உங்கள் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
1 யெகோவா நேரத்தைக் குறித்து உணர்வுள்ளவராய் இருக்கிறார். நாமும் நேரத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருக்கவேண்டுமென அவர் விரும்புகிறார். நேரத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருக்க அவருடைய அமைப்பின் மூலமாக நமக்கு அவர் உதவுகிறார். ‘கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாய்’ இருக்கும்படி நாம் எப்போதும் தூண்டப்படுகிறோம். (1 கொ. 15:58) இந்த விதத்தில், நாம் யெகோவாவின் சேவையில் அதிக திறம்பட்டவர்களாக இருக்க முடியும்.
2 நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாரமும் ஒரே அளவு நேரம் இருக்கிறது—168 மணிநேரம். நம் நேரத்தை நாம் எவ்வளவு சிறந்த முறையில் பயன்படுத்துகிறோம்? யெகோவாவின் நோக்குநிலையில் நாம் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதை உண்மையில் அறிந்திருப்பதைக் காட்டுகிறோமா? அத்தியாவசியமில்லாத செயல்களால் திசைத்திருப்பப்படுகிறோமா?
3 நாம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவர்களாய் இருப்பது முக்கியம். முன்னுரிமை பட்டியல் ஒன்றைக் கொண்டிருக்க அநேகர் முயலுகின்றனர். ஒவ்வொரு காரியமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி அந்தப் பட்டியலில் குறிக்கப்படுகிறது. அதைத் தீர்மானிப்பது எப்படி? ஒருவன் தன் ‘சகல பிரயாசத்தின் பலனையும் [“நன்மையை,” NW] அனுபவிக்க’ வேண்டும் என்று பைபிள் சொல்லுகிறது. (பிர. 3:13) சில வேலைகள் மற்றவற்றைவிட மேலான பலன்களைக் கொடுக்கின்றன. ஒவ்வொன்றும் கொண்டுவரும் பலன்களை சிந்தித்துப் பாருங்கள். ஒரு வேலையை முடிப்பது குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டுவருமா? உங்கள் கடின உழைப்புக்குரிய ‘நன்மையை அனுபவிப்பீர்களா?’ அப்படி இல்லை என்றால், அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய வேலையாக அது இருக்காது.
4 நம் ஊழியத்தில்: மற்றவர்கள் ஊழியத்திற்கான கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் வந்து, அறிவுரைகளுக்குக் கவனமாகச் செவிகொடுத்து, உடனே பிராந்தியத்திற்குச் செல்லும்போது, அதை நாம் போற்றுகிறோம். காத்திருப்பதைவிட பிரசங்கிக்கும் வேலை செய்துகொண்டு இருப்பதைத் தெரிந்துகொள்வோம். பின்வருமாறு எழுதியபோது, நல்ல ஒழுங்குக்கான அவசியத்தை பவுல் தெளிவாகவே, பலமாக உணர்ந்தார்: “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.”—1 கொ. 14:40.
5 நாம் வெளி ஊழியத்தில் இருக்கும்போது, அருமையான நேரத்தை தேநீர் இடைவேளைகளில் இழக்கக்கூடும். என்றாலும், வானிலை கடுமையாக இருக்கும்போது, சிறிய இடைவேளையானது வேலையைத் தொடரும்படி புத்துணர்ச்சி அளிக்கும். இருந்தாலும், அநேகர், ஊழியத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிற நேரத்தில் சகோதரர்களுடன் சேர்ந்து தேநீர் இடைவேளைகளைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, மக்களுக்குச் சாட்சிபகருவதில் சுறுசுறுப்பாய் இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர். சமநிலை தேவைப்படுகிறது.
6 இடப்பெயர்ச்சி செய்வதற்கு “நாரை முதலாய் தன் [“குறித்த,” NW] வேளையை அறியும்”; மேலும் எறும்பு, குளிர்காலத்திற்குத் தயாராக இருக்கும்படி, ‘கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து’ வைக்கிறது என்று பைபிள் சொல்லுகிறது. (எரே. 8:7; நீதி. 6:6-8) நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்வதன் இரகசியம் அங்குதான் இருக்கிறது. நாமும்கூட ‘நம்முடைய குறித்த வேளைகளை,’ அறிந்திருக்க வேண்டும். அளவுக்குமீறி கண்டிப்பாக இல்லாமல், நாம் நேரத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருக்கவேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமல்லாமல் அது எப்போது செய்யப்பட வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். தாமதமாவதற்குரிய சாத்தியங்களுக்கும் நேரமளித்து, முன்னதாகவே திட்டமிட்டுச் செயல்படும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டங்களுக்குத் தயார் செய்தல், வெளி ஊழியம், இன்னும் மற்ற தேவராஜ்ய நடவடிக்கைகள் போன்ற அதிக முக்கியமான காரியத்துக்கு நேரம் கொடுப்பதற்காக சில செயல்களை விட்டுவிடுவதற்கும் மனமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
7 “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு [“குறித்த,” NW] காலமுண்டு,” என்று போதிக்கிற நம்முடைய பரலோக தந்தையாகிய யெகோவா தேவனைப்போல் நாமிருக்க விரும்புகிறோம். (பிர. 3:1) நம் நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்வதன்மூலம் ‘நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும்.’—2 தீ. 4:5, NW.