மற்றவர்களுக்கு அக்கறை காட்டுங்கள்—பாகம் 1
1 யெகோவாவின் மக்களுடைய செழுமையைக் காண்பதில் நாம் சந்தோஷப்படுகிறோம், அது அநேக சபைகள் வளர்வதில் விளைவடைந்திருக்கிறது. சில நகரங்களில் அநேக சபைகள் ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது. இந்த நிலைமை, உட்பட்டிருக்கிற அனைவருடைய பாகத்திலும் கூடுதலான அக்கறையைத் தேவைப்படுத்துகிறது.
2 இராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துகிற ஒவ்வொரு சபையும், அடுத்ததாக வருகிற சகோதரர்களுக்காக அதைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் விட்டுச்செல்ல வேண்டும். இருக்கைகளை ஒழுங்காக வைக்கவேண்டும், கவுன்ட்டரில் உள்ள எந்தப் பிரசுரத்தையும் சரியான இடத்தில் வைக்கவேண்டும், ராஜ்ய மன்றத்தில் அங்குமிங்குமாக போடப்பட்ட எந்தத் தனிப்பட்ட பொருட்களையும் ஒன்றாக சேகரித்து வைக்கவேண்டும். கழிப்பறைகளைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் விட்டுச்செல்ல வேண்டும், சோப்பு, டவல்கள், இன்னும்பிற பொருட்கள் மாற்றப்பட்டு, குப்பைக் கூடைகள் காலிசெய்யப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரேவொரு சபையே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்தி வந்தாலும்கூட இதைச் செய்வது நல்லது. மேலோட்டமாக கூட்டுவதையும் தூசி தட்டுவதையும் அடுத்தக் கூட்டத்திற்கு முன்பாக செய்வதற்காக விட்டுவிட்டு, அதிகளவான சுத்தப்படுத்துதல் மற்றும் ஒழுங்கமைத்தலை கூட்டங்களுக்குப் பிறகு செய்வதை அநேக சபைகள் தெரிவுசெய்கின்றன. ஒரு கூட்டத்திற்கு முன்பாக பெரிய வேலையாகிய சுத்தப்படுத்துதலை செய்வதைவிட அவர்கள் இதை விரும்பத்தக்கதாக காண்கிறார்கள், ஏனென்றால் மன்றத்தை முழுமையாக சுத்தம்செய்து கூட்டம் ஆரம்பிப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பாவது அதைத் தயாராக வைக்க போதுமானளவு முன்கூட்டியே எல்லாருமே வரமுடியாது. அதோடுகூட, ஆஜராகுபவர்கள், முக்கியமாக நிகழ்ச்சிநிரல் பாகங்களைக் கொண்டிருப்பவர்கள், தங்களைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதனால் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக முழுமையாக சுத்தம் செய்வதில் ஈடுபடுவதற்கு மனமுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.
3 அதே சமயத்தில், மற்றொரு சபையின் கூட்டம் குறுகிய நேர இடைவெளியில் ஆரம்பிக்க அட்டவணையிடப்பட்டிருக்கும்போது, முந்தைய கூட்டத்திற்குப் பிறகு இருப்பவர்கள் அடுத்தக் கூட்டத்திற்காக தயார்செய்யப்படும் வேலைகளில் குறுக்கிட்டுக்கொண்டு அனாவசியமாக தங்கியிருக்கக் கூடாது. சாவகாசமான சம்பாஷணை முகப்பறையில் அதிகமான கூட்டத்தை உண்டாக்கி, அடுத்தக் கூட்டத்திற்காக காரியங்களை ஒழுங்கமைப்பதில் சகோதரர்களுக்கு காலதாமதத்தை ஏற்படுத்தலாம். சில இடங்களில் ராஜ்ய மன்றத்தைச் சுற்றியுள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் மட்டுப்பட்டதாக இருக்கலாம், எனவே உள்ளே வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமிருக்கும்படி உடனடியாக செல்வது அன்பான செயலாக இருக்கும். மறுபட்சத்தில், அடுத்தக் கூட்டத்திற்கு ஆஜராகிறவர்கள் ரொம்ப சீக்கிரமாக வந்து, முகப்பறையிலோ பொருள் வைப்பறையிலோ வாகனம் நிறுத்துமிடத்திலோ அனாவசியமான நெருக்கத்தை உண்டுபண்ணக்கூடாது.
4 அநேக சபைகள் உட்பட்டிருக்கிற இடங்களில், ராஜ்ய மன்றத்தின் வாராந்தர சுத்தப்படுத்துதலுக்கு ஏற்பாடுகள் செய்வதில் நெருங்கிய ஒத்துழைப்புக்கான விசேஷித்த தேவை இருக்கிறது. சாதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சபைகள் மாறிமாறி செய்கின்றன. உங்களுடைய சபைக்கு அந்தப் பொறுப்பிருக்கும்போது, சுத்தப்படுத்துதலை முழுமையாகவும் உடனடியாகவும் செய்வதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த மன்றத்தைப் பயன்படுத்துகிற மற்ற சபைகள் குறைகூறுவதற்கு எந்தக் காரணமும் அப்பொழுது இருக்காது.
5 ஒவ்வொரு சபைக்கும், வட்டாரக் கண்காணியின் சந்திப்பு போன்ற சமயங்களில், அதன் கூட்ட நேரங்களை மாற்றுவதற்கான தேவை அவ்வப்போது ஏற்படுகிறது. மற்றொரு சபை பாதிக்கப்பட்டால், மூப்பர்கள் தங்களுடைய பிரஸ்தாபிகளுக்கு முடிந்தளவு முன்கூட்டியே தெரிவிப்பதற்காக, அவர்கள் மற்ற சபைக்குப் போதியகாலம் முன்கூட்டியே சொல்லவேண்டும். அதோடு, பயனியர் ஊழியப் பள்ளி, வட்டார மூப்பர்களுடைய கூட்டம் அல்லது திருமணம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கை ஏதாவது திட்டமிடப்பட்டிருந்தால், பாதிக்கப்படுகிற மற்ற சபைகளையும் எந்த வட்டாரக் கண்காணிகளையும் போதியகாலம் முன்கூட்டியே கலந்துபேச வேண்டும்; இதனால் அந்தச் சமயத்தில் ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிடமாட்டார்கள்.
6 மற்றவர்களுக்கான அன்பான அக்கறை, நல்ல பேச்சுத்தொடர்பு, முன்கூட்டியே திட்டமிடுதல், ஒத்துழைப்பு ஆகியவை சபைகளுக்கிடையே அனலான உறவுகளைக் காத்துக்கொள்வதற்கு உதவிசெய்யும், மேலும் ‘சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படுவதை’ நிச்சயப்படுத்தும்.—1 கொ. 14:40.