றால் என்ன? ஏராளமான பிராந்தியங்கள் உள்ள ஒரு சபையில் நீங்கள் இருந்தால், உங்களுக்கென்று பெற்றுக்கொள்ளும் ஒரு பிராந்தியம்தான் அது; ஒருவேளை நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அது இருக்கலாம். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 103 இவ்வாறு சொல்கிறது: “வசதியான பிராந்தியத்தைப் பெற்றிருந்தால், வெளி ஊழியத்திற்கு அர்ப்பணிக்கும் நேரத்தை சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். அதோடு, உங்களுக்குச் சொந்தமான பிராந்தியத்தில் ஊழியம் செய்வதற்கு மற்றொரு பிரஸ்தாபியை உங்களோடு நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.”
2. தொகுதியோடு ஊழியம் செய்ய முடியாத சமயத்தில் தனிப்பட்ட பிராந்தியத்தைப் பெறுவது ஏன் உதவியாக இருக்கும்?
2 தொகுதியோடு ஊழியம் செய்ய முடியாவிட்டால்: நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே ஒரு தனிப்பட்ட பிராந்தியத்தைப் பெற்றிருந்தால், மதிய உணவு இடைவேளையிலோ வேலை முடிந்த பிறகோ அங்கு ஊழியம் செய்யலாம். ஒருவேளை, அருகில் வேலை பார்க்கும் வேறொரு பிரஸ்தாபியோடு சேர்ந்து செய்யலாம். உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் தனிப்பட்ட பிராந்தியத்தைப் பெற்றிருந்தால், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மாலை நேரத்தில் ஊழியம் செய்வது சௌகரியமாக இருக்கும். தொகுதியோடு சேர்ந்து வெளி ஊழியக் கூட்டத்தில் உங்களால் கலந்துகொள்ள முடியாவிட்டால் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்துவிட்டு உங்கள் ஊழியத்தைத் தொடங்குவது நல்லது. (பிலி. 4:6) நீங்கள் தனிப்பட்ட பிராந்தியத்தில் ஊழியம் செய்தாலும் சபையின் ஊழிய ஏற்பாடுகளுக்கும் ஆதரவு காட்டுங்கள். முக்கியமாக, வார இறுதி நாட்களில் நிறையப் பேர் வெளி ஊழியத்திற்கு வருவார்கள் என்பதால் அப்படிச் செய்யுங்கள்.
3. தனிப்பட்ட பிராந்தியத்தில் ஊழியம் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
3 நன்மைகள்: உங்களுக்குத் தனிப்பட்ட பிராந்தியம் இருந்தால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களால் அங்கு ஊழியம் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, பயண நேரத்தை குறைத்து ஊழிய நேரத்தை அதிகரிக்க முடியும். இப்படிப் செய்கிற சிலரால் துணை பயனியராகவோ, ஒழுங்கான பயனியராகவோ சேவை செய்ய முடிகிறது. உங்களுக்குக் கிடைக்கும் மறுசந்திப்புகள் அருகிலேயே இருப்பதால் அவர்களை மீண்டும் சந்தித்து பைபிள் படிப்பை ஆரம்பிப்பது சுலபமாக இருக்கும். தனிப்பட்ட பிராந்தியத்தில் ஊழியம் செய்பவர்கள் அங்கு வசிப்பவர்களோடு நன்கு அறிமுகமாகிவிடுவதால், அவர்களது நம்பிக்கையைப் பெற முடிகிறது; அதுவும், அந்தப் பிராந்தியத்தை ஒரு முறைக்கு மேல் செய்யும்போது வீட்டுக்காரர்களோடு இன்னும் பரிச்சயமாகிவிட முடிகிறது. முழு பிராந்தியத்தையும் முடித்த பிறகு அந்தப் பிராந்திய அட்டையை மூப்பர்களிடம் கொடுத்துவிடலாம், தேவைப்படும் பிரஸ்தாபிகளுக்கு அவர்கள் அதைக் கொடுத்துவிடுவார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தனிப்பட்ட பிராந்தியத்தில் பிரசங்கிப்பது ஊழியத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்ற உங்களுக்கு உதவும், அல்லவா?—2 தீ. 4:5.