இளைஞருக்கு நல்ல முன்மாதிரி தேவை
1 ‘யெகோவாவின் பெயரைத் துதிக்கும்’ பெருகிக்கொண்டே போகும் எண்ணிக்கையான இளைஞரை நம்முடன் கொண்டிருப்பதில் நாம் களிகூருகிறோம். (சங். 148:12, 13, NW) இவர்களில் பலர் வயதில் இன்னும் மிக இளைஞராக இருக்கின்றனர். அவர்களின் முன்னேற்றம், அவர்களுடைய பெற்றோரும் சபையிலுள்ள மற்ற முதியோரும் அளிக்கும் பயிற்றுவிப்பாலும் முன்மாதிரியாலும் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், மற்ற இளைஞரால், முக்கியமாய் மூத்தவரான பருவ வயதினராலும் இளம் வாலிபர்களாலும் செலுத்தப்படுகிற செல்வாக்கைக் கவனியாமல் விடக்கூடாது. நீங்கள் இந்த வயது தொகுதியில் இருந்தால், இந்தக் குறிப்புகள் உங்களுக்குப் பயன் தரலாம்.
2 பருவ வயதுக்குக் கீழ்ப்பட்ட வயதினரான இளைஞர் மூத்த வயதினரின் மாதிரியைப் பின்பற்றும் மனப்போக்குடையவராக உள்ளனர். தாங்கள் வியந்து பாராட்டும் நெருங்கிய கூட்டாளிகளைப்போல் தாங்கள் இருக்க வேண்டுமென்ற இயல்பான ஆசை அவர்களுக்கு உண்டு. ஒருவாறு மூத்தவராகவும் அறிவுடையோராகவும் மேலும் முன்னேறியவராகவும் தோற்றமளிப்போரை வியந்து பாராட்டும் பாங்குடையோராக அவர்கள் இருக்கின்றனர். இதன் பலனாக, அவர்கள் உங்கள் பேச்சையும் நடத்தையையும் அதோடுகூட ஆவிக்குரிய காரியங்களுக்கான உங்கள் மதித்துணர்வையும் சபை நடவடிக்கைகளில் நீங்கள் பங்குகொள்வதையும் பார்த்துப் பின்பற்றலாம்.
3 மூத்த பருவவயதினனாக உனக்கு ஒரு சிலக்கியமும் அதோடுகூட ஒரு கனத்த பொறுப்பும் உள்ளது. இப்போதே, உன் முன்மாதிரி உன் இளம் தோழர்களைப் பாதித்துக்கொண்டிருக்கலாம். உன்னை நீயே இவ்வாறு கேட்டுக்கொள், ‘இளைஞர்மீது என்ன வகையான செல்வாக்கை நான் செலுத்துகிறேன்? மடமையையும் ‘பாலியத்துக்குரிய தவறான இச்சைகளையும’ தவிர்த்து, கருத்தார்ந்த மனமுடையவனாக நான் இருக்கிறேனா? என் பெற்றோரிடமாகவும், மூப்பர்களிடமாகவும், மற்ற முதியோரிடமாகவும் கீழ்ப்படிதலையும் மரியாதையையும் நான் காட்டுகிறேனா?’ (2 தீ. 2:22; கொலோ. 3:20) நீ சொல்வதும் செய்வதும், உன் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் மற்ற இளைஞரின் ஆவிக்குரிய முன்னேற்றத்தில் உதவியாயிருக்கும் பெரிய காரணமாக இருக்கலாம்.
4 இராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பது சபையின் முக்கிய வேலையாகும். நீ மனப்பூர்வமாயும் ஒழுங்காயும் அதில் பங்குகொள்வது உன் கூட்டாளிகள் மேலுமதிகமாய்ச் செயல்படும்படி அவர்களை ஊக்குவிக்கலாம். நீ பயனியர் சேவையை ஏற்க முடிந்தால், உன் நண்பர்களும் அவ்வாறு செய்யும்படி தூண்டப்படுவர். கூட்டங்களில் குறிப்பு சொல்வதும் ராஜ்ய மன்றத்தில் தேவைப்படும் வேலைகளை செய்வதில் உதவிசெய்ய நீ முன்வருவதும்கூட நல்ல முன்மாதிரியை வைப்பதாக இருக்கலாம்.
5 பவுல் பின்வரும் அறிவுரையைத் தீமோத்தேயுவுக்குக் கொடுத்தபோது, அவர் பருவ வயதில் இராதபோதிலும், பருவவயதினராகிய நீங்கள் அதைப் பொருத்திப் பயன்படுத்தலாம்: “நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.” (1 தீ. 4:12) யெகோவாவின் சேவையில் ஆர்வத்தோடும் முழு ஆத்துமாவோடும் நீங்கள் பங்குகொள்வது உங்கள் கூட்டாளிகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் இளைஞரையும் கட்டியெழுப்பும் முறையில் தூண்டுவித்து, அவர்கள் ஆவிக்குரிய முழுவளர்ச்சியடைந்த மனிதராவதைநோக்கி படிப்படியாய் முன்னேற அவர்களுக்கு உதவிசெய்யக்கூடும். (எபே. 4:13) சமீபத்தில்தானே படிப்பதற்குத் தொடங்கின குடும்பங்களின் பாகமாயுள்ள பருவவயதினர், உங்கள் நடத்தையில் காண்பவற்றால் சத்தியத்தினிடமாகக் கவர்ந்திழுக்கப்படலாம்.
6 இவற்றிற்கும் மிக முக்கியமாக, தேவபக்தியுள்ள பண்புகளை வெளிப்படுத்திக் காட்டுவதில் உங்களுடைய தளரா ஊக்கம், யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் நன்மதிப்பைக் கொண்டுவரும் வகையில் பிரதிபலிக்கிறது. (நீதி. 27:11) உண்மையான மனதுடன் கவனிப்போர் உங்களுக்கும் இந்த உலகத்தின் இளைஞருக்குமுள்ள முனைப்பாகத் தோன்றும் வேறுபாட்டின்பேரில் வியப்படைவர். ஆகவே யெகோவாவுக்குத் துதியுண்டாகும்படி விலைமதியா பங்களித்துக்கொண்டிருக்கையில் இளைஞருக்கு உதவிசெய்வதற்கும் தனிப்பட்ட வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது.—சங். 71:17.