ஆவிக்குரிய விதத்தில் பலமாய்இருங்கள்,யெகோவாவின் சேவைக்காகசுத்தமாய் இருங்கள்
1 நம்முடைய கண்களுக்கு முன்னால் நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கும் ஒரு வாக்கை யெகோவா ஏசாயா 60:22-ல் கொடுத்தார்: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” ஒரு ஜாதி அல்லது தேசத்தைக் குறித்து நாம் நினைக்கும் போது, பொதுவான அக்கறைகள் மூலம் ஒன்றாக சேர்க்கப்பட்டு, நியமிக்கப்பட்ட ஓர் அரசாங்க அதிகாரத்தின் கீழ் வாழ்ந்து வரும் ஒரு மிகப் பெரிய ஜனக்கூட்டத்தை நாம் கற்பனை செய்து பார்க்கிறோம்.
2 உலகமுழுவதிலும் நற்செய்தியை பிரசங்கித்த பிரஸ்தாபிகளின் உச்சநிலை 42,78,820 ஆக இருந்தது என்று 1991-வது ஆண்டு வெளி ஊழிய அறிக்கை காண்பித்தது, இது சென்ற வருடத்தை விட 6.5 சதவீத அதிகரிப்பு. இந்த ஒடுக்குகின்ற ஒழுங்குமுறையிலிருந்து தங்களை பிரித்துக் கொள்ளவும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேசியானிய ராஜ்ய அரசாங்கத்தின் உண்மையுள்ள பிரஜைகளாக ஆகவும் விரும்பும் உண்மை மனதுள்ள ஆட்கள் அடங்கிய மிகப் பெரிய கூட்டத்தை யெகோவா உண்மையிலேயே கூட்டிச் சேர்த்திருக்கிறார். கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தத் தேசத்தின் பாகமாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், அது ஒரு புதிய உலக சமுதாயம் என சொல்லர்த்தமாகவே விவரிக்கப்படலாம். 1991-ம் ஆண்டு ஞாபகார்த்த ஆசரிப்பின் போது ஆஜரானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,50,158 ஆக இருந்தது, இது 1990-ஐ விட 7 சதவீத அதிகரிப்பு. இன்னும் அநேகர் ராஜ்ய பிரஜைகளாக நம்மோடு சேர்ந்து கொள்வதற்கான பெரும் வாய்ப்பை இது காட்டுகிறது.
3 ஞாபகார்த்த நாளுக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கும் எல்லா தனிப்பட்ட நபர்களுமே யெகோவாவின் ஜனங்களாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தேவையான அளவு இந்த உலகத்திலிருந்து தங்களை பிரித்து வைத்தில்லை. எல்லா தேசங்களிலுமிருந்து ஜனங்கள் ‘யெகோவாவின் வீட்டிற்கு திரளாக செல்கின்றனர்,’ ஆனால் “அவருடைய பாதைகளில் நடப்பதற்காக” அவர்கள் ‘அவருடைய வழிகளைக் குறித்து’ முழுமையாக போதிக்கப்பட்டிருக்க வேண்டும். (ஏசா. 2:2-4) ஞாபகார்த்த தினத்துக்கு ஆஜரானவர்களுள் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கடவுளுடைய போதனையை ஏற்றுக் கொண்டு, ஆவிக்குரிய பலத்தை பெற்றிருக்கின்றனர். இது சுத்தமான நடத்தையை காத்துக் கொள்வதற்கும், இப்போது நிறைவேற்றப்பட்டு வரும் ராஜ்ய-பிரசங்கிப்பு வேலையில் பங்கு கொள்வதற்கு தகுதியுள்ளவர்களாக ஆக்குவதற்கும் அவர்களை உந்துவித்திருக்கிறது. (மத். 24:14) இப்படிப்பட்டவர்கள் யெகோவாவின் கண்களில் நல்ல நிலைநிற்கையை உடையவர்களாயிருக்கின்றனர், மேலும் அவர் அவர்களுக்கு அளிக்கும் எல்லா மகத்தான ஏற்பாடுகளின் நன்மைகளையும் அவர்கள் அனுபவிக்கின்றனர். இவர்களைப் போன்றே எஞ்சியிருக்கும் அறுபது லட்சத்துக்கும் மேலான நபர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் பலமாக ஆவதற்கும், யெகோவாவின் சேவையில் சுத்தமாக இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும்?
