அக்கறையைத் தூண்டும் அறிமுகங்கள்
1 இயேசு அறிமுகங்களைப் பயன்படுத்துவதில் தலைசிறந்தவராயிருந்தார். இயேசு ஒரு பெரிய கூட்டத்தினிடமாக பேசினாலுஞ்சரி ஒரு தனிப்பட்ட நபரிடம் பேசினாலுஞ்சரி, தனிப்பட்ட விதத்தில் அவர்களை உட்படுத்திக்கொள்வதன் மூலம் தம்மிடம் கூடியிருந்தவர்களுடைய கவனத்தைக் கவர்ந்திழுத்தார். தமக்குச் செவிசாய்த்துக்கொண்டிருந்தவர்களிடம் தாம் பேசிய பொருளின் பயன்மதிப்பை எடுத்துக் காட்டினார்.—மத். 5:3-12; யோவான் 4:7-30.
2 முன்கூட்டியே தயாரிப்பது அவசியம்: நம்முடைய செய்தியின்பேரில் அக்கறையைத் தூண்டுவதற்கு, நம்முடைய அறிமுகங்களை, நாம் பேசிக்கொண்டிருக்கிற அந்த நபரை உட்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கவலைப்படும் காரியங்களோடு சம்பந்தப்பட்டும், ராஜ்ய செய்தி தனிப்பட்ட விதத்தில் அவருக்கு உதவிசெய்யும் என்று காட்டுமாறும் இருக்கும்படி அமைக்க வேண்டும்.
3 ஊழியத்துக்கு தயார்செய்யும்போது, பிராந்தியத்திலிருக்கும் ஜனங்களுடைய அப்போதைக்குரிய கவலைகளைக் குறித்து விமர்சித்துப் பாருங்கள். ஒரு சமீபத்திய செய்திக் குறிப்பு அவர்கள் யாவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறதா? இவர்களுக்கு எது அக்கறையூட்டுவதாயிருக்கும்: இளைஞருக்கு? வயதான நபருக்கு? கணவர்களுக்கு, மனைவிகளுக்கு, அல்லது பெற்றோருக்கு? ஒரே அறிமுகத்தை ஒவ்வொரு வீட்டிலும் உபயோகிப்பதற்கு மாறாக, பல்வேறு அறிமுகங்களைத் தயாரித்துவைத்து, வீட்டுக்காரருடைய பிரதிபலிப்பிற்கிசைய அவற்றை மாற்றியமைத்துக்கொள்வது பொதுவாய் மேலும் நல்ல பலன்தருகிறது. சில பிரஸ்தாபிகள் ஒவ்வொரு முறை வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு செல்லும்போதும் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து அநேக அறிமுகங்களைத் தயாரித்து பயன்படுத்துவதில் நல்ல வெற்றியைக் கண்டிருக்கின்றனர். (நிபே பக். 9-15) இது அவர்களுடைய அணுகுமுறையைப் புதியதாகவும் அக்கறையூட்டுவதாகவும் வைக்கிறது.
4 செப்டம்பர் மாதத்தில், ஒருவேளை இம்மாதிரியான பிரசங்கத்தை நீங்கள் பயன்படுத்த விரும்புவீர்கள்:
▪ “வணக்கம். மற்றவர்களை ஆளும் ஒருவரிடமிருந்து என்ன குணங்களைத் தாங்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதைப்பற்றிய காரியத்தை எங்கள் அயலகத்தார் சிலரோடு நாங்கள் பேசிவருகிறோம். என்ன ஓரிரண்டு குணங்களை நீங்கள் மிகவும் முக்கியமெனக் கருதுகிறீர்கள் என்று நான் கேட்கலாமா? [பதிலளிக்க அனுமதியுங்கள். குறிப்புகள் சொன்னதற்காக பாராட்டுங்கள். சரியாயிருந்தால், சொல்வது சரிதான் என்று ஒப்புக்கொள்ளுங்கள்.] மனிதவர்க்கத்தை ஆளப்போகிறவராக அங்கீகரிக்கப்பட்டிருப்பவருடைய தகுதிகளைக் குறித்து பைபிள் விவரிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அது இங்கே ஏசாயா 9:6, 7-ல் உள்ளது. [வாசியுங்கள்.] அப்பேர்ப்பட்ட ஓர் ஆளுநரின்கீழ் வாழ்வது எப்படியிருக்கும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதில் சொன்ன பின் சங்கீதம் 146:3, 4-ற்கும், இயேசுவின் ஆளுகையில் நிரந்தரமாக இருக்கப்போகும் தன்மையைக் குறித்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 153-4-ல் உள்ள பொருளிடமாகவும் கவனத்தை திருப்புங்கள். அல்லது உரையாடலை மேலுமாக தொடர தூண்டுவதற்கு என்றும் வாழலாம் புத்தகத்தில் 112, 113 பக்கங்களில் உள்ளவற்றை பயன்படுத்தலாம். பிறகு, நீங்கள் பிரசுரத்தை அளிக்கலாம்.
5 என்றும் வாழலாம் புத்தகத்தைக் காட்டி குடும்பஸ்தர்களிடம் பேசுகையில் பின்வரும் பிரசங்கம் நல்ல பயனுள்ளதாயிருக்கும்.
வாழ்த்துதல் தெரிவித்தப் பின், நீங்கள் இப்படி சொல்லலாம்:
▪ “இன்று குடும்பங்களில் அன்றாடக அழுத்தங்களும் பிரச்னைகளும் ஒரு மெய்யான சவாலாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? [பதிலளிக்க நேரம் அனுமதியுங்கள்.] நியாயமான ஆலோசனையைப் பெறுவதற்கு குடும்பங்கள் யாரிடம் திரும்பலாம் என்பதைக் குறித்து உங்களிடம் ஏதாவது ஆலோசனைகள் உண்டா? [பதிலளிக்க நேரம் அனுமதியுங்கள்.] இந்த விஷயத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்ல இருக்கிறது என்பதற்கு நாங்கள் கவனத்தை திருப்புகிறோம். விவாகத்தைத் தொடங்கிவைத்தவர் முதல் மனித தம்பதியினரிடம் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்.” ஆதியாகமம் 1:28-ஐ வாசித்துக்காட்டுங்கள். பிறகு என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 238-ற்குத் திருப்பி அதிகாரம் 29-ல் தெரிந்துகொள்ளப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி உங்களுடைய சம்பாஷணையைத் தொடருங்கள்.
6 கேட்பவர்களுடைய கவனத்தை ஈர்த்து, அவர்களையும் சம்பாஷணைகளில் உட்பட வைக்கும் இயேசுவின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நேர்மைமனமுள்ள ஆட்களுக்கு ஆவிக்குரிய விஷயங்களுடைய மதிப்பை நாம் காட்டுகிறோம்.