என்றும் வாழலாம் புத்தகத்தில்பைபிள் படிப்புகளை நடத்துங்கள்
1 என்றும் வாழலாம் புத்தகத்தைக் குறிப்பிட்டு, ஒரு பெண் வியந்து கூறினாள்: “நான் வாசித்துப்பார்த்த பிரசுரங்களிலேயே பைபிளுக்கு அடுத்து, இந்தப் புத்தகமே மிகவும் திருத்தமான, உயிர்ப்புள்ள, உந்துவிக்கக்கூடிய ஒன்றாக நான் கண்டேன்!” பைபிளை மக்கள் புரிந்துகொள்ள உதவுவதற்கும் விசேஷமாக அவர்கள் யெகோவாவைத் துதிப்பதில் சுறுசுறுப்புள்ளவர்களாக ஆவதற்கு உந்துவிக்கவும் இந்தப் புத்தகமே இதுவரைப் பிரசுரிக்கப்பட்டவற்றில் மிகச் சிறந்தது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.
2 என்றும் வாழலாம் புத்தகம் வெளிவந்த 1982-ம் வருடத்தின்போது, இந்தியாவில் சராசரியாக 5,136 பிரஸ்தாபிகள் 3,310 பைபிள் படிப்புகளை நடத்திவந்தனர். கடந்த வருட அக்டோபர் மாதத்தில், 12,306 பிரஸ்தாபிகள் 10,912 பைபிள் படிப்புகளை நடத்தினர். இதுவரை, என்றும் வாழலாம் புத்தகம், 115 மொழிகளில் 6 கோடி 20 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. நம்முடைய உலகளாவிய வேலையில் இந்தப் புத்தகம் என்னே ஒரு பாதிப்பையுடையதாயிருக்கிறது!
3 இலக்குகளை வையுங்கள்: இந்த முனைப்பான வளர்ச்சி யெகோவாவுடைய ஆசீர்வாதத்தின் விளைவாகவும், பைபிளிலுள்ள உயிர்காக்கும் செய்தியைக்கொண்டு உண்மையுள்ள ஆட்களுக்கு உதவ அவருடைய மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் விளைவாகவுமே இருக்கிறது. (ரோ. 10:13-15; 1 தீமோ. 2:4) இந்தக் காலங்களின் அவசரத்தன்மையையும், கடவுளுடைய ராஜ்யத்தை யாவரறியச் செய்வதில் விடாமுயற்சியோடு ஈடுபடுவதன் அவசியத்தையும் நாம் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.
4 அமைப்பு முன்னேறிக்கொண்டு வருகையில், தனிப்பட்டவர்களாக நாம் எவ்வாறு இருக்கிறோம்? இந்த இன்றியமையாத சீஷராக்கும் வேலையில் ஒரு முழுப் பங்கைக் கொண்டிருக்க நாம் உறுதியுள்ளவர்களாக இருக்கிறோமா? இதைச் செய்வதற்கு, நாம் தனிப்பட்ட இலக்குகளை வைக்கவேண்டும். அக்கறை காட்டுவோரைத் திரும்பவும் சென்று சந்திப்பதில் நாம் இன்னுமதிக ஊக்கமுள்ளவர்களாக இருக்கமுடியுமா? பிப்ரவரி மாதத்தின்போது, ஒரு புதிய பைபிள் படிப்பைத் துவங்குவதை ஏன் ஓர் இலக்காக வைக்கக்கூடாது?
5 ஒரு பைபிள் படிப்பை யார் நடத்தலாம்?: என்றும் வாழலாம் புத்தகத்தில் ஒரு பைபிள் படிப்பை நடத்துவதன் சந்தோஷத்தை வித்தியாசப்பட்ட பின்னணிகளிலிருந்து வரும் அநேக பிரஸ்தாபிகள் மகிழ்ந்தனுபவித்திருக்கின்றனர். அதன் எளிமையான மொழிநடை படிப்பு நடத்துவதைச் சுலபமாக்குகிறது, இந்த முக்கியமான வேலையில் புதிய பிரஸ்தாபிகளுங்கூட பங்குகொள்ள செய்கிறது. கூடுதலாக, நம்மில் அநேகர் அதைத் தனிப்பட்ட விதத்தில் படித்திருக்கிறோம், ஆகவே அதிலுள்ள விஷயங்களை நன்கு அறிந்திருக்கிறோம். என்றும் வாழலாம் புத்தகத்தை உபயோகிப்பதற்கு முன்பு ஒரு பைபிள் படிப்பையுங்கூட நடத்தியிராத ஒரு பிரஸ்தாபி அதற்குப் போற்றுதல் தெரிவிக்கும் வண்ணமாக எழுதினார்: “எனக்கு மூன்று பைபிள் படிப்புகள் இருக்கின்றன, நான்காவதைத் துவங்க இருக்கிறேன். பைபிள் படிப்புகளை எளிதில் நடத்தச் செய்ததற்கு உங்களுக்குப் போதுமான நன்றியை என்னால் சொல்லமுடியவில்லை.”
6 என்றும் வாழலாம் புத்தகத்தை உபயோகித்து இளைஞருங்கூட பைபிள் படிப்பு வேலையில் ஒரு சுறுசுறுப்பான பங்கை உடையவர்களாயிருக்கின்றனர். ஓர் இளம் சகோதரர் அந்தப் புத்தகத்தைப் பள்ளியில் தன்னுடைய மேசையின்மீது வைத்துவிடுவார். இது நல்ல சம்பாஷணைகளைக் கொண்டிருப்பதற்கும் அநேக பைபிள் படிப்புகளை நடத்துவதற்கும் வழிவகுத்திருக்கிறது. சில இளைஞர் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பெற்றோரைச் சந்திக்கும்போது அவர்கள் பிள்ளைகளோடு பைபிள் படிப்பைக் கொண்டிருக்க அனுமதியைக் கேட்பதற்கு நேரடியான அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கின்றனர். பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனைப்பற்றிய யெகோவாவின் வாக்குறுதியைக் குறித்துப் பேச நம்முடைய பிள்ளைகள் ஒருபோதும் மிகவும் இளையவராய் இல்லை.
7 இளைஞராயிருந்தாலும் முதியோராயிருந்தாலும், ஒரு வீட்டுப் பைபிள் படிப்பை நடத்துவதே ஊழியத்தில் ஒருவர் அனுபவிக்கும் பெரிதான சந்தோஷங்களில் ஒன்றாகும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுடைய உதவிக்காக ஜெபம்பண்ணி, நம்முடைய நம்பிக்கையை வெளியரங்கமாய் யாவரறியச் செய்வதற்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்பையும் நழுவவிடாதிருப்போமாக. நம்முடைய கடவுளாகிய யெகோவாவைத் துதிப்பதில் மற்றவர்கள் எவ்வாறு ஒரு பங்கை வகிக்கக்கூடும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள உதவுவதற்கு என்றும் வாழலாம் புத்தகத்தை உபயோகிப்பீர்களாக.—சங். 148:12, 13.