4 அவர்கள் “விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராட வேண்டும்.” (யூதா 3) அவர்கள் யெகோவாவின் வழியில் நடக்க ஆரம்பித்தவுடனேயே, சோதனைகள், கவர்ச்சிகள், கெட்ட செல்வாக்குகள் ஆகியவற்றின் மூலம் சாத்தானிடமிருந்து வரும் அழுத்தத்தின் கீழ் அவர்கள் வருகின்றனர். பவுலைப் போல் அவர்கள் சகித்திருப்பதற்கு பலத்துக்காக யெகோவாவை நோக்கியிருக்க வேண்டும். (பிலி. 4:13) ஏற்கெனவே விசுவாசத்தில் பலமாக ஆகியிருப்பவர்களின் மூலம் அப்படிப்பட்டவர்களுக்கு யெகோவா பலம் அளிக்கிறார். “பலமுள்ளவர்களாகிய நாம் . . . பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்” என்று பவுல் அறிவுறுத்தினார். (ரோ. 15:1, 2) பலமுள்ளவர்களும் பலவீனரும் ஒன்றுசேர்ந்தால், உறுதியாக நிலைநிற்பதற்கு பலம் இருக்கும். “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம். . . . ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்.”—பிர. 4:9, 12.
5 புதியவர்கள் யெகோவாவிடமிருந்து பலத்தை பெற்றுக் கொள்வதற்கு நம்மீது உரிமையோடு சார்ந்திருக்கின்றனர் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாகிய நாம் புதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால், நாம் நம்மையே ஆவிக்குரிய பிரகாரமாய் பலமாக வைத்துக் கொள்ள வேண்டும். பலமான கிறிஸ்தவர்கள் ‘ஆவிக்குரிய வரங்களை அளிக்க’ முடிகிறது, இது ‘உற்சாகம் பரிமாற்றஞ் செய்யப்படுவதில்’ விளைவடைகிறது. (ரோ. 1:10, 11) நம்மை ஒன்றுசேர்ப்பதற்கும், நம் அனைவரையும் ‘உறுதியாகவும் பலமாகவும்’ ஆக்குவதற்கும் யெகோவா உபயோகிக்கும் முக்கியமான வழிகளில் இது ஒரு வழியாகும்.—1 பேதுரு 5:9-11.
6 இப்படிப்பட்ட புதியவர்களுக்கு உதவி செய்வதை நம்முடைய இலக்காக நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும், அதே சமயத்தில் நம்முடைய சொந்த ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். (மத். 5:3) ஆவிக்குரியத் தன்மை நம்முடைய பலத்துக்கு திறவுகோலாயிருக்கிறது. ஆவிக்குரிய உணவை ஒழுங்காக எடுத்துக் கொள்வதன் மூலம் போஷிக்கப்படவும், வலுப்படுத்தப்படவும் வேண்டிய ஒரு குணமாக இது இருக்கிறது. அவருடைய அமைப்பின் மூலம், யெகோவா அவருடைய வார்த்தையை படிப்பதற்கு சமநிலையான திட்டங்களை கொடுக்கிறார். ஐந்து வாராந்தர சபை கூட்டங்கள் நம்மை பலமாக ஆக்குவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன, அவைகள் ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நம்மை ஏவுகின்றன.’—எபி. 10:24.
7 தனிப்பட்ட படிப்பு, குடும்ப படிப்பு ஆகியவற்றோடு இப்படிப்பட்ட கூட்டங்கள் ஒன்றுசேரும் போது, கூட்டங்களிலிருந்து வரும் நன்மைகள் பெருகுகின்றன. ஒரு குறைந்த பட்ச இலக்காக, நாம் அனைவரும் தினவாக்கியத்தை வாசித்து, சிந்திக்க வேண்டும், தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வாசிப்பு ஏற்பாட்டை பின்பற்ற வேண்டும், மேலும் சபை புத்தகப் படிப்பு, காவற்கோபுரம் படிப்பு ஆகியவற்றுக்கு தயாரிக்க வேண்டும். அது எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு குடும்பமும் தீர்மானிக்க வேண்டும், அது ஓர் ஒழுங்கான அடிப்படையில் செய்யப்படுகிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் குறிப்பிட்ட ஆவிக்குரிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவாறு படிப்பு திட்டம் இருக்கிறதா என்பதையும் குடும்பத் தலைவர் கவனிக்க வேண்டும். இந்த விதத்தில் “வீடு கட்டப்பட்டு . . . நிலைநிறுத்தப்படும்.” (நீதி. 24:3) தனிப்பட்ட நபர்களாகவும், குடும்பங்களாகவும் நம்முடைய படிப்பு பழக்கங்களில் நாம் கவனமுள்ளவர்களாயிருந்தால், யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என்றும் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக சகிப்பதற்கு அவருடைய ஆவி நமக்கு உதவி செய்யும் என்றும் நாம் நம்பிக்கையாய் இருக்கலாம்.—யாக். 1:2, 3; 1 பேதுரு 4:11.
8 சுத்தமாயும் நிந்தனை சாட்டப்படாமலும் வைத்துக் கொள்ளுதல்: யெகோவா நாம் அவரிடம் நெருங்கி வரும்படி அனலோடு அழைக்கிறார், அதே சமயத்தில் இது இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் நாம் விசுவாசம் வைப்பதன் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதை அவர் தெளிவாக்குகிறார், இது “சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோ. 1:7; எபிரெயர் 9:14-ஐயும் பார்க்கவும்.) கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட முறையில் படிப்பதன் மூலமாகவும், நாம் கற்றறியும் காரியங்களை பொருத்துவதன் மூலமாகவும் நாம் நம்முடைய விசுவாசத்தை தொடர்ந்து பலப்படுத்தலாம். சிலர் பிற்பட்ட காலத்தில் தவறி விடுகின்றனர், ஏனென்றால் ஆவிக்குரிய உணவை எடுத்துக் கொள்ள அவர்கள் தவறுகின்றனர் அல்லது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதை பொருத்துவதில் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. இது சாத்தானின் தாக்குதல்களுக்கு அவர்களை திறந்து வைக்கிறது. சிலர் ஆவிக்குரிய பிரகாரமாய் பலவீனமாகியிருக்கின்றனர், இது செயலற்ற நிலைமையில் விளைவடைந்திருக்கிறது. விசனகரமாக, மற்றவர்கள் வினைமையான தவறுகளுக்கு ஆளாகி விடும்படி தங்களை அனுமதித்திருக்கின்றனர், இது அவர்களை சபை நீக்கம் செய்யும்படி செய்திருக்கிறது. பவுல் எச்சரித்தார்: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரி. 10:12) நாம் வேண்டுமென்றே படிப்பு, கூட்டங்கள், ஊழியம் ஆகியவற்றை புறக்கணித்தோமானால், பரிசுத்தமற்ற செல்வாக்குகள், சோதனைகள் மூலம் நாம் எளிதாக சிக்கிக் கொள்ளலாம்.—எபி. 2:1; 2 பேதுரு 2:20-22.
9 நாம் நம்மை எல்லா விதத்திலும்—சரீரப்பிரகாரமாய், மன சம்பந்தமாய், ஆவிக்குரிய பிரகாரமாய், ஒழுக்கப் பிரகாரமாய்—சுத்தமாக வைத்துக் கொள்வது இன்றியமையாததாய் இருக்கிறது. (2 கொரி. 7:1) நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் ஒவ்வொரு நாளும் அதிகமாக சீரழிந்து கொண்டும், தரங் குறைந்து கொண்டும் வருகிறது. சாத்தான் நம்மைச் சிக்க வைப்பதற்கு அதிக சூழ்ச்சியான வழிகளில் தொடர்ந்து முயற்சிசெய்து கொண்டே இருக்கிறான். நம்மை ஆவிக்குரிய பிரகாரமாய் பலமாக வைத்துக் கொள்வது, நாம் ‘அவனுடைய தந்திரங்களை அறிந்தும் மோசம் போகாமலும்’ இருப்போம் என்பதை உறுதிப்படுத்துகிறது. (2 கொரி. 2:11) யெகோவாவின் அமைப்பிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் போதனையும், அறிவுரையும் கெட்ட செல்வாக்குகளை கண்டுணரவும், எதிர்த்து நிற்கவும் நமக்கு உதவி செய்கிறது.
10 சபையில் முன்நின்று நடத்துபவர்கள் பலமாக இருப்பதிலும், சுத்தமாக இருப்பதிலும் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்க வேண்டிய உத்தரவாதத்தை உடையவர்களாயிருக்கின்றனர். பவுல் இவ்வாறு சொன்ன போது இந்த உத்தரவாதத்தை அழுத்தியுரைத்தார்: “உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபி. 13:7) நியமிக்கப்பட்ட மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தங்கள் தனிப்பட்ட நடத்தையிலும், குடும்பத் தலைவர்களாக தங்கள் உத்தரவாதங்களை கவனித்துக் கொள்வதிலும் நல்ல முன்மாதிரியாக இருப்பது முக்கியம். இளம் தீமோத்தேயுவைப் போலிருக்க அவர்கள் முயற்சி செய்ய வேண்டும், அவர் “வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் மாதிரியாயிருக்கும்படி” ஊக்குவிக்கப்பட்டார். (1 தீமோ. 4:12; 1 பேதுரு 5:3) மதிப்புக்குரிய நடத்தையைக் காத்துக் கொள்வதன் மூலம் நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டிய இந்த உத்தரவாதத்தை எஞ்சியிருக்கும் நாம் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். புதியவர்கள் நம்மில் அவர்கள் காண்பவற்றின் பேரில் சத்தியத்தையும், யெகோவாவின் அமைப்பையும் நியாயந்தீர்க்கின்றனர். யெகோவாவின் சுத்தமான அமைப்பில் அவர்கள் தங்கள் இடத்தை எடுத்துக் கொள்வதற்கு அவர்கள் காணும் காரியங்கள் அவர்களை உற்சாகப்படுத்துகிறதா என்பதை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புவோம்.
11 “மிகுந்த உபத்திரவ”த்தின் ஊடாக தப்பிப்பிழைப்பதற்கு கூட்டிச் சேர்க்கும் வேலையின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. (வெளி. 7:4) ஆவிக்குரிய பிரகாரமாய் பலமாக ஆகிறவர்களும், தங்களை சுத்தமாக வைத்துக் கொள்பவர்களும் மட்டுமே இறுதியில் தப்பிப் பிழைப்பர். பின்வரும் அம்சங்களின் பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது: (1) நல்ல தனிப்பட்ட படிப்பு பழக்கங்களை காத்து வருதல், கடவுளுடைய வார்த்தையின் பேரில் தியானித்தல்; (2) உற்சாகத்தை அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு ஒருவரிலொருவர் உண்மையான தனிப்பட்ட அக்கறையைக் காண்பித்தல்; (3) யெகோவாவின் நாமத்தை மகிமைப்படுத்தும் சுத்தமான நடத்தையை காத்துக் கொள்வதற்கு ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து வேலை செய்தல். இந்த உலகம் அதன் முடிவுக்கு வரும் போது இப்படிப்பட்ட காரியங்களை செய்வது யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நமக்கு உறுதிப்படுத்தும். ‘யெகோவா தற்காக்கும் உண்மையானவர்கள்’ மத்தியில் நாம் இருப்போம் என்று நம்பிக்கையாயிருக்கலாம்.—சங். 31:23